Advertisement

ஸ்மிரிதியின் மனு – 51
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மனுவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் ஏழ அதே சமயம் ஸ்மிரிதியின் உணர்ச்சியற்ற முகம் அவனுக்குக் கவலையை அளித்தது. அவள் தாயின் இழப்பை அவனோடு பகிர்ந்து கொண்ட அவன் மனைவி இன்னும் அதை முழுமையாக உணரவில்லை என்ற அவன் எண்ணத்தை அவளின் அடுத்த செய்கை உறுதிப்படுத்தியது. அவன் பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்து கார்மேகத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்மிரிதி,
“அப்பா…அம்மா இப்பதான் என்னை விட்டுடிட்டு போனாங்க.” என்று தகவல் சொன்னவள் அந்தப் புறம் அவர் சொன்னதைக் கேட்டு,”வேணாம்..நான் வர்றத்துக்கு இரண்டு, மூணு நாளாயிடும்..நேரா ஹரித்வார் போறேன்..வண்டி வேணும் டிரைவரோட..ஏர்போட்டுக்கு..மனு மெஸெஜ் அனுப்புவான்.” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தாள்.  பின் மனுவிடம் போனைக் கொடுத்து,”மற்ற எல்லாருக்கும் நீயே சொல்லிடு.” என்றாள்.
அப்போது ஐ சி யுவை விட்டு வெளியே வந்த டாக்டர் நேத்ராவதி,”நான் இங்கையே வெயிட் பண்றேன்..உங்க பெரண்ட்ஸை அழைச்சுகிட்டு வாங்க…அவங்க பார்த்திடட்டும்..கொஞ்ச நேரத்திலே வீ வில் மூவ் தி பாடி.” என்றார்.
“இதோ அழைச்சுகிட்டு வரேன்.” என்று பதில் சொல்லி மனு அங்கிருந்து அகல, டாக்டர் நேத் ராவதியுடன் உரையாட ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
விஸிட்டர் அறையில் மனு நுழைந்தவுடனையே அவன் முகத்தைப் பார்த்து விஷயத்தை அறிந்து கொண்டனர் நாதன், சிவகாமி, மாறன் மூவரும். 
“அப்பா, நேத்ரா ஆன்ட்டி ஐஸியுவிலே வெயிட் பணறாங்க….நாம எல்லாரும் பார்த்த பிறகு பாடியை மூவ் செய்திடுவாங்களாம்.” என்றான்.
“ஸ்மிரிதி எங்கேடா?” என்று விசாரித்தார் நாதன்.
“அவ நேத்ரா ஆன்ட்டியோட பேசிகிட்டு இருக்கா.”
ஆண்கள் இருவரும் மெதுவாக சேரிலிருந்து எழுந்து கொள்ள சிவகாமி அதே இடத்தில் அமர்ந்திருந்தார். அவரின் நிலையை உணர்ந்த மாறன்,
“நீயும், அப்பாவும் போங்க..நானும், அம்மாவும் வரோம்.” என்றான்.
நாதனும், மனுவும் அங்கேயிருந்து சென்றவுடன்,
“அம்மா, எழுந்திருங்க..பிரேமா ஆன்ட்டியைப் பார்த்திட்டு வரலாம்.” என்றான் மாறன்.
அவனைப் பார்த்து,”நான் வரலே டா..என்னாலே முடியாது டா.” என்றார் அழுகையுடன்.
“அம்மா, ப்ளீஸ் எழுந்திருங்க..இப்ப பார்க்கலேன்னா அப்பறமா வருத்தப்படுவீங்க.” 
“என்னாலே ஒரு அடி எடுத்து வைக்க முடியாது டா….என்னை விட்டிடு.” என்று அவன் இடுப்பைக் கட்டி கொண்டு அழ,
“நான் அழைச்சுகிட்டு போறேன்….எழுந்துக்கோங்க..நேத்ரா ஆன்ட்டி வெயிட் செய்யறாங்க.” என்று அவனை விட்டு அகல மறத்து அவனை இறுக்கமாக அணைத்திருந்த சிவகாமியை சமாதானம் செய்து ஐசியுவிற்கு அழைத்து சென்றான் மாறன்.
