Advertisement

ஸ்மிரிதியின் மனு – 50_2
“ஆஸ்பத்திரிக்குப் போன பிறகு சொல்றேன்.” என்றார் சிவகாமி. 
அதற்குள் அவர்களுக்கான டாக்ஸி வந்து சேர அதில் ஏறி மூவரும் ஆஸ்பத்திரிக்குப் பயணப்பட்டனர். அவர்கள் வருவதை மனுவிற்கு தெரியப்படுத்தியவுடன் அவர்களுக்காக வாசலில் காத்திருப்பதாக பதில் அனுப்பினான் மனு. 
ஆஸ்பத்திரி வாயில் நின்று கொண்டிருந்த மனுவைப் பார்த்தவுடன்,
“எங்க டா இருக்கா பிரேமா?” என்று சிவகாமி கேட்க,
“ஐ சி யுலே மா..”
“நீங்க இரண்டு பேரும் பார்த்தீங்களா?”
“இன்னும் இல்லை மா..அந்த ஃப்ளோர்லேயே ஃபெமலிஸ்க்கு வெயிட்டீங் ரூம் இருக்கு.. அங்கேதான் ஸ்மிரிதி இருக்கா..நீங்க மூணு பேரும் அங்கே போயிடுங்க..நமக்கு இரண்டு கெஸ்ட் ரூம் கொடுத்திருக்காங்க உங்க பையை அங்கே வைச்சிட்டு நான் நேரா ஐ சி யு வந்திடறேன்.” என்று சொல்லி மனு கெஸ்ட் ரூமிற்கு செல்ல மற்ற மூவரும் ஐ சி யு இருக்கும் தளத்திற்கு சென்றனர்.  
அந்த தளம் வலது, இடது என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது.   வலதுபுறம் ஐ சி யு, ஓ டி, டியுட்டி டாக்டர் அறை, நர்ஸிங் ஸ்டேஷன் இருக்க, இடதுபுறம் மெடிக்கல் ஸ்டோர், அதற்கு அடுத்து  குடும்பத்தினர்கள் காத்திருக்க விஸிட்டர்ஸ் அறை.  அந்த அறையில் ஏற்கனவே இரண்டு, மூன்று நபர்கள் அமர்ந்திருக்க அவர்களைத் தாண்டி அறையினுள் ஸ்மிரிதி அமர்ந்திருந்தாள்.
அவர்கள் மூவரும் உள்ளே வந்தது தெரியாமல் சிந்தனை உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவளை,”ஸ்மிரிதி” என்ற சிவகாமியின் அழைப்பு நிகழ்விற்கு அழைத்து வந்தது.
“பிரேமா எப்படி இருக்கா?” என்று கேட்டார் சிவகாமி.
“தெரியலே ஆன்ட்டி..விடியற்காலைலே அட்மிட் செய்திருக்காங்க ஆனா இன்னும் விழிப்பு வரலே.” என்றாள்.
“டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று கேட்டார் நாதன்.
“நேத்ரா ஆன்ட்டி காலைலேயே வந்து பார்த்தாங்க..ஸ்ட் ரோக்…க்ரிடிகல்னு சொன்னாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“நேத்ரா ஆன்ட்டி யாரு?” என்று சிவகாமி கேட்க,
“டாக்டர் நேத்ராவாதி..சுசித்ராவோட அம்மா..அவங்களோடதுதான் இந்த ஆஸ்பத்திரி..பிரேமா ஆன்ட்டியை நான் இங்கேதான் அழைச்சுகிட்டு வருவேன்..மேலே இந்த ஃபளோர் வந்ததில்லை..கன்ஸல்டேஷன், லாப், இன்வெஸ்டிகேஷன் எல்லாம் கீழேதான்.” என்றான் மாறன்.
ஸ்மிரிதி அருகில் அமர்ந்த சிவகாமி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“உங்கப்பாக்கு சொல்லிட்டியா ஸ்மிரிதி?” என்று விசாரித்தார்.
“இல்லை ஆன்ட்டி….அம்மா உடம்பைப் பற்றி இதுவரை அவருக்கு சொல்லவே இல்லை.. இப்ப என்ன சொல்றதுன்னு தெரியலே..
