Advertisement

ஸ்மிரிதியின் மனு – 60_2 (இறுதி பதிவு)
அவர்கள் கார் நெடுஞ்சாலையை அடைந்தபோது அத்தனை சிக்னலிலும் அவர்கள் ஆட்களை நிறுத்தியிருந்தான் விரேந்தர்.  அவர்களின் கார் பின்னே ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு கார் சேர்ந்து கொள்ள, அவர்கள் ஆஸ்பத்திரியை சென்றடைந்த போது ஒரு கார் ஒரே கார்களின் ஊர்வலமாக மாறியிருந்தது.
ஆஸ்பத்திரி வாசலில் டாக்டர்களுடன் மாறன் காத்திருந்தான்.  மனிஷை வண்டியிலிருந்து இறக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து உள்ளே அழைத்து சென்றனர். மனு அவர்களோடு செல்ல,   காரிலிருந்து இறங்காமல் உள்ளே அமந்திருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,”யார் இது?” என்று அவள் மடியிலிருந்த பாப்பாவைப் பார்த்து கேட்டான் மாறன்.
“என்னோட மக..மனிஷோட டி ஷர்ட் எங்கே? எடுத்துகிட்டு வர சொன்னேனே.” என்றாள்.
“அம்மாகிட்ட இருக்கு..உன் மகளா?” என்று அவன் கேட்டு கொண்டிருக்கும் போது அங்கே வந்த சிவகாமி,”மாறன்..ஐ சி யு விலே யாருமேயில்லை..கீதிகாவும், உங்கப்பாவும் கீழே வந்துட்டாங்க..நீ ஐ சி யுக்கு போ.” என்றார்.
“அம்மா..வீட்லேர்ந்து எடுத்துகிட்டு வந்த டி ஷர்ட்டை ஸ்மிரிதிகிட்ட கொடுங்க.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அகன்றான் மாறன்.
“யாரு ஸ்மிரிதி இந்தப் பாப்பா?” என்ற கேள்வியுடன் பையிலிருந்து மனிஷின் டி ஷர்டை எடுத்து கொடுத்தார் சிவகாமி.
“இன்னைக்கு எனக்கு ஒரு மக கிடைச்சிருக்கா ஆன்ட்டி ..இவ இல்லாம நமக்கு மனிஷ் திரும்ப கிடைச்சிருக்க மாட்டான்..பிறந்த குழந்தை மாதிரி டிரெஸ் இல்லாம இருக்கா அதான் மனிஷோட டீ ஷர்டை போட்டு விடறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிவகாமி காரினுள் எட்டி பார்க்க, அவள் சிறிய உருவத்திற்குப் பொருத்தமில்லாத பெரிய டி ஷர்டை அணிந்து ஸ்மிரிதியின் மடி மீது அமர்ந்திருந்த அந்தப் பெண் குழந்தைபைப் பார்த்து அவர் “வா” என்று அழைத்து, கைகளை நீட்ட, தலையசைவில் அவரை மறுத்துவிட்டு ஸ்மிரிதியோடு ஒன்றிக் கொண்டாள் பாப்பா.
“அவ என் மடியை விட்டு இறங்க மாட்டேங்கறா.” என்று ஸ்மிரிதி சொல்லி கொண்டிருந்த போது அங்கே வந்த மனு டி ஷர்ட்டில் இருந்த பாப்பாவைப் பார்த்து,
“விரேந்தர்.” என்று அழைத்து,”பாப்பாவுக்கு உடனே டிரெஸ் வாங்கிட்டு வா.” என்று கட்டளையிட்டு விட்டு அவளை தூக்க அவன் கைகளை நீட்டிய போது ஸ்மிரிதியிடமிருந்து மனுவிடம் தாவினாள் பாப்பா.
“எப்படி டா பாப்பா உன்கிட்ட வரா?” என்று ஆச்சரியத்துடன் சிவகாமி கேட்க,
“அவ அழுத போது நானும் கொஞ்சம் தூக்கிகிட்டேன்..எங்க இரண்டு பேர்கிட்ட மட்டும்தான் அவ பாதுகாப்பா உணர்றா மா.” என்றான் மனு.  ஆனால் மனு அறிந்திருக்கவில்லை அன்றைய பகல் பொழுது முழுவதும் பள்ளி சீருடையில் இருந்தவனின் அருகில் பாப்பா படுத்திருந்தால் அவனிடமும் பாதுகாப்பை உணர்ந்திருக்கிறாளென்று. 
