Advertisement

ஸ்மிரிதியின் மனு – 7_2
“நீ எனக்காக ஹோட்டல் வாங்கறேனு தெரிஞ்சா உன் அண்ணங்க என்னை ஆள் வைச்சு தூக்கிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி. 
“அப்படி செய்தாங்கன்னா அவங்க தம்பி நான்..என்னாலையும் என்ன செய்ய முடியுமுனு காட்டுவேன்.” என்றான் ஸீரியஸாக கபீர்.
“ஏய்..நான் சும்மா சொன்னேன்..எங்கப்பாவைத் தெரிஞ்சவங்க என் மேல கை வைப்பாங்களா?” என்று விளையாட்டாக கேட்டாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாவைப் பற்றி இல்லை உன்னைப் பற்றி தெரியும் அவனுங்களுக்கு..ஸ்மிரிதிகிட்ட எதுவும் வைச்சுக்க மாட்டாங்க..அப்படியே வைச்சுகிட்டாலும் உங்கப்பா இல்ல என் அப்பா அவங்கள சும்மா விட மாட்டாரு.” என்றான் கபீர்.
“உனக்கும், அங்கிளுக்கும் என் மேல எவ்வளவு நம்பிக்கை..எங்கம்மா, சிவகாமி ஆன் ட்டி, மனு எல்லாரும் இப்ப நீ பேசறத கேட்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்.. எதுக்கும் பிரயோஜனமில்லா சுய பச்சாதாபத்தில சுத்திகிட்டிருந்த கபீரை மாத்தினது நீதானு சொல்றேன்.” என்றான் கபீர்.
“நான் இல்லை கபீர்..பீஜிதான்..உனக்கு ஆரம்பத்திலிருந்து உங்கப்பா மட்டும்தான்..எங்க எல்லாருக்கும் அப்பா, அம்மா இருந்தும் இல்லாத நிலை..அந்தச் சூழ் நிலைல வளர்ந்த நம்ம எல்லார்கிட்டையும் ஒளிஞ்சுகிட்டிருந்த  நல்லது கெட்டது இரண்டுத்தையும் நமக்கு காட்டிக் கொடுத்தது பீஜிதான்.” என்றாள் ஸ்மிரிதி.
“பீஜிதான் ஸ்மிரிதி நான் இல்லைனு சொல்லல ஆனா உன்னைப் பார்த்துதான் நான் கத்துகிட்டேன்..உதவாக்கரை கபீர் உருப்படியானது உன்னாலதான்.”என்றான் கபீர்.
“உன்கிட்ட ஓளிஞ்சுகிட்டிருந்த திறமையை நீதான் கண்டுபிடிச்ச கபீர்..நான் உங்கப்பாகிட்ட உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க சொன்னேன் அவ்வளவுதான்..உன் அம்மா உயிரோட இருந்திருந்தா அதையேதான் செய்திருப்பாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
அதற்குபின் வந்த மௌனத்தை பொறுக்கமுடியாமல் நேற்றிலிருந்து அவன் கேட்க தயங்கியதை அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல்,
“ஸ்மிரிதி, ஆன் ட்டி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் கபீர்.
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டதும் கபீர் யாருக்காக நேற்று இரவு ஹோட்டலில் தங்கினான் என்று ஸ்மிரிதிக்குப் புரிந்து போனது. 
“யார் சொன்னாங்க உனக்கு?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“சுசித் ராதான்..நீ கொஞ்சம் அப்ஸெட் ஆயிட்ட ஏர்போர்ட்ல அப்படினு மஞ்சு நாத் அவகிட்ட சொல்லியிருக்கான்.” என்றான் கபீர்.
“ம்ம்..கொஞ்சம் அப்ஸெட்தான்..மனுவும் அதைக் கவனிச்சிட்டு என்கிட்ட என்ன விஷயமுனு கேட்டான்..நான் அவன்கிட்ட எதுவும் சொல்லல.”
“உன்கிட்ட நேத்து இராத்திரியே அதைப் பற்றி கேட்கறத்துக்குத் தைரியமில்ல….காலைல  பேசிக்கலாமுனு தள்ளிப் போட்டேன்.” என்றான் கபீர்.
“நேத்து நைட்டு நீ கேட்டிருந்தா எனக்கும் பதில் சொல்லியிருக்க முடியாது..இப்பதான் கொஞ்சம் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“கோயமுத்தூர் ஏர்போர்ட்ல என்ன ஆச்சு?” என்று கேட்டான் கபீர்.
