Advertisement

ஸ்மிரிதியின் மனு – 52
சிவகாமி கண் விழித்த போது அவரெதிரே டாக்டர் நேத்ராவதி இருந்தார்.  
“என்ன நீங்க இப்படி பயமுறுத்திடீங்க?” என்று அவர் கேட்க,
“என்னவோ தெரியலே..திடீர்னு ஒரு மாதிரி இருந்திச்சு..என்ன ஆச்சு எனக்கு?’
“அதிர்ச்சிலே மயக்கமாயிட்டீங்க..எதுக்கும் எல்லாம் டெஸ்டும் செய்ய சொல்றேன்..அந்த ரிஸல்ட்ஸ் வந்த பிறகு  மறுபடியும் உங்களை வந்து பார்க்கறேன்.” என்று சொல்லி விடைபெற்று கொண்டார்.
அவர் வெளியேறியவுடன் அறைக்குள் நுழைந்தனர் நாதன், மாறன், மெஹக் மூவரும்.
“என்ன செய்யுது உனக்கு? எல்லாம் டெஸ்ட்டும் பண்ணணும் சொல்றாங்க டாக்டர்.” என்று மனைவியை விசாரித்தார் நாதன்.
“இப்ப சரியாதான் இருக்கேன்.. பிரேமாவோட அம்மாகிட்ட ஸ்மிரிதி அந்தக் கவரைக் கொடுத்தபோது என் நெஞ்சு பாரமாயிடுச்சு..கை, கால் துவண்டு போய் அசையவே முடியலே..நீங்க எழுந்துகோன்னு சொன்னதது தான் கேட்டிச்சு அதுக்கு அப்பறம் என்ன நடந்திச்சுன்னு தெரியலே.” என்றார்.
“இந்தப் பொண்ணு உன்னை ஆன்ட்டி, ஆன்ட்டின்னு கூப்பிடறா நீ அவ மேலேயே மயங்கி விழுந்திட்ட..நல்ல வேளை சுசித்ரா அம்மா அங்கே பக்கத்திலே இருந்தாங்க.” 
“அதிர்ச்சி மயக்கம்னு சொன்னாங்க..ஆனாலும் கம்ப்ளீட் செக் அப் செய்ய போறாங்க..டெஸ்ட்டுலே என்ன வர போகுதோ.” என்றார் சிவகாமி.
“டெஸ்டுலே எல்லாம் நார்மன்னு தான் வர போகுது.” என்றான் அதுவரை மௌனமாக இருந்த மாறன்.
“என்னை விட வயசுலே சின்னவ பிரேமா அவளே போயிட்டா..இனி நான் இருந்து என்ன செய்ய போறேன்.” என்று அவர் புலம்பலை ஆரம்பிக்க,
“அதுக்குள்ள நீங்க போகறதுக்கு யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தாங்க?….நீங்க ஈஸியா கழண்டுக்கலாம்னு பார்க்கறீங்களா?” என்று சிவகாமியின் வாயைக் கிளறி அவர் மன நிலையை மாற்ற முயன்றான் மாறன்.
“நான் என்னோட பொறுப்பை முடிச்சிட்டேன்..இரண்டு பசங்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியாச்சு.. இனி எனக்கு இங்கே என்ன வேலை?” என்று வாழ்க்கையை வெறுத்து பேச,
“பெரியவை மட்டும் தான் இரண்டு ஆள் ஆக்கியிருக்கீங்க..சின்னவனை தனியாதான் வைச்சிருக்கீங்க..ஓரவஞ்சனை.” என்று விளையாட்டாகவே அவர் பொறுப்பு இன்னும் முற்று பெறவில்லை என்று அவருக்கு உணர்த்தினான்.
