“கார்மேகம்.” என்று மனுவிற்கு முன் பதில் அளித்தான் மாறன்.
“நான் கேள்விபட்டது இல்லையே அண்ணா.” என்று அவள் சொல்ல,
“கேள்விபட்டவங்க யாரும் மேல கேள்வி கேட்கமாட்டாங்க.” என்றான் மனு.
“அவ்வளவு பெரிய ஆளா அவரு?’ என்று மறுபடியும் ஜனனி கேட்க,
“பெரிய ஆளா இருந்தா இதுக்குள்ள பிரபலமானவங்க பட்டியல்ல வந்திருப்பாரே..அவரு பெரிய விஷயத்தை முடிச்சு கொடுக்கற சின்ன ஆள்..சத்தம் போடற கதவுக்கு தீர்வு எண்ணெய்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா எந்த கதவுல எந்த கீலுக்கு எத்தனை சொட்டுனு கார்மேகத்துக்கு மட்டும் தான் தெரியும்….
தில்லிங்கற கோட்டலைக் கதவுங்களுக்குப் பஞ்சமில்ல, சத்தத்தை ஸ்டாப் செய்யற ஆளுக்கு எல்லா கதவும் தானாவேத் திறக்கும்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போது மனுவின் போன் அழைக்க அவர்களிடமிருந்து சற்று தள்ளிப் போயி பேச ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்குப் பின்,
அவர்கள் மூவரும் பக்கத்து பில்டிங்கில் இருந்த அந்த ஹோட்டலுக்கு மாறன் காரிலும், மனு அவன் பைக்கிலும் சென்றனர். அவர்களிடமிருந்து வண்டி சாவியை வாங்கி கொண்டு ஹோட்டிலின் வலது புறத்தில் சுவற்றை ஒட்டிப் பார்க் செய்யப்பட்டன அவர்களுடைய காரும், பைக்கும். அவர்கள் நால்வரும் ரிசெப்ஷனை அடைந்தவுடனைய அவர்களை அழைத்து செல்வதற்காக தயாராக காத்திருத்திருந்தான் கோட், ஸூட் அணிந்திருந்த ஹோட்டலின் ஜென்ரல் மனேஜர்.
“ஸர் ..மேம் வெல்கம்.” என்றான் அவர்களிடம்.
அறிமுகமேத் தேவையில்லாமல் போனது அந்த தருணத்தில். ரிசெப்ஷனுக்கு பின்னால் மறைவிலிருந்த லிஃப்டில் பயணம் செய்தனர் அவர்கள் அனைவரும். லிஃப்ட் கதவு திறந்தவுடன் அதன் வாயிலில் காத்திருந்தாள் ஸ்மிரிதி. அந்த தளத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
லிஃப்டிலிருந்து வெளியே வந்தவுடன் இடது புறம் பிரம்மாண்டமான ஜன்னல் இருந்தது. வெளியே இருள் படிந்து இருக்க, தில்லி ஜெய்பூர் சாலையில் வாகனங்கள் வெளிச்சத்தை வீசியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்தன. வலதுபுறம் திரும்பியவுடன் சுவற்றை ஒட்டி இருபுறமும் அலங்காரமாகச் செயற்கைச் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் மறைந்து கொண்டிருந்த இயற்கை எழிலை நாலு சுவற்றுக்குள் செயற்கையாக உருவாக்கயிருந்தனர்.
வராண்டாவின் கோடியில் பெரிய கதவு இருந்தது. ஸ்மிரிதி அதை திறந்து உள்ளே நுழைந்தவுடன்,
“வெல்கம்.” என்று அவர்களை வரவேற்றது மெஹக். ஹிந்தி சினிமா உலகின் தற்போதைய முன்னனி கதா நாயகிகளில் ஒருத்தி.
மனுவைத் தவிர மற்றவர்கள் மெஹக்கிற்கு அறிமுகம் இல்லாததினால் அவளே மற்றவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஹாய்..நான் மெஹக்..ஸ்மிரிதியோட பிரண்ட்.” என்றாள்.
