Advertisement

ஸ்மிரிதியின் மனு – 7_1
ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை  அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள் கேட்டு கலெக்டர் வக்கீலாகவும் அவரின் கேள்விகளுக்குப் பதில் கொடுத்த வக்கீல் குற்றவாளியாகவும் மாறிப் போனார்கள்.
ஏர்போர்ட் சிடியில் இருந்த அந்த பிரம்மாண்டமான் ஹோட்டலின் சிறப்பு நுழைவாயிலில் ஸ்மிரிதிக்காக காத்திருந்தான் கபீர்.  அவள் வண்டியிலிருந்து இறங்கியவுடன் அவளை அணைத்து கொண்ட கபீரைப் பார்த்து,
“உனக்கு வேலை வைச்சிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“உனக்காக எப்பவும் நான் எதுவும் செய்ய ரெடி.”
“லாஸ்ட் மினிட்லதான் எனக்கேத் தெரியும்..மனு வீட்டிற்கு அவங்க போகணும் ஆனா ஆன் ட்டி எங்கம்மாவோட கோயமுத்தூர்ல ஸ்டே பண்ணிட்டாங்க. ஆன் ட்டி இருந்தா நல்லா இருந்திருக்குமுணு அங்கிள் ஃபீல் செய்தாரு..அதான் உன்கிட்ட பேசினேன்.” என்று விளக்கினாள்.
“நோ பிராப்ளம்..ஸ்பெஷல் கெஸ்ட் அவங்க இரண்டு பேரும்..உன் பிரண்ட் என்னோட பிரண்டும் கூட..உன் ரூமுக்கு போகலாம்.” என்று முதல் மாடியில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.
ஒரு சின்ன வீடு போல் இருந்தது அந்த அறை.  வரவேற்பறை, அதைத் தாண்டி பாத் ரூமுடன் கூடியப் படுக்கையறை. வரவேற்பறையின் மறுபுறும் சின்ன கிட்சனெட்.
“தாங்கஸ் கபீர்..நீ கிளம்பு.”
“நீயும் ரெஸ்ட் எடுத்துக்க…மூணு நாள் தொடர்ந்து டி ராவல் செய்திருக்க.” என்றான்.
“யெஸ்.. எனக்கு களைப்பாதான் இருக்கு….நாளைக்கு காலைல அவங்க இரண்டு பேரையும் வழியனுப்பிச்சிட்டு நான் என் வீட்டுக்குப் போயிடறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்களுக்காகதான் வந்தியா?”
“அவங்க இரண்டு பேரும் தில்லிக்குப் புதுசு..ராம் எங்கம்மாவோட பிரண்டோடப் பையன்….அவன் தில்லிக்குத் திரும்பி வரும்போது என்னால மீட் செய்ய முடியுமானுத் தெரில..உதய்ப்பூர் போக வேண்டியிருக்கு..அதுவும் ஒரு காரணம் இங்க தங்கறத்துக்கு.”
“பிளான் மாத்திடு..போகாத.” என்று ஸிம்பிளாக தீர்வு கொடுத்தான் கபீர்.
“இல்ல..போகணும்..அங்க படிக்கற பசங்களுக்குத் தேவையானத செய்து கொடுக்கணும்..அடுத்த வருஷம் தல்ஜித் பார்த்துப்பான்.”
“மெஹக் வர்றதுனால நீ எப்படியும் உடனேத் திரும்பி வரணும்..இந்தமுறை உதய்ப்பூரைத் தள்ளிப் போடு..கல்யாணம் முடிச்சிட்டு போ.” என்றான் கபீர்.
“ஜெய்பூர் இங்க பக்கத்திலையே இருக்கறதுனால அடிக்கடி போறேன்..உதய்ப்பூர் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் முடியுது..அடுத்தமுறை நான் போகறத்துக்குள்ள அவங்க குழந்தைங்களுக்குப் பரீட்சை ஆரம்பிச்சிடும்.”
“நீ எதுக்கு இதைச் செய்யறேனு எனக்குப் புரியல..அந்தப் பெண்களுக்கு உதவறது சரி..அவங்க குழந்தைகளுக்குமா?” என்று சலிப்புடன் கேட்ட்டான் கபீர்.
“அவங்க உழைக்கறது அவங்க குடும்பத்துக்காகதான்..முக்கியமா அவங்க குழந்தைகளோட எதிர்காலத்துக்கு..அதுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியலைனா என்னோட எல்லா முயற்சியும் வீணாப் போயிடும்..இந்தமுறை பத்து குழந்தைகளுக்காவது தல்ஜித்தோட ஸ்கூலுக்குப் போவாங்கனு நினைக்கறேன்..
