அந்த மாலை நேரத்தில் மலை மந்திர் வாசலில் டாக்ஸியிலிருந்து இறங்கி கொண்டாள் ஸ்மிரிதி. கோவில் வாயிலில் ராம், ஜனனி, மனு, மாறன் நால்வரும் அவளுக்காகக் காத்திருந்தனர்.
“வரேனு சொன்னா வந்திடுவேன்..இங்க பக்கத்திலதான் ஒரு இடத்தில வேலை செய்துகிட்டிருந்தேன்..விண்டர்ல கோவில் அஞ்சரைக்குத் தான் திறப்பாங்க அதனாலதான் கொஞ்சம் லேட்டா வந்தேன்.” என்றாள்.
“ஆமாம்..இன்னும் திறக்கல..படி ஏறி மேல போகறத்துக்குள்ள திறந்திடுவாங்க இல்ல?” என்று கேட்டாள் ஜனனி.
“திறந்திடும்..அப்பறம் சாயங்கால அபிஷேகத்துக்கு ரெடி செய்வாங்க..வா..திரைப் போட்டு மூடறத்துக்கு முன்னாடி தரிசனம் செய்திடலாம்.” என்று ஸ்மிரிதி சொல்ல அனைவரும் உள்ளே சென்றனர்.
மலையேறுவதற்கு முன்பு கீழே இருந்த வினாயகர் மற்றும் ஈஸ்வரனைத் தரிசனம் செய்தனர். மலையிலிருந்து இறங்கி வரும்போது நவகிரஹங்களைத் தரிசித்து கொள்ளலாம் என்று முடிவு செய்த பின் ஆண்கள் மூவரும் ஒரு குழுவாக படியேற, ஜனனியும், ஸ்மிரிதியும் பேசிக் கொண்டே அவர்களைத் தொடர்ந்து படி ஏறினர்.
“எப்ப வந்த?” என்று ஸ்மிரிதி கேட்க.
“இன்னிக்கு காலைல..சிவகாமி ஆன்ட்டி எங்களோட கோவிலுக்கு வர ஆசைப்பட்டாங்க ஆனா அங்கிள் எத்தனை முறை போவேனு அவங்கள கோவிச்சுகிட்டாரு..அப்பறம் மாறன் அண்ணாவ எங்ககூட துணைக்கு போகச் சொன்னாரு… மனு அண்ணா வீட்டுக்கு போகாம உங்கள மாதிரி நேர இங்க வந்திட்டாங்க.” என்றாள் ஜனனி.
“முன்னாடி இந்த கோவிலுக்கு நினைச்ச போதெல்லாம் நான் எங்கம்மாவோட வருவேன்…இந்த ஏரியா பெயர் ஆர் கே புரம்..இங்கதான் ஒரு சந்துல நான் சின்ன வயசுல இருந்தேன்..அதுக்கு அப்பறம் நிறைய வீடு மாறியிருக்கோம்..கடைசியா வசந்த் குஞ்சில இருந்தோம்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன் இப்பெல்லம் கோவிலுக்கு வரதில்ல? டயமிருந்திச்சே.. நீங்க வீட்டுக்குப் போயி உங்கம்மாவையும் அழைச்சுகிட்டு வந்திருக்கலாமே.” என்று விவரம் தெரியாமல் கேட்டாள் ஜனனி.
“எங்கம்மா பெங்களூர்ல தனியா இருக்காங்க..எங்கப்பாவும் அவங்களும் விவாகரத்து செய்திட்டாங்க..எங்கப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம் ஆயிடுச்சு..நான் அவரோடதான் இருக்கேன்..இங்க ஜெய்ப்பூர் போற ரோட்ல எங்க வீடு இருக்கு..
இப்பெல்லாம் கோவிலுக்கு ஏன் வரதில்லைனு எனக்கேத் தெரில..இன்னிக்கு வந்ததுக்கு காரணம் எங்கம்மாதான்..உன்னோட கல்யாணத்துக்கு வந்தபோது என்கிட்ட மலை மந்திர் போகச் சொல்லி கேட்டுகிட்டாங்க.” என்று சாதாரணமாக அவளின் அசாதாரண வாழ்க்கையை விவரித்தாள்.