“என்ன டா நீ திரும்பவும் அதே மாதிரி பேசற? உன்னையும், அவனையும் வேற வேறென்னு நான் நினைச்சதில்லே.” என்று பதில் சொன்ன சிவகாமியின் குரல் தழுதழுக்க,
உடனே,”மாறன்..உனக்கு அறிவில்லையா..இந்த நேரத்திலே எதுக்கு அந்த மாதிரி பேசற?” என்று நாதன் அவனைக் கடிந்து கொள்ள,
அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் என்று உணர்ந்த மெஹக் அந்த அறையை விட்டு வெளியேற நினைக்க,
“எல்லாம் இருக்கு..சாவைப் பற்றி பேசறவங்க கிட்டதான் வாழ்வைப் பற்றி பேசணும்..நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..என் வாழ்க்கை என்ன ஸெட்டிலாயிடுச்சு எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லி நீங்க புறப்படறத்துக்கு?” என்று சிவகாமியைக் கேட்ட மாறன் மெஹக்கை சைகையாலே அங்கேயே இருக்கும்படி பணித்தான்.
“நானா அவனுக்கு ஸ்மிரிதியைத் தேர்ந்தெடுத்தேன்..அவங்க இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்திச்சு..கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..உனக்கும் யாரையாவது பிடிச்சிருக்குண்ணா  கல்யாணம் செய்துக்க..நான் தலையிட மாட்டேன்.” என்றார் சிவகாமி.
அந்த அசந்தர்ப்பமான சூழ் நிலையில் அவனுக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல்,”அம்மா, அடுத்து நான் சொல்ல போகறதைக் கேட்டு நீங்க அதிர்ச்சிலே திரும்ப மயக்கம் போட்டாலும் இப்ப நீங்க சொன்னதை வாபஸ் வாங்கக்கூடாது.” என்று அவர் சொன்னதை உடும்பாகப் பிடித்து கொண்டு விடுகதையாகப் பேசிய சின்ன மகனைக் கலக்கத்துடன் பார்த்தார் சிவகாமி.
ஏதோ பெரிய விஷயத்தைப் போட்டு உடைக்கப் போகிறானென்று புரிந்து கொண்ட நாதன் அதை தடுக்கும் விதமாய்,”மாறன், இங்கே எதுவும் வேணாம்..கொஞ்சம் நாள் கழிச்சு நீ வீட்டுக்கு வா அங்கே பேசிக்கலாம்.” என்றார்.
“கொஞ்ச நாள் கழிச்சு பேசினாலும், இப்ப பேசினாலும் விஷயம் மாற போகறதில்லே, சம்மந்தப்பட்ட ஆளுங்களும் மாற போகறதில்லே..இடம் மட்டும் தான் மாறியிருக்கும்.” என்ற மாறன் மெஹக்கின் கையைப் பிடித்து அவளை அவன் அருகில் அழைத்து கொண்டான்.
அந்த சைகையே அவன் அப்பா, அம்மா இருவருக்கும் அவன் சொல்ல போகும் விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்ட, இருவரும் அதிர்ச்சியோடு மாறனை நோக்க,”எனக்கு மெஹக்கைப் பிடிச்சிருக்கு..அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு.” என்று அவன் விருப்பத்தைப் போட்டுடைத்தான் அவர்களின் இளைய மகன்.
மாறன் சொன்னது புரியாவிட்டாலும் அவர்களைப் பற்றி அவன் பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டான் என்று அவளை அழைத்து, அவள் கைப்பிட்டித்து பேசிய அவன் செய்கை உறுதி செய்ய அத்தகைய செய்கையை, சூழ் நிலையை நிழலிலும் கண்டிராத மெஹக் என்ன செய்வது என்று தெரியாமல் தலைக் குனிந்திருந்தாள்.  
மாறன், மெஹக் இருவரின் பரஸ்பர பிரியம் பிரேமாவின் பிரிவு என்ற பெரிய இடியை சிவகாமியின் இதயத்திலிருந்து இறக்கி வைத்தது. மாறன் அவன் ஆசையை அறிக்கையாக அறிவித்த பின் சிவகாமியும், நாதனும் சிறிது நேரம் மௌனமாக காக்க, அவர்களின் எதிர்வினைக்காக அந்த மௌனத்தை உடைக்காமல் அடைக்காத்தான் மாறன். அதிரிச்சியிலிருந்து முதலில் வெளி வந்த நாதன், அவர் மகனிடம் பேசாமல், முதல்முறையாக மெஹக்கிடம் பேசினார்.
