Advertisement

ஸ்மிரிதியின் மனு – 5_2
“ஓ..நம்ம ஆளுமை அக்காவா தெரியுதோ.” என்று சந்தேகம் கொண்ட ஸ்மிரிதி, ஜானுவைப் பார்த்து,
“என்னை ஸ்மிரிதினேக் கூப்பிடு…இப்ப இந்த ஃபோடோஸப் பார்த்து உனக்கு எது பிடிக்குதுனு சொல்லு.” என்று அவளுடைய போனை ஜனனியிடம் கொடுத்தாள்.
அதற்கு பின் பெண்கள் இருவரும் ஏர்போர்ட்டில் ஃபிளைட்டிற்காகக காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து போனில் முழ்கிப் போயினர்.  அடுத்த ஒரு மணி நேரத்தை மனு, நாதனுடன் ராம் கழிக்க அவன் புது மனைவியோ ஸ்மிரிதியின் அடிமையாகிப் போனாள். ஸ்மிரிதியின் ஆளுமையில் அட்கொள்ளப்படாத ஒரே ஜீவன் ஒரு முடிவுக்கு வந்து.
“ஸ்மிரிதி” என்று சத்தமாக அழைத்தான் மனு.
மனுவின் அழைப்பை ஸ்மிரிதி கண்டு கொள்ளவில்லை.  ஆனால் ஜனனி கண்டு கொண்டாள் மனுவின் கோபத்தை. 
“அக்கா, மனு அண்ணா உங்களைக் கூப்பிடறார்.” என்றாள் மெதுவாக.  
அந்த “அக்கா” வார்த்தையை விட போவதில்லை என்று உணர்ந்த ஸ்மிரிதி,
“ஜனனி..எனக்கு காது கேட்குது..உங்க மனு அண்ணாக்கு உன் வீட்டுக்காரரோடு உட்கார்ந்து போர் அடிச்சிடுச்சு அதனால ஒரு மாற்றத்துக்காக என் கம்பெனி வேணுமுனு நினைக்கறார்.” என்று விவகாரமாகப் பதில் சொன்னாள்.
“ஐயயோ..எனக்கு தெரில அக்கா..நான் போயி அவர்கிட்ட உட்கார்ந்துகறேன்..பாவம் மனு அண்ணா.” என்று தப்பான ஆளின் மேல் பரிதாபப்பட்டாள் அந்த வெகுளிப் பெண்.
“உன்னோட கிஃப்ட நீயே செலக்ட் செய்தா நல்லா இருக்குமுணுதான் உனக்கு எல்லா புடவையும் காட்டினேன்..நீ சொன்ன அளவுபடி உனக்கு பிளவுஸ் ரெடியாயிடும் அதேபோல ராமுக்கு குர்த்தாவும்..சிவகாமி ஆன் ட்டி கேட்டா நீதான் பிளவுஸ் டிசைன் செலக்ட் செய்தேனு சொல்லிடு..என் பெயர் வெளியே வரக்கூடாது..ஒகேவா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“எனக்கு பிடிச்சிருக்கு அக்கா..வித்தியாசமா இருக்கு..ஆனா எப்படிகா அதை போட்டுபேன்? ஃபோடோவப் பார்த்தா புரிய மாட்டேங்குது.” என்றாள் ஜனனி.
“அது என் பிரண்டோட ஸ்பேஷாலிட்டி..கம்ஃபர்டபிளா தைச்சு கொடுப்பா..கவலையவிடு.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி கா.” என்றாள் ஜனனி.
“உன் வீட்டுப் பக்கத்தில ஊட்டிய வைச்சுகிட்டு குளிர் காலத்தில தெஹராதூன் போற.” என்றாள் ஸ்மிரிதி.
“பக்கத்தில் இருக்கறதுனால ஊட்டிக்கு நினைச்சபோது போயிக்கலாம் அதனால இது ஸ்பெஷலா இருக்கணுமுனு மனு அண்ணாதான் அவங்களுக்கு சொல்லியிருக்காரு.” என்றாள் ஜனனி.
“பரவால்ல..வக்கீல் விவரமாதான் இருக்கான்.” என்று நினைத்து கொண்டாள் ஸ்மிரிதி.
 “விண்டர் துணியெல்லாம் வைச்சிருக்கியா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அங்க மூணு நாள்தான் அக்கா…அங்க போன பிறகு வேணுமுனா வாங்கிக்கலாமுனு சொன்னாங்க.” என்றாள் ஜனனி.
ஜனனி சொன்னதைக் காதில் வாங்காமல் அவளின் ஹோல்டால் பேகிலிருந்து பஷ்மினா ஷாலை எடுத்து அவளுக்குக் கொடுத்தாள் ஸ்மிரிதி.
“என்னது கா இது.”
“தில்லில இறங்கினவுடனையேக் குளிரும்..ஷால் தேவைப்படும்..அப்பறம் ராம் சொன்ன மாதிரி மற்றத கடைல வாங்கிக்க.” என்றாள்.
“ஸ்மிரிதி.” என்று மறுபடியும் பொறுமையில்லாமல் அழைத்தான் மனு.
“மனு அண்ணா என்ன உங்க மேல இவ்வளவு கோபப்படறாரு..பேச விடமாட்டேங்கறாரு.” என்று புது கணவனை மறந்து புது அக்காவின் மேல் கரிசனம் காட்டினாள் ஜனனி.
“நான் பார்த்துக்கறேன்..அவனே இப்ப எழுந்து வந்து என்கிட்ட உட்கார்ந்துப்பான்.” என்று ஸ்மிரிதி சொல்லி முடிக்கும் முன் மனு அவர்கள் அருகில் இருந்தான்.
“ஸாரி மனு அண்ணா.” என்று மனுவிற்கு ஸாரி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று ராமின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் ஜனனி.
அவள் அருகில் அமர்ந்து கொண்டு “உனக்கு அறிவு, மனெர்ஸ் இரண்டுமே நிஜமாவே இல்லையா?” என்று அன்று ஸ்மிரிதியை இரண்டாவது முறையாக கேட்டான் மனு.
“நீயே சொல்லு..என் பதில் உனக்கு திருப்தியா இல்ல போல.” 
“இல்லதான்..என்ன சந்தேகம்..புது புருஷன் அங்க தனியா உட்கார்ந்துகிட்டு இருக்கான் அவன் புது பொண்டாட்டியோட நீ உட்கார்ந்துகிட்டு இருக்க..அப்படி என்ன பேச்சு.” என்று கேட்டான் மனு.
“எல்லா அவ விஷயமா தான் பேசிகிட்டு இருந்தேன்.”
“அவ கைல என்னத்த எடுத்துகிட்டு போறா?”
“அறிவாளி ஒருத்தன் அவளுக்கும் அவ புருஷனுக்கும் குளிர்காலத்தில குளிர் பிரதேசத்துல ஹனிமூன் போக ஐடியாக் கொடுத்திருக்கான்..அவளுக்குப் அங்க போட்டுக்க என்னால துணி கொடுக்க முடியாது அதான் போர்த்திக்க என் ஷாலைக் கொடுத்தேன்.” என்று அவள் அறிவை நிரூபித்துக் காட்டினாள் ஸ்மிரிதி.
அதுவரை அவள் சொல்வதைக் அவன் சேரில் சாய்ந்தபடி கேட்டு கொண்டிருந்த மனு, அவள் புறம் திரும்பி அவன் முகத்தை அவளின் தோளருகே கொண்டு சென்றவன்,“முட்டாள்தான் நீனு நிரூபிச்சிட்ட..ஹனிமூன்ல அவனுக்கு ரூமுக்குள்ளதான் வேலை இருக்க போகுது..அவன் வெளிய போகாததுக்கு குளிர் காரணமாகப் போகுது..அவங்களுக்குப் போர்த்திக்க போர்வையோ, பிளாங்கெட்டோ தேவைப்படாது..அவங்க ஒருத்தர் ஒருத்தர் போர்த்திப்பாங்க..த்ரில்லிங்கா இருக்குமில்ல.” என்று  சொல்லி அவன் கண்களை நேராகப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதியை நோக்கிக் கண் சிமிட்டினான்.
வண்டியில் மனுவிடமும், சிவகாமியிடமும் ஸ்மிரிதி எல்லை மீறி பேசியதைப் போல் மனுவும் அப்போது ஸ்மிரிதியிடம் எல்லை மீறி பேசினான்.  ஸ்மிரிதியும், மனுவும் அதுபோல் அத்து மீறி பேசிக் கொண்டதே இல்லை. ஆனால் அன்று அவர்கள் இருவரும் அவரவர் எல்லையைத் தாண்டி தாக்கிக் கொண்டிருந்தனர்.  அன்று அந்த ஏர்போர்ட்டில் அவர்கள் இருவருமிடையே இருந்த எல்லைக் கோடு அழிந்து போனது.
மனுவிற்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து நேரே ஜனனியிடம் சென்ற ஸ்மிரிதி,
“ஜானு..அந்த ஷாலைக் கொடுத்திடு..ராம் உனக்குப் புதுசா வாங்கித் தருவான்.” என்று சொல்லி அவள் கையிலையே வைத்திருந்த ஷால்வையைப் பிடுங்கிக் கொண்டாள்.  
