Advertisement

ஸ்மிரிதியின் மனு – 56
ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம்,
“கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள்.  அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர்.
“என்ன பண்ணுது பிட்டியா?” என்று கவலையாகக் கேட்க,
“ஒண்ணுமில்லே..காலைலே சரியா சாப்பிடலே..கீதிகா ஃபோன் செய்தவுடனேயே புறப்பட்டு வந்திட்டேன்.” என்று சொன்னவள், அந்தத் தண்ணீரை சிறிது முகத்திலும் தெளித்து கொண்டாள்.
“நீங்க இங்கையே உடகார்ந்திருங்க..வண்டி வந்தவுடனே நான் வந்து உங்களை அழைச்சுகிட்டு போறேன்.” என்று வாயிலுக்குச் சென்றான் விரேந்தர்.
அவள் மனதையும், உடலையும் ஒருநிலைப்  படுத்தி கொண்ட ஸ்மிரிதி, காருக்காக காத்திருந்த நேரத்தில் முதலில் கீதிகாவிற்கு அழைத்து ஏதாவது ஃபோன் கால் வந்ததா என்று விசாரித்தாள்.  அவர் இல்லை என்று சொன்னவுடன் அந்த அழைப்பைத் துண்டித்து உடனே நாதனுக்கு அழைப்பு விடுத்து அன்று காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அவருக்கு தெரியப்படுத்தி அவரையும், சிவகாமியையும் அழைத்து வர விரேந்தரை அனுப்ப போவதாக தெரிவித்து விட்டு அவர் எந்த ஆலோசனையும் கொடுக்குமுன் அந்த அழைப்பையும் துண்டித்தாள்.
அடுத்த அழைப்பிற்கு முன் சிறிது நேரம் யோசனை செய்த ஸ்மிரிதி ஒரு முடிவுக்கு வந்து அவளுடைய ஃபோனிலிருந்து யாதவ் என்ற நபரை அழைத்தள்.  அவள் அழைப்பை ஏற்று கோண்டு முதல் வார்த்தையாக,”ஹுகும் மேடம்.” என்ற யாதவிற்கு அவன் செய்ய வேண்டியதைப் பட்டியலிட்டவள் இறுதியில் அவள் ஃபோனிலிருந்து மனிஷின் சமீபத்திய ஃபோட்டோவை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.  அதற்குபின் அவர்கள் கராஜைக் கவனித்து கொள்ளும் சோனுவை ஃபோனில் அழைத்து,
“மனிஷை ஸுகூலுக்கு அழைச்சுகிட்டு போன டிரைவர் வீட்டுக்கு வந்துகிட்டிருக்கான்..நான் வீட்டுக்கு வர்றத்துகுள்ள நீ அவன்கிட்ட  விசாரிச்சு வை.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். 
அதற்குமேல் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் எந்த அழைப்பையும் ஏற்காமல் காரில் மௌனத்தைக் கடைபிடித்து வீடு வந்து சேர்ந்தாள் ஸ்மிரிதி.
அவள் வீட்டினுள் நுழைந்தது தெரியாமல்  தன்னிலை மறந்து அவர் ஃபோனைத் தீவிரமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கீதிகா.  நேராக வரவேற்பறையின் இடது புறத்தில் இருந்த டைனிங் ஏரியாவுக்கு சென்றவள் அங்கே டைனிங் டேபிள் காலியாக இருப்பதைப் பார்த்து,
“குக்கை வர சொல்லுங்க..அஞ்சு பேருக்கு அர்ஜெண்டா சமைக்கணும்..ஆஸ்பத்திரிலே இருக்கற இரண்டு பேருக்கு கொடுத்து விடணும்.” என்றாள்.
அவள் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த கீதிகாவின் கண்களில் கண்ணீர், பேச முயன்று தோற்று போனவர், தைரியத்தை வரவழைத்து,”மனிஷ்..இன்னும் வரலே.” என்றார்.
