Advertisement

ஸ்மிரிதியின் மனு – 57
“சோனு..இவனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செய்..இன்னைக்கு வெளிலேர்ந்து வேலைக்கு வந்திருக்கற அத்தனை பேரையும் எப்பவும் போலே சாயந்திரமா வீட்டுக்கு அனுப்பிடு..நாளைலேர்ந்து அவங்கள்ள கொஞ்சம் பேர் மட்டும் வேலைக்கு வரட்டும்…நம்ம குவாடர்ஸ்லே இருக்கறவங்களை வைச்சு மற்ற வேலைகளை மனேஜ் பண்ணு..
வண்டியை எங்கே நிறுத்தி வைச்சிருக்க?” என்று ஸ்மிரிதி கேட்க,
ஸர்வெண்ட் குவார்டர்ஸுக்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிடம் ஸ்மிரிதியையும், விரேந்தரையும் அழைத்து சென்றான் சோனு.
“நீ போ..நாங்க பார்த்துக்கறோம்.” என்று சோனுவை அங்கிருந்து அகற்றியவள், காரை ஒருமுறை சுற்றி வந்தாள்.  வெளியிலிருந்து பார்த்த போது காரில் எந்த மாற்றமும் தெரியவில்லை.  மெதுவாக பின்பக்க கதவைத் திறந்தவள் கண்களில் ஸீட் மீதிருந்த மனிஷின் ஸ்கூல் பேக் பட்டது.  மனிஷைக் கடத்தியதற்கான அடையாளம் எதுவுமேயில்லாமல் சாதாரணமாக இருந்த உட்புறத்தைக் கூர்ந்து பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
“பிட்டியா” என்று அவளை அழைத்தான் விரேந்தர்.
“கார் கதவைத் திறக்ககூடாதுண்ணு மனிஷுக்குத் தெரியும்..ஆனாலும் திறந்திருக்கான்..ஹைவே மூடியிருந்தாலும் ஃபரிதாபாத் ரோட் மத்தியான நேரத்திலே ஆள் ஆரவாரமில்லாதது..ஒண்ணு முன்னாடியே அவங்க காரோட அங்கே காத்துகிட்டு இருந்திருக்கணும்..இல்லை இவங்க பின்னாடியே வந்து டிரைவர் எங்கே நிறுத்தினாலும் மனிஷைத் தூக்க தயாரா இருந்திருக்கணும்..முதல் சொன்னது நடக்க சான்ஸ் இல்லை..இரண்டாவதுதான் நடந்திருக்கு..
இரண்டு வண்டி விரேந்தர்..டூ வீலர், கார்..டூ வீலர்லே நம்ம காரை ஃபாலோ செய்தவங்கதான்  மனிஷ் கவனத்தைத் திசை திருப்பி கதவைத் திறக்க வைச்சிருக்காங்க..அதுக்கு அப்பறம் உடனே அவங்க ஆளுங்க வந்து மனிஷை அவங்க வண்டிக்கு மாற்றியிருக்காங்க..அஞ்சு நிமிஷத்துக்குள்ள இதெல்லாம் நடக்கணும்னா குறைஞ்சது நாலு பேராவது இருந்திருக்கணும்…மனிஷ ஏன் கதவைத் திறந்தான்?” என்று கேட்டபடி எல்லா கதவையும் திறந்து காரை ஆராய்ந்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
அந்த வேலையில் அவள் நேரத்தை வீணடிப்பதாக நினைத்த விரேந்தர் இந்தமுறை அவன் எண்ணத்தை வெளியிட்டான்.
