Advertisement

ஸ்மிரிதியின் மனு – 5_1
“மனு.” என்று அதிர்ச்சியாக விளித்தார் சிவகாமி.  பிரேமாவோ வாயேத் திறக்கவில்லை. அவர் பெண்ணிடம் அவர் கேட்க தயங்கியதைத் தயக்கமே இல்லாமல்  ஸ்மிரிதியிடம் மனு சொன்னதைக் கேட்டவுடன் அவன் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. அதே சமயம் ஸ்மிரிதியின் வாழ்க்கையின் அபாயகரமான நாட்களையும்  அவருக்கு நினைவுப்படுத்தியது.
மனு சொன்னதைக் கேட்டு அவளுடையப் பதிலை மனதில் ஓட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில் காரோட்டியிலிருந்து விமான ஓட்டியாக மாறி வக்கீலின் வம்புளக்கும் ஆசைக்கு வித்திட்டாள் ஸ்மிரிதி. காற்றைக் கிழித்து கொண்டு தரையிலேயேப் பறக்க ஆரம்பித்தது அந்தக் கார்.  
கார் வேகம் பிடிப்பதைப் பார்த்து பின்னால் இருந்த இருவரும் சிறிது அச்சத்துடன் அமர்ந்திருக்க, முன்னால் அமர்ந்திருந்த இருவரும் அத்தனை வேகத்தில் அவர்கள் மன நிலையின் சம நிலைலைக்கு சரிவு ஏற்படாமல் சவாரி செய்ய முயன்று கொண்டிருந்தனர். ஆனால் ஸ்மிரிதியின் முயற்சி தோல்வி அடைந்தது அவளின் சம நிலை சரிந்தது.
“வக்கீலா இருந்துகிட்டு வார்த்தைய தப்பா யூஸ் செய்யற..இது அவனுக்குத் த்ரில் ட் ரிப்தான்..அவனோட த்ரிலுக்குதான் புது பொண்டாட்டிய அவன்கூட கூட்டிகிட்டு போறானே.” என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், சிவகாமியையும், பிரேமாவையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் ராமின் ஹனிமூனைப் பற்றி விமர்சித்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி.” என்று அப்போது அதிர்ச்சியாக விளித்தது பிரேமா.  அவள் அம்மாவைப் புறக்கணித்து விட்டு,
“உங்கிட்ட சொன்னேனில்ல ஆன் ட்டி மனு கிழவனாயிட்டானு..சீக்கிரமா ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் செய்து வைங்க.. வக்கீலுக்கு வார்த்தைகளோட வித்தியாசம் விளங்கட்டும்.” என்று சிவகாமிக்கு அட்வைஸ் செய்தாள்.
ஸ்மிரிதியின் பேச்சை சகித்து கொள்ள முடியாமல் அதே சமயம் அவர்கள் இருவரின் சண்டையில் தலையிட விரும்பாமல் மௌனம் காத்தார் சிவகாமி. அவரால் மனுவின் மன நிலையை கணிக்க முடியவில்லை.  அவன் முன் ஸீட்டில் அமர்ந்திருந்ததால் அவன் ஸ்மிரிதியின் விமர்சனத்தை எப்படி எடுத்து கொண்டான் என்று அவருக்குத் தெரியவில்லை. பிரேமாவின் பொருட்டு மனு மௌனமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
அத்தோடு விஷயத்தை விடமால் அதை மேலும் விபரீதமாக்கினாள் ஸ்மிரிதி.  ஒரு கையால் காரை ஓட்டிக் கொண்டு மறுகையால் டேஷ் போர்டைத் திறந்து அதிலிருந்து எடுத்த சிகெரட் பாக்கெட்டை மனுவிடம் நீட்டி,
“ஹெல்ப் யுவர்செல்ஃப்.” என்று அடாவடியை அவள் அறவழியாக்கின்னாள்  ஸ்மிரிதி ஸம்வர்தினி.
