Advertisement

ஸ்மிரிதியின் மனு – 50_1
அடுத்த வந்த வாரங்களில் கோவையில் வீட்டு வேலைகள் முடிவை நெருங்கி கொண்டிருக்க, தில்லியை விட்டு புறப்படும் வேலையில் பிஸியானார் சிவகாமி.  எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று காலம்காலமாய் சேர்த்து வைத்திருந்த சாமான்களை இரக வாரியாகப் பிரித்து, தில்லி, கோவை என்று தனி தனியாகப் பாக் செய்தார். அப்படி செய்யும் போது சில சமையல் பாத்திரங்களைப் பிரேமாவின் உபயோகித்திற்காக விட்டு செல்வதாக ஸ்மிரிதியிடம் சொன்னார்.
“ஆன்ட்டி, இவ்வளவு பெரிய கடாயை  இங்கே எதுக்கு விடறீங்க? எங்க இரண்டு பேருக்குத் தேவைப்படாது.” என்று ஸ்மிரிதி மறுத்த போது,
“பிரேமா வர போறா..அவ மாப்பிளைக்கு மைசூர் பாக் செய்ய கடாய் வேணாமா? 
“இவ்வளவு பெரிசு வேணுமா?”
“மைசூர் பாக்கைக் கிண்ணத்திலே கிண்ட  முடியுமா?”
“எனக்கு ஸ்வீட் செய்யறதைப் பற்றி ஐடியா இல்லை.” என்று ஒத்து கொண்டாள் ஸ்மிரிதி.
“உனக்கு ஸ்வீட் பற்றிதான் ஐடியா இல்லை..உங்கம்மாக்கு உனக்கு சமைக்க தெரியும்னுகூட ஐடியா இல்லை.” என்றார் சிவகாமி.
“அம்மாக்குத் தெரியாது..அப்பறமாதானே கத்துகிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“பிரேமா இங்க வந்த அப்பறம் அவகிட்ட நம்ம ஊர் சமையலை கத்துக்க.” என்று சொன்னவர் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு,
“அவகிட்ட கத்துகிட்டது எதுவும் இப்ப நினைவுலே இல்லையா?” என்று கேட்டார்.
“எது ஆன்ட்டி?”
“உங்கம்மா உனக்குப் பாட்டு சொல்லி கொடுத்தாளே அதெல்லாம் மறந்து போயிடுச்சா..அப்பறமா கத்துகிட்ட பஞ்சாபி பாட்டும், ஹிந்தி பாட்டும் தான் நினைவுலே இருக்கா?” என்று கேட்டார்.
“அம்மா போன பிறகு அந்தப் பாட்டெல்லாம் பாடற பழக்கம் விட்டு போயிடுச்சு..அதெல்லாம் எங்கையோ மறைஞ்சு இருக்கு ஆன்ட்டி..அம்மா இங்கே வந்தவுடனே அந்தப் பாட்டெல்லாம் தானா வெளியே வந்திடும்.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை ரணதீரன் வந்த பிறகுதான் பிரேமாவின் பாட்டெல்லாம் மறைவிடத்திலிருந்து வெளி வரப் போகிறதென்று.
“மனு சின்ன குழந்தையா இருந்த போது உங்கம்மா “லாலி ஶ்ரீ” நு ஒரு பாட்டு பாடுவா..அந்தப் பாட்டை என் மடிலே படுத்துகிட்டு மறுபடியும் மறுபடியும்னு அவளை வீட்டுக்குப் போக விடாம பாட சொல்லி கேட்டுகிட்டே இருப்பான் ஆனா தூங்கதான் மாட்டான்..ஒரு மணி நேரம் பாடியிருக்கேன்..கச்சேரிக்கு காசு கொடுக்கணும்னு உங்கம்மா கலாட்டா பண்ணுவா…..அதெல்லாம் இப்ப நடந்த மாதிரி இருக்கு..இன்னைக்கு மனுவுக்கு பிள்ளைங்க வர்ற காலம் ஆயிடுச்சு….மனுவைப் போல அவன் குழந்தையும் பிரேமாவைப் பாட சொல்லி பாடுபடுத்த போகுது.” என்று சொல்லி சிரித்தார் சிவகாமி.