“பிட்டியா..இன்னைக்கு காலைலே மாமாஜியை அழைச்சுகிட்டு வந்த டிரைவர்தான் கல்யாணத்துலே நம்ம டிரைவரை அந்தப் புது டிரைவருக்குக் அறிமுகப்படுத்தியிருக்கான்..மாமாஜியோட டிரைவரை விசாரிக்கணும்..” என்று விரேந்தர் சொல்லி முடிக்குமுன்,
“வேணாம்..இப்ப மனிஷை கண்டு பிடிக்கறதுதான் நம்ம வேலை..மாமாஜியோட டிரைவரும், அவன் கூட்டாளியும் அவங்க வேலையை சரியா செய்திட்டாங்க..அவங்க வேலை அவ்வளவுதான்.” என்று பேசி கொண்டே கோ டிரைவரின் ஸீட்டிற்கு அடியிலிருந்து கசங்கிய, அழுக்குப் படிந்திருந்த வெள்ளை நிற காகிதத்தை வெளியே எடுத்தாள் ஸ்மிரிதி. 
ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வந்தபின் வண்டிகள் சுத்தம் செய்யப்படுவதால் அந்தக் காகிதம் மனிஷை ஸ்கூலிலிருந்து அழைத்து வந்தபோது கீழே விழுந்திருக்ககூடும் என்று எண்ணி அதை கையில் எடுத்த படிக்க, அது  மனிஷ் படித்து கொண்டிருந்த பள்ளிக்கூடத்தின் பழைய ஸர்குலர்.  அதில் பெரிய எழுத்துக்களில் பள்ளியின் பெயரும் அதன் கீழே பத்தாம் வகுப்பு பரீட்சைப் பற்றிய தகவல் என்றும் எழுதப்பட்டிருந்தது.
அந்தக் காகிதத்தை விரேந்தரிடம் கொடுத்து,”பழைய ஸர்குலரை காமிச்சிருக்காங்க..தேதியைப் பார்க்காம பரீட்சைண்ணு எழுதியிருக்கறதை வைச்சு அதை வாங்க கார் கண்ணாடியை கீழே இறக்கியிருக்கான்.  அவங்களுக்கு அதுவே போதுமா இருந்திருக்கு.” என்றாள்.
அந்த ஸர்குலரை விரேந்தர் திருப்பி தந்தவுடன் அதை மனிஷின் புத்தக பையில் வைத்த ஸ்மிரிதி அவன் பையை முழுமையாக சோதித்து பார்த்தாள்.  மனிஷின் பள்ளி சம்மந்தப்பட்ட புத்தகங்களும், நோட் புக்குகளும் மட்டும் இருந்தன. 
“விரேந்தர், ஸ்பனா கல்யாணம் நடந்த ரிஸார்ட்டுக்குப் போய் அங்கேயிருந்து எனக்கு ஃபோன் பேசு.” என்று விரேந்தரை அனுப்பிவிட்டு அந்தப் பையுடன் வீடு நோக்கி சென்றாள் ஸ்மிரிதி.
கீதிகாவும், சிவகாமியும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தனர்.  கீதிகாவிடம் மனிஷின் புத்தக பையைக் கொடுத்து,
“நான் செக் பண்ணிட்டேன்..இது உள்ளே நமக்கு வேணுங்கற தகவல் எதுவும் இல்லை..அவன் பொருள் எல்லாம் இருக்கா இல்லை ஏதாவது மிஸ்ஸாகியிருக்காண்ணு நீங்க செக் செய்யுங்க.” என்றாள்.
மனிஷின் பையை வாங்கியவர் அதை நெஞ்சோடு அணைத்து கதறி அழ அப்போது வீட்டினுள் நுழைந்தான் மனு.  மனுவின் கையிலிருந்து ப்ரீஃகேஸை வாங்கி கொண்ட ஸ்மிரிதி அதே செண்டர் டேபிளில் வைத்துவிட்டு,
“முதல்லே இந்த அழுகையே நிறுத்திட்டு பையை செக் பண்ணுங்க.” என்று கோபமாகக் கத்தினாள்.
அவள் போட்ட சத்தத்தில் கீதிகாவின் அழுகை சட்டென்று நின்றது.  அவர் கையிலிருந்த பையை திறந்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்து செண்டர் டேபிளில் அடுக்க ஆரம்பித்தார்.  
ஸ்மிரிதியின் கோபத்தை பார்த்து பயந்து போன சிவகாமி அவர் மகனை கலவரத்துடன் பார்க்க அவனோ மனைவியின் மன நிலையை பார்த்து விஷயம் விபரீதமாகி கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டான்.