அவள் நீட்டிய சிகரெட் பாக்கெட்டைப் பார்த்த மனு வம்பை வளர்க்காமல் விரும்பாமல் சிவகாமியின் பிரார்த்தனைப் பலித்து மௌனியானான்.
மனு பதில் சொல்லததால் கையிலிருந்த சிகெரட் பாக்கெட்டை மறுபடியும் டேஷ் போர்டில் வைத்த ஸ்மிரிதி, சிவகாமியைப் பார்த்து,
“உங்க பையன் தங்கம்தான்..கோல்ட் ஃபிளேக்கப் பார்த்து தடுமாறல.” என்று சொல்லி சிவகாமியை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தினாள்.
அப்போது அந்த வண்டியிலிருந்த மூவருக்கும்  இதேபோல் பத்து வருடங்களுக்கு முன் அவர்கள் நால்வரும் சேர்ந்து பயணம் செய்தது அவர்கள் மனதில் வந்து போனது.
தெஹரதூனில் ஹாஸ்டலில் படித்து கொண்டிருந்த ஸ்மிரிதி, ஒழுங்கீனம் காரணமாகப் பள்ளியிலிருந்து ஸஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாள்.   கார்மேகம் வெளி நாடு சென்றிருந்ததால் ஸ்மிரிதியை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர சிவகாமியின் உதவியை நாடினார் பிரேமா.   மாறனை மனுவின் சினேகிதன் வீட்டில் விட்டு விட்டு ஸ்மிரிதியைத் தில்லிக்கு அழைத்து வர சிவகாமியும், மனுவும் பிரேமாவுடன் சென்றனர்.
அந்த வயதில் அவரவர் குடும்பப் பின்னனிக் காரணமாகச் சட்டப்படிப்பு முடித்து வக்கீலாகப் பயிற்சி எடுத்து கொண்டிருந்த மனுவும், பள்ளியில் பத்தாவது படித்து கொணடிருந்த ஸ்மிரிதியும் உலகத்தை  அவரவர் பார்வையில் பார்த்து கொண்டிருந்தனர்.  
சகல விதமான வசதியுடனும், சுதந்திரத்துடனும் வளர்க்கப்பட்ட இருபத்தியிரண்டு வயது மனு அதுவரை முயன்றும் பார்க்காததை பதினைந்தே வயதில் முழு மூச்சாக அனுபவித்திருந்தாள் ஸ்மிரிதி.  அதன் விளைவாக அவர்கள் இருவர் மனதிலும் ஒருவரை பற்றி மற்றொருவர் உருவகப்படுத்தி வைத்திருந்ததை பத்து வருட இடைவெளிக்குப் பின்னும் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
மௌனமாக இருந்த மனுவிடம் கவனத்தைத் திருப்பிய ஸ்மிரிதி,
“உன்னோட ஆங்கில வக்காபுலரி (vocabulary)  ஊத்திகிச்சு..இப்ப தமிழ் சொல்வளத்தைச் சோதனைச் செய்யலாம்..என்னோட பெயர்ல ஒரேயொரு எழுத்தை மட்டும் மாற்றி எனக்கு பிடிச்ச மாதிரி என் பெயர மாற்றணும்..யோசிக்க எவ்வளவு டயம் வேணுமுனாலும் எடுத்துக்க..ஆனா ஏர்போர்ட் போகறத்துக்குள்ள சொல்லணும்.” என்றாள் ஸ்மிரிதி.
மனுவிடம் அவளின் பேச்சிற்கான எதிரோலி இல்லை.
“வார்த்தை விளையாட்டுக்கு ரெடியா இல்ல தோத்து போயிட்டா பின்னால இருக்கற டீச்சகிட்ட திட்டுவாங்கணுமுனு பயந்துகிட்டு பின்வாங்கறியா வக்கீல்? என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தாள் ஸ்மிரிதி கார்மேகம்.
ஆனால் புறமுதுகு மூடில் மனு இல்லை.  அவள் வாயை மூடும் மூடில் இருந்தான்.
