Advertisement

ஸ்மிரிதியின் மனு – 58
மாமாஜி வந்து சேருவதற்கு முன் விரேந்தர் வந்து சேர்ந்தான்.  வரவேற்பறையிலிருந்த மனுவிடம்,
“நம்ம வீட்லேயே ஸாபுக்கு இந்த மாதிரி ஆகும்ணு நான் நினைக்கவேயில்லை..அவரு ஆஸ்பத்திரின்னு சொன்னவுடனையே நான் அழைச்சுகிட்டு போயிட்டேன்..நான் அவர்கூடவே இருந்தும் இப்படி ஆயிடுச்சு.” என்று மனம் வருந்தினான்.
“விரேந்தர்..இந்த மாதிரி நடக்கும்ணு அங்கிளே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..நான் ஆஸ்பத்திருக்கு போயிட்டுதான் இங்கே வரேன்..உன் ஸாப் பிழைச்சிடுவாரு.. ஆனா பழைய மாதிரி உடம்பு சரியாக எத்தனை மாதங்களாகும்ணு தெரியாது.” என்றான் மனு.
அதைக் கேட்டு கண் கலங்கினான் விரேந்தேர்.  உடனே அவனை வெளியே அழைத்து சென்று,”இப்ப வருத்தப்பட நம்ம யாருக்கும் நேரம் கிடையாது..மனிஷ் தான் முக்கியம்..மாமாஜி வீட்டுக்கு வந்துகிட்டு இருக்காரு..அவருகிட்டேயிருந்து ஏதாவது தகவல் கிடைச்சா அதை செயல்படுத்த நம்பிக்கையான ஆளுங்க வேணும்.” என மனு சொல்லும் போது ஸ்மிரிதி அவர்களருகில் வந்து,
“என்ன?” என்று விசாரிக்க,
“மாமாஜி ஏதாவது தகவல் கொடுத்தா அதை செயல்படுத்த நம்பிக்கையான ஆள் இருக்காங்களாண்ணு கேட்டேன்.” என்றான்.
“நம்பிக்கையான ஆளுங்கதான் டோல் ரோட், ஹைவேஸ் எல்லாம் செக் செய்துகிட்டு இருக்காங்க.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி திடீரென்று,”விரேந்தர்….இப்பவே நம்ம அளுங்களை இண்டர்ஸ்டேட் பஸ் ஸ்டாண்டுக்கும், எல்லா இரயில்வே ஸ்டேஷனுக்கும் அனுப்பு.” என்று கட்டளையிட்டாள்.
“அனுப்பறேன் பிட்டியா.” என்று விரேந்தர் பதில் சொன்ன போது அவன் ஃபோன் அடிக்க அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தவன் வியப்புடன் நிமிர்ந்து ஸ்மிரிதியையும், மனுவையும் பார்த்தான்.
“யாரு?” என்று ஸ்மிரிதி கேட்க,
“மாறன் பையா.” என்றான் விரேந்தர்.
“மாறனா? என்று அவர்களும் வியக்க, அழைப்பை ஏற்ற விரேந்தர் மேலும் வியப்படைந்தான்.
“கேட்லே இருக்காங்க..உள்ளே அழைச்சுகிட்டு வரேன்.” என்று கேட்டை நோக்கி விரைந்தான் விரேந்தர்.
விரேந்தருடன் வந்த மாறன்,”அங்கிளை அப்பா பார்த்துக்கறேண்ணு சொல்லிட்டாரு..நான் கிளம்பி வந்திட்டேன்..ஏதாவது தகவல் கிடைச்சுதா….பணம் ரெடி பண்ணியாச்சா.” என்று கேட்டான்.
“நான் விரேந்தர்கிட்ட பேசிட்டு வரேன்..நீ உள்ளே போ.” என்று மாறனை மனுவுடன் வீட்டினுள் அனுப்பி வைத்தாள் ஸ்மிரிதி.
