Advertisement

ஸ்மிரிதியின் மனு – 6_2
கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில்  நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி வந்து நின்று கொண்டான். 
மனு நினைத்தது போல் அவள் வாழ்க்கையில் நடக்கவில்லை. அவள் உடைத்ததை அவளைத் தவிர யாரும் பொறுக்கியதில்லை.  அவளின் சினேகிதர்கள் அவளின் செயலுக்கு உடந்தையாக இருந்தபோதும் உடைந்ததைப் பொறுக்க உதவி செய்யாமல் விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்ததும் அவளை விட்டு விலகிப் போயினர்.  விளைவுகளின் துகள்களையும் பொறுக்குவது ஸ்மிரிதியின் பொறுப்பானது தல்ஜித்தின் பீஜி அவர்கள் ஐவர் குழுவில் ஆறாவது நபராக சேரும் வரை. 
அந்த நேரத்தில் மனுவும் அன்று காலையிலிருந்து ஸ்மிரிதியுடன் ஏற்பட்ட வாக்குவாதங்களை நினைத்து பார்த்து கொண்டிருந்தான்.  ஸ்மிரிதியின் மீதும் அவளின் நட்பு வட்டத்தின் மீதும் அவனுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் ஸ்மிரிதிக்காக அவளின் காரையும் அதை மறுபடியும் கோயமுத்தூரிலிருந்து பெங்களூர்  கொண்டு வர ஸ்மிரிதியின் பின்னாடியே அவள் கணவனை சுசித் ரா அனுப்பியது, அதேபோல் அவனின் ஹோட்டல் ஒன்றில் அன்றிரவு ராமிற்காக அறை ஒதுக்க கபீர் ஒப்புகொண்டது அந்த இரண்டு செயல்களுமே ஸ்மிரிதியிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைக் காட்டியது. 
கடந்த பத்து வருடங்களில் அவளிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவன் உறுதியுடன் இருக்க, மஞ்சு நாத்திடம் கண் கலங்கியது, ஜனனியிடமிருந்து ஷாலைப் பிடுங்கியது, ராமிற்காக எடுத்து கொண்ட முயற்சி என்று அனைத்தும் அவனின் உறுதியை உருக வைக்க, அவளின் அந்த மாற்றங்கள் அவனுள் தடுமாற்றத்தை ஏற்படுத்தின.
விமானம் தில்லியில் தரை இறங்கியவுடன் மற்றவர்களுக்காக வெளியே காத்திருப்பதாகச் சொல்லி அவர்களிடம்  விடைபெற்று கொண்டாள் ஸ்மிரிதி. மற்ற நால்வரும் பேகேஜை கலெக்ட் செய்து ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தபோது ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற லிமோ கார் புதிதாக கல்யாணமானவர்களை வரவேற்பதற்காக காத்திருந்தது.  அதில் ராமையும், ஜனனியையும் ஏற்றிவிட்டு அவர்களுடன் அவளுடைய போன் நம்பரை பகிர்ந்துக் கொண்ட போது,
“அக்கா, இது என்ன மூணு கார் சேர்ந்து வந்திருக்கு எங்க இரண்டு பேருக்கு?” என்று கேட்டாள் ஜனனி.
“ஒரு கார்தான்…நீங்க ஸ்பெஷல் ஜோடி அதனால ஸ்பெஷல் வண்டி..ராம்..என் ஜாய் யுவர் ஸ்டே..இங்க ஏர் போர்ட் சிடிலதான் ஹோட்டல் இருக்கு..அஞ்சு நிமிஷத்தில போயிடுவான்….தூன் லேர்ந்து திரும்பி வந்த அப்பறம் மீட் செய்யலாம்..ஒகே.” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள.
ராமும், ஜனனியும் அங்கிருந்து சென்றபின் நாதனிடமும், மனுவிடமும் சொல்லிக் கொள்ளும் போது,
“நீ எப்படி மா போவ வீட்டுக்கு? எங்களை அழைச்சுகிட்டுப் போக மாறன் வந்துகிட்டிருக்கான்..நாங்க உன்னைக் கொண்டுவிடறோம் உன் வீட்டில.” என்றார் நாதன்.