அம்மா அதை விரும்புவாங்களான்னு தெரியலே..விரும்பமாட்டாங்கன்னு நினைக்கறேன்…அம்மாக்குக் குடும்பம்னா  நான் மட்டும் தானே ஆன்ட்டி..வேற யாரும் இல்லை.” என்று கவலையாகப் பேசிய ஸ்மிரிதியைப் பார்த்து கலங்கிப் போனார் சிவகாமி.
அப்போது அறையில் நுழைந்த மனுவிடம்,”உன் மாமனாருக்குத் தகவல் சொல்லிடு..அதுக்கு அப்பறம் அவர் விருப்பம்.” என்றவர் அவரருகில் அமர்ந்திருந்த மாறனிடம்,”உடனே கோயமுத்தூர் கிளம்பி போ..பிரேமா வீடு புவனாக்குத் தெரியும்..அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டியது உன் பொறுப்பு.” என்றார்.
அதைக் கேட்ட ஸ்மிரிதி,
“வேணாம் ஆன் ட்டி..அம்மாவை வேணாம்னு சொன்னவங்க..அவங்க உயிரோடு இருக்கற போது தலை மூழ்கினவங்க..அவங்க வேணாம் ஆன்ட்டி.” என்றாள்.
“ஸ்மிரிதி, நான் யாரையும் வர சொல்லலே..தகவல்தான் கொடுக்க போறேன்..அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யட்டும்.” என்றார் சிவகாமி.
கார்மேகத்திடம் பேசிய பின் அவர் ஸ்மிரிதியிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அவரிடம் பேச முடியாது என்று ஸ்மிரிதி மறுக்க, அவர் உடனே பெங்களூர் புறப்பட்டு வர தயாராக இருக்க, பிரேமாவின் உடல் நிலையில் அவர்கள் வந்ததிலிருந்து முன்னேற்றம் ஏதுமில்லாததால் அன்று மாலை டாக்டரிடம் பேசி விட்டு அவருக்குத் தகவல் தெரிவிப்பதாக சொன்னான் மனு.
அதன்பின் மஞ்சு நாத்திற்குப் ஃபோன் செய்து அவனுடைய காரில், அவன் டிரைவருடன் மாறனை கோயமுத்தூருக்குப் அனுப்பி வைத்தான் மனு.  இரண்டு மணி நேரம் முன்பு கோயமுத்தூரிலிருந்து பெங்களூர் வந்தவன் மறுபடியும் கோயமுத்தூருக்குப் பயணப்பட்டான். அன்று நள்ளிரவு தாண்டி  விடியற் காலை வேளையில் அவன் திரும்பி வரும்வரை பிரேமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அவர்கள் நால்வரு ஐ சி யு தளத்திலேயே காத்திருக்க, மதிய உணவை ஸ்மிரிதி மறுத்துவிட சிவகாமி, நாதன் இருவரையும் சாப்பிட அழைத்து சென்ற மனு அப்படியே அவர்களை ஓய்வெடுக்க வலுக்கட்டாயமாக விருந்தினர் அறைக்கு அனுப்பி வைத்தான்.  
அவனுக்கு சிவகாமியின் மன நிலை, உடல் நிலை இரண்டும் குறித்து கவலையானது.  அவர் வெளியே தைரியமாகப் பேசினாலும் மனதினுள் பிரேமாவின் நிலை அவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான் மனு.  ஆனால் ஸ்மிரிதியைத் தனியாக விட முடியாமல், சிவகாமியையும் அருகில் வைத்து கொள்ள முடியாமல் அவன் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.    
பிரேமா கண் திறப்பதற்காக காத்திருந்த ஒவ்வொரு கணமும் கனமாக மனபாரத்துடன் கழிந்தது ஸ்மிரிதிக்கு.  மாலை நேரத்தில் சிவகாமியும், நாதனும் ஐ சி யு தளத்திற்கு வந்த போது டாக்டர் நேத்ராவதியைச் சந்தித்தனர்.  தில்லை நாதனையும், சிவகாமியும் மனு அறிமுகப்படுத்தி வைத்தான்.  அவர்களுடன் சிறிது நேரம் பேசிய பின் பிரேமாவைப் பார்க்க சென்றவரிடம்,
“ஆன்ட்டி..நானும் உங்களோட வரேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நோ.நாட் நவ் ஸ்மிரிதி.” என்று கண்டிப்பாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்தவர்,
“ஸ்மிரிதி..இப்ப இருக்கற நிலைலே இன்னைக்கு நைட் அம்மா முழிச்சுப்பாங்க.. நினைவு திரும்பலாம்.” என்று அவர் பேசியது ஸ்மிரிதிக்குப் பயத்தைக் கிளப்பியது.
