Advertisement

ஸ்மிரிதியின் மனு – 53
மெஹக் கிளம்பி சென்ற சில மணி நேரத்தில் சிவகாமியின் அறையில் பரபரப்புடன் மனு நுழைய, அவனைத் தொடர்ந்து  மூன்று பைகளுடன் நுழைந்தாள் ஸ்மிரிதி.
“என்ன மா ஆச்சு? ஏன் மயக்கம் போட்டீங்க? ஏன் எனக்கு உடனே ஃபோன் செய்யலே? மஞ்சு நாத்கிட்ட பேசின பிறகுதான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சுது.” என்று மனு பதட்டபட, அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளை அறையின் மூலையில் வைத்துவிட்டு, சிவகாமியின் படுக்கையில், அவரருகே அமர்ந்து, அவர் கைகளைப் பற்றிய ஸ்மிரிதி,
“என்ன ஆச்சு உங்களுக்கு? என்று அமைதியாக கேட்டாள்.
“காலைலே உன் பாட்டிகிட்ட நீ அப்படி சொன்னவுடனே எனக்கு நெஞ்சு அடைச்ச மாதிரி ஆயிடுச்சு..அங்கேயே உட்கார்ந்திருந்தேன்..எவ்வளவு முயற்சி செய்தும் எழுந்துக்கவே முடியலே..அப்படியே மயங்கிட்டேன்..ஏன் ஸ்மிரிதி அந்த மாதிரி அவங்ககிட்ட பேசின?”
“அம்மாவோட விருப்பத்தைதான் நிறைவேற்றினேன் ஆன்ட்டி..அப்பாவைப் பிரிஞ்ச பிறகு அவங்க வீட்டு ஆளுங்களோட இருக்க அம்மா ஆசைப்பட்டிருக்காங்க..அவங்க உயிரோட இருந்தவரைக்கும் அது நடக்கலே..அதான் அவங்க போன பிறகு அதை நடத்தி கொடுத்திருக்கேன்..இனி அவங்க அம்மாவோட என் அம்மா கடைசிவரை இருப்பாங்க.” 
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு சிவகாமி அழ ஆரம்பிக்க, உடனே,”சிவகாமி..இன்னைக்குப் போதும்..உன்னோட ப்ரேஷர் ஒரு நிலைலே இல்லைன்னா இன்னைக்கு இராத்திரி மட்டுமில்லே இன்னும் இரண்டு நாளைக்கு இந்த அறையை விட்டு வெளியே போக முடியாது.” என்று கடிந்து கொண்டார் நாதன்.
அப்போது அறைக் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தனர் மஞ்சு நாத்தும், டாக்டர் நேத்ராவதியும்.
அழுது கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்து,
“உங்க வயசுலே இந்த மாதிரி ஆங்ஸைட்டி, அழுகை நல்லதில்லே..உங்க ஆரோக்கியத்தைப் பாதிக்கும்…டெஸ்ட் ரிஸல்ட்ஸ் வந்திடுச்சு..நத்திங் டு வரி.” என்று பேசியபடி பெட்டில் உட்கார்ந்திருந்த ஸ்மிரிதி அருகில் சேர் ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தவர், மஞ்சு நாத்திடம்,” நீ கிளம்பு..நான் இவங்களோட பேசிட்டு அப்பறமா வரேன்.” என்றார்.
அதைக் கேட்டவுடன் பெட்டிலிருந்து எழுந்து கொண்ட ஸ்மிரிதி, மஞ்சு நாத்தை அறையின் மூலைக்கு அழைத்து சென்று அவள் கொண்டு வந்திருந்த பைகளை அவனிடம் ஒப்படைக்குமுன் ஒரு பேக்கைத் திறந்து அதிலிருந்து இரண்டு காட்டன் புடவைகளை எடுத்து கொண்டு,
“இந்த மூணு பைலேயும் அம்மாவோட க்ளோத்ஸ்..ஸண்ட் ரி திங்க்ஸ்..சுசித் ராவுக்கு தெரிஞ்ச இடம் இருக்கு அங்கே கொடுத்திடு.” என்று சொல்லி அந்தப் பைகளை அவனிடம் ஒப்படைத்தாள்.
அதை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறுவதற்கு முன், “நான் ரிசெப்ஷன்லே வெயிட் பண்றேன்..நீங்க பேசிட்டு வாங்க..சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்.” என்றான் மஞ்சு நாத்.