உடனே மெஹக்கைப் பார்த்து,
“நான் ஜனனி..இவர் என் கணவர் ராம்..நாங்களும் ஸ்மிரிதி அக்காவோட பிரண்ட்ஸ்.” என்று உற்சாகமாக அவளையும், ராமையும் அறிமுகம் செய்து கொண்டாள் மெஹக்கைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ஜனனி.
மனுவைப் பார்த்து,”நீ அப்படியே இருக்க..அமேஸிங்.” என்றாள் மெஹக்.
அவன் பெயருக்கு ஏற்றார் போல் மெஹகைப் பார்த்து புன்னகை மட்டும் புரிந்தான் மன்னன் மனு வளவன்.
மனு அருகில் நின்று கொண்டிருந்த மாறனைக் காட்டி,
“மனுவோட தம்பி மாறன்.” என்றாள் ஸ்மிரிதி.
மாறன் அருகில் வந்த மெஹக் அவன் கைகளைப் பற்றி,”நைஸ் மீட்டிங் யு.” என்று முகமலர உண்மையான அன்புடன் வரவேற்றாள்.
“என்ன குடிக்கறீங்க?” என்று அவள் கேட்க, அனைவரும் ஸாஃப்ட் ட் ரிங்க என்றனர்.
அப்போது குளிர் பானத்தைக் கொண்டு வர அடுத்த அறைக்கு செல்லயிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,”உன்னோட பெஸ்ட் எனக்கு வேணும்.” என்றாள் மெஹக்.
“டன்.” என்று சொல்லி சென்றாள் ஸ்மிரிதி.
கோக், பெப்ஸி, ஜுஸ் என்று வெரைட்டியாக டிரேயில் ஸ்மிரிதி எடுத்து வந்ததை அங்கிருந்தவர்கள் எடுத்து கொண்டனர்.
மெஹக்கைப் பார்த்து,
“உன்னோடதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டயம் கொடு.” என்றாள் ஸ்மிரிதி.
“இரு..நானும் வரேன்..எக்ஸ்கியூஸ் மீ.” என்று ஸ்மிரிதியோடு அடுத்த அறைக்கு சென்றாள் மெஹக்.
மறுபடியும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட மெஹக்கின் கையில் ஆரன் ஜ் ஜீஸ் இருந்தது. ஆனால் அது ஆரன்ஜ் ஜூஸ் இல்லையென்று அந்த அறையிலிருந்த இரண்டு ஆண்கள் கண்டு கொண்டனர். ராமும், ஜனனியும் அதை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.
எதையும் குடிக்காமல் மெஹக் அருகில் அமர்ந்து கொண்டு அவள் போனைப் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. மனுவும் அவளைப் பார்த்து கொண்டிருந்தான். அதை உணர்ந்த ஸ்மிரிதி அவள் தலையை நிமிர்த்தி பார்வையால் என்னவென்று கேட்க, அவனும் பார்வையால் மெஹக்கின் கையிலிருந்து சோம பானத்தைச் சுட்டிக் காட்டினான். உடனே ஸ்மிரிதி அவனைப் பார்த்து,”எனக்கு இன்னும் டயமாகல.” என்றாள்.
“என்ன சொல்ற ஸ்மிரிதி?” என்று அருகேப் பேசிக் கொணடிருந்தவர்கள் விசாரிக்க,
“எனக்கு வீட்டுக்குப் போக இன்னும் டயமாகலைனு மனுகிட்ட சொல்லிகிட்டிருந்தேன்…ஒரு ரவுண்டு..அதுக்கு அப்பறம்தான் வீடு.” என்று ஸ்மிரிதி சொல்ல,
“ரவுண்ட் அடிச்சிட்டுதான் போவேன்..இல்லைனா தூக்கம் வராது.” என்றாள் மனுவைப் பார்த்து கொண்டே. அவள் எந்த ரவுண்டைப் பற்றி சொல்லுகிறாள் என்று மனுவிற்கும் மட்டும் புரிந்தது. அவள் சொன்ன பதிலிற்கு மனுவிடமிருந்து மிஸைல் தாக்குதலை எதிர்பார்த்த ஸ்மிரிதிக்கு ஏமாற்றத்தை அளித்து அசையாமல் அய்யனார் சிலை போல் அமர்ந்திருந்தான் மனு.