அவங்க எந்த வேலை செய்தாலும் இருக்க இடம், போட்டுக்க துணி, பசிக்கு சாப்பாடு இதெல்லாம் அவங்களுக்கு கிடைக்கும் ஆனா எங்க குழுவுல இருந்தா அவங்க குழந்தைகளோட எதிர்காலத்துக்கு ஏற்பாடு செய்து தரமுடியுமுனு நம்பிக்கை கொடுக்கறேன்.. வீட்ல தனியா செய்து கடைக்கு வித்துகிட்டிருந்த நிறைய பேர் இப்ப எங்களோட குழுவுல அதுக்காகவே சேர்ந்திருக்காங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“இங்க ஹோட்டல் கெஸ்ட்ஸ் கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் உங்களோட தயாரிப்புக்கு.” என்றான் கபீர்.
“எனக்கு இந்த செட் அப் ரொம்ப நாள் தொடர முடியுமுனு தோணல..டிரான்ஸ்போர்ட் காஸ்ட்..நம்ம கமிஷன் எல்லாம் சேர்த்து விலைய அதிகமாக்குது..சீக்கிரமா அங்கையே ஒரு கடையத் திறக்கணும்..அங்க விக்காததைதான் உனக்கும், சுசித் ராவுக்கும் கொடுக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“நானும், சுசித் ராவும் நீ எது அனுப்பினாலும் வித்து கொடுக்கறோம்..உனக்கு எப்படி செய்யணுமோ அப்படியே செய்.” என்று அவளுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தான்.
அப்போது ஸ்மிரிதியின் போன் அழைக்க, அழைப்பது கார்மேகம் என்று தெரிந்தவுடன் கபீரைப் பார்த்து சைகையில் ஐந்து நிமிஷம் என்றாள்.
“சொல்லுங்க பா.” என்று ஸ்மிரிதி சொன்னவுடன் அடுத்த ஐந்து நிமிடம் கார்மேகம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடித்த பிறகு,
“அம்மாவ புவனா ஆன் ட்டி பையன் கல்யாணத்துக்கு கோயமுத்தூர்அழைச்சுகிட்டுப் போனேன் பா…இப்ப கபீர் ஹோட்டல்லதான் இருக்கேன்..உங்களுக்கு மெஸெஜ் கொடுத்தேன்..எதுக்கு எழுந்துகிட்டீங்க..மறுபடியும் தூங்க போங்க..காலைல வீட்ல பேசிக்கலாம்.” என்று சொல்லி போனை அணைத்தாள்.
“அங்கிள்கிட்ட சொல்லலையா?” என்று கபீர் கேட்க,
“அவரு வண்டிய வருதுனு மெஸெஜ் அனுப்பினாரு நாந்தான் வேணாமுனு சொல்லிட்டேன்..ஏன்னு சொல்லலை அதை தெரிஞ்சுக்கதான் இப்ப போன் செய்யறாரு.” என்றாள் ஸ்மிரிதி.
“உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல..அதனாலதான் உன் பிரண்ட பர்ஸ்னலா கவனிச்சுக்க நீ இங்கையே தங்கிட்ட.” என்று வருத்தப்படான் கபீர்.
“உன் மேல நம்பிக்கையில்லாமையா எல்லாம் பிரண்டிலி ஏற்பாடுனு தைரியமா எல்லார்கிட்டையும் சொன்னேன்…ராமோட அம்மா, என்னோட அம்மா, மனுவோட அம்மா மூணு பேரும் பிரண்ட்ஸ்..ரொம்ப வருஷம் கழிச்சு அவங்க மூணு பேரும் சேர்ந்து இருக்க விருபப்பட்டாங்க…
எங்கம்மாக்கும் ஒரு மாறுதலா இருக்குமுணு நான் சரினு சொல்லிட்டேன் ஆனா அங்கிளோட சண்டைப் போட்டு சிவகாமி ஆன் ட்டி ப்ரோகரம மாத்தியிருக்காங்க..என்னாலதான் அந்த மாதிரி அவங்க பிளான் மாறிப் போயிடுச்சு அதை சரி செய்யதான் இது..நான் சொன்னதைக் கேட்டு ஆங்கிளும், மனுவும் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துகிட்டாங்கங்க..அதனால ராமையும், ஜனனியும் நல்லபடியா பார்த்துக்கறது இப்ப என் பொறுப்பு ஏதாவது தப்பாயிடுச்சுனா எல்லாருக்கும் வருத்தமாயிடும்..” என்று விளக்கினாள் ஸ்மிரிதி.