அவன் அறையிலிருந்து சென்றவுடன்,”ஸ்மிரிதி பேட்டா இங்கே வா” என்று ஸ்மிரிதியை அழைத்தவர் அவள் மறுபடியும் சிவகாமியின் அருகில் அமர்ந்தவுடன் அவள் கைகளைப் பற்றி, சிவகாமியைப் பார்த்து,
“வாழ விருப்பமில்லாதவங்களைத் திரும்ப வாழ்க்கைப் பாதைக்கு அழைச்சுகிட்டு வர்றத்துக்கும்..சரி போகட்டும்னு அவங்களை வழியனுப்பி வைக்கறத்துக்கும்..அசாத்திய தைரியம் வேணும்..அதை ஸ்மிரிதிகிட்டதான் பார்க்கறேன்..என் பொண்ணைப் போகவிடாம எங்ககிட்ட திரும்பி கொண்டு வந்தது அவதான்..நேத்திக்கு அவங்க அம்மாவைப் பரவால்லே போகட்டும்னு விட்டதும் அவதான்.. என்று டாக்டர் நேத் ராவதி மேலே தொடருமுன்,
“ஆன்ட்டி..ப்ளீஸ்..அதைப் பற்றியெல்லாம் இப்ப எதுக்கு பேசறீங்க..வேணாம்.” என்று அவரை தடுத்தாள் ஸ்மிரிதி.
“இல்லை ஸ்மிரிதி..சுசித் ராவுக்கு குழந்தை பிறக்க போகுது..அவ அம்மாவாக போறா..இப்பவாவது நான் அவளுக்கு எப்படிபட்ட அம்மாவ இருந்தேன்னு யார்கிட்டேயாவது சொல்லணுமில்லே..உங்கம்மாகிட்டே இதையெல்லாம் சொல்லியிருக்கணும்..சொல்லணும்னு தான் நினைச்சுகிட்டிருந்தேன்..ஆனா என்னென்னவோ நடந்திடிச்சு.” என்று பதில் சொன்னவர் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார்.
“அவளைவிட எல்லாத்திலேயும் ஸ்மார்ட்ன்னு ஸ்கூல் டேஸ்லே ஸ்மிரிதியை சுசித்ராவுக்குப் பிடிக்காது…எனக்கு ஸ்மிரிதியை அதே காரணத்துக்குதான் பிடிக்கும்….ஸ்மிரிதியோட போட்டி போட்டு அவளை விட பெட்டரா சுசித்ரா பர்ஃபாம் பண்ணுவா..
முதல் சில வருஷங்கள் அப்படிதான் போய்கிட்டிருந்தது..ஒரே கிளாஸ் ஆனா பிரண்ட்ஸ் கிடையாது..அப்பறம்  சுசித் ரா கேங்க்லே ஸ்மிரிதியும் சேர்ந்துகிட்டா..அதுக்குள்ள ஸ்மிரிதிக்கு  எல்லாத்திலேயும் நாட்டம் குறைஞ்சிடுச்சு..
ஸ்கூல்ல இருக்கறவரை சுசித்ராவோட பிரண்ட்ஸ் எல்லாரும் லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவாங்க..கொஞ்ச நாள் வீட்லே இருந்திட்டு அப்பறம் பீஜிகிட்ட போயிடுவாங்க..ஒவ்வொரு லீவும் ஒவ்வொருத்தர் வீட்லே..சில சமயம் வெளி நாடு அப்பறம் பியஸ்..
எங்க வீட்லே எல்லாரும் எப்பவும் பிஸியா இருந்ததாலே அந்த மாதிரி ஏற்பாடு எனக்கு சௌகரியமா இருந்திச்சு..வருஷம் பூரா வீட்டை விட்டு வெளியே இருக்கற பொண்ணு லீவுக்கு வரும் போது வீட்லே எங்ககூட வைச்சுக்கணும்னு எங்க யாருக்கும் தோணவேயில்லை..என் பொண்ணுக்கும் கொஞ்ச நாள் மட்டும் வீட்லே இருக்கறது சௌகரியமா இருந்திருக்கு..பீஜி, அவ பிரண்ட்ஸ்..அவங்கதான் அவளை அத்தனை வருஷமா உற்சாகத்தோட, உயிர்ப்போட வைச்சிருந்தாங்கண்ணு எனக்கு அப்ப தெரியலே..