“அப்படி எங்கம்மாவைக் கஷ்டப்படுத்தினா அந்தக் குழந்தையைப் பாக் செய்து உங்ககிட்ட அனுப்பி வைச்சிடுவேன்.” என்று மிரட்டினாள் ஸ்மிரிதி.
“அனுப்பி வைச்சிடு…நானும், அங்கிளும் அங்கே தனியா இருக்கறத்துக்கு துணைக்கு ஒரு ஆள் ஆயிடும்.” என்று சொன்ன சிவகாமி அறிந்திருக்கவில்லை அப்படிதான் ஆகப் போகிறதென்று.  தில்லியை விட்டு நகர முடியாத நிலை ஏற்பட்டு ஸ்மிரிதியும், மனுவும் அங்கேயே இருக்க, அவர்களின் குழந்தைகளோடு மாறனும், மெஹக்கும் தான் மாறி மாறி கோவைக்குப் பயணம் செய்ய போகிறார்களென்று.
“இவ்வளவு வருஷமா பிரேமா எப்படிதான் தனியா இருக்காளோ? அவ வாழ்க்கை இந்த மாதிரி ஆனதுக்கு நான் தான் காரணமோன்னு தோணுது ஸ்மிரிதி..அவளை என்னோட கலெக்டர் ஆபிஸுக்கு அழைச்சுகிட்டு போயிருக்கக்கூடாது.” என்று ஸ்மிரிதியிடம் மனம் வருந்தினார் சிவகாமி.
பிரேமாவைப் போலவே சிவகாமியும் குற்ற உணர்வில் உழன்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸ்மிரிதி,”எங்கப்பாவோட இருக்க நான் முடிவெடுத்தது போலே எங்கப்பாவைக் கல்யாணம் செய்துக்க அம்மா தான் முடிவெடுத்தாங்க..என் முடிவுக்கு நான் தான் காரணம் அதேபோலே அம்மா முடிவுக்கு அவங்கதான் காரணம்..யார் முடிவுக்கும் யாரும் காரணமாக முடியாது..
ராம் கல்யாணத்துக்கு கோயமுத்தூர் போன போது அவங்க வீட்டுக்குக் போகணுமான்னு அம்மாகிட்ட கேட்டேன்..வேணாம்னு மறுத்திட்டாங்க..இனி அவங்களை நான் தனியா விட மாட்டேன்..
ஏன் ஆன்ட்டி..அம்மா அவங்களா ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டதாலே அம்மாவை அவங்க குடும்பம் ஒதுக்கி வைச்சாங்களா இல்லை அம்மாவைப் பிடிக்காம  ஒதுக்கி வைச்சாங்களா? இல்லை அம்மாவே அவங்ககிட்டேயிருந்து ஒதுங்கியிருக்காங்களா?” என்று பிரேமாவிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி விசாரித்தாள் ஸ்மிரிதி.
“பிரேமாவா அவ வாழ்க்கைத் துணையைத் தேர்தேடுத்துகிட்டது அவ குடும்பத்துக்குப் பிடிக்கலே..நீ பிறந்த பிறகு உன்னை ஏத்துக்கற,  நடந்ததை ஒத்துக்கற மன நிலை அவங்களுக்கு வரலே..
பிரேமா பெங்களூர் போகறத்துக்கு முன்னாடி அவ வீட்லே பேசிப் பார்க்கலாம்னு சொன்னேன்..அவளும் வேணாம்னு சொல்லலே..நானும் போய் பேசிப் பார்த்தேன் ஸ்மிரிதி..அவங்க பிரேமாவுக்குத் தலை மூழ்கிட்டதா சொன்னாங்க.” என்றார் சிவகாமி.
உயிரோடு இருக்கும் அவள் அம்மாவிற்குத் தலை மூழ்கிய அவர் குடும்பத்தைச் சில நாட்களில் சந்திக்க போவதை அறிந்திராத ஸ்மிரிதி,”அம்மா வீட்லே யார் யார் இருக்காங்க ஆன்ட்டி?”
