Advertisement

ஸ்மிரிதியின் மனு – 49_1
அவருடைய இளைய மகனின் அடுத்த காண்டத்தைக் கேட்டு தில்லை நாதனின் எதிர்வினை என்னவாக இருக்குமென்ற யோசனையில் மனு மௌனமாக, அவன் மௌனத்தில் அவனுடைய விசாரணை முடிந்து விட்டது என்று நினைத்து கண்களை மூடிக் கொண்ட ஸ்மிரிதியை திடீரென்று இறுக அணைத்து அவள் மேல் படுத்தவனிடம்,”இன்னும் என்ன கேட்கணும் உனக்கு?” என்று கணவனின் அணைப்பு அன்பினால் இல்லை ஆராய்ச்சி என்று உணர்ந்த மனைவி அவனை நேரடியாக கேட்க,
“அவளை நம்ம வீட்டுக்கா அழைச்சுகிட்டு போயிருப்பான்?” என்று சந்தேகமாகக் கேட்டு விசாரணையின் ஆரம்ப புள்ளிக்கே மறுபடியும் வந்தான் மனு. அவன் கேள்வியில் கோபமடையாமல் அவனை ஆதுரத்துடன் அணைத்த ஸ்மிரிதி,
“மனு பேபி..உன் தம்பி அவனுக்குப் பொண்டாட்டியா வர போறவகிட்ட அவதான் அவன் வருங்கலாம்னு சொல்றத்துக்கு அவளோட ஹோட்டல் ரூமுக்கா அவளை அழைச்சுகிட்டு போவான்? அவ வாழ போற வீட்டுக்குதான் அழைச்சுகிட்டு போவான்….அந்த வீட்லே அவன் உபயோகிக்கற அறை, அவன் படுக்கையறைக்கு அழைச்சுகிட்டு போய் அவளைக் கட்டிபிடிச்சு அவன் மனசுலே இருக்கறதைக் கொட்டி..”என்றவளை இடைமறித்து,
“வாட்..அவன் ரூமா?..கீழே இருக்கற ஒரு ரூமை அவன் யூஸ் செய்யறான்..அது அவனோடதுன்னு  டிஸைட் செய்யலே..அவன் பெட் ரூம்னு உளறாதே.” என்றான் அதிர்ச்சியுடன் மனு.
“ஸீரியஸாதான்  சொல்றேன் பேபி..உளறலே..அவன் தூங்கற ரூம் அவன் பெட் ரூம்தானே..அதான் அப்படி சொன்னேன்..அவங்களுக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை அவங்க இரண்டு பேரும் சரியா யூஸ் செய்துப்பாங்க..உனக்கு நான் சொல்றதுலே நம்பிக்கையில்லைன்னா மாறனுக்கு ஃபோன் செய்..சும்மா என்னையே விடிய விடிய விசாரிச்சிகிட்டு இருப்பியா?” என்று அன்பாக ஆரம்பித்து கடுப்பாக முடித்தாள் ஸ்மிரிதி.
இனி ஸ்மிரிதி அவனுடைய விசாரணைக்கு ஆதரவு அளிக்க மாட்டாள் என்றுணர்ந்த மனு,
“இப்பவே நான் அவனுக்கு ஃபோன் போடறேன்..நீ மெஹக்கு ஃபோன் போடு..இரண்டு பேரும் அவங்க அவங்க இடத்திலே இருந்தாங்க என்னை இந்த மாதிரி நீ சீண்டி, திண்டாட விடறத்துக்குத் தண்டனையா இன்னைக்கு நைட் முழுக்க நான் உன்னைத் தூங்க விட மாட்டேன் ஸ்மிரிதி.” என்று சபதம் செய்தான்.
“சரி பேபி..அவங்க இரண்டு பேரும் நம்ம வீட்லே, மாறன் ரூம்லே ஒண்ணா இருந்தாங்கண்ணா உனக்கும் அதே தண்டனைதான்.. தூக்கத்துக்கு தவிக்கற உன்னை நான் நைட் முழுக்க தூங்க விட மாட்டேன்.” என்று சொல்லி கண் சிமிட்டினாள் ஸ்மிரிதி. அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த மனு,
“முதல்லே மெஹக்கு ஃபோன் போடு.” என்றான்.
“அவ சில சமயம் என் ஃபோன் அழைப்பை எடுக்க மாட்டா..இருந்தாலும் மாறன் அவன் ஃபோனை எடுக்கற வரை அவளுக்கு விடாம ஃபோன் செய்யறேன்.” என்று சுறுசுறுப்பாக அவள் அலைபேசியில் பிஸியானாள் ஸ்மிரிதி.