ஒரு அம்மாவா என்னோட எல்லா குழந்தைங்களும் படிப்பிலேயும், பணத்திலேயும் சமமா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்..அதனாலே எல்லாரையும் ஒரே போலே படிக்க வைக்கணும்னு என் மூத்த பையன், பொண்ணு இரண்டு பேரையும் டாக்டருக்குப் படிக்க வைச்சேன், டாக்டரா பார்த்து கல்யாணமும் செய்து வைச்சேன்..
அவங்க இரண்டு பேரும் படிச்ச அதே காலேஜ்லே தான் சுசித்ராவையும் சேர்த்து விட்டேன்..அவ மெடிக்கல் காலேஜ் போக மாட்டேண்ணு அடம்பிடிச்ச போது அவளை அதட்டி அனுப்பி வைச்சேன்..அவ படிக்கவே முடியாதுன்னு பாதிலே ஓடி வந்தபோது அவ எங்களோட பொண்ணேயிலேன்னு அவளை அவமானப்படுத்தினேன்..அவளுக்குப் பிடிக்காததைப் செய்ய அவளைக் கட்டாயப்படுத்தினேன்..அது பிடிக்காம அவ அவளோட வாழ்க்கையை முடிச்சிக்க பார்த்தா..” என்று பேசிக் கொண்டிருந்த டாக்டர் நேத்ராவதி மனம் கனக்க மேலே தொடர முடியாமல் சில நொடிகள் மௌனமாக, அப்போது அவர் பற்றியிருந்த அவள் கையினால் அவர் கையை அழுத்தமாக பற்றி ஆறுதல் அளித்தாள் ஸ்மிரிதி.
அந்த ஆஸ்பத்திரிக்கு சொந்தக்காரர், பிரபலமான மருத்துவர், வியாதிகளையும், வேதனைகளையும், வாழ்வையும், சாவையும் தினசரி பார்த்து கொண்டிருந்த டாக்டர் நேத்ராவதி திடீரென்று மனம் திறந்து அவர் பெண் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வை அவர்களுடன் பகிர்ந்து கொள்வாரென்று அந்த அறையிலிருந்த யாரும் எதிர்பார்க்கவேயில்லை.  அதனால் அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் அபத்தமாக தோன்றலாமென்ற அச்சத்தில் அவற்றை தவிர்த்து அமைதியை அரவணைத்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து,
“எப்ப அவளோட சுஸைடல் தாட்ஸ் ஐடியேஷனாகி அட்டெம்ப்ட்டா மாறிச்சுன்னு எனக்கு இப்பவரை ஐடியா இல்லை..அவ எடுத்து அந்த முடிவுனாலே அவக்கூட பிறந்தவங்க அவளைக் கோழையாப் பார்த்தாங்க..எங்க பொண்ணு எப்படி அப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்ணு எனக்கு அவ மேலே ஆத்திரம், என் கணவருக்குக் கோவம்..
அந்த நேரத்திலே அவளை மன மாற்றத்துக்கு வெளியூருக்கு அழைச்சுகிட்டு போகணும்னு சைக்கியாட்ரிஸ்ட் சொன்ன போது அப்பவும் அவ மனசை எங்க விருப்பப்படி மாற்ற அவளை வெளி நாட்டுக்கு, இல்லை கொடகுலே இருக்கற எங்க காஃபி எஸ்டேட்டுக்கு, மரவந்தேலே இருக்கற பீச் ஹவுஸுக்கு..இங்கே பக்கத்திலே இருக்கற ஃபார்ம் ஹவுஸுக்கு அழைச்சுகிட்டு போக திட்டம் போட்டோம்… ஆனா அவ எங்களோட எங்கேயும் வர மாட்டேன்னு திட்டவட்டமா மறுத்திட்டு பியஸ் போயிட்டா..சுசித்ரா பியஸ் போன பிறகு அவளுக்குத் துணையா இருக்க ஸ்மிரிதியைப் பீஜி கூப்பிட்டுகிட்டாங்க..
அந்த மாதிரி ஒரு சூழ்நிலைலே பொதுவா குடும்பம்தான் அந்த நபருக்குத் துணையா இருப்பாங்க.. நாங்க யாரும் வேணாம்னு சுசித்ரா பிடிவாதமா  இருந்தா..