“அக்கா” என்று அதிர்ந்த ஜனனி,”எனக்கு சத்தியமா தெரியாது கா..தெரிஞ்சிருந்தா கேட்டிருக்கவே மாட்டேன்.’ என்று மன்னிப்பு கேட்டாள்.
“பரவால்ல விடு..உனக்குத் தெரிய வாய்ப்பில்ல..ராமுக்குத் தெரிஞ்சிருந்தாலும் அவனுக்கு உன்கிட்ட இதெல்லாம் பேச வாய்ப்பு கிடைச்சிருக்காது.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்வாமி நாத ஸ்வாமியைத் தரிசித்த பின் அனைவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து சற்று நேரம் அந்த மலை உச்சியிலிருந்து தலை நகர் தில்லியை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தனர்.
“தெஹராதூன் எப்படி இருந்திச்சு?” என்று மௌனத்தை உடைத்தாள் ஸ்மிரிதி.
“நல்லா இருந்திச்சு..இதெல்லாம் அங்க வாங்கினதுதான்.” என்று போர்த்திக் கொண்டிருந்த ஷாலையும் அதற்கு உள்ளே அணிந்திருந்த ஸீவட்டரையும் காட்டினாள் ஜனனி.
“மஸூரி அழைச்சுகிட்டு போனானா ராம்?”
“போனோம் கா..ரொம்ப குளிரிச்சு கா..ஸ்காஸ் எல்லாம் தேவைப்பட்டிச்சு..நீங்க எப்படி வெறும் சல்வார் கமீஸோட சுத்துறீங்க?” என்று கேட்டாள் ஜனனி.
“எனக்கு சுத்தற வேலை அதனால குளிர் தெரியாது….உள்ளே இன்னரும் போட்டுகிட்டிருக்கேன்…லேயர்ல டிரஸ் செய்யணும்.” என்று விளக்கினாள் ஸ்மிரிதி.
“ரொம்ப போர் கா..இத்தனை டெய்லிப் போடணுமுனா.” என்றாள் ஜனனி.
“குளிர்காலம், வெய்யில் காலம் இரண்டும் பயங்கரம்தான்..ஆனா எனக்குப் பழகிப் போயிடுச்சு.”
“டெல்லிப் பிடிச்சும் போயிடுச்சா?” என்று கேட்டாள் ஜனனி.
“வேற ஊர்ல நான் இருந்ததில்ல..பத்து வயசுலேர்ந்து தெஹராதூன்ல ஹாஸ்டல்லப் படிச்சேன்..அப்பறம் இங்கதான் காலேஜ் படிச்சேன்..பக்கத்தில இராஜஸ்னுக்கு வேலை விஷயமாப் போயிட்டு வருவேன்..பஞ்சாப்ல என் பிரண்ட் இருக்கான் அவன் வீட்டுக்கு அப்பறம் பாம்பே, பெங்களூர் இரண்டு இடத்திலையும் என் பிரண்ட்ஸ் இருக்காங்க அவங்க வீட்டுக்கு ஸ்கூல் லீவுல போயிருக்கேன்..மற்றபடி நான் சுத்தினதெல்லாம் இந்த சைடுதான்.. உங்க கல்யாணத்துக்குதான் கோயமுத்தூர் நினைவு தெரிஞ்சு வந்திருக்கேன்.”
“என்ன வேலை கா செய்யறீங்க? இப்படிச் சுத்திகிட்டே இருக்கீங்க?”
“விதினு நினைச்சு வாழறவங்க வாழ்க்கைல மாற்றத்தைக் கொண்டு வரணுமுனு சமூக விதிகளை மாற்றி அமைக்கற வேலைய சேவையா செய்துகிட்டு வரேன்..அந்த மாதிரி விதிவிலக்கான மாற்றத்தைக் கொண்டு வர ரொம்ப பேர் மாறணும்..அது நடக்கலைனா நான் ஒருத்தி மட்டும் என் விதினு நினைச்சுகிட்டு சம்பளம் கிடைக்கற வேலைக்கு மாறிக்க வேண்டியதுதான்.” என்றாள் ஸ்மிரிதி.
“எப்படி கா இது மாதிரி விதிகளை மாற்றி அமைக்கணுமுனு தோணிச்சு?” என்று கேட்டாள்.