“மனு, லன்ச முடிச்சிட்டியா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“இல்லை..கோர்ட்லேர்ந்து உன்னோட பேப்பர்ஸ் எடுக்க நேரா நம்ம வீட்டுக்குப் போனேன்..அங்கேயிருந்து ஆஸ்பத்திரிக்கு..அங்கிளைப் பார்த்திட்டு, மாறனோட, அப்பாவோட ஃபோன் சார்ஜரை கொடுத்தேன்..உன்னோடது கொண்டு வந்திருக்கேன்..உன் ஃபோனை கொடு என்று அவளிடமிருந்து ஃபோனை வாங்கி வரவேற்பறையில் அதை சார்ஜில் போட்டான்.
அவன் பங்கிற்கு அனைத்தையும் யோசித்து செயல்பட்ட மனுவிடம்,
“உன் லாப் டாப் எடுத்துகிட்டு வந்திருக்கியா?”
“இல்லை..ஐ பாட் தான் இருக்கு ப்ரீஃகேஸ்லே.”
”சரி..நீ சாப்பிட வா.” என்று டைனிங் டேபிளிற்கு அழைத்து சென்றாள். அவனுக்குப் பரிமாறிய பின் அவனருகே அமர்ந்து கொண்ட ஸ்மிரிதியிடம்,
“அப்பா உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு.” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தவளிடம்,”அப்பாக்குவுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க தில்லி போலீஸ்லே..ஹோம் மினிஸ்ட்ரிலே இருக்காங்க.” என்று மறுபடியும் அதையே பேச,
“இது வேற விஷயம்..போலீஸ்க்குப் போக முடியாது.”
“அப்ப சாப்பிட்டுகிட்டு..உன் கோபத்தைக் காட்டிகிட்டு சும்மா சுத்திகிட்டு இருக்க போறியா?” என்று இப்போது கோபப்படுவது மனுவின் முறையானது.
“சும்மா சுத்திகிட்டு இல்லை..வேலை நடந்துகிட்டு இருக்கு…இப்பதான் விரேந்தரை..” என்று ஆரம்பித்தவள் மேலே பேச முடியாமல் அவள் தலையை இருகைகளால் அழுந்தப் பிடித்தாள்.
“என்ன? தலை வலிக்குதா?” என்று கேட்டான் மனு.
“இல்லை..லேசா இருக்கு..காலைலேயும் இப்படிதான் இருந்திச்சு.” என்று அவள் பதில் சொல்லி கொண்டிருக்கும் போது அவள் ஃபோன் அழைக்க, சேரிலிருந்து எழ முடியாமல் ஸ்மிரிதி அமர்ந்திருக்க, மனு சாப்பிட்டு கொண்டிருக்க, சிவகாமியிடம்,
“அம்மா..அந்த ஃபோனை எடுத்துகிட்டு வாங்க.” என்றான்.
ஸ்மிரிதியின் ஃபோனை கொண்டு வந்து சிவகாமி கொடுக்க, அந்த அழைப்பு டாக்டர் நேத் ராவதியிடமிருந்து.  அழைப்பை ஏற்ற ஸ்மிரிதி பேச முடியாமல் மனுவின் கையில் ஃபோனைத் திணித்துவிட்டு.”நான் வாஷ் ரூம் போனும்.” என்று அவசரமாக ஓடி போனாள்.
“அம்மா, அவளுக்கு ஒரு மாதிரி இருக்குண்ணு சொல்றா..என்னென்னு பாருங்க.” என்று சிவகாமியை ஸ்மிரிதியின் பின்னே அனுப்பி வைத்தான் மனு.
ஃபோனில் காத்திருந்த டாக்டர் நேத்ராவதியிடம்,”சொல்லுங்க ஆன்ட்டி.” என்றான் மனு.
“ஸ்மிரிதி எங்கே பேட்டா?”
“வாஷ் ரூம் போயிருக்கா..காலைலேர்ந்து அவளுக்கு ஒரு மாதிரியா இருக்கு போலே.” 