அவர்கள் நால்வரும் பிரேமாவைப் பார்த்துவிட்டு திரும்பும்வரை ஐசியுவிற்கு வெளியே நின்று டாக்டர் நேத்ராவதியுடன் பேசி கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  மீண்டுமொருமுறை அவள் அம்மாவைப் பார்க்க வராமல் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவியின் மன நிலை மனுவிற்குக் கவலையை உண்டாக்கியது.
அதற்குபின் அவர்கள் எல்லாரும் மனுவும், ஸ்மிரிதியும் தங்கியிருந்த அறைக்குச் சென்றனர். அறையினுள் நுழைந்தவுடனையே ஸ்மிரிதியைக் கட்டி கொண்டு கதற ஆரம்பித்தார் சிவகாமி. ஸ்மிரிதியிடம் ஒரு துளி கண்ணீர் இல்லை.
“தில்லிக்கு வந்து உங்களோட இருப்பான்னு நினைச்சேன் இப்படி தனியா இருந்திட்டு, தனியாவே போயிட்டாளே ஸ்மிரிதி.” என்று புலம்ப,
“தனியா போகலே ஆன்ட்டி..நான்கூட இருந்தேன்..கடைசிவரை.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கப்பா, அவ அம்மா எல்லாருக்கும் தகவல் கொடுத்தும்கூட அவளைப் பார்க்க யாருமே வரலேயே.” என்று சிவகாமி கதறி அழ,
“அப்பா வந்தாருன்னா எனக்காகதான் வருவாரு..அது வேணாம்னு தான் அவரை வர வேணாம்னு சொல்லிட்டேன்..அம்மாவைத் தலை மூழ்கினவங்க இப்ப எப்படி வருவாங்க?”
“அவங்க பெத்த பொண்ணு உடம்பு முடியாம இருக்கான்னு தெரிஞ்ச பிறகும் வந்து பார்க்கணும்னு தோணவே இல்லையா? அவங்க பணத்துக்கு ஆசைப்பட்டு தகவல் சொல்லி விட்டேன்னு நினைச்சுட்டாங்களா? பிரேமாவை விட இன்னமும் பணம் தான் முக்கியமாப் படுதா? உன்னைக் காட்டி சொத்துகித்து பறிச்சிடுவேனோன்னு நினைச்சுட்டாங்க போலே.” என்று மனதில் தோன்றியதை சிவகாமி பேச,
“என்ன பெரிய சொத்து?….அங்கிள் அனாதையா வளர்ந்த அதே ஊர்லே இன்னைக்கு அவர் பொண்ணு  பெயர்லேயே  ஆஸ்தி சேர்த்து வைச்சிருக்காரு..அத்தை வீட்டுக்கு அவரோட அந்தஸ்தைப் பற்றி தெரிய வைக்கணும்னு அவர் நினைச்சிருந்தா விவாகரத்து ஆன பிறகும் அதை செய்திருக்கலாம்..அங்கிள் அந்த மாதிரி மனுஷன் இல்லை..பிரேமா ஆன்ட்டியும் அந்த மாதிரி கிடையாது.” என்று கோபப்பட்டான் மனு.