“அம்மா, என் தமிழ இவ டெஸ்ட் செய்யறா.” என்று பின்புறம் திரும்பி சிவகாமியிடம் முறையிட்டவன் அதே சமயத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,”இப்பவே உனக்குப் பிடிச்ச மாதிரி உன் பெயரை மாத்தி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி என் கண்டிஷனக் கேட்டுக்க..கரெக்டா சொல்லிட்டா நாம ஏர்போர்ட் போயி சேர வரைக்கும் உன் திருவாயத் திறக்ககூடாது.” என்றான் மனு வளவன்.
“திறக்கா மாட்டேன்..சொல்லு.” என்று அவன் கண்டிஷனுக்கு உடனே ஒப்புக்கொண்டாள் ஸ்மிரிதி.
“ஒண்ணுயில்ல இரண்டு பேர் உனக்கு பிடிச்ச மாதிரி ஒரேயொரு எழுத்தை மாற்றி..
“ஸ்மிரிதி கார்மேகம், வேகத்தின் மீது நீ கொண்ட மோகத்தினால் இன்று முதல் நீ   “ஸ்மிரிதி கார்மோகம்” இல்லை“ஸ்மிரிதி கார்வேகம்” என்றான் மனு.
“மனு, உன் டீச்சர் பெயர காப்பாத்தின டா.” என்று அவர் செல்வனின் சொல்வளத்தில் புலங்காகிதமடைந்தார் சிவகாமி.
ஸ்மிரிதியின் வாயைப் பூட்டியதில் புவனாவின் வீட்டை சென்றடையும் வரை யாருமே வாயைத் திறக்கவில்லை.  புவனாவின் வீட்டருகே வண்டியை நிறுத்திய ஸ்மிரிதி டிரைவர் ஸீட்டிலிருந்து இறங்கவில்லை. வண்டியிலிருந்து இறங்குமுன் அவளிடம் விடைபெற்று கொண்டனர் பிரேமாவும், சிவகாமியும்.  அவர்கள் இருவரின் பேகைத் தூக்கி கொண்டு அவர்களை புவனாவின் வீட்டு வாசல்வரை கொண்டு விட்டான் மனு.   
நாதனை ஏற்றிக் கொள்வதற்காக மனுவின் ஹோட்டலுக்கு அவர்கள் சென்றபோது அம்மாக்கள் இருவரும் வண்டியில் இல்லாதது அவர்கள் சூழ் நிலையை இலகுவாக்கவில்லை. ஸ்மிரிதியும் மனுவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. விமான ஓட்டியிலிருந்து கரோட்டியாக மாறிய ஸ்மிரிதி, அவளுக்கு வழிகாட்டியாக மனு அவர்கள் இருவருக்கும் துணையாக அவரவர் எண்ண்வொட்டங்கள்.
நாதனையும் அழைத்து கொண்டு அவர்கள் ஏர்போர்ட் செல்லும் வழி முழுவதும் அவள் போனை செக் செய்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  அவர்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது அவன் புது மனைவியுடன் அவர்களுக்கு முன்பே அங்கு காத்திருந்தான் ராம்.  
ராமின் எதிரே காரை நிறுத்திய ஸ்மிரிதி நாதனைப் பார்த்து,”அங்கிள், நீங்க இறங்கிகோங்க..வண்டிய எடுத்துகிட்டு போக ஆள் வந்திருக்கணும்..நான் அவங்கிட்ட ஒப்படைச்சிட்டு வரேன்.” என்று அவள் வாய்ப்பூட்டை உடைத்தாள்.
“நீ நிறைய நேரம் வெயிட் செய்ய முடியாதே.” என்றார் நாதன்.
“ஆள் வந்தாச்சு..போன்ல அந்த மெஸெஜ்தான் பார்த்துகிட்டிருந்தேன்.”
