Advertisement

ஸ்மிரிதியின் மனு – 55_2
மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள்.  அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள்.  அந்தப் பரபரப்பான சாலையில், இடைவெளி இல்லாத வாகன நெரிசலில், இடைவிடாது ஒலித்து கொண்டிருந்த இரைச்சலில் சிந்தனையை சிதறவிடாமல் அடுத்து செய்ய வேண்டிய செயல்களை யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
 அவர்கள் ஆஸ்பத்திரியினுள் நுழந்தவுடன் அவர்களை வரவேற்க காத்திருந்த தலைமை டாக்டரிடம் அவளை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் நேராக ஐ ஸி யுவிற்கு சென்றாள் ஸ்மிரிதி.  ஐ ஸி யு விற்கு வெளியே விரேந்தர் நின்று கொண்டிருந்தான்.  
“மாறன்..நீ இங்கே இரு..நான் விரேந்தர்கிட்ட பேசணும்.” என்று மாறனை ஐ சி யுவில் காவல் வைத்துவிட்டு விரேந்தருடன் வெளி காரிடாருக்கு சென்றாள் ஸ்மிரிதி.
விரேந்தர் மூலம் கார்மேகத்திற்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொண்ட ஸ்மிரிதி உடனே அவள் ஃபோனிலிருந்து டாக்டர் நேத்ராவதிக்கு அழைப்பு விடுத்தாள்.
அவள் அழைப்பை ஏற்று கொண்டவர்,”எப்படியிருக்க ஸ்மிரிதி?” என்று கேட்க,
“ஆன்ட்டி..நான் நல்லாயிருக்கேன்..ஆனா ஆன் ட்டி..அப்பாக்கு அம்மா போலவே ஆயிடுச்சு..கார்லே கோலப்ஸ் ஆயிட்டாங்க..இப்ப ஐ சி யு விலே இருக்காங்க.” என்றாள்.
“என்ன ஆச்சு..நீ பக்கத்திலே இருந்தியா? அப்பாக்கு ஏதாவது பிராப்ளமிருக்கா?”
“எனக்குத் தெரிஞ்சு அவருக்கு ஹெல்த் பிராப்ளம் எதுவுமில்லை..நான் அவர் பக்கத்திலே இல்லை..நான் இப்பதான் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கேன்..டிரைவர் தான் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு வந்தான்..அவந்தான் அவர்கூட இருந்தான்..பேசிகிட்டே இருந்தவருக்கு திடீர்னு பேச முடியாம போயிடுச்சு.” என்று விரேந்தர் அவளிடம் சொன்னதை டாக்டர் நேத்ராவதியிடம் சொன்னாள் ஸ்மிரிதி.
“இப்ப டிரைவர் எங்கே இருக்கான்..அவன்கிட்ட நான் பேசணும்.” என்றார்.
“என் பக்கத்திலேதான் இருக்கான்..ஸ்பீக்கர் போடறேன்..பேசுங்க.” என்று அவள் ஃபோன் மூலம் விரேந்தரை டாக்டர் நேத்ராவதியுடன் பேச வைத்தாள் ஸ்மிரிதி.
டாக்டர் நேத்ராவதியின் கேள்விகளுக்குப் பதிலாக வீட்டிலிருந்து அவர்கள் புறப்படமுன்  அழுக்கான கைபிடியினால் ஏற்பட்ட சங்கடத்தையும், அதை துடைத்த பின்னும் அந்தக் கையையே உற்று பார்த்து கொண்டிருந்த கார்மேகத்தையும், அதன்பின் அவர் உடலில் ஏற்பட்ட  மாற்றங்களையும் அவன் விவரிக்க, விவரிக்க அதைக் கேட்டு கொண்டிருந்த டாக்டர் நேத் ராவதி,”ஸ்மிரிதி பேட்டா..டேக் தி ஃபோன் டூ தி ஐ ஸி யு இன் சார்ஜ்..அப்பாவோட டிரிட் மெண்ட் லைனை டிஸ்கஸ் செய்யணும்.” என்று கட்டளையிட்டார்.