“இன்னைக்கு மத்தியானமா அவங்க வந்திருந்தாக்கூட அவளைப் பார்த்திருக்கலாமே.” என்று சிவகாமி தொடர,
“அவங்களுக்குப் புரியற மாதிரிதான் விஷயத்தைச் சொன்னேன் மா..அவங்களும் எல்லாத்தையும் விவரமாக் கேட்டுகிட்டாங்க..இவ்வளவு வருஷம் தள்ளி இருந்திட்டு திடீர்னு வர யோசனையா இருந்திருக்கும்..யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க மா..இப்ப அவங்களுக்கு எப்படி தகவல் கொடுக்கறது..புவனா ஆன்ட்டிகிட்ட சொல்லி ராமை அவங்க வீட்டுக்கு அனுப்பலாமா?” என்று மாறன் கேட்க,
அதற்கு சிவகாமியிடமிருந்து பதிலில்லை. ஆனால்,
“நாளைக்கு காலை வரைக்கும் அம்மாவை இங்கேதான் வைச்சிருப்பாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அதுக்கு அப்பறம்?” என்று சிவகாமி கேட்க,
“அவங்ககிட்டேயிருந்து எந்த உறுப்பு வேணும்னாலும் எடுத்துக்கிட்டு அவங்களை மெடிக்கல் காலேஜுக்கு கொடுத்திட சொன்னங்க அம்மா…..ஆனா அவங்க மெடிஸின்ஸ் சாப்பிட்டதனாலே அவங்க  உடல் உறுப்பை எடுத்துக்க முடியாதுன்னு  நேத்ரா ஆன்ட்டி சொல்லிட்டாங்க..வாழ்க்கை முழுக்க குழந்தைகளுக்குப் பாடம் கத்து கொடுக்கற ஆசிரியையா இருந்தாங்க..இப்ப அவங்க உடம்பை வைச்சு பசங்க பாடம் படிக்கட்டும்…அவங்க விருப்பமும் அதுதான்…
அம்மா எப்பவும் அவங்களுக்கு உண்மையா இருந்திருக்காங்க..வாழ்ந்திருக்காங்க..இதுலே பாவம், புண்ணியம் எங்கேயிருந்து வந்திச்சுன்னு எனக்குப் புரியலே.. கடைசிவரை என்னைத் தனியா விட்டதை அவங்க செய்த பாவமா நினைச்சாங்க……
தில்லி ஏர் போர்ட்டுக்கு அப்பா கார் அனுப்பறாங்க..அங்கேயிருந்து நேர ஹரித்வார் போயிட்டு அம்மாக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்திடலாம் ஆன்ட்டி.” என்று இடைவெளி இல்லாமல் உணர்ச்சியற்ற குரலில் அவள் திட்டத்தைத் தெரியப்படுத்தினாள் ஸ்மிரிதி.
தாயை இழந்த ஸ்மிரிதி அமைதியாக அமர்ந்திருக்க, சினேகிதியை இழந்த சிவகாமி அழுகையில் கரைந்து கொண்டிருக்க அவர்கள் இருவரின் கவலையில் இருந்த மனுவையும், நாதனையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் எல்லா பொறுப்பையும் மாறனே ஏற்று கொண்டான். கபீர், தல்ஜித், மெஹக், புவனா, ராமின் மூலம் பிரேமாவின் குடும்பம், பிரேமா வேலை பார்த்த பள்ளி என்று அனைவருக்கும் அவனே தகவல் கொடுத்து அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை மஞ்சு நாத்துடன் கலந்து ஆலோசித்து விட்டு அதை தெரிவிக்க மனுவின் அறைக்குச் சென்றான்.
மனுவின் அறைக்கு மாறன் வந்தபோது படுக்கையறைவிட்டு ஸ்மிரிதி வெளியே வரவில்லை. மறு நாள் பற்றி விவரங்களை மனுவிடம் பகிர்ந்து கொண்டவன்,
“நேத்ரா ஆன்ட்டி எல்லா ஏற்பாடும் செய்திட்டாங்க..நாளைக்கு மெடிக்கல் காலேஜ்லேர்ந்து ஆளுங்க வந்து எடுத்துகிட்டு போயிடுவாங்க..பேப்பர் வர்கலே ஸ்மிரிதி கையெழுத்து மட்டும் போட்டா போதும்..
அதுக்கு அப்பறம் நீங்க இரண்டு பேரும் ஆன்ட்டி ஸ்கூலுக்குப் போகணும்..அவங்க ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க..அதுலே ஸ்மிரிதி கலந்துகிட்டா நல்லா இருக்கும்ணு நினைக்கறாங்க..
ஆன்ட்டி தங்கியிருந்த ரூமைக் காலி செய்யணும்..நாளைக்கே முடியலேன்னா அப்பறமா ஒரு நாள் வர சொல்றாங்க..ஸ்மிரிதிக்கு எப்ப முடியுமோ அப்ப செய்யலாம்..அவசரமில்லை..தில்லி போயிட்டு திரும்பி வந்துகூட ரூமை காலி செய்யலாம்..நீ அவகிட்ட பேசிடு.. என்றவன் சில நிமிட மௌனத்திற்குப் பின்,
பிரேமா ஆன்ட்டி வீட்டுக்கு ராம் போய் தகவல் சொல்லியிருக்கான்..நாளைக்கு அவங்க வருவாங்கன்னு நினைக்கறேன்..
அப்பறம் நைட்டு ஸ்மிரிதிக்கு லொரஸிபாம் கொடுக்க சொல்றாங்க நேத்ரா ஆன்ட்டி.” என்றான்.
