Advertisement

ஸ்மிரிதியின் மனு – எபிலாக்_1
சில வருடங்களுக்குப் பின், 
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பூமி,
“பாட்டி, பாட்டி, கேரி ” என்று கைகளைத் தூக்கியபடி கோரிக்கை வைத்தாள்.
அவளைத் தூக்க வேண்டுமென்று அழகாக அடம்பித்த பூமியுடன் வம்பளக்க ஆசைப்பட்ட அவள் பாட்டி,
“உன் அம்மாகாரி எங்கே?” என்று கேட்க,
“அம்மா கேரி நோ சொல்லி பாட்டி கேரி அம்மா சொல்லி.” என்று தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசினாள் பூமி.
“உங்கம்மாவுக்கு எப்பவும் பாட்டிதான் கண்ணுக்குத் தெரியறேனா?” என்று வம்பை வளர்க்க,
“தாத்தா கேரி நோ சொல்லி.”
“கரெக்டாதான் சொல்றாரு கலெக்டரு..தாத்தாகாரன் தாத்தாகாரி இல்லை.” என்றார் சிவகாமி.
அப்போது சோபாவில் அமர்ந்திருந்த மனு,”ஏன்மா அவளை சீண்டறீங்க..இப்பதான் எல்லாத்தையும் கலந்து பேசி ஒரு மாதிரி விஷயத்தைப் புரிய வைக்கறா.” என்றான்.
உடனே மாடி படியிலிருந்து வேகமாக இறங்கி மனுவிடம் ஓடி போய்,”மனு கேரி.” என்றவுடன் அவளை உடனே தூக்கி கொண்டான் மனு.
“பெரியவ பேசாமயே என்னைக் கலங்கடிச்சா..இவ எல்லாத்தையும் கலந்து பேசி என்னை கலங்கடிக்கறா..அதென்னடா “சொல்லி” அவ அம்மா சொல்லித் தரவேணாம் தமிழ்லே எப்படி சொல்றதுண்ணு?” என்று சிவகாமி கேட்க,
“அவ அம்மா சொல்லுவா நீங்கதான் எங்களுக்குத் தமிழ் சொல்லி கொடுத்தீங்க அதனாலே இவளுக்கும் நீங்களே சொல்லிக் கொடுத்திடுங்கண்ணு.”
“உங்க எல்லாருக்கும் நானே தமிழ் சொல்லிக் கொடுத்தேனில்லே என்னைய சொல்லணும்,” என்றார் சிவகாமி.
மனுவின் தோளில் சாய்ந்தபடி,”பாட்டி நோ கேரி சொல்லி.” என்று அவனிடம் கம்ப்ளயண்ட் செய்தாள் பூமி.
அதற்கு பதில் சொல்லாமல் அவன் மகளைத் தோளில் சாய்த்து தட்டி கொடுத்து சமாதானம் செய்தான் மனு. ஆனால் பூமி, பூகம்பமாக வெடிக்க தயாராகி கொண்டிருந்தாள்.  அதனால், 
“நீ நோ சொல்லி..அம்மாகிட்ட சொல்லி.” என்று ஆட்காட்டி விரலை அசைத்து பாட்டிகாரியை மிரட்டினாள் பேத்திகாரி. 
“சொல்லு..சொல்லு.” என்று அவர் அவளைத் திருத்த முயல,
“சொல்லி..சொல்லி.” என்று பூமி பதிலுக்கு சொல்ல, அவள் தகப்பன் தலையைப் பிய்த்து கொண்டான்.
“பூமி பேபி..ஸ்டாப் டாக்கிங்க.” என்றான் மனு.
“ஒகே பாப்பா.” என்றாள் பூமி.
“ஒகே அப்பா..ஹீ நோ பாப்பா..யூ பாப்பா.” என்று மறுபடியும் திருத்தினார் சிவகாமி.
அப்போது மாடியிலிருந்து இறங்கி வரவேற்பறைக்கு வந்த ஸ்மிரிதியிடம் தாவிய பூமி,”பாட்டி கேரி நோ சொல்லி மம்மா.” என்றாள்.
“நீ பிக் கிர்ள் ..பாட்டி பூட்டி (buddi) அதான் நோ சொல்லி.” என்றாள் ஸ்மிரிதி.
