Advertisement

ஸ்மிரிதியின் மனு – 54_2
விசாரணைலே ப்ரதீக் ரொம்ப பொய் பேசினான் பீஜி..நாந்தான் அவனைக் கட்டாயப்படுத்தி கார்லே ஏத்திகிட்டதாகவும், குடிக்க வற்புறுத்தினதாகவும் சொன்னான் பீஜி..அவன் சொன்னதைதான் எல்லாரும் நம்பினாங்க….குடிச்சிட்டு கார் ஓட்டினேன்னு நான் சொன்ன உண்மையை ஏத்துக்கலே.. குடிக்காம அவன் சொன்ன பொய்தான் உண்மை ஆயிடுச்சு.” என்று விபத்து ஏற்பட்ட சூழ் நிலையை, விபரங்களை பீஜியுடன் பகிர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“உங்கம்மாகிட்ட உண்மையை சொல்லியிருக்கலாமே ஸ்மிரிதி..அவனேதான் கார்லே வந்து உட்கார்ந்தாண்னு.”
“அவங்க டீச்சர் பீஜி..என் நடத்தை அவங்களுக்கு அவமான இருந்திச்சு..நான் சொல்றதைக் கேட்கற நிலைமைலே அவங்க இல்லை..என்கூட என் பிரண்ட்ஸ் இருப்பாங்க..உண்மையை சொல்லுவாங்கண்ணு நினைச்சேன் பீஜி..ஆனா அவங்க யாரும் என்கூட இல்லை..எனக்குத் திரும்ப ஸ்கூல்லுக்கு வரவே பிடிக்கலே.. அவங்க நாலு பேரோட பழக, பேச பிடிக்கலே..அதான் திரும்பி வந்த பிறகு அவங்க யார்கிட்டையும் நான் பேசலே..
எங்கப்பாவும், அம்மாவும் விவாகரத்து செய்திட்டாங்க பீஜி..இந்த ஸ்கூலேர்ந்து டிஸி வாங்கிட்டு என்னை எங்கம்மா அவங்களோட பெங்களூர் அழைச்சுகிட்டு போகலாம்ணு நினைச்சாங்க..எனக்கு எங்கப்பாவைத் தனியா விட்டிட்டு எங்கம்மாவோட போகமுடியலே பீஜி..அப்பாவுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்..என் மேலே இருந்த நம்பிக்கைலே அவரு கார் ஓட்ட கத்து கொடுத்தாரு பீஜி..அவர் நம்பிக்கையை தொலைச்சிட்டேன்.. இனி அவரு சொல்ற வரைக்கும் காரைத் தொட போகறதில்லை.” என்று மொத்த நிகழ்வையும் சொல்லி முடித்த ஸ்மிரிதி ஓய்ந்து போயிருந்தாள்.
“அப்பா சொல்றவரை காரைத் தொட போகறதில்லேண்ணு முடிவு செய்திட்ட..கெட்ட பழக்கத்தையெல்லாம் விடுண்ணு அவரு சொல்லலேயா..அவரு சொல்றவரை அதைப் பிடிச்சு வைச்சுகிட்டு இருப்பியா?”
“அப்பா, அம்மா இரண்டு பேரையும் அது ரொம்ப பாதிச்சிடுச்சு..அப்பா அதைப் பற்றி பேச வரறாரு ஆனா அவராலே பேச முடியலே..அம்மா, பேச வேண்டியதெல்லாம் பேசிட்டாங்க..ஆனா என்னாலே அதை உடனே விடமுடியாது பீஜி.”
“எப்படி ஸ்மிரிதி..பழக்கத்தை பட்டுனு பிடிச்சுகிட்ட ஆனா டக்குனு விட முடியலே”
“எனக்கும் அது புரியலே பீஜி..
“எப்ப, எப்படி ஆரம்பிச்சது?
“நாலு பேருலே நான்தான் லேட்..இப்பதான் கொஞ்ச நாளா பழக்கம்..மெஹக் ஃப்ளாஸ்க்லேர்ந்துதான் முதல்லே டி ரை செய்தேன்..அந்த டேஸ்ட் எனக்குப் பிடிக்கலே அதுக்கு அப்பறம் எனக்குப் பிடிச்ச மாதிரி நானே கலந்துகிட்டேன் அதுக்கும் என்னைப் பிடிச்சிருச்சு..அது இல்லாம இப்ப இருக்க முடியலே பீஜி.”