அடுத்த சில நொடிகளில் ஐ சி யு தளம் பரபரப்பானது. சற்று தூரத்தில் நின்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  ஸ்மிரிதியிடம் அவள் ஃபோன் திரும்பி வந்தபோது டாக்டர் நேத்ராவதி இன்னுமும் லைனில் இருந்தார்.
“ஸ்மிரிதி பேட்டா..அப்பாவை பாய்ஸன் செய்திருக்காங்க..இன்ஜஷன் (ingestion) அண்ட் ட் ரான்ஸ் டர்மலா (trans dermal) இல்லை டரான்ஸ் டர்மல் மட்டுமாண்ணு கண்டு பிடிக்கணும்..காலைலே என்ன சாப்பிட்டாரு..யாரோட சாப்பிட்டாருண்ணு தெரியணும்..அந்த ஃபுட் ஸாம்பிள் வேணும்..அவருகூட சாப்பிட்டவங்களுக்கு ஏதாவது ஸிம்டம்ஸ் இருந்தா அவங்களையும் மானிட்டர் செய்யணும்….இது நியூரோ டாக்ஸின் (neuro toxin)..
அப்பாவோட இடது கை விரல்கள் பாதிக்கப்பட்டிருக்கு.. அதனாலே ஐ ஸஸ்பெக்ட் இட்ஸ் ட்ரான்ஸ் டர்மல் பாய்ஸனிங்னு..கார்லேர்ந்து ஸாம்பிள் எடுத்திட்டு போயிட்டாங்க.. காரை டி கண்டாமினேட் (de contaminate) செய்ய சொல்லியிருக்கேன்..உங்க வீட்லேர்ந்து அந்தக் குப்பைத் தொட்டியை அகற்றணும்..கராஜை ஸீல் செய்யணும்..
உன்கூட ஆஸ்பத்திரிலேர்ந்து டாக்டர்ஸ் வருவாங்க..வீட்லே இருக்கற எல்லாரையும் அவங்க ஒருமுறை செக் செய்திடட்டும்..அங்கே யாருக்கும் ஒண்ணும் ஆகலேன்னா வி ஆர் ஸேஃப்..இல்லைன்னா அத்தனை பேரையும் ஐஸொலேட் செய்யணும்..மானிட்டர் செய்யணும்..
இப்ப உடனடியா உங்கப்பாவோட டிரைவரையும், ஆஸ்பத்திரிலே உங்க அப்பாவோட காண்டாக்ட்லே வந்த எல்லாரையும் ஐஸொலேட் செய்து செக் செய்துகிட்டு இருக்காங்க..இதுவரை யாருக்கும் எந்த அறிகுறியும் இல்லை..ஆனாலும் டிரைவரை டி கண்டாமினெட் செய்ய சொல்லியிருக்கேன்..பிகாஸ் ஹீ வாஸ் வித் ஹிம் இன் தி கார்..
எல்லா லேப்லேயும் இந்த டாக்ஸின் டெஸ்ட் செய்ய முடியாது..நான் எனக்கு தெரிஞ்ச எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட பேசி டெஸ்ட் பனல்க்கு (panel) ஏற்பாடு செய்திருக்கேன்..கொஞ்ச நேரத்திலே எந்த வகைண்ணு தெரிஞ்சிடும்..இது நாச்சுரல் ஸோர்ஸ்ன்னு எனக்கு தோணுது..ஸிந்தடிக் கிடைக்கறது கஷ்டம்..அண்ட் அது வெரி பொடெண்ட் (potent)..
ஐ யாம் டிரையிங் மை பெஸ்ட்..எனக்கு தெரிஞ்ச ஸ்பெஷலிஸ்டை அப்பாவை வந்து பார்க்க சொல்லியிருக்கேன்..டெஸ்ட் ரிஸ்ல்ட வந்த பிறகு உன்கிட்ட பேசறேன்.” என்றார் கார்மேகத்தின் பொறுப்பை முழுமையாக ஏற்று கொண்டிருந்த டாக்டர் நேத்ராவதி. 