அதை கேட்டவுடன் “நோ” என்று கத்தி ஆர்பாட்டம் செய்தாள் பூமி. ஸ்மிரிதியிடமிருந்து தாவி சிவகாமியின் இடுப்பிற்கு சென்றவள்,”பாட்டி நோ பூட்டி, பூமி தீதி பூட்டி, விதி தீதி பூட்டி.” என்று சொல்லி அவர் முகத்தில் அவள் சின்ன கைகளால் சரமாரியாக அடித்தாள். 
“ஏன் டா அடிக்கறா? என்ன டா சொல்றா?” என்று அவள் தாய், தகப்பனைக் கேட்க, அவர்களுக்கும் பூமி சொன்னது புரியாமல் யோசித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு தட்டில் மிஸ்ஸி ரோட்டியுடன்  வந்த மெஹக், சிவகாமியைப்  பார்த்து,”அவளும், விதியும் தான் பியுட்டீஸ் நீங்க ஓல்டீன்னு சொல்றா.” என்று தமிழில் விளக்கினாள் முன்னாள் கனவு கன்னி.
“இவ பியுட்டி லிஸ்ட்லே நீயே இல்லையா? என்று ஆச்சரியப்பட்டவர்…இங்கே பாரு பூமி குட்டி..உன் சாச்சி (chaachi) கொஞ்சமாவது தமிழ்லே பேசறா..அதுபோலே நீயும் பேசினா இந்த தமிழ் பாட்டிக்குப் புரியுமில்லே.” என்று கெஞ்சினார்.
உடனே,”சரி..தமிழ் பாட்டி.” என்று அச்சு பிசகாமல் தமிழில் பேசி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் பூமி.
“பூமி பிரேமா.. உருவம் தான் என் சிநேகிதி போலே.. நடவடிக்கையெல்லாம் அவ அம்மா தான்….இந்தப் பாட்டியை அடிச்சதுக்கு பனிஷ்மெண்ட்டா உனக்கு ஒரு முத்தம் கொடுக்கறேன்…ஒகே” என்று சிவகாமி அவளை முத்தமிட விழைந்த போது, ஒரே பாய்ச்சலில் மெஹக்கின் இடுப்பிற்கு மாறியவள்,
“ரோட்டி..” என்று அவள் சொப்பு வாயைத் திறந்தாள்.
“சரி..நீ ரோட்டி சாப்பாடு..நான் போய் பேபிக்கு முத்தம் கொடுக்கறேன்.” என்று சிவகாமி இரண்டடி வைக்குமுன்,
மெஹக்கின் இடுப்பிலிருந்து இறங்கி, கிடுகிடுவென்று ஓடி போய் மாறன், மெஹக்கின் அறைவாசலில் கால் அகற்றி நின்று, “தீதி, பையா” என்று அரைக்கூவல் விடுத்தாள் பூமி. அதைக் கேட்டு அறையின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பேபி அழ ஆரம்பித்தது.
“பார்த்தியா டா.. இது முளைச்சு மூணு இலை விடலே.. நான் வளர்த்த பசங்களை வைச்சு என்னை மிரட்டுது..பெரியவ பெரிய ரவுடியா மாறிகிட்டு வரா.. உன் பையனும் அவளுக்கு அடியாளாட்டம் சுத்திகிட்டு இருக்கான்.. இதோட தாளத்துக்கு அந்த இரண்டும் ஆடுது…இந்த மூணும் சேர்ந்து என்னை ஆட்டி படைக்குதுங்க…நல்லவேளை நாலாவதுக்கு இன்னும் நடக்கவே வரலே..நடைவண்டியோட சுத்திகிட்டு இருக்கு.” என்று மனுவிடம் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தவர்,
”பேபி ரொம்ப அழறான்..நான் போய் தூக்கி வைச்சுக்கறேன்.” என்று அறையினுள் நுழைய முயன்றபோது அவர் கால்களைக் கட்டி கொண்டு “நோ” என்று கத்தினாள் பூமி. அவள் கத்தலில் பேபி பெருங்குரலெடுத்து அழ, அந்த சத்தத்தைக் கேட்டு அந்த வீடே வரவேற்பறைக்கு வந்தது.
மாடியில் விளையாடிக் கொண்டிருந்த விதிஷாவும், ரணதீரணும் தடதடவென படிகளில் இறங்கி வர அவர்களுக்குப் பின்னே நிதானமாக இறங்கி வந்தார் நாதன். 
