Advertisement

ஸ்மிரிதியின் மனு – 55_1
விடியற்காலையின் மெலிதான, இதமான குளிரை அனுபவித்து கொண்டிருந்தனர் தில்லிவாசிகள்.  அந்த சோம்பேறித்தனமான காலை பொழுதில் திரேன் கொடுத்த டீயை அருந்தியபடி நாதனும், மனுவும்  தினசரியைப் புரட்டி கொண்டிருந்தனர்.
“மாறன் இங்கே வந்து மூணு நாளாயிடுச்சு..உங்கம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..ஸ்மிரிதி என்ன சொல்றா?” என்று அவர்கள் கோவைக்குக் குடிபெயரும் பேச்சை ஆரம்பித்தார் நாதன்.
சிவகாமி இன்னுமும் மனதளவில் பலீவனமாக தான் இருக்கிறார் என்று உணர்ந்திருந்த மனு,
“அம்மா, இன்னும் பழையபடி ஆகலே பா..ஸ்மிரிதியும் சில நேரம் மூடியா இருக்கா.. 
அங்கிளும், மனிஷும் வந்திருந்தப்ப அவங்க இரண்டு பேர்கிட்டையும் முன்னே மாதிரி பேசலே..நேத்து மீரா ஆன் ட்டி எனக்கு ஃபோன் செய்தாங்க..ஸ்மிரிதியை அவங்க வீட்டுக்குக் கொஞ்ச நாளைக்கு அனுப்பி வைக்க சொல்றாங்க..
அவங்க வீட்டுக்கு போறியாண்ணு அவகிட்ட கேட்டேன்..அவ அங்கே போயிட்டா அம்மா இங்கே தனியா இருப்பாங்கண்ணு வேணாம்னு சொல்லிட்டா..அவ வேலை விஷயமாக்கூட வெளியே போகறதில்லை.” என்றான்.
சிவகாமிக்காகதான் ஸ்மிரிதி வீட்டோடு இருக்கிறாள் என்று நாதனும் உணர்ந்திருந்தார்.  அதனால்,
“உங்கம்மாவை இப்படியே விடமுடியாது..அங்கே வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சு வீட்டை பூட்டிகிட்டு வந்திட்டான் மாறன்..இங்கே எல்லாம் பாக்காகி ரெடியா இருக்கு..இன்னும் எத்தனை நாள் தள்ளி போட முடியும்? ..
நாங்க கிளம்பி போன பிறகு ஸ்மிரிதியும், நீயும் அவ வீட்லே கொஞ்ச நாள் தங்கிட்டு வாங்க…அன்னைக்கு கார்மேகமும், மனிஷும் அவளை வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்திகிட்டிருந்தாங்க..கீதிகாவும் கூப்பிட்டிருந்தா போயிருப்பாண்ணு நினைக்கறேன்..அவங்க துக்கம் விசாரிக்கக்கூட வரலே.” என்றார் நாதன்.
“அவங்க எப்பவும் ஒதுங்கி தான் இருக்காங்க பா.. ஏற்கனவே இந்த மாதிரி சூழ் நிலையை கடந்து வந்தவங்க..மறுபடியும் அதையெல்லாம் நினைச்சு பார்க்க விரும்பியிருக்க மாட்டாங்க.” என்றான் கீதிகாவின் நடத்தையைக் குற்றமாக எடுத்து கொள்ளாத மனு.
அப்போது அவரது அறையிலிருந்து வெளியே வந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்த சிவகாமியிடம்,
“என்ன மா? காலைலேயே டல்லா இருக்கீங்க?” என்று விசாரித்தான் மனு.
“இராத்திரி சரியா தூங்கலே டா..மாறன் இன்னும் எழுந்திருக்கலேயா?”
“அவன் வஸந்த கால காலை பொழுதை அனுபவிக்கறான்.” என்று சொல்லி புன்னகைத்தான் மனு.
“நீ ஏன் டா சீக்கிரமா எழுந்துகிட்ட?”
“எனக்கு இன்னைக்கு முக்கியமான கேஸ் மா..காலைலே ஆபிஸ்லே மீட்டிங் அப்பறம் மதியம் வரை கோர்ட்லே வேலை இருக்கு..ஃபோன்லே கிடைக்க மாட்டேன்..அவசரம் நா ஆபிஸ்லே மெஸெஜ் விடுங்க..நானே ஃபோன் பேசறேன்.” என்றான் மனு.