“நம்ம நாட்டுல முக்காவாசிக் குழந்தைகளுக்கு சின்ன வயசுலேர்ந்து நல்லா படிக்கணும், நல்ல வேலைல இருக்கணுமுனு சொல்லி வளர்க்கறாங்க இல்லை அப்பா, அம்மாவே நிறைய படிச்சு, நல்ல வேலைல இருந்தா அவங்களைப் பார்த்து அவங்க பசங்களும் வாழ்க்கைல இருக்கணுமுனு நினைக்கறாங்க..நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல..எங்கம்மா ஆசிரியை..எங்கப்பா அரசியல்வாதி..நான் பார்த்த அவங்க இரண்டு பேரோடு பாதையைதான் நான் தேர்ந்தெடுத்திருக்கேன்.. நான் ஆசிரியல்வாதி.” என்றாள் ஸ்மிரிதி.
அவளைப் புதிராகப் பார்த்து கொண்டிருந்த ஜனனியிடம்,”புரியல இல்ல….மாற்றங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்கற ஆசிரியை..அதை செயல்படுத்தற அரசியல்வாதி..இரண்டு பேரும் சேர்ந்தா ஒரு நிஜம் உருவாகும் அதுதான் ஆசிரியல்வாதி.” என்று சொன்னாள் ஸ்மிரிதி.
“என் வழில எல்லாத்தையும் செய்வேன் அதனால எல்லாமே வித்தியாசமாத் தெரியுது..வகுப்பறைக்கும் நடைமுறைக்கும் நடுவல பெரிய இடைவெளி இருக்கு..எத்தனை தலைமுறையா அதை அழிக்க முயற்சி செய்யறோம்..இடைவெளிய அழிக்க முடியாது இணைக்கதான் முடியுமுனு எனக்குப் புரிஞ்சப் பிறகு அந்த இணைப்பு, அது பாதையா இல்ல பாலமானு நான் யோசிச்சேன்..இப்ப நான் செய்துகிட்டு வர முயற்சி இடைவெளியக் கடக்க பாதை அமைக்கற மாதிரி..
என் ஒருத்தியால பாலத்தைக் கட்டி அந்த இடைவெளிய கடக்க முடியாது..பாலத்தைத் தாங்க நிறைய தூண்கள் வேணும்..முதல்ல எல்லாரும் தூணா இருக்க விரும்பறாங்க ஆனா காலப் போக்கில எல்லாத்தையும் தாங்கி தாங்கி தளர்ந்து, தகர்ந்து போயிடறாங்க..பாலத்தை தாங்கற தூண்கள் இருக்கறவரைக்கும் நிறைய பேர் இடைவெளிய சுலபமா, சீக்கிரமா கடந்திடறாங்க ஆனா பாலம் உடைஞ்சு போன பிறகு சில பேர் அதே இடத்தில மாட்டிகிட்டு தவிக்கறாங்க..
பாதை அமைக்கறது அப்படி இல்ல..நாம அமைக்கற பாதைய நாம விட்டிட்டு போகற இடத்திலேர்ந்து இன்னொருத்தர் தொடர முடியும்… சில பேர்தான் என்னோட முதலேர்ந்து இருக்காங்க..மற்றவங்க விட்டிட்டு போன இடத்தைப் புதுசா வரவங்க சரி செய்திடறாங்க..நான் விட்டிட்டு போனாக்கூட அந்த இடத்தை வேறொருத்தர் நிரப்ப முடியும்..
பாலத்தைப் பாதைப் போல உருவாக்க முடியாது…ஒரே நேரத்தில..ஒரே போலத் தூண்கள் தேவைப்படும்..அப்படி நடந்திச்சுனா பாதையவிட பாலம் பலமானதா இருக்கும்..அது நம்ம நாட்ல முடியாது…பாடமா மட்டும் சமூக மாற்றத்தைப் படிச்சு மதிப்பெண் வாங்கறவங்க பாதை அமைக்கவோ பாலத்தை உருவாக்கவோ விரும்பல அதனால்தான் எந்த பெரிய சமூக மாற்றமும் ஏற்படல..
