Advertisement

வட்டன், வானவர் சிட்டன், இட்டன், அட்டன்
வானன், தேனன், ஏனன், ஆனன், 
வீரன், தீரன், ஊரன், ஆரன்
விடம் உண்டன், மதி சூடிய மைந்தன்,
திரு அண்ணாமலையனுக்கு நன்றிகள் பல !
Many thanks to the Eternal light,
that guides me to write, 
Arunachala ! அருணாசலா !
*/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/*
ஸ்மிரிதியின் மனு – 60_1 (இறுதி பதிவு)
மனிஷின் கன்னத்தைப் பலமாக தட்டி அவனை எழுப்ப முயன்றாள் ஸ்மிரிதி.  அரைகுறை மயக்கத்தில் இருந்த மனிஷ், கண்களைப் பாதிக்கு மேல் திறக்க முடியாமல் துவண்டு போனான். அவன் மயக்கம் தெளிய போவதில்லை என்று உணர்ந்த மனு,
“நகரு ஸ்மிரிதி..”என்று மனிஷை அங்கேயிருந்து தூக்கி வாயிலருகே படுக்க வைத்து, “ராஜு..நீ வெளியே காவல் இரு..விரேந்தர், நீ போய் வண்டியை இங்கே கொண்டு வந்திடு..அந்த இன்னொரு ஆள் திரும்பி வந்திட்டா பிராப்ளமாயிடும்..அவனோட எத்தனை பேருன்னு தெரியலே.” என்றான்.
“லாயர் ஸாப்.இங்கே பக்கத்திலேதான், ஹைவேலே நம்ம ஆளுங்க இருக்காங்க..நான் ஃபோன் செய்யறேன்..உடனே வந்திடுவாங்க..நான் வண்டி எடுத்துகிட்டு வர வரைக்கும் நீங்க உள்ளேயே இருங்க.” என்று சொல்லி வண்டி எடுத்து வர ஓடி போனான் விரேந்தர்.
“ஸ்மிரிதி..நீ அந்தப் பாப்பாவைத் தூக்கி வைச்சுக்க..வண்டி வந்தவுடனே நீங்க இரண்டு பேரும் பின்னாடி ஸீட்லே உட்கார்ந்திடுங்க..நான் மனிஷை நடு ஸீட்லே படுக்க வைச்சிட்டு அவன் பக்கத்திலே உட்கார்ந்துக்கறேன்.” என்று நேரத்தை வீண்டிக்காமல் அந்த இடத்தை விட்டு விரைவில் வெளியேற திட்டமிட்டான்.
அந்த சிறிய இடத்தினுள்ளே அவர்கள் ஐந்து பேர் இருந்தனர்.  மனு, ஸ்மிரிதி, அங்கு நடப்பது எதையும் உணராமல் மயங்கி கிடந்த மனிஷ், பயத்துடன் ஸ்மிரிதியின் இடுப்பில் அமர்ந்திருந்த பாப்பா, அவளைப் பயமுறுத்தும் படி பார்த்து கொண்டிருந்த அந்த ஆள்.
பாப்பாவைப் பார்வையாலேயே அவன் மிரட்டி கொண்டிருப்பதை உணர்ந்த ஸ்மிரிதி, சட்டென்று அவளைக் கீழே இறக்கி விட்டு விட்டு அவனருகே சென்றவள், அங்கே எரிந்து கொண்டிருந்த தணிலில்,”இனி யாரையும்  நீ இப்படி பார்க்கக்கூடாது.” என்று அவன் முகத்தை அழுந்தப் பிடிக்க, வெப்பம் அவன் முகத்தை, தலைமுடியைப் பதம் பார்க்க, அந்த வலியில் அவன் சத்தம் போட முடியாமல் முனகி அவன் கால்களை உந்தி தப்பிக்க பார்க்க, அவன் கால்களின் மீது அவள் கால்களை வைத்து அவனைத் நகர விடமால் ஸ்மிரிதி தடுக்க, அப்போது பாப்பா பெருங்குரலெடுத்து அழ,
அத்தனையும் சில நொடிகளில் நிகழ்ந்துவிட, அழுது கொண்டிருந்த பாப்பாவை ஒரு கையால் தூக்கி அவன் உடம்போடு அணைத்து கொண்ட மனு, மறு கையால் ஸ்மிரிதியைப் பிடித்து இழுத்து, ”ஸ்மிரிதி.. விடு.. அவனை..விடு..”என்று கத்த, ஸ்மிரிதி அவனை விடவில்லை.  அந்த ஆளின் வாயில் திணித்திருந்த துணி, தலைமுடி பொசுங்க ஆரம்பிக்க, உடனே ஸ்மிரிதியை வேகமாக அவன் புறம் இழுத்த மனு, பாப்பாவை அவளிடம் கொடுத்து,
“இவ அழுகை யாரையாவது அழைச்சுகிட்டு வர போகுது..சமாதானப்படுத்து.” என்றான். ஸ்மிரிதியிடம் சென்றவுடன் பாப்பா அவள் அழுகையை நிறுத்த,
“ஏன் ஸ்மிரிதி? எதுக்கு?” என்றான் மனு.