“என்கிட்ட வந்த போதும் இந்தப் பழக்கமெல்லாம் இருந்திச்சா?
“அவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது..இந்தமுறை நான் எப்படியாவது தம் அடிச்சிருப்பேன்..குடிச்சிருப்பேன்.” என்று உண்மையாகப் பேசினாள் ஸ்மிரிதி.
“ஏன் இந்தமுறை நீ பியஸ் வரலே?
“எதுக்கு வரணும்? எனக்கு யாரும் வேணாம் பீஜி..எல்லாருக்கும் அவங்க அவங்க வீடு இருக்கு, அம்மா, அப்பா இருக்காங்க..நானும் அடுத்த லீவுக்கு அம்மாகிட்ட போயிடுவேன் இல்லை எங்க வீட்லேயே இருந்திடுவேன்.”
“உனக்கு உன்னோட புது பழக்கங்கள் இருக்கும் போது யாரும் தேவைப்படாது.. இந்தப் பீஜியும் தேவையில்லை.” 
“நீங்க வேணும் பீஜி..கொஞ்ச நாள் கழிச்சு உங்களைப் பார்க்க நானே வந்திருப்பேன்.” என்று சொல்லி அவரைக் கட்டி கொண்டாள் ஸ்மிரிதி.
“அந்த மாதிரி நடந்திருக்காது ஸ்மிரிதி..நீ இந்தப் பழக்கங்களை விடமுடியலேன்னா பீஜியை விட்டிருப்ப..அம்மா..அப்பாவை விட்டிருப்ப..உன் பிரண்ட்ஸெல்லாம் உன்னை ஏன் விட்டு கொடுத்தாங்கண்ணு நினைக்கற ஸ்மிரிதி? அவங்களை அந்தப் பழக்கம் பிடிச்சு வைச்சிருக்கு..உண்மை என்னென்னு தெரிஞ்சும் ஒருத்தரும் அதைச் சொல்ல முன் வரலே..
அவங்க குடிச்சது தெரியக்கூடாதுண்ணு அவங்க எல்லாரும் உன்னை விட்டிட்டாங்க..
நீ எல்லா நேரத்திலேயும் உண்மையைப் பேசியிருக்க ஸ்மிரிதி…எதையும், யாருக்கிட்டையும் மறைக்க கூடாதுண்ணு உறுதியா இருந்திருக்க..உன்னோட அந்த உறுதியைக் கெட்டியா பிடிச்சுகிட்டு உன்னோட இந்தப் பழக்கத்தை விட்டு நீ வெளியே வந்திடு ஸ்மிரிதி..
அன்னைக்கு ஆக்ஸிடெண்ட்லே உங்க நாலு பேருக்கும் ஏதாவது ஆகியிருந்தா நீ என்ன செய்திருப்ப ஸ்மிரிதி..உயிருக்கு ஆபத்து இல்லாம உடல் ஊனமாகியிருந்தாக்கூட அந்த ஒரு நொடிலே உங்க எல்லாரோட வாழ்க்கையும் மாறிப் போயிருக்கும்.. அதுக்கு அப்பறம் அந்த ஒரு நொடிதான் வாழ்க்கை முழுக்க உன்கூட வரும்..என்னோட வாழ்க்கையைப் போலே.” என்று சொன்ன பீஜி, அவர் கலங்கிய கண்களைத் துடைத்து கொள்ள,
“ஏன் பீஜி அழறீங்க? என்ன நடந்திச்சு பீஜி?” என்று ஸ்மிரிதி கேட்க,
சிறிது நேர அமைதிக்கு பின்,
ராவல்பிண்டிலே (rawalpindi) கலவரம் நடந்தபோது நான் உன்னைவிட ஏழோ, எட்டு வயசோ சின்னவ..ஸ்கூல்லே படிச்சுகிட்டிருந்தேன்..மத்தியானம் அக்கம் பக்கத்து வீட்டுக்கு விளையாட போவேன்.. அதே போல அவங்களும் எங்க வீட்டுக்கு விளையாட வருவாங்க..நாங்க ரொம்ப பெரிய கூட்டு குடும்பம்..அந்தக் கூட்டத்திலே என்னோட அம்மா, அப்பா யாருண்ணு நிறைய யோசிச்சு பார்த்திட்டேன்..அவங்க முகமே நினைவுலே இல்லை..வேற நிறைய முகங்கள் தான் அழிக்க முடியாத கறைகளோட நிரந்தரமாப் படிஞ்சு போயிருக்கு..