“பணம் ரெடியாயிடும்..ஸ்மிரிதிகிட்டே இருக்கறதெல்லாம் மொபிலைஸ் செய்திட்டேன்..கீதிகாவோட பேப்பர்ஸ் இப்பதான் என்கிட்ட கொடுத்திருக்காங்க..அவங்க ஆளுங்கிட்ட பேசணும்..மனிஷ் பற்றி ஒரு தகவலும் இதுவரை கிடைக்கலே.” என்று பேசி கொண்டே அண்ணன், தம்பி இருவரும் வரவேறைக்கு வந்தனர்.
“அப்பா போலீஸ்க்குப் போக சொல்றாங்க..இனியும் ஏன் டா லேட் பண்றீங்க.” என்று மாறன் குரல் உயர்த்த, அப்போது வீட்டினுள் வந்த ஸ்மிரிதியும், வரவேற்பறையிலிருந்த கீதிகாவும்,
“போலீஸ்க்குப் போக முடியாது.” என்று ஒரு சேர பதிலளித்தனர்.
அதற்குபின் ஏற்பட்ட மௌனமே ஏன்னென்று கேள்வியைக் கேட்க,
“போலீஸெல்லாம் அவங்க பக்கத்திலே போக முடியாது..அண்ணண் மூலம் தான் போகணும்.” என்றார் கீதிகா.
“அவங்க  இன்னும் வரலேயே..ஏன்? அவரை விலைக்கு வாங்கிட்டாங்காளா?” என்று கேட்டான் மனு.
“யாரும் வேணும்னாலும் யாரை வேணும்னாலும் விலைக்கு வாங்கட்டும்..அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.” என்றாள் ஸ்மிரிதி.
“விலை போனவராலே நமக்கு என்ன பிரயோஜனம்..அவரு உண்மையை சொல்லுவாருண்ணு என்ன நிச்சயம்?” என்று வக்கீல் வாதத்தை துவங்க, அதற்கு பதில் சொல்லாமல், செண்டர் டேபிள் மேல் இருந்த மனிஷின் ஸ்கூல் நோட் புக் ஒன்றை திறந்து ஒரு பேனாவுடன் கீதிகாவிடம் கொடுத்து,
“இந்த நோட்லே மனிஷோட அப்பா குடும்பம்..உங்க குடும்பம்..அந்த ஊர்லே நீங்க சந்தேகப்படற அத்தனை பேர் பெயரையும் எழுதுங்க.” என்றாள்.
பின் மனுவைப் பார்த்து,”விலை போனாவங்க ஒண்ணு அவங்க விலை போயிட்டாங்கற உண்மையை மறைக்க பார்ப்பாங்க இல்லை மறுபடியும் பேரம் பேச ஆரம்பிப்பாங்க..இரண்டையும் ஒரே வழிலேதான் கையாளும்..அது என்னென்னு எனக்குத் தெரியும்.” திடமாகச் சொன்னாள் ஸ்மிரிதி.
அப்போது கீதிகா,”யார் பெயரை எழுதுவேன்..அவங்க யாரையும் நம்பமுடியாமதானே எல்லார்கிட்டேயிருந்து விலகியிருந்தேன்..அவன் பிறந்ததிலேர்ந்து அவனை எப்பவும் என் கண் பார்வைலேயே வைச்சுகிட்டிருந்தேன்..என்னோட தப்புதான்..இப்பவும் யாரையும் கிட்டவே சேர்த்திருக்ககூடாது.” என்று கண்ணீர் விட்டார்.
அவர் மறுபடியும் அழுவதைப் பார்த்து கோபமடைந்த ஸ்மிரிதி,”மாமாஜி வருவாங்க..அவர்கிட்ட மனிஷோட மொத்த சொத்தையும் எழுதி கொடுத்து.. அவரை மீடியெட் செய்ய சொல்லி மனிஷை மீட்டுக்கோங்க.” என்றாள்.
உடனே அழுகையை நிறுத்திய கீதிகா,”அது அடுத்தவங்க சொத்தில்லே அவன் அப்பாவோடது.. மனிஷுக்கு உரிமையானது…அவனோட இருபத்தி அஞ்சாவது வயசுலே அவனுக்கு கிடைக்கணும்.” என்றார்.