“என்ன தப்பாயிடும்?” என்று புரியாமல் கேட்டான் கபீர்.
“எதுவும் தப்பாகாது..ராமுக்கும், ஜனனிக்கும் எல்லாம் நல்லபடியா நடந்திச்சுனு  நாளைக்கு காலைல மனுவோட அம்மா எனக்கு போன் செய்யும்போது நான் சொல்ல விரும்பறேன்.” என்றாள்.
“இதையெல்லாம் அவங்க போன் செய்து கேட்பாங்களா?” என்று வியப்பாகக் கேட்டான் கபீர்.
“உனக்கு அவங்களைப் பற்றி தெரியாது..டீச்சர்ஸ் ட் ரேயிட் (trait)..எல்லாத்தையும் அவங்க மேற்பார்வைல, அவங்க சொல்றத் தட்டாமச் செய்யணும்..இப்ப மனுவும், அங்கிளும் அதை மீறியிருக்காங்க அதனால அவங்களைத் தட்டிக் கேட்க வாய்ப்பு கொடுக்ககூடாது.” என்றாள் ஸ்மிரிதி.
“எப்படி ஸ்மிரிதி..ஆன் ட்டிய இப்படி தெரிஞ்சு வைச்சுருக்க?” என்று ஆச்சர்யமானான் கபீர்.
“நான் டீச்சர்ஸ் டாட்டர்.” என்று சொல்லி மென்மையாக சிரித்தாள்.
“நோ வரீஸ்..நானும் இராத்திரி இங்கதான் இருக்க போறேன்.” என்றான் கபீர்.
“நீ வீட்டுக்குப் போயிடு நாந்தான் இருக்கேனே.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.” என்று சொல்லி விடைபெற்ற கபீரிடம் ஒரு கவரைக் கொடுத்து “இதை லாண்ட் ரில கொடுத்திடு..எக்ஸ்ப்ரஸ் டெலிவரி..நாளைக்குக் காலைல என் ரூம்ல இருக்கணும்.” என்று ஹோட்டலின் முதலாளியிடம் அவள் அழுக்குத் துணியைக் கொடுக்க அதைச் சாதாரணமாக அவன் கையில் வாங்கி கொண்ட அந்த சினேகிதன்,”டன்” என்றான் அவன் சினேகிதியிடம்.
அன்று இரவு அந்த அறையின் சொகுசு படுக்கையில் படுத்தபடி அவளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசனையில் மூழ்கினாள் ஸ்மிரிதி.
அதே நேரம் அவன் படுக்கையில் படுத்தபடி கடந்தகால யோசனைகளில் மூழ்கிப் போயிருந்தான் மனு.  சற்றுமுன் நாதன் அவனைக் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் அவனுக்கேத் திருப்பதி ஏற்படவில்லை நாதனுக்கும் கண்டிபாகத் திருப்தி ஏற்பட்டிருக்காது என்று அவனுக்குத் தோன்றியது.
“மனு..கார்மேகம் காருக்கு காம்பன்ஸேஷன் கொடுக்காம புது கார் வாங்கிக் கொடுத்தாருனு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார்.
அவர் கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்த மனுவைப் பார்த்து,”நான் உன்னை வழித் துணையாதான் அனுப்பினேன் நீ வக்கீலா அவங்களோட போனியா?” என்று கேட்டார்.
அதற்குமேல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டு தாமதம் செய்தால் நாதனுக்கு அவன் மேல் தவறான எண்ணம் ஏற்படலாம் என்று உணர்ந்த மனு,
“இல்ல பா..துணையாதான் போனேன்…நாங்க வீட்லேர்ந்து கிளம்பறத்துக்கு முன்னாடி கார்மேகம் அங்கிள் என்னோட போன்ல பேசினாரு..அவரு ஏற்கனவே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டதாகவும் அந்தப் பார்ட்டி கையெழுத்து போட்டு கொடுக்கற பேப்பர் சரியா இருக்குதுனான்னு என்னை ஒரு வக்கீலா சரி பார்க்க சொன்னாரு..பணத்தைப் பற்றி கவலைப்படல ஆனா அந்த விஷயம் திரும்பி ஆரம்பிச்சுதுனா ஸ்மிரிதிக்குப் பிராப்ளமாயிடுமுனு ப்ராபரா பேப்பர் வைச்சு முடிக்கறேன்னாரு..