“இப்ப இந்தப் பாட்டிகிட்ட வர மாட்டியா? என்று உரிமையாக கேள்வி கேட்டு அந்தப் பாப்பாவை உடனடியாக அவர் பேத்தியாக்கிக் கொண்டார் சிவகாமி. 
விடியற்காலை வரை விழிப்பு நிலை, உறக்க நிலை என்று மனிஷ் தடுமாறி கொண்டிருந்ததால் அவனுக்கு அணைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. அவன் முன்னேறத்தைக கண்காணித்து கொண்டிருந்த மருத்தவர்கள், இரண்டு நாட்களாவது அவன் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டுமென்றனர்.
முதல் நாளிலிருந்து ஓய்வில்லாமல் அலைந்ததால் மனத்தாலும், உடலாலும் சோர்ந்து போயிருந்தனர் அனைவரும். அவர்கள் எல்லாரும் ஓய்வெடுக்க ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.  கீதிகாவும், சிவகாமி அருகருகே அமர்ந்திருந்தனர்.  சிறிது இடைவெளி விட்டு நாதனும், மாறனும் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களுக்கு எதிர்புறத்தில் மனு, ஸ்மிரிதி, ஸ்மிரிதியின் மடியில் பாப்பா.  விடிந்து சில நிமிடங்களான போது ஸ்மிரிதிக்கு ஒரு மாதிரியாக இருக்க, அவள் மடிமீது படுத்திருந்த குழந்தையை மனுவிடம் கொடுத்து விட்டு வாஷ் ரூம் சென்றாள்.  அவள் திரும்பி வந்த போது மிகவும் பலகீனமாக உணர்ந்தாள்.  அதனால் மனுவின் தோள் மீது சாயந்து கண் மூடி அமர்ந்தவளிடம்,
“என்ன பண்ணுது உனக்கு? என்று கேட்டான்.
அதற்கு ஸ்மிரிதியிடம் பதிலில்லை.
அவன் மடிமீது விரேந்தர் வாங்கி வந்த பிங்க் நிற பார்ட்டி ஃபிராக்கில் படுத்திருந்த குழந்தையையும், அவன் தோள்மீது சாயந்து தூங்க முயற்சி கொண்டிருந்த ஸ்மிரிதியையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவன், சிவகாமியை அழைத்து,
“அம்மா, இவளை இப்பவே நீங்க ஜென்ரல் செக் அப்புக்கு அழைச்சுகிட்டு போங்க..அப்படியே ஒரு பிரெக்னென்ஸி டெஸ்ட்டும் செய்ய சொல்லுங்க.” என்று ஆர்டர் போட்டான்.
அதைக் கேட்டு ஸ்மிரிதியைத் தவிர அறையிலிருந்த மற்றவர்கள் ஆச்சரியத்தில் விழி விரித்து பார்க்க,”நேத்ரா ஆன்ட்டி நேத்திக்கே பிரக்னென்ஸி டெஸ்ட் செய்ய சொல்லிட்டாங்க..நான் தான் அப்பறம் பார்த்துகலாம்னு தள்ளி போட்டேன்.” என்றான்.
“முருகா..நிஜமாவாட சொன்னாங்க.”
“ஆமாம் மா..இவகிட்ட உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு கேட்டா  பதிலில்லை..அதான் எல்லா டெஸ்டும் செய்து பார்த்திடலாம்..அதுக்கு அப்பறம் நீங்களும், அப்பாவும், இவளையும், பாப்பாவையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்க.” என்றான் மனு.
ஸ்மிரிதிக்கு செய்ய வேண்டிய சோதனைகளை செய்து முடித்து கொண்டு அவர்கள் நால்வரும் வீடு போய் சேர்ந்தனர். காலை பதினொரு மணி போல் விழித்து கொண்ட ஸ்மிரிதியின் அருகில் கால்களை விரித்து குப்பற படுத்துகிடந்தாள் பாப்பா. மெதுவாக எழுந்து காலை கடமைகளை முடித்து கொண்டு அவள் அறையிலிருந்து ஃபோனை செக் செய்தபடி வெளியே வந்தபோது டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நாதனும், சிவகாமியும் கண்ணில் பட்டனர்.