“ஓ..அதான் ஆஸ்பத்திரிலே இருக்காம வீட்டுக்கு வந்திட்டாளா?”
அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல்,”ஆன்ட்டி..ஸ்மிரிதிக்கு எதுவும்..” என்று அவன் இழுக்க,
அவன் சொல்ல வந்ததை உடனே புரிந்து கொண்டவர்,”வாய்ப்பில்லை..டிரைவர் மட்டும்தான் கிளோஸ் காண்டெக்ட்லே இருந்தான்..அவனை கிளியர் பண்ணியாச்சு..பூரா வீடும் செக் செய்தாச்சு..அவளுக்கு ஸ்டரெஸா இருக்கும்.” என்றார்.
“பெங்களூர்லேர்ந்து வந்த பிறகு இப்படிதான் சோர்வா இருக்கா..மனசு சரியில்லைன்னு நினைக்கறேன்.”
“அப்பலேர்ந்தா?” என்று சந்தேகமாக கேட்க,
“ஆமாம்..சரியா சாப்பிடறதுமில்லே.”
அதற்கு அவர் பதில் சொல்லுமுன் ஸ்மிரிதி வந்துவிட அவளிடம் ஃபோனைத் தந்தான் மனு. சிவகாமியும் அவர் மகன் அருகில் அமர்ந்து கொண்டார். 
ஃபோனில் “சொல்லுங்க ஆன் ட்டி.” என்றாள் ஸ்மிரிதி.
“என்ன ஆச்சு பேட்டா..வீட்டுக்கு வந்திட்டே..ஆஸ்பத்திரிலே இப்பதான் பேசினேன்..அப்பா உடல் நிலைலே முன்னேற்றமிருக்கு.”
“தாங்க்ஸ் ஆன்ட்டி..” என்று ஸ்மிரிதி முடிக்குமுன்,
“டூ ஸுன் ஃபார் தாங்க்ஸ்.” என்று முடித்தார் டாக்டர் நேத் ராவதி.
“ஆன்ட்டி.” என்று கலவரமான ஸ்மிரிதியிடம்,
“அவருக்கு சரியாகிடும்.. ஆனா எப்ப முழுமையா ரெகவர் ஆவருண்ணு சொல்ல முடியாது..மந்த்ஸ்..இயர்ஸ்.” என்றார் டாக்டர் நேத்ராவதி.
“ஆன்ட்டி..” என்று விளித்த ஸ்மிரிதியின் மனது முழுவதுமாக நொறுங்கிப் போயிருந்தது.
“யெஸ் பேட்டா.. என்று சொன்னவர்,”உனக்கு என்ன உடம்புக்கு? என்று கேட்டார்.
“சோர்வா இருக்கு ஆன்ட்டி..இன்னைக்கு ரொம்பவே தலை சுத்தற மாதிரி இருக்கு..கஷ்டப்பட்டு சாப்பிட்டேன்.” என்றாள்.
“ஆஸ்பத்திரிலே இருந்திருந்தேன்னா உடனே ஒரு ஜென்ரல் செக் அப் செய்திருக்கலாம்..நோ பிராப்ளம் அப்பாவைப் பார்க்க போகும் போது ஒரு செக் அப் செய்துக்க..என்றவர்..ஆல்ஸோ..கெட் எ பிரக்னென்ஸி டெஸ்ட் டன்.” என்றார்.
அவர் கொடுத்த ஆலோசனையில் சில நிமிடங்கள் யோசனையில் ஆழந்த ஸ்மிரிதி,
“போனமுறை ஒருநாள் தான் ஃபிலோ இருந்திச்சு.” என்று முணுமுணுத்தாள்.
“சில சமயம் சில பேருக்கு இந்த மாதிரி ஆகும்..நீ வீட்லே ஓய்வெடுத்துக்க..உன் ஹஸ்பண்ட் கிட்ட ஃபோனைக் கொடு நான் அவர்கிட்ட பேசிக்கறேன்.” என்றார்.
மனுவிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டு அவன் எதிர்வினையை எதிர்கொள்ள தயங்கி,  வரவேற்பறைக்குப் போய் அமர்ந்து, அவன் பெட்டியைத் திறந்து ஐ பாடை வெளியே எடுத்தாள் ஸ்மிரிதி. 
டாக்டர் நேத்ராவதியுடன் பேசி முடித்த மனு அவனருகில் அமர்ந்திருந்த சிவகாமியிடம்,”அவ சோர்வைக் குறைக்க அவளுக்கு லெமன் ஜுஸ் இல்லை மோர் கலந்து கொடுக்க சொல்றாங்க..பிடிக்கிதோ, பிடிக்கலேயோ நல்லா சாப்பிட சொல்றாங்க.” என்றான். அவன் பேசியதைக் கேட்டு கொண்டிருந்த ஸ்மிரிதியின் மனது ஒரு நொடி “நேத்ரா ஆன்ட்டி அவ்வளவுதான் சொன்னங்களா?” என்று எண்ணியது.
“பாத் ரூம்லே பச்சை தண்ணிலே முகத்தை பலமுறை கழுவிகிட்டு இருக்கா..அப்படி செய்தா சோர்வு போயிடுமா இல்லை பிரச்சனைதான் தீர்ந்திடுமா? உங்கப்பாகிட்ட பேசினியா டா? என்ன சொன்னாரு?” என்று விசாரித்தார்.
“அவருக்குத் தெரிஞ்சவங்ககிட்ட பேசறேன்னு சொல்றாரு..ஸ்மிரிதி வேணாம்ங்கறா.” என்றான் மனு.
“எனக்குப் பயமா இருக்குடா..சாயந்திரம் ஆகிடுச்சுன்னா மனிஷை எப்படி டா கண்டுபிடிக்க முடியும்?” என்று கவலையுடன் கேட்க, அப்போது ஸ்மிரிதியின் ஃபோனில் விரேந்தர் அழைத்தான்.
“அம்மா, அவகிட்ட கொடுங்க..விரேந்தர்..நான் கை அலம்பிகிட்டு வரேன்.” என்றான் மனு.
ஸ்மிரிதியிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டு கீதிகாவின் அருகில் அமர்ந்து கொண்டார் சிவகாமி.  அவரருகில் சிவகாமி அமர்ந்ததையோ அதற்கு சற்றுமுன் ஸ்மிரிதி அமர்ந்ததையோ உணராமல் மனிஷின் பையிலிருந்து எடுத்து வைத்த பொருட்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தார் கீதிகா. 
“சொல்லு விரேந்தர்.” என்று அழைப்பை ஏற்றவள் மனு வருவதற்குள் அவளுக்கு வேண்டிய தகவலைப் பெற்று கொண்டு விரேந்தரை வீட்டிற்குத் திரும்பும்படி கட்டளையிட்டாள். அவனுடைய பெட்டியிலிருந்து ஸ்மிரிதிக்குத் தேவைப்படுமென்று அவன் கொண்டு வந்திருந்த பேப்பர்களை அவளிடம் கொடுத்தான் மனு.
அதை வாங்கி அதிலிருந்து அவளுக்குத் தேவையானவற்றை தனியாக வைத்து கொண்டு மீதியை மனுவிடம் திருப்பி கொடுத்தவள், கீதிகாவைப் பார்த்து,
“என்கிட்ட இருக்கற எல்லா காஷும் இரண்டு மணி நேரத்திலே கிடைக்கற மாதிரி ஏற்பாடு செய்ய போறேன்..அப்பாகிட்டேயிருந்து இப்ப எதுவும் எடுக்க முடியாது..தேவை ஏற்பட்டா உங்களோடதுலேர்ந்து எடுக்க வேண்டி வரும்..உங்க விஷயத்தை யார் பார்த்துக்கறாங்களோ அவங்கிட்ட காஷ் அரேன்ஜ் பண்ண சொல்லிடுங்க.” என்றாள்.
அதுவரை மனிஷின் பொருட்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தவர் மெதுவாக எழுந்து அவரறைக்குச் சென்றார்.