பிரேமா ஆன் ட்டிக்கோ, அம்மாக்கோ இந்த விஷயம் தெரியாது..நான் தான் அந்தப் பார்ட்டி கையெழுத்து போட்ட பேப்பர செக் பண்ணி தில்லி கொண்டு வந்தேன்…அங்கிள் என் ஆபிஸூக்கு ஆள் அனுப்பி அதை வாங்கிகிட்டாரு..அவரு யார்கிட்ட பேசினாரு எப்ப பேசினாரு எதுவும் எனக்குத் தெரியாது.”என்று பத்து வருடம் முன் நடந்ததை விவரித்தான்.
“நீ என் மகனா உங்கம்மாவோட சினேகிதிக்கு உதவி செய்யறேன்னு நினைப்புல நீ வக்கீலுங்கறத நான் கவனிக்க மறந்திட்டேன் ஆனா கார்மேகம் அதைக் கவனிச்சிருக்காரு..அதான் அவரு சிறப்புத்தன்மைப் போலிருக்கு.”அதற்குமேல் அவனிடம் எதுவும் பேசாமல் நாதன் மௌனமாக அவர் அறைக்கு சென்றார்.
ஆனால் மனுவும், நாதனும் அறிந்திருக்கவில்லை அன்று வழித் துணையாகப் போன வக்கீல்தான் இன்று வாழ்க்கைத் துணையாகப் போகிறானென்று.
அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து தயாராகி வந்து ஹோட்டல் வரவேற்பறையில் ராம், ஜனனிக்காக காத்திருந்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியைப் பார்த்தவுடன் ஓடி வந்து அவளை அணைத்து கொண்டு,”அக்கா, இந்த மாதிரி அனுபவம் நான் கனவுலகூட நினைச்சுதில்ல..தாங்க்ஸ்.” என்றாள் ஜனனி.
அப்போது அவர்களருகே வந்த ராம், “நீ எங்க இங்க?” என்றான் ஆச்சர்யத்துடன்.
“நானும் நைட் இங்கதான் தங்கினேன்..உங்கள இன்னிக்கு வழியனுபிச்சிட்டு எங்க வீட்டுக்குப் போயிடுவேன்.” என்றாள். அப்போது அவனது ஆபிஸ் அறையிலிருந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் கபீர்.
“உங்களுக்கு கபீர அறிமுகப்படுத்தறேன்.” என்று ஸ்மிரிதி சொல்லி முடிக்குமுன்,
“ஹாய் ராம்..நான் கபீர்..ஸ்மிரிதியோட பிரண்ட்..உங்க ஸ்டே நல்லா இருந்திச்சுனு நினைக்கறேன்.” என்றான் கபீர்.
“இன்கிரெடிபிள் அண்ட் தாங்க்ஸ்.” என்றான் ராம்.
“நோ தாங்க்ஸ்.என் ஜாய் யுவர் ட் ரிப்.” என்று ராமின் கையைக் குலுக்கினான் கபீர். அதன்பின் அங்கு  பரிசுப் பொருளுடன் நின்றிருந்த ஹோட்டல் சிப்பந்தியை அழைத்து அந்தப் பரிசை ராமிடம் கொடுத்து,”என்னோட கிஃப்ட் உங்க இரண்டு பேருக்கும்.” என்றான்.
அதை வாங்கிக் கொள்ள ராம் தயக்கம் காட்ட,”கிஃப்ட் கொடுத்தா சட்டுனு வாங்கிக்கணும் யோசிக்கக்கூடாது.” என்று ராமிற்கு அடவைஸ் செய்தான் கபீர்.
கபீரிடமிருந்து கிஃப்டைப் பெற்று கொண்ட ராம் மறுபடியும் “தாங்கஸ்.” என்றான்.  அப்போது,
“அக்கா, நாங்க திரும்பி வந்த அப்பறம் நீங்க எங்களை மீட் பண்ண வருவீங்க இல்ல?” என்று கேட்டாள் ஜனனி.
“முடிஞ்சா வரேன்..எனக்கு வெளியூர்ல வேலையிருக்கு அதனால நான் எப்ப தில்லி திரும்பி வருவேனு சொல்ல முடியாது..இங்கே இருந்தேன்னா கண்டிப்பா வரேன்..உங்களோட கிஃப்ட் சிவகாமி ஆன் ட்டி வீட்டுக்கு டிரெக்டா வந்திடும்..ஏதாவது சரி செய்யணுமுனா சொல்லு அவளுக்குத் தெரிஞ்ச கடை கோயமுத்தூர்ல இருக்கு அவங்களே நீ சொல்ற சேன் ஜஸ் செய்து கொடுப்பாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி கா.” என்று சொல்லி அவர்கள் இருவரும் ஸ்மிரிதியிடம் விடைபெற்று கொண்டனர்.