“ஆன் ட்டி..தூங்கலேயா? “
“இரண்டு மணி நேரம் தூங்கினேன்..அப்பறம் எழுந்திட்டேன்..குக்கை கூப்பிட்டு டிஃபன் செய்ய சொல்லி ஆஸ்பத்திரிக்கு கொடுத்து அனுப்பிட்டேன்..விரேந்தர் உனக்காக அப்பலேர்ந்து காத்துகிட்டு இருக்கான்.” என்றார்.
வாயிலில் காத்து கொண்டிருந்த விரேந்தரிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஸ்மிரிதி நேரே நாதன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
“அங்கிள்.” என்று அவள் அழைக்க,
“சொல்லு ஸ்மிரிதி.”
“ரொம்ப தாங்க்ஸ்..நேத்து முழுக்க நீங்கதான் ஆஸ்பத்திரிலே அப்பாவைப் பார்த்துகிட்டீங்க அதனாலேதான் நான் கவலையில்லாம இருந்தேன்.” என்றாள்.
“ஆனா எனக்கு கவலையா இருந்திச்சு ஸ்மிரிதி..இந்த மாதிரி நீ தனியா இராத்திரி வெளியே போனது சரியில்லே..போலீஸுக்குப் போயிருக்கணும்..ஏன் போகலே? என்று நேரடியாக கேட்டார்.
“அவங்க என் அப்பாவை வைச்சுத்தான் விசாரணையை ஆரம்பிச்சிருப்பாங்க..அவரோட எதிரிங்களோட வேலைங்கற கண்ணோட்டத்திலேதான் பார்த்திருப்பாங்க..நேத்து மாமா ஜியும் அப்படிதான் சொன்னாரு..அப்பாவுக்கு வேண்டாதவங்கதான் அவர் வண்டிலே விஷம் வைச்சுட்டாங்கண்ணு.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ எடுத்த நடவடிகைகள்.. எனக்கு உடன்பாடில்லே..எல்லாத் தப்பையும் நாமளே சரி செய்ய முடியாது..நமக்கு உதவி செய்யதான் சட்டம் இருக்கு.” என்றார் நாதன்.
“அப்பாவுக்காக மட்டும் பார்க்கலே அங்கிள்..மனிஷுக்காகாதான் போகலே..கீதிகாவும் விரும்பலே…அவங்க குடும்ப பின்னனி எனக்குத் தெரியும் ….மனிஷ் நம்ம கைவிட்டு போயிருந்தா உயிரோட  கிடைச்சிருக்க மாட்டான்..,….அவங்க எதுக்கும் தயங்காதவங்க..இப்ப நான் போலீஸ் உதவியை எடுத்துகிட்டா இனி பிரச்சனையாகாது.” என்றாள்.
“மனிஷ் கிடைச்சிட்டான்..யார் உதவி செய்தாங்கண்ணு தெரியும்..இப்ப போலீஸுக்கு என்ன வேலை இருக்கு?”
“யாருக்கு உதவி செய்தாங்கண்ணு இன்னும் தெரியலே அங்கிள்..நேத்து நைட் மனிஷை வைச்சிருந்த இடத்தை கண்காணிச்சோம்..அங்கே இரண்டு ஆள் இருந்திருக்காங்க..நாங்க போன போது ஒருத்தன் தான் இருந்தான்..அந்த இரண்டாவது ஆள் அந்த இடத்துக்குத் திரும்பி வரவே இல்லை ..இனி வர மாட்டான்..அதனாலே நீங்க எனக்கு இரண்டு உதவி செய்யணும்..
என்கிட்ட மாமாஜியோட டிரைவர் ஃபோட்டோ இருக்கு..அவனுக்கு என்ன ஆச்சுண்ணு நீங்கதான் கண்டுபிடிக்கணும்..அப்பறம் நான் வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கற பாப்பாவோட ஃபோட்டோவை வைச்சு அவ குடும்பத்தையும் நீங்கதான் கண்டுபிடிக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“இரண்டு வேலையும் உடனே முடியாது..பதுங்கியிருக்கறவனைக் கண்டு பிடிக்க நாளாகும்..பாப்பாவோட குடும்பமும் உடனே கிடைச்சிடும்ணு சொல்ல முடியாது.”