அப்போது அறையின் மறுபுறத்திலிருந்தக் கதவு மெதுவாக திறக்கப்பட்டது. அவர்கள் முன்னே நாற்பது வயது மதிக்கதக்க, சாம்பல் நிற ஷர்ட் பேண்ட்டில் நேர்த்தியாகத் தோற்றமளித்த பெண்மணி ஒருவர் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொல்லிவிட்டு, ஸ்மிரிதியையும், மெஹக்கையும் பார்த்து,
“வந்துட்டாங்க.” என்றார்.
அந்த செய்தியைக் கேட்ட உடனே எழுந்து கொண்ட ஸ்மிரிதி அவள் அருகே அமர்ந்திருந்த மெஹக்கிடம்,”நான் போயி பேசறேன்..நீ அதை முடிச்சிட்டு வா.” என்று அவள் கையிலிருந்த கிளாஸைக் காட்டினாள்.
அந்தப் பெண்மணியுடன் ஸ்மிரிதி அடுத்த அறைக்கு செல்ல அங்கே இருந்த மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டாள் மெஹக்.
“என்னைப் பார்க்க ஒரு மணி நேரம் முன்னாடி வர வேண்டியவங்க இப்பதான் வராங்க..ஸ்மிரிதிய அதுக்குதான் கூப்பிட்டிருந்தேன் ஆனா அவங்க ஃபிளைட் டிலே ஆனதுல இப்பதான் தில்லி வந்து சேர்ந்திருக்காங்க…பத்து நிமிஷத்தில ஸ்மிரிதி வந்திடுவா.” என்று அவர்களுடன் அளவளாவிக் கொண்டே அவள் கிளாஸைக் காலி செய்தாள் மெஹக்.
அவள் கையிலிருந்ததைக் குடித்து முடித்தவுடன் அவர்களிடம் அனுமதி கேட்டு அங்கிருந்து அகன்றாள் மெஹக். அவள் அறையிலிருந்து சென்றவுடன்,”மனு அண்ணா..ஸ்மிரிதி சாதாரணமில்லைதான்.” என்று ஒப்புக்கொண்டாள் ஜனனி.
“நான் கபீரைப் பார்க்க வந்திருக்கானு நினைச்சேன்..மெஹக்குனு நினைக்கல..ஏன் இந்த ஹோட்டல்ல தங்கறானு தெரியல..ஸ்மிரிதி வீடு இருக்கு..கபீரோட ஹோட்டல் இருக்கு.” என்றான் மனு.
“ஸ்மிரிதி கா அவங்க வீடு ஜெய்பூர் ரோட்ல இருக்குணு சொன்னாங்க.” என்றாள் ஜனனி.
“நாம இப்ப வந்த ஹைவேதான் ஜெய்பூர்வரை போகுது..அவங்களோடது பண்ணை வீடு..எங்க ஆரம்பிக்குது எங்க முடியுதுனு தெரியாது..நாங்க யாரும் போனதில்ல ஆனா கேள்விபட்டிருக்கேன்.” என்று ஸ்மிரிதியின் பின்னனியை மேலும் பெரிதாக்கினான் மனு.
“அங்கதானே கார்மேகம் அங்கிள் அவங்க இரண்டாவது மனைவியோட இருக்காரு?” என்று வெளிப்படையாக ஜனனி கேட்க, ஆண்கள் மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் அதிர்ச்சியைப் பார்த்து,
“ஸ்மிரிதிகா தான் கோவில்ல சொன்னாங்க..அவங்க அப்பாவோட இரண்டாவது குடும்பத்தோடதான் அவங்க இருக்காங்கனு.” என்றாள் ஜனனி.