“ஆன்ட்டி..முழிச்சுகிட்டா நினைவு திரும்பிடுச்சு சரியாயிடுச்சுன்னுதானே அர்த்தம்?” என்று கேட்டாள்.
“ஸ்ட்ரோக்லே எதுவும் சொல்ல முடியாது.” என்று சொன்னவர் மனுவைப் பார்த்து,
“நாளைக்கு மதியம் போலே எல்லாம் தெளிவாகணும்….அதுவரை நோ விஸிட்டர்ஸ்..விழிப்பு வந்திடுச்சுனா ஸ்மிரிதி மட்டும் போய் பார்க்கட்டும்.. ஐசியுல சொல்லி வைச்சிருக்கேன்..காலைலே நான் வந்து பார்க்கறேன்.” என்றார்.
அன்றிரவு பிரேமா விழிப்பதற்காக விழித்து கொண்டு காத்திருந்தனர் நால்வரும்.  இரவு முழுவதும் எந்த முன்னேற்றமுமில்லாமல் கழிந்த பின் விடியற்காலையில் பிரேமாவிற்கு விழிப்பு வந்தது. அவருடைய ஸ்மிரிதியைப் பார்த்தபின் பிரேமாவின்  ஸ்மிரிதி தெளிவாகியது. தாயும், மகளும் அவரவர் ஸ்மிரிதியில் அந்த க்ஷணங்களை ஸ்திரமாக்கி கொண்டனர்.
பிரேமாவுடன் ஐசியுவில் சில நிமிடங்கள் இருந்த ஸ்மிரிதி அவர் திரும்பவும் உறக்க நிலைக்கு போனதால் அதற்குமேல் அவருடன் இருக்க முடியாமல் வெளியில் காத்திருந்த மனுவிடம் திரும்பினாள்.
ஐ சி யுவின் வெளியே இருந்த மனுவின் முகம் ஸ்மிரிதியின் அரண்டு போன முகத்தைப் பார்த்து இருண்டு போனது.  அவளிடம் உள்ளே என்ன நடந்தது என்று விசாரிக்காமல் இருவரும் மௌனமாக விஸிட்டர் ரூமிற்குத் திரும்பினர். அவர்கள் வருகைக்காக சிவகாமி, நாதனுடன் மாறனும் காத்து கொண்டிருந்தான்.  
ஸ்மிரிதியின் முகத்தைப் பார்த்து பயந்து போன சிவகாமியும், “என்ன டா?” என்று மனுவிடம் விசாரித்தார்.
“தெரியலே மா.” என்றான் மனு.
பிரேமாவின் உடல் நிலையைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் மன நிலையில் ஸ்மிரிதி இல்லை என்பதை உணர்ந்த சிவகாமி,”எல்லாரும் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்..கொஞ்ச நேரத்திலே எப்படியும் சுசித்ரா அம்மாவே வந்திடுவாங்க…அவங்ககிட்ட விசாரிக்கலாம்.” என்றார்.
அவர் சொன்னது சரியாக பட்டதால், அனைவரும் விருந்தினர் அறைக்குச் சென்றனர்.  மனுவும், ஸ்மிரிதியும் அவர்கள் அறைக்குச் செல்ல மற்ற மூவரும் அவர்கள் அறைக்குச் சென்றனர்.
அறையிலிருந்த சோபாவில் மனு அமர்ந்தவுடன் அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.  காலையிலிருந்து தொடர்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்த உடல், மன உளைச்சல் காரணமாய் உட்கார்ந்தபடியே கணவன், மனைவி இருவரும் உறங்கிப் போயினர்.  
அவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியது மனுவின் ஃபோன்.  அவனின் இடது கையை விடுக்கவிக்க பார்த்த மனு அதை விடாமல் பற்றியபடி உறங்கிக் கொண்டிருந்த ஸ்மிரிதியின் தூக்கத்தை கலைக்காமல் அவனின் ஃபோனை ஆஃப் செய்தான்.  அதற்கு மேல் உறங்க முடியாமல் விட்டதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  பிரேமாவுடனான ஸ்மிரிதியின் சந்திப்பைப் பற்றி அவள் எழுந்தவுடன் எப்படி கேட்பது, எங்கே ஆரம்பிப்பதென்று யோசனை செய்து கொண்டிருந்தான்.  
ஆஸ்பத்திரியின் தினசரி காலை வேலைகள் ஆரம்பிக்க மெதுவாக ஸ்மிரிதியை உலுக்கி எழுப்பினான் மனு.
“என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் விழித்து கொண்டாள் ஸ்மிரிதி.
“எதுவும் ஆகலே…..இங்க உட்கார்ந்துகிட்டு தூங்க வேணாம்னு எழுப்பினேன்….கட்டிலே கொஞ்சம் நேரம் படுத்து தூங்கு.” என்றான்.
“வேணாம் மனு..நான் ஃப்ரெஷாகிட்டு வரேன்.. ஐ சி யுவுக்குப் போகலாம்.” என்று சொல்லி வாஷ் ரூமிற்குச் சென்றாள் ஸ்மிரிதி. அவள் வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தபோது அவர்கள் அறையின் கதவை யாரோ தட்ட, பதட்டத்துடன் போய் கதவைத் திறந்தாள்.
அங்கே அவர்களுக்கானக் காலை உணவுடன் நின்றிருந்தான் மஞ்சு நாத். அவனிடமிருந்த இரண்டு கவர்களில் ஒன்றை மனுவிடம் கொடுத்து,”உன் பெரண்ட்ஸுக்கு…நீ கொடுத்திட்டு வந்திடு.” என்றான்.  
காலை டிஃபனுடன் மனு அங்கேயிருந்து சென்றவுடன், அவர்களின் காலை உணவை டேபிளில் வைத்த மஞ்சு நாத்திடம்,
”இங்கே உங்களுக்குத் தெரிஞ்ச மெடிக்கல் காலேஜ் ஏதாவது இருக்கா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“எதுக்கு? செலவைப் பற்றி யோசிக்கறேயா?” என்று அவன் கேட்கும் போது அறையினுள் நுழைந்தான் மனு.
அதற்கு ஸ்மிரிதி பதில் சொல்லுமுன்,
“ஸ்மிரிதி..அத்தைக்கு எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கறேன்.” என்றான்.
அதற்கு பதில் சொல்வதற்கு ஸ்மிரிதிக்கு வாய்ப்பு கொடுக்காமல்,
“நீ இப்படி நினைச்சேன்னு தெரிஞ்சா நேத்ரா ஆன்ட்டி வருத்தப்படவாங்க.” என்றான் மஞ்சு நாத்.
“இல்லை..பணத்தைப் பற்றி இல்லை..இது வேற விஷயம்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஐஸியுலே ஆன்ட்டியைப் போய் பார்த்தியா?” என்று கேட்டான் மஞ்சு நாத்.
“விடியற்காலைலே போனேன்.. பத்து நிமிஷம் போல பேசினாங்க..அதுக்கு மேல முடியலே தூங்கிட்டாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“சுசித்ரா உன்கிட்ட பேசணும்னு சொன்னா.. உங்க இரண்டு பேருக்கும் ஃபோன் போட்டேன்..இரண்டும் ஸ்விட்ச் ஆஃப்னு மெஸெஜ் வருது.”
“என்னோடது நேத்திலேர்ந்து சுவிட்ச் ஆஃப்..மனு எப்ப ஆஃப் செய்தான்னு தெரியலே.”
“காலைலதான் செய்தேன்..உன் தூக்கத்தைக் கெடுத்திட போகுதுன்னு.” என்று ஸ்மிரிதிக்கு பதில் சொல்லியபடி ஃபோனை உயிர்பித்தான் மனு.
“சரி..நீங்க இரண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க..மத்தியானம் நான் வர முடியாது  ஒரு ஆள் மூலம்  சாப்பாடு அனுப்பறேன்…இப்ப நேத்ரா ஆன்ட்டி வருவாங்க அவங்கிட்டையே மெடிக்கல் காலேஜ் பற்றி கேட்டுக்கோ.” என்றான்.