“இவன்..”என்று ஒரு நொடி மாறனிடம் பார்வையை கொண்டு போனவர் அதன்பிறகு மெஹக்கை நேரடியாக பார்த்து, “இவனைத் தூக்கி வைச்சுகிட்டிருந்தக் குடும்பத்தை ஒரு நொடிலே தூக்கியேறிஞ்சவன்….இதுவரை வாழ்க்கைலே அடிப்பட்டது கிடையாது, தோல்விகளைச் சந்திச்சது கிடையாது..யாருக்கும் ஆறுதலா இருந்ததும் கிடையாது..
வாழ்க்கைலே வெற்றி, தோல்வி, துக்கம், சண்டை, சமாதானம் எல்லாத்தையும் வெறும் ஆசையை மட்டும் வைச்சுகிட்டு கடந்து வரமுடியாது.. 
உனக்கு ஆறுதலா இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணையைதான் நீ தேடிக்கணும்.” என்று அவளைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல், அவர் மகன் அவளுக்குச் சரியான வாழ்க்கைத் துணையில்லை என்றார்.
நாதன் பேசியதைக் கேட்டு மெஹக்கின் கண்கள் பனித்தன.  மாறனிற்கு ஏற்ற மனைவி, அவர்கள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் அவளில்லை என்று கேட்க தயாராக இருந்தவளுக்கு அவளுக்கு ஏற்ற துணை மாறனில்லை என்று நாதன் சொல்லக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.  அவளை அவர் மகனை விரும்பும் பெண்ணாக மட்டும் கருத்தில் கொண்டு அவள் வாழ்க்கைத்  துணையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவளுக்கு அறிவுரை அளித்ததில் நெகிழ்ந்து போயிருந்தாள்  
அவனைப் பற்றி அவன் அப்பா சொன்ன உண்மை அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் மாறன். 
மெஹக், மாறன் இருவரிடமிருந்தும் நாதன் பேசியதற்கு பதில் வரவில்லை. அதற்குமேல் சொல்ல எதுவுமில்லை என்று நாதனும் அமைதியானார்.அந்த அறையிலிருந்த அனைவரையும் அமைதி ஆட்கொள்ள அடுத்த என்ன என்ற கேள்வியுடன் நிமிடங்கள் கடந்தன.
அந்த அமைதியான நிமிடங்களில் அவரைப் விட்டு பிரிந்து போன பிரேமாவின் வாழ்க்கையை நினைத்து பார்த்து கொண்டிருந்தார் சிவகாமி. பிரேமாவின் அம்மாவைப் போல் வீம்பாக வாழ்க்கையை வீணாக்க, மாறனை விலக்கி அவருடைய மீதி வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. தில்லியிலிருந்து  பெங்களூர் வந்து சேர்ந்தது முதல் மாறன் தான் அவரைத் தாங்கி, தோள் கொடுத்து அனைத்து விஷயத்திலும் அவர்களுக்குத் துணையாக இருந்திருக்கறான் என்று உணர்ந்திருந்தவர், 
“மெஹக், அங்கிள் மாறனோட குணத்தைப் பற்றி சொன்னாரு..அவன் பழக்கத்தைப் பற்றி சொல்லலே..அவனுக்கு சில கெட்ட பழக்கங்கள் இருக்கு…. அவன் எப்ப அதெல்லாம் பழகிகிட்டான்னு எனக்குத் தெரியாது.. என் கண் முன்னாடி நடக்கலே..
அந்த மாதிரி பழக்கமெல்லாம்  இந்த வயசுலே, தனியா இருக்கறவரைக்கும் பெரிசா தெரியாது..தப்பா தோணாது..ஆனா அந்தப் பழக்கமெல்லாம் ஒரு குடும்பம்னு ஆன பிறகு பிரச்சனையை ஏற்படுத்தும்..அப்ப நீ ஒரு தப்பான துணையைத் தேந்தெடுத்துட்டேன்னு உனக்குத் தோணலாம்..