“நீ அவகிட்ட இதெல்லாம் எதுக்கு கேட்ட?” என்று ராம் கோபித்து கொள்ள,
“நான் தெரியாம கேட்டிட்டேன்..நீங்க யாருமே அவங்க அம்மா, அப்பா விவாகரத்து செய்துகிட்டாங்கனு எனக்கு சொல்லவேயில்ல.. அவங்க அம்மாவ ஏன் கோவிலுக்கு கூட்டிகிட்டு வரலைனு சாதாரணமா கேட்டேன்..அப்பதான் இதெல்லாம் சொன்னாங்க.” என்றாள் ஜனனி.
“உனக்கு எதுக்கு இந்த வேலை? இப்பதான் அவள இரண்டாவது முறையா சந்திக்கற அதுக்குள்ள எல்லாம் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போற?” என்று புது மனைவியைக் கடிந்து கொண்டான் ராம். உடனே ஜனனி கண் கலங்க, மற்ற இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“மனு..உனக்கு மெஹக்க தெரியுமுனு நீ என்கிட்ட சொன்னதில்லையே.” என்று பேச்சை மாற்றினான் மாறன்.
மாறனின் முயற்சியைப் புரிந்து கொண்டு மனுவும் ஒத்துழைப்புக் கொடுத்தான்.
“அவள பத்து வருஷத்துக்கு அப்பறம் இன்னிக்குதான் பார்க்கறேன்..அவளுக்கும் என்னை அடையாளம் தெரிஞ்சிருக்காது..ஸ்மிரிதி முன்னாடியே சொல்லியிருப்பா.”
“ஸ்மிரிதிக்கு நிறைய பிரண்ட்ஸா?” என்று கேட்டான் மாறன்
“உனக்கு எப்படி தெரியும் ஸ்மிரிதி பிரண்ட்ஸை?” என்று கேட்டான் மாறன். அவன் கேட்டு கொண்டிருந்த போது அடுத்த அறையிலிருந்து கதவைத் திறந்து வந்த ஸ்மிரிதி,
“எங்க ஸ்கூல்ல நான் பிரபலமானது பிரச்சனையான மாறினப் போது தலை நகர்லேர்ந்து வந்த தலைவர் மனு வளவன்தான் என்னை ஸ்கூலேர்ந்து எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாரு.” என்றாள் சிரிப்புடன்.
ஜனனி தலைக் குனிந்தபடி அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தாள். அவள் மன நிலையை யுகித்த மனு,
அவர்களுக்குப் போர் அடிக்கறது என்று நினைத்த ஸ்மிரிதி, அந்த அறையின் நுழைவாயிலிற்கு நேர் எதிராக இருந்த கண்ணாடிக் கதவுகளைத் திறந்தபடி ஜனனியைப் பார்த்து,
“வெளில வந்து பாரு..குட்காவ் பூரா தெரியும்..மெட் ரோ லைன் தெரியும்..இங்க ஒரே கட்டிடம்தான்..கம்பெனிஸ்..ரெசிடென்ஷியல் ஏரியா..என்னால உனக்கு தில்லிய சுத்தி காட்ட முடியாது ஹரியானவ ஹைட்லேர்ந்து காட்ட முடியும்.” என்று சொல்லி ஜனனியை வெளியே அழைத்து சென்றாள். அங்கே சின்ன சைஸில் இயற்கையை செயற்கையாக செய்திருந்தார்கள். மினி புல்வெளி, மினி நீர் வீழ்ச்சி, மினி செடி கொடி என்று அந்த இடமே மினி காடு போல் இருந்தது.
அந்த கான்கிரிட் காட்டில் செய்றகை காடு இருக்குக்கூடம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஜனனி,
“ஸ்மிரிதி கா..இந்த மாதிரி இடமெல்லாம் நான் வந்ததில்ல..அன்னிக்கு ஒரு நாள் இராத்திரி அந்த ஹோட்டல் அனுபவமே எனக்கு வித்தியாசமா இருந்தது..இப்ப அதைவிட வித்தியாசமா இருக்கு இந்த இடம்..மனு அண்ணா சொல்ற மாதிரி நாங்க வீட்டுக்குப் போயிடறோம்..எனக்கு மெஹக்கோட இங்க சகஜமா சாப்பிட முடியுமுனு தோணலை..நான் ஏதாவது உளறிடுவேன்.” என்று வெளிப்படையாக அவள் பயத்தை வெளியிட்டாள்.