காரிலிருந்து இறங்கிய நாதன், மனு இருவரும் ராமுடன் சேர்ந்து கொண்டனர்.  டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி கண்களால் அவளுக்காகக் காத்திருந்த அந்த ஆளைத் தேடிக் கொண்டிந்தாள்.
மனுவிடம் “வா டா..உள்ள போலாம்.” என்றான் ராம்.
“வெயிட் பண்ணு..ஸ்மிரிதி வரணும்..வண்டிய எடுத்திட்டு போகற ஆள் இங்கதான் எங்கையோ இருக்கான்.” என்றான் மனு. அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காரிலிருந்து இறங்கிய ஸ்மிரிதி அதன் பின்புறமிருந்து வந்த இளைஞனைக் கட்டி அணைத்தாள். அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்தனர் மற்ற நால்வரும்.
“நீ தான் வர போறேனு எனக்கு ஏன் சொல்லல.” என்று அந்த இளைஞனிடம் கேட்டாள் ஸ்மிரிதி.
“எனக்கும் தெரியாது..இன்னிக்கு காலை ஃபிளைட்ல வந்தேன்..இப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு போயிடுவேன்.” என்றான் அவன்.
“கம்..என் அங்கிள அறிமுகப்படுத்தி வைக்கறேன்.” என்று சற்று தொலைவில் நின்றிருந்த நாதன், மனுவை சுட்டிக்காட்டி அவர்களிடம் அவனை அழைத்து சென்றாள் ஸ்மிரிதி.
“அங்கிள்..இவன் என் பிரண்ட் சுசித் ராவோட ஹஸ்பண்ட்..மஞ்சு  நாத்..இவரு என்னோட அங்கிள் தில்லை நாதன், அண்ட் அவரோட ஸன் மனு வளவன்.” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். ராமும் அவன் மனைவியும் அவளுக்கே அறிமுகமில்லாததால் அவர்களை அவள் மஞ்சு நாத்திற்கு அறிமுகப்படுத்தவில்லை. 
நாதன், மனு இருவரையும் பார்த்து கை குவித்து “நமஸ்காரம்” என்றான் மஞ்சு நாத்.  அவனைப் பார்த்தவுடனையே நாதனுக்கு பிடித்துவிட்டது. அவர்கள் இருவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் விடைபெற்று கொண்ட போது, மறுபடியும் அவனை அணைத்து, அவனுடன் ஏதோ பேசியபடி அவன் கார் வரை சென்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியையும், மஞ்சு நாத்தையும் பார்த்து கொண்டிருந்த மனு அவனருகில் நின்று கொண்டிருந்த ராமை மறந்து போனான்.
“டேய்..வாடா. உள்ள போகலாம்.” என்றான் ராம் மறுபடியும்.
உடனே நாதனிடம்,”அப்பா, நீங்க இவங்களோட உள்ள போயிடுங்க..நான் ஸ்மிரிதிய அழைச்சுகிட்டு வரேன்.” என்றான் மனு.
“உன் போன்ல டிகெட் இருக்கா?” என்று நாதன் கேட்க,
“என்கிட்ட இருக்கு…உங்ககிட்ட இருக்கா?” என்று அவரைக் கேட்டான் மனு.
“இருக்கு டா..நீயும் எங்களோடவே வந்திடு..அவளுக்கு டயமாகலாம்.” என்றார் நாதன்.
“நீங்க போங்க..நான் வரேன்.” என்று வலுக்கட்டாயமாக அவரை உள்ளே அனுப்பி வைத்தான் மனு.
மஞ்சு நாத்துடன் நெருங்கி நின்று தலை குனிந்தபடி அவன் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  அப்போது மஞ்சு நாத் அவளை அணைத்து கொண்டிருந்தான். அவ்வபோது அவள் கண்களைத் துடைத்தபடி அவன் சொல்வதற்கு தலையாட்டி கொண்டிருந்தாள்.
சற்று தொலைவிலிருந்து அவர்களைப் பார்த்து கொண்டிருந்த மனு திடீரென்று அவர்கள் அருகே சென்றான்.  அவன் வரவை எதிர்பார்க்காத இருவரும் உடனே சுதாரித்து கொண்டனர்.