“எனக்கு எங்கம்மாவ பற்றி கவலையா இருக்கு கபீர்..நான் ஒரு முடிவு எடுக்கறவரைக்கும் மஞ்சு நாத்தும், சுசித் ராவும் அம்மாவைப் பார்த்துக்கறேனு சொல்லியிருக்காங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“என்ன ஆயிடுச்சு அவங்களுக்கு?”
“வெளிப் பார்வைக்கு நல்லா இருக்காங்க..உள்ளதான் பிராப்ளமாயிருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ பெங்களூக்குப் போயி கொஞ்ச நாள் அவங்களோட இருந்து வேற டாக்டர்ஸ்கிட்ட கன்ஸல்ட் செய்.” என்றான் கபீர்.
“சுசித் ரா குடும்பமே டாக்டர்ஸ்தான்..அம்மாவ  அழைச்சுகிட்டு போயி அவங்க ஹாஸ்பிட்டல்லதான் காட்டினேன்..சில வருஷமாவே அவங்களுக்கு இந்த பிராப்ளம் இருந்திருக்கு..அவங்க அதைக் கண்டுக்கல..அவங்க உண்டு ஸ்கூல் உண்டுனு இருந்திருக்காங்க. இப்ப மாத்திரை எடுத்துக்கறாங்க.. மாசா மாசம் போயி செக் அப் செய்துக்கணும். ..மஞ்சு நாத் அழைச்சுகிட்டு போறேனு சொல்லியிருக்கான்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஆன் ட்டி எப்படி எடுத்துகிட்டாங்க?” என்று கேட்டான் கபீர்.
“அவங்களுக்கு ஏதோ பிராப்ளமுனு தெரியும்.. மாத்திரைல சரியாயிடுமுனு நினைக்கறாங்க..அது குணப்படுத்தற மாத்திரை இல்ல அவங்க லைஃப்ப அதே போல நடத்த உதவதான் அதை கொடுத்திருக்காங்கனு அவங்களுக்குத் தெரியாது.. அந்த மாத்திரையச் சாப்பிட்டுகிட்டு  பல பேர் பல வருஷமா வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருக்காங்க…அதனால அம்மா சரியா மாத்திரைய சாப்பிட்டு உடம்பை பார்த்துகிட்டாங்கன்னா அவங்களும் ஆரோக்கியமா இருக்கலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்பறம் எதுக்கு நீ கவலைப்படற?”
“அவங்களுக்கு யாருமில்ல கபீர்..அன்னிக்கு நான் இருந்தேன் அதனால உடனே டாக்டர்கிட்ட அழைச்சுகிட்டு போனேன்..நான் இல்லைனா என்ன ஆயிருக்கும்?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவங்கள வேணுமுனா இங்க அழைச்சுகிட்டு வந்துடு..நீயும், ஆன் ட்டியும் தனியா இருக்கலாமில்ல?” என்று கேட்டான் கபீர்.
“எப்படி முடியும்?…நான் எவ்வளவு சம்பாதிக்கறேனு உனக்கேத் தெரியும்..நான் செய்யறது சேவை..அதுல ஒரு போல பணம் கிடைக்காது….என் தேவையவிட இதுல வேலை செய்யறவங்களோட தேவைகலெல்லாம் அத்தியாவசியமானத் தேவைகள்..அவங்களோட செலவுக்கே வர்ற வருமானம் சரியாப் போகுது..நான் எங்கப்பாவோட இருக்கறதுனால எனக்குத் தனியா செலவு இல்ல..
எங்கம்மாவ தில்லிக்கு நான் அழைச்சுகிட்டு வந்தா நாந்தான் எல்லாம் பார்த்துக்கணும்..எங்கப்பா பணத்த அவங்க தொட மாட்டாங்க..இங்க என்னோட வந்த பிறகு அவங்க வேலைக்கு போகறதுல எனக்கு இஷ்டமில்ல..அதுக்காக அவங்கள திடீர்னு வேலைய விடச் சொல்ல முடியாது..நான் ஒரு வேலையை தேடிகிட்ட அப்பறம் அவங்கள வேலைய விட சொல்லிட்டு என்கூட வைச்சுக்கணும்…இந்த தடவை எங்கம்மாவும் அதைதான் சொன்னாங்க..நல்ல சம்பளம் கிடைக்கற வேலையத் தேடிக்க சொன்னாங்க..எனக்கு ஏற்ற மாதிரி வேலை கிடைக்கலைனா  சுசித் ராகிட்ட வண்டி கேட்ட மாதிரி உன் ஹோட்டல்ல ஒரு வேலைப் போட்டு கொடுனு உன்னைதான் கேட்கணும்.” என்று விரக்தியாக சொன்னாள் ஸ்மிரிதி.