“உங்கம்மாவோட அண்ணன், அவர் குடும்பம், உங்கம்மாவோட அம்மா, உன் பாட்டி..உங்கம்மாக்காகப் பத்து வருஷம் முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனதுதான் அப்பறம் அந்த ஸைட் போகவேயில்லை…புவனாவும் அவங்களோட தொடர்பிலே இல்லை..ஒரே ஏரியாலே இருக்கறதுனாலே அவளுக்கு அவங்க வீட்டு விஷயமெல்லாம் யார் மூலமாவது தெரிஞ்சுடும்” என்றார் சிவகாமி.
“வீட்டு பெரியவங்க நல்லா விசாரிச்சு அமைச்சு கொடுக்கற வாழ்க்கைக்கூட சில சமயம் தடம் புரளுது, பாதிலே நின்னு போகுது..தானா அமைச்சுகிட்ட வாழ்க்கையும் சில சமயம் தோல்வியடையுது..
பெரியவங்க செய்த தப்பை அவங்களே சரி செய்ய முயற்சி எடுக்கறாங்க..சின்னவங்க செய்த அதே தப்பை சரி செய்ய விருப்பமில்லாம அது அவங்களுக்குக் கிடைச்ச தண்டனையா நினைக்கறாங்க..பெற்றவங்களே அவங்க குழந்தைங்களை விட்டுக் கொடுத்திடறாங்க.” என்று ஸ்மிரிதி சொன்னதை மறுக்க முடியாமல் மௌனமானார் சிவகாமி.
மனு மட்டும் எப்போதும் போல் வேலைக்குச் சென்றிருக்க அவர்கள் மூவரும் அயராமல் உழைத்தும் வீட்டை மூட்டைக்கட்டும் வேலைகள் முடிவதாக இல்லை. அன்று மாலை அவர்கள் பாக்கிங் வேலைக்கு முற்றுபுள்ளி வைத்தபோது வீட்டின் வரவேற்பறை முழுவதும் பாக்கெஜ்ஜில் மூழ்கியிருக்க , உட்காரக்கூட இடமில்லாமல் சோபா, சேர் சகலத்தின் மீதும் ஏதாவதொரு சாமானும், லக்கேஜும் கிடந்தது.   அதனால் மனுவிற்கு ஃபோன் செய்து சீக்கிரம் வீடு வந்து சேர கட்டளையிட்டார் சிவகாமி.
சிவகாமியின் கட்டளைக்கு அடிபணிந்து ஆபிஸிலிருந்து சீக்கிரமாக வந்த மனுவின் உதவியோடு அத்தனை அட்டைப் பெட்டிகளையும் ஒன்றன் மீதொன்றாக வரவேற்பறையின் சுவற்றை ஓட்டி அடுக்கி வைத்தபோது இரவு பத்து மணி போலாகியிருந்தது.  அதற்குமேல் அவர்கள் நால்வரும் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்த போது நள்ளிரவானது.
களைப்பின் காரணமாக தன் நிலை மறந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனுவின் ஃபோன் விடாமல் அவனருகே அதிர அதன் அதிர்வில் மெதுவாக விழிப்பு நிலைக்கு வந்தான். அவனின் மறுபுறம் கட்டிலின் விளம்பில் அடித்து போட்டது போல் படுத்து கிடந்தாள் ஸ்மிரிதி. 
ஃபோனில் மெஸெஜ் வந்த வண்ணமிருக்கு அதை எடுத்துப் படித்து கொண்டிருந்தவனின் மனதில் அதில் வந்திருந்த செய்தி பதிய அவன் முகத்தில் அதிர்ச்சி குடியேறியது.  அப்போது அவன் ஃபோன் சத்தமில்லாமல் அழைக்க, படுக்கையிலிருந்து எழுந்து பாத் ரூம் அருகே சென்றவன்,
“எப்போ?”
“நீ”
“ஒகே.” என்று ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அவன் கேட்ட செய்தியில் கலவரமடைந்தவன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்க்க, அவளோ மனு எழுந்து போனது, ஃபோன் பேசியது எதையும் உணராமல் ஆழந்த நித்திரையில் இருந்தாள்.  முதலில் பாத்ரூமிற்கு சென்று முகத்தை கழுவி கொண்டு  வெளியே வந்தவன் நேரே நாதனின் படுக்கையறை கதவைத் தட்டினான். 