“டிரைவர் அடுத்த இரண்டு நாள்லே கிடைச்சிடுவான் அங்கிள்..உயிரோட  கிடைச்சா மனிஷ் இங்கையே இருக்கட்டும் இல்லைன்னா உங்களோட கோயமுத்தூர் போகட்டும்..பாப்பாக்கு அவ குடும்பம் கிடைக்கறவரை என் மகளா எங்ககூட இருப்பா..அவங்களை கண்டுபிடிக்கவே முடியலேன்னா.. அவதான் நம்ம குடும்பத்தோட முதல் வாரிசு..அவளை சட்டப்படி தத்து எடுத்துப்பேன்.” என்று அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது வீல் என்ற கத்தல் கேட்க, அவர்கள் மூவரும் ஸ்மிரிதியின் அறைக்கு ஓடி போயினர்.
அங்கே, படுக்கை மீது அமர்ந்து கொண்டிருந்த பாப்பா ஸ்மிரிதியைப் பார்த்தவுடன் கட்டிலிளிருந்து குதித்து, பாய்ந்து வந்து அவளை அணைத்து கொண்டாள்.  ஸ்மிரிதி அவளைத் தூக்கி கொண்டவுடன் அவள் அழுகை ஆரம்பமானது.
“எதுக்கு இப்போ பாப்பா அழறா? என்று சிவகாமி அன்பாக விசாரிக்க பாப்பாவிடமிருந்து பதிலேயில்லை.  அப்போது மட்டுமில்லை அடுத்து வந்த மாதங்களில் அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்து அவள் ஒரு வார்த்தைக்கூட  பேசாமல் இருந்ததைப் பார்த்து கவலையடைந்த மனுவும், ஸ்மிரிதியும் அவளை டாக்டர்களிடம் அழைத்து போய் காட்ட, அனைவரும் ஒரே பதிலைதான் தந்தார்கள்.  அவள் விரும்பும் போது தான் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வருமென்று.  
அன்று இரவே டிரைவரைப் பற்றி ஸ்மிரிதி கேட்டிருந்த தகவல் கிடைத்தவுடன் அவளுடன் அதை பகிர்ந்து கொள்ள நாதன் விழைந்த போது,”அவளை இப்ப தொந்தரவு செய்ய வேணாம்..குழந்தை உண்டான விஷயம் தெரியாம அவ இவ்வளவு அலைஞ்சிருக்கா..இப்பவாவது ஓய்வெடுக்கட்டும்..அவளும், பாப்பாவும் தூங்கட்டும்.” என்று அவரைத் தடுத்துவிட்டார் சிவகாமி.
அடுத்த நாள் காலை, அன்றைய தினசரியை ஸ்மிரிதியிடம் கொடுத்து,”நேத்து நைட் சொல்லணும்னு நினைச்சேன்..நீ சீக்கிரம் தூங்கிட்ட..அவன் மட்டுமில்லே..இன்னொரு ஆளும்..ஃபரிதாபாத் பக்கத்திலே..எப்படின்ணு தெரியலே..பேப்பர்லே வந்திருக்கு.” என்றார்.
டிரைவரும் அவன் கூட்டாளியும் பேப்பரில் செய்தியாக வந்த பிறகு நாதனும், சிவகாமியும் மனிஷைப் பற்றி கீதிகாவுடன் நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதற்குபின் அவர்களுடன் மனிஷ் கோயமுத்தூர் போவது உறுதியானது.
குடும்பத்தினரின் முடிவைத் தம்பிக்குத் தெரிவிப்பது அக்காவின் பொறுப்பானது.
அன்று மாலை மனிஷை சந்திக்க ஆஸ்பத்திரி சென்ற ஸ்மிரிதியிடம்,”தீதி..தப்பு என்னோடதுதான்…அந்த டிரைவர் பையாவை எதுவும் செய்யதிட்டீங்களா?” என்று டிரைவரைப் பற்றி விசாரித்தான் மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மனிஷ்.