“விதி தீதி..தீர் பையா..பேபி..பாட்டி தூக்கி.” என்று இரு வார்த்தைகளில் குற்றப்பத்திரிகை வாசித்தாள் பூமி.  வழக்கை வழி நடத்த அதுவே போதுமானதாக இருந்தது.
“பாட்டி..தூங்கற பேபியைத் தூக்கி எதுக்கு தொந்தரவு செய்தீங்க..இப்பதான் நானும், ரந்தீரும் அவனைக் கஷ்டப்பட்டு தூங்க வைச்சோம்.” என்று விசாரணை இல்லாமல் பாட்டியைக் குற்றவாளியாக்கினாள் வக்கீலின் மூத்த மகள்.
“இப்பவே சாசுக்கு (chachu) ஃபோன் போடறேன்..எங்க பர்மிஷன் இல்லாம நீங்க அந்த ரூமுக்குள்ளே போயிட்டீங்கண்ணு சொல்றேன்.” என்று மிரட்டினான் வக்கீலின் மகன் ரணதீரன்.
“அம்மா உங்க ஃபோனைக் கொடுங்க” என்று ரணதீரன் கேட்டு முடிக்குமுன்,”இந்த டா ஃபோன்..சாசுகிட்ட இப்பவே பேசிடு.” என்று அவளுடைய அம்மாவின் ஃபோனைக் கொண்டு வந்து தம்பியிடம் கொடுத்தாள் விதி.
இரண்டு பேத்திகளும், ஒரு பேரனும் மூன்றாவது பேரனை தூக்கத்திலிருந்து எழுப்பியதற்கும், அனுமதியில்லாமல் அவன் ரூமில் அவர் நுழைய முயன்றதற்கும் கலெக்டர் வரை கேஸை கொண்டு சென்றனர்.
அந்தச் சந்தடியில் அறையினுள்ளே சென்ற ஸ்மிரிதி அழுது கொண்டிருந்த பேபியைத் தூக்கி கொண்டு வரவேற்பறை சோபாவில் வந்து அமர்ந்து அங்கே நடந்து கொண்டிருந்த சண்டையை பேபியுடன் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மாறனை ஃபோனில் அழைத்த ரணதீரன்,”பாட்டி ரொம்ப பிராப்ளம் செய்யறாங்க.” என்றான்.  அதன்பின் அந்தப் புறம் சொன்ன அனைத்திற்கும் மௌனமாக தலையசைத்தவன் அழைப்பைத் துண்டித்து ஃபோனை அவன் பாக்கெட்டி போட்டுகொண்டு.”சாச்சு வராங்க..வீட்டுக்கிட்ட வந்திட்டாங்க.” என்றான் வெற்றி புன்னகையுடன்.
“இந்தக் கொசுறு சொல்றதைக் கேட்டு இந்த இரண்டு துக்குடாங்க என்னைக் கேள்வி கேட்குதுங்க..அதை அவங்க அப்பா நீ, வக்கீல் வாயைத் திறக்காம கேட்டுகிட்டு இருக்க…அவங்க சித்தப்பா என்னவோ ஃபோன்லேயே எல்லாத்தையும் கேட்டிட்டு தீர்ப்பு கொடுக்க வ்ர போறானாம்.உண்மையா என்ன நடந்துச்சுண்ணு சொல்லேன் டா.” என்று அவர் மீது விழுந்த வீண் பழியை நீக்க முயன்றார் சிவகாமி.
“பூமி பர்மிஷன் இல்லாம நீங்க பேபியைத் தூக்க முடியாது..விதி, ரண்தீர் பர்மிஷனில்லாம அவன் ரூம் உள்ளே போக முடியாது..சட்டத்தை மீறினது நீங்கதான்.” என்றான் அவர்கள் குடும்ப சட்ட வல்லுனர்.
“வரட்டும் கலெக்டர்..இந்த ரூமை விலைக்கு வாங்கிட்ட மாதிரி நினைப்பு அவனுக்கு..விக்கறேண்ணு நான் சொல்லவேயில்லே..அதுக்குள்ளே இதுங்களுக்கு அவன் பட்டா பண்ணி கொடுத்திருக்கான்.” என்றார் சிவகாமி.
“அப்பா..நீங்க சொல்லுங்க..மாறனுக்கு விக்கறத்துக்கு வாய்மொழியா அம்மா ஒத்துகிட்டாங்க இல்லே?” என்று முன்னாள் கலெக்டரிடம் பஞ்சாயத்துக்கு போனான் மனு.