“தாங்க்ஸ் ஆன் ட்டி.” என்று நன்றி சொன்ன ஸ்மிரிதியிடம் ஃபோன் இணைப்பைத் துண்டிக்குமுன்,
”ஸ்மிரிதி..ஆஸ்பத்திரி ரொம்ப ஒத்துழைப்பு கொடுக்கறங்க..நான் எதிர்பார்க்கலே..நான் சொல்ல, சொல்ல டக்கு, டக்குண்ணு எல்லா வேலையும் செய்தாங்க..யாரோடது இந்த ஆஸ்பத்திரி?” என்று விசாரித்தார்.
“எங்களோடதுதான் ஆன் ட்டி.” என்று அமைதியாக பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி பேட்டா..என்கிட்ட நீ சொல்லவேயில்லே.” என்று அவர் வருத்தப்பட,
“அப்பா இங்கே இன்வெஸ்ட் செய்திருக்காருண்ணு கொஞ்ச நாளாதான் தெரியும்.” என்று சொன்ன ஸ்மிரிதி..சிறிது தயக்கத்திற்குப் பின்,”அப்பாவுக்கு சரியாயிடுமில்லே? என்று கேட்டாள்.
“இப்ப நம்ம கைலே ஃபைவ் அவர்ஸ் இருக்கு…நான் இங்கேயிருந்தே மானிட்டர் செய்துகிட்டு இருக்கேன்..டோட்ண்ட் வரி பேட்டா.” என்றார்
டாக்டர் நேத்ராவதியுடன் பேசி முடித்தபின் நடப்பதெல்லாம் நிஜமா என்று நம்பமுடியாமல், பலத்த யோசனையில் ஐ சி யு விற்கு வெளியே காத்து கொண்டிருந்த மாறனிடம் சென்ற ஸ்மிரிதி,
“மாறன்..எங்க வீடுவரைக்கும் நான் கொஞ்சம் போகணும்..நான் திரும்பி வரும்வரை நீ இந்த இடத்தைவிட்டு நகர கூடாது..இங்கையே இருக்கணும்.” என்றாள்.
“வீட்டுக்கா? இப்பவா? எதுக்கு? “ என்று கேட்ட மாறனிற்கு ஸ்மிரிதியிடமிருந்து பதில் வரவில்லை. 
“விரேந்தர் எங்கே? அவந்தான் அழைச்சுகிட்டு போறானா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் மாறன்.  அவனுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்து கொண்டிருந்த ஸ்மிரிதி வேறு  வழி தெரியாமல் நேரடியாகவே அவனுக்கு  விஷத்தைப் பற்றிய விஷயத்தைத் தெரியப்படுத்தினாள்.
“அப்பாக்கு டிரான்ஸ் டர்மல் பாய்ஸனிங்குணு ஸஸ்பெக்ட் செய்யறாங்க..காரோட கதவுலே ஏதோ இருந்திருக்கு..அவர் கை விரல்கள் மூலம் உடம்புகுள்ள போயிடுச்சு..கார்லேர்ந்து ஸாம்பிள் எடுத்து டெஸ்ட் செய்த பிறகுதான் என்ன வகைண்ணு தெரியும்..நாச்சுரல் ஸோர்ஸ்னு நேத்ரா ஆன்ட்டி  சந்தேகப்படறாங்க..இப்ப ஃபைவ் அவர் விண்டோலே இருக்காரு அப்பா.” என்று அவளுக்கு தெரிந்த விவரங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“பாய்ஸனிங்கா? யாரோட வேலை? என்று அவன் அதிர்ச்சியை வெளியிட, 
“தெரியலே…அவரு கையைத் துடைச்சு தூக்கி போட்ட டிஷ்யு பேப்பர் இருக்கற குப்பைத் தொட்டியை அகற்றணும்…கராஜை மூடி வைக்கணும்..கீதிகாவுக்கு, வீட்லே வேலை செய்யற ஆளுங்க யாருக்காவது ஸிம்டம்ஸ் இருக்காண்ணு செக் பண்ணனும்..ஆஸ்பத்திரிலேர்ந்து டாக்டர்ஸும், வண்டியும் அரென் ஜ் செய்யறாங்க.. அவங்களோடதான் வீட்டுக்குப் போறேன்..விரேந்தர் வர முடியாது..ஐஸொலெஷன்லே இருக்கான்..டி கண்டாமிண்ட ஆன பிறகுதான் வெளிலே விடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
விஷயத்தின் வீர்யத்தை உணர்ந்த மாறன்,
“அப்பா, அம்மாகிட்ட என்ன சொல்றது? மனுவுக்கு எப்ப சொல்றது?”