“அப்ப அந்த நோட்புக்லே அவன் உரிமையை யாரெல்லாம் பறிக்க பார்க்கறாங்கண்ணு ஒரு லிஸ்ட் போடுங்க..அவனோட இருப்பதியஞ்சாவது வயசுவரைக்கும் அவனைப் பத்திரமா பார்த்துக்க எனக்கு கைட் புக்கா இருக்கும்.”என்று மறுபடியும் கோபமாகப் பதில் கொடுத்தாள் ஸ்மிரிதி.
அதற்கு மேல் ஸ்மிரிதியுடன் வாதிடாமல் அந்த புத்தகத்தை நிரப்ப ஆரம்பித்தார் கீதிகா.  அவர் எழுதி முடித்தவுடன் அந்த நோட்புக்கை கையில் வாங்கிக் கொண்ட ஸ்மிரிதி,
“ப்ளீஸ்..மாமாஜியோட நீங்க ஒரு வார்த்தை பேசாதீங்க..நான் மட்டும் தான் பேசுவேன்.” என்று வேண்டுகோள் வைத்தாள்.
அப்போது வேகமாக உள்ளே வந்த விரேந்தர்,”பிட்டியா..மாமாஜி வராங்க.” என்றான்.
“நீ வெளியவே இரு..நான் பார்த்துக்கறேன்.” என்று விரேந்தரை வெளியே அனுப்பினாள்.
கீதிகாவின் அண்ணன் வீட்டிற்குள் நுழைந்தவுடன்,”நீங்கெல்லாம் நினைச்சபடி என்னைத் தனியாக்கிட்டீங்க இல்லை.” என்று அவர் அண்ணனை கேட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து அழுது கொண்டே வெளியேறினார் கீதிகா. அவர் பின்னாடியே சிவகாமியும் சென்றுவிட வரவேற்பறையில் மனு, மாறன், ஸ்மிரிதி மட்டுமிருந்தனர்.
அவர் தங்கையின் திடீர் குற்றசாட்டில் ஒரு நொடி அதிர்ந்த அண்ணன்,”ஸ்மிரிதி பேட்டா..என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
“மாமா ஜி..உட்காருங்க..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று அவரை சோபாவில் அமர வைத்து அவரருகில் அமர்ந்த ஸ்மிரிதி, அவளது ஃபோனைத் திறந்து அதில் இருந்த புகைப்படத்தை அவரிடம் காட்டி,”யார் இவன்?” என்று விசாரணையை ஆரம்பித்தாள்.
அவள் ஃபோனை கையில் வாங்கி புகைப்படத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு குழப்பத்துடன் அதை ஸ்மிரிதியிடம் கொடுத்தவர்,”எங்க டிரைவர்.” என்றார்.
“இப்ப உங்களோட வந்திருக்கானா?”
“இல்லை..காலைலே ஊருக்குப் போயிட்டான்.”
“காலைலே உங்களை அவன் தானே இங்கே ஓட்டிகிட்டு வந்தான்? எப்ப அவன் தில்லிக்கு வந்தான்?எப்ப திரும்ப ஊருக்குப் போனான்?”
“நேத்து காலைலே எங்களை ஊர்லேர்ந்து இவந்தான் அழைச்சுகிட்டு வந்தான்..நேத்து பூரா எங்களோடதான் இருந்தான்..நேத்து இராத்திரி அவனோட சினேகிதனோட ஃபரிதாபாத்லே தங்கிட்டு இன்னைக்கு காலைலே வேலைக்கு வந்தான்..இங்க வந்த பிறகு திடீன்னு ஊருக்குக் கிளம்பி போயிட்டான்.”
“இப்பவே அவனுக்கு ஃபோன் போடுங்க..அவன் எங்க இருக்காண்ணு விசாரிங்க.” என்று கட்டளையிட்டாள் ஸ்மிரிதி.
“எதுக்கு?”
“இவன் அப்பாவோட வண்டிலே விஷம் தடவியிருக்கான்..அப்பா இப்ப ஐ சி யு விலே இருக்காங்க.” என்று கார்மேகத்தைப் பற்றிய செய்தியை மட்டும் வெளியிட்டாள் ஸ்மிரிதி.
அதைக் கேட்டு அதிர்ச்சியானவர்,”என்ன பேட்டா சொல்றீங்க? அப்பா ஐ சி யுலே இருக்காங்களா? விஷமா? எப்ப நடந்திச்சு இதெல்லாம்? என்றார்.