“சோனு தான் விசாரிச்சான்..உயிரோடதான் இருக்கான்…ஆஸ்பத்திரிலே.”
“அவங்க மேலே தப்பே இல்லை தீதி..அஞ்சு நிமிஷத்திலே வரேண்ணு சொல்லிட்டு தான் போனாங்க.” என்றான்.
“கண்ணாடியை ஏன் இறக்கின?”
“ஸர்குலரை பார்த்தவுடனே யோசிக்காம செய்திட்டேன்.”
“ஆள் அடையாளம் தெரியுமா?”
“ஒரு நொடிதான் பார்த்தேன்..அதுக்குள்ள என் முகத்தை மூடிட்டான்..அப்பறம் என்ன நடந்திச்சுண்ணு தெரியலே..ஒரு தடவை கண் முழிச்சு பார்த்த போது நிறைய துணிங்க நடுவுலே படுத்துகிட்டு இருந்தேன்..அப்பறம் இங்கேதான் முழுச்சுகிட்டேன்.”
“அவன் முகத்தை மறக்காதே..மனசுலே வைசுக்க.” என்றாள் ஸ்மிரிதி.
“எதுவரைக்கும்?”
“நீ திரும்பி வர்றவரைக்கும்.”
“எங்கே போறேன்?”
“உன்னைத் தூக்கறத்துக்கு முன்னாடி அப்பாவை பாய்ஸன் பண்ணிட்டாங்க..அவரு இன்னும் ஐ சி யுலேதான் இருக்காரு..அதனாலே உன்னை இங்கேயிருந்து அனுப்ப எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.”
அதைக் கேட்டு அதிர்ச்சியில் மௌனமானான் மனிஷ்.
“உன் குடும்பத்திலே இனி யாரையும் உன் விஷயத்திலே நான் நம்ப போகறதில்லே மனிஷ்.. ஸப்னா கல்யாணத்திலே இது ஆரம்பிச்சிருக்கு…யார் இதை செய்தாங்கண்ணு நிரூபிக்க என்கிட்ட இப்ப எதுவுமே இல்லை..
எல்லாம் சரியாயிடுச்சுண்ணு எனக்கு நம்பிக்கை வந்த பிறகு உன்னைக் கண்டிப்பா எங்ககிட்ட அழைச்சுப்பேன்..அதுவரை எங்கேயிருந்தாலும் நீ கவனமா இருக்கணும் மனிஷ்.” என்றாள் ஸ்மிரிதி.
“நோ தீதி..நான் இங்கே அப்பாகூடதான் இருக்க போறேன்.” என்றான் மனிஷ்.
“மனிஷ், கொஞ்ச நாள்லே எனக்கு பேபி வர போகுது..அப்பாவுக்கும் எப்ப முழுசா சரியாகும்ணு தெரியலே..இந்த சூழ் நிலைலே உன்னைக் கவனமா பார்த்துக்க என்னாலே முடியவே முடியாது,” என்று அவள் இயலாமையை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
“உன்னை, உன் பேபியை, அப்பாவை எல்லாரையும் நான் பார்த்துக்கறேன் தீதி….அவங்க எத்தனை முறை வேணும்னாலும் டிரை செய்ய என்னோட இருபத்தி ஐந்தாவது வயசுவரைக்கும் டயமிருக்கு…நான் இங்கேயிருந்து போயிட்டேன்னா அவங்களைக் கண்டுபிடிக்க உனக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைக்காது தீதி.” என்று சூழ் நிலையைச் சரியாக படித்தான் மனிஷ்.
“எனக்கு நீ அந்த மாதிரி வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்க வேணாம்..உன் அம்மாவுக்கு உன்னைப் பற்றிய பயமும், கவலையும் தினசரி அதிகரிக்குது..அதனாலே உன்னை ஒரு பாதுகாப்பான இடத்திலே விட போறேன்..நீ இந்தியாவுலேதான் இருப்ப..உனக்கு தெரிஞ்சவங்களோடதான் இருக்க போற..கொஞ்ச நாளைக்கு நாங்க யாரும் உன்னை நேர்லே வந்து பார்க்க மாட்டோம்.” என்று அவள் செய்திருந்த ஏற்பாட்டை விளக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“நீங்கதான் என் குடும்பம்…நான் வேற யாரோடையும் இருக்க மாட்டேன்.” என்று அடம் பிடித்தான் மனிஷ்.”