நானும், அங்கிளும் அவனைப் பற்றி எங்களுக்குத் தெரிஞ்சதை மறைக்காம உன்கிட்ட சொல்லிட்டோம்….இதுக்கு மேலே உன் இஷ்டம்..நாங்க இரண்டு பேரும் உங்க விருப்பத்திற்குத் தடையா இருக்க மாட்டோம்.” என்று அவளின் பழக்கத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் மாறனின் பழக்கத்தை பற்றி மட்டும் பேசிய சிவகாமியின் நேர்மை மெஹக்கிற்குத் தடுமாற்றத்தையும், கூச்சத்தையும் உண்டாக்கியது.  
அப்போது கதவைத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்த நர்ஸ்,”டாக்டர் டெஸ்ட்ஸ் எழுதி கொடுத்திருக்காங்க..நீங்க ரெடின்னா லேப் ஆளுங்களை வர சொல்றேன்..வெளியே வெயிட் செய்யறாங்க.” என்றார்.
அதுவரை மௌனமாக இருந்த மாறன்,“எவ்வளவு நேரமாகும் ரிஸல்ட் தெரிய.” என்று விசாரித்தான்.
“டாக்டர் நேத்ராவதி கம்ப்ளீட் செக் அப் செய்ய சொல்லியிருக்காங்க…இப்ப ஸாம்பில் எடுத்தோம்னா இன்னைக்கு நைட் இல்லை நாளைக்கு காலைலே அந்த  ரிபோர்ட்ஸ் ரெடியாகிடும்…ஈஸிஜி, ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் உடனே கிடைச்சிடும்.” என்றார்.
“இப்பவே எல்லா டெஸ்ட்டும் செய்திடுங்க..நாளைக்கு சாயந்திரமாதான் இவங்க ஊருக்குப் போவாங்க.” என்று சிவகாமிக்கு அனைத்து பரிசோதனையும் செய்ய அனுமதி அளித்தான்.
கதவருகில் காத்திருந்த ஆட்கள் உள்ளே நுழைந்தவுடன் நாதனும், மாறனும் அறையிலிருந்து வெளியேற, “உங்க உதவிக்கு நான் இங்கையே இருக்கட்டுமா?” என்று சிவகாமியிடம் அனுமதி கேட்டாள் மெஹக்.
ஒரு நர்ஸ் துணைக்கு இருந்த போதிலும் அவள் உதவி செய்ய தயாராக இருப்பதை அறிவித்து, அனுமதி கோரிய பணிவு சிவகாமிக்குப் பிடித்து போனது.   அவர் சரியென்று மெதுவாக தலையசைத்த அந்த நொடி சிவகாமிக்கும் அவர் சின்ன மருமகளுக்கும் மெலிதான, உறுதியான உறவு ஆரம்பமானது.
பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பின் களைப்பாக உணர்ந்த சிவகாமி, அவர் தங்கியிருந்த விருந்தினர் அறைக்கு செல்ல விரும்புவதாக நர்ஸிடம் தெரிவித்தார்.
“ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை பிரேஷர் செக் செய்யணும்..சாயந்திரம் வரை இங்கதான் இருக்கணும்..டெஸ்ட் ரிபோர்ட்ஸ் வந்தவுடனே டாக்டர் ஃபோன் செய்ய சொல்லியிருக்காங்க..அப்ப அவங்களைக் கேட்கறேன்.” என்று பதில் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
அதற்குபின் சிவகாமிக்குத் துணையாக மூவரும் அதே அறையிலேயே  இருந்தனர்.  அந்த நேரத்தில் அவளின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் சிவகாமி, நாதனுடன் பகிர்ந்து கொண்ட மெஹக், இறுதியாக,
“என் குடும்பத்திலே ஆசையை மட்டும்தான் பார்த்திருக்கேன்…. எங்கம்மாவோட நிறைவேறாத ஆசை எல்லாம் என்னோட ஆசையா மாத்திகிட்டு நிறைவேற்றினேன்..சமீபத்திலேதான் ஆசைக்கு அளவே கிடையாதுண்ணு எங்கம்மாகிட்டேயிருந்தும், அன்புக்கு அளவே கிடையாதுண்ணு ஸ்மிரிதிகிட்டேயிருந்தும் கத்துகிட்டேன்..