அவனருகே ஷாலுடன் வந்து அமர்ந்த ஸ்மிரிதியைப் பார்த்து,”தப்பு செய்தா அதை ஒத்துக்கறதும்..அந்த தப்பைத் திருத்திருகறதும் எப்பலேர்ந்து நடக்குது ?” என்று மனு ஸ்டைலில் நேரடியாக சுற்றி வளைக்காமல் கேட்டான்.
அவன் கேட்டது காதில் விழாதது போல் அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி. உடனே,
“மஞ்சு நாத் யாரு?” என்று வேறொரு கேள்வியைக் கேட்டான் மனு.
“ஏன் உனக்கும் சேர்த்துதான் அவனை அறிமுகப்படுத்தி வைச்சேன் சுசித்ராவோட ஹஸ்பண்டுனு.” என்றாள் ஸ்மிரிதி.
“அது தெரியுது..உங்க எல்லாரோட பிரண்டா? நான் பார்த்ததில்லையே.”
“முதல்ல அவளோட பிரண்டா இருந்தான் இப்ப எங்க எல்லாரோட பிரண்ட்.”
“அவன் உங்களைப் போல இல்லை..சுசித் ரா பிரண்டுன்னா உங்க ஸ்கூலேவா?” என்று கேட்டான் மனு.
“இல்ல….அவனும் பெங்களூர்லதான் ..எங்கள விட பெரியவன்.. அவனுக்கு உன் வயசாகுது..இப்பதான் இரண்டு வருஷம் முன்னாடி அவங்க கல்யாணம் செய்துகிட்டாங்க.”
“அப்ப அவனும் பெரிய இடம்தான்..சுசித் ரா போல..இரண்டு பேரும் டாக்டர். “ என்றான் மனு.
மனுவின் “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற தோரணையில் கடுப்பான ஸ்மிரிதி,
“உனக்கு ஒண்ணும் தெரியாட்டா என்கிட்ட கேளு..நீயா எல்லாரையும் டாக்டராக்காத..பல்கலைக்கழகமா நடத்தற பட்டமளிப்பு விழாவுக்கு..டாக்டர் டிகிரியா தூக்கிக் கொடுக்கற.” என்று வெடித்தாள்.
“அவதான் உங்க கும்பல்ல உன்னைப் போல நல்லா படிப்பானு ஆன் ட்டி சொல்லியிருக்காங்க..அவங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் நடத்திகிட்டிருந்தாங்க. அப்ப அவ டாக்டராகலையா?”
“எல்லாம் கரெக்டா ஞாபகம் வைச்சுகிட்டிருக்க ஆனா லேடஸ்ட் உனக்கு தெரில..சுசித் ரா டாக்டருக்குப் படிக்கல..ஃபேஷன் டிசைனிங் படிச்சா..அவ டாக்டர் ஆகறது அவங்க அப்பா, அம்மா விருப்பம்..டிசைனர் ஆகறது அவ விருப்பம்..நாலு பேர சாகடிச்ச பிறகு நமக்கு ஒத்துவரலைனு ஒத்துக்கறதவிட அது முன்னாடியே தெரிஞ்சிடுச்சுனா அதிலேர்ந்து ஒதுங்கிக்கறதுல தப்பில..அவ வாழ்க்கைல மட்டுமில்ல எத்தனையோ பேர் வாழ்க்கைல அவ முடிவால மாற்றம் ஏற்பட்டிருக்கு..
“பேஷண்ட், டீரீட்மெண்ட் லைன், மெடிசனைப் பற்றி பேசிக்கிட்டிருந்த வீட்ல இப்ப பேஷேன், டிரெஸ் டிசைனிங், மெட்டீரியல் பற்றி பேசறாங்க..அவ வீடு இப்பதான் அவளுக்குப் பிடிச்சிருக்கு..அவ எடுத்த முடிவால அவங்க குடும்பத்துக்கு அவ மேல ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் ஆனா அவளோட வாழ்க்கை அவளுக்கு ஏமாற்றமா இல்லாம எதிர்பார்போடு அமைஞ்சிருக்கு..மஞ்சு நாத் டெக்ஸ்டைல் டெக்னாலஜிஸ்ட் ஸோ அவனும் டாக்டர் இல்ல.” என்றாள் ஸ்மிரிதி
“மஞ்சு நாத்கிட்ட என்ன பேசிகிட்டு இருந்த?” என்று மனு கேட்டதும் மஞ்சு நாத் பற்றிய பேச்சை எதற்காக ஆரம்பித்தான் என்று ஸ்மிரிதிக்குப் புரிந்து போனது.
அவனுக்குப் பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள் ஸ்மிரிதி.
“என்ன பேசிக்கிட்டிருந்த?” என்று விடாக்கண்டனானான் வக்கீல்.

Advertisement