“தெரியும்.” என்று பதில் சொன்னவள் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த இண்டர்னல் ஃபோனில் குக்கை அழைத்து கட்டளையிட்டாள்.
அதன்பின் கீதிகாவின் அருகே வந்தமர்ந்து,”அப்பா தொட்டது என்ன விஷம்ணு தெரிஞ்சிடுச்சு..டிரிட்மெண்ட் நடக்குது..ஐ சி யு விலேதான் இருக்காங்க.” என்றாள்.
அவள் சொன்ன தகவல்களைக் கேட்டு கொண்ட கீதிகா,”மனிஷ்  எங்கே?” என்று அழுதத்துடன்   கேட்டார்.
“தில்லியை விட்டு வெளியே போயிருந்தா அடுத்த ஒரு மணி நேரத்திலே தெரிஞ்சிடும்..எல்லா டோல் பூத்லேயும் செக் செய்ய ஆள் அனுப்பியிருக்கேன்..தில்லி உள்ளேதான் இருக்காண்ணா அப்பாவோட ஃபோனுக்கு கால் வரும்..அது அவரோட கார்லையே இருக்கு..அதனாலே வீட்டுக்குதான் ஃபோன் செய்வாங்கண்ணு எதிர்பார்க்கறேன்..
மனிஷை ஸ்கூலுக்கு அழைச்சுகிட்டு போன டிரைவர் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கான்..  சோனு அவனை விசாரிப்பான்..ஃபோன் வரும் போது நான் வீட்லே இருக்கணும்.. அதான் மாறனை ஆஸ்பத்திரிலே விட்டிட்டு வீட்டுக்கு வந்திட்டேன்..
நாதன் அங்கிளையும், ஆன்ட்டியையும் அழைச்சிட்டு வர விரேந்தரை எங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கேன்..அங்கிளை ஆஸ்பதிரிலே விட்டிட்டு ஆன்ட்டியை இங்கே அழைச்சுகிட்டு வந்திடுவான்..மனுவுக்கு இனிமேதான் ஃபோன் செய்யணும்.” என்று அவள் அதுவரை எடுத்திருந்த நடவடிக்கைகளை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
கீதிகாவிடம் ஸ்மிரிதியின் விளக்கங்களுக்கு எதிரோலி இல்லை.  ஸ்மிரிதி சொன்ன செய்தியில் சிலையானவர் வரவேற்பறை நடுவில் இருந்த புத்தர் சிலையை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.  அப்போது வரவேற்பறையிலிருந்த இன்டர்னல் ஃபோன் ஒலிக்க அதை எடுத்த ஸ்மிரிதி,”கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். மறுபடியும் அவளை யாரும் தொந்தரவு செய்யுமுன் மனுவிற்கு ஃபோன் செய்தாள்.  அவளின் மூன்றாவது அழைப்பை ஏற்றவன்,
“காலைலே அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தேன்..அர்ஜெண்ட்டா இருந்தா மட்டும் ஆபிஸுக்கு ஃபோன் செய்யுங்கண்ணு..விடமா ஃபோன் செய்திருக்காங்க..பத்து நிமிஷம் முன்னாடி வரை..ஆள் வந்து மெஸெஜ் கொடுத்துகிட்டே இருந்தான்..நான் இப்பதான் ஃப்ரீ ஆனேன்.. ஃபோனை ஆன் பண்றேன்..உன்னோட ஃபோன் கால் வருது..என்ன ஆயிடுச்சு உங்களுக்கெல்லாம்?” என்று அவன் எரிமலையாக வெடிக்க,
“அப்பா ஐ சி யுவிலே இருக்காங்க..டிரான்ஸ் டெர்மல் பாய்ஸனிங்..மனிஷை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கடத்திட்டாங்க.” என்று அமைதியாக அணுகுண்டினால் எரிமலையை அணைத்தாள் ஸ்மிரிதி.
அதற்குபின் ஏற்பட்ட மயான அமைதியை சில நிமிடங்கள் கழித்து உடைத்த மனு,”நீ எங்கே இருக்க இப்ப?” என்று கேட்டான்.