அடுத்தமுறை நாம தில்லில பார்க்கறச்சே ஒண்ணு நான் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பேன் இல்லை நானே மாறிப் போயி கபீரோட ஏதாவது ஒரு ஹோட்டல்ல சம்பளத்துக்கு வேலைப் பார்த்துகிட்டு இருப்பேன்.” என்றாள் ஸ்மிரிதி
“இல்ல கா..…நீங்க மாற வேணாம்….ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாம என்னை மாதிரி பல பேர் இருக்காங்க…உங்களை மாதிரி ஒருத்தர் போதும் பல மாற்றங்களைக் கொண்டு வர..நீங்க ஆசிரியல்வாதியாவே இருங்க..உங்கிட்ட பேசினாலே வாழ்க்கைல எதையாவது செய்யணுமுனு தோணுது.” என்றாள் ஜனனி.
“இப்பதான் உனக்கு கல்யாணமாயிருக்கு..என் ஜாய் யுவர் லைஃப்..நான் தனி ஆள் எது வேணுமுனாலும் செய்யலாம்… என்னைக் கேள்வி கேட்க ஆள் கிடையாது..எனக்கும் ஒரு குடும்பம் இருந்திச்சுனா எல்லாத்தையும் யோசிச்சுதான் செய்வேன்..குறிக்கோளெல்லாம் குடும்பத்துக்கு ஒத்துவராது..அதுக்கு உதாரணம் என் வாழ்க்கைதான்.” என்றாள் ஸ்மிரிதி.
“அக்கா..நான் டீச்சரா வேலைப் பார்க்கறேன்..ஆனா எதுகாக டீச்சரா இருக்கேனு நிறைய முறை என்னையேக் கேட்டுக்கறேன்..மனதிருப்தி இல்ல கா.” என்றாள் ஜனனி.
“சம்பளம் வாங்கிகிட்டு நல்ல விஷயத்தைக் கத்து கொடுக்கறது, காசு வாங்கிட்டு வியாதிக்கு வைத்தியம் பார்க்கறது, பணத்தை வாங்கிகிட்டு நியாயத்துக்குப் போராடறது ..டீச்சர், டாக்டர், லாயர் எல்லாரோட தொழில் தர்மம் அது.. அதுல மன திருப்திதான் கிடைக்கும்..
இடம், பொருள் பார்க்காம நல்லத கத்து கொடுக்கறதும், வேதனையப் போக்க வைத்தியம் பார்க்கறதும்…நியாயத்த நிலை நிறுத்தி வைக்கறதும் அறவழி…அதுலதான் மக்கள் திருப்தி கிடைக்கும், சமூக மாற்றம் ஏற்படும்..அந்த வழி ஒற்றையடி பாதை..நம்மளோட யாரும் சேர்ந்து போக, வர முடியாது..நமக்கு முன்னாடி போகலாம், பின்னாடி வரலாம் ..எனக்கு முன்னாடி இதுவரைக்கும் நான் யாரையும் பார்க்கல.” என்றாள் ஸ்மிரிதி.
அப்போது ஆண்கள் மூவரும் அவர்கள் இருக்குமிடம் வந்தனர்.
“கிளம்பலாமா?” என்று ஜனனியிடம் கேட்டான் ராம்.
“அக்கா..நீங்களும் வரீங்களா எங்களோட” என்று கேட்டாள் ஜனனி.
“எங்க போறீங்க?” என்று கேட்டாள் ஜனனி.
“ சிடி வாக்.” என்றான் மாறன்.
“நான் வரல..எனக்கு வேலை இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“இதுக்கு மேல வீட்டுக்குப் போகாம எங்க போகற பிளான்?” என்று கேட்டான் மனு.
அவன் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை ஸ்மிரிதி ஆனால் அதே சமயம் மற்றவர் முன் அவனை உதாசீனப்படுத்த விரும்பாமல்,
“நானும் மால்தான் போறேன் என் வேலை விஷயமா.” என்றாள்.
“எங்க?” என்று கேட்டான் மாறன்.
“குட்காவ்ல (gurgaon)”
உடனே பிளானை மாற்றினாள் ஜனனி.
“நாம எல்லாரும் ஸ்மிரிதி அக்காவோடப் போகலாம்..அதுவும் மால்தானே.” என்று ஸ்மிரிதியுடன் இன்னும் சில மணி நேரம் செலவிட பிளான் செய்தாள் ஜனனி.