திடீர்னு ஒரு நாள் எல்லாமே மாறிப் போயிடுச்சு..வழக்கமா இருந்த எல்லாம் நின்னு போயிடுச்சு..பெரியவங்களேர்ந்து குழந்தைங்கவரைக்கும் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருந்தோம்..
வெளிலே என்ன நடக்குதுண்ணு தெரிஞ்சிக்க போனவங்க யாரும் திரும்பி வரலே..விளையாட ஆளில்லாம போன போது தான் மற்றவங்க எல்லாம் எங்க போனாங்கண்னு வீட்லே இருந்தவங்களைக் கேட்டேன்..யாருக்கும் என்ன ஆச்சுன்னு சொல்ல தெரியலே..
சில நாட்கள் கழிச்சு எங்க குடும்பத்திலே மிஞ்சி இருந்தவங்க எல்லாரும் ட் ரெயின் ஏறினபோது நாந்தான் அந்தக் கூட்டத்திலேயே சின்னவ..டி ரெயின் கடைசியா நின்ன போது நான் ஒருத்திதான் மட்டும் தான் என் குடும்பத்திலே மிஞ்சினேன்..என் கண் முன்னாடி எல்லாரும் ஒருத்தர் மேலே ஒருத்தர் படுத்திருந்தைப் பார்த்து தூங்கிகிட்டு இருக்காங்கண்ணு நினைச்சேன்..
அந்த இரயில்லே என்ன நடந்திச்சு? ஏன் நடந்திச்சு?, எதுக்கு நடந்திச்சுண்ணு புரிய வைக்க, விளக்கம் கொடுக்க.. இனி அந்த மாதிரி நடந்தா நாங்க இருக்கோம்ணு தைரியம் கொடுக்க, இனி அந்த மாதிரி எதுவும் நடக்காதுண்ணு நம்பிக்கை கொடுக்க என் குடும்பத்திலே யாருமே இல்லை.. 
எனக்கு எல்லாம் புரிய வந்த போது அன்னைக்கு நான் இருந்த இடத்திலே இனி வேற யாராவது இருந்தா என்னாலே அவங்களுக்கு முடியற உதவி செய்யணும்னு நான் முடிவெடுத்தேன்..அனாதையா இருந்த எனக்கு அன்பும், ஆதரவும் கிடைச்சுது..அதேயேதான் இன்னைக்கு என்னைச் சுற்றி இருக்கறவங்களுக்கு நான் திருப்பி கொடுக்கறேன்..
என்னை சுற்றி இருக்கற என் குடும்பம், சமூகம் எல்லாம் நானா ஏற்படுத்திகிட்டது..அன்னைக்கு எனக்கு நடந்த அந்த நிகழ்வுதான் எல்லாரையும் அன்பு செய்யற, எல்லாருக்கும் உதவி செய்யற உறுதியை எனக்கு கொடுத்திருக்கு..
 வெறுப்பு சுற்றி சுற்றி வந்து எல்லாத்தையும் அழிக்க பார்க்கும், அன்பும் சுற்றி சுற்றி வந்து அந்த அழிவுலேர்ந்து நம்மை காப்பாற்ற பார்க்கும்..
அன்பைத் தேர்ந்தெடுக்கறதும், வெறுப்பைப் விருப்பபடறதும் ஒருத்தரோட தனிப்பட்ட விஷயம்…. கட்டாயபடுத்தி மாற்ற முடியாது…. புகுத்த முடியாது..
உன்னோட விஷயத்திலே தல்ஜித் உண்மையை பேசலே..உனக்கு உதவி செய்யலே..அது தவறுன்னு நானா சொல்றதைவிட அவனா புரிஞ்சுகிட்டா அது ஆழமா, ஆழியா அவனுள்ளே இருக்கும்.. இப்ப தல்ஜித் அவனா என்கிட்ட விஷயத்தை சொல்லி அவன் தப்பை உணர்ந்திட்டான் இனி அதே தப்பை செய்ய மாட்டான்.” என்றார் பீஜி.
“அவன் எப்பவும் அந்த மாதிரி இல்லை..இதுவரை உண்மையைதான் பேசியிருக்கான்..இந்த முறை அவன் எனக்கு ஏதாவது உதவி செய்திருந்தா அந்தப் ப்ரதீக் அவனை சும்மா விட்டிருக்க மாட்டான்.” என்று தல்ஜித்திற்கு ஆதரவாகப் பேசினாள் ஸ்மிரிதி.