“பாப்பாக்காக..மற்றவங்களுக்காக யோசிக்கற எந்த மனசும் யாருக்கும், எதுக்கும் பயப்படக்கூடாது.” என்றாள்.
அவள் பதிலிளிருந்த உண்மை மனுவை ஊமையாக்கியது.
அத்தனை சத்தத்திற்கும், ஆர்பாட்டத்திற்கும் கலங்காமல், நான்குபுறமும் கண்காணித்தபடி அவன் காவல் வேலையில் கவனமாக இருந்த ராஜு, 
“தீதி..வெளிலே வாங்க..வண்டி வருது.” என்று அவன் சொல்லி முடிக்குமுன் படுவேகமாக அவர்கள் வண்டி வந்து நின்றது.  காரின் கதவை திறந்து நடுவிலிருந்த இருக்கையை சிறிது அகற்றி ஸ்மிரிதியும், பாப்பாவும் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டனர். மனிஷை நடு இருக்கையில் படுக்க வைத்து விட்டு அவன் காலடியில் அமர்ந்து கொண்டான் மனு. ராஜு முன்புறம் ஏறி கொண்டவுடன் வண்டி புறப்பட்டது.
அவர்கள் மேம்பாலத்தின் கீழேயிருந்து வெளியேறும் முன் இன்னொரு வண்டி உள்ளே வர, அவர்கள் அருகில் வந்தவுடன் அவன் புறம் இருந்த கண்ணாடியை இறக்கி அவர்கள் எங்கே போக வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பினான் விரேந்தர்.
காரின் பின் ஸீட்டிலிருந்த தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை எடுத்து மனிஷின் முகத்தில் தெளித்த ஸ்மிரிதி, அவள் கையினால் அவன் முகத்தைத் துடைக்க, எந்த உணர்வுமில்லாமல், மயக்கம் தெளியாமல் உறங்கி கொண்டிருந்தான் மனிஷ்.
“என்ன மனு? தண்ணி பட்டதுகூட தெரியாம இருக்கான்? என்ன ஆயிடுச்சு இவனுக்கு? என்று கவலையானாள் ஸ்மிரிதி.
 “ஸ்மிரிதி..என்னோட க்ளையண்ட், டாக்டர், அவரோட வீடு, க்ளினிக் இங்கே பக்கத்திலே இருக்கு..முதல்லே மனிஷை அங்கே கூட்டிக்கிட்டு போகலாம்.” என்று சொன்ன மனு அவளின் ஒப்புதலை எதிர்பார்க்காமல் அவன் க்ளையண்டிற்கு போன் செய்து ஒர் எமர்ஜென்ஸி கேஸுடன் அவர்கள் வீட்டிற்க்கு வருவதாக தகவல் கொடுத்தான்.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு மனு வழி சொல்ல, பின் சீட்டில் கண்மூடி அமர்ந்திருந்த ஸ்மிரிதி அவள் மடிமீது பாரத்தை உணர்ந்து கண் திறந்து பார்க்க, அவள் மடிமீது ஏறி உட்கார்ந்திருந்தாள் பாப்பா.  
அவளை முதல்முறையாக தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தாள் ஸ்மிரிதி.  பாப்பாவுக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் என்று தோன்றியது.  வட்டமான முகத்தில் வானம் போன்ற பெரிய கண்களுடன், தோள்வரை விரிந்திருந்தக் கூந்தலுடன், இரவு வேளையில் மாலை நேர வெய்யில் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தாள் அந்தக் குட்டி தேவதை. அவளின் பிரமிக்கதக்க அழகுதான் அவளிடம் ஆபத்தை அழைத்து வந்ததோ என்று எண்ணியபடி அமர்ந்திருந்த ஸ்மிரிதியின் இடுப்பை இன்னும் இறுக்கமாக அந்தக் குட்டி தேவதை கட்டிகொள்ள ஸ்மிரிதியும் அவளை இறுக அணைத்து கொண்டாள்.
