Advertisement

ஸ்மிரிதியின் மனு – 9_2
பைக்கை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தான் மனு.  அந்த நிதானமான வேகத்திலும் குளிரினால் ஸ்மிரிதியின் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப் போயின. இரண்டு புறமும் கால்களைப் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் கைப்பையினை அவர்கள் இருவருக்கிடையே வைத்து அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தாள்.  சிறிது நேர பயணத்திற்குப் பின்,
“மனு.” என்று அவன் காதருகே கிசுகிசுத்தாள். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனுக்கு அவளுடைய அருகாமையை அவள் ஹெல்மெட் உணர்த்த,
“என்ன?” என்று சத்தமாகக் கேட்டான்.
“என்கிட்ட கிளவுஸ் இல்ல..கை இரண்டு விறைச்சுப் போகுது.” என்று கம்ப்லெயண்ட் செய்தாள்.
“அறிவில்ல உனக்கு.” என்று அர்த்தசாமத்தில் ஜட்ஜானான் வக்கீல்.
ஸ்மிரிதிக்கு அவனிடம் எதற்கு சொன்னோம் என்று தோன்றியது.  அவள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது, அவனுடையை வலக் கையினால் அவளுடைய வலது கையை இழுத்து அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டின் (jacket)  வலதுபுற பாக்கெட்டிற்குள் நுழைத்தான் மனு.  அவன் உதவியில்லாமல் அவளுடைய இடது கையை அவனுடைய ஜாக்கெட்டின் இடதுபுற பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டாள் ஸ்மிரிதி.   அதன்பின் அவன் முதுகோடு ஒட்டி அமர்ந்தாள்.  
அவள் வீட்டிற்கு வழி சொல்ல அவர்கள் அங்கே போயி சேருவதற்கு முக்கால் மணி நேரமானது.  குளிரைத் தவிர வேறு துணையில்லாத சாலையில் அவர்கள் பாதையை மூடுபனி (fog) சூழ்ந்து கொள்ள வெகு ஜாக்கிரதையாக பைக்கை செலுத்தினான் மனு.
அவள் வீட்டின் கேட்டை அடைந்தபோது அங்கேயிருந்தக் காவலாளி ஸ்மிரிதியைப் பார்த்தவுடன் அவனறையிலிருந்து ஓடி வந்து கேட்டைத்  திறந்துவிட்டான்.
வீட்டு வராண்டாவில் அந்த இரவு வேளையில் காத்திருந்தார் கார்மேகம்.  இரவு உடையின் மேல் ஒரு ஷாலைப் போர்த்தியபடி நின்று கொண்டிருந்தவர் அருகில் மனு அவன் பைக்கை நிறுத்தியவுடன் அதிலிருந்து இறங்கிய மகளைப் பார்த்து,
“என்ன மா..இன்னிக்கு வீட்டுக்கு வர மாட்டீங்கன்னு சொல்லிட்டு இப்படி இராத்திரில வந்திருக்கீங்க? என்று கேட்டார்.
“ஹோட்டல்  வேணாமுனு வீட்டுக்கு வந்திட்டேன்..மனு கொண்டு வந்து விடறேனு சொன்னதுனால நான் உங்களுக்கு வண்டிக்காக போன் செய்யல.” என்றாள்.
அப்போது ஹெல்மெட் கழட்டியபடி பைக்கிலிருந்து இறங்கிய மனுவைப் பார்த்து,
“வாங்க தம்பி..வீட்ல எல்லாரும் சௌக்கியமா? கலெக்டர் ஐயா, சிவகாமி அம்மா, மாறன் தம்பி.” என்று விசாரித்தார் கார்மேகம்.
“எல்லாரும் நல்லா இருக்கோம் அங்கிள்” என்று பதில் சொல்லியபடி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான் மனு
“நல்லா இருங்க தம்பி..வீட்டுக்குள்ள வந்திட்டு போங்க தம்பி.” என்றார் கார்மேகம்.
“இல்ல..நான் கிளம்பறேன்.” என்று மறுத்தான் மனு.
“அப்பா..டிரைவர கார் கொண்டு வர சொல்லுங்க..பைக்கை ஓட்டிகிட்டு போக முடியாது ஒரே மூடுபனி.” என்றாள் ஸ்மிரிதி.
அதற்குள் வீட்டு வாசலிலிருந்து “தீதி” என்று குரல் வந்தது.
அவர்கள் மூவரும் திரும்பிப் பார்த்தனர்.  பதினைந்து வயது சிறுவன் ஒருவன் ஓடி வந்து ஸ்மிரிதியை அணைத்துக் கொண்டான்.
“என்ன டா..நீ இன்னும் தூங்கலையா?” என்று அவனை அன்புடன் விசாரித்தாள் ஸ்மிரிதி.
“எல்லாரும் முழிச்சுகிட்டு மெஹந்தி போட்டுக்கிட்டு இருக்காங்க..நானும் போட்டுகிட்டேன்.” என்று அவன் வலது உள்ளங்கையை விரித்து காட்டினான்.  அதில் அவன் பெயரும் அதை சுற்றி நெருக்கமான டிஸைனும் வரையப்பட்டிருந்தது.
“நல்லா இருக்கு மனிஷ்” என்றாள் ஸ்மிருதி.