அவ அப்பாவோட பணத்தை, பாதுக்காப்பை எனக்கு கொடுத்து அவ குடும்பத்திலே என்னை ஒருத்தியா ஏத்துகிட்டிருக்கா..மாறனைப் பிடிச்சிருக்குண்ணு அவகிட்ட சொன்ன போது எதுலேயும் ஒத்துபோகாத இரண்டு பேரை ஆயுசு முழுக்க ஒத்துபோக வைக்க அன்பாலே மட்டும்தான் முடியுமுண்ணு எங்க இரண்டு பேருக்கும் புரிய வைச்சா..
மாறனுக்கும், எனக்கும் நடுவுலே இருக்கறது ஆசை இல்லை அங்கிள்..அன்பு..என் மேலே அன்பு இருக்கறதுனாலேதான் எனக்காக அஞ்சு வருஷம் காத்திருக்கேண்ணு சொல்லியிருக்காங்க..உங்க மேலே அன்பு இருக்கறதுனாலேதான் உங்க சம்மதத்தோட, அவங்க லட்சியத்தை அடைஞ்ச பிறகுதான் எங்க கல்யாணம்னு சொல்லியிருக்காங்க..
அவங்களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள் எனக்கும் இருக்கு…எங்க வீட்லேயும், நான் பழகற வட்டத்திலேயும் அதை யாரும் கெட்ட பழக்கம்னு சொன்னதில்லே..அது தப்புண்ணு சுட்டிக் காட்டினதில்லே..
ஸ்கூல்லே நடந்த கார் விபத்துக்கு பிறகு அவளோட எல்லாக் கெட்ட பழக்கத்தையும் ஒரே நாள்லே விட்ட ஸ்மிரிதியைப் போல நான் கிடையாது..எதையும் விடமுடியாம அவ குடும்ப வாழ்க்கையைக் குழப்பிக்கிட்டு இருக்கிற சுசித்ராவைப் போலவும் நான் கிடையாது..
என்னோட பழக்கங்களுக்கு ஆரம்பம் எங்கம்மாவா இருக்கலாம் ஆனா முடிவு நானா இருக்க விரும்பறேன்..என்னாலே அது முடியுமான்னு தெரியலே.. முடிவுகளுக்குப் பயந்துகிட்டு என் முயற்சியை ஒத்தி போட்டதில்லை..என் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி என்னோட பழக்கங்களை விட முயற்சி செய்து பார்க்கறேன்.” என்று சொன்ன மெஹக் அறிந்திருக்கவில்லை அவள் அறியா வயதின் பழக்கத்தை வேரோடு அறுத்தெறிய அவளுக்குப் பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்குமென்று.
அவனுக்கும், அவளுக்கும் ஏற்பட்டிருந்த அன்பை அவள் விளக்கிய முறையும், நாதன், சிவகாமி இருவரிடமும் எதையும் மறைக்காமல் அவள் வெளிப்படையாக பேசிய விதமும் அவளை அவர்கள் குடும்பத்தில் ஒர் அங்கமாக்கி விட்டது என்று அடுத்து ஏற்பட்ட உரையாடல்களில் அறிந்து கொண்டான் மாறன்.
“நீ எப்ப திரும்ப மும்பை போகணும்?” என்று விசாரித்தார் சிவகாமி.
“சாயந்திரம் ஃபிளைட்..இராத்திரி ஷுட்டிங் இருக்கு..மிஸ் செய்ய முடியாது..இப்ப கிளம்பினா சரியா இருக்கும்.”
“சரி…நீ கிளம்பு.” என்ற சிவகாமியை அடுத்து,
“மாறன், நீ மெஹக்கை ஏர்போர்ட்லே விட்டிட்டு வா..நான் அம்மாவோட இருக்கேன்.” என்றார் நாதன்.