“அதெல்லாம் இப்ப செல்லாது..இந்த வீடு, தில்லி வீடு எல்லாம் என் பேரன், பேத்திகளுக்குதான்..அதுங்க பர்மிஷன் கொடுத்தாதான் நாங்க இருக்க முடியும்.” என்றார் இன்னாள் கலெக்டரை முந்திக் கொண்ட முன்னாள் கலெக்டர்.
“பாட்டி கேட்டுகிட்டீங்க இல்லே..இரண்டு வீடும் எங்களுது…தாத்தா..வி லவ் யூ” என்று அவரைக் கட்டி கொண்டனர் விதியும், ரணதீரனும்.
அப்போது ஸ்மிரிதியின் மடியிலிருந்து இறங்கி அவர்கள் அனைவரையும் நோக்கி சின்ன சின்ன அடிகள் எடுத்து வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான் பேபி.  அதைப் பார்த்து,”ஷ்ஷ்..நகருங்க..அவன் நடை பழக இடம் பண்ணுங்க.” என்று மற்ற குழந்தைகளை ஒருபுறமாக நகர்த்தி மாறனின் மகனுக்கு சிவகாமி வழி செய்து தர, அவனோ அவர்கள் அனைவரையும் தாண்டி அவனறையை நோக்கி போய் கொண்டிருந்தான்.  
உடனே,”பார்த்தியா..கலெக்டர் பையங்கறதைக் காட்டறான்..கர்மமே கண்ணா மறுபடியும் தூங்க போறான்.” என்று சொல்லி கொண்டே அவனை தூக்கி முத்தமிட்டார் சிவகாமி.
அதைப் பார்த்து,”பாட்டி.” என்று கத்திய பூமி அங்கேயே தரையில் அமர்ந்து கால்களை உதைத்து அழ, அவளையும் இன்னொரு கையால் சிவகாமி தூக்கி முத்தமழை பொழிய, பூமியின் அழுகை சட்டென்று நின்றது. உடனே,
“அவ கொஞ்சம் அழுதாலே கொஞ்சறீங்க..கோபப்படறது, கண்டிப்பா இருக்கறதெல்லாம் எங்களோட மட்டும் தானா?” என்று சிவகாமியிடம் கேட்டுவிட்டு,”பூமி..எல்லாத்துக்கும் அழுகை, அடம்..ஸ்டாப் இட்.” என்று குழந்தையைக் கண்டித்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி திட்டியதால் மூஞ்சியைத் தூக்கி வைத்து கொண்டு ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்த பூமியை சாப்பிட வைக்க மெஹக் முயற்சி செய்ய,  சாப்பிடாமல் பூமி அழிச்சாட்டியம் செய்ய, உடனே அவளுருகே சென்று அவளை மடியில் தூக்கி வைத்து கொண்ட ஸ்மிரிதியின் கெஞ்சலுக்கும், கொஞ்சலுக்கும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.  
“மா, இப்ப நீங்க எதுக்கு அவளை கொஞ்சறீங்க? நீங்கதான் பிராப்ளம்…பாட்டியில்லே..பூமியைத் திட்டுனீங்க இல்லே..சாசா வரட்டும்..உங்களுக்கும் இருக்கு.” என்றாள் விதி.
சாசாவிடம் ஸ்மிரிதியைப் பற்றி புகார் செய்யப்படும் என்று விதி சொன்னவுடன் மெஹக்கின் மடியில் போய் தானாகவே அமர்ந்து கொண்ட பூமி அவள் வாயை திறக்க உடனே அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள் மெஹக்.
அவள் அடுத்த வாய் சாப்பிடுமுன்,”பிரேமா பாட்டி.” என்றாள் பூமி.  உடனே,”இப்ப வேணாம்..நீ முதல்லே சாப்பிட்டு முடி.” என்றார் சிவகாமி.
அவன் தங்கையின் ஆசையை நிறைவேற்ற,“நான் எடுத்துகிட்டு வரேன்.” என்று மாடிப் படிகளில் தாவி சென்றான் ரணதீரன்.