“அவங்ககிட்ட அப்பா ஐ சி யு லே இருக்கார்ணு மட்டும் சொல்லு..மனுகிட்டையும் அதையே சொல்லு..அவன் நேர்லே வந்த பிறகு  மற்ற விஷயத்தை சொல்லிக்கலாம்.” என்று மாறனிடம் கார்மேகத்தின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு  ஆஸ்பத்திரி அனுப்பியிருந்த ஆட்களுடன் அவள் வீட்டிற்கு சென்றாள் ஸ்மிரிதி.
வீட்டை சென்றடைந்தவுடன் கேட்டிலிருந்தவர்களிடம் வேலை செய்து கொண்டிருந்த அனைவருக்கும் தகவல் கொடுக்க சொல்லிவிட்டு முதல் வேலையாக போர்ட்டிகோவில் இருந்த குப்பைத் தொட்டியைத் திறந்து பார்த்தனர்.  அதனுள்ளே கார்மேகம் விட்டெறிந்த டிஷ்யு தாள்கள் இருந்தன.  அந்தக் குப்பைத் தொட்டியை ஒரு பெரிய பாலிதீன் கவரில் போட்டு ஸீல் வைத்தனர்.  
ஸ்மிரிதியும் இரண்டு டாக்டர்களும் வீட்டிற்குள் நுழைந்த போது அத்தனை பெரிய வீட்டின் வரவேற்பறையில் அழுதபடி தனியாக அமர்ந்திருந்த கீதிகா,  அவளைக் கண்டவுடன் ஓடி வந்தவர், அவளுடன் இருந்தவர்களைப் பார்த்து,
“யார் இவங்க?” என்று கேட்டார்.
“உங்களை செக் பண்ண ஆஸ்பத்திலேர்ந்து டாக்டர் வந்திருக்காங்க..கொஞ்சம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுங்க..வீட்லே வேலை செய்யற அத்தனை பேரையும் செக் செய்யணும்..கேட்லே சொல்லிட்டேன்..எல்லாரும் பின்னாடி வெயிட் பண்றாங்க..கராஜ்லே யார் இருக்காங்க?”
“சோனு.”
“கராஜை ஸீல் வைக்கணும்..இப்போதைக்கு வண்டி எந்த வண்டியையும் வெளிலே எடுக்க முடியாது.”
“என்ன ஸ்மிரிதி நடக்குது?” என்று பயத்துடன் கேட்டார் கீதிகா.
“வந்து சொல்றேன்.” என்று பதில் சொல்லி வீட்டில் வேலை செய்த அத்தனை பேரையும் ஒன்று திரட்டி அனைவரையும் செக் செய்த பின், கராஜை ஸீல் வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள் ஸ்மிரிதி.
“மேம்..ஷீ இஸ் ஃபைன்..காலைலே இவங்களோடதான் பிரேக்ஃபாஸ் சாப்பிட்டிருக்காரு..ஸோ இட்ஸ் நாட் தி ஃபுட்.” என்றான் கீதிகாவை செக் செய்த டாக்டர்.
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் வண்டிலே வெயிட் பண்ணுங்க..நான் இவங்கிட்ட பேசிட்டு வந்திடறேன்.” என்று டாக்டரிடம் அனுமதி கேட்டு கொண்டாள் ஸ்மிரிதி.
நேரடியாக விஷயத்திற்கு வந்த ஸ்மிரிதி,
“அப்பா ஐ சி யுலே இருக்காங்க..பாய்ஸனிங்..இன்னும் அஞ்சு மணி நேரம் கழிச்சு தான் தெரியும்.” என்று தகவல் கொடுத்துவிட்டு அதை உள்வாங்கி கொள்ள கீதிகாவிற்கு அவகாசம் கொடுக்காமல் அவள் விசாரணையை ஆரம்பித்தாள்.
“காலைலே வீட்லே என்ன நடந்திச்சுண்ணு ஒண்ணு விடமா சொல்லுங்க.” என்றாள்.