“நான் வீட்டுக்குப் போகல அங்கிள்..நானும் அதே ஹோட்டலுக்குதான் போறேன்.. ஏர்போர்ட் சிடில…வண்டி காத்துகிட்டிருக்கு..வரேன் அங்கிள்..பை மனு.” என்று அவர்கள் எதிரே வந்து நின்ற இன்னொரு வண்டியில் ஏறி கொண்டாள் ஸ்மிரிதி.
அவளுடைய வீட்டிற்குப் போகாமல் நண்பனுடைய ஹோட்டலுக்கு போகும் ஸ்மிரிதியை யோசனையுடன் பார்த்தான் மனு.
“என்ன டா..ஒரே ஹோட்டலுக்கு அவங்க வேற வண்டி..இவ வேற வண்டி.”என்று நாதன் மனுவிடம் கேட்க.
“அது புதுசா கல்யாணமானங்களுக்கு..அவங்க அங்க போயி இறங்கினவுடன ஸ்பெஷல் வரவேற்பு இருக்கும்..இவ அதுல கலந்துக்க முடியாது.” என்றான் மனு.
“தனியா டாக்ஸில போறாளே டா.” என்று கவலையானார் நாதன்.
“இங்க உள்ளதான் இருக்கு ஹோட்டல்..அஞ்சு நிமிஷம்தான்.”
“லேட்டாயிடுச்சே.. டா.” என்று ஸ்மிரிதியின் அப்பாவின் ஸ்தானத்தை அவரை அறியாமல் ஏற்று கொண்டார்.
“கபீர் பார்த்துபான்.” என்றான் மனு.
“ஸ்மிரிதிக்காக ஹோட்டல்ல காத்துகிட்டிருப்பானா?” என்று நாதன் கேட்க,
“கண்டிப்பா காத்திருப்பான்..…அவ கேட்டுகிட்டானு அரைமணி நேரத்தில அத்தனை ஏற்பாடு செய்திருக்கான்..அவ கேட்டா அந்த ஹோட்டலையேக் கூட அவ பெயர்ல எழுதி கொடுத்திடுவான் போல.” என்றான் மனு. மனு யுகித்தது போல் அன்று இரவு ஸ்மிரிதிகாகக் காத்திருந்த கபீர் அவள் சொன்னதைக் கேட்டதும் அவளுக்காக ஒரு புது ஹோட்டலையே வாங்க தயாராக இருந்தான்.
“ அந்த அளவு கிளோஸா?” என்று கேட்டார் நாதன்.
“பார்க்கலையா நீங்க. எவ்வளவு பெரிய காருனு.அவளோட ஒரு போன்ல எல்லாம் நடக்குது.. அவளும், கபீரும் பிரண்டுனு மட்டும் தெரியும்..எத்தனை ஆழமுனு இப்பதான் தெரிஞ்சுது.”
“நீ கபீர மீட் செய்திருக்கியா?” என்று கேட்க
“கபீரோட சிடி ஹோட்டலுக்கு என் கிளையெண்ட்ஸோட போகறச்சே ஸ்மிரிதியையும், அவனையும் பார்த்திருக்கேன்..பேசினதில்ல..கார்மேகம் அங்கிள் ஒருவேளை அவனோட ஹோட்டல்ல காசு போட்டிருக்கலாம்..பொண்ணுக்கு பதினைஞ்சு வயசுல கார் ஓட்ட கத்து கொடுத்து.. அவ ஓட்டி உடைச்ச காருக்குக் காம்பன்ஸேஷன் கொடுக்காம புது கார் வாங்கி கொடுத்தவரு அதுக்கு அப்பறம் அவரு பொண்ணுகாகனு என்னவெல்லாம் செய்திருக்காரோ.” என்றான் மனு.
“கார்மேகம் காசு போடலை டா..கபீரோட ஹோட்டல்ல இருக்கற கடைங்கமூலம் அவளோட சுய உதவி குழு  தயாரிப்பை விக்கறா ஸ்மிரிதி..அதனாலதான் அவன் ஹோட்டலுக்கு போயிகிட்டு இருக்கா.” என்றார் நாதன். 