“ரணதீரா..வேணாம் டா..அடுத்தது பிரேமா பாட்டுன்னு சொல்லுவா அப்பறம் உடனே தூங்கிடு வா டா..அவ சாப்பிடணும் டா..ரணதீரா,” என்று அவர் கத்தியதைப் பொருட்படுத்தாமல்,
“பாட்டி, கால் மீ ரந்தீர்.” என்று அவனுக்குப் பெயர் வைத்தவரையே திருத்தியவன் போன வேகத்தில் திரும்பி வந்தபோது அவன் கைகளில் பிரேமாவின் காட்டன் புடவை இருந்தது.  அதை அக்காவும், தம்பியும் ஹாலில் விரித்தனர்.  மெஹக் மடியிலிருந்து இறங்கி போய் அதில் படுத்து கொண்டாள் பூமி. சிவகாமியின் இடுப்பிலிருந்து இறங்கி போய் பூமி அருகில் படுத்து கொண்டான் பேபி. பெரிய குழந்தைகளும் சின்னவர்களுக்கு அடுத்து படுத்து கொண்டனர்.
மூன்று பேரும் சேர்ந்து பேபியைக் கொஞ்ச ஆரம்பித்தார்கள். மனதை மயக்கிய அந்த அற்புத காட்சியைப் பார்த்து கொண்டிருந்தனர் பெரியவர்கள் அனைவரும். அப்போது தட்டுடன் நின்றிருந்த மெஹக்கைப்  பார்த்து,”மா..ரோட்டி.” என்றாள் பூமி. அவள் அம்மாவென்று கூப்பிடவுடன் படுத்திருந்த பூமியை அவள் மடியில் உட்கார வைத்து, இறுக அணைத்து மறுபடியும் ஊட்ட ஆரம்பித்தாள் மெஹக்.  “அம்மா” என்றால் பூமி பூமிக்கு வந்ததது முதல் அது மெஹக்தான்.  
மக்கள் செல்வத்திற்காக எண்ணிக்கை இல்லா தடங்கல்களையும், எல்லையில்லா கஷ்டங்களையும் கடந்து வந்திருந்தனர் மெஹக்கும், மாறனும்.   ஒருமுறை அல்ல பலமுறை அவளை சீர்திருத்திக் கொள்ள மெஹக் எடுத்து கொண்ட முயற்சிகளுக்கு சிவகாமி, கீதிகா, ஸ்மிரிதி மூவரும் உறுணையாக இருந்த போதும் அதிலிருந்து விடுபட முடியாமல் திரும்ப திரும்ப அதனுள்ளே மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தவளைக் காப்பாற்றி திடமான பூமிக்கு அழைத்து வந்தது பூமியின் பிறப்புதான்.  அவன் அம்மாவிற்கு அவள் தளிர் கரத்தின் மூலம் நம்பிக்கையைக் கடத்தி அவன் பூமிக்கு வர காரணமான பூமியுடன் சிரித்து விளையாடி கொண்டிருந்தான் மெஹக்கின் மகன். அதே பூமியின் பிறப்பு தான் விதிக்கு அவள் அந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசானக் கதையைத் தெரியப்படுத்தியது.  
மேலும் இரண்டு வாய் ஊட்டிய பின் சிவகாமி எதிர்பார்த்தது போல் “பிரேமா பாட்டு” என்று டிமாண்ட் செய்தாள் பூமி பிரேமா.  அவள் அம்மாவின் புடவையில் படுத்து கிடந்த குழந்தைகளைப் பார்த்து பிரேமாவின் நினைவுகள் ஸ்மிரிதியைச் சுற்றி கொண்டன. அதைக் களையாமல் அதை உடுத்திக் கொண்டு, அவர்களருகில் அமர்ந்து,
“லாலி ஶ்ரீ கிருஷ்ணய்யா..நவ நீல மேக வர்ணா, 
பாலா, கோபாலா நீவு பவ்வலிம்பாரா”
என்று அவள் பாட ஆரம்பித்தவுடன் ஸ்மிரிதியின் மடி மீது வந்து படுத்து கொண்டு, பாடும் அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தான் பேபி. உடனே தீரன் அவன் பாக்கெட்டிலிருந்த ஸ்மிரிதியின் ஃபோனை எடுத்து அதில் ஏற்கனவே ஸ்மிரிதி குரலில் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த அதே பாட்டை போட்டவுடன், இரண்டு இடத்திலிருந்தும் ஒரே குரல் வந்தவுடன் ஃபோனையும், ஸ்மிரிதியையும் குழம்பி போய் பார்த்தான் பேபி.  தீரன் ஃபோனை அணைத்தவுடன்,
“சிருங்காரம்சின மன்சி பங்காரு ஊயலலோ
சங்க சக்ரதாரா சுவாமி நிதுர போரா..” என்ற வரிகளை ஸ்மிரிதி பாடி முடித்தவுடன், யார் பாட்டு பாடுகிறார்கள் என்று புரியாமல் மொத்தமாக குழம்பி போயிருந்தான் பேபி.