“நமக்கு ரூம் சாய்ஸெல்லாம் இல்லை..வீடு அப்பா, அம்மா பெயர்லே இருக்கு..மனுவும் பணம் கொடுத்திருக்கான்..நான் இந்த வீட்டுக்கு இப்ப காவல்காரன் மட்டும்தான்.” என்றான் மாறன்.
“நோ பிராப்ளம்..வீடு யார் பெயர்லே வேணும்னாலும் இருக்கட்டும்.. ..நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இந்த ஒரு ரூமை மட்டும் விலைக்கு வாங்கிடு…அதுக்கு என்கிட்ட நீ காசு கேட்கக்கூடாது..நான் கடன்லே இருக்கேன்..நாலு, அஞ்சு வருஷம் தேவைப்படும் அதையெல்லாம் சரி செய்ய.” என்றாள் மெஹக்.
“நீ அரண்மனையா கேட்கற? இந்த ஒரு அறைதானே ..டன்..வாங்கிடலாம்.” என்று வாக்குறுதி அளித்தான் மாறன்.
“ஆனா என் ஆயுசுலே சரி செய்ய முடியாத கடன் ஒண்ணு இருக்கு.” என்று சொன்ன போது மெஹக்கின் குரல் நடுங்கியது.  
“அப்படி நீ யார்கிட்ட ஆயுசுக்கும் கடன் பட்டிருக்க? ஏன் சரி செய்ய முடியாது?” என்று யோசனையுடன் கேட்டான் மாறன்.
“எங்கப்பாகிட்ட”
“அப்பாகிட்ட கடனா?” என்று குழம்பி போனான்.
“இப்ப என்னோட நலத்திற்கு அவரும், அவர் குடும்பமும்தான் பொறுப்பு..அவரு உன்னை என் கணவனா ஏத்துப்பாருன்னு நினைக்கறேன்..இல்லைன்னா அவரு மாப்பிள்ளையைதான் உனக்கு ரெகமெண்ட் செய்ய, கியாரண்டி கொடுக்க சொல்லணும்.” என்று மாறனை மேலும் குழப்பினாள் மெஹக்.
“மாப்பிள்ளையா? உன் தங்கையோட கணவனா? அவன் யாரு ரெகமண்ட் செய்ய? எனக்குக் கியாரண்டி கொடுக்க?” என்று குரலை உயர்த்தினான் மாறன்.
“அவன் இல்லை.. என்னோட குடும்பத்தைப் பற்றி சொல்லலே….இந்த மாப்பிள்ளை வேற..அவர்தான் என் குடும்பத்தோட பொய்யை எனக்குப் புரிய வைக்க பொய்யா எனக்கு ஒரு கல்யாணமும், கணவனும் ஸெட் செய்தாரு…அந்தப் பொய் நிஜமாகப் போகுது அண்ட் அவர் எதிர்பார்க்காத அதே சமயம் அவர் விரும்பின மாதிரி ஒரு கணவன் எனக்குக் கிடைக்க போறான்.” என்று புதிராகவேப் பேசினாள் மெஹக்.
யார் அவன்?” என்று மாறன் மறுபடியும் கேட்ட போது அவன் ஃபோன் அழைத்தது.  அழைப்பு மனுவிடமிருந்து.
இவன் எதுக்கு இப்ப ஃபோன் செய்யறான்? இவ்வளவு லேட்டா? என்று யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்கவில்லை.  அவன் ஃபோன் அடித்து ஓய்ந்த போது மெஹக்கின் ஃபோன் சத்தம் செய்ய ஆரம்பித்தது.  அழைத்தது ஸ்மிரிதி.  அவளும் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்தாள்.  அதன்பின் இருவர் ஃபோனும் விடாமல் ஒலித்து அந்த இரவின் அமைதியை கெடுத்து அவர்கள் இருவருக்கும் கிடைத்த அந்த அரிய வாய்ப்பை உடைக்கும் தடையாக அவதாரமெடுத்தது. அந்தத் திடீர் தடையின் காரணத்தைப்  புரிந்து கொண்ட மெஹக்,
“நம்மைப் பற்றி ஸ்மிரிதிக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு..அதான் விடாம ஃபோன் செய்யறா..நான் எடுக்காட்டாலும் அவ சந்தேகப்பட மாட்டா..சில சமயம் நான் அப்படிதான்னு விட்டிடுவா.” என்று சொன்னவள், மாறனின் ஃபோனை அவனிடம் கொடுத்து,”நீ மனுகிட்ட நல்லபடியா பேசு..அவந்தான் உனக்கு கியாரண்டி கொடுக்கணும், ரெக்மண்ட் செய்யணும்..எங்கப்பாவோட மாப்பிள்ளை அவந்தான்.” என்று அதிர்ச்சி கொடுத்தாள் மெஹக்.