அப்போது அவன் ஃபோனில் மாறனுக்கு அழைப்பு விடுத்தான் மனு.
“மனிஷ் கிடைச்சிட்டான்..இப்ப மயக்கமா இருக்கான்..இங்கையே பக்கத்திலே எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர்கிட்ட காட்ட போறோம்.. டாக்டர் என்ன சொல்றாருன்னு தெரிஞ்சுகிட்டு உனக்கு மறுபடியும் ஃபோன் பேசறேன்..நீ அம்மாகிட்டேயேயும், கீதிகாகிட்டேயும் அதுக்கு அப்பறம் விஷயத்தை சொல்லு.” என்று தகவல் கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் டாக்டரின் க்ளினிக்கில் இருந்தார்கள்.  அந்தக் குடியிருப்பு பகுதி அமைதியாக இருக்க, அவர்கள் வண்டி அந்த வீட்டின் கேட்டை அடைந்தபோது அதன் சத்தத்தில் அந்த டாக்டர் அவர் வீட்டுக் கதவை திறந்து கொண்டு வாசல் கேட்டிற்கு வந்தார்.
“ஹாய் மனு.” என்றவரிடம்,
“என்னோட பிரதர் இன் லா..அன்கான்ஷியஸா இருக்கான்..கொஞ்சம் பாருங்க.” என்று சொல்லி மனீஷைத் தூக்கி கொண்டு உள்ளே சென்றான் மனு.  
ஸ்மிரிதி இறங்குவதற்காக நடுவிலிருந்த ஸீட்டை முன்னால் தள்ளிய விரேந்தரிடம்,”இவ என் மடியை விட்டு இறங்க மாட்டா..இவளை இப்படியே தூக்கிகிட்டு நான் போக முடியாது..நீ உள்ளே போய் பாரு..நானும், ராஜுவும் இங்கையே இருக்கோம்.” என்று விரேந்தரை மனுவின் உதவிக்கு அனுப்பி வைத்தாள்.
காரின், காரிருளின் அமைதியைக் குலைத்தது ராஜுவின் கேள்விகள்.
“தீதி..அந்த அண்ணன் யார்? உங்களைத் திட்டறாரு.” என்று கேட்டான் ராஜு.
“உன் ஜிஜு.”
“ஐயோ தீதி..நீங்க சொல்லவே இல்லே.”
“பரவாயில்லே விடு.”
“தீதி..யார் அந்தப் பையன்?” 
“என் தம்பி…மனிஷ்” என்றாள் ஸ்மிரிதி.
“தீதி” என்று அதிர்ச்சியானான் ராஜு.
“இன்னைக்கு காலைலே ஸ்கூலுக்குப் போனவன் வீட்டுக்குத் திரும்பலே..இங்கே வந்திருக்கான்..எப்படின்னு தெரியலே.” என்றாள் ஸ்மிரிதி.
“தீதி..பெரிய ஆளுங்க ஆதரவுலேதான் இந்த வேலையெல்லாம் நடக்குது..உங்கத் தம்பி, இந்தப் பொண்ணு.. இரண்டு பேருக்கும் சம்மந்தமேயில்லே ஆனா இரண்டு பேரும் ஒரே இடத்திலே இருந்தாங்க..இரண்டு பேரும் எப்படி வந்தாங்கண்ணு விவரம் அங்கே இருந்தவனுக்குக் கூட தெரியாது..அவன் வேலை, பசங்க அங்கே வந்த பிறகு அவங்களுக்குக் காவலா இருக்கறதுதான்.. 
யார் தூக்க போறாங்க..யார் கைக்கு மாறப் போகுது..எப்படி மாறப் போகுது, எப்ப மாற போகுது எதுவும்,  யாருக்கும் தெரியாது..விக்கறவன்..வாங்கறவனுக்குகூட..நடுவிலே அத்தனை பேர் இருக்காங்க….நாம இன்னைக்கு அங்கே கரெக்ட டயத்துக்குதான் போயிருக்கோம் தீதி.” என்றான் ராஜு.