உடனே பெரிய குழந்தைகள் அனைவரும் அவன் குழப்பதைப் பார்த்து கைதட்டி சிரித்தனர்.  அதற்கு பின் ஃபோனில் பாட்டை பாஸ், ப்ளே என்று மாற்றி மாற்றி போட்டு அவனுக்கும், அவன் அம்மாவிற்கு போட்டி வைத்தான் ரணதீரன்.
ஒரு கட்டத்தில் பேபிக்கு அந்த விளையாட்டு பிடிக்காமல் அழ ஆரம்பிக்க, “ரணதீரா..பாட்டை நிறுத்து..உங்கம்மா மட்டும் பாடட்டும்..அவளுக்கு உங்களோட இந்த மாதிரி நேரம் கிடைக்கறதே இல்லே..அதான் நீங்கெல்லாம் கேட்டுகிட்டே தூங்கறத்துக்கு எல்லார் ஃபோன்லேயும் இந்தப் பாட்டு போட்டு வைச்சிருக்கு.” என்று சிவகாமி கண்டித்தவுடன்,
”ரந்தீர்னு சொல்லுங்க…அப்பதான் பாட்டை நிறுத்துவேன்.” என்றான் ரணதீரன்.  வேறு வழியில்லாமல்,”ரந்தீர் பாட்டை அணைச்சிடு.”என்று சொல்லி, ஸ்மிரிதியின் மடியில் கிடந்த பேபியைக் காட்டி,”இவனுக்கு இன்னும் பெயரே வைக்கலே..என்ன பெயர் யோசிச்சு வைச்சிருக்கீங்க?” என்று அனைவரையும் பார்த்து கேட்க,
“மனிஷ் தான் வைக்க போறான்..அவன் சாய்ஸ்.” என்றாள் மெஹக்.
“பெரியவனுக்கு நான் வைச்ச சுத்தமான தமிழ் பெயரை சுத்தமான இந்தி பெயரா மாத்திட்டீங்க..இவனுக்கு சுத்தமான இந்தி பெயர் வைங்க..நான் அதை தமிழ்படுத்தி கூப்பிடறேன்.” என்று ஏட்டிக்கு போட்டியாக பேசியவர் அறிந்திருக்கவில்லை மனிஷ் வைக்க போகும் பெயரை தமிழ்படுத்தி கூப்பிடவே முடியாதென்று.
அப்போது விதி,”அம்மா, பாடுங்க..பாட்டி சொல்ற மாதிரி எங்களோட டயம் ஸ்பெண்ட் பண்றதில்லே.” என்றாள்.
அதற்கு,”அவ உங்களோட அம்மா மட்டுமில்லே  ஷிக்‌ஷாவோட (shiksha) நூற்று கணக்கான  குழந்தைங்களுக்கு ஸ்மிரிதி மா.” என்றார் சிவகாமி.
விதிஷா என்னும் விதை “ஷிக்‌ஷா” என்ற விருக்ஷமாக வளர்ந்து உதய்பூர் அருகே பத்து வயதுக்கு உடபட்ட உள்ளூர் குழந்தைகளுக்கு சகலத்தையும் அறிந்து கொள்ளும் ஆரம்ப பள்ளிக்கூடமாகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு  அன்பான இல்லமாக செயல்பட்டு கொண்டிருந்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத கேள்வியைக் கேட்டாள் விதி,”என்னை மட்டும் ஏம்மா உங்களோட நம்ம வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்தீங்க?..உங்களுக்கு கிடைக்கற மற்ற அனாதை குழந்தைங்க போலே என்னையும் ஷிக்‌ஷாவலே விட்டிருக்கலாமே…ஏன் மா விடலே?” என்றாள்.
ஒரு நொடி அந்த அறையிலிருந்த பெரியவர்கள் அனைவரும் அந்தக் கேள்வியில் அதிர்ந்து போயினர்.  அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தடுமாறி கொண்டிருந்த போது,”அப்பா, என்னைத் தேடி யாருமே வரலேயா?” என்று மனுவைப் பார்த்து கேட்டாள் விதி.

Advertisement