“மாத்திரை எதுவும் வேணாம்..நான் அவளைப் பார்த்துக்கறேன்….நீ அப்பா, அம்மாவைப் பார்த்துக்க..தாங்க்ஸ் மாறன்.”  என்று சொல்லி தம்பியை அணைத்துக் கொண்டன் மனு.
தூக்க மாத்திரையை மறுத்த மனு அன்றிரவு முழுவதும் அவன் மனைவி அவள் அம்மாவின் பிரிவை முழுமையாக உணரப்போகும் அந்த நொடிக்காகக் கண்ணுறங்காமல் காத்திருந்து அவளைக் காவல் காத்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த அந்த நிகழ்வு ஏற்படவில்லை.
மறு நாள், ராம், புவனா, ஜனனி, தல்ஜித், கபீர், மெஹக், மீரா, மிலிந்த், சுசித்ராவின் குடும்பம், பிரேமாவுடன்  வேலைப் பார்த்த சக ஆசிரியர்கள் என்று அனைவரும் ஸ்மிரிதியிடம் துக்கம் விசாரித்த போது அவள் யாருடனும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. அவர்களின் அனுதாபத்தை மௌனமாக ஏற்று கொண்டாள்.
சிவகாமியும், புவனாவும் அவளைக் கட்டி கொண்டு அழுதபோது ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. ஸ்மிரிதியின் ஒருபுறம் அமர்ந்திருந்த மெஹக் அவளின் கையைக் கெட்டியாக பற்றியிருந்தாள். ஸ்மிரிதியின் மறுபுறம் புவனாவும், அவருக்கு அடுத்து சிவகாமியும் அமர்ந்திருந்தனர்.  பிரேமாவைக் கடைசியாக பார்க்க அனைவரும் காத்திருந்த போது பிரேமாவின் அம்மாவும், அண்ணனும் வந்து சேர்ந்தனர்.  ஸ்மிரிதி அருகிலிருந்த புவனா எழுந்து கொள்ள,  அந்த இடத்தில் அமர்ந்த பிரேமாவின் தாய் அவளை அணைத்து கொண்டு மௌனமாக கண்ணீர் வடிக்க, ஸ்மிரிதி அவரை வெறுமையாகப் பார்த்து கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த டாக்டர் நேத்ராவதி பிரேமாவைப் பார்க்க அனைவருக்கும் அனுமதி அளித்து, பத்து நிமிடம்தான் என்று தெரிவித்துவிட்டு  ஸ்மிரிதியையும், மனுவையும் அவருடன் அழைத்து சென்றார்.  
அடுத்த பத்து நிமிடத்தில் பிரேமாவை கடைசியாக பார்த்து விட்டு வந்திருந்த அனைவரும் வெளியேற எஞ்சியிருந்தது சிவகாமி, நாதன், மாறன், கபீர், தல்ஜித், மெஹக், பிரேமாவின் குடும்பம் மட்டும்தான்.
மெஹக், சிவகாமி, பிரேமாவின் அம்மா என்று பெண்கள் மூவரும் சேரில் அமர்ந்திருக்க, ஆண்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.  மாறனிடம் கபீரும், தல்ஜித்தும் பேசி கொண்டிருக்க, நாதனுடன் பேசி கொண்டிருந்தார் பிரேமாவின் சகோதரன்.
சிறிது நேரம் கழித்து மனுவும், ஸ்மிரிதியும் திரும்பியவுடன் ஸ்மிரிதிடமிருந்து விடைபெற்று கொண்ட தல்ஜித்தும், கபீரும் மெஹக்கிடம் பார்வையை செலுத்த, தலையசைவில் அவள் மறுப்பை அவர்களுக்குத் தெரிவித்து சிவகாமி அருகிலேயே அமர்ந்திருந்தாள் மெஹக்.
அவள் கையில் பாலிதீன் கவர் ஒன்றைப் பற்றியிருந்த ஸ்மிரிதி மெஹக்கின் அருகில் போய் அமர்ந்து அவள் தோள் மீது தலையை சாய்த்து கொண்டாள். அதுவரை ஸ்மிரிதியைத் தைரியமாகப் பார்த்திருந்த மெஹக்கிற்கு அவளின் அந்த செய்கை லேசான பயத்தைக் கிளப்பியது.  அவள் எதிரே நின்றிருந்த மாறனிடம் அவள் பயத்தைப் பார்வையால் பகிர, மாறனுக்கும் ஸ்மிரிதியின் அந்தச் செய்கை விபரீதமாகப் பட்டது.  