“உங்களோட வேலை முடிஞ்சிடுச்சா?” என்று கேட்டாள் ஜனனி.
“அவளுக்காகதான் இன்னிக்கு இங்க வந்தேன்..அவள தமிழ் படம் செய்ய அப்ரோச் செய்திருக்காங்க..அது விஷயமாதான் உள்ள இரண்டு பேர்கிட்ட பேசிகிட்டிருந்தேன்…இப்ப அவளோட கான்ட் ராக்ட் பற்றி பேசிகிட்டிருக்காங்க அதான் நான் வெளியே வந்திட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அவனின் அந்த அதிகாரமான பேச்சில் ஆத்திரமடைந்த ஸ்மிரிதி,
“நீ போ..ஜனனி வர மாட்டா.” என்றாள்.
“ஸில்லியா பேசாத..அவ மட்டும் எப்படி இங்க இருப்பா..எங்களோடதான வந்தா.” என்றான் மனு.
“அப்ப நீ ஸில்லியா பேசாத..அவ என்கூட டின்னர் சாப்பிடறேனு சொன்னா அதனால டின்னர் சாப்பிட்டு முடிச்ச அப்பறம்தான் அவ கிளம்புவா.” என்று ஜனனியின் முடிவை அவள் சார்பாக மாற்றினாள் ஸ்மிரிதி.
அவன் எடுத்த முடிவை மதிக்காமல் பேசிய ஸ்மிரிதியைப் பார்த்து,
“சரி..டின்னர் முடிச்ச பிறகு அவங்கள மாறன் வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரட்டும்..நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அறையினுள் சென்றான் மனு.
டெரேஸ்ஸில் நின்றிருந்தவர்கள் சங்கடத்தில் இருக்க அதைப் பற்றி கவலைப்படமால் இருந்தது சண்டைப் போட்டு கொண்ட இரண்டு ஜீவன்கள்தான். மனு அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன்,
“அவன் கீழவரைக்கும் போயிட்டு வந்திடுவான்..அவன் இல்லாம டின்னர் நடக்காது..போன வேகத்தில திரும்பிடுவான்..நான் போன் செய்து டின்னர் சர்வ் செய்ய சொல்றேன்.” என்று மற்றவர்களை சமாதானம் செய்துவிட்டு உள்ளே சென்று அறையிலிருந்த போனில் யாரிடமோ அடுக்கடுக்காக உத்தரவிட்டு கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அதற்குபின் அவள் போனை உபயோகித்தாள்.
மனு ஹோட்டல் வாயிலை அடையுமுன் அவன் போன் அடித்தது. அவன் போனை எடுத்தவுடன்,
“வா மேல.” என்றாள் அதிகாரமாக ஸ்மிரிதி.
“முடியாது.”
“ஏன்?”
“எனக்கு மெஹக்கோட சாப்பிட வேணாம்.” என்றான்.
சிறிது நேர மௌனத்திற்கு பின்,
“என்னோட சாப்பிட வா.” என்று அழைப்பு விடுத்தாள் ஸ்மிரிதி.
“முடியாது.” என்றான் மறுபடியும் மனு.
அவனிடம் மேலே பேசாமல் போனைக் கட் செய்தாள் ஸ்மிரிதி. டெரஸ்ஸில் நின்று கொண்டிருந்த மற்றவர்களிடம் போயி,
ஸ்மிரிதியும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டே சாப்பிட மனு மட்டும் சாப்பிட மட்டும் வாயைத் திறந்தான். அவன் மௌனத்தைக் கவனித்த கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு லேசாக பயம் வந்தது ஆனால் அதைத் தள்ளி வைத்துவிட்டு மற்றவர்களுடன் அரட்டையடித்தாள். ஒவ்வொரு டிஷைப் பற்றியும் விளக்கி அதை சுவைக்க வைத்தாள். டேபிளிலிருந்த எல்லா வகை சுற்றுண்டியின் சுவையையும் அவர்கள் சுவைத்து தெரிந்து கொண்டனர்.