“எங்க வீட்லே..ஆன்ட்டியை இங்கே அழைச்சுகிட்டு வர சொல்லியிருக்கேன்..மாறனுக்குத் துணையா அங்கிள் ஆஸ்பத்திரிக்கு போறாங்க.”
“எங்கப்பா என்ன சொன்னாங்க?” 
“அங்கிள் எதுவும் சொல்றத்துக்கு முன்னாடி நான் ஃபோனை வைச்சிட்டேன்.”
“ஏன்?”
“நீயும் யார்கிட்டையும் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேணாம்..முதல்லே வீட்டுக்கு வா..பேசகிக்கலாம்.” 
அவளுடைய யோசனைக்கு மறுப்பு தெரிவிக்க நினைத்த மனு அதை விடுத்து,”வரேன்..உங்கப்பா எந்த ஆஸ்பத்திரிலே இருக்காரு?” என்று விவரத்தைக் கேட்டு கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.
கீதிகா அதே நிலையில் அமர்ந்திருக்க, இண்டர்னல் ஃபோனில் குக்கை அழைத்து மதிய உணவை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டாள்.  
மனிஷ் கடத்தப்பட்டு கிட்டதட்ட ஒரு மணி நேரமான நிலையில் எந்தவித தகவலும் இல்லாமல், அவள் எதிர்பார்த்து கொண்டிருந்த விவரங்களும் கிடைக்காமல் அமைதியாக கீதிகாவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி.  இருவரும் ஒரே வீட்டில் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்படவில்லை. அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்த இருவரும் ஒரே நாளில் அவர்களைத் தனிமையில், தடுமாற்றத்தில் தள்ளி விட்டிருந்தனர்.
அவர்களைச் சூழ்ந்திருந்த இருளை அகற்ற வெளிச்சத்தை தேடி ஸ்மிரிதியின் மனது அலைந்து கொண்டிருக்க அதே இருளில் அவர் மனதை முழுமையாகத் தொலைத்து கொண்டிருந்தார் கீதிகா.  
அப்போது, அவர்களுக்காக தயாரான மதிய உணவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு கீதிகாவின் கட்டளைக்காகக் காத்திருந்த வேலையாளிடம்,
“நீங்க போங்க..நான் பார்த்துக்கறேன்.” என்று அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தாள் ஸ்மிரிதி.
டேபிளில் தயாராக இருந்த உணவு ஸ்மிரிதியின் பசியைத் தூண்ட, நேரே டைனிங் டேபிளிற்கு சென்று அங்கே இருந்ததை ஒரு தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடித்த போது விரேந்தருடன் வீட்டிற்குள் தயக்கத்துடன் நுழைந்தார் சிவகாமி.
“வாங்க ஆன் ட்டி.” என்று அவரை ஸ்மிரிதி வரவேற்க, சோபாவில் அமர்ந்திருந்த கீதிகாவோ அவரைப் பார்த்தவுடன் ஓலமிட்டு அழ ஆரம்பித்தார். உடனே கீதிகா அருகே சென்ற சிவகாமி அவரை அணைத்து கொள்ள, கீதிகாவின் அழுகை கூடியது.
அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விரேந்தரிடம்,”நீ போய் சாப்பிடு..கொஞ்ச நேரத்திலே நான் வரேண்ணு சோனுகிட்ட சொல்லிடு.” என்றாள்.
விரேந்தர் அங்கிருந்து சென்றவுடன்,”ஆன்ட்டி, லன்ச் ரெடியா இருக்கு..நான் இப்பதான் சாப்பிட்டேன்..நீங்களும் சாப்பிட வாங்க..அங்கிளுக்கும், மாறனுக்கும் ஆள் மூலம் சாப்பாடு அனுப்பிட்டேன்..இவங்களையும் கொஞ்சம் சாப்பிட சொல்லுங்க.” 