அவன் ஆலோசனையைக் கேட்டு பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் ஸ்மிரிதி.
“சுசித்ரா எப்படி இருக்கா?” என்று விசாரித்தான் மனு.
“ஷீ இஸ் ஒகே..பிளட் பிரேஷர் மானிட்டர் செய்துகிட்டு இருக்கோம்..பெட் ரெஸ்ட் தான்….பிரேமா ஆன்ட்டி நியூஸ் அவளை அப்ஸெட் பண்ணிடுச்சு..அவளாலே நேர்லே வரமுடியலேன்னு வருத்தப்படறா.” என்றான் மஞ்சு நாத்.
அதற்குபின் கபீர், தல்ஜித் இருவருக்கும் சுசித்ரா தகவல் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தான் மஞ்சு நாத்.  மெஹக்கின் அலைபேசி இணைப்பு கிடைக்காததால் அவளுக்கு இன்னும் தகவல் கொடுக்கவில்லை என்று மஞ்சு நாத் மனுவுடன் பேசிக் கொண்டிருக்க, ஸ்மிரிதியோ வேறொரு உலகத்தில் இருந்தாள்.  அவர்களுடன்  அவள் இல்லை என்று புரிந்து கொண்ட மஞ்சு நாத் சிறிது நேரத்திற்குப் பின் அவர்களிடமிருந்து விடைபெற்று கொண்டான். அவன் சென்றவுடன்,
“ஸ்மிரிதி..நீ டிஃபன் சாப்பிடு..நான் ஃப்ரெஷாகிட்டு வரேன்.” என்று வாஷ் ரூம் சென்று பத்து நிமிடம் கழித்து மனு திரும்பிய போது அதே இடத்தில் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி.
அப்போது மனுவின் ஃபோன் அழைக்க, அழைத்தது “கார்மேகம்.”
“சொல்லுங்க மாமா.” என்று அவர் அழைப்பை ஏற்றான்.
அந்தப் புறம் அவர் சொன்னதைக் கேட்டு கொண்டிருந்தவன், பதிலேதும் சொல்லாமல் “உம்” கொட்டினான்.
கடைசியாக,“வேணாம்..ஸ்மிரிதியை உங்ககிட்ட பேச சொல்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
“நீ உங்கப்பாகிட்ட பேசு.. கிளம்பி வரேன்னு சொல்றாரு.” என்று தலை குனிந்து அமர்ந்திருந்த ஸ்மிரிதிக்குத் தெரிவித்தான் மனு.
“நேத்ரா ஆன்ட்டி..நோ விஸிடர்ஸுனு சொல்லியிருக்காங்க.”
“நீயே அதை உங்கப்பாகிட்ட சொல்லு..இதுவரைக்கும் அவரோட ஒருமுறைகூட பேசலேன்னு வருத்தப்படறாரு.” என்றான் மனு.
அவள் எதிரே இருந்த டிஃபனை பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதி தலை நிமிர்ந்தபோது அவள் கண்கள் குளமாகியிருந்தன.  ஸ்மிரிதியின் கண்ணீர் மனுவை உலுக்கியது. சடாரென்று அவன் சேரிலிருந்து எழுந்து வந்து அவளை அணைத்துக் கொண்டான். அவர் எதிர்பார்த்தது போல், 
“மனு..மனு..” என்று விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.  அவள் அழுது பார்த்திராதவனுக்கு அவளது அந்த நிலை பீதியைக் கிளப்பியது.
“என்னாச்சு?” என்று மென்மையாக கேட்டான்.
“அம்மா கேட்டுகிட்ட எல்லாத்துக்கும் நான் சரின்னு சொல்லிட்டேன் மனு.” என்றாள் அழுகையினுடே ஸ்மிரிதி.
“நீ கவலைப்படாத..எதுவாயிருந்தாலும் அத்தைக்காக செய்திடலாம்….நான் இருக்கேன்.” என்று மனைவிக்கு ஆறுதலாகப் பேசினான்.