“ஸ்மிரிதி கா..இதெல்லாம் இதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டதே இல்ல.” என்றாள் ஜனனி.
“அதான் நான் யோசனைப் பண்ணி ஆர்டர் கொடுத்தேன்..முழுசா சாப்பிட முடியலைனாக் கூட பரவால்ல எல்லாத்தையும் டேஸ்ட் செய்து பார்த்திட்டோமுனா அடுத்தமுறை வேற எங்கையாவது போகும் போது ஆர்டர் செய்ய ஈஸியா இருக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
“எங்க வீட்ல நிறைய வெளிய போயி சாப்பிட்டது கிடையாது.” என்றாள் ஜனனி.
“இப்ப நீ இருக்க போற வீட்டோட வீட்டுக்காரர் உன்னை நிறைய இடத்துக்கு அழைச்சுகிட்டு போவாரு.” என்று சொல்லி ஜனனியைப் பார்த்து கண் சிமிட்டினாள் ஸ்மிரிதி. ராமும் அவள் சொன்னதின் அர்தத்தைப் புரிந்து கொண்டு மனைவி மேல் அதுவரை இருந்த கோபத்தைக் களைந்து விட்டு ஜனனியைப் பார்த்து புன்னகைத்தான்.
அந்த புது ஜோடி ஒருவரையொருவர் கடைக்கண் பார்வையால் கபளீகரம் செய்து கொண்டிருக்க அதே அறையில் இருந்த மற்றொரு ஜோடி நேரடிப் பார்வையால் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று மௌன யுத்தம் நடத்திக் கொண்டிருந்தனர். அறையில் நடப்பவற்றைக் கண்டு கொள்ளாமல் கர்மமே கண்ணாக கண்முன் இருந்தவற்றைக் காலி பண்ணிக் கொண்டிருந்தான் மாறன்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை மெஹக் வரவில்லை. அதைக் கவனித்த ராம், ஸ்மிரிதியிடம்,
“உன் பிரண்ட் இன்னும் சாப்பிட வரலையே.” என்றான்.
“அவளுக்கு வேலை முடிஞ்சிருக்காது..அவ சாப்பிட இன்னும் லேட்டாகும்..நான் போயி அவள அழைச்சுகிட்டு வரேன்..நீங்கெல்லாம் அவகிட்ட சொல்லிகிட்டு கிளம்பிடுங்க..இன்னும் லேட்டாச்சுனு ஆன் ட்டி கவலைப்படுவாங்க.” என்று சொன்னாள் ஸ்மிரிதி.
அதுவரை மௌனமாக இருந்த மாறன்,”சரி..மெஹக்கிட்ட சொல்லிகிட்டு நாங்க கிளம்பறோம்.” என்றான்.
உடனே அடுத்த அறைக்கு சென்று மெஹகை கையோடு அழைத்து வந்தாள் ஸ்மிரிதி. அவர்கள் அனைவரிடமும் ஸாரி கேட்ட மெஹக் அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக சேர்ந்து உணவருந்தப் போவதாக வாக்குறுதி அளித்தாள்.
அவர்கள் எல்லாரும் புறப்பட தயாராக கதவுருகே சென்ற போது மனு மட்டும் அவன் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்திருக்கவில்லை. அறைக்குள் மெஹக் வந்தபோது கூட அவன் எழுந்து கொள்ளாமல் அசட்டையாக உட்கார்ந்திருந்தது அவளுள் கலவரத்தை ஏற்படுத்த அதை கண்டு கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
“நீ எங்களோட வரலையா?” என்று சோபாவில் அமர்ந்திருந்த மனுவைப் பார்த்து கேட்டான் மாறன்.
“வரல.” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான் மனு.
சாப்பாடுகூட வேண்டாமென்று சற்று முன் சடுதியில் கிளம்பியவன் அப்போது சாவதானமாக டேபிளில் இருந்த புத்தகத்தை புரட்டி கொண்டிருப்பதைப் பார்த்து ஏன் என்று தம்பியும் கேட்கவில்லை அண்ணனும் தம்பிக்கு தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை.