Advertisement

ஸ்மிரிதியின் மனு – 59
மாமாஜி சென்றவுடன்,”பணம் ரெடியாயிருக்கு இல்லே..அதைக்  கொடுத்து விகாஸ்கிட்டேயிருந்து விவரத்தை வாங்கினா என்ன தப்பு? நம்மகிட்ட இப்ப தீவிரமா விசாரிக்க, விசாரணை செய்ய எங்கே நேரமிருக்கு?” என்று ஸ்மிரிதியைக் கோபமாகக் கேட்டான் மனு.
“நீ சொன்ன மாதிரி நம்ம பணத்தை வாங்கிகிட்டு அவன் கொடுக்கற தகவல் தப்பாயிருந்திச்சுண்ணா?”
“இப்ப அந்த ரிஸ்க் எடுத்துகிட்டுதான் ஆகணும்.”
“ஏற்கனவே ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்..முதல்லே இரயில்வே ஸ்டேஷனுக்குதான் ஆளுங்களை அனுப்பியிருக்கணும்..அவனை வண்டிலே ரோட் வழியா அழைச்சுகிட்டு போவாங்கண்ணு நினைச்சிட்டேன்….அவன் காணாம போன அரைமணி நேரத்திலேயே எல்லா ரோடையும் செக் செய்ய ஆள் அனுப்பிட்டேன்..இரயில் பற்றி யோசிக்கவேயில்லை..
அதனாலே இப்ப எந்த ரிஸ்கும் எடுக்கற நிலைலே நான் இல்லே..விகாஸ்கிட்டேயிருந்து உண்மை மட்டும்தான் வரணும்..அதுக்குதான் அவன்கிட்டே நானே பேசினேன்..உயிர் பயமிருந்தாதான் உண்மை மட்டும் வெளியே வரும்..
மாமாஜி முதல்லே என்ன பேசினாங்கண்ணு கேட்டேயில்லே மனு..எங்கப்பாக்கு நடந்ததுக்கும் அவங்களுக்கும் சம்மந்தமில்லேன்னு சொன்னாரு..இவங்களைப் பற்றி எனக்குத் தெரியும்..அதான் அந்த டிரைவரை விசாரிக்கலாம்னு விரேந்தர் சொன்ன போது வேணாம்னு மறுத்திட்டேன்..
மாமாஜிகிட்ட அவனோட ஃபோட்டோவைக் காட்டறத்துக்கு முன்னாடி கீதிகாகிட்ட காட்டி அவந்தானான்னு கன்ஃபர்ம்  செய்துகிட்டேன்..ஆனாலும் அவங்க ஆளுங்கதான் காரணம்னு அவரு ஒத்துக்கலே..விகாஸ் பேரம் பேசினவுடனேயே மாமாஜியும் அவர் மாப்பிள்ளையைப் பற்றி தெரிஞ்சுகிட்டாரு…
இத்தனை வருஷமா மனிஷ் கிட்ட யாராலேயும் வர முடியலே..ஸப்னா கல்யாணத்து மூலம் வாய்ப்பு ஏற்படுத்திகிட்டு இருக்காங்க..சமீப காலமா அப்பா எல்லாத்திலேர்ந்தும் விலகி போயிட்டாருண்ணு தப்பு கணக்கு போட்டு அவர் மேலே கை வைச்சிட்டாங்க..என்னைப் பற்றி அவங்க யாருமே யோசிக்கலே..இப்ப என்னைப் பற்றின யோசனை விகாஸ்கிட்டேயிருந்து ஆரம்பிக்கும்..
பவர், பணம்..இது இரண்டு மட்டும்தான் அந்தக் கூட்டத்துக்குப் புரியும்..விகாஸ் குடும்பத்தோட அரசியல் செல்வாக்கைப் பார்த்துதான் மாமாஜி அவனை மாப்பிள்ளை ஆக்கினாரு….அவன் எதுக்காக அவங்க மாப்பிள்ளையானான்னு இப்ப புரிஞ்சிருக்கும்..
மாப்பிள்ளையைக் காட்டி கொடுத்தவரே..காப்பாற்றவும் செய்வாரு..அதோட இந்தக் கணக்கை சரி செய்ய பார்பாரு..அவங்க வீட்டுக்குப் போனவுடனே மாமாஜி எனக்கு ஃபோன் செய்வாரு..மாப்பிள்ளை சொன்ன உண்மைகளை என்கிட்ட சொல்லுவாரு.” என்றாள்.
“அப்பாக்கு என்ன பதில் சொல்றது?” என்று கேட்டான் மாறன்.
“போலீஸுக்குப் போகறதை கீதிகாவும் விரும்பலே..அதனாலே என் பதிலும் அதேதான்.” என்றாள் ஸ்மிரிதி.
அப்போது ஸ்மிரிதியின் ஃபோன் அழைத்தது.  அவள் எதிர்பார்த்தது போல் மாமா ஜி தான். அவரை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு,
“சொல்லுங்க.” என்றாள்.
“பேட்டா..மனிஷ் இங்கே” என்று முடிக்குமுன்,
“தான் இருக்காண்ணு தெரியும் மாமா ஜி..மேலே சொல்லுங்க.”
“இங்கேயிருந்து போயிட்டா அவன் திரும்ப..” என்று வாக்கியத்தை முடிக்காமல் தயங்க,”சொல்லுங்க” என்று ஊக்குவித்தாள் ஸ்மிரிதி, ஆனால் அவரால் அந்த வார்த்தையை சொல்ல முடியவில்லை அதனால் “கிடைக்க மாட்டான்.” என்று முடித்தார் மாமா ஜி.
“நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த ஸ்மிரிதி உடனே அவசரமாக எழுந்து வாஷ் ரூமிற்கு சென்றாள்.
“அந்த ஆள் என்ன விவரம் கொடுத்தான்..ஒண்ணுமே சொல்லலே…டயம் வேஸ்ட் செய்திட்டாரு.” என்று மனுவிடம் ஆதங்கத்துடன் சொன்னான் மாறன்.  மனுவும் அதே மன நிலையில் தான் இருந்தான்.  அப்போது அவள் முகத்தை துடைத்தபடி வந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“என்ன பண்ணுது உனக்கு?” என்று கேட்டான் மனு.
அதற்கு ஸ்மிரிதியிடம் பதிலில்லை. அவளுக்கு என்ன பண்ணுகிறது என்று அவளுக்கேத் தெரியவில்லை.  அதனால்,
“மனு, மனிஷ் கிடைச்ச பிறகு அவனை இங்கே வைச்சிருக்க முடியாது.”  என்று மனுவின் கேள்விக்கு, அவர்கள் சூழ் நிலைக்கு சற்றும் சம்மந்தமில்லாத அவள் பதிலில் அண்ணன், தம்பி இருவரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர்.
“நீ என்ன பேசறேண்ணு தெரிஞ்சுதான் பேசறியா? அவன் கிடைச்ச பிறகு..அதைப் பற்றி இப்ப எப்படி பேச முடியும்?..மாமா ஜி அவன் இங்கதான் இருக்காண்ணு சொன்னாரு..ஆனா எங்கே, எப்படி இருக்காண்ணு சொல்லலே..இன்னும் கொஞ்ச நேரத்திலே இருட்ட போகுது” என்று கோபப்பட்டான் மனு.
“முக்கியமான விஷயத்தை சொல்லாமலேயே சொல்லிட்டாரு..அதான் அவன் கிடைச்ச பிறகு என்ன செய்யணும்ங்கறதை இப்பவே யோசிக்கறேன்.”
“சொல்லாம என்ன சொன்னாரு?” என்று மாறன் கேட்க,
“அவன் திரும்ப அப்படின்னு சொல்லிட்டு மாமாஜி கொஞ்ச தயக்கத்துக்கு அப்பறம் கிடைக்க மாட்டாண்ணு சொன்னாரு..நடுவுலே “உயிரோட” வார்த்தையை அவர் சொல்லலே..நான் புரிஞ்சுகிட்டேன்..அப்பா இப்படி இருக்கும் போது மனிஷை தில்லிலே வைச்சுக்க முடியாது.” என்றாள்.
“உங்கப்பா இப்படி இருக்கும்போது அவனை எங்கே அனுப்ப முடியும்? எத்தனை நாளைக்கு? கீதிகாவையும், அவனையும் மட்டும் அனுப்பி வைக்க போறியா? உங்கப்பாவை இந்த நிலைலே விட்டிட்டு அவங்க போவாங்களா? அவனை இங்கதான் வைச்சிருக்கணும்..நாமதான் பார்த்துக்கணும்.” என்றான் மனு.
“என்னாலே முடியாது…வேற யோசி.” என்றாள்.
அதுவரை அவர்கள் இருவரின் உரையாடலில் தலையிடாமல் இருந்த மாறன்,”மனிஷ் கிடைக்கட்டும்..அவன் பத்தாவது பரீட்சையை எழுதி முடிக்கட்டும்..அதுக்கு அப்பறம் அவனை அம்மா, அப்பாவோட கோயமுத்தூர் அனுப்பிடலாம்..ஊட்டிலே போர்டிங் ஸ்கூல்லே சேர்த்திடலாம்..ஒரு வருஷம் போலே என் படிப்புக்காக நானும் கோயமுத்தூர்லே இருப்பேன்..நான் அவனைப் பார்த்துக்கறேன்…அங்கிளோட ரெகவரியைப் பார்த்துகிட்டு அவன் எதிர்காலத்தைப் பற்றி, தில்லி திரும்பி வர்றதைப் பற்றி முடிவெடுக்கலாம்.” என்றான்.
“கீதிகாகிட்ட இதைப் பற்றி பேசறேன் மாறன்.” என்ற சொன்ன ஸ்மிரிதி அடுத்த சில நிமிடங்கள் அமைதியாக சோபாவில் அமர்ந்து டிரைவரைப் பற்றி மாமாஜி சொன்னது, மாமாஜியும் விகாஸும் பேசி கொண்டது என்று சகலத்தையும் அவள் மனசில் அலசி பார்த்தாள். அதன் முடிவில் அவள் அலைபேசியில் தல்ஜித்தை அழைத்து உடனே அனிலுடன் பேச வேண்டுமென்றாள்.  பத்து நிமிஷம் கழித்து அவளுக்கு அழைப்பு விடுத்த அனிலிடம் அவள் கேட்ட கேள்விகளிலிருந்து சகோதரர்கள் இருவருக்கும் அவளே மனிஷைத் தேடி போக போகிறாள் என்று உறுதியானது.
அனிலுடன் பேசி முடித்த பின்,”அவங்க மனிஷோட ரிஸ்க் எடுக்க விரும்பலே அதான் பகல்லே அவனை வெளியே கொண்டு வரலே..இன்னைக்கு இராத்திரி இரயில் மூலம்தான் அவனை அழைச்சுகிட்டு போவாங்க.” என்று சொன்னவள், வெளியில் காத்திருந்த விரேந்தரை அழைத்தாள்.  அவன் உள்ளே வந்தவுடன்.
“இருட்டாகிடுச்சு….எந்த வண்டி மேலே சந்தேகம் வந்தாலும் அது பார்டரை தாண்டக்கூடாது..நாளைக்கு விடியற்காலை வரைதான் நமக்கு அவகாசமிருக்கு அதுவரை எல்லாரும் அதை இடத்திலே இருக்கணும்..கண்காணிக்கனும்..
இன்னைக்கு நைட் நம்ம வீட்லே ஆன்ட்டிக்கு, கீதிகாவுக்குத் துணையா மாறன் இருப்பான்..மனிஷோட வண்டி மாறனோட யூஸுக்கு ரெடியா இருக்கணும்….நான், நீ, மனு மூணு பேரும் மட்டும் இராத்திரி வெளியே போகறோம்…நமக்கு பெரிய வண்டி ஏற்பாடு பண்ணிடு.” என்று அவனுக்கு வேலை கொடுத்து அங்கேயிருந்து அனுப்பினாள் ஸ்மிரிதி.
அவள் பேசியதைக் கேட்டு கொண்டு வரவேற்பறைக்கு வந்தனர் கீதிகாவும், சிவகாமியும்.
“அண்ணன் என்ன சொன்னாரு? என்று கேட்டார் கீதிகா. 
மனிஷைப் பற்றியே யோசித்து கொண்டிருந்த ஸ்மிரிதி கீதிகாவைப் பற்றி யோசிக்கவேயில்லை.   அவருக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் அவள் விழிக்க,
“அவங்க மாப்பிள்ளைகிட்ட அந்த டிரைவரைப் பற்றி விசாரிச்சு சில தகவல் கொடுத்திருக்காரு.” என்று பொதுவாகப் பதில் சொன்னான் மனு.
“வேற எதுவும் சொல்லலேயா?” என்று கீதிகா விவரம் கேட்க,
“இனி அவங்க பேச்சு நம்ம வீட்லே வேணாம்.” என்று முடிவு கட்டினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் பதிலில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்து கொண்ட கீதிகா,”இப்ப என்ன செய்ய போற? போலீஸுக்குப் போக போறியா?” என்று கேட்டார்.
“இல்லை.”
“வேற என்ன செய்ய போற?”
“நானே முயற்சி செய்ய போறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
உடனே சிவகாமி,”இத்தனை நேரம் ரூம்லே உட்கார்ந்துகிட்டு சஷ்டி கவசம் சொல்லிகிட்டு இருந்தேன்..முருகா, மனிஷை நல்ல படியா வீட்டுக்கு அனுப்பி வைச்சிடு.. அவனை உன் காலடிக்கு அழைச்சுகிட்டு வந்து மொட்டை போடறேன்னு மருதமலை முருகனுக்கு வேண்டுதல் வைச்சிருக்கேன்.” என்று மருமகள், மகன்களிடம் சொன்னவர் அவரருகில் நின்று கொண்டிருந்த கீதிகாவிடம்,”ஒருமுறை அவனை என்னோட கோயமுத்தூருக்கு அனுப்பி வை.. அவனுக்கு மொட்டை போடறதா வேண்டிகிட்டு இருக்கேன்.” என்றார்.
“அழைச்சுகிட்டு போங்க.” என்று அனுமதி கொடுத்த கீதிகாவும், அனுமதி கேட்ட சிவகாமியும் அப்போது அறிந்திருக்கவில்லை அடுத்த சில வருடங்களில் சிவகாமி, நாதன் துணையோடு, மாறன் என்ற சுடலை மாடனின் பாதுகாப்பில் கோயமுத்தூரை அவனிருப்பிடமாக்கி கொள்ள போகும் மனிஷ், தலைநகர் பக்கம் தலைவைத்து படுக்க போவதில்லையென்று.
திடீரென்று ஸ்மிரிதி,“மனு, எனக்கு சோர்வா இருக்கு..நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்.” என்று சொல்லி அவளறைக்கு சென்றாள்.
“என்ன டா ஆகுது அவளுக்கு?” என்று கவலையாக கேட்டார் சிவகாமி.
“அவளுக்குக் குடிக்க ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க..அப்படியே இராத்திரி சாப்பாடுக்கு..அப்பாவுக்கும் அனுப்பணும்.” என்றான் மனு.
உடனே அவரருகில் இருந்த இண்டர்னல் ஃபோனை கையில் எடுத்த சிவகாமி,”கீதிகா..குக் நம்பர் சொல்லு.” என்று அந்த வீட்டின் முக்கிய பொறுப்பை ஏற்று கொண்டார்.
வரவேற்பறையை விட்டு வெளியே வந்த சகோதரர்கள் இருவரும் வாசலில் நின்றபடி நாதனுக்கு ஃபோன் செய்து கார்மேகத்தின் நலனை விசாரித்த பின் அதுவரை நடந்ததையும், அன்றிரவு அவர்களே மனிஷைத் தேடி போக போவதைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.  அது முட்டாள்தனமான செயல் என்று கோபமடைந்த நாதனை சமாதானம் செய்ய பெரும் பாடுபட்டனர்  இருவரும்.
நாதனிடம் வாங்கிய திட்டுக்களுடன் வீட்டிற்குள் நுழந்தவர்கள் கண்ணில் டேபிளில் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்மிரிதி பட்டாள்.
“என்ன டா அவ சாப்பிடறதைப் பார்க்கறீங்க..நீங்களும் வந்து சாப்பிடுங்க.” என்றார் சிவகாமி.
“அப்பாக்கு முதல்லே அனுப்புங்க..பயங்கர கோவத்திலே இருக்காரு.” என்றான் மாறன்.
“ஏன்?”
“ஸ்மிரிதியாலே..அவர் சொன்ன எந்த ஆலோசனையையும் அவ ஏத்துக்கலேன்னு.” என்றான் மனு.
மனு பேசியது காதில் விழாதது போல் அவள் சாப்பாட்டில் கவனமாக இருந்தாள் ஸ்மிரிதி.  அவர்கள் பேச்சில் தலையிடாமல் அவர் உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தார் கீதிகா.  இரவு ஒன்பது மணி போல் வண்டியுடன் வந்தான் விரேந்தர்.  அவர்கள் மூவரும் புறப்பட்டு போவதைக் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தனர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும்.
”இப்ப எங்க போறோம்?” என்று கேட்டான் மனு.
“தில்லிக்கு வெளியே இருக்கற சில இரயில் நிலையங்கள்…அங்கே பக்கத்திலே டிராக்கை ஓட்டி இருக்கற இடங்களுக்குப் போக போறோம்.” என்றாள் ஸ்மிரிதி.
”நம்ம ஆளுங்கதான் மத்தியானத்திலேர்ந்து பஸ் ஸ்டாண்டையும், இரயில்வே ஸ்டேஷனையும் செக் பண்ணிகிட்டு இருக்காங்களே.” 
“இந்த மாதிரி வேலையெல்லாம் இரயில்வே ஸ்டெஷனைக்கு வெளியே, கொஞ்ச தூரத்திலே சிக்னலுக்கு நிக்கும் போது நடக்கும்..டி ரெயின் உள்ளே, வெளியே இரண்டு இடத்திலேயும் ஆளுங்க இருப்பாங்க.. குழந்தைங்களை இறக்கிவிடுவாங்க.. ஏத்திவிடுவாங்க..…சில சமயம் சிக்னல் ரிலீஸாயிடுச்சுன்னா குழந்தைங்களை வெளியே தூக்கி போடுவாங்க..கீழே இருக்கறவங்க கரெக்ட்ட பிடிச்சுப்பாங்க..அதை வேடிக்கைப் பார்க்கறவங்க யாரும் அவங்க வாயைத் திறக்க மாட்டாங்க..அப்படி திறந்தா ஸ்டெஷன் போய் சேரர்த்துக்கு முன்னாடி அவங்க மேலே போய் சேர்ந்திடுவாங்க.” என்று விளக்கினாள்.  ஸ்மிரிதிக்கு எப்படி இத்தனை விவரங்கள் தெரிந்திருக்கிறதென்று விரேந்தரும், மனுவும் அவளை வியப்புடன் பார்த்தனர்.
அதற்குபின் அவர்கள் மூவரும் முதல் இரயில் நிலையம் வந்து சேரும் வரை பேசவில்லை. வண்டியிலிருந்து இறங்கியவுடன் ஸ்மிரிதி அவள் போனில் யாரையோ அழைத்து அவர்கள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் இருபது வயது வாலிபன் ஒருவன் அவர்கள் இருக்குமிடம் வந்தான்.
ஸ்மிரிதியைப் பார்த்து,”தீதி..எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் ராஜு..இந்த ஃபோடோலே இருக்கற பையனைக் கண்டு பிடிக்கணும்….இவனை நீ இன்னைக்கு எங்கையாவது பார்த்தியா?” என்று அவள் ஃபோனிலிருந்த மனிஷின் ஃபோடோவை அவனுக்குக் காட்டினாள். 
“தீதி..நான் பார்க்கலே..ஆனா நர்ஸரிக்குப் போனாதான் புது வரவு யாருண்ணு தெரியும்.” என்றான் ராஜு.
“சரி வா..போகலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“தீதி..நீங்க வர வேணாம்..நான் மட்டும் போய் பார்த்திட்டு வரேன்.” என்றான் ராஜு.
“நோ..நான் கண்டிப்பா வருவேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அவள் அருகிலிருந்த மனு,”நானும் வரேன்..நம்ம இரண்டு பேரும் போகலாம்.” என்றான்.
உடனே விரேந்தரும்,”லாயர் ஸாப்..நானும் உங்களோட வரேன்.” என்று சொல்லி அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
“கூட்டமா போக முடியாது தீதி..ஆளுங்க கண்காணிச்சுகிட்டு இருப்பாங்க..நீங்களும், அண்ணனும் வாங்க..செடிங்களைப் பார்க்க வந்திருக்கீங்கண்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.” என்றான் ராஜு.
“விரேந்தர் நீ இங்கையே வெயிட் பண்ணு…நாங்க போயிட்டு வரோம்.” என்று சொல்லி விரேந்தரின் பதிலுக்குக் காத்திராமல் ராஜுவின் பின் செல்ல ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
இரயில் நிலையத்தை தாண்டி, இருட்டில், இரயில் டிராக்கை ஓட்டி சிரமேயில்லாமல்  நடந்து சென்ற ராஜு அங்கு வரிசையாக இருந்த சிறு வீடுகளின் ஒன்றின் வாசலின் முன் நின்றான்.  அக்கம் பக்கம் ஆரவாரமில்லாமல் இருக்க, மூன்று முறை கதவைத் தட்டினான் ராஜு.
கதவிற்கு அந்தப் புறமும் அமைதியாக இருக்க, யாருமில்லையோ இல்லை அனைவரும் உறங்கிவிட்டார்களோ என்று சந்தேகம் எழும்ப, அப்போது கண்கூசும் வெளிச்சத்தை வீசியபடி ஒரு விரைவு இரயில் அவர்கள் அருகிலிருந்து டிராக்கில் சென்றது.  அந்த இரயிலின் சத்தத்திற்குகூட வீட்டின் உள்ளிருந்து சத்தம் எதுவும் வரவில்லை.  ஐந்து நிமிஷம் கடந்தபின் வாசல் கதவு மெதுவாகத் திறந்தது.
“என்ன?” என்று உள்ளேயிருந்து கேட்க,
“செடிங்களைப் பார்க்க வந்திருக்கோம்.” என்றான் ராஜு
கதவு உடனே திறக்க, மூவரும் அந்த சிறிய அறைக்குள் சென்றனர்.  உள்ளே சென்ற ஸ்மிரிதியும், மனுவும் அதிர்ந்து போயினர்.  அந்த சிறிய அறையில் ஐந்து வயதிலிருந்து பத்து வயதிற்குள் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அருகருகே உட்கார்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.  விழித்து கொண்டிருந்த சில சிறுவர்கள் அவர்களைப் பயத்துடன் பார்க்க, ஸ்மிரிதியோ அதிர்ச்சியை உதறிவிட்டு அந்தக் கூட்டத்தில் மனிஷைக் கண்களால் தேடினாள். போதுமான வெளிச்சமில்லாவிட்டாலும் மனிஷ் வயதில் யாரும் தென்படாததால் உடனே ராஜுவைப் பார்த்து,”போகலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
அறையிலிருந்து வெளியேற நினைத்த ராஜுவிடம்,”பார்த்த இல்லை..பணத்தை வைச்சிட்டு போ.” என்றான் கதவைத் திறந்தவன்.
பார்த்ததுக்கேப் பணமா என்று மனுவும், ஸ்மிரிதியும் ராஜுவைப் பார்க்க, அவனோ கொஞ்சம்கூட சங்கடப்படாமல்,”அடுத்த முறை நீயே ஆள் அழைச்சுகிட்டு வா.” என்றான்.
“போடா வெளியே.” என்று கோபத்துடன் கதவைத் திறந்து ராஜுவை அவன் வெளியே தள்ள முயல, மூன்று பேரும் அவசரமாக அறையை விட்டு வெளியேறினர்.
“ராஜு..இவன் திருந்த மாட்டானா?” என்று ஸ்மிரிதி கேட்க.
“படைப்பு தொழிலே கடவுள் விட்டிடுவாரு ஆனா இவன் இந்த தொழிலை விடமாட்டான்.” என்றான் ராஜு.
“இருபது பசங்க மேலே ராஜு.” என்றாள் ஸ்மிரிதி.
“இந்த மாதிரி எத்தனை தடவை தீதி..விடுங்க..பசங்களோட விதி காணாமப் போய் கஷ்டப்படறாங்க..பெத்தவங்களோட விதி காணாமப் போனவங்களைத் தேடி கஷ்டப்படறாங்க.” என்று விதியின் விதியை விளக்கினான் ராஜு.
ஒரு நிமிடம் ஸ்மிரிதியின் மனதில் மனிஷ் வந்து போனான்.
“இங்கே வேற இடமிருக்கா ராஜு?” என்று ஸ்மிரிதி கேட்க,
“இல்லை தீதி..இது பசங்க இடம்..பொண்ணுங்க  இன்னொரு இடத்திலே.” என்றான் சாதாரணமாக.
அதற்குள் அவர்கள் வண்டி நிறுத்தியிருந்த இடம் வந்து விட,  அவர்களோடு ராஜுவும் வண்டியில் ஏறிக் கொண்டான்.
“அடுத்து எங்கே போறோம் ?” என்று மனு கேட்க
“அண்ணா இன்னொரு இடம்…அரைமணி நேரமாகும்..நான் வழி சொல்றேன்.” என்றான் ராஜு.
அரைமணி நேர தூரத்தை இருபது நிமிடத்தில் கடந்தனர். விரேந்தரை மறுபடியும் வண்டியில் விட்டுவிட்டு அவர்கள் மூவரும் அந்த இடத்திற்கு நடந்து சென்றனர்.  இந்த இடத்தில் சிறுவர்கள், சிறுமியர்கள் இருவரும் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.  அந்த வீடு ஒரு குறுகலான சந்து போல் இருந்ததால் ராஜு மட்டும் உள்வரை சென்று தேடி விட்டு, கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தவன், காத்திருந்த ஸ்மிரிதியிடம்.”இல்லை தீதி.” என்றான்.
“அவ்வளவு தானா ராஜு? என்று விரக்தியில் ஸ்மிரிதி கேட்க, 
“இரயில்லே அழைச்சுகிட்டு போகணும்னா இங்கேதான் வைப்பாங்க தீதி..நாளைக்கு இதே டயத்துக்கு வாங்க…இரண்டு இடத்திலேயும் வேற செட் பசங்க இருப்பாங்க..அதுலே தேடி பார்க்கலாம்.” என்று நம்பிக்கை கொடுத்தான் ராஜு.
“இல்லை ராஜு..நாளைக்கு இராத்திரி ரொம்ப லேட்டாயிடும்..இன்னைக்கு நைட்தான் அழைச்சுகிட்டு போவாங்க..பஸ் வாய்ப்பில்லை..பஸ் ஸ்டாண்ட்லேயும், எல்லா ரோட்லேயும் ஆளுங்க தேடறாங்க.” 
“தீதி..மயக்க மருந்து கொடுத்து ஒரு மூட்டைலே போட்டு பகல்லேயே தூக்கிகிட்டு போறாங்க..இராத்திரிவரை காத்திருக்கறது இல்லை.”
“இல்லை டா..இங்கேதான் இருக்காண்ணு தகவல் கிடைச்சிருக்கு..அது பொய்யா இருக்கமுடியாது…அதான் ஒருவேளை ஏற்கனவே நர்ஸரிக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கலாம்னு நினைச்சேன்.” 
அவர்கள் மூவரும் அமைதியாக வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, திடீரென்று,”ராஜு..காலைலே ஃபரிதாபாத்லே தூக்கின பையனை அர்ஜெண்டா தில்லிலேர்ந்து யு பிக்கு அனுப்பணும்….அப்ப அவனை எங்கே வைச்சிருப்பாங்க? ” என்று கேட்டாள்.
சில நிமிடங்கள் யோசித்த ராஜு,”தீதி..அந்த மாதிரி ஆளுங்க இரயில் நிற்கற டிராக் பக்கத்திலேயே இடம் வைச்சிருப்பாங்க.. பத்து நிமிஷத்திலே நடந்து போய் ஏத்தி விடற மாதிரி….அந்த இடத்துக்கு இரயில் வர்றத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடி தான் வருவாங்க..எந்த இரயில்னு விவரம் தெரியாம போனா அந்த இடமெல்லாம் காலியாதான் இருக்கும்.” என்றான்.
“இங்கே பக்கத்திலே அந்த மாதிரி இருக்கா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“தீதி..ஃபரிதாபாத் பக்கத்திலேயே ஒரு இடமிருக்கு..மும்பைக்கு பசங்களை அங்கே ஏத்திவிடுவாங்க.” என்று தயக்கத்துடன் சொன்னான்.
“இவன் யு பி..கான்பூர் ஸைட் போறான் டா.” என்றாள் ஸ்மிரிதி.
அவர்கள் இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த மனு,“ஸ்மிரிதி..மதுரா வரை எல்லாம் ஒரே ரூட்..அதுக்கு அப்பறம் தான் பிரியுது.” என்றான்.
அடுத்து ராஜு அவர்களை அழைத்து சென்ற இடம் ஃபரிதாபாத் இரயில் நிலையத்தை தாண்டி டிராக்கை ஓட்டியிருந்த நெடுஞ்சாலையில், மேம்பாலத்திற்கு கீழே இருந்தது. மேம்பாலத்தின் ஒரு கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு விரேந்தரும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, நால்வரும் மறுகோடியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். 
மேம்பாலத்தின் கீழே நான்கு புறமும் துணி, பாலித்தீன், அட்டைபெட்டி இவைகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தி தினக்கூலியாட்கள், ரிக்‌ஷாகாரர்கள் குடும்பம் நடத்தி கொண்டிருந்தனர். ஒவ்வொரு மறைப்புக்கு எதிரிலும் அன்றைய இரவு உணவை சமைக்க குப்பைகளை உபயோகித்திருந்தனர்.  அரைகுறையாக எரிந்து முடிந்த பிளாஸ்டிக் குப்பைகள் விஷ வாயுவை வெளியிட அந்த இடமே நச்சுப் புகையால் சூழப்பட்டிருந்தது.  
கிட்டதட்ட அரைகிலோ மீட்டர் வரை நடந்து சென்றபின் மூவரையும் சைகையில் நிறுத்திய ராஜு, அங்கே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் தனியாக, ஒதுக்கமாக இருந்த மறைப்புக்குள் சத்தமில்லாமல் உள்ளே சென்றவன் உடனே வெளியே வந்து,”தீதி..வாங்க போகலாம்.” என்றான்.
“ஏன் டா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“உள்ள ஒரு ஆள்தான் இருக்கான் தீதி..அவனும் தூங்கிகிட்டிருக்கான்..இந்த இடமில்லே..வாங்க போகலாம்.” என்றான்.
“நீதானே டா சொன்ன..அர்ஜெண்ட்டா அனுப்ப வேண்டிய பசங்களை இங்கேதான் வைப்பாங்கண்ணு.” என்றாள் ஸ்மிரிதி.
“ஆமாம் தீதி..உடனே வெளியே அனுப்ப வேண்டிய பசங்களை இங்கேதான் கொண்டு வருவாங்க..எதிர்லே பாருங்க அந்த டிராக்லேதான் மும்பை போற வண்டி நிக்கும்..இந்த டயத்துக்கு பசங்க இருக்கணும்….ஆனா உள்ளே யாருமில்லே…..கொஞ்சம் நேரம் முன்னாடி வரை யாரோ சமைச்சுகிட்டு இருந்திருக்காங்க..அடுப்புலே இன்னும் தணலிருக்கு.” என்றான் ராஜு.
“ராஜு..உள்ளே யாருமே இல்லையா டா…இருட்டா இருக்குதே.. நல்லா பார்த்தியாடா..நான் வேணும்னா உள்ளே போய் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“தீதி..வேணாம்..சமைச்சுகிட்டிருந்த ஆள் திரும்பி வந்திட போறான்.” என்று அவசரமாகத் தடுத்தான் ராஜு.
“வரட்டும்.” என்று சொன்னவள். விரேந்தரைப் பார்த்து,”நான் உள்ளே போன பிறகு யாரும் வராம பார்த்துக்க.” என்றாள்
“சரி.” என்று தலையசைத்தான் விரேந்தர்.
“தீதி..வேணாம்..உள்ளே ஒரு சின்ன பொண்ணு இருக்கு..மும்பைக்கு அனுப்பறாங்க போலே.” என்றான் ராஜு.
“சின்ன பொண்ணா?” என்று ஸ்மிரிதி கேட்க.
“ஆமாம் தீதி..துணி எதுவும் போடாம உட்கார்ந்துகிட்டு இருக்கு தீதி.” என்று தயக்கத்துடன் சொன்னான் ராஜு.
ராஜுவின் விளக்கத்தைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்த ஸ்மிரிதி,
“நான் உள்ளே போறேன்.” என்று அவள் அணிந்திருந்த துப்பட்டாவை கையில் சுருட்டி கொண்டு உள்ளே சென்றாள்.  அங்கே எரிந்து கொண்டிருந்த அடுப்பின் அருகே ராஜு சொன்ன அந்தச் சிறுமி அமர்ந்திருந்தாள். அந்த இடத்தை சூழ்ந்திருந்த துர் நாற்றம் ஸ்மிரிதியின் சுவாசத்தை தடை செய்ய, சில நிமிங்கள் போராட்டத்தற்குப் பின் சிரமப்பட்டு அவள் மூச்சை சீர்ப்படுத்தி கொண்டாள் ஸ்மிரிதி. ஒரு கோடியில் அடுப்பும் அதன் அருகில் அந்தச் சிறுமியும், அவளருகே ராஜு சொன்ன அந்த ஆளும் படுத்து கிடக்க,  மறுகோடியில் கந்தல் துணிகளும், குப்பைகளும் குமித்து வைக்கப்பட்டிருந்தன.
உள்ளே நுழைந்த ஸ்மிரிதியை பயத்துடன் அந்தச் சிறுமி பார்க்க, அவளருகே சென்று துப்பட்டாவினால் அவள் உடலை சுற்றிய ஸ்மிரிதி அவளை தூக்க முயன்ற போது அவள் கால்களைப் பற்றி உறங்கிக் கொண்டிருந்த அந்த ஆளைச் சுட்டிக் காட்டினாள் அச்சிறுமி.
அப்போது, ஸ்மிரிதி வெளியே வராததினால் உள்ளே நுழைந்த ராஜுவைப் பார்த்து அந்தச் சிறுமி பயந்து, குரல் எழுப்ப, அதில் உறங்கி கொண்டிருந்தவன்,”யாரு?” என்று எழுந்து கொள்ள, அந்த சிறுமி ஒரே தாவலில் ஸ்மிரிதியின் இடுப்பின் மீது ஏறி உட்கார அவளை இறுக அணைத்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
“தீதி..நீங்க அந்தப் பொண்ணை அழைச்சுகிட்டு வெளியே போங்க..நான் இவனைப் பார்த்துக்கறேன்.” என்று அவன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை வேகமாக வெளியே எடுத்தான் ராஜு.
உறக்கத்திலிருந்து எழுந்தவன் அவன் இருப்பிடத்தில் இரண்டு அன்னியர்களைக் கண்டு தெளிந்து போனவன் உடனே அவன் பற்றியிருந்த அந்தச் சிறுமியின் கால்களைப் பிடித்து இழுக்க, மறுகையால் அவனை நோக்கி வந்த ராஜுவின் மணிக்கட்டை முறுக்க, வலி பொறுக்க முடியாமல் அவர்கள் இருவரும் கத்த, வெளியே மனுவைக் காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான் விரேந்தர்.
அரை நொடியில் உள்ளே நடப்பதைக் கணித்த விரேந்தர் அந்த ஆளின் வயிற்றி ஓங்கி உதைக்க அவன் வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுமியையும், ராஜுவையும் விடுவிக்க, 
“பிட்டியா..நீங்க வண்டிக்கு போங்க..நான் இவனைப் பார்த்துக்கறேன்.” என்றான்.
ஸ்மிரிதி அங்கிருந்து செல்லுமுன் அந்த மறைப்பின் மறுகோடியில் இருந்த துணி குவியலை அந்த சிறுமி சுட்டிக் காட்ட,
“விரேந்தர்..அந்தக் கோடிலே ஏதோ இருக்குண்ணு இவ சொல்றா.” என்றாள் ஸ்மிரிதி.
“நான் பார்த்துக்கறேன்..நீங்க கிளம்புங்க.” என்று அவசரப்படுத்தினான் விரேந்தர்.   அடுப்புக்கு அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பையிலிருந்து ஒரு கந்தல் துணியைக் கிழித்து அதன் ஒரு பகுதியால் அந்த ஆளின் வாயை அடைத்து மீதியிருந்த துணியால் அந்த ஆளின் கைகளைக் கட்டினான் விரேந்தர். 
விரேந்தருக்கு அடிபணிந்து ஸ்மிரிதி வெளியே செல்ல முயன்ற போது அந்தச் சிறுமி அவள் இடுப்பிலிருந்து இறங்கி போய் அந்த துணி குவியலுக்கு அருகே அமர்ந்து கொண்டாள்.  அவள் பின்னால் வந்த ஸ்மிரிதியின் கண்களில் துணி குவியலுக்கு வெளியே ஒரு கை தெரிந்தது. அந்தக் கையைக் கெட்டியாக பற்றியபடி அந்தச் சிறுமி அமர்ந்திருந்த தோரணையைப் பார்த்து,
“விரேந்தர்..இங்கே யாரோ படுத்துகிட்டு இருக்காங்க..இந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சவங்க போலே..அவங்க இல்லாம நம்மகூட வர மாட்டாண்ணு நினைக்கறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“பிட்டியா..அவங்களை எழுப்ப முடியுமா பாருங்க..மயக்கமா இருந்தா வண்டி வரை எப்படி அழைச்சுகிட்டு போக முடியும்?” என்று கேட்டான்.
அதே கேள்வி ஸ்மிரிதியின் மனதிலும் வந்தததால் இவ்வளவு ஆரவாரத்திலும் அசையாமல் படுத்திருந்த அந்த உருவத்தின் அருகே சென்று, முகத்தை மூடியிருந்த துணியை மெதுவாக விலக்கிய ஸ்மிரிதி  “மனிஷ்.” என்று அதிர்ச்சியினில் கூவ, விரேந்தரும், வெளியே நின்றிருந்த மனுவும் ஸ்மிரிதி இருந்த மூலைக்கு உடனே ஓடி வந்தனர்.  
அந்த மூலையில் குவிந்திருந்த குப்பைக்கு நடுவில், அவன் ஸ்கூல் யுனிஃபார்மில் மயக்கமாகப் படுத்து கிடந்தான் மனிஷ்.

Advertisement