“இப்ப அதெல்லாம் எதுக்கு? என்னை உன்கூட ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போ.” என்றார் கீதிகா அழுது கொண்டே.
அவருக்குப் பதில் சொல்லாமல்,”யாராவது வந்தாங்களா வீட்டுக்கு?” என்று கடினமான குரலில் கேள்வி கேட்டாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் அந்தக் குரலிற்கு அடிபணிந்து,”ஸ்வப்னா ஃபாமிலி வேலே இருக்கா..அண்ணனும், அண்ணியும் நேர்லே வந்து விஷயத்தை சொல்லிட்டு..ஸ்வீட் கொடுத்தாங்க.” என்றார்.
“வேற யாரு வந்தாங்க அப்பாவை பார்க்க?”
“யாருமேயில்லே..அவரே இன்னைக்கு காலைலேதான் வீட்டுக்கு வந்தாரு..மத்தியானம் லன்ச் வெளிலே முடிச்சிட்டு உன்னைப் பார்க்க வர்றதா இருந்தாரு.” 
“புதுசா யாரையாவது வேலைலே சேர்த்து இருக்கீங்களா?”
“இல்லை..எல்லாரும் பழைய ஆளுங்கதான்.”
“காலைலே வேலைக்கு வந்தவங்க எல்லாரும் இங்கதான் இருக்காங்களா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“யாரும் எனக்குத் தெரிஞ்சு வெளிலே போகலே…எப்படி ஆச்சு ஸ்மிரிதி? எனக்குத் தெரியணும்.”
“கார் கதவுலே ஏதோ இருந்திருக்கு..அதான் கராஜை மூடிட்டேன்..எல்லா வண்டியையும் கண்டாமினேட் செய்யணும்..அதுக்கு இப்ப நேரமில்லே..விரேந்தரும் ஆஸ்பத்திரி ஐஸலெஷன்லே இருக்கான்..மனிஷ் ஸ்கூல்லேர்ந்து வரட்டும்..அந்த வண்டிலே அவனையும் அழைச்சுகிட்டு நீங்க ஆஸ்பத்திரிக்கு வாங்க..அதுக்குள்ள வேற வண்டிக்கு நான் ஏற்பாடு செய்யறேன்.”
“கார் கதவுலேயா?” என்று அதிர்ச்சியடைந்த கீதிகா நிற்க முடியாமல் தள்ளாடியபடி சோபாவில் அமர்ந்து, அவரின் இரண்டு கைளால் முகத்தை மூடி சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார்.
டைனிங் டேபிளிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீருடன் திரும்பிய ஸ்மிரிதி அதை அவர் கைகளில் திணித்து,”முதல்லே இதைக் குடிங்க..அழுகைய நிறுத்துங்க.” என்று ஆர்டர் போட்டாள்.
மறுபடியும் அவளுக்கு அடிபணிந்து தண்ணீரைக் குடித்த கீதிகா,”நம்ம வீட்லே யார் இப்படி? யார் விலை போயிட்டாங்க?” என்று கேட்டார்.
“தெரியலே..கண்டு பிடிக்கணும்..இந்த விஷயம் மனிஷுக்குத் தெரிய வேணாம்..உடம்பு சரியில்லேண்ணு மட்டும் அவன்கிட்ட சொல்லுங்க..இதைப் பற்றி நீங்க யார்கிட்டையும் பேசவே கூடாது…அது யாருண்ணு தெரியறவரை அப்பாவைப் பற்றி விஷயம் வெளிலே போகக்கூடாது.” என்று கீதிகாவுக்குப் புரிய வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குத் திரும்பிய ஸ்மிரிதி மறுபடியும் ஒருமணி நேரத்தில் வீட்டிற்குப் போக போவதை அப்போது அறிந்திருக்கவில்லை.
ஸ்மிரிதி ஆஸ்பத்திரியை வந்தடவைதற்குள் டாக்டர் நேத்ராவதியிடமிருந்து மெஸெஜ் வந்திருந்தது.  டெஸ்ட் ரிஸ்ட் கிடைத்தவிட்டதாகவும் அதற்கு ஏற்ப கார்மேகத்திற்கு சிகிச்சையை மாற்றி அமைத்திருப்பதாக அவளுக்குத் தகவல் கொடுத்திருந்தார். 