“எங்களுக்கு என்ன அவசரம் வர போகுது? அப்படியே வந்தாலும் மாறனும், ஸ்மிரிதியும் வீட்லேதான் இருக்காங்க..திரேனும் இருக்கான்..மதியம் மேலேதான் அவன் வெளி வேலைக்குப் போகறான்.” என்று பதில் சொன்ன சிவகாமி அறிந்திருக்கவில்லை அன்றைக்கு ஏற்பட போகும் அபாயகரமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளையும்.
“நீங்க கோயமுத்தூர் போன பிறகு திரேன் நம்ம வீட்லேயே இருக்கட்டும் மா..காலைலே இங்கே வேலையை முடிச்சிட்டு இராதிரிக்கு வந்தா போதும்…முழு நேரம் தேவைப்படாது.”
“அவனும் அதைதான் சொல்றான்..வேலை கிடைச்சாலும் தங்கறத்துக்கு இடம் கிடைக்கலேங்கறான்..அவன்கிட்ட நீயும், ஸ்மிரிதியும் பேசிக்கோங்க.”
“நாம எப்ப இங்கேயிருந்து கிளம்பறோம்?” என்று நேரடியாக மனைவியைக் கேட்டார் நாதன்.
“ஸ்மிரிதி கொஞ்சம் சரியாகட்டும்..மனசும், உடம்பும் பழைய நிலைக்கு வரலே….தினமும் லேட்டாதான் எழுந்துக்கறா..கொஞ்சமாதான் சாப்பிடறா.” என்றார் சிவகாமி.
“காலைலே ரொம்ப களைப்பா இருக்கா மா..அவளாலே எழுந்திருக்க முடியறதில்லே.” என்று பதில் சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அவன் மனைவிக்கு மார்னிங் ஸிக்னஸ்யென்று.
“அவளை நம்ம கூட கோயமுத்தூர் அழைச்சுகிட்டு போயிடலாம்..அவளுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்..உடம்பும் தேறும்.” என்று திடீர் முடிவெடுத்தார் சிவகாமி.
“அப்ப நான் மட்டும் இங்கே தனியா என்ன செய்வேன்?” என்று பாய்ந்தான் மனு.
“நீயும் அங்கையே வந்திடு டா.” என்று ஆரம்பித்த இடத்திற்கு போனார் சிவகாமி.
“அம்மா..விடுங்க அந்தப் பேச்சை..ஸ்மிரிதியை மட்டும் உங்களோட அழைச்சுகிட்டு போங்க..திரேன் இருக்கான் நான் சமாளிச்சுப்பேன்..பரீட்சை எழுத மாறன் வரும் போது அவனோட அவளையும் அனுப்பி வைங்க.” என்று சிவகாமியின் திடீர் திட்டத்திற்கு ஆதரவு அளித்தான் மனு.
“ஸ்மிரிதி ஒத்துகணுமே டா.” என்று சந்தேகத்தைக் கிளப்பினார் சிவகாமி.
“அது உங்களோட பொறுப்பு..ஐடியா கொடுத்தவங்கதான் அதை செயல் படுத்தணும்.” என்று சொன்ன மனுவிற்கு அன்றிரவு அவர்களின் அனைத்து திட்டங்களும் தலைகீழ் ஆக போவதை பற்றி அப்போது எள்ளளவும் ஐடியா இருக்கவில்லை.
“சரி..நான் பார்த்துக்கறேன்..பேசிகிட்டே இருந்தா உனக்கு லேட்டாயிடும்..நீ கிளம்பு.” என்றார் சிவகாமி.
வரவேற்பறை சோபாவில் அவர் மனைவியுடன் அமர்ந்திருந்த கீதிகாவின் அண்ணணைப் பார்த்து, “என்ன இவ்வளவு காலைலே வந்திருக்கீங்க?” என்று விசாரித்தார் வீட்டுக்குள் நுழைந்த கார்மேகம்.
“உங்களைப் பார்க்க நேற்றே வரணும்னு நினைச்சேன்..நீங்க இன்னைக்கு காலைலேதான் திரும்பி வர்றீங்கண்ணு கீதிகா சொன்னா.” என்று பதில் சொல்லியபடி மரியாதை நிமித்தம் எழுந்து கொண்டனர் கீதிகாவின் அண்ணனும், அண்ணியும்.
அவர் சாமானோடு அவர் பின்னால் வீட்டுக்குள் நுழைந்த விரேந்தரிடம்,”திரும்ப வெளியே போக வேண்டி வரும்..இந்த வண்டியை கராஜ்லே விட்டிட்டு வேற வண்டியை ரெடி பண்ண சொல்லிட்டு நீயும் வீட்டுக்கு போயிட்டு வந்திடு.” என்றார் கார்மேகம்.
