Advertisement

ஸ்மிரிதியின் மனு – 6_1
“மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி,
“நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.” என்று கேட்டாள்.
பெண்கள் இருவரும் பாத் ரூம் சென்று வந்த பின் ராமின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஜானு.  அதே இடத்தில் ஸ்மிரிதியின் வருகைக்காக வக்கீல் காத்து கொண்டிருக்க, வக்கீலுக்கு வாதிட வாய்ப்பளிக்க விரும்பாத ஸ்மிரிதி அவன் வாயைத் திறக்கமுடியாத இடத்தில், அவனுடைய அப்பா நாதனுகருகே, அவன் முன்பு அமர்ந்திருந்த அதே சேரில் போய் அமர்ந்து கொண்டாள்.
ஸ்மிரிதியின் அந்தச் செய்கையை மனு எதிர்பார்க்கவில்லை.  அவனருகே வந்து உட்காராமல் நாதன் அருகே சென்று அமர்ந்ததின் காரணத்தைப் புரிந்து கொண்ட மனுவும் அவன் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.   வாதி, பிரதிவாதியை மட்டும் அறிந்திருந்த வக்கீலை அன்று அவளின் சாதாரண செய்கையில் செக் மேட் செய்து அரசியல்வாதி ஸ்மிரிதியை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“என்ன மா வெறும் ஒரு பை மட்டும்தான் கொண்டுகிட்டு வந்தியா?” என்று ஸ்மிரிதியுடன் பேச்சை ஆரம்பித்தார் நாதன்.
“ஓண்ணுமே கொண்டு வரல..ஒரு நாளைக்குனு பெங்களூர் வந்தேன்..அப்பறம் அம்மா கல்யாணத்துக்கு வர ஆசைப்பட்டாங்க அதனால என் பிரண்ட் கிட்ட வண்டி வாங்கிட்டு..அவ கடைலையே இரண்டு டிரஸ்ஸும் வாங்கிகிட்டேன்..இன்னிக்கு கல்யாணத்துக்கு ஒரு புடவை..இப்ப டிரவால் செய்ய கஷீவல் டிரெஸ்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன் இப்படி புறப்பட்டு வந்தீங்க? பிளான் செய்திருக்கலாமே..உங்கம்மா வரமாட்டாங்கனு சொன்னதாலதான் நாங்களே அவங்களுக்கும் சேர்த்து கிஃப்ட் வாங்கினோம்..முன்னாடியே சொல்லியிருந்தா ஒரே ஹோட்டல்லகூட தங்கியிருக்கலாம்.”
“எனக்கு என் பிரண்ட் சுசித் ரா கடைல வேலை இருந்திச்சு அங்கிள்..நான் ஜெய்ப்பூர், உதய்பூர் பக்கத்தில இருக்கற பெண்கள் சுயஉதவி குழுவுக்கு அவங்களோட தயாரிப்பை வெளில விக்க உதவி செய்யறேன்..
ராஜஸ்தானுக்கு டூரிஸ்ட் நிறைய பேர் வராங்க ஆனா எல்லாருக்கும் சரியான தகவல் கிடைக்கறதில்ல..கடைத்தெருவுல இருக்கற கடைங்களுக்குதான் ஆதரவு கிடைக்குது கொஞ்சம் தள்ளி இருந்தாலும் கைடோட தயவு தேவைப்படுது..எல்லாத்துக்கும் தனி தனி கமிஷன்..அதெல்லாம் உடைக்க டயமெடுக்கும் அதுவரைக்கும் அவங்க வாழ்க்கை அவங்களுக்காக காத்திருக்காது அதனால அவங்க தயாரிக்கற கைவினைப் பொருட்கள பொடிக், பெரிய ஹோட்டல்ல விக்க ஏற்பாடு செய்திருக்கேன்.. 
கிட்டதட்ட  இரண்டு வருஷமா சுசித் ரா கடைலையும்,  என் பிரண்ட் கபீரோட எல்லா ஹோட்டலையும் அந்தப் பொருட்களை விக்கறாங்க..அவங்க ஊர்ல விற்கறதுதான் அவங்களுக்கு நல்லது ஆனா அந்த ஊரிலையேக் கடைப் போட ஏகப்பட்ட தடைகள்..ஊர்காரங்க எங்களுக்கு உதவி செய்யாம ஊழல் செய்யறாங்க.” என்று அவள் செய்து கொண்டிருக்கும் முயற்சியில் ஏற்படும் பிரச்சனைகளை நாதனிடம் பகிர்ந்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
“இது எல்லா இடத்திலையும் பரவி கிடக்கு..மக்களுக்கு உதவறதுக்காக உருவாக்கின அமைப்புகள் எல்லாம் உபத்திரவம்தான் செய்யறாங்க..கஷ்டத்திலக் கை கொடுக்காத எதையும் ஆதரிக்கக்கூடாது..கை விட்டிடணும்.” என்றார்.
“அப்படி பார்த்தா நம்ம அரசியல் அமைப்பையேக் கை விடணும்..மக்கள் கஷ்டத்தை யார் சரிப் படுத்தறாங்க..எல்லாம் அவங்க அவங்க சுய நலத்துக்கு செய்லபடறாங்க..நான் என்னால, எனக்கு தெரிஞ்ச வழில உதவறேன்..மனுஷனாப் பிறந்த எல்லாரும் செய்யக்கூடிய ஒரே செயல் இன்னொரு மனுஷன் பட்ற கஷ்டத்தை தீர்க்க முடியுமுனா அந்த நொடில எதையும் யோசிக்காம செயல் பட்டு உதவணும்.” என்று அவளின் அடிப்படையை அவருக்கு உணர்த்தினாள்.
“நீ சொல்றபடி, எதிர்பார்க்கறபடி நாம எல்லாரும் வாழ்ந்தோமுனா நமக்கு அரசாங்கமே தேவைப்படாது..ஒருதருக்கு ஒருத்தர் உதவியா இருக்கறச்சே நடுவில அரசு எதுக்கு..உங்க அப்பா மாதிரி ஆளுங்களுக்கும் வேலை இருக்காது..நீ உன் வழில போனினா உங்கப்பாதான் முதல்ல பலியாவரு உன் கொள்கைக்கு.” என்றார் நாதன்.
“ஆகட்டும் அங்கிள்..நம்ம எல்லாருக்கும் ஒரு நாள் அது நடக்கதான் போகுது..நமக்கு அடுத்து யாராவது வருவாங்க..நம்மைவிட நாம செய்த அதே வேலைய நல்லா செய்யலாம்..நான் இல்லைனா இன்னொருத்தர் எங்கப்பாவோட வேலைக்கு வேட்டு வைப்பாங்க..இன்னிக்கு நீங்க ரிடையர் ஆயிட்டீங்க..நீங்க செய்த அதே வேலைய இப்ப வேற யாரோ நல்லா செய்துகிட்டு இல்லையா?” என்று கேட்டாள்.
“நல்லவேளை உன் ஆன்ட்டி இங்க இல்ல..அவ இதையேதான் நான் வேலைல இருக்கறச்சே சொல்லுவா..நான் செய்யாட்டா வேற யாராவது செய்வாங்கனு..எனக்கு அதை ஒத்துக்க முடியல..நாங்க இரண்டு பேரும் சில விஷயத்தில வேற வேற..உன் ஆன்ட்டி இப்ப திடீர்னு உங்கம்மாவோடையும், புவனாவோடையும் தங்க முடிவெடுத்திட்டா..நான் வேணாமுனு சொல்லியும் கேட்கல..
நீ என்னமோ உன் ஆன்ட்டி என் ஆட்சிக்கு கீழனு சொல்ற..உண்மையில அவ கீழதான் நாங்க எல்லாரும்..இந்தப் புது கல்யாண ஜோடிய வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போகறச்சே அவ வந்திருக்கணுமில்ல..நாங்க மூணு பேரும் ரொம்ப வருஷம் கழிச்சு சேர்ந்து இருக்கப் போறோம்..அதுவும் புவனாவோட அவ வீட்லதான் இருக்க போறோம்..ராம் புரிஞ்சுப்பான்..அவன் ஊருக்கு திரும்பும் போது எப்படியும் நம்ம வீட்ல இருந்திட்டுதான் போவான்..அப்ப அவன நல்லா கவனிச்சுக்கறேனு சொல்றா..என்னவோ போனு நானும் விட்டிட்டேன்..
இந்த மூணு சினேகிதிகளும் திடீர் முடிவா எடுத்து என்னைப் பிரச்சனைல மாட்டிவிட்டுட்டாங்க…இன்னிக்கு காலைல கல்யாணமாகியிருக்கு..இன்னிக்கு இராத்திரி நம்ம வீட்டுக்கு வராங்க..ராம் புரிஞ்சுகிட்டாலும் அந்த பொண்ணு என்ன புரிஞ்சுகிச்சுனு கொஞ்சம் வருஷம் போன அப்பறம்தான் தெரியும்..உன் ஆன் ட்டிக்கு அறிவே இல்ல.” என்று மனுவின் அப்பா நாதன்தான் என்று நிரூபித்தார்.
அன்றைய இரவு ராமும், ஜனனியும் நாதனின் வீட்டிற்குதான் போக போகிறார்கள் என்று அப்போதுதான் ஸ்மிரிதிகேத் தெரிய வந்தது. கல்யாண ஜோடி எப்போது, எப்படி தெஹராதூன் போக போகிறார்கள் என்று ஜனனியிடம் அவள் விசாரிக்கவில்லை. அவள் ஊர் என்று மனு சொன்னதும் அவன் தெஹராதூன் பற்றிதான் சொல்கிறான் என்று அவள் புரிந்து கொண்டாள்.   பிரேமாவைக் கல்யாணத்திற்கு அழைத்துவர வேண்டும் என்று நேற்று அவள் எடுத்த திடீர் முடிவு அடுக்கடுகாக எத்தனை திடீர் முடிவுகளை ஏற்படுத்தி இன்று அந்த கல்யாண ஜோடியையும், நாதனையும் பாதித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் ஸ்மிரிதி ஒரு முடிவுக்கு வந்தாள்.
“அங்கிள்..என்கிட்ட விடுங்க..அவங்களுக்கு மறக்கமுடியாத இரவா இதை மாத்திடறேன்..என்ன சொல்றீங்க? உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்டாள்.
“இப்ப நான் இருக்கற சஞ்சலத்திலேர்ந்து என்னை விடுதலை செய்திடு..மனுவுக்கும், மாறனுக்கும் இதெல்லாம் புரிய மாட்டேங்குது..சின்னவன் நம்ம வீடுதானே அழைச்சுகிட்டு வாங்கனு சொல்றான்..பெரியவன் ராமுக்கு தில்லி தெரியாது வெளிய தங்க வைச்சா நல்லா இருக்காதுங்கறான்..இவங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா அந்தப் புது பொண்ணு பாவமில்ல..அந்த பொண்ணுக்கு இன்னிக்கு எல்லா இடமுமே புதுசாதான் தெரியும்..ஹோட்டலா இருந்தாலும் சரி..நம்ம வீடா இருந்தாலும் சரி.” என்று ஜனனிக்காக பரிதாபப்பட்டார் நாதன்.
“அங்கிள்..நான் என் பிரண்ட் கபீருக்கு சொல்லிடறேன்..அவன் ஹோட்டல்ல அவங்க இரண்டு பேருக்கும் இன்னி நைட் ஹனிமூன் ஸுவிட் ஏற்பாடு செய்திடுவான்..ஏர்போர்ட்ல பிக் அப் செய்ய கார் அனுப்புவான்..நாளைக்கு அவங்கள எங்க கொண்டு விடணுமோ அதை அவனே பார்த்துபான்..எல்லாம் என்னோட பொறுப்பு..அவனுக்கு இரண்டு ஹோட்டல் இருக்கு..ஒண்ணு சிடில இன்னொண்ணு ஏர்போர்ட் சிடில.” என்று ஹோட்டலின் பெயரைச் சொன்னாள் ஸ்மிரிதி.
அவள் ஹோட்டலின் பெயரைச் சொன்னவுடன் அந்த ஹோட்டல்கள் மேல் தட்டு மக்கள் செல்லும் இடம் என்பதால் அது எப்படி ராமிற்கு சரிப்படும் என்று அவர் யோசித்து கொண்டிருக்க,
“செலவு பற்றி கவலை வேணாம்..கபீர் என் பிரண்ட்..ராமும் என்னோட பிரண்ட்..ஸோ எல்லாமே பிரண்டிலியான ஏற்பாடு.” என்று நாதனுக்கு தெளிவுப்படுத்தினாள்.
நாதனுக்கு ஸ்மிரிதியின் ஆலோசனைப் பிடித்திருந்தாலும் மனுவும், ராமும் என்ன சொல்லக்கூடம் என்று தயங்கிக் கொண்டிருந்தார்.
என்ன கபீர்கிட்ட பேசட்டுமா?” என்று அவரின் அனுமதியை கோரினாள் ஸ்மிரிதி.
  
‘மனுவும், ராமும் ஒத்துக்கணுமே.” என்றார் நாதன்.
“நீங்களே அவங்கிட்ட கேளுங்க..கன்ஃபரம் செய்த பிறகு கபீருக்குப் போன் பேசறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
உடனே மனுவையும், ராமையும் அவரருகே அழைத்த நாதன்,  அவர்களிடம் ஸ்மிரிதியின் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.  ஆண்கள் இருவரும் வாயைத் திறக்கு முன், அவள் போனைப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதி, தலையை நிமிர்த்தாமல் மூன்றே வார்த்தைகளால் அந்த இரண்டு ஆண்களின் வாயை அடைத்தாள்.