“நீயும் வந்து போட்டிக்க.” என்றான் மனிஷ்
“எனக்கு இப்ப வேணாம்.” என்று மனிஷிடம் மறுத்துவிட்டு..”வண்டிய வர சொல்லுங்க.” என்றாள் கார்மேகத்திடம்.
“வேண்டாம் அங்கிள்..நான் பார்த்துப் போயிடுவேன்.” என்றான் மனு.
“அப்பா..நீங்க டிரைவருக்கு போன் போடுங்க..இல்லை நான் ஆன்ட்டிக்கு போன் போட்டு மனு நம்ம வீட்ல இன்னிக்கு நைட் தங்க போறானு சொல்லிடறேன்.” என்று மனு ஏவிய அதே ஏவுகணையை அவன் மேல் திருப்பி விட்டாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் முடிவைக் கேட்ட கார்மேகம், மனு இருவரும் பிரச்சனையைப் பெரிதுபடுத்த விரும்பாமல் உடனே சமாதானத்திற்கு வந்தனர்.
“தம்பி..நீங்க உள்ள வந்து வெயிட் பண்ணுங்க..நான் டிரைவருக்குப் போன் போடறேன்..காராஜ் பக்கத்திலதான் அவன் வீடு..இரண்டு நிமிஷம் வந்திடுவான்.” என்று அவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார் கார்மேகம்.
முதல்முறையாக ஸ்மிரிதியின் வீட்டிற்குள் நுழைந்த மனு அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து பிரமிப்படைந்தான்.  வீட்டு வாயிலின் வலது புறத்திலிருந்த வரவேற்பறை முழுவதும் கண்ணாடி மற்றும் பளிங்கு கற்களால் இழைக்கப்பட்டிருந்தது.  அறையின் ஒவ்வொரு மூலையிலும் இரவு வேளையில் நறுமணத்தை பரப்பும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூ ஜாடிகள்.  அறையின் நடுவில் ஆள் உயரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தார் புத்தர்.  அந்த புத்தர் சிலையை சுற்றி வட்ட வடிவில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்களாலானத் தரைவிரிப்பு.
அந்த அறையைப பார்த்தவுடன் அது இரவு வேளை போல் மனுவுக்கு தோன்றவில்லை.  எரிந்து கொண்டிருந்த அலங்கார விளக்குகளின் எதிரோளியை பளிங்குத் தரையும், கண்ணாடி ஜன்னல்கலும் பிரதிபலித்து கதிரவனைக் காலைவரை கைது செய்து வைத்திருந்தன.
“உட்காருங்க தம்பி.” என்று அறையின் சுவற்றோடு இருந்த பெரிய சோபாவைக் சுட்டிக் காட்டினார் கார்மேகம். வீட்டின் பின்புறத்திலிருந்து பாட்டும், சிரிப்புமுமாக சத்தம் வந்து கொண்டிருந்தது.
சோபாவில் அமர்ந்து கொண்ட மனுவின் பக்கத்தில் வந்து அமர்ந்த மனிஷ்,”நீங்க யாரு?” என்று மனுவைப் பார்த்து கேட்டான்.
“நான் மனு வளவன்.” என்று அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான் மனு.
“நான் மனிஷ் கார்மேகம்.” என்று அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான் மனிஷ்.
“நைஸ் டு மீட் யு.” என்று அவன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அந்தச் சிறுவனுடன் கைகுலுக்கினான் மனு.
“மீ டூ.” என்றான் மனீஷ்
“ஸ்மிரிதி..தம்பிக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்லு.’ என்றார் தமிழில் கார்மேகம்.
“எனக்கு எதுவும் வேணாம்..நீங்க டிரைவருக்கு போன் போடுங்க..நான் கிளம்பணும்..அம்மா கவலைப்படுவாங்க.” என்று அவசரமாக மறுத்தான் மனு.
மனுவின் அவசரத்தை அவமரியாதை என்று அனர்த்தம் செய்து கொண்ட ஸ்மிரிதி,
“எங்க வீட்ல டீ குடிக்க மாட்டியா? இல்ல வேற ஏதாவது கொடுக்கட்டுமா? குளிருக்கு இதமா..அப்பா டிரைவருக்கு அப்பறம் போன் போடுங்க முதல்ல மனுவுக்கு என்னோட ஸ்பெஷல் “ஸ்கூருடிரைவர்”.” என்று எல்லைத் தாண்டி அபாயத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் பேச்சில் அதிர்ச்சியடைந்த கார்மேகம், “ஸ்மிரிதி மா.” என்று அவர் குரலை உயர்த்த,
அதைக் கண்டு கொள்ளாமல் இளையவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.  தமிழ் புரியாததால் மனிஷ் மௌனமாக அமர்ந்திருந்தான்.  இன்னிக்கு ஒரு முடிவு தெரியணும் என்ற ரீதியில் இருவரும் பின்வாங்காமல் அடுத்தவர்களின் அடுத்த அசைவிற்காகக் காத்திருந்தனர்.
லாயரின் பந்தையக் கார் டிரைவர்,  பந்தையக் கார் டிரைவரின் லாயர்..அவர்கள் இருவருக்குமிடையே  ஸ்கூருடிரைவர்.

Advertisement