“உன்னை இராத்திரியே வீட்டுக்குப் போக சொன்னேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்களுக்கு ஏதாவது தேவைன்னா உன்னை தொந்திரவு செய்யாம நானே பர்ஸ்னலா பார்த்துக்கணுமுனு இங்கையே தங்கினேன்…ஸ்பெஷல் கெஸ்ட் அவங்க இரண்டு பேரும்.” என்று சொல்லி மெலிதாக சிரித்தான்.
“ஏய்…உன் ஹோட்டல்ல எத்தனை ஹனிமூன் ஜோடிங்க நேத்து நைட்?” என்று ஸ்மிரிதி கேட்க,
“யாருமில்ல..கல்யாண் ஸீஸன் இனிமேதான்..மெஹக் எங்க தங்கறா இந்த தடவை?” என்று கேட்டான் கபீர்.
“குட்காவ்ல (gurgaon)..தமிழ் படத்துக்கு புக் செய்ய ஆளுங்க வராங்க.. அவங்ககூட பேசறத்துக்குக் என்னையும் கூப்பிட்டிருக்க.. பிஸ்னஸ் விஸிட்..”
“எதுக்கு பிஸ்னஸ்ஸ இங்க தில்லில பேசறா..அவ இடத்தில்தான் பேசணும்.” என்றான் கபீர்.
“மும்பைல யாருக்கும் விஷயம் தெரிய வேணாமுனு நினைக்கறா அவங்க அம்மா உள்பட..காண்ட் ராக்ட் ஸைன் செய்த பிறகு எல்லாருக்கும் தெரிவிக்க போறா..முன்னாடியே இரண்டு, மூணு சான்ஸ் தட்டிப் போயிடுச்சு அதனால இந்த முறை என்னை வைச்சுகிட்டு இங்க தில்லில பேசி முடிக்கப் போறா.” என்றாள் ஸ்மிரிதி.
“அவ இங்க தங்கினா எனக்கும் பிஸ்னஸ் ஆகுமில்ல.” என்று விளையாட்டாக கபீர் கேட்க,
“இங்க நாங்க தங்கினோமுனா உன்னைப் பிஸ்னஸ் செய்ய விடமாட்டோம்..ஒரு நாளைக்கு கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மூட வேண்டி வரும்..பார், ரெஸ்டர்ண்ட் எல்லாம் காலியா இருந்தாதான் நமக்கு சரிப்படும்..இந்த ஹோட்டல்ல அதைச் செய்யமுடியாது…ஏர்போர்ட் சிடில இருக்கறதுனால எதையும் நீ அஞ்சு நிமிஷம்கூட மூடி வைக்க முடியாது…அப்படி செய்த அப்பறம் உங்கப்பாவுக்கு செய்தி போயி உன்னைப் பாக் செய்து வெளி நாடு அனுப்பிடுவாரு.” என்றாள் ஸ்மிரிதி.
“செய்ய மாட்டாரு..மெஹக் வந்து தங்கினா பப்ளிசிட்டி..அதை விட்டுக் கொடுக்க மாட்டாரு..இப்ப எப்படி அவ வேற ஹோட்டல் போயிட்டானு என்னைய கேள்வி கேட்கப் போறாரு?” என்றான் அவன் தகப்பனைப் பற்றி தெரிந்து வைத்திருந்த கபீர்.
“அவர்கிட்ட சொல்லு ஸ்மிரிதி வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருக்கா மெஹக் அதனால எல்லாம் முடிவையும் ஸ்மிரிதான் எடுக்கறானு.” என்றாள் ஸ்மிரிதி.
“உடனே ஸ்மிரிதிகிட்ட போயி கத்துக்க அப்படினு என்னைய உன்கிட்ட வேலைக்கு அனுப்பிடுவாரு.” என்றான் கபீர்.
“நான் உன்கிட்ட வேலை கேட்கலாமுனு நினைச்சுகிட்டிருந்தேன்..நீ என்கிட்ட வேலை கேட்கற.” என்றாள் ஸூரியஸாக ஸ்மிரிதி.
“என்கிட்டையா? உளறாத.” என்றான் நம்பமுடியாமல் கபீர்.
“நிஜமாதான்..சிலது யோசிக்க வேண்டியிருக்கு..அதெல்லாம் யோசிச்ச பிறகு உன்கிட்ட சொல்றேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“உனக்கு நான் வேலைப் போட்டு தர முடியாது ஆனா உனக்காக ஹோட்டல் வாங்கிப் போடறேன்.” என்றான் கபீர்.

Advertisement