சில நிமிடங்களுக்குப் பின் தூக்க கலகத்துடன் கதவைத் திறந்த நாதன்,
“என்ன டா?” என்றார்.
“அம்மா முழிச்சுகிட்டாங்களா?” என்று கேட்டான் மனு.
“இல்லை..தூங்கிகிட்டிருக்கா.”
“கொஞ்சம் வாங்க..உங்களோட பேசணும்.” என்றவன் வரவேற்பறைக்குச் செல்ல, அவனைப் பின் தொடர்ந்தார் நாதன்.
வரவேற்பறை விளக்கைப் போட்டவுடன் டைனிங் டேபிளிலிருந்த சின்ன கடிகாரம் மணி மூன்று என்று காட்டியது.
“என்ன டா மனு?” என்று சிறிது கவலையுடன் கேட்டார் நாதன்.
“பிரேமா ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை பா….ஸ்கூல் டாக்டர் அவங்களை ஆம்புலன்ஸ்லே சுசித்ராவோட ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போறாரு.. மாறனுக்கு தகவல் கொடுத்திருக்காரு.” என்றான் மனு.
“திடீர்னு என்ன டா ஆயிடுச்சு?” என்று பதட்டமடைந்தார் நாதன்
“தெரியலே பா..ஆன்ட்டிக்கு ஏதோ அனீஸியா இருந்திருக்கு..பக்கத்து ரூம்லே இருக்கறவங்ககிட்ட சொல்லியிருக்காங்க..அவங்க டாக்டருக்கு ஃபோன் செய்யறத்துக்குள்ள ஷீ கோலப்ஸ்ட்.” என்றான் மனு.
“பெங்களூருக்கு அடுத்த ஃபிளைட் எப்பெண்ணு செக் பண்ணு.” என்றார் நாதன்.
“அதெல்லாம் மாறன் செக் பண்ணி, டிகெட் புக் பண்ணிட்டான்..எனக்கும், ஸ்மிரிதிக்கும் இன்னும் இரண்டு மணி நேரத்திலே ஃபிளைட்..உங்களுக்கும், அம்மாக்கும் ஏழு மணி ஃபிளைட் புக் பண்ணியிருக்கான்..டிக்கெட் உங்க ஃபோனுக்கு வந்திருக்கும்..
நான் போய் ஸ்மிரிதியை எழுப்பறேன்..நாங்க உடனே புறப்படறோம்.” என்றான் மனு.
“ மாறன் வேற ஏதாவது விவரம் சொன்னானா?” என்று கேட்டார் நாதன்.
“இல்லை பா..ஆஸ்பத்திரி போன பிறகுதான் என்ன ஏதுன்னு தெரியும்ங்கறான்.”
நாதனிடம் தகவலைப் பகிர்ந்து கொண்டு அறைக்குத் திரும்பியவன், கட்டிலில் அமர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த ஸ்மிரிதியைத் தட்டி எழுப்பினான்.
நல்ல உறக்கத்தில் இருந்த ஸ்மிரிதி அரைகுறையாக விழித்து கொண்டு,”எனக்குத் தூங்கணும்.” என்று அடம் பிடித்தாள்.
“எழுந்திரு..லேட்டாயிடும்..பெங்களூர் போறோம்..இரண்டு மணி நேரத்திலே ஃபிளைட்.” என்றான்.
அவன் பெங்களூர் என்றவுடன் தூக்கம் கலைந்து போன ஸ்மிரிதி,”எதுக்கு?” என்று கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அத்தைக்கு அன் ஈஸியா இருக்குண்ணு பக்கத்து ரூமுலே போய் சொல்லியிருக்காங்க..அவங்க டாக்டருக்கு ஃபோன் செய்திருக்காங்க..இப்ப டாக்டரே ஆம்புலன்ஸ்லே அவங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போறாரு.” என்றான் மனு.
“டாக்டர் கூட போறாரா? எப்பவும் ஸ்கூல் நர்ஸ்தான் போவாங்க.” என்று அவள் பள்ளி நாட்களில் நடந்ததை வைத்து சத்தமாக யோசித்தாள்.