“நல்லது, கெட்டதுக்கு ஆரம்பம் வீடுதான்..நான் வளர்த்த தல்ஜித் வெளியுலகத்தை பார்த்து மிரண்டு போய் நல்லது, கெட்டது மறந்து போய் மாறி போவாண்ணு நினைக்கலே….எந்த சூழ் நிலைலேயும் அன்பு காட்ட, உதவி செய்ய தைரியம் வேணும்..தல்ஜித்கிட்ட அது இருக்குண்ணு நம்பினேன்…..தப்பாயிடுச்சு..
எது நல்லது, எது கெட்டதுண்ணு சொல்லி கொடுக்க எனக்கு வீடு இருக்கலே..நிரந்தர உறவுகளோட பாதுகாப்பு கிடைக்கலே..அதனாலே என்னைப் போல துர்பாக்கியஸாலிங்களுக்கு குடும்பமா இருக்க முயற்சி செய்யறேன்..
நீங்க அஞ்சு பேரும் வேற விதமான துரதிஷ்டஸாலிகள்..வீடு இருக்கு..நிரந்தர உறவுகள் இருக்கு..எதுக்குண்ணு புரியாத அவலநிலை உங்களுக்கு.
என் வீடு உங்களோட வீடு..நான் உங்களோட குடும்பம்..நான் தான் உங்களோட நிரந்தர உறவு….அதான் உன்னை நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு போக நானே நேரடியா ஸ்கூலுக்கு வந்தேன்.”என்றார் பீஜி.
அவளுக்குள் ஏற்பட்டு கொண்டிருந்த மனப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு, அவள் செய்த பிழைகளை அப்படியே ஏற்று கொண்டு, அவள் தவறியதற்கானக்  காரணத்தை அவளுக்கு உணர்த்தி பேருதவி செய்த பிஜீயை கட்டிக் கொண்டு நன்றி சொல்லி அழுதாள் ஸ்மிரிதி. 
அதற்குபின் இருவரும் மௌனமாக இரயில் பயணத்தைத் தொடர்ந்தனர். பீஜி சொன்ன சகலத்தையும் அவள் மனதில் புகுத்தி, புதைத்து அவளைப் பதப்படுத்த பத்திர படுத்திக் கொண்டாள் ஸ்மிரிதி. 
பியஸ் போய் சேர்ந்தவுடன், பீஜியுடன் வந்த ஸ்மிரிதியிடம் தல்ஜித் மட்டும் மனம் திறந்து மன்னிப்பு கேட்க மற்ற மூவரும் உதட்டளவில் கேட்டனர்.  
அந்த முறை பியஸ் விடுமுறையில் பீஜியின் உதவியுடன் அவளை, அவள் செயல்களை அலசி, ஆராய ஆரம்பித்திருந்தாள் ஸ்மிரிதி.
அதேபோல் அனைவரிடமும் அன்பு, ஆதரவு காட்ட துணிவு தேவை என்று புரிந்து கொண்ட தல்ஜித் பீஜியைப் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
அன்று மனதளவில் மாற்றத்தை உணராத கபீர், சுசித் ரா, மெஹக் மூவரும் அதன்பின் ஸ்மிரிதியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் தான் அவர்களை அவள் வாழ்க்கையுடன் நிரந்தரமாகப் பிணைத்தன.  
மனைவியின் பகிர்தல் அவளைச் சூழ்ந்திருந்தப் புதிர்களை விடுவித்து அவள் கணவனிடம் புதிய புரிதலை ஏற்படுத்தியது.
ஏற்றுமதி, இறக்குமதிக்கு உட்படாத, பகிர்தல், பயின்றலுக்கு உட்பட்ட சந்தோஷங்கள், துக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புக்கள், ஆசைகள், அவலங்கள், திருப்பங்கள், தடைகள், நிறுத்தங்கள், தொடக்கங்கள் நிறைந்த, ஏறுமிடம், இறங்குமிடம் நிர்ணயிக்கப்படாத, தினசரி திட்டங்களைத் தளராது, தெவிட்டாது தீட்டும் அலாதியான பயணம் மனித வாழ்க்கைப் பயணம்.

Advertisement