ஒரு மாலை வேளையில் ஹோட்டலின் பாரை ஓட்டியிருந்த உணவகத்தில்  மனு அமர்ந்திருந்தபோது, ஸ்மிரிதி, தல்ஜித், கபீர் மூவரும் பாரிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். ஹோட்டல் பாரில் ஸ்மிரிதி எந்தப் பொருளை விற்று கொண்டிருக்கிறாள் என்று நாதனைக் கேட்க மனுவிற்கு மனம் வரவில்லை. 
“ஸ்மிரிதி ஸஸ்பெண்ட் ஆன பிறகு நாங்க மூணு பேரும்தான் அவள தில்லிக்கு அழைச்சுகிட்டு வந்தோம்…அந்த சமயத்திலதான்ஆன் ட்டியும் அங்கிளும் பிரிஞ்சிடலாமுனு முடிவு செய்திருந்தாங்க..அதனால ஆன் ட்டி ஸ்மிரிதிய அவங்களோட பெங்களூர் கூட்டிகிட்டு போய் அவங்க வேலைக்குச் சேர போற அதே ஸ்கூல்ல சேர்த்திடலாமுனு நினைச்சாங்க… ஸ்மிரிதிய தனியா அழைச்சுகிட்டு போயி எல்லாத்தையும் எடுத்து சொல்லி டி.சி வாங்கிடலாம் ஸஸ்பென்ஷன் வேணாமுனு சொன்னாங்க ஆனா அவ ஒத்துக்கல..
அன்னிக்கு என்ன நடந்திச்சுனு ஆன் ட்டி எவ்வளவோ கேட்டு பார்த்தாங்க ஸ்மிரிதி வாயத் திறக்கல….அவ திரும்ப அதே ஸ்கூலுக்கு போக விருபப்பட்டா, அதேபோல அங்கிளோட தில்லில இருக்க போறானு சொல்லிட்டா..நாங்க திரும்பி வரும் போது ஆன் ட்டி அழுதிகிட்டு இருந்தாங்க..ஸ்மிரிதி அழுத்தமா இருந்தா..அம்மாக்கும், எனக்கும் அந்த விஷயத்தில தலையிடறது சரியா படல..
அவளுக்குக் கபீர், தல்ஜித்தோட இன்னும் நட்பு இருக்குணுத் தெரியும்..ஆனா கோயமுத்தூர்லதான் சுசித் ராவாடவும் கிளோஸா இருக்கானுத் தெரிஞ்சுது..மெஹக்கோடையும் கிளோஸா இருக்கணும்.” என்றான் மனு.
“நீ சொல்லித்தான் எனக்கு இதெல்லாம் தெரியுது..அந்த நேரத்தில உங்கம்மா கார்மேகத்தைப் பற்றி பேச்சை எடுத்தாலே வேணாமுனு சொல்லிடுவேன்..அதனால அவ என்கிட்ட எதையும் சொல்லல..இப்ப ஸ்மிரிதிய பார்த்தவுடன எனக்கு தோணுது ஒருவேளை அவளுக்காக நான் கார்மேகத்தைப் பார்த்து பேசியிருக்கலாமுனு..
கோயமுத்தூர் போனது பழைய நினைவுகள கிளறிவிட்டிடுச்சு..பிரேமாவோட குடும்பம் ரொம்ப வசதியானவங்க..ஆன்மீகத்தில அதிக ஈடுபாடு..கடவுள் நம்பிக்கை அதிகம்..கட்டுப்பாடு அதிகம்..அதனாலதான் கட்டுபாடில்லாத, கட்டிப்போடற குடும்பமில்லாத கார்மேகத்து மேல பிரேமாவுக்கு விருப்பம் வந்ததோ என்னவோ..ஆனா இரண்டு பேரும் பிரிஞ்சுப் போயிடுவாங்கணு நான் நினைக்கல…முதல்ல அவங்க கல்யாணம் செய்துபாங்கனே நான் நினைக்கவேயில்ல..ஸ்மிரிதிக்காக யோசிச்சு செயல்பட்டிருக்கலாம்.” என்றார் நாதன். 