“டாக்டர் ஏன் போனாருன்னு எனக்குத் தெரியலே..மாறன்கிட்ட அவர் தான் தகவல் சொல்லியிருக்காரு..கிளம்பு..அங்கே போய் எல்லாம் விசாரிச்சுக்கலாம்.” என்றான் மனு.
அதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் கணவன், மனைவி இருவரும் ஏர்போர்ட்டிற்குப் புறப்பட்டனர். அவர்கள் பெங்களூர் வந்து சேரும்வரை ஸ்மிரிதி மௌனமாக இருந்தாள்.  அவளுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் சரியான வார்த்தைகளைத் தேடி நேரத்தை விரயம் செய்தான் வீக்கல்.  ஆனால்  அவனின் தயக்கம் ஸ்மிரிதிக்கு வேண்டிய தனிமையைக் கொடுத்து அவளை ஒரு முடிவுக்கு உந்தியது. இனி பிரேமாவின் பேச்சைக் கேட்ககூடாது. அவர் உடம்பு தேறியவுடன் அவரை தில்லி அழைத்து வரவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் ஸ்மிரிதி.
பெங்களூர் ஏர்போர்டிலிருந்து ஆஸ்பத்திரி செல்வதற்காக அவர்கள் டாக்ஸியில் அமர்ந்தவுடன்,
“அம்மாக்கு சரியான உடனே அவங்களை நம்மளோட தில்லிக்கு அழைச்சுகிட்டு போயிடலாம்..இனி வேலைக்கு வர மாட்டாங்கண்ணு ஸ்கூலுக்கு தகவல் கொடுத்திட போறேன்..போதும் அவங்க தனியா இருந்தது..வேலை பார்த்தது..ஸ்கூலுக்கு ஏதாவது பணம் கட்டணும்னா கட்டிடலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“செய்யலாம்..எல்லாம் செய்யலாம்..முதல்லே அவங்க உடல் நிலை சரியாகட்டும்.” என்றான் மனு.
அவர்கள் ஆஸ்பத்திரியை அடைந்த போது அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தது டாக்டர் நேத் ராவதி, சுசித்ராவின் அம்மா.
அவரைப் பார்த்து ஆறுதலடைந்த ஸ்மிரிதி,”ஆன்ட்டி, அம்மா எப்படி இருக்காங்க?” என்று விசாரிக்க,
“ஐ சி யு லே இருக்காங்க..நானும் இப்பதான் வந்தேன்.” என்றார்.
ஐ சி யு என்றவுடன் கலவரமான ஸ்மிரிதி,
“அம்மாக்கு என்ன ஆச்சு ஆன்ட்டி?”
“ஐ திங்க் ஷீ ஸஃபர்ட் எ ஸ்ட்ரோக்..கொஞ்ச நேரத்திலே வி வில் நோ தி டீடெயில்ஸ்.” என்றார்.
அதைக் கேட்டு ரிசெப்ஷனிலிருந்த சேர் ஒன்றில் ஸ்மிரிதி அமர்ந்து விட அதுவரை அவளருகில் அமைதியாக நின்றிருந்த மனு, டாக்டரிடம் அவனை சுய அறிமுகம் செய்து கொண்டான்.
“நான் மனு வளவன், ஸ்மிரிதியோட ஹஸ்பண்ட்.” என்றான்.
”நான் டாக்டர் நேத்ராவதி, சுசித்ரோவோட அம்மா.” என்றார். 
“பிரேமா ஆன்ட்டிக்கு நினைவு இருக்கா?” என்று விசாரித்தான் மனு.
“இல்லை..இன்னும் நினைவு வரலே.” என்றார் டாக்டர்.
அப்போது அங்கே வந்து சேர்ந்தான் மஞ்சு நாத். கவலையுடன் அமர்ந்திருந்த ஸ்மிரிதியின் அருகில் சென்று, 
“போனமுறை ஆன்ட்டி செக்-அப்பிற்கு வந்தபோது மாறனோட எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..சுசித்ராவோட நல்லா பேசினாங்க..அவளுக்குத் தைரியம் கொடுத்தாங்க..நீ கவலைப்படாதே.. சரியாயிடுவாங்க.” அவளுக்குத் தைரியம் கொடுத்தான்.
அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக லேசாக தலையசைத்தாள் ஸ்மிரிதி. 
ஸ்மிரிதி அருகில் நின்றிருந்த மனுவிடம்,
“அவங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு வந்தவுடனேயே நேத்ரா ஆன்ட்டிக்கு ஃபோன் வந்திடுச்சு..சுசித்ராக்காக தினமும் நைட் அவங்க எங்களோட தான் இருக்காங்க..நாந்தான் அவங்களை இங்கே அழைச்சுகிட்டு வந்தேன்.” என்றான்.
“சுசித்ராவைத் தனியா விட்டிட்டு நீங்க இரண்டு பேரும் இங்கே வந்திட்டீங்க..நீ உடனே கிளம்பு மஞ்சு நாத்.” என்றான் மனு.
“ஆமாம்..நீ கிளம்பி வீட்டுக்குப் போயிடு..நான் ஸ்மிரிதி அம்மாவைப் பார்த்திட்டு நேரே  வீட்டுக்கு வந்திடறேன்..நானே இந்த விஷயத்தை சுசித்ராகிட்ட சொல்றவரை நீ வாயைத் திறக்காதே.” என்று மஞ்சு நாத்திற்கு எச்சரிக்கை செய்துவிட்டு பிரேமாவைப் பார்க்க சென்றார் டாக்டர் நேத்ராவதி.
அவனுடைய கார் சாவியை மனுவிடம் கொடுத்துவிட்டு,”கார் சாவியை நீயே வைச்சுக்கோ..வெளியே போகணும்னா ரிசெப்ஷன்லே சொல்லிடு டிரைவர் ஏற்பாடு செய்திடுவாங்க..என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் ஃபோன் பண்ணு..
இங்கே உங்களுக்கு கெஸ்ட் ரூம் ஏற்பாடு செய்திருக்கேன்..அது பிடிக்கலேன்னா கபீர் ஹோட்டல் இருக்கு,” என்றான்.
“அம்மா, அப்பா இரண்டு பேரும் ஏழு மணி ஃபிளைட்லே வர்றாங்க..மாறனும் ஒன்பது மணிக்கு வர்றான்..அவனே அவங்களை ஏர்போர்ட்லேர்ந்து அழைச்சுகிட்டு வந்திடுவான்..அவங்களும் இங்கையே தங்கறத்துக்கு வசதி இருக்கா?” என்று விசாரித்தான் மனு.
“இனஃப் ரூம்ஸ் இருக்கு..ஒரு ரூம்லே இரண்டு பேர் மேலே தங்கலாம்..ரிசெப்ஷன்லே நான் சொல்லிட்டு போறேன்..சாயந்திரம் முடிஞ்சா வந்து பார்க்கறேன்..அதுக்குள்ள பிரேமா ஆன் ட்டிக்கு சரியாயிடும்னு நினைக்கறேன்.. லெட்ஸ் ஹொப் ஃபார் தி பெஸ்ட்.”என்று சொல்லி விடைபெற்று கொண்டான் மஞ்சு நாத்.
டாக்டர் நேத்ராவதி வரும்வரை மனுவும், ஸ்மிரிதியும் அமைதியாக ரிசெப்ஷனிலேயே அமர்ந்திருந்தனர். இப்பவும் ஸ்மிரிதியிடம் என்ன பேசுவதென்று என்று தெரியாமல் மனு மௌனமாக இருக்க ஸ்மிரிதியோ ஊமையாகியிருந்தாள்.
பிரேமாவைப் பார்த்துவிட்டு ஐ சி யுவிலிருந்து திரும்பிய டாக்டர் நேத்ராவதி, ஸ்மிரிதி அருகே அமர்ந்து,
“ஸ்மிரிதி பேட்டா.” என்று மென்மையாக விளித்தார்.
“அம்மா எப்படி இருக்காங்க ஆன்ட்டி?” என்று அவள் கேட்டது போது அது ஸ்மிரிதியின் குரலாயென்று இருந்தது மனுவிற்கு.
“பேட்டா..ஷீ இஸ் க்ரிடிகல் பட் ஸ்டேபில்..வி ஆர் டூயிங் அவர் பெஸ்ட்…நான் இப்ப வீட்டுக்குக் கிளம்பறேன்..டோண்ட் வரி ஐயம் ஜஸ்ட் அ ஃபோன் கால் அவே.” என்று சொல்லி புறப்பட்டு சென்றார்.