“இல்ல..அது சரி வராது.” என்று உடனடியாக மறுத்தாள் ஸ்மிரிதி.
அவள் மறுப்பு தெரிவித்த விதத்தில் அவள் சினேகிதனைச் சந்திக்கத்தான் அவள் செல்லுகிறாள் என்று மனுவுக்குப் புரிந்து போனது. அதனால் மேலும் நேரத்தை வீணாக்காமல்,
“சரி..நாம கிளம்பலாம்.” என்று முடிவெடுத்தான்.
“ஸ்மிரிதி கா, நாளைக்கு மத்தியானம் எங்களுக்கு ஃபிளைட்..காலைல ஆன் ட்டி வீட்டுக்கு வரீங்களா?” என்று கேட்டாள் ஜனனி.
“என்னால வர முடியாது… நாளைக்கு எனக்குக் கல்யாணத்துக்கு போகணும்..மத்தியானம் போல எனக்கு அங்க இருக்கணும்.” என்று மறுபடியும் மறுத்தாள் ஸ்மிரிதி.
அதுவரை பொறுமையாக இருந்த மாறனும் பொறுமையிழந்து,
“வாங்க..நாம புறப்படலாம்..டயமாச்சு.” என்றான்.
“எனக்கு எங்கையும் போக வேணாம்..நாம எல்லாரும் வீட்டுக்கேப் போயிடலாம்.” என்று சட்டென்று மறுபடியும் பிளானை மாற்றினாள் ஜனனி. அதில் ராம் கடுப்பானான்.
“தில்லில எங்கையாவது வெளியே போகணுமுனு நீதான் சொன்ன..அதனாலதான் இவங்க இரண்டு பேரும் வந்தாங்க..இல்லைனா ஆன்ட்டியோட கோவிலுக்கு மட்டும் வந்திருக்கலாம்.” என்றான்.
கணவன், மனைவி இருவருகுமிடையே அவளால் மனஸ்தாபம் வரவேண்டாம் என்று நினைத்த ஸ்மிரிதி,
“சரி. நான் போற மாலுக்கு .என்கூட வா..ஆனா எனக்கு வேலை இருக்கும்.” என்றாள்.
“நோ பிராப்ளம்..உங்க வேலை முடியற வரைக்கும் நான் சுத்திப் பார்த்துகிட்டிருக்கேன்..அப்பறம் நாம எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிட போகலாம்.” என்று டின்னர் ப்ரோகராமிலும் ஸ்மிரிதியைச் சேர்த்து கொண்டு சந்தோஷமடைந்தாள் ஜனனி.
அவர்கள் அனைவரும் மாறனுடன் காரில் செல்ல, மனு அவனுடைய பைகில் அவர்களைத் தொடர்ந்து வந்தான். குட்காவிற்குள் நுழைவதற்கு முன்பு ஜெய்ப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்தது அந்த மிக பெரிய மால். அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அனைவரும் மேல் தளத்திற்கு வந்தனர்.
ஸ்மிரிதி அவள் போனில் யாருடனோ தொடர்பு கொண்டிருந்த போது மனுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அவர்கள் இருந்த தளம் கிரவுண்ட ஃப்ளோர் என்பதால் அதிலிருந்து ஆரம்பித்து மூன்று தளம் வரை ஷாப்பிங்க சொர்கமாக இருந்தது அந்த மால். போன் பேசி முடித்த ஸ்மிரிதி அவர்களைப் பார்த்து,
“அடுத்த பில்டிங்ல இருக்கற ஹோட்டல்லதான் எனக்கு வேலை..நீங்க சுத்தி பார்த்துகிட்டிருங்க..நான் என் வேலை முடிஞ்சதும் போன் செய்யறேன்..ஜனனி, இது ஒரு கிலோமீட்டர் ஷாப்பிங் மால்..நடக்கணும்..பரவால்லையா?” என்று கேட்டாள்.
“எனக்கு நடக்க முடியலைனா நான் உங்களுக்கு போன் போடறேன் நீ வந்து என்னை ஹோட்டலுக்கு அழைச்சுகிட்டு போயிடுங்க.” என்றாள் ஜனனி.