“அந்தப் பேச்சை விடு.” என்றான் கபீர்.
“என்னால எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாதுனு எங்கம்மா நினைக்கறாங்க..எங்கப்பாவோட அரசியல் வாடை என்னோட எல்லா செய்கைலையும் அடிக்குதுனு சொல்றாங்க…அவங்க உடம்பு இருக்கற நிலைல அவங்களோட சண்டை போட விரும்பல அதேசமயம் நான் எங்கப்பா போல இல்லைனு தெளிவா சொல்லிட்டேன்…எங்கம்மாவோட நான் கொஞ்ச நாள் இருக்க விரும்பறேன்…அவங்க என்கூட இருக்கணுமுனா நான் அவங்க சொல்றபடி ஒரு வேலையத் தேடிக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
அவள் வேலையைப் பற்றிய பேச்சை மேலும் தொடராமல்,
“அவங்களுக்கு உடம்பு சரியில்லைனா இப்ப எதுக்கு கோயமுத்தூர் அழைச்சுகிட்டு போன?” என்று கேட்டான் கபீர்.
“அது தெரியறதுக்கு முன்னாடி நான் அழைச்சுகிட்டு போறேன்னு அவங்கிட்ட சொல்லிட்டேன்..அவங்கள அன்னிக்கு காலைல மீட் செய்ய போனேன்..மயக்கமா இருக்குணு அவங்க ரூம்லையே இருந்தாங்க..நாந்தான் ஒரு செக் அப் செய்துகோங்கனு ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போனேன்..அப்பதான் மறு நாள் அவங்க பிரண்ட் பையன் கல்யாணம் கோயமுத்தூர்ல நடக்குது அதுக்கு போகணுமுனு ஆசையாயிருக்கு ஆனா தனியா பஸ்ல போக பயந்துகிட்டு போகலைனு சொன்னாங்க..
உடனே நான் அவங்கள கூட்டிகிட்டு போறேனு சொல்லிட்டேன்..அப்பறம் முடியாதுனு சொல்லணுமுனாக் காரணத்தையும் சொல்லணும்..அதான் வேண்டாமுனு முடிவெடுத்து சுசித் ரா கார்ல அழைச்சுகிட்டு போனேன்..அவங்களுக்கு ஸிரியஸா எதுவுமில்ல ஆனா அவங்க கண்டிஷன் ஸிரீயஸ் ஆகலாமுனு சொல்றாங்க..டாக்டர்ஸ் டாக்..சாதாரணமா இருக்கறது ஸீரியஸாக மாறாலம்…ஸீரியஸா இருக்கறது ரொம்ப ஸீரியஸாகவும் மாறலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“கவலைப்படாத அந்த மாதிரி எதுவும் நடக்காது..நாங்கெல்லாம் இருக்கோம்.” என்று ஆறுதல் சொன்னான் கபீர்.
“தாங்க்ஸ் படி (buddy).” என்று கபீருக்கு நன்றி சொன்னாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியும், கபீரும் பேசி கொண்டிருந்த போது அந்த ஹோட்டலின் வரவேற்பறைக்குள் நுழைந்தார் கார்மேகம். அவரை முதலில் பார்த்த கபீர்,
“ஸ்மிரிதி.. உன்னை அழைச்சுகிட்டு போக அங்கிள் வந்திருக்காரு.” என்றான்.
“எங்கப்பாவா?” என்று ஆச்சர்யப்பட்டு திரும்பிய ஸ்மிரிதி, வந்திருப்பது கார்மேகம்தான் என்று தெரிந்தவுடன்,
“என்னோட ரூமுக்கு ஆள் அனுப்பி என் பைய எடுத்துகிட்டு வரச் சொல்லிடு..நான் கிளம்பறேன்.” என்றாள்.
கார்மேகத்திற்கும், ஸ்மிரிதிக்கும் அப்பா, பெண் என்ற உறவு என்று அவர்களை ஒனறாகப் பார்த்த உடனேயேத் தெரிந்து போனது.  கார்மேகத்துடன் அவரின் பின்னால் இருவர், முன்னால் இருவர் என்று ஒரு சிறு கும்பல் ஹோட்டலுக்குள் நுழைந்தது.
கபீருடன் அவரை சந்திக்க விரைந்து சென்ற ஸ்மிரிதி,”என்ன பா வண்டி அனுப்புவீங்கனு நினைச்சேன் நீங்களே நேரா வந்துட்டீங்க?” என்று கேட்டாள்.
அவர் பதில் சொல்லுமுன் அவருக்கு,”குட மார்னிங் அங்கிள்.” என்று காலை வணக்கம் தெரிவித்தான் கபீர்.