அவர் சாமானை கீதிகாவிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்று கொண்டான் விரேந்தர். அவன் வெளியேறியவுடன்,
“நான் குளிச்சிட்டு வந்திடறேன்..டிஃபன் சாப்பிட்டுகிட்டு பேசலாம்.” என்று கீதிகா அண்ணனிடம் சொன்னவர்,”மனிஷ்..எங்கே?” என்று கீதிகாவிடம் விசாரித்தார்.
“ஸ்கூலுக்குப் போயிருக்கான்.”
“எதுக்கு?..இனி பரீட்சைக்கு மட்டும் தான் போகணும்னு சொன்னான்.”
“நேத்திக்கும் போனான்..ஏதோ கடைசி நிமிஷ வேலை..இன்னைக்கு அப்பறம் போக வேணாம்.” என்றார் கீதிகா.
கார்மேகம் குளித்து, தயாராகி வரும் வரை பொறுமையாகக் காத்திருந்தனர் கீதிகாவின் அண்ணனும், அண்ணியும்.
அவர் ரெடியாகி டைனிங் டேபிளில் அமர்ந்தவுடன் தம்பதியராக அவரு முன் வந்து இனிப்பு பாக்கெட்டை நீட்டினர்.
“என்ன விசேஷம்? ஸுவிட் கொடுக்கறீங்க?” என்று விசாரித்தபடி சிறு வில்லளை வாயில் போட்டு கொண்டார் கார்மேகம்.  ஒரு முழு ஸுவிட்டை எடுத்து கொண்ட கீதிகா,’அண்ணன், அண்ணி தாத்தா, பாட்டி ஆக போறாங்க.” என்று நல்ல செய்தியை வெளியிட்டார்.
“ரொம்ப சந்தோஷம்..ஸ்வப்னா எப்படி இருக்கா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கா..அவளைப் பார்க்கதான் ஊருக்குப் போயிருந்தோம்..நேத்துதான் திரும்பி வந்தோம்..உடனே உங்ககிட்ட விஷயத்தை சொல்ல விருப்பப்பட்டேன் ஆனா நீங்க வீட்லே இல்லை..அதான் இன்னைக்கு முதல் வேலையா இங்கே வந்திட்டோம்..இனிதான் மற்றவங்களுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தணும்.” என்றார் கீதிகாவின் அண்ணன்.
அதற்கு பின் அவர்கள் நால்வரும் வீட்டு விஷயங்களைப் பேசியபடி காலை டிஃபனை உண்டு முடித்தனர்.  அதற்குபின் சோபாவில் அமர்ந்து அவர்கள் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்த போது கார்மேகத்திற்கு ஃபோன் அழைப்பு வர அந்த அழைப்பு ஏற்க அவர் வெளியே சென்றார்.  அவர் ஃபோன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து விடைபெற்று கொண்டவர்களை வெளி தாழ்வாரம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர் கார்மேகமும், கீதிகாவும்.
மறுபடியும் அவரகள் வீட்டுக்குள் நுழைந்தவுடன்,
“எனக்கு இப்ப வெளியே போகணும்..முக்கியமான வேலை..மதியம் சாப்பிட வர மாட்டேன்..லன்ச் வெளிலேதான்..அப்படியே ஸ்மிரிதியைப் பார்க்க அவ வீட்டுக்குப் போக போறேன்..மனிஷும், நீயும் லன்ச் முடிச்சிடுங்க.” என்றார்.
“ஸ்மிரிதி வீட்லே இருப்பாளா?”
“இன்னும் வெளி வேலைக்கு போக ஆரம்பிக்கலே..நேத்து அவளையும் கூட்டிக்கிட்டு போயிருக்கணும்…சௌகரியமா இருந்திருக்கோம்..அவளுக்கு ஃபோன் செய்திட்டுதான் பார்க்க போவேன்.” என்று கார்மேகம் சொல்லி கொண்டிருக்கும் போது போர்ட்டிகோவில் காரை நிறுத்தினான் விரேந்தர். அவனிடம் ஒரு நிமிஷம் என்று சைகை செய்த கார்மேகம், அவர் ஃபோனை மட்டும் கையில் எடுத்து கொண்டு புறப்பட்டார்.