 அதே நேரத்தில் ஸ்மிரிதியிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்தனர் அவள் பாட்டியும், தாய்மாமனும். அவர்கள் தயக்கதைப் போக்க மனுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து கொண்டிருந்தார் நாதன். 
அதுவரை ஒரு வார்த்தை பேசாமலிருந்த ஸ்மிரிதி திடீரென்று எழுந்து சிவகாமியின் அருகில் அமர்ந்திருந்த பிரேமாவின் தாயின் காலடியில் மண்டியிட்டு, அவள் கையிலிருந்த சிறிய பாலிதீன் கவரை அவர் கையில் வைத்து,
”நீங்க மொத்தமா தலை மூழுகின உங்க மகளோட தலைமுடி இதுலே இருக்கு..உங்களுக்காகதான் இதை வாங்கிகிட்டேன்…. எங்கம்மாவோட கடைசி நொடிகள்லே நான் அவங்க பக்கத்திலே இருந்த மாதிரி உங்க கடைசி நேரத்திலே எங்கம்மா உங்க பக்கத்திலே இருப்பாங்க..
நீங்க வைத்தாரிணிய கடக்க காசு மட்டும் போதாது.. எங்கம்மாவுதான் வேணும்..பத்திரமாப் வைச்சுக்கங்க.” என்று பிரேமாவின் தாயிடம் வாழ்க்கையின் கடைசி நொடிகளில் துணையாக இருக்க போவது நாம் சேர்த்த வைத்த ஆஸ்தியோ, அந்தஸ்தோ இல்லை அன்பான சொந்தங்களும் அவர்களின் அருகாமையும்தான் என்று அவள் கற்ற அனுபவ பாடத்தை அவருடன் பகிர்ந்து கொண்டாள்.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு பிரேமாவின் தாய் கதறி அழ ஸ்மிரிதியோ அமைதியாக அங்கிருந்து அகன்று,”நாம ஸ்கூலுக்குப் போகலாம் மனு.” என்று பிரேமாவின் பள்ளிக்கு மனுவுடன் மஞ்சு நாத்தின் காரில் புறப்பட்டு சென்றாள்.
ஸ்மிரிதி சென்றபின் ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் பிரேமாவின் தாயும், அண்ணனும் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினர். அவர்கள் சென்றவுடன்,
“அப்பா, நீங்க அம்மாவை அழைச்சுகிட்டு ரூமுக்கு போயிடுங்க..நான் கொஞ்ச நேரத்திலே வந்திடறேன்.” என்றான் மாறன்.
“மனு எப்ப திரும்பி வருவான்?”
“தெரியலே..ஸ்கூல்லே கண்டலன்ஸ் மீட்டிங் இருக்கு..ஆன் ட்டி தங்கியிருந்த ரூம் காலி செய்யணும்..சாயந்திரமாயிடும்னு நினைக்கறேன்.” என்றான்.
“அவனைக் கேட்டுகிட்டு எங்க நாலு பேருக்குத் தில்லிக்கு ஃபிளைட் புக் செய்திடு.”
“சரி..அவன் வரட்டும்..எப்படியும் இன்னைக்கு நைட் முடியாது..நாளைக்கு டிக்கெட் எப்ப கிடைக்கதுண்ணு பார்க்கறேன்.”
“நான் உங்கம்மாவை ரூமுக்கு அழைச்சுகிட்டு போறேன்.” என்று சொல்லி சிவகாமியின் அருகில் சென்றவர்,
“எழுந்திரு..ரூமுக்கு போகலாம்.” என்றார்.
அவர் அழைப்புக்கு சிவகாமியிடம் எதிரோலியில்லை.  அவரெதிரே இருந்த சுவரை வெறித்து பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் சிவகாமி.  அவரருகில் அமர்ந்திருந்த மெஹக்,
“ஆன்ட்டி, ஆன்ட்டி” என்று அவர் கையைப் பற்றி லேசாக உலுக்க அவள் மீது முழுவதுமாக மயங்கி சரிந்தார் சிவகாமி.