“இந்த மாதிரி அமைப்பு நுனியே இல்லாத நூல்கண்டு..ஆரம்பம் எது, முடிவு எதுண்ணு  தெரியாது..அதனாலேதான் நம்ம நாட்லே காணாம போகற குழந்தைங்களைக் கண்டு பிடிக்க முடியாது டா….இன்னைக்கு நான் லேட்டாயிட்டேன்னு நினைச்சேன் டா…
இவளை எங்கேயிருந்து தூக்கிகிட்டு வந்தாங்களோ?..இவளைத் தேடி யார் அலைஞ்சுகிட்டு இருக்காங்களோ..இதுவரை வாயைத் திறந்து இவ ஒரு வார்த்தைப் பேசலே..எப்படி இவளை அவ குடும்பத்தோட சேர்க்கறது? அறியாத வயசுலே இருக்கறவளுக்கு வீட்டு அட் ரெஸ் எப்படி தெரியும்?” என்றாள் ஸ்மிரிதி.
“தீதி..நீங்க நினைக்கற மாதிரி எல்லா குழந்தைங்களும் தொலைஞ்சு போனவங்க இல்லை…பிறந்த குழந்தைங்களைக் குப்பைத் தொட்டிலே தூக்கி போடறாங்க, குறையோட இருக்கற குழந்தைகளைப் பராமரிக்க முடியாம அனாதையா பஸ் ஸ்டாண்ட்லேயும், பிளாட்ஃபார்த்திலேயும் போட்டிட்டு போயிடறாங்க..சில குழந்தைகளை அவங்க குடும்பமே பணத்துக்காக வித்திடறாங்க..அந்த மாதிரி வேணாம்னு விட்டிட்டு போன குழந்தைகளோட குடும்பத்தை நீங்க எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டாங்க…இந்தப் பொண்ணைத் தேடி யார் வந்தாலும் நல்லா விசாரிங்க தீதி..அப்படி யாரும் தேடி வரலேன்னா தல்ஜித் அண்ணன்கிட்ட அனுப்பிடுங்க..அங்கே அனில் இவளைப் பார்த்துப்பான்.” என்றான் ராஜு.
அதற்குள் டாக்டர் வீட்டிலிருந்து வந்த விரேந்தர்,”மயக்கம் தான்னு சொல்றாரு..ஆனா உடனே ஆஸ்பத்திரிலே சேர்க்கணும்ங்கறாரு.” என்றான்.
அவன் பின்னால் மனிஷைத் தூக்கி வந்த மனு,”வைட்டல்ஸ் மானிட்டர் செய்ய  ஆஸ்பத்திரிலே சேர்க்கணும்..பக்கத்திலேயே இருக்குண்ணு சொல்றாரு..அவனுக்கு என்ன கொடுத்திருக்காங்கண்ணு அவருக்குத் தெரியலே…என்ன பண்ண?
“நம்ம ஆஸ்பத்திரிக்கேப் போயிடலாம்..நான் ஃபோன் செய்து தகவல் கொடுக்கறேன்.” என்று உடனே ஃபோனில் ஆஸ்பத்திரியை அழைத்து மனிஷைப் பற்றி தலைமை மருத்துவருக்குத் தகவல் கொடுத்தாள்.  
அடுத்து மாறனுக்கு ஃபோன் செய்து கீதிகாவையும், சிவகாமியையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும்படி சொல்லிவிட்டு அவர்கள் வரும்போது மனிஷின் டி ஷர்ட், ஷார்ட்ஸ் சிலவற்றை எடுத்து வரும்படி கட்டளையிட்டாள்.
ஸ்மிரிதி ஃபோன் பேசி முடித்தவுடன் வண்டியைக் கிளப்பிய விரேந்தரிடம்,”அண்ணா, என்னை வழிலே இறக்கி விட்டிடுங்க.” என்றான் ராஜு.
பின் ஸீட்டிலிருந்த ஸ்மிரிதி,”வேணாம் டா..எங்களோடவே வந்திடு.” என்றாள்.
“இல்லை தீதி..வேணாம்.” என்றான் ராஜு.
“டேய்..நீ இல்லாம மனிஷைக் கண்டு பிடிச்சிருக்கவே முடியாது டா.” என்றாள் ஸ்மிரிதி.
“நீங்க இல்லாம நானும், அனிலும் தொலைஞ்சு போயிருப்போம் தீதி..நீங்க எங்களுக்கு செய்ததை நான் இன்னைக்கு மற்றவங்களுக்கு செய்துகிட்டு இருக்கேன் தீதி.” என்றான் ராஜு.
“என்ன பிரயோஜனம் டா?..யாரையும் மாற்ற முடியலேயே டா.” என்றாள் ஆதங்கத்துடன் ஸ்மிரிதி.
“எல்லாத்தையும், எல்லாரையும் மாற்ற நாம கடவுள் இல்லை தீதி..நம்மளாலே முடிஞ்சதை மாற்ற தான் கடவுள் நமக்கு சக்தி கொடுத்திருக்காரு.” எனறான் ராஜு.
“நீ கடவுளை நம்பறயா டா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“எனக்கு நீங்கதான் தீதி கடவுள்..உங்களை நம்பறேன்.” என்றான் ராஜு.
அவள் மடியிலிருந்த பாப்பாவைக் காட்டி,“எனக்கு இவளும், நீயும் தான் டா கடவுள்.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்ப மனுஷனுக்கு மனுஷந்தான் கடவுள் தீதி.” என்று எளிமையாக மனித வாழ்கையின் நம்பிக்கையை, நிதர்சனத்தை உணர்த்தினான் ராஜு.
அதற்குமேல் வண்டியில் இருந்த அனைவரும் அன்றைய இரவின் நிகழ்வுகளில் மூழ்கிப் போயினர்.
அவன் இடத்தில் ராஜு இறங்கியவுடன், வண்டியிலிருந்து இறங்கிய மனு அவனை அணைத்து,”உனக்கு நானும், ஸ்மிரிதி தீதியும் எப்பவும் துணையா இருப்போம்.” என்றான்.
“தீதிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு அனில் சொன்னான்…ஆனா நீங்கதான் ஜிஜுன்னு இப்பதான் தெரிஞ்சுது..எங்கே தப்பு  நடந்தாலும், யாருக்கு நடந்தாலும்  தீதி தட்டி கேட்பாங்க இல்லை அதை சரி செய்ய பார்ப்பாங்க..
ஒருதடவை அவங்க சரி செய்த தப்புலேர்ந்து தப்பிச்சவங்க தான் நானும், அனிலும்..இன்னைக்கு அந்தப் பாப்பாக்காக நாம அங்கே போகலே ஆனா அந்தப் பாப்பா தீதிகாகத்தான் அங்கே காத்துகிட்டிருந்தா..அன்னைக்கு நானும், அனிலும் காத்துகிட்டிருந்தது போலே.” என்றான் ராஜு.
“உங்க தீதியைப் பற்றிய இந்த விஷயத்தை எல்லாம் ஒரு நாள் உங்க இரண்டு பேர்கிட்டேயும் கேட்டு தெரிஞ்சுக்கறேன்.” என்றான் மனு.
“அனில் ஜலந்தர்லே தல்ஜித் பையா பள்ளிக்கூடத்திலே படிச்சுகிட்டு இருக்கான்..தீதி அவனுக்குப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாங்க..எனக்கு பஹார்கன் ஜ்லே கடை வைச்சு கொடுத்து வாழ்க்கைக்கு வழி செய்து கொடுத்தாங்க..
எனக்குப் புதுதில்லி இரயில்வே ஸ்டேஷனை விட்டா வேற எதுவும் தெரியாது ஜிஜு..எந்த இடத்திலேர்ந்து வந்தேன்னு தெரியாம, போகறத்துக்கு வேற எந்த இடமுமில்லாம இந்த இரயில் நிலையத்திலேயே சிக்கிகிட்டேன்..என்னோட இந்த நிலை வேற யாருக்கும் வரக்கூடாதுண்ணு தான் காணாம போன குழந்தைகளைத் தேடி வர்றவங்களுக்கு என்னாலே முடிஞ்ச உதவி செய்யறேன்.” என்றான் ராஜு.
“இனி நீ போகறத்துக்கு வேற இடமில்லேன்னு சொல்லக்கூடாது..எப்ப வேணும்னாலும் எங்களோட வீட்டுக்கு வரலாம்.” என்று சொல்லி ராஜுவைத் தோளோடு அணைத்தான் மனு.
அவர்கள் உரையாடலைக் கேட்டு கொண்டிருந்த விரேந்தேர்,”பிட்டியாகிட்ட என் ஃபோன் நம்பர் வாங்கிக்க..எதுவாயிருந்தாலும் எனக்குப் ஃபோன் செய்..ஓடி வந்திடறேன்.” என்றான் ராஜுவிடம்.
விரேந்தரிடம் விடைபெற்று கொண்டிருந்த ராஜுவைப் பார்த்த ஸ்மிரிதிக்கு அவன் மனிதப்பிறவியாகத் தெரியவில்லை அவன் சொன்னது போல் உயிரனங்களுக்கு உயிரும், உருவமும் கொடுக்கும் அரூபமான உருவமாகத் தெரிந்தான். 

Advertisement