வீரேந்தர் கார் உள்ளே அமர்ந்திருக்க, முன்பக்க கதவைத் திறக்க அவர் இடது கையால் கதவின் கைப்பிடியைக் கார்மேகம் பிடித்த போது அவர் கை விரல்களில் பிசுபிசுப்பை உணர்ந்தார்.  கதவைத் திறந்தவர்,
“விரேந்தர்..டிஷ்யு.” என்றார்.  அவரிடம் டிஷ்யு பாக்ஸை நீட்டினான் விரேந்தர். அதிலிருந்து  கொத்தாக டிஷ்யு தாள்களை எடுத்து இடது கை விரல்களை அழுத்தமாகத் துடைத்து அந்தத் தாள்களை போர்ட்டிகோவின் விளம்பில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வண்டியில் ஏறினார்.
அதுவரை வாசலில் காத்திருந்த கீதிகாவிடம் தலையசைத்து அவர் விடைபெற்று கொண்டவுடன் கார் புறப்பட்டது.  கேட்டருகே வந்தவுடன்,
“யார் இன்னைக்கு இந்தக் காரை கிளீன் செய்தாங்க?” 
“தெரியலே ஸாப்..நான் ரெடி பண்ண சொல்லிட்டு போயிட்டேன்..இப்பதான் வந்தேன்..ரெடியா இருந்திச்சு..ஓட்டிகிட்டு வந்திட்டேன்.”
“கதவோட கைப்பிடியை சரியா துடைக்கலே.” என்றார் கார்மேகம்.
“கராஜ் ஆள்கிட்ட சொல்றேன் ஸாப்.” என்றான் விரேந்தர்.
எங்கே போக வேண்டுமென்று சொல்லாமல் அவர் இடது உள்ளங்கையை பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்த கார்மேகத்திடம்,  இன்னொரு டிஷ்யுவை நீட்டினான் கார் ஓட்டி கொண்டிருந்த விரேந்தர்.  அதை வாங்காமல் அவர் உள்ளங்கையையும், கை விரல்களையும் தீவிரமாகப் பார்த்து கொண்டிருந்த கார்மேகம் திடீரென்று அவர் வலது கையால் ஃபோனை எடுத்து கீதிகாவிற்கு அழைப்பு விடுத்தார்.  
அந்த அழைப்பு போய் சேரந்தபோது அவருடைய வலது கை குறுகுறுக்க ஆரம்பித்தது.  முகத்தில் இருந்த தசைகள் இறுக ஆரம்பித்தன.  அவர் கட்டுப்பாட்டிலிருந்து அவர் உடம்பு நழுவிப் போவதை நொடிப் பொழுதில் உணர்ந்து,
“வீரேந்தர்..நம்ம ஹாஸ்பிட்டல் போ..எனக்கு என்னமோ மாதிரி இருக்கு..”என்று சொன்னவர் அதே வரிகளைக் கீதிகாவிடம் சொல்ல முடியாமல் விஷயத்தைப் புரிய வைக்க அரும்பாடு பட்டார்.  அழைப்பை ஏற்று மறுமுனையில் கத்திய கீதிகாவிடம்,
“நான் ஆஸ்பத்திரி..உடம்பு..ஸ்மிரிதி ஃபோன்.” என்று பாதி பாதியாக பேசி முடித்த போது அவர் கையிலிருந்து ஃபோன் நழுவி விழுந்தது.
கார்மேகத்தின் உளறளைக் கேட்டு கலவரமடைந்த கீதிகா உடனே ஸ்மிரிதிக்கு அழைப்பு விடுத்தார்.
மாறனுடன் சேர்ந்து காலை உணவைக் கொறித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. நாதன் குளித்து கொண்டிருக்க, அவர்கள் இருவருக்கும் டிஃபனை பரிமாறியபடி அன்று காலையில் மனுவுடன் நடந்த உரையாடலைப் பற்றி பேசியபடி ஸ்மிரிதியை அவர்களுடன் கோயமுத்தூர்க்கு அழைத்து செல்ல முயன்று கொண்டிருந்தார் சிவகாமி.  அப்போது ஸ்மிரிதியின் ஃபோன் அழைக்க, திரையில் மின்னிய பெயரை நம்பமுடியாமல் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதியிடம்,
“ஃபோனை அட்டெண்ட் பண்ணலேன்னா ஸைலெண்ட்லே வைச்சிட்டு நான் சொல்றதைக் கேளு.” என்று கெடுபிடியாக பேசினார் சிவகாமி.