“என் பையனைக் கண்ணாலே பார்க்காம நான் சாப்பிட மாட்டேன்.” என்றார் கீதிகா.
“அதுக்கு நிறைய வேலைங்க நடந்துகிட்டு இருக்கு..நீங்களும் உங்க வேலையை சரியா செய்யணும்..அதுலே சாப்பாடும் ஒண்ணு….தயவு செய்து கொஞ்சமாவது லன்ச் சாப்பிடுங்க..நான் அந்த டிரைவரைப் பார்த்திட்டு வரேன்.” என்று சொல்லி வீட்டிலிருந்து வேலையாட்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்தாள் ஸ்மிரிதி.  அங்கே அவளுக்காக சோனுவுடன் காத்திருந்தான் விரேந்தர்.
“எப்படி?” என்று சோனுவைப் பார்த்து கேட்டாள்.
“ஸ்கூலேர்ந்து வர்ற வழிலே தூக்கிட்டாங்க.” என்றான் சோனு.
“டிரைவர் உடந்தையா?”
“தெரியலே..அவனுக்கு எதுவும் தெரியாதுண்ணு அழறான்..நல்லா விசாரிச்சுட்டேன்..இதுக்கு மேலே விசாரிச்சா தாங்கமாட்டான்.”
“மனிஷ் வர்ற ஹைவே ரோடுலே எங்கையும் வண்டியை நிறுத்த முடியாது.” என்றாள் ஸ்மிரிதி.
“இது வழக்கமான ரூட் இல்லை..ஹைவேலே வேலை நடக்குதுண்னு ஒரு பார்ட் மூடி வைச்சிருக்காங்க.. எல்லாரும் ஃபரிதாபாத் ரூட் தான் யூஸ் செய்யறோம்..அதான் டிரைவர் அந்த வழிலே வந்திருக்கான்.”
“எங்க அவன்?”
“இங்கேதான் காலி வீட்லே வைச்சிருக்கு.”
“என்னதான் சொல்றான்?” 
“வண்டியை ஆன்லே வைச்சிட்டு அஞ்சு நிமிஷம் வெளியே போயிருக்கான்.. திரும்பி வர்றத்துக்குள்ள மனிஷைக் காணுமும்னு சொல்றான்.”
“வண்டிலேர்ந்து எதுக்கு இறங்கினான்?”
“பாத் ரூம் போக.” என்றான் சோனு.
“மனிஷ் காணாம போய் இரண்டு மணி நேரம் ஆகப்போகுது..
எல்லா டோல் ரோடையும் யாதவ் செக் செய்துகிட்டு இருக்கான்..விரேந்தர், நீ  நம்ம ஆளுங்களை இந்த சைட்லே சோனிபத், பஹதூர்கட், ஃபரிதாபாத் ஹைவே.. அதே போலே உபி சைட்ல நோயிதா, கிரெடர் நோயிதா, காஸியாபாத், பாக்பத், ஹைவேக்கு அனுப்பி விசாரி.  
எல்லார்கிட்டையும்  மனிஷோட ஃபோடோ இருக்கணும்….இதுவரைக்கும் நம்ம பார்வைலே படலேன்னா இருட்டறத்துக்காக காத்துகிட்டிருக்காங்க.” என்றாள் ஸ்ம்ரிதி.
உடனே அவன் ஃபோனில் பிஸியானான் விரேந்தர்.  சோனுவுடன் அந்த டிரைவர் இருந்த அறைக்குச் சென்றாள் ஸ்மிரிதி.
அந்த அறையின் தரையில் பலத்த காயங்களுடன் கிடந்தான் அந்த டிரைவர்.  அவனைச் சுற்றி அசிங்கப்படுத்தி வைத்திருந்தான். ஸ்மிரிதியைப் பார்த்தடன் அவள் காலடியில் விழுந்து,
”தீதி..தீதி..நான் ஒண்ணுமே செய்யலே..எனக்கு ஒண்ணும் தெரியாது..மனிஷ் தம்பியை எப்பவும் போலேதான் ஸ்கூலேர்ந்து அழைச்சுகிட்டு வந்தேன்.” நான் தவறு செய்யவில்லை என்றான் அழுகையுடன்.