“மனிஷ், ஷட் அப்..தீதி முடிவெடுத்திட்டேன்.. நீ போக போற..நோ ஆர்கியுமெண்ட்ஸ்..அண்ட் அவங்களும் உன் குடும்பம்தான்..அங்கே போன பிறகு அவங்கெல்லாம் யாருண்ணு நீ தெரிஞ்சுப்ப.”
அதற்குமேல் ஸ்மிரிதியை கோபப்படுத்த விரும்பாமல் தணிந்து போன மனிஷ்,
“ஃபைன் தீதி..இப்ப நீ சொல்றபடி நான் கேட்டா இந்த மனிஷ் கார்மேகம் திரும்பி வரும்போது அவன் சொல்றபடி நீ கேட்கணும்.” என்று மனிஷ் டீல் பேச,
“மனிஷ்…யார் சொல்றதையும் நான் கேட்க மாட்டேன்.” என்று ஸ்மிரிதி எழுந்து கொள்ள,
“தீதி..நீ கொஞ்சம் கூட விட்டு கொடுக்க மாட்டேங்கற.” என்றான் மனிஷ்.
“சரி..நீ திரும்பி வரும்போது இதைப் பற்றி பேசலாம்..இப்ப வேணாம்..ஒகே வா?” என்று ஸ்மிரிதி சம்மதம் கேட்க,
“ஒகே.” என்று சம்மதித்தான் மனிஷ்.
அந்த ஆஸ்பத்திரி அறையில் உடன்பிறவா உடன்பிறப்புக்கள் இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர்.   
அதற்குபின் மனிஷ் தில்லியிலிருந்து மாயமாக மறைந்து போனான்.  அவன் மாமனார் வீட்டோடு குடியேறிய பின் கார்மேகத்தின் குடும்ப வக்கீலாகப் பொறுப்பேற்று கொண்டான் மனு. சில மாதங்கள் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து கார்மேகம் வீடு வந்த சேர்ந்தபோது பாப்பாவிற்கும், அவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன.  
இருவராலும் ஒரு வார்த்தைக்கூட பேச முடியவில்லை,  பயத்தினால் பாப்பாவும், உடல் ஒத்துழைக்காததால் கார்மேகமும் நடமாட்டமில்லாமல் அறையில் அடைந்து கிடந்தனர்.  அதனால் பாப்பாவையும், கார்மேகத்தையும் கீதிகா, ஸ்மிரிதி, மனு என்று மூவரும் மாறி மாறி பார்த்து கொண்டனர்.  மூன்று பெரியவர்கள் இரண்டு குழந்தைகள் என்றிருந்த நிலை மூன்று பெரியவர்கள் மூன்று குழந்தைகள் என்று மாறிய போது பாப்பாவின் விருப்பமும், மனு, ஸ்மிரிதியின் எதிர்பார்ப்பும்  பூர்த்தியானது.  
ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன்,”இது ரணதீரன்..உன் தம்பி.” என்று புது வரவைப் பாப்பாவிற்கு ஸ்மிரிதி அறிமுகப்படுத்தி வைக்க, பாப்பாவும்,”இது விதிஷா..தீதி.” என்று அவளை அவளே அறிமுகப்படுத்தி கொண்டு குடும்பத்தினரை ஆனந்ததில் ஆழ்த்திய அந்த நொடியில் அடுத்த தலைமுறையில் இரத்த சமந்தமில்லாத  இருவருக்கு நடுவே அக்கா, தம்பி என்ற அழகான உறவு ஆரம்பமானது.
விதிமுறைகள் இல்லா விதியின் விசையால் வாழ்க்கைத் திசை திரும்பியிருந்தாலும் அவர்களின் மானுடம் மூலம் மானிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பீஜி, ஸ்மிரிதி, ராஜு, விதிஷா போன்றவர்கள் தான் நம் அறத்தின் அடையாளம், ஆரம்பம்.
***ஆரம்பம்**

Advertisement