எப்படி இப்படி திடீரென்று ஆனது என்று யோசித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  அதே யோசனையுடன் இருந்தார் நாதன் அருகில் விமானத்தில் அமர்ந்திருந்த சிவகாமி.
“எப்படி இப்படி திடீர்னு அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு..ஒரு செக் அப்பும் மிஸ் செய்யக்கூடாதுன்னு மாறன் தான் அவளை மாசா மாசம் ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போயிருக்கான்..
அவளோட கடைசியா பேசும் போது டயர்டா இருக்கு..வேலையெல்லாம் மெதுவா செய்யறேன்னு சொன்னா..வேற எதுவும் பிராப்ளமிருக்கற மாதிரி சொல்லவேயில்லே.” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
“எதுவும் ஸீரியஸா இருக்காது..கவலைப்படாதே.” என்று சிவகாமிக்கு ஆறுதலாக பேசிய நாதன் அவர் கவலையை வெளியே காட்டவில்லை.
“அவளுக்கு உடம்பு சரியான பிறகு தில்லிக்கு அழைச்சுகிட்டு வந்திடணும்..நாம அங்கேயிருந்து கிளம்பறத்துக்கு முன்னாடி நான் கொஞ்ச நாள் அவளோட இருக்கணும்.” என்றார் சிவகாமி.
“எல்லாம் இருக்கலாம்..முதல்லே அவளுக்கு சரியாகட்டும்.” என்றார் நாதன்.
“கார்மேகம்கிட்ட சொல்லிட்டீங்களா?”
“நான் சொல்லலே..தில்லிலேர்ந்து புறப்படறவரை மனுவும் சொன்ன மாதிரி தெரியலே..அங்கே போனவுடனே நான் விசாரிக்கறேன்..அவருக்குத் தகவலாவது சொல்லணும்.” என்றார் நாதன்.
“மாறனே அவருக்குத் தகவல் சொல்லியிருப்பானா?”
“தெரியலே.நான் அவன்கிட்ட இன்னும் பேசலே..மனுவோ, ஸ்மிரிதியோதான் சொல்லணும்..அவங்க சொல்ற நிலைலே இல்லேன்னா நாந்தான் சொல்லணும்..பெங்களூர் போய் நிலைமை என்னென்னு பார்த்துகிட்டு அவருக்கு சொல்லலாம்.” என்றார் நாதன்.
அதற்குபின் அமைதியாக இருந்த சிவகாமியின் மனதில் ஏதேதோ யோசனைகள்.  அந்த யோசனைகளின் முடிவில் சோர்ந்து போய் கண்மூடி கொண்டவரின் கண்களில் இளவயது பிரேமா தோன்றினார்.  திடுக்கிட்டு கண் விழித்தவரிடம்,”என்ன சிவகாமி?” என்று விசாரித்த நாதனிடம்,”தெரியலே.” என்று பதில் சொன்ன போது எல்லாம் முடிந்துவிட்டதாக, வார்தைகளில் வடிக்க முடியாத வேதனை அவர் மனதை ஆக்கிரமித்து  கொண்டது.
அதற்குபின் அவர்கள் விமானம் பெங்களூரில் தரையிறங்கும் வரை கண்களை மூடாமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தார் சிவகாமி.  அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த போது அவர்களுக்காக வாயில் அருகிலேயே காத்திருந்தான் மாறன்.  அவனை அங்கே எதிர்பார்திராத சிவகாமியினருகில் சென்றவன் அவரை அணைத்து, அவன் தோளோடு சாய்த்து கொண்டவுடன் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
அவர் அழுது முடிக்கும்வரை அமைதியாக காத்திருந்தான் மாறன்.  அவரை அணைத்தபடி அவர் கண்களைப் பார்த்தவன்,
“என்ன பண்ணனும்னு சொல்லுங்க..பண்றேன்.” என்றான் அவன் அம்மாவின் கண்களிலிருந்த வேதனையைப் புரிந்து கொண்ட அவர் மகன்.

Advertisement