“என்ன?” என்று தலையை நிமிர்தாமல் கேட்டாள் ஸ்மிரிதி.
“வா..டயமாச்சு.” என்றான் மனு.
“நீ போ..நான் வந்துகறேன்.” என்று அவளுக்கே கேட்காதக் குரலில் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியை புறக்கணித்துவிட்டு மஞ்சு நாதைப் பார்த்து,”என்ன விஷயம்?” என்று கேட்டான்  மனு.
“மனு..நீ உன் வேலையப் பார்த்துக்க.” என்று  தலை நிமிர்ந்து பதில் சொல்லும் போது பழைய ஸ்மிரிதியாகியிருந்தாள். அவள் சொன்னதைக் காதில் வாங்காமல் அங்கையே நின்று கொண்டிருந்தான் மனு.
ஸ்மிரிதியைகத் தெரிந்திருந்த மஞ்சு நாத்திற்கு மனுவைப் பற்றி தெரியாததால் அதற்கு மேல் அங்கே இருக்காமல் விடைபெற்று கொண்டான்.
மஞ்சு நாத் அங்கிருந்து சென்றவுடன்,”உனக்கு அறிவு இல்லயா? இப்படிதான் நடந்துப்பியா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“இன்னிக்கு யாருக்கு அறிவு, மனேர்ஸ் இரண்டும் காணாமப் போயிடுச்சுன்னு அவங்களுக்கேத் தெரியும்.” என்று பதிலடி கொடுத்தான்.
காரில் அவள் நடந்து கொண்டததை அவன் சுட்டிக் காட்டுகிறான் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி மௌனமானாள்.
மனுவும், ஸ்மிரிதியும் ஏர்போர்ட்டில் நுழைந்தவுடன் மற்ற மூவரையும் சந்தித்தனர்.  அப்போது ராமிடம் அவளை சுய அறிமுகம் செய்து கொண்டாள் ஸ்மிரிதி.
“ஹாய்..நான் ஸ்மிரிதி..புவனா ஆன் ட்டி பிரண்ட் பிரேமாவோட டாட்டர்.” என்றாள்.
“காலைல நான் உங்களை எங்க கல்யாணத்தில பார்த்தேன் ஆனா பேச வாய்ப்பு கிடைக்கல..இவ ஜனனி.” என்று அவனருகில் நின்று கொண்டிருந்த அவன் புது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தான்.
“நான் உன்னை ராமுனு கூப்பிடுவேன்..நீ என்னை ஸ்மிரிதினு கூப்பிடு..அப்பறம் இவ ஜானு..ஒகே வா.” என்று முதல் சந்திப்பிலையே அவர்களை அவள் சினேகிதர்களாக்கினாள் ஸ்மிரிதி.
“பிரண்ட்ஸ்..நீங்க இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க..ஒரு ஃபோடோ எடுத்துக்கறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
புது ஜோடி ஆசையோடு ஃபோடோவிற்கு போஸ் கொடுத்தனர். அதற்குபின் எல்லாரும் ஒரே வரிசையில் அமர்ந்து கொண்டனர். அவளுடைய போனில் பிஸியாக இருந்த ஸ்மிரிதி மற்றவர்களை மறந்து போனாள்.  சில நிமிடங்கள் கழித்து ராம் அருகில் அமர்ந்திருந்த ஜானுவைப் பார்த்து,
“ஒரு நிமிஷம் இங்க வா.” என்று அவளருகே அழைத்தாள்.   
“சொல்லுங்க அக்கா.” என்று ஜனனி அவள் அருகே வந்தாள்.
“அக்காவா?”
“ஆமாம்..நீங்க அப்படிதான் நடந்துகிட்டீங்க.”
“எப்படி?”
“எல்லாருக்கும் அக்காவா.” என்றாள் ஜனனி.

Advertisement