அந்த நேரத்திலே அவ மேலே ஆத்திரம், கோவம், ஏமாற்றம் இதெல்லாம் இருந்ததாலே அவளுக்கு ஏன் அந்த மாதிரி யோசனை வந்ததுண்ணு நாங்க யோசிக்கலே..எங்ககிட்டேயிருந்து தூர இருக்க விரும்பறான்னா தப்பு எங்க மேலேதாண்ணு உணரலே..
அந்த நிகழ்வுலேர்ந்து அவளை முழுசா வெளியே கொண்டு வரணும்னா திரும்ப அவளைத் மெடிக்கல் காலேஜ் அனுப்பக்கூடாதுண்ணு பீஜி என்கிட்ட கேட்டுகிட்டாங்க..நான் வேற பிளான் வைச்சிருந்ததாலே அதுக்கு சரின்னு சொன்னேன்..
அதுக்கு பிறகு அவளுக்குப் பிடிச்சதை படிக்க ஊக்கம் கொடுத்தது, அவளுக்கு வாழ்க்கை மேலே ஒரு பிடிப்பை, விருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது பீஜியும், ஸ்மிரிதியும் தான்..அப்பலேர்ந்து சுசித் ராவுக்கு எல்லாத்துக்கும் இவங்க இரண்டு பேர்தான்..
ஸ்மிரிதியோட கல்யாணத்துக்கு வராததுக்கு காரணம் நான்  இருக்கற இடத்திலே சுசித் ராவாலே சகஜமா இருக்க முடியாது….ஒடுங்கிப் போயிடுவா…என் மாப்பிள்ளை முயற்சிலே அவங்க கல்யாணத்துக்குப் பிறகு அவகிட்ட கொஞ்சம் மாற்றம் வந்திருக்கு..
மஞ்சு நாத்தைப் பார்க்கற போதெல்லாம் என் மனசுலே குற்ற உணர்வு..இவன் அவளுக்கு சரியான வாழ்க்கைத் துணையில்லைன்னு சொல்லி சுசித்ராவை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்..
நாங்க விருப்பப்பட்ட மாதிரி அவ டாக்டர் ஆகாததுனாலே அந்த ஏமாற்றத்தை சரி செய்ய எங்க விருப்பப்படி ஒரு டாக்டரைதான் அவ வாழ்க்கைத் துணையா ஏத்துக்கணும்னு பிடிவாதமா இருந்தேன்..அதை மனசுலே வைச்சுகிட்டுதான் அவளுக்குப் பிடிச்சதைப் படிக்கட்டும்னு விட்டு கொடுத்தேன்..
அதவாது என் பொண்ணு எங்க குடும்பத்திலே ஒருத்தியா இருக்க அவளுக்கு அந்தஸ்தும், அங்கீகாரமும் தேவைண்ணு சொன்னேன்..
 அதுக்கு ஸ்மிரிதி சொன்ன பதில் என் மனசுலே அப்படியே பதிஞ்சிடுச்சு..”சுசித்ராவுக்கு அன்பான வாழ்க்கைத் துணைதான் தேவை….அன்புதான் ஆறுதல் கொடுக்க முடியும்..அந்தஸ்தும், அங்கீகாரமும் ஆறுதல் தராதுண்ணு சொன்னா.. 
சுசித்ராவுக்கு கல்யாணமான இந்த இரண்டு வருஷமா அவ வாழ்க்கைலே ஏற்படற குழப்பங்களையும், எங்களோட அவளுக்கு ஏற்படற பிணக்கையும் என் மாப்பிள்ளையோட அன்புதான் சரி செய்யுது..….
அம்மா, என்னாலே முடியலைன்னு அவ முதல் தடவை வந்தபோது “பரவால்லே..வேற ஏதாவது படின்னு.” ஒரு அம்மாவா நான் ஆறுதலா பேசலே..அடுத்த தடவை அவ கல்யாணத்து போது,”உனக்கு பிடிச்ச ஆளைக் கல்யாணம் செய்துக்கோ..எதுக்கும் கவலைப்படாத அம்மா நான் உன்கூட இருக்கேண்ணு.” தைரியம் கொடுக்கலே…ஆறுதல், தைரியம் எல்லாத்துக்கும் அடிப்படை அன்புதான் எனக்கு அப்ப புரியலே..