“ஹனிமூன் ஸ்பேஷல் ஸுவிட் (suite).” என்று அவள் சொன்னவுடன் மனு, ராம் இருவருக்கும் அதை மறுக்க மனம் வரவில்லை.
ராம் பதில் சொல்லுமுன் மனுவே “சரி..ஏற்பாடு செய்திடு.” என்று ஸ்மிரிதிக்கு அனுமதி அளித்தான். அதற்குபின் ஃபிளைட்டில் ஏறும்வரை ஸ்மிரிதி அவள் போனுடன் தான் பேசிக் கொண்டிருந்தாள். மற்ற நால்வரும் ஒரே வரிசையில் அமர ஸ்மிரிதி மட்டும் தனியாகக் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டாள்.
அந்தப் பயணத்தில் விமானத்திற்குள் ஏற்பட்ட காற்று கொந்தளிப்பைவிட அதில் பயணம் செய்த இருவரின் மனக் கொந்தளிப்பு அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரின் மனமும் மூவாயிரத்தி சொச்ச நாட்கள் பின்னோக்கி பயணம் செய்ய அவர்களின் உடல்கள் மட்டும் முப்பாதயிரம் அடி உயரத்தில் பயணம் செய்தது. 
அனாதையாகப் பிறந்து வளர்ந்த கார்மேகம் அவரின் ஒரே மகள் ஸ்மிரிதியை அவரின் வளர்ந்த கொண்டிருந்த அரசியல் அந்தஸ்திற்கேற்ப தெஹரதூன் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பிலையே ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்.  வாடகை வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த கார் மேகம், வாழ்வதற்கு சொந்தமாக வீடும், ஓட்டுவதற்க்கு சொந்தக் காரும் வாங்கும் அளவிற்கு முன்னேறினார் ஆனால் அதே நேரத்தில் அவரின் இல்லற வாழ்க்கையில் பின் தங்கிப் போனார்.
ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும் வீட்டிற்கு வந்து போயி கொண்டிருந்த ஸ்மிரிதி அவளது ஒன்பதாவது வகுப்பிலிருந்து பள்ளி விடுமுறைகளை அவள் வீட்டிலும்  அவளுடன் படித்த தோழிகளின் வீட்டிலும் கழிக்க ஆரம்பித்தாள். அவள் தில்லியில் கழித்த விடுமுறைகளில் கார்மேகத்தின் கார்களின் மீது பைத்தியமானாள்.  
பதினாலு வயதில் மகளின் கார் ஓட்டும் ஆசையைக் கண்டிக்காமல் அவள் விருப்பத்திற்கு வளைந்து அவளுக்குக் கார் ஓட்ட கற்று கொடுக்க ஏற்பாடு செய்தார் கார்மேகம்.  பிரேமா அதற்கு தடை விதித்த போதும் அவரைப் பொருட்படுத்தாமல் ஸ்மிரிதி கார் ஓட்டுவதிலும் கார்மேகம் ஓட்ட கற்று கொடுப்பதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார் கார்மேகம், ஸ்மிரிதி தனியாக கார் ஓட்டுவதற்கு அவர் தடை விதித்திருந்தார்.  அதனால் கார்மேகம் ஊரில் இல்லாத நாட்களில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களில் காலை முதல் மாலை வரை பெடல்களின், கியர்களின் செயல்பாட்டைப் பழகிக் கொண்டாள் ஸ்மிரிதி.      
பிரேமாவும், கார்மேகமும் அவர்கள்  மணவாழ்க்கை போகும் பாதையை மாற்ற முடியாமல் பயணம் செய்து கொண்டிருந்ததில் அவர்கள் மகளின் வாழ்க்கைப் போகும் பாதையைப் பார்க்கத் தவறினர். கார்மேகத்துடனான உறவைப் பற்றி கவலைப்பட்டு கொண்டிருந்த பிரேமா அவர்களின்  சண்டைகள், சச்சரவுகள் ஸ்மிரிதியையும் பாதிக்கறது என்பதை உணரவில்லை. வீட்டின் சூழ் நிலையிலிருந்து விலகி இருக்க நினைத்த ஸ்மிரிதி அவள் சினேகிதர்களோடு சேர்ந்து கொண்டாள். அவர்கள் இருவரின் பிரச்சனையில் ஸ்மிரிதியின் சினேகிததையும், அவர்கள் பழக்க வழக்கத்தையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை பிரேமாவும், கார்மேகமும். 