பிரேமாவின் பள்ளிக்குச் சென்ற மனுவும், ஸ்மிரிதியும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
அதற்குபின் பிரேமா தங்கியிருந்த அறைக்குச் சென்றனர் இருவரும். அறையைத் திறந்தவுடன் பிரேமாவின் வாசம் ஸ்மிரிதியின் நாசியை வந்தடைந்தது. நேற்றிலிருந்து உயிரற்ற உடலாக மாறியிருந்த பிரேமா அந்த அறையில் இன்னும் உயிருடன் இருந்தார்.
அந்த உயிர்ப்பை உணர்ந்த ஸ்மிரிதி,“மனு, அம்மா இப்ப இங்க இருக்காங்க.” என்றாள்.
இரண்டு இரவுகளுக்கு முன் பிரேமா படுத்திருந்த அதே படுக்கையில் படுத்து கொண்டு,  பிரேமாவின் வாசனையை அவளின் ஸ்மிரிதியில் ஸ்மிரிதி பத்திரப்படுத்தி கொண்டவுடன் அதுவரை அவள் மனமென்னும் மதிலுக்குப் பின்னால் அடைந்து கிடந்த உணர்வுகள் உடைந்து,  வார்த்தைகளாக வெளியேறின.
“ராம் கல்யாணத்து போது கோயமுத்தூர் ஹோட்டல்லே நாங்க இரண்டு பேரும் தனி தனி ரூம் எடுத்துகிட்டோம்.. ஆனா அன்னைக்கு நைட் அம்மாவோட அவங்க கட்டிலேதான் படுத்துகிட்டேன். இன்னைக்கும் அம்மாவோட கட்டிலேதான் படுத்துகிட்டிருக்கேன்.
உன்னைப் பிடிச்சிருக்குண்ணு நான் அம்மாகிட்ட சொன்னபோது இந்தக் கட்டில்லேதான் நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்திருந்தோம்..
ஆன்ட்டி ஆசீர்வாதத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கணும்னு அம்மா சொன்னாங்க..அவங்க வாழ்க்கைலே தவறா நடந்தது எல்லாம் என் வாழ்க்கைலே சரியா நடக்கணும்னு நினைச்சாங்க..கடைசி வரைக்கும் அவங்க அம்மாவைப் போல அவங்க என்னை விட்டு கொடுத்திட்டாங்கண்ணு நினைச்சாங்க..
நான் அன்னைக்கே அவங்கிட்ட சொன்னேன் மனு..அவங்க என்னை விட்டு கொடுக்கலே…நான் தான் அப்பாவோட இருக்க முடிவு செய்தேன்..அவங்க ஒரு பாவமும் செய்யலேண்ணு…ஆனா அவங்க அதை ஒத்துக்கலே மனு…
எனக்காக ஜலந்தர், தில்லி பற்றி யோசிக்கறேன்னாங்க….ஆனா நேத்திக்கு எதுவும் வேணாம் எல்லாம் போதும்னு அவங்களுக்கு தோணிடிச்சு மனு..செய்றகையா அவங்களுக்கு எதையும் செய்யக்கூடாதுண்ணு என்கிட்ட கேட்டுகிட்டாங்க..நானும் சரின்னு சொல்லிட்டேன்…
நான் பக்கத்திலே இருக்கேங்கற நினைவோடதான் அம்மா என்னை விட்டு பிரிஞ்சாங்க..அந்த நினைவை நான் எப்படி மனு நிகழ்வா கடக்க போறேன்.” என்று அந்த க்ஷணம் பிரேமா அவளை நிரந்திரமாகப் பிரிந்த அந்த க்ஷண ஸ்மிரிதியின் சுமையை சுமக்க முடியாமல் மனுவின் மடியில் சுருண்டு குழந்தைப் போல் படுத்து கொண்டாள் ஸ்மிரிதி.  
அதே அறையில், அதே படுக்கையில் நினைவுகளை நிகழ்வுகளாக பார்க்க கற்று கொண்டேன் என்று சில மாதங்களுக்கு முன் பிரேமாவிடம் சொன்ன ஸ்மிரிதி அந்த நொடி பிரேமாவின் நினைவில் அதே படுக்கையில் “அம்மா, அம்மா” என்று முனக ஆரம்பித்தாள்.  