“நிஜமாவா ஸ்மிரிதி? பணத்தைக் கொடுத்தா மனிஷை விட்டிடுவாங்களா?” என்று சிவகாமி கேட்க,
“அந்த மாதிரி நடந்தா எல்லாம் சுலபமா முடிஞ்சிடும் ஆன்ட்டி..ஆனா அப்படி நடக்க போகறதில்லே..அவனைப் பணத்துக்காக கடத்திகிட்டு போகலே..அவன் பணத்துக்காக அவனைக் கடத்திகிட்டு போயிருக்காங்க..
அப்பாதான் அவனோட பாதுகாவலர்..அதனாலேதான் அவரை முதலே செயலிழக்க வைச்சிருக்காங்க..அப்பாவோட பாதுகாப்பு இல்லாத மனிஷை அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம் ஆன்ட்டி..
ஆனாலும் இது பணத்துக்காக இருக்காதாண்ணு ஒரு ஆசை..அதான் பணத்தை ஏற்பாடு செய்யறேன்..ஃபோனுக்கு காத்துகிட்டு இருக்கேன்.” என்றாள்.
“அப்படியே இருக்கட்டும் ஸ்மிரிதி..உன்னோட எல்லா பணத்தையும் கொடுத்து அவனை கூட்டிகிட்டு வந்திடு..மருதமலை முருகா மனிஷுக்கு காவலா இரு பா.” என்று முருகனிடம் வேண்டுதல் வைத்தார் சிவகாமி. 
அப்போது அவரறையிலிருந்து திரும்பிய கீதிகா,”மாப்பிள்ளை..இதுலே எல்லா விவரமும் இருக்கு..யாருகிட்ட பேசனுமோ நீங்களே பேசுங்க..நான் எங்கே கையெழுத்து போடணும்னு சொல்றீங்களோ அங்கே போடறேன்.” என்று அவர் கையிலிருந்து நீளமான பேக்கை மனுவின் கையில் திணித்தார்.
மனுவை மாப்பிள்ளை என்றழைத்து அவனை நம்பி அனைத்தையும் ஒப்படைத்த அந்த க்ஷணத்தில் கீதிகாவின் மேல் சிவகாமிக்குப் பற்றுதலும் ஸ்மிரிதிக்கு ஒட்டுதலும் ஏற்பட்டது. 
“இங்கே வாங்க..உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.” என்று கீதிகாவை அழைத்து அவளருகே அமர வைத்த ஸ்மிரிதி,
“காலைலே மாமாஜி வந்த போது அவங்க கார் டிரைவரைப் பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.
“நானும், உங்கப்பாவும் தான் அண்ணன், அண்ணியை வழி அனுப்பி வைச்சோம்..அந்த டிரைவர் நம்ம வீட்டுக்கு முன்னாடியும் வந்திருக்கான்..ஊர்லேர்ந்து அப்பப்ப அழைச்சுகிட்டு வர்றாங்க.” என்றார் கீதிகா.
“சரி..இப்ப ஒரு வீடியா க்ளிப் காட்ட போறேன்..ஸப்னா கல்யாணத்திலே கேட்லே இருந்த சிசி டிவி பதிவு…அன்னைக்கு நம்ம வீட்டு வண்டிங்க நிறைய இருந்திச்சு..அதுலே மாமாஜியோட வண்டிங்களை கட் செய்து விரேந்தர் அனுப்பியிருக்கான்.. நிதானமா பார்த்து அவனை அடையாளம் காட்டுங்க.” என்று சொல்லி ஐ பாடை அவரிடம் கொடுத்தாள்.   
பத்து நிமிடங்கள் கழித்து ஐ பாட் அவளிடம் திரும்பி வந்த போது அதிலிருந்தவனின் முகத்தை அவள் ஃபோனில் படம் பிடித்து கொண்டாள் ஸ்மிரிதி.
“எதுக்கு ஸ்மிரிதி? என்று கேட்டார் கீதிகா.