“குட் மார்னிங் கபீர்..நீ எப்படி இவ்வளவு காலைல இங்க?” என்று விசாரித்தார்.
“நானும் நைட் இங்கதான் தங்கினேன்.” என்றான் கபீர்.
“நல்லது.” என்று ஒரு வார்த்தையில் அவர் நன்றியை உணர்த்தியவர் ஸ்மிரிதியைப் பார்த்து,”எனக்கு விடியற்காலைல வெளில ஒரு வேலை இருந்திச்சு அதை முடிச்சிட்டு வீட்டுக்குப் போகற வழில உங்களையும் கூட்டிகிட்டு போகலாமுனு வந்தேன்..கிளம்புங்க ஸ்மிரிதி மா.” என்றார் கார்மேகம்.
அதற்குள் ஸ்மிரிதியின் பேக் வந்து சேர அதை எடுத்துகொண்டு கார்மேகத்துடன் புறப்பட்டாள் ஸ்மிரிதி.
அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறிக் கொள்ள மற்றவர்கள் இன்னொரு காரில் பின் தொடர்ந்தனர்.
காரின் உள்ளே அமர்ந்தவுடன்,”திடீர்னு ஏன் ப்ரோகரம மாத்தறீங்க..வண்டிய அனுப்புனு சொல்லிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வேணாமுனு சொல்றீங்க..ஏன்னு காரணமும் சொல்லல..நான் என்னென்னு நினைக்கறது?” என்று ஸ்மிரிதியைக் கோபித்துக் கொண்டார் கார்மேகம்.
“பெரிய காரணமெல்லாம் இல்ல..சிவகாமி ஆன் ட்டியும், அம்மாவும் புவனா ஆன் ட்டியோட நேத்து நைட் தங்கிட்டாங்க..இங்க சிவகாமி ஆன் ட்டி இல்லாம அவங்க வீட்டுக்குப் புதுசாக் கல்யாணம் ஆனவங்களைக் கூட்டிகிட்டுப் போகச் சங்கடபட்டாரு நாதன் அங்கிள் அதனால ராமுக்கு நேத்து நைட் கபீர் ஹோட்டல்ல ரூம் புக் செய்து கொடுத்தேன்..இன்னிக்கு காலைல அவன வழியனுப்பிட்டு வீட்டுக்கு வரலாமுனு நினைச்சேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அப்போது ஸ்மிரிதியின் போன் அழைக்க, அழைத்தது “சிவகாமி.”
“ஒரு நிமிஷம் பா..சிவகாமி ஆன் ட்டி.” என்று அனுமதி கேட்டு, போனில் “சொல்லுங்க ஆன் ட்டி” என்றாள் ஸ்மிரிதி.  
சிவகாமி சொன்னதைப் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தவள் கடைசியில், “நீங்க காலைல போன் செய்வீங்கனு தெரியும்..நானும் அங்கதான் நைட் தங்கினேன்..கொஞ்ச நேரம் முன்னாடிதான் புறப்பட்டு போனாங்க..நீங்க எப்படி பார்த்துப்பீங்களோ அதேபோல உங்க இடத்தில இருந்து நல்லா பார்த்துகிட்டாச்சு..புவனா ஆன் ட்டிகிட்டயும் சொல்லிடுங்க..
நேத்து நைட் மாறன் வந்து கூட்டிகிட்டுப் போயிருப்பான் நான் பார்க்கல அவன..அவங்க மூணு பேரும் போர்த்திகிட்டு தூங்கிகிட்டிருப்பாங்க..உங்க போன் எடுக்கலைனா என்னோடது மட்டும் எப்படி எடுப்பாங்க? உங்களுக்கு நான் தகவல் சொல்லிட்டேனில்ல இனி அங்கிளா போன் செய்யறவரைக்கும் அவரைத் தொந்திரவு செய்யாதீங்க..அவருக்கும் களைப்பா இருக்கும்..தூங்கட்டும்.” என்று நாதனுக்கு சிவகாமியிடமிருந்து சிறிது நேரத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்து அவளை அறியாமலையே அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியானாள் ஸ்மிரிதி.
அதற்குபின் சிவகாமி பேசியதைக் கேட்ட ஸ்மிரிதி,
“இப்ப அம்மாவோட பேச முடியாது…அவங்கள ஏர்போர்ட்லேர்ந்து அழைச்சுகிட்டுப் போக ஆள் ஏற்பாடு செய்திருக்குனு அவங்ககிட்ட சொல்லிடுங்க..நான் இப்ப அப்பாவோட வீட்டுக்குப் போயிகிட்டிருக்கேன்..இன்னிக்கு சாயந்திரம் பேசறேன் அம்மாகிட்ட.” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள். 
சிவகாமியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மகளை யோசனையாகப் பார்த்த கார்மேகம்,
“ஸ்மிரிதி மா..உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் தில்லில வெளிலத் தங்கறதா இருந்தா எனக்குத் தகவல் சொல்லிட்டுத்தான் தங்கணுமுனு…நம்மளைத் தெரிஞ்சவங்க நமக்குத் தெரியாதவங்கனு சில பேர்  இருக்காங்க..எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க?” என்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார்.
“நான் தங்கினது கபீர் ஹோட்டல் பா.” என்றாள் ஸ்மிரிதி.
“அதனாலதான் காலைவரைக்கும் தங்க அனுமதிச்சேன்…நீங்க வெளியூர் போகும் போது நான் ஏதாவது சொல்றேனா..தில்லில நம்ம வீட்டுக்கு வரமுடியலைனா நீங்க எங்க தங்க போறீங்க, ஏன் தங்க போறீங்கனு எனக்கு சொல்லணும்.” என்றார் கண்டிப்புடன் கார்மேகம்.
அவர் சொன்னதைக் கேட்டதும் ஸ்மிரிதி கவலைக் கொண்டாள்.  அதே தில்லியில் பிரேமாவுடன் அவள் தனியாக இருக்க அவர் சம்மதத்தையோ, அனுமதியையோ  பெறவேண்டுமானால் பிரேமாவின் உடல் நிலையைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உணர்ந்தாள்.
கடந்து போன பத்து வருடங்களும், அவளுடைய இருபத்தியைந்து வயதும் அவள் வாழ்க்கையை  அவள் நினைத்தபடி நடத்த சுதந்திரத்தையும் அதே சமயம் சிலரின் வாழ்க்கையை அவர்கள் நினைத்தபடி மாற்றக்கூடிய வலிமையையும் அவளுக்கு கொடுத்திருந்தது.  ஆனால் அவளால் பிரேமாவின் வாழ்க்கையில் தான் அப்போதும் சரி இப்போதும் சரி அவர் விரும்பிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.  
கீதிகா, கார்மேகம் இருவருக்குமே முதல் திருமணத்தின் மூலம் குழந்தைகள் இருக்க, இருவருமே சமமான அரசியல் அந்தஸ்துடனும் போதிய வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்க,  எதற்காக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அவளின் பள்ளி விடுமுறைகளில் சிலவற்றை தில்லியில் கார்மேகம், கீதிகாவுடன் கழிக்க நேர்ந்தபோது  கீதிகாவின் ஐந்து வயது மகன் மனிஷுடுன் உடன்பிறப்பாக உறவு ஏற்பட்டது ஸ்மிரிதிக்கு. கார்மேகத்தின் இரண்டாவது கல்யாணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய விரும்பாமல் அவரின் இரண்டாவது குடும்பத்தை அப்படியே ஏற்று கொண்டாள் ஸ்மிரிதி.
பதினைந்து வயதில் கார்மேகத்துடன் இருக்க அவள் முடிவு செய்தபோது அவளின் அந்த செய்கைககானக் காரணத்தை அவள் யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை.  இன்றுவரை ஏன் என்பதற்கான காரணம் பிரேமாவிற்கு தெரியவில்லை, கார்மேகம் கேட்கவில்லை, ஸ்மிரிதியும் விளக்கவில்லை.
கார்மேகத்தைக் கணவனாக ஏற்க மறுத்து அவருடனான மனைவி என்ற உறவைப் பிரேமா முறித்து கொண்டபோது யாருமில்லாத அனாதையாக வளர்ந்த அவள் தகப்பனை, அப்பா, மகள் என்ற அவர்கள் உறவை உதறிவிட்டு, அவரை மறுபடியும் அனாதையாக்க அவர் பெற்ற மகளுக்கு மனம் வரவில்லை. 
இன்று யாருமில்லாமல் தனிமையில் தவிக்கும் அவள் தாயும் அதே போல் அனாதையாக உணர்வதை அந்த தாயின் உதிரத்தில் உதித்து உருவான அவர் மகளால் உதற முடியவில்லை. 
பதினைந்து வயதில் அவள் அப்பாவிற்காக எடுத்த அதே முடிவை பத்து வருடம் கழித்து  இருபத்தைந்து வயதில் அவள் அம்மாவிற்காக எடுக்க முடிவு செய்தாள் ஸ்மிரிதி. 

Advertisement