முந்தைய இரவு முழுவதும் எதற்காக கண்ணுறங்காமல் மனு காத்திருந்தானோ அந்த நிகழ்வு அந்த நொடியில் நிகழ்வதை  உணர்ந்தான். பிரேமாவின் நினைவில் மருகிக் கொண்டிருந்த ஸ்மிரிதியை அவன் மடியில் தாங்கிக் கொண்ட மனு அந்த க்ஷணத்தில் ஸ்மிரிதியின் தாயுமனுவானான். 
அவளுக்கும், பிரேமாவிற்கும் மட்டுமென்று இருந்த நினைவுகளை எண்ணி கண்ணீர் விட்டுகொண்டிருந்த ஸ்மிரிதி சிறிது நேரத்திற்கு பிறகு மனு மடியிலேயே உறங்கிப் போனாள்.
தில்லியை விட்டு புறப்பட்டதிலிருந்து அப்போதுதான் ஆழ்ந்து உறக்கம் கொண்டாள் ஸ்மிரிதி.  அவளாக விழிக்கட்டும் என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் மனு.  அரைமணி நேரம் கடந்தபின் விழித்து கொண்ட ஸ்மிரிதி மனு மடியிலேயே சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்து,
“தூங்கிட்டேன் மனு..எப்படி?”
“தூக்கமில்லாம இன்னைக்கு மூணாவது  நாள்..நீ விரும்பாட்டாலும் உன் உடம்புக்கு ஓய்வு தேவைப்பட்டிச்சு.” என்றான்.
“உனக்குத் தூக்கம் வரலேயா?”
“நீ எப்ப ஆன்ட்டி போயிட்டாங்கன்னு உணர போறேன்னு நான் காத்துகிட்டிருந்தேன்..நீ அதை உன்னாலே முடிஞ்ச அளவு தள்ளிப் போட்டுகிட்டிருந்த..இங்க வந்ததும் அந்த உண்மை உன்னைத் தாக்கிடுச்சு..அதான் உன்னாலே எதையும் கட்டுப்படுத்த முடியலே..துக்கம், அழுகை, தூக்கம்.” என்றான் மனு.
“உண்மைதான் மனு..நேத்து தெரியலே..இங்க இப்பதான் தெரிஞ்சுது.”
“இந்த ரூமை இன்னைக்கு கிளியர் செய்யலாமா? இல்லை இன்னொரு நாள் வரலாமா?” 
“இப்பவே ரூமை கிளியர் செய்திடறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“வேணாம்..இன்னைக்கு உன்னாலே எதையும் செய்ய முடியாது..நாளைக்குத் திரும்ப வரலாம்..இப்ப கிளம்பலாம்.”
“வேணாம்..அம்மாகிட்ட அதிகமா சாமனெல்லாம் இல்லை..கொஞ்சம் நேரத்திலே முடிஞ்சிடும்.”
ஸ்மிரிதி சொன்னது போல் பிரேமாவிடம் நிறைய பொருட்கள் இல்லை.  பள்ளி சம்மந்தப்பட்டதை தனியாக வைத்துவிட்டு மற்றதை அந்த அறையிலிருந்த இரு பைகளில் பாக் செய்தனர். பிரேமாவே அவரின் முக்கியமானக் காகிதங்களைத் தனியாக ஒரு பாகில் வைத்திருந்தார். 
மூன்று பை, ஒரு ஹாண்ட் பாக் என்று அவருடைய மொத்த வாழ்க்கையும் முடிந்து விட்டது. அவரின் கைப்பையில் அதிக பணமிருக்கவில்லை. மாத்திரைகள், விக்ஸ், பேனா, பென்சில், சாக்பீஸ் என்று தினசரி தேவைகள் இருந்தன.  
அந்த முக்கியமான காகிதங்கள் கொண்ட பேகை ஸ்மிரிதி திறந்தவுடன் அந்த காகிதங்களுக்கு நடுவில் சின்னதாக ஒரு புகைப்படம். தில்லி மலை மந்திரின் படிக்கட்டுகளில் பிரேமாவின் கையைப் பிடித்து கொண்டு நான்கு வயது ஸ்மிரிதி.