பெங்களூரில் நவீன மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவ தம்பதியரின் மகள் சுசித்ரா, ஹிந்தி சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த முன்னாள் கதாநாயகியின் மகள் மெஹக், பஞ்சாபில் ஆரம்பப் பள்ளியில் ஆரம்பித்து பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை மக்களின்  தேவையை சேவை என்ற பெயரில் செய்து வந்த குடும்பத்தை சேர்ந்த தல்ஜித், தில்லியைத் தலைமையிடமாக கொண்ட பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வாரிசான கபீர் என்று பலமான, வளமான குடும்பப் பின்னனிக் கொண்டவர்கள் ஸ்மிரிதியின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வட்டத்தில் நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்ககூடிய அரசியல்வாதியின் வாரிசாக ஸ்மிரிதியை ஏற்று கொண்டனர் அந்த நால்வரும்.
மூன்று பெண்களையும், இரண்டு ஆண்களையும் கொண்ட அந்தக் குழுவிலிருந்த ஒவ்வொரும் ஒவ்வொரு விதம்.  அழகே உருவான மெஹக், அறிவே உருவான சுசித் ரா, அன்பே உருவான தல்ஜித், அவ நம்பிக்கையே உருவான கபீர், அறிவும், ஆளுமையும் ஒன்று சேர்ந்த ஸ்மிரிதி.  
அழகே உருவான மெஹக் கருமை நிறத்திலிருந்த ஸ்மிரிதியிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்.  அறிவே உருவான சுசித் ரா அவளைவிட அறிவாளியான ஸ்மிரிதியை அருகில்கூட சேர்க்கவில்லை. அங்கீகாரத்தை தேடிக் கொண்டிருந்த கபீருக்கு ஸ்மிரிதியைப் பற்றி எந்த அபிப்பிராயமும் ஏற்படவில்லை. அன்பே உருவான தல்ஜித் மட்டும் ஸ்மிரிதியுடன் நட்பு கொண்டிருந்தான். அவளிடம் அவர்கள் சகஜமாகாப் பழகாவிட்டாலும் அந்த நால்வரும் அவள் நட்பை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை.
அவர்கள் ஒன்பதாவது வகுப்பில் நுழைந்தபோது அதுவரை நன்றாகப் படித்து வந்த ஸ்மிரிதி திடீரென்று படிப்பில் பின் தங்கிப்போனாள்.  அனைவரையும் ஆளுமையுடன் ஆண்டு வந்த அடங்காத ஸ்மிரிதி ஒரு கூட்டுக்குள் அடங்கிப்போனாள். அவ்வப்போது அவளுடன் பழகி வந்த தல்ஜிதான் ஸ்மிரிதியின் அந்த மாற்றத்தைக் கவனித்தான்.  அவளின் மாற்றத்திற்குக் காரணம் அவளின் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள்தான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.
மெஹக், சுசித் ராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தல்ஜித்தையும், கபீரையும் மற்ற மாணவர்கள் கேலி பேசுவதும் அவர்களுடன் சண்டையிடுவதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தது.  அவர்கள் நட்பு வட்டத்தில் ஸ்மிரிதி வந்தவுடன் அந்த விதமான சண்டைகள் அதிகரித்தன. ஸ்மிரிதியின் தனித்தன்மையால் அவளுக்கு ஏற்கனவே பல மாணவ, மாணவிகளுடன் பிரச்சனைகள் இருக்க, அவர்கள் ஐவரும் ஒரு குழுவான போது, அவர்களை மற்ற மாணவர்களும் மற்ற மாணவர்கள் அவர்களையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பழித் தீர்த்து கொண்டிருந்தனர். அதுவரை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று இருபாலரும் சமமாக இருந்த அந்தக் குழுவில் ஐந்தாவதாக ஸ்மிரிதி அவர்கள் பால் (pal) ஆனபோது அந்தக் குழு பலவின்பாலானது.
நட்பு வட்டமே இல்லாமல் இருந்த ஸ்மிரிதிக்கு அந்த  நால்வரின் நட்பு புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.  அதே பள்ளியில் ஆறாவதிலிருந்து படித்து வந்ததால் அங்கே பயின்று வந்த மாணவர்களின் பழக்க வழக்கங்களை அவள் அறிந்திருந்தாள். அவளுக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த பழக்கங்கள் அந்த நால்வருக்கு இருந்தபோதும் அவர்களுடன் நட்பு கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அந்த நட்பு வட்டத்திற்குள் அவ்வப்போது வந்து போயி கொண்டிருந்த ஸ்மிரிதியும் அவர்களின் நல்ல பழக்கத்தை அவளுடையாதாக்கிக் கொண்டாள்.

Advertisement