சுசித்ராவுக்கும், ஸ்மிரிதிக்கும் நடுவே இருந்த சாதாரண நட்பு எப்ப, எப்படி அன்பான நட்பா மாறிச்சுன்னு எனக்குத் தெரியாது.. ஆனா அந்த அன்புனாலேதான் என் பொண்ணுக்காக ஸ்மிரிதி அவளோட ஒரு ஸெமஸ்டர் படிப்பை விட்டு கொடுத்தா..நான் கத்து கொடுக்க வேண்டிய தைரியத்தை அவ கத்து கொடுத்தா..காட்ட வேண்டிய அன்பை ஸ்மிரிதி காட்டினா…என்று சொன்னவர், சேரிலிருந்து எழுந்து கொண்டு ஸ்மிரிதியை அவர் நெஞ்சோடு அணைத்து,
ஆதாயங்களை அலசாம அன்பை அள்ளி கொடுக்கற அழகான மனசு ஸ்மிரிதிக்கு மட்டும் தான்… 
இதை அவ அம்மாகிட்ட சொல்ல முடியலே..உங்களை உங்க சிநேகிதியா நினைச்சு என் மனசுலே இருக்கறதை சொல்லிட்டேன்..
சுசித் ராவுக்கு ஸ்மிரிதி செய்ததை போலே என்னாலே அவ அம்மாக்கு செய்ய முடியலே.” என்று அவர் குரல் நடுங்க, அப்போது அவரை அணைத்து கொண்ட ஸ்மிரிதி,
“ஆன்ட்டி, ப்ளீஸ்..நீங்க எல்லாரும் அம்மாவைப் பத்திரமா பார்த்துகிட்டதுனாலதான் நான் தில்லிலே தைரியமா இருந்தேன்….மஞ்சு நாத்தும், சுசித்ராவும் அம்மாவை ஒவ்வொரு மாசமும் செக்-அப்புக்கு அழைச்சுகிட்டு வந்தாங்க..இரண்டு நாளா நீங்களும் உங்களாலே முடிஞ்சதையெல்லாம் செய்தீங்க..அவங்களுக்கு விருப்பமில்லே..அதுக்கு யாரையும் குத்தம் சொல்ல முடியாது.” என்றாள்.
ஸ்மிரிதியின் ஆறுதலான அணைப்பில், பேச்சில் சுதாரித்து கொண்ட டாக்டர் நேத் ராவதி,”இன்னைக்கு நைட் நீங்க உங்க அறையிலேயே தங்கிக்கலாம்..நாளைக்கு காலைலே மறுபடியும் உங்களை வந்து பார்க்கறேன்..எப்ப ஊருக்கு கிளம்பறீங்க?” என்று சாதாரணமாக உரையாட ஆரம்பித்தார்.
“நாளைக்கு சாயந்திரம் கிளம்பி இராத்திரி தில்லி போய் சேருவோம்..அப்படியே ஹரித்வார் போய் மறு நாள் காலைலே எல்லா காரியத்தையும் முடிச்சிட்டு அன்னைக்கே வீட்டுக்குத் திரும்பிடலாம்னு நினைக்கறேன்.” என்றார் சிவகாமி.
“உங்களுக்கு களைப்பா இருந்தா தில்லிலே ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துகிட்டு போகலாமே.”
“இதை உடனே முடிச்சிடணும்..அப்பறம் தான் ரெஸ்ட்.”
“அடுத்தமுறை நீங்க எல்லாரும் வீட்டுக்கு வரணும்.” என்று அழைப்பு விடுத்தார் டாக்டர் நேத் ராவதி.
“வரேன்..சுசித்ராவுக்கு குழந்தைப் பிறந்த பிறகு பார்க்க வருவேன்.” என்றார் சிவகாமி.
டாக்டர் நேத்ராவதி சென்றவுடன் ஸ்மிரிதியையே விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருந்தான் மனு.  அவன் மனதில் அவளைப் பற்றி எழுந்த கேள்விகளைக் கேட்க அது தக்க தருணமில்லை என்று உணர்ந்து, நாதனிடம்,
“அப்பா, மாறன் எங்கே?” என்று கேட்டான்.
அவன் கேள்வியில் நாதன் சிவகாமியைப் பார்க்க, சிவகாமி நாதனைப் பார்த்தார். அவர்கள் இருவரில் யார் பதில் சொல்லுவது? என்ன சொல்லுவது? என்று யோசித்து கொண்டிருக்கும் போது மாறனிற்கு அழைப்பு விடுக்க அவன் ஃபோனை எடுத்தான் மனு.
“அவன் அவனோட வருங்கால மனைவியை ஏர்போர்ட்லே விட்டிட்டு வர போயிருக்கான்.” என்றார் சிவகாமி.