அப்போது அவர்கள் அறைக் கதவை மறுபடியும் யாரோ தட்ட, ஸ்மிரிதி அவளை சுதாரித்து கொள்ள, மனு கதவைத் திறந்தபோது வாசலில் டாக்டர் நேத்ராவதி நின்றிருந்தார். அறையினுள் வராமல் அவனிடம்,”நியூரோ ஸ்பெஷலிஸ்ட் வெயிட் பண்றாரு…கிளம்புங்க.” என்றார்.
காலை உணவைப் புறக்கணித்து விட்டு அவருடன் புறப்பட்டனர் கணவன், மனைவி இருவரும்.
நியூரோ ஸ்பெஷலிஸ்டுடன் அரைமணி நேரம் பிரேமாவின் உடல் நிலையை அலசிய பின் அதன் முடிவில் பிரேமாவின் மூச்சு திணறல் அவருக்குக் கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். அதைப் பற்றி ஸ்மிரிதியுடன் கலந்து ஆலோசித்தபின் தான் முடிவு செய்ய முடியும் என்று அவருக்குத் தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கொண்டார் டாக்டர் நேத்ராவதி.
அதன்பின் ஸ்மிரிதி, மனு இருவரையும் அவரது அறைக்கு அழைத்து சென்றார்.  சிந்தனைவயப் பட்டிருந்த ஸ்மிரிதியிடம்,
”ஸ்மிரிதி..இன்னைக்கு காலைலே அம்மா உன்கிட்ட பேசியிருக்காங்க.. ஆனா அதுக்கு அப்பறம் கொஞ்சம் மூச்சு திணறல்….மே பி அவங்களை வெண்டிலேட்டர்லே போடற நிலை வரலாம்.” என்றார்
“காலைலே கஷ்டப்பட்டுதான் பேசினாங்க…அம்மா இப்படியே இருக்கட்டும்..வெண்டிலேட்டர் வேணாம்.” என்று அவர் ஆலோசனையை மறுத்தாள் ஸ்மிரிதி.
“முதலே வெண்டிலேட்டர் போட மாட்டோம்..பரொரல் (paroral) அப்பறம் அஸிஸ்டட் (assisted)..” என்று அவர் தொடருமுன்,
“அம்மா அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி பேட்டா சரியா யோசனை செய்யற நிலைலே அம்மா இல்லை..நீதான் சரியா யோசனை பண்ணணும்…அவங்களுக்கு சேர்த்து..இல்லை வீட்லே இருக்கறவங்களைக் கன்ஸல்ட் பண்ணு.” என்றார் டாக்டர் நேத்ராவதி.
“யாரையும் கேட்க வேணாம்..அவங்களுக்கு நான் மட்டும்தான் ஆன்ட்டி..அவங்க விருப்பம் தான் என் முடிவும்..உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஆன்ட்டி.” என்று பழைய ஸ்மிரிதியாகத் தெளிவாகப் பேசினாள்.
“மனு..நீ ஐ சி யு போயிடு..நான் ஆன் ட்டிகிட்ட பேசிட்டு வந்திடறேன்.” என்று மனுவை அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து மனு சென்றவுடன் ஸ்மிரிதி சொன்னதை கேட்ட டாக்டர் நேத்ராவதி அவர் சேரிலிருந்து எழுந்து வந்து,
“ஸ்மிரிதி பேட்டா…நீ ஆல் வேஸ் பிரேவ் டா.” என்று சொல்லி அவளை அணைத்து கொண்டவர் கண்களில் கண்ணீர் துளிகள்.
அன்று மதியம் பிரேமாவின் உடல் நிலை மோசமடைந்த போது ஐசியு தளத்தை விட்டு அசையாமல், அமைதியாக சிலை போல் அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி. விடியற்காலையில் பிரேமாவுடன் பேசியது அவள் மனதை அழுத்திக் கொண்டிருக்க பசி, தாகம் இரண்டும் மரத்து போய் அவள் மதிய உணவை மறுக்க, மனுவின் கட்டாயத்தினால் அவன் எடுத்து வந்த காபியை மட்டும் அருந்தினாள்.  அவள் வாயைத் திறந்து பேசினால் அவளின் மனசஞ்சலம் குறையும் என்று மனு நினைக்க, அவள் வாயைத் திறந்தால் கதறி அழ நேரிடும் என்று மனுவிடம் பேச விழைந்த மனதை அடக்கி வைத்திருந்தாள் ஸ்மிரிதி.