அதைப் பார்த்தவுடன் ஸ்மிரிதியின் கண்கள் கண்ணீர் அருவியாயின.  அந்தப் பேக்கை மார்போடு அணைத்து கொண்ட ஸ்மிரிதி அவள் உடலில் ஏற்பட்டு கொண்டிருந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதை உடம்போடு இறுக்கிக் கொண்டாள்.  
திடீரென்று அறை அமைதியானதை உணர்ந்த மனு அவன் பாக் செய்து கொண்டிருந்த பையை மூடிவிட்டு கட்டிலிளிருந்த ஸ்மிரிதியைத் திரும்பிப் பார்த்தான்.
கண்களை மூடிக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தவளின் அருகே வந்து அவன் என்னவென்று கேட்குமுன் அவள் கையிலிருந்த அந்தப் புகைப்படம் அவன் கண்ணில் பட்டது.  
அன்று தாயின் பாதுகாப்பில், அவரின் கையைக் கெட்டியாகப் பிடித்து கொண்டிருந்த ஸ்மிரிதி. நேற்று அந்த தாய் இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க அவர் கையை கெட்டியாகப் பிடித்து அவருக்குப் பாதுகாவலாக இருந்திருக்கிறாள்.  ஸ்மிரிதியிடம் மறுபடியும் அதுபோல் ஒரு நெகழிச்சியான நிகழ்வை எதிர்பார்த்திராத மனு அதை எதிர்கொள்ள முடியாமல், அவள் அழுகையை நிறுத்த வழி தெரியாமல் விழித்தான்.  
சிறிது நேரத்திற்குப் பின் ஸ்மிரிதியின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால்,
“ஸ்மிரிதி..நீ இங்கையே உட்கார்ந்துகிட்டு இரு..நான் ஒரு நிமிஷத்திலே திரும்பி வரேன்.” என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினான்.
அவன் எங்கே போகிறான் என்று கேள்வி கேட்காமல் அதே இடத்திலையே அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி.  மனு திரும்பி வந்ததும் அவள் இறுக்கி பிடித்திருந்த பேக்கையும், கையிலிருந்தப் புகைபடத்தையும் கட்டிலின் மீது வைத்தான்.  அதுவரை தலைகுனிந்து அழுது கொண்டிருந்த ஸ்மிரிதி தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க,
“இந்தா.” என்று அவள் கையில் சிகரெட் பாக்கெட், தீபெட்டியை வைத்தான்.
அவள் கையிலிருந்த சிகெரெட் பாக்கெட்டைப் பார்த்த கொண்டிருந்த ஸ்மிரிதியிடம்,
“என்கூட எப்பவும், எல்லாத்துக்கும் அப்பா, அம்மா இருந்திருக்காங்க..உன்னைப் போல பத்து வயசுலேர்ந்து அவங்களைப் பிரிஞ்சு இருந்ததில்லை..
பதினைஞ்சு வயசுலே ஒருத்தரோட இருக்கணும்னு நீ எடுத்த முடிவெல்லாம் எத்தனை பெரிய முடிவுண்னு எனக்கு இந்த வயசுலேதான் புரியுது..
இப்பகூட அத்தைக்காக நீ எடுத்து முடிவு எங்கம்மாக்காகவோ, அப்பாக்காகவோ என்னாலே தைரியமா எடுக்க முடியும்னு எனக்குத் தோணலே..உனக்காக, உன்கூட நான் இருக்கேண்ணு  சொன்னேன்..ஆனா நீ இப்ப இருக்கற நிலைலேர்ந்து வெளியே வர நான் மட்டும் போதாது..இந்த நிகழ்வைக் கடக்க இதோட உதவி  உனக்குத் தேவைப்படும் அதான் கொண்டு வந்தேன்.” என்றான் ஸ்மிரிதியின் மனு.
அவன் சொன்னதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த, அழுகை அடங்கிப் போயிருந்த ஸ்மிரிதி அவள் கைகளில் இருந்ததை அவனிடமே திருப்பிக் கொடுத்து அவனை இறுக அணைத்தவள்,”நீ மட்டும் போதும் மனு..இனி இது எனக்குத் தேவைப்படாது….நான் ரூமை ஒருமுறை செக் செய்திடறேன்..அதுக்கு அப்பறம் நாம கிளம்பலாம்.” என்றாள் மனுவின் ஸ்மிரிதி.

Advertisement