அந்தப் பதிலில் ஒரு நொடி அதிர்ச்சியுடன் ஸ்மிரிதியும், மனுவும் ஒருவரையொருவர் பார்க்க,”நீங்க இரண்டு பேரும் எதுக்கு டா அதிர்ச்சியாகறீங்க..உங்ககிட்ட தான முதல்லே மெஹக்கைப் பற்றி சொல்லியிருக்கான்.” 
“இல்லை மா..அவங்க இரண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் சொல்லிக்கறதுக்கு முன்னாடி ஸ்மிரிதிகிட்டதான் சொல்லியிருக்காங்க..எனக்கு அவன் விஷயம் புவனா ஆன்ட்டி வீட்டுக்கு சாப்பிட போனனில்லே அன்னைக்குதான் தெரியும்..மெஹக்கையும் டின்னருக்கு கூப்பிட்டிருக்காங்க ஆன்ட்டி..அதுக்கு அப்பறம் அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கான்..அதை ஸ்மிரிதிதான் கண்டு பிடிச்சா..நான் ஃபோன் பண்ணி கன்ஃபார்ம் செய்துகிட்டேன்.” என்று அனைத்தையும் அவன் அம்மாவிடம் ஒப்பித்தான் மனு.
“அவன் தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்..நாங்க இரண்டு பேரும் தலையிட மாட்டோம்னு அவன்கிட்ட  கண்டிப்பா சொல்லிட்டேன்..அவன் முடிவுகளை அவன் தான் எடுக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“மெஹக்தான் அவன் வாழ்க்கைத் துணைன்னு அவன் முடிவு செய்திட்டான்..அவன் விருப்பமும், சந்தோஷமும் தான் எங்களுக்கு முக்கியம்ணு நான் சொல்லிட்டேன்..அடுத்த அஞ்சு வருஷத்துக்குள்ள அவனோட லட்சியத்தை அவன் அடையணும்..அவளும் அவ ஒத்துகிட்ட படங்களை முடிக்கணும்..அப்பறம்தான் அவங்க கல்யாணம்.” என்றார் சிவகாமி.
“அப்பா..மாறனை இப்ப தொந்தரவு செய்ய வேணாம்..நானே நம்ம நாலு பேருக்கும் நாளைக்கு சாயங்கலாம் ஃபிளைட் புக் செய்திடறேன்..அம்மா, உங்களுக்கு எதுவும் பிராப்ளம் இருக்காதில்லே.” என்று கேட்டு அவர்களை நால்வரும் தில்லி திரும்பி செல்லும் ஏற்பாடுகளை ஆரம்பித்தான் மனு.
“களைப்பா இருக்கு.. தூங்கினா சரியாகிடும்  டா..எனக்கு இங்கே இருக்க வேணாம்..நாங்க தங்கியிருக்கற ரூமுக்கு அழைச்சுகிட்டு போயிடு.”
“நேத்ராவதி ஆன்ட்டியும் அதான் சொன்னாங்க..ரெஸ்ட் எடுத்துக்கோங்க…நானும், ஸ்மிரிதியும் மட்டும் ஹரித்வார் போயிட்டு வரோம்.” என்றான் மனு.
“நாளைக்கு சாயங்கலாம் தானே ஃபிளைட்…அதுக்குள்ள சரியாகிடுவேன்.”
அதன்பின் சிவகாமியையும், நாதனையும் அவர்கள் அறையில் சேர்த்துவிட்டு மனுவும், ஸ்மிரிதியும் அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அறைக்குள் நுழைந்தவுடனையே அவள் எடுத்து வந்த பிரேமாவின் காட்டன் புடவைகளை அவளுடைய பெட்டியில் வைத்துவிட்டு குளிக்க சென்றாள் ஸ்மிரிதி.  அவள் வெளியே வருவதற்குள் மாறனிடம் அவர்களின் பயணத்தைப் பகிர்ந்து கொண்டான் மனு.  மாறனுடன் ஃபோன் பேசி முடித்தபின் மனுவும் குளித்துவிட்டு வந்த போது கண்களை மூடி படுக்கையில் படுத்திருந்தாள் ஸ்மிரிதி.
அவளுருகே படுத்து கொண்ட மனு,”தூங்கிடாதே..மஞ்சு நாத் டின்னர் அனுப்பறான்..காலைலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே..கொஞ்சமாவது சாப்டிட்டுதான் தூங்கணும்.”