ஐ சி யு தளத்தில் மாறனுடன், வீரேந்தரும் காத்து கொண்டிருந்தான்.  ஸ்மிரிதியைப் பார்த்தவுடன்,
“பிட்டியா? ஸாப் பிழைச்சிடுவாங்களா?” என்று கேட்டான்.
“பிழைக்கணும்..அவருக்கு என்ன நடந்திச்சுண்ணு நீ கரெக்ட்டா சொன்னதாலேதான் இது  விஷம்ணு கண்டு பிடிக்க முடிஞ்சுது..இப்ப எந்த வகைண்ணு தெரிஞ்சிடுச்சு..அதுக்கு சிகிச்சை நடந்துகிட்டு இருக்கு.”
“ஸாபுக்கு இந்த மாதிரி ஆனதில்லே பிட்டியா..அவங்க கையெல்லாம் பலமிழந்து..முகம் கோணலாயிடுச்சு..பேச முடியலே.” என்றான் விரேந்தர்.
“கராஜை மூடிட்டேன்..எந்த வண்டியையும் வெளிலே எடுக்க முடியாது..மனிஷ் ஸ்கூலுக்கு போயிருக்கற ஒரு வண்டிதான் நம்மகிட்ட இப்போதைக்கு இருக்கு..வேற வண்டிக்கு ஏற்பாடு செய்..
அப்பாவோட விஷயம் நம்மளைவிட்டு வெளிலே போகக்கூடாது..நம்மகிட்ட வேலை செய்யற ஆள் வேற யாருக்கோ வேலை செய்யறான்..யாருண்ணு கண்டு பிடிக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“நான் கண்டு பிடிக்கறேன் பிட்டியா..இப்பவே வீட்டுக்குப் போய் விசாரிக்கறேன்.” என்ற புறப்பட்ட விரேந்தரை, “இப்ப வேணாம்.” என்று தடுத்த ஸ்மிரிதி,”அப்பாவோட ஃபோன் எங்கே?” என்று கேட்டாள்.
“அது அவர் கைலேர்ந்து வண்டி உள்ளே விழுந்திடுச்சு..ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு வந்த அவசரத்திலே நான் அதை எடுக்க மறந்திட்டேன்..கார்லேயே மாட்டிகிட்டு இருக்கு..இப்போதைக்கு காரைத் திறக்க முடியாது.” என்றான்.
“பரவால்லே விடு.” என்று சொன்ன ஸ்மிரிதி அன்று காலையில், முந்தைய தினம் என்று கார்மேகத்தின் வாழ்க்கையில் கடந்த இருபத்தி நாலு மணி நேரத்தில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் விரேந்தர் மூலம் தெரிந்து கொண்டாள்.
விரேந்தருக்கும், ஸ்மிரிதிக்கும் நடுவே நடந்த உரையாடலையும், விரேந்தரை அவள் நிதானமாக விசாரித்த முறையையும் அமைதியாக, அதிசயமாக பார்த்து கொண்டிருந்தான் மாறன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு,“நீ காலைலே கராஜ்லே வண்டியை ரெடி செய்ய சொன்ன போது யார் இருந்தாங்க?” என்று விரேந்தரிடம் கேட்டாள் ஸ்மிரிதி.
“நம்ம ஆளுங்கதான் பிட்டியா..வேற யாருமில்லே.” என்றான் விரேந்தர்.
“அப்ப நம்ம ஆளுங்கதான் செய்திருக்காங்க..பக்கா?”
“நம்ப முடியலேயே பிட்டியா..அந்த மாதிரி ஆளுங்களை நம்மகூட வைச்சுக்கறதில்லே…நம்ம ஆளுங்க இருக்க முடியாது.” என்று  மறுத்தான் விரேந்தர்.