“அவன் வந்த வேலை முடிஞ்சிடுச்சுண்ணு உங்க டிரைவர் எப்ப ஊருக்குப் புறப்பட்டு போனானோ அப்பதான் அப்பா ஆஸ்பத்திரிக்கு போனாரு..உங்ககிட்ட என்ன காரணம் சொல்லிட்டு புறப்பட்டு போனான்?” என்று நிதானமாக கேட்டாள் ஸ்மிரிதி.
”பேட்டா..இங்கேயிருந்து கிளம்பினவுடனேயே ஊர்லேர்ந்து அர்ஜெண்டா ஃபோன் வந்திச்சு உடனே கிளம்பிப் போகணும்னு சொன்னான்..அதனாலே நாங்களும் எங்களோட் ப்ரோக்ராமை மாற்றிகிட்டு வேற உறவுக்காரங்க வீட்டுக்குப் போகாம திரும்ப எங்க வீட்டுக்கே போயிட்டோம்.” என்றார் மாமா ஜி.
“எப்பலேர்ந்து இந்த டிரைவர் உங்க ப்ரோக்ராமை ஃபிக்ஸ் செய்யறான்?” என்ற கேள்வி மூலம் டிரைவர், மாமா ஜி இருவரையும் ஆட்டி வைப்பது யார் என்று அறிய முற்பட்டாள் ஸ்மிரிதி.
“பேட்டா..அவன் எங்க மாப்பிள்ளையோட டிரைவர்..அவனை நான் எப்படி கேள்வி கேட்க முடியும்?” என்றார் மாமா ஜி.
மாமா ஜியின் பதிலில் விலை போனாவன் ஸப்னாவின் கணவன் என்று தெளிவான ஸ்மிரிதி,
“சரி உங்க மாப்பிள்ளையோட டிரைவரை நீங்க கேள்வி கேட்க வேணாம்..ஊருக்குக் கிளம்பினவன் எதுலே போறான்?..டி ரெயினா, பஸ்ஸா? எத்தனை தூரம் போயிருக்காண்ணு அவனை நலம் விசாரிங்க.”  என்று வலியுறித்தினாள்.
அதை மறுக்க முடியாமல் அடுத்த சில நிமிடங்கள் விடாது முயற்சி செய்த பின் அந்த அலைபேசி அணைத்து வைக்கப்படிருக்கிறது என்ற தகவல்தான் கிடைத்தது.
“ஸ்மிரிதி பேட்டா..உங்கப்பாக்கு நடந்ததுக்கும் எங்க டிரைவருக்கும் எந்த சம்மந்தமுமில்லே..நீ உங்க அப்பாவோட வட்டத்திலேதான் விசாரிக்கணும்.” என்றார்.
“மாமா ஜி..காலைலே கராஜ்லே அப்பாவோட வண்டி ரெடி செய்தபோது இவந்தான் உங்க வண்டியோட அங்கே இருந்திருக்கான்..அதுக்கு அப்பறம் உங்களை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டிட்டு அவன் ஊருக்குப் போயிருக்கான்..அந்த விஷம் பட்டவுடனையே அப்பா கோலப்ஸாகியிருக்காங்க..இவனுக்கு அதைப் எப்படி உபயோகிக்கணும்னு விவரம் தெரிஞ்சிருக்கு..அதான் உங்க யாருக்கும் அதோட பாதிப்பு இல்லை..இவன் தான் அந்த வேலையை செய்திருக்கான்.” என்று திட்டவட்டமாக சொன்னாள் ஸ்மிரிதி.
“இருக்கலாம் பேட்டா..உங்கப்பாவுக்கு வேண்டாதவங்க யாராவது அவனை விலை கொடுத்து வாங்கியிருக்கலாம்..எங்க யாருக்கும் இதுலே சம்மந்தமில்லே..அவனை யாரு விலைக்கு வாங்கினாங்கண்ணு உங்கப்பாவோட சம்மந்தப்பட்டவங்களைத்தான் நீ சந்தேகப்படணும்.” என்று கொஞ்சம் கோபமாகப் பேசினார் மாமாஜி.