அவனிடமிருந்து வெளிப்பட்ட துர் நாற்றத்தைப் பொருட்படுத்தாமல், அவன் மீதிருந்த அசிங்கத்தில் அருவெறுப்படையாமல் அவள் கால்களைப் பற்றி இருந்த அவன் கைகளை விலக்கி, அவன் எதிரே அமர்ந்த ஸ்மிரிதி, அவன் முகத்தை நிமிர்த்தி,”அங்கே எதுக்கு பாத் ரூமுக்கு நிறுத்தின?” என்று கேட்டாள்.
“தீதி..ரொம்ப அவசரம்.” 
“எங்கேயும் நிறுத்தகூடாதுன்னு உனக்குத் தெரியும் ஆனாலும் நிறுத்தியிருக்க..ஏன்?” என்று அமைதியாக கேட்டாள் ஸ்மிரிதி.
“தீதி..அவசரமா வந்திடுச்சு.” என்று அதே பதிலை அவன் சொன்னவுடன்,
“ஏன் டா வந்திச்சு?” என்று கோபத்தில் ஸ்மிரிதி குரலை உயர்த்த,
அவன் கண்களில் பயம் வந்தது.
“ஏன் டா வரணும்..ஒரு இடத்திலேயும் நிக்காம ஸ்கூலுக்கு மட்டும் அழைச்சுகிட்டு போய் திரும்ப அழைச்சுகிட்டு வரணும்னு உனக்கு பயிற்சி கொடுத்திருக்குயில்லே..ஸாபோட வண்டியை ஆறு மணி நேரம் எங்கேயும் நிறுத்தாம ஓட்டுவயில்லே..
இன்னைக்கு உனக்கு என்ன டா ஆச்சு?..உடம்புக்கு முடியலேன்னா ஏன் டா வேலைக்கு வந்த?”
அவன் உடல் நிலையைப் பற்றி ஸ்மிரிதி கேட்டவுடன்,
“தீதி..நல்லாதான் இருந்தேன் தீதி..திடீர்னு அப்படி ஆயிடுச்சு.” என்று அவனையறியாமல் அந்த சிறு தகவலை வெளியிட்டான்.
அவன் அளித்த வாய்ப்பை நழுவ விடாமல்,
“தீடிர்னு இப்ப உன்னை இங்கையே முடிச்சிடவா? என்று ஸ்மிரிதி சாதாரணமாக கேட்க, ஸ்மிரிதி அப்படி பேசக்கூடும் என்று எதிர்பார்த்திராத அவன், அதிர்ந்து அவளைப் பார்க்க,”விரேந்தர்” என்று கத்தினாள் ஸ்மிரிதி.   சற்று தொலைவில் ஃபோனில் பேசி கொண்டிருந்த விரேந்தர் ஓடி வர,
“இவனோட வீட்டுக்குப் போய் இவன் குடும்பம் மொத்ததையும் கூட்டிகிட்டு வா.” என்று கட்டளையிட்டாள்.
“பிட்டியா.” என்று விரேந்தர் தயங்க..”போடா.” என்று ஸ்மிரிதி கத்த, அவள் கோவத்தைப் பார்த்து கலவரமான விரேந்தர், டிரைவரின் குடும்பத்தை அழைத்து வர அங்கிருந்து பறந்து சென்றான்.
“மனிஷ் பற்றி இதுவரைக்கும் தகவல் இல்லை..உனக்கு ஏன் அவசரம்ணு நீ அடுத்த அஞ்சு நிமிஷத்திலே சொல்லலேன்னா..ஸாலா..நாய் போலே நீ அசிங்கம் செய்ய போகறதை உன் குடும்பமேப் பார்க்கும்.” என்று சொல்லி நிதானமாக எழுந்து சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள் ஸ்மிரிதி.