“விரேந்தர்..அந்த வண்டிலேதான் கொஞ்ச நேரத்திலே அப்பா வெளிலே போக போறாங்கண்ணு உனக்கும், வண்டியை ரெடி செய்தவனுக்கும்தான் தெரியும்..இன்னைக்கு வேலைக்கு வந்த அத்தனை பேரும் இப்பவரை வீட்லேதான் இருக்காங்க..யாரும் காணாம போகலே..நம்ம ஆளா இருந்தா என்ன நடந்திச்சுண்ணு தெரிஞ்சுகிட்டு அவன் மேலே சந்தேகம் வராம இருக்க சாயந்திரம் வரை வேலை செய்திட்டுதான் போவான்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸாபைத் தெரிஞ்சவன் யாரும் இதுக்கு துணிய மாட்டான்.” என்று திட்டவட்டமாக சொன்னான் விரேந்தர்.
அவர்களின் வட்டத்திலிர்ந்து  நிரந்தரமாக வெளியேற்ற பட்டவர்கள்,  புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் என்று அனைவரையும் மனதில் அலசியபடி யோசனையுடன் அமர்ந்திருந்த ஸ்மிரிதியை,”பிட்டியா.” என்று மென்மையாக அழைத்தான் விரேந்தர்.
என்னவென்று பார்வையாலேயே கேட்ட ஸ்மிரிதியின் அருகில் வந்தவன்,’நான் வண்டியை ரெடி செய்ய சொன்ன போது மாமாஜியோட கார் கராஜ்லே இருந்தது..ஆனா அவங்க டிரைவர் என் கண்ணுலே படலே.” என்றான்.
அந்தத் தகவலில் ஒரு நொடி அதிர்ந்த ஸ்மிரிதி,”அப்பா..கண் விழிக்கட்டும்..பார்த்துக்கலாம்.” என்றாள்.  கண்ணுக்குத் தெரியாமல் இருந்த எதிரி யாரென்று விரேந்தர் மூலம் தெரிந்து கொண்டதில் மன நிம்மதி அடைந்த ஸ்மிரிதியின் அந்த நிம்மதியை அரைமணி நேரம் கழித்து விரேந்தரே அழித்தான்.
மாறன், ஸ்மிரிதி, விரேந்தர் மூவரும் அமைதியாக ஐ சி யு வாயிலைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, விரேந்தரின் ஃபோன் அழைத்தது.  அழைப்பை ஏற்று பேசிய விரேந்தர்,”பிட்டியா.” என்று உரக்க அழைக்க, ஏதோ விபரீதமென்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,”என்ன விரேந்தர்?” என்று பதட்டத்துடன் கேட்க,
“மனிஷ் பையா…மனிஷ் பையா” என்று வார்த்தைகளைக் கோர்க்க கஷ்டப்பட, அவன் கையிலிருந்த ஃபோனை பறித்து,”சொல்லு.” என்றாள். 
அடுத்த வந்த நிமிடங்களில் மற்ற இருவரும் அமைதியாக ஸ்மிரிதியைப் பார்த்து கொண்டிருக்க, அவள் முகம் உணர்ச்சிகள் தொலைத்து கல்லாக மாறியிருந்தது.
இறுதியாக,”நீ வண்டியை எடுத்துகிட்டு நேரா வீட்டுக்கு வா.” என்று ஃபோனில் கட்டளையிட்டவள், அவளருகே நின்றிருந்த மாறனிடம்,
”கொஞ்ச நேரம் முன்னாடி மனிஷை அப்டெக்ட் (abduct) செய்திருக்காங்க..டிரைவரை வீட்டுக்கு வர சொல்லிட்டேன்..அவனை விசாரிக்க நான் வீட்டுக்குப் போகறேன்…. இனி நான் இங்கே இருக்க முடியாது..நீதான் இருக்கணும்..
விரேந்தரை நம்ம வீட்டுக்கு வேற வண்டிலே அனுப்பறேன்..அங்கிளை அழைச்சுகிட்டு வந்து ஆஸ்பத்திரிலே விட்டிடுவான்..கீதிகாவுக்குத் துணையா ஆன்ட்டி எங்க வீட்லே இருக்கட்டும்..மனுகிட்ட நானே விஷயத்தை சொல்லி வீட்டுக்கு வர சொல்றேன்..
ரான்ஸம்மா (ransom) இருந்தா பணம் அரேன்ஜ் செய்யணும்..இல்லைன்னா வேற விதமா யோசிக்கணும்….பார்த்துக்க.” என்று சொல்லி வீட்டிற்குப் புறப்பட்டாள் ஸ்மிரிதி.

Advertisement