பாறையாகச் சமைந்திருந்த மனைவியைப் பார்த்து கவலைக் கொண்டான் மனு.  அவளை இத்தனை அழுத்தமாக தெராதூனிலிருந்து அழைத்து வந்தபோது பார்த்தது. இன்று அதே அமைதியான அழுத்தம் அவள் மன உறுதியின் அடையாளமென்று  கண்டு கொண்டான். 
மாலைப் பொழுதில் பிரேமாவின் நிலை மிகவும் கவலைக்கிடமான போது டாக்டர் நேத் ராவதியுடன் அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பிரேமாவைப் பார்க்க ஐஸியு சென்றனர் .  கடைசியாக உள்ளே சென்ற ஸ்மிரிதி மட்டும் பிரேமாவுடன் இருக்க அனுமதிக்கபட்டாள். 
பிரேமாவின் வலது கையை அவளின் இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்து கொண்டு அமர்ந்திருந்த ஸ்மிரிதி திடீரென்று அவளருகில் நின்றிருந்த நேத்ராவதியைத் திரும்பிப் பார்க்க, அவளுடைய தோளை அழுத்தமாகப் பிடித்து லேசாக தலையசைத்தார். அவளை விட்டு நிரந்திரமாகப் பிரேமா பிரிந்து போன அந்த க்ஷணத்தை அவள் ஸ்மிரிதியில் பத்திரப்படுத்திக் கொண்டாள் ஸ்மிரிதி.
மாலை ஐந்து மணி போல் ஐசியுவிற்குள் அழைத்து செல்லபட்ட ஸ்மிரிதி கால் மணி நேரம் கழித்து வெளியே வந்துபோது அங்கே சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த மனுவின் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.  பின் மென்குரலில்,
“அம்மா அமைதியாயிட்டாங்க மனு.” என்றாள்.
அதைக் கேட்டவுடன் அவளை அவன் நெஞ்சோடு அணைத்து கொண்டான் மனு. அப்போது அவனிடமிருந்து சிறிது விலகி, அவள் வலது உள்ளங்கையை விரித்து  அதிலிருந்த ஒற்றை ரூபாய் நாணயத்தைக் காட்டி,”அம்மாக்காக மதியத்திலிருந்து கைலேயே வைச்சுகிட்டிருந்தேன்..அவங்களாலே வைதாரணியைக் கடக்க முடியாதுன்னு காலைலே என்கிட்ட கவலைப்பட்டாங்க..நான் கடக்க வைக்கறேன்னு கியாரண்டி கொடுத்தேன்..
அவங்க இங்கேயிருந்து கிளம்பின போது தனியா உணர்ந்திருக்க மாட்டாங்க.. அவங்க கையை என் இரண்டு கையாலேக் கெட்டியா பிடிச்சுகிட்டு கடைசிவரை நான் அவங்களுக்குத் துணையா இருந்தேன்.” என்றாள் ஸ்மிரிதி.
********************************************************************************************
கா தே கான்தா கஸ்தே புத்ரஃ
ஸம்ஸாரோ‌உயமதீவ விசித்ரஃ |
கஸ்ய த்வம் வா குத ஆயாதஃ
தத்வம் சின்தய ததிஹ ப்ராதஃ || 8 ||
   
Who is your wife? Who is your son? 
Strange is this samsara. Of whom are you? 
From where have you come? 
Brother, ponder over these derivatives here.
Bhaja Govindam, Sri Adi Shankaracharya
******************************************************************************************
ந புண்யம் ந பாபம் 
ந சௌக்யம் ந துக்கம், 
ந மந்த்ரோ ந தீர்த்தம் 
ந வேதோ ந யஜ்னஹா | 
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா, 
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 4 ||
I am neither merit nor sin
I am neither happiness nor sorrow
I am neither invocation nor fulfilment
I am neither the knower nor the sacrifice
I am neither the food, nor the feeder, nor the fed
The form of existential ecstasy, I am Shiva, Shiva is me.
Nirvana Shatakam, Sri Adi Shankaracharya
******************************************************************************************

Advertisement