அப்போது சிவகாமியின் அருகே வந்த மாறன்,”நான் இப்ப அடைய நினைக்கற இலக்குலே எத்தனை தடவை தோல்வி அடைஞ்சாலும் முயற்சியை கைவிட போகறதில்லை..அது கிடைக்காட்டா என்ன செய்ய போறேன்னு நான் யோசிக்க போகறதுமில்லே..அது கிடைக்கணும்னுதான் கஷ்டப்பட போறேன்..
கலெக்டரோட மனைவிங்கற உங்களோட அடையாளத்திலே அந்த இரண்டாவது வார்த்தையை மட்டும் “அம்மான்னு” மாற்ற போறேன்..உங்களோட பழைய அடையாளத்தை மெஹக்குக்கு கொடுத்து எங்க வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்க போறேன்…அதையெல்லாம் பார்க்காம நீங்க எங்கேயும் போக முடியாது..போகக்கூடாது.” என்று சொல்லி அவரை அணைத்து கொண்டான்.
அவனின் எதிர்கால திட்டதைக் கேட்டு சந்தோஷமடைந்த சிவகாமி,”நிஜமாவாடா சொல்ற?” என்று மாறனைக் கேட்க, அவன் பதில் சொல்லுமுன் அவன் வருங்கால மனைவி,
“ஆமாம் ஆன்ட்டி..நிறைய படிக்கறாங்க..பெட் ரூம் பூரா ஒரே புக்ஸ்ஸா இருந்திச்சு…” என்று அவர்கள் வீட்டிற்கு அவள் சென்றதை போட்டு உடைத்தாள்.
அந்த தகவலைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்த சிவகாமி உடனே சுதாரித்து கொண்டு,”என் பையன்லே ஒருத்தனாவது ஆட்சியாளர் ஆகணும்னு நினைச்சேன்..இப்பதான் இவனுக்கும் அந்த மாதிரி நினைப்பு வந்திருக்கு..நீ முயற்சி செய்யறேண்ணு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாறன்.” என்றார்.
“நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன் இதே சந்தோஷத்தோட நான்  கேட்க போகறதை கொடுத்திடணும்..இந்த விஷயம் ஏற்கனவே உங்க வக்கீல் பையனுக்கு தெரியும்ங்கறதுனாலே அவன் சைட்லேர்ந்து பிரச்சனை வராது .” என்று பீடிகையுடன் பேசிய மாறனைக் கலவரமாகப் பார்த்தனர் சிவகாமி, நாதன், மெஹக் மூவரும்.
“என்ன டா விஷயம்..என்கிட்டே என்ன இருக்கு கொடுக்கறத்துக்கு? எல்லாம் உங்கப்பாவோடது தான்..எனக்கு எது வேணும்னாலும் அவரைத்தான் கேட்பேன்.” என்று பதிலளித்தார் சிவகாமி.
“அதேதான்..மெஹக் என்கிட்ட கேட்டா..நான் உங்ககிட்ட கேட்கறேன்..நம்ம வீட்லே இப்ப நான் தங்கியிருக்கற ரூம் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு..அந்த ரூமை மட்டும் எனக்கு நீங்க வித்திடணும்..பிராமிஸ்.” என்று மாறன் சிவகாமியிடம் நிஜமாகவே வாக்குறுதி கேட்டு கை நீட்ட,
அதில் ஓங்கி அடித்த சிவகாமி,”முதல்லே இங்கேயிருந்து ஓடி போயிடு..என் கண் முன்னாடி நிக்காத..எனக்குப் பிரேஷர் ஏறிடுச்சுன்னா இராத்திரியும் நான் இதே அறைலேதான் அடைஞ்சு இருக்க வேண்டி வரும்.” என்றார் பொய் கோபத்துடன்.
அதைக் கேட்டு அன்று காலையிலிருந்து அவர்களை சூழ்ந்திருந்த விரக்தி, வேதனை, துயரம், வருத்தம் என்ற உணர்வுகளை ஒரு நொடி மறந்து நால்வரும் சிரித்தனர்.

Advertisement