“கீதிகா ஃபோன் செய்யறாங்க..எதுக்குண்னு யோசிச்சேன்.” என்று பதில் சொல்லி அந்த அழைப்பை ஏற்று கொண்டவள், அந்தப் புறம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில்,”எப்ப, யாரோட? என்று கத்தினாள்.
திடீரென்று ஃபோனில் கத்தியபடி அடுத்தடுத்து கேள்விகளும், கட்டளைகளும் பிறப்பித்து கொண்டிருந்த ஸ்மிரிதியைக் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் மாறனும், சிவகாமியும். 
“மனிஷ் எங்கே? வீட்லேயே இருங்க..என் ஃபோன் தவிர வேறு யார் ஃபோனையும் அடெண்ட் செய்யக்கூடாது..அப்பாவைப் பற்றி யார்கிட்டையும் சொல்லாதீங்க..கேட்லே இன்னுமொரு ஸெக்கியுரிடிக்கு சொல்லிடுங்க.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவள், மாறனிடம்,
“பைக்கை எடு..அப்பாவுக்கு உடம்பு சரியில்லே..விரேந்தர் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போறான்.” என்று செய்தியை சொன்னவள் அவளறையினுள் ஓடி போய் ஒரு நிமிஷத்தில் அவள் கைபையுடன் திரும்பி வந்தாள்.
“அப்பாக்கு என்ன ஆச்சு ஸ்மிரிதி?” என்று பதட்டமானார் சிவகாமி.
“தெரியலே ஆன் ட்டி..விரேந்தரோட கார்லே ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காரு..கீதிகாவுக்கு ஃபோன் செய்திருக்காரு ஆனா அவராலே சரியா பேச முடியலே..எனக்குத் தகவல் கொடுக்க சொல்லியிருக்காரு.” என்று ஸ்மிரிதி விளக்கம் கொடுக்கும் நேரத்தில் தயாராகி வந்தான் மாறன்.
“எந்த ஆஸ்பத்திரி?” என்று கேட்டவனிடம்,”அப்பா எப்பவும் போகற ஆஸ்பத்திரிதான்….நான் வழி சொல்றேன்..அந்த ஒனரை அப்பாக்குத் தெரியும்.” என்று பதில் சொல்லியபடி மாறனுடன் வெளியேறினாள் ஸ்மிரிதி.
அவர்கள் இருவரும் போவதை கவலையுடன் பார்த்து கொண்டிருந்த சிவகாமியிடன் வந்த நாதன், டேபிள் மீது பாதி சாப்பிட்ட டிஃபனைப் பார்த்து,”டிஃபன் சாப்பிட்டு முடிக்காம எங்கே இரண்டு பேரும் அவசரமா போறாங்க?” என்று கேட்டார்.
“கார்மேகத்துக்கு உடம்பு சரியில்லை..விரேந்தர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போறான்..கீதிகா ஃபோன் செய்து ஸ்மிரிதிக்கு தகவல் சொன்னாங்க.” 
“எப்ப?”
“அஞ்சு நிமிஷம் கூட ஆகலே..மற்ற விவரம் எதுவும் தெரியலே..இப்பதான் பிரேமாவைப் பறிகொடுத்தா..திரும்பவும் இப்படி ஆகுது.. கார்மேகத்துக்கு ஏதாவது ஆனா ஸ்மிரிதி தாங்குவாளா?”
“ஒண்ணும் ஆகாது..கவலைப்படாத..மனுவுக்கு சொல்லிட்டாங்களா?”
“இல்லை..ஆஸ்பத்திரி போன பிறகு அவனுக்குப் ஃபோன் பேசுவா போலே…அவனாலே மதியத்துக்கு மேலேதான் ஃபோன் அட்டெண்ட் செய்யமுடியும் அதுக்குள்ள நிலவரம் தெளிவாகிடும்….நீங்க அவனுக்கு ஃபோன் போட்டு நேரே வீட்டுக்கு வர சொல்லுங்க அவனோடவே நாமளும் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்.”  என்று சொல்லி பூஜை அறைக்கு சென்று கார்மேகத்தை காப்பாற்ற கடவுளிடம் பெட்டிஷன் போட்ட சிவகாமி அறிந்திருக்கவில்லை அடுத்த சில மணி நேரங்களில் மனிஷின் தலைமுடியை மருதமலை முருகனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டி கொள்ள போகிறாரென்றும், சம்மந்தியாக ஒருமுறைக்கூட போகாத ஸ்மிரிதியின் வீட்டிற்குப் போய் கீதிகாவிற்குத் துணையாக இருக்க போகிறாரென்றும்.

Advertisement