“இவன் விலை போனவன்..இவன் மட்டுமா இல்லை மாமாஜியுமான்னு கண்டு பிடிக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“அண்ணனா?” என்று அதிர்ச்சியானார் கீதிகா.
“அப்படிதான் தோணுது..அப்பாவுக்காக வண்டி ரெடி செய்ய விரேந்தர் சொன்ன போது இந்த டிரைவர் கராஜ்லே இருந்திருக்கான்..அப்பா அந்த வண்டிலேதான் போக போறாருண்ணு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு….அப்பாக்கு மட்டும் தான் பாய்ஸனிங் ஆகியிருக்கு..அவ்வளவு கவனமா அவன் வேலைப் பார்த்திருக்கானா இல்லை எல்லாரும் அவ்வளவு கவனமா இருந்திருக்காங்களான்னு தெரியணும்..மாமாஜிக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி… வேணாம்…உங்கப்பாவும் ஆஸ்பத்திரிலே இருக்காங்க..வேணாம்” என்று பயந்து போய் மறுத்தார் கீதிகா.
“இவ்வளவு பயம் இருக்கறவங்க எதுக்கு மனிஷை உங்ககூட வைச்சுக்க ஆசைப்பட்டீங்க? எதுக்கு அவனோட பொறுப்பை ஏத்துகிட்டீங்க?..அவனை அவங்க அப்பா குடும்பத்துகிட்ட கொடுத்திருக்க வேண்டியதுதானே..அவன் பணத்துக்காக அவனைப் பத்திரமா பார்த்துகிட்டு இருந்திருப்பாங்க…
எங்கப்பாவை கல்யாணம் பண்ணிகிட்டு உங்க பொறுப்பை அவர் தலைலே கட்டி.. மனிஷுக்கு அவரை கார்டியனாக்கி அவன் பணத்துக்கு காவலாக்கினீங்க.. இன்னைக்கு அதனாலே அவரு உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு..” என்று வெடித்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர் அந்த அறையிலிருந்த மூவரும்.  முதலில் சுதாரித்து கொண்ட சிவகாமி,”ஸ்மிரிதி..என்ன பேசற நீ? உங்கப்பாவும் விரும்பிதான் இவங்களைக் கல்யாணம் செய்துகிட்டு இருக்காரு..விருப்பத்தோடதான் இவங்க பொறுப்புக்களை அவரோடதா ஏத்துகிட்டிருக்காரு.” என்றார்.
“அப்ப இவங்க மட்டும் அவரை விரும்பி கல்யாணம் செய்துகலேயா..விருப்பப்பட்டு ஏத்துகிட்ட வாழ்க்கைத் துணை ஆஸ்பத்திரிலே இருக்கும் போது இப்படிதான் பொறுப்பில்லாம, தைரியமில்லா இருப்பாங்களா?” என்று ஸ்மிரிதி எதிர் கேள்வி கேட்டதில் அவள் எதிர்ப்பார்த்த எதிர்விளைவு கீதிகாவிடம் ஏற்பட்டது.
“மனிஷை அவங்க அப்பா குடும்பத்தோட விடலே.. ஏன்னா அவங்க மனுஷங்கலே இல்லே..அவன் பணத்துக்காக அவனை எப்பவோ கொன்னு புதைச்சிருப்பாங்க..உங்கப்பா எங்க கல்யாணத்தை பற்றி உன்கிட்ட என்ன சொன்னாருன்னு எனக்குத் தெரியாது..உங்கப்பாவை நான் இஷ்டப்பட்டு விரும்பிதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்..அவரைப் போலே நல்ல மனுஷனை நான் பார்த்ததேயில்லே….அதனாலேதான் என் பையன் மனிஷ் அவரு பையனா.. மனிஷ் கார்மேகமா மாறினான்.”என்று ஸ்மிரிதிக்குப் பதில் கொடுத்தவர், உடனே அவர் ஃபோனை எடுத்து,
”நீங்க உடனே எங்க வீட்டுக்கு வாங்க.” என்று அவர் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தார் கீதிகா.

Advertisement