அப்போது மாறனில் ஃபோன் அழைக்க அந்த அழைப்பை ஏற்றவன்,”அப்பா” என்று சொல்லிவிட்டு நாதனுடன் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.
மாமாஜியின் கோபத்தில் பல மடங்கு கோபமடைந்த ஸ்மிரிதி, அவளுடையக் உள்ளங்கைகளை விரித்து,
”அப்பாவோட எல்லாரும் என்னோட இந்தப் பத்து விரல்லே..என் கையுள்ளே இருக்காங்க..இது எங்க இரண்டு பேர் சம்மந்தப்பட்டது இல்லை..” என்று தெளிவாக தெரியப்படுத்தி, டேபிள் மீதிருந்த மனிஷின் நோட் புக்கை அவரிடம் கொடுத்து, 
”படிச்சு பாருங்க..மனிஷைக் காணலே..யார் மேலே சந்தேகம்னு உங்க தங்கை அவங்க கையாலே லிஸ்ட் எழுதி கொடுத்திருக்காங்க.” என்றாள்.
“மனிஷைக் காணும்.” என்ற செய்தியில் பேரதிர்ச்சி அடைந்த மாமாஜி,”காணுமா?” என்று நம்பமுடியாமல் கேட்டார்.
“அப்பாவையும், மனிஷையும் முடிச்சா ஒரு குடும்பத்துக்கு மட்டும்தான் ஆதாயம்ணு உங்களுக்குத் தெரியும்..அந்தக் குடும்பத்துக்கு நம்ம குடும்பத்திலிருந்து  யாரோ உதவி செய்திருக்காங்க..அது யாருண்ணு எனக்குத் தெரிய வேணாம்..ஆனா மனிஷ் எங்கேண்ணு எனக்குத் தெரியணும்.”
அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது, கூடாது என்று நினைத்த மாமா ஜி,
“பேட்டா..கண்டிப்பா நாங்க யாருமில்லே..கீதிகாவும், மனிஷும் நல்லபடியா இருக்கணும்னுதான் நாங்க விரும்பறோம்..இது வேற யாரோட வேலையோ.” என்றார் பயத்துடன்.
“அது யாருண்ணு எனக்குத் தெரிய வேணாம்னு ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன் மாமா ஜி..மனிஷைப் பற்றி மட்டும் சொல்லுங்க..” என்று அவர் பயத்தைப் பொருட்படுத்தாமல் அவள் குரலை உயர்த்தினாள் ஸ்மிரிதி.
அப்போது நாதனுடன் பேசி முடித்த மாறன்,”ஸ்மிரிதி..மனிஷோட டீடெயில்ஸ் கேட்கறாரு அப்பா..அன் அஃபிஷியலா என் ஸி ஆர் பார்டர்லே இருக்கற அத்தனை ஸ்டெஷனுக்கு தகவல் போயிடும்ங்கறாரு.” என்றான்.
அப்போதுதான் மனு, மாறன் இருவரின் இருப்பை கணக்கில் எடுத்து கொண்ட மாமா ஜி, பிரச்சனை போலீஸுக்கு போனால் விபரீதமாகிவிடும் என்று உணர்ந்து,
”மாப்பிள்ளை..எனக்கும் இதுக்கும் சம்மந்தமேயில்லே..இந்த மாதிரி வேலை எங்க குடும்பத்திலே யாரும் செய்ய மாட்டோம்..ஸ்மிரிதி பேட்டாகிட்ட சொல்லுங்க.” என்று மனுவிடம் முறையிட்டார்.
“இந்த மாப்பிள்ளைகிட்ட பேசாதீங்க..உங்க மாப்பிள்ளைகிட்ட பேசுங்க….மனிஷைப் பற்றிய விவரம் மட்டும் வேணும்னு கேளுங்க..மற்றதை நான் பார்த்துக்கறேன்..இப்பவே ஃபோன் பண்ணுங்க.” என்று ஆர்டர் போட்டாள் ஸ்மிரிதி.