“கார்மேகம் அங்கிள் உனக்கு அப்பாவா? எப்படி?” 
“சொல்றேன்..மனுகிட்ட ஒழுங்காப் பேசு..அவன்கிட்ட மட்டும் பேசு..ஸ்மிரிதிகிட்ட பேசாத..ஒரு வார்த்தைலே மொத்தத்தையும் வாங்கிடுவா..நம்ம பக்கத்திலே இருந்து பார்க்கற மாதிரி எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவா.”
“எல்லாம்னா?” என்று முட்டாளாக கேட்டான் மாறன்.
“ஹாங்….ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸை விட நான் ஃபாஸ்டா இருந்திருக்கேண்ணு…நான் இங்கே உன் வீட்டிலே..உன் ரூம்லே.. உன் படுக்கைலே..உன் பக்கத்திலே படுத்துக்கிட்டு இருக்கேன்னு.”
“ரியலி?”
“நான் சொல்றதை செய்..கேள்வி கேட்காத..நீ மட்டும் இப்ப ஃபோன் எடுக்கலே நம்ம வீட்டுக்கு ஆள் அனுப்பிடுவா..கதவு வேற கிடையாது..நாம இரண்டு பேரும் காலி..முதல்லே மனுவோட ஃபோனை எடு.” என்று படபடப்புடன் பேசி வருங்கால கலெக்டரைக் கலவரப்படுத்தினாள் அவன் வருங்கால துணைவி. 
மெஹக்கிற்கு உதவி செய்ய அவசர அவசரமாக அவன் போனது போல் அவர்களைச் சந்திக்க யாரேனும் வரக்கூடுமோயென்று எழுந்த ஐயம் அதே நொடியில் மடிந்து அது உண்மையாகக்கூடும் என்றுணர்ந்த மாறன்,
மனுவின் அழைப்பை ஏற்று,“சொல்லு டா.” என்றான்.
“எங்க டா இருக்க?” என்று சாதாரணமாக கேட்டான் வக்கீல்.  அந்த இரவு வேளையில் அவன் வீட்டில்தான் இருக்கக்கூடும் என்று தெரிந்தும் எதற்கு அந்தக் கேள்வி என்று புரிந்து கொண்டவன் மிக கவனமாகப் பதில் சொல்ல விழைந்த போது ஒரு வார்த்தையில் அவன் கவனம் சிதைந்து,
“இந்த நேரத்திலே எங்க டா இருப்பேன்..நம்ம வீட்டிலே..என் ரூம்லே தான்.” என்று அந்த அறையுடன் புதுசாக ஏற்பட்டிருந்த உரிமையை அவனை அறியாமல் வெளிப்படுத்தினான்.
“உன் ரூமா? எந்த ரூம்? எப்பலேர்ந்து? என்று கேள்வி கேட்ட மனுவைப் பார்த்து சத்தம் செய்யாமல் சிரித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
மனுவின் கேள்விகளில் சுதாரித்து கொண்ட மாறன்,”டேய்..இங்கே வந்ததுலேர்ந்து நான் கீழே இருக்கற ஒரு ரூம்லே தங்கியிருக்கேன்..அதான் அப்படி சொன்னேன்.” 
மாறனின் ஒரு வார்த்தைப் பிழையைக் கண்டு பிடித்த பின்னும் விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என்று புரியாமல் திண்டாடிய மனு,
“கேட் எப்படி இருக்கு? மௌண்ட் பண்ணிட்டாங்களா?” என்று பேச்சை மாற்றினான்.
“கொஞ்சம் ஸைஸ் பெரிசாயிடுச்சு..மத்தியானமே வைச்சுட்டாங்க ஆனா வேலை முடிய சாயந்திரமாயிடுச்சு டா..உனக்குத் தெரியாதா?”
“நீ யார்கிட்டையாவது சொன்னேயாடா?”
“மறந்துட்டேன்.”
“புவனா ஆன் ட்டி வீட்டுக்குப் போனேயா?”
“போனேன்.” என்று இந்தமுறை பிழை செய்ய வாய்ப்பு கொடுக்காமல் ஒரே ஒரு வார்த்தையோடு நிறுத்தி கொண்டு பெரும் பிழை செய்தான் மாறன்.
ஒரே ஒரு வார்த்தையில் பதில் கொடுத்த தம்பியிடம் மெஹக்கைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று அண்ணன் யோசித்து கொண்டிருக்கும் போது ஸ்பீக்கரில் அவர்கள் உரையாடலைக் கேட்டு கொண்டிருந்த அவன் அண்ணி உஷாரானாள். மனுவிடமிருந்து ஃபோனைப் பறித்த ஸ்மிரிதி,
“டேய்..உன் பக்கத்திலே