“சரி.” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
சிறிது நேரத்திற்கு பின்,”சுசித்ரா, மஞ்சு நாத், நேத்ரா ஆன்ட்டின்னு எல்லாரும் உனக்காகன்னு எந்தக் கேள்வியும் கேட்காம எதையும் செய்ய தயாரா இருக்கறது ஏன்னு இப்பதான் எனக்குப் புரியுது..வாழ்க்கையையே நீ திருப்பி கொடுத்திருக்க.” என்றான் மனு.
“நான் யாருக்கும் எதையும் திருப்பி கொடுக்கலே..அவளுக்கே வாழ விருப்பம் இருந்திச்சு..நம்பிக்கை இருந்திச்சு..நேத்ரா ஆன்ட்டி என்னைப் பற்றி சொன்னதுலே சின்ன திருத்தம்.. என்னோட அன்பு அன்லிமிடட் ஆனா கண்டிஷன்ஸ் அப்ளை.. 
போனமுறை சுசித்ராவுக்காக நான் பெங்களூர் வந்திருந்த போது, தாயாக அவளுக்குத் தைரியமில்லேன்னா நானே அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போய் அந்த ஆசையை நிரந்தரமா முடிச்சு வைக்கறேண்ணு சொன்னேன்..அதுக்கு அப்பறம் தான் அவ எவ்வளவு கொடுத்து வைச்சவண்ணு அவளுக்குப் புரிஞ்சுது.” 
“நீ அப்படி பேசினதுக்கு மஞ்சு நாத் என்ன சொன்னான்?”
“அவனுக்கு என்னைப் பற்றி தெரியும்..நான் அவளைத் திட்டினா, அதட்டினா அதுலே தலையிட மாட்டான்..அவனை எனக்குதான் முதல்லே சுசித்ரா அறிமுகப்படுத்தி வைச்சா..அவளோட கதையை அவன்கிட்ட சொன்ன போது நானும் அவக்கூட இருந்தேன்..அதைக் கேட்ட அப்பறமும் அவளைதான் கல்யாணம் செய்துக்கணும்னு திடமா இருந்தான்..அவனை மாதிரி ஒரு ஆள் சுசித் ரா வாழ்க்கைலே அந்த சமயத்திலே இருந்திருந்தா அவ அந்த மாதிரி முடிவு எடுத்திருக்க மாட்டா..
என்னோட நட்பு வட்டத்திலே எல்லாருக்கும் தெரியும்.. என்னோட  அளவில்லாத அன்பு நிபந்தனைகளோடதான் கிடைக்கும்ணு ..மெஹக்கிற்கும் கண்டிஷன் போட்டிருக்கேன்..அவ குடும்பத்தை மறுபடியும் அவகிட்ட சேர்த்தா அவ செத்தா.” என்று தீர்மானமாக சொன்னாள் ஸ்மிரிதி.
அவள் அன்பின் விளக்கத்தை கேட்டு அதிர்ச்சியான மனு,“ஏன் ஸ்மிரிதி இப்படியிருக்க?”
“நான் பீஜியில்லைன்னு உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்..அவங்களாலேதான் எல்லார் மேலேயும் அளவில்லாத, நிபந்தணையில்லாத அன்பு காட்ட  முடியும்…
இப்ப அவங்களுக்கும் குடும்பம் இருக்கு..ஆனாலும் எல்லாருக்கும் ஒரே போலே அன்பும், ஆதரவும் கொடுக்கறதுனாலே நிறைய பேருக்கு குடும்பம்னா அவங்கதான்..எனக்கும் தான்..
கார் விபத்துக்கு அப்பறம் லீவுக்கு நான் பியஸ் போகலே..ஸ்கூல்லேயே இருந்திட்டேன்..நான் ஏன் வரலேண்ணு காரணத்தைக் கண்டுபிடிக்க ஸ்கூலுக்கே வந்திட்டாங்க பீஜி..நான் வேணாம்னு மறுத்த போதும் அப்பாகிட்ட பர்மிஷன் கேட்டு என்னை அவங்ககூடவே இரயில்லே பியஸுக்கு அழைச்சுகிட்டு போனாங்க..
ஒரு இரயில் பயணத்திலே பீஜி அனாதை ஆனாங்க..என்னோட அந்த இரயில் பயணத்திலே பீஜி என் குடும்பமானாங்க.  

Advertisement