“ஆன்ட்டி பெங்களூர் போன பிறகு ஸ்மிரிதியப் பற்றி அம்மாவோட பேசிக்கிட்டுதான் இருந்தாங்க ஆனா அம்மா ஸ்மிரிதிய கொஞ்சம் ஒதுக்கிட்டாங்க…கார்மேகம் அங்கிள் திரும்ப கல்யாணம் செய்துகிட்ட உடன ஸ்மிரிதிய பார்த்துக்க சொல்லி பிரேமா ஆன்ட்டி அம்மாகிட்ட கேட்டுகிட்டாங்க ஆனா அதுக்குள்ள ஸ்மிரிதி எல்லார்கிட்டேயிருந்தும் தூரமாப போயிட்டா அந்த சமயம் அவங்க பிரண்ட்ஸோட நெருக்கமாயிட்டா போல.” என்றான் மனு.
“நான் ஒரு வேளை அப்ப தில்லில இருந்திருந்தா பிரேமாவுக்காக இல்லாட்டாலும் ஸ்மிரிதிக்காக ஏதாவது செய்திருப்பேன்..நல்ல பொண்ணாதான் தெரியறா.” என்றார் நாதன்.
“அப்பா, அவ ஆள் ஒரு மாதிரி….ஆபரெட் பண்றது வேற மாதிரி.” என்று ஸ்மிரிதியையும் அவள் வாழ்க்கையையும் ஒரே வரியில் விளக்கினான் வக்கீல்.
“கார்மேகத்தைப் பற்றி கொஞ்சம் தெரியும்…அவ அவங்க அப்பாவைப் போல இல்ல..இன்னிக்கு ராமுக்கும், ஜனனிக்கு செய்த உதவி எந்தப் பலனும் எதிர்பார்க்காம செய்தது..நான் என் கஷ்டத்தை அவகிட்ட சொன்னேன் உடனே எந்த கேள்வியும் கேட்காம அவளால முடிஞ்ச உதவிய செய்தா..நாமளும் நமக்குத் தெரிஞ்ச ஹோட்டல்ல அவங்களுக்கு ரூம் புக் செய்திருக்கலாம்..நீதான் வேணாமுனு சொன்ன.” என்றார் நாதன்.
“நான் சொல்லல பா..ராம் வேணாமுனு சொன்னான்..ஜனனிக்கு வீடு கம்ஃபர்டபிளா இருக்குமுனு நினைச்சான் அதைதான் நான் உங்ககிட்ட சொன்னேன்..இது கபீரோட ஹோட்டலுங்கறதுனாலதான் நானும் ஒத்துகிட்டேன்..ஸ்மிரிதி சொன்ன மாதிரி எல்லாம் பிரண்ட்லி ஏற்பாடு.” என்றான் மனு.
“நீ சொல்றது போல அவ வேற லெவல்லதான் வேலை செய்யறா.” என்று மனுவின் கூற்றை ஆமோதித்தார் நாதன்.
அப்போது மாறன் அவர்கள் முன் வண்டியைப் பார்க் செய்ய, மனு முன்புறமும், நாதன் பின்புறமும் ஏறிக்கொண்டனர்.
“என்ன டா லேட்டா வர?” என்று நாதன் கேட்க,
“என்னைக் கேட்காதீங்க..அம்மாக்கு போன் போட்டுக் கேளுங்க.” என்று பதில் கொடுத்தான் மாறன்.
“நீ லேட்டா வந்ததுக்கும் அவளுக்கும் என்னடா சம்மந்தம்?” என்று நாதன் கேட்க,
“இரண்டு மணி நேரமா போன்ல நச்சரிச்சுட்டாங்க..அவங்ககிட்ட சொல்லாம எப்படி ப்ரோகரம மாத்தினீங்க..எனக்கு போன்ல ராம வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போயி இதை செய், அதை செய்யுனு ஒரே அறிவுரை..அவன் நம்ம வீட்டுக்கு நாலு நாள் கழிச்சு வரும்போது நீங்களே செய்திடுங்கனு பதில் சொன்னேன்..அப்பதான் அவங்களுக்குப்  ஹோட்டல் போகறது பற்றி தெரிஞ்சிச்சு..