உடனே அவர் ஃபோனை எடுத்து ஸப்னாவின் கணவனுக்கு அழைப்பு விடுத்தார் மாமாஜி. “விகாஸ் பேட்டா” என்று ஆரம்பித்து அன்று காலையிலிருந்து அவர் தங்கை வாழ்வில் நடந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டவர் கடைசியாக அந்த டிரைவரை தொடர்புக்கு கொள்ள முடியவில்லை என்றும் அவனைப் பற்றிய விவரங்களை கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
மாமாஜியும், அவர் மாப்பிள்ளையும் ஸ்பீக்கர் ஃபோனில் பேசி கொண்டிருந்ததை மற்ற மூவரும் கவனமாக கேட்டு கொண்டிருந்தனர்.  மாமாஜி பேசி முடித்த பின் அந்த டிரைவர் கடந்த சில மாதங்களாகதான் அவர்களிடம் வேலை பார்க்கிறானென்றும் அதற்கு முன்பு பல முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் வேலைப் பார்த்திருக்கிறானென்றும் தற்போதைய சூழ் நிலையில் அவனைப் பற்றிய விவரங்களைத் சேகரிப்பது அவர்களுக்கு ஆபத்தில் முடியுக்கூடும் என்பதால் அவர் வேண்டுகோளை மறுத்தான் விகாஸ். 
விகாஸின் பதிலில் மாமாஜியின் முகம் கடினமானது.  சில நொடிகள் அமைதியாக இருந்தவர், டிரைவரைப் பற்றி விவரங்கள் வேண்டாம் ஆனால் மனிஷைப் பற்றிய விவரங்கள் வேண்டுமென்ற முக்கியமான வேண்டுகோளை அவன் முன் வைத்தார்.  அதற்கு விகாஸ் கொடுக்க போகும் பதிலில் தான் அவர் பெண்ணின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்திருந்தார் மாமாஜி.  சில நிமிடங்கள் அவரைக் காக்க வைத்த விகாஸ்,  உடனே விவரம் சேகரிக்க அவனுக்கு அதிக செலவாகுமென்று தெரிவித்தான். அவன் பேரம் பேச தயாராக இருப்பதை உணர்ந்த மாமா ஜி விலை போனது அவர் மாப்பிள்ளை தான் என்று புரிந்து கொண்ட அந்த நொடியில் மாமா ஜியின் கையிலிருந்த ஃபோனில்,
“பையா….நான் ஸ்மிரிதி கார்மேகம்..நான் பேரம் பேசறதில்லே..எனக்கு யாரையும் விலை கொடுத்து வாங்கறதுலே உடன்பாடில்லை..அந்த மாதிரி ஆளுங்களை மலிவு விலை விற்பனைலே, தள்ளுபடிலே போட்டு தள்ளிடுவேன்.” என்று எச்சரிக்கை செய்துவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
சோபாவில், அதிர்ச்சியில் அசையாமல் அமர்ந்திருந்த மாமாஜியிடம்,
“மாமா ஜி…..நீங்க கிளம்புங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“பேட்டா..நான்” என்று அவர் மறுபடியும் ஆரம்பிக்குமுன்,
“எதுவும் சொல்ல வேணாம் மாமா ஜி..ப்ளீஸ் கிளம்புங்க.” என்றாள். அப்போது அவர் கையிலிருந்த புத்தகத்தைத் திறந்து கீதிகாவின் லிஸ்ட்டில் அவரும் ஒரு பெயரை எழுதிவிட்டு அதை மூடாமல் திறந்தபடி டேபிள் மீது வைத்தார்.
பின் மனுவிடம் சென்று அவன் கைகளைப் பிடித்து கொண்டு,”மாப்பிள்ளை, நான் தான் தப்பு பண்ணிட்டேன்…மன்னிச்சிடுங்க.” என்றார்.  அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று  மனு யோசிக்க,“விரேந்தர்” என்று ஸ்மிரிதி உரக்க அழைக்க, வாசலில் நின்றிருந்த விரேந்தர் உள்ளே ஓடி வர,
“மாமா ஜியை கேட்வரைக்கும் அழைச்சுகிட்டு போய் விடு.” என்று அவரை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றினாள்.
திறந்திருந்த நோட் புக்கில், கீதிகாவின் லிஸ்ட்டில் கடைசியாக,”விகாஸ்” என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

Advertisement