அவளின் கடுங்கோபத்தையும், மிரட்டலையும்,  நிதானத்தையும் பார்த்து மிரண்டு போனவன்,
“தீதி..தீதி..சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது தீதி..மனிஷ் தம்பி காணும்னவுடனையே ஸாபுக்கு ஃபோன் செய்திட்டேன் தீதி…அவர் ஃபோனே எடுக்கலே தீதி..நானும் அங்கே கொஞ்சம் தேடி பார்த்தேன்..எங்க போனாங்கண்ணு தெரியலே தீதி..அப்பறம் தான் விரேந்தர் பையாவுக்கு ஃபோன் செய்தேன்..நீங்க பேசினீங்க..
அஞ்சு நிமிஷம்தான் தீதி..அப்பவும் வண்டி பக்கத்திலேதான் இருந்தேன் தீதி.” என்று சொல்லி ஓ வென்று அழுதான். அப்போது விரேந்தருடன் அங்கு வந்து சேர்ந்த அவன் குடும்பம்  அவன் அழுவதைப் பார்த்து அவர்களும் அழ அதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதி,”மூணு நிமிஷமாயிடுச்சு.” என்றாள்.
அதைக் கேட்டு அழுகையை நிறுத்தி நிதானத்திற்கு வந்த அந்த டிரைவர்,”தீதி..எப்பவும் போலேதான் ஸ்கூல் வாசல்லே காத்துகிட்டிருந்தேன்..எப்பவும் போலே ஸ்கூல் விடறத்துக்கு முன்னாடி கேட் பக்கத்திலே போய் நின்னுகிட்டேன்..மனிஷ் தம்பி வெளிலே வந்தவுடனே அவரை அழைச்சுகிட்டு வண்டிக்கு வந்தேன்.” என்றான்.
அவனை மௌனமாகப் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அவன் சிறிது நேரத்திற்குப் பின்,”தீதி..காலைலே நல்லதான் இருந்தேன் தீதி..ஸ்கூல்லே வெயிட் செய்யும்போது கூட நல்லாதான் இருந்தேன் தீதி..டீ குடிச்ச பிறகுதான் இப்படி ஆயிடுச்சு.” என்றான்.
அவள் காத்திருந்த முக்கியமான தகவல் வர போவதை உணர்ந்து,
“டீ யா..அங்கே பக்கத்திலே கடை எதுவும் கிடையாதே..எங்கே போய் குடிச்ச? ஸ்கூல்லேர்ந்து வண்டியை எடுத்துகிட்டு எங்கேயும் போகக்கூடாதுண்ணு தெரியுமில்லே..எங்கே போயிட்டு வந்த?” என்று கேட்டபடி அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“வேற ஒரு டிரைவர் அவன் வீட்டிலிருந்து கொண்டு வருவான் தீதி..ஸர்திலே (winter) அவனோட சேர்ந்து டீ குடிப்பேன் தீதி..இன்னைக்கு மட்டும்தான் இப்படி ஆயிடுச்சு.” என்றான்.
“யார் அவன்? முன்ன பின்ன தெரியாதவன் எது கொடுத்தாலும் குடிச்சிடுவியா?” என்று கோபமாக ஸ்மிரிதி கேட்க,
“தீதி..அவனைப் பற்றி முழு விவரம் தெரியாது..அவனும் ஸ்கூலுக்கு பசங்களைக் கொண்டு விட வரான்..ஸப்னா தீதி கல்யாணத்திலே இந்த டிரைவர் கெஸ்ட் அழைச்சுகிட்டு வந்திருந்தான்.. நம்ம டிரைவர்தான் அறிமுகப்படுத்தி வைச்சாரு.”
அதைக் கேட்டு அவனருகில் வந்த விரேந்தர்,”நம்ம டிரைவர்..யாரு டா அது?” என்று அவன் தலைமுடியைப் பிடித்து கேட்க,
“பையா..ஸப்னா தீதியோட வண்டியை ஓட்டிகிட்டு வருவாங்க.” என்றான்.

Advertisement