அதுக்கு அப்பறம் ஒரே சவுண்ட் அவங்ககிட்ட சொல்லவேயில்லைனு..உங்களைத்தான் போன் போட்டு திட்டணுமுனு நினைச்சுகிட்டிருந்தாங்க ஆனா நான்தான் அவங்க போன் போட்டு பேச முடியாத ஆளப் போட்டுக் கொடுத்து உங்களைக் காப்பாத்தி விட்டிருக்கேன்.” என்று நாதனைச் சிவகாமியிடமிருந்து காப்பாற்றியைதைப் பற்றி பெருமையாகப் பேசினான் மாறன்.
“டேய் மனுவ மாட்டி விட்டிட்டியா?” என்று நாதன் கேட்க,
“மனுகிட்ட பேச என்னப்பா பயம் அம்மாக்கு..அவன் பெயரைச் சொல்லியிருந்தா பிளேன்ல இல்ல அவன் டிரெக்டா தில்லில லண்டாகியிருப்பான்…அம்மா அவ்வளவு ஃபார்ம்ல இருந்தாங்க.” என்றான் மாறன்.
“யாரடா மாட்டி விட்ட? ராமையா?” என்று நாதன் கேட்க.
“அவனை ஏதாவது கேட்டா அவன் அவங்கம்மாவதான்  காரணமாக்குவான்..இது வேற ஆளு..யாருனு தெரியலையா? “ என்று மாறன் கேள்வியைத் திருப்ப, 
அதுவரை அவர்கள் உரையாடலில் தலையிடாமல் வந்த மனு பொறுக்க முடியாமல், “ஸ்மிரிதி பா.” என்றான்.
“வக்கீல் கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சிட்டான்.” என்று பாராட்டினான் மாறன்.
“ஏன் டா உங்கம்மாவால அவளைக் கேள்வி கேட்க முடியாதா? பிரேமா பொண்ணுதான அவ..ராம் எப்படியோ அதேபோல தான் அவளும்.” என்று சிவகாமியின் சக்தியை சந்தேகப்பட்ட அவர் மகன்களுக்கு  அவர் மனைவியின் சக்தியை உணர்த்த முயன்றார்.
“ஸ்மிரிதிகிட்ட அதெல்லாம் நடக்காது..அவ ஏதாவது ஏடாகூடமா பதில் சொல்லுவா..அதுவும் இது அம்மா சொதப்பினது அதனால வாய மூடிக்கிட்டாங்க மேல எதுவும் விசாரிக்கல.” என்றான் மாறன்.
“நானும் ஒத்துக்கறேன்..அவளால வந்ததுதான் இத்தனையும்.” என்று மனைவியைக் கைவிட்டுவிட்டு மாறனுடன் சேர்ந்து கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி அவங்களுக்கு எந்த ஹோட்டல்ல புக் செய்திருக்கா?” என்று கேட்டான் மாறன்.
“இங்க ஏர்போர்ட் சிடில இருக்கற கபீரோட ஹோட்டல்.” என்றான் மனு.
“அவ எப்படி வீட்டுக்குப் போனா?” என்று மாறன் அக்கறையுடன் விசாரிக்க,
“அவ வீட்டுக்குப் போகல டா…அதே ஹோட்டலுக்குதான் போயிருக்கா.. அவளும் இன்னிக்கு நைட் ஹோட்டல்லதான் தங்க போறானு எனக்கு தெரிஞ்சிருந்தா எல்லாரையும் நம்ம வீட்டுக்கேக் கூட்டிகிட்டு போயிருப்பேன்.” என்று ஸ்மிரிதியை அந்நியமாக நினைக்காமல் அவள் மேல் கொண்ட அக்கறையில் அவர் குடும்பத்தில் ஒருத்தியாக அவரை அறியாமலையே அப்ரூவ் செய்தார் முன்னாள் ஐஏஸ் அதிகாரி தில்லை நாதன்.

Advertisement