“நோ..நீ என் ஜாய் பண்ணு..நல்லா நட…அப்பதான் டின்னர்.” என்று கட்டளையிட்டு விட்டு அரக்க பரக்க வாயில் வழியாக அடுத்த கட்டிடத்திற்கு போனாள் ஸ்மிரிதி.
அவர்கள் எல்லாரும் அந்த மாலினைச் சுற்றி பார்க்க ஆரம்பித்தனர். பொதுவாக பேச்சு ஆரம்பித்து ஸ்மிரிதியிடம் வந்து முடிந்தது.
“ஸ்மிரிதிக்கு சாயந்திரம் ஹோட்டல்ல என்ன வேலை?” என்று கேட்டான் மாறன்.
“அவ பிரண்ட் கபீருக்கு வேலை இருந்திருக்கும் அதான் அவனைப் பார்க்க வந்திருப்பா.” என்றான் மனு.
“அவ சாதாரணமில்ல..தில்லில சில பேருக்கு சில பேரு தெரிஞ்சவங்களா இருந்தாலும் அது வெளியத் தெரிய வராது..அந்த வட்டத்தில இருந்தாதான் தெரிய வரும்..அதுக்கு பெயர் பவர் ஸர்க்கிள்.. நம்மை போல ஆளுங்களுக்கு அவங்கெல்லாம் யாருனுகூட தெரியாது..அந்த வட்டத்திலதான் ஸ்மிரிதியோட அப்பா இருக்காரு..அவரு பெயர் கேள்விபட்டவங்க சில பேர் இருப்பாங்க.. அவரு அடையாளம் தெரிஞ்சவங்க சில பேர்..ஆனா அவரோட பழகினவங்க ரொம்ப சில பேர் அவங்க யாருமே அதை வெளிய காட்டிக்க மாட்டாங்க..
ஸ்மிரிதியோட ஒரு பத்து வருஷமா நாங்க நேரடி தொடர்புல இல்ல..பிரேமா ஆன்ட்டிகிட்டதான் எங்கம்மா பேசிகிட்டு இருப்பாங்க..ஸ்மிரிதி போன் நம்பர்கூட ஆன்ட்டிதான் அம்மாகிட்ட கொடுத்தாங்க…நாங்க எப்பவாவது, எங்கையாவது மீட் செய்துகிட்டா பார்வைல சந்திச்சுப்போம் அவ்வளவுதான்….அதுவும் அது எங்க இடமா இருந்தாதான்..அவளோட இடத்தில அவ எங்கள கண்டுக்க மாட்டா..நாங்களும் அவளைக் கண்டுக்க மாட்டோம்….அவ போற எல்லா இடமும் நாங்க போகமுடியாது..நாங்க அவ லெவல் கிடையாது.” என்றான் மனு.
“என்ன மனு அண்ணா நீங்க இப்படி சொல்றீங்க? ஸ்மிரிதி கா சொன்னாங்க அவங்க சின்ன வயசுலேர்ந்து நிறைய வீடு மாறி, இதே தில்லில நிறைய கஷ்டப்பட்டாங்கனு.” என்றாள் ஜனனி.
“எப்ப சொன்னா உன்கிட்ட?” என்று கேட்டான் மனு
“முருகன் கோவில்ல.”
“அவ சொன்னது உண்மை..சின்ன வயசுல ஆன் ட்டிதான் ஸ்கூல்ல வேலைப் பார்த்து சம்பாதிச்சுகிட்டிருந்தாங்க..அவளோட அப்பா அப்ப இவ்வளவு பெரியா ஆள் இல்ல..நான் சொல்றது இப்ப இருக்கற ஸ்மிரிதியோட அப்பா பற்றி..அவரோட அரசியல் ஆரம்பத்தை அஸ்திவாரமா வைச்சு இன்னிக்கு இருக்கற அரசியல் சூழ் நிலைய அவருக்கு அட் வாண்டெஜா எடுத்துகிட்ட ஆளு..தென் இந்தியாவும், வட இந்தியாவும் பாரபட்சமில்லாம பார்க்கற ஒரே இந்தியன் அவருதான்.”
“ஸ்மிரிதிகாவோட அப்பா பெயர் என்ன அண்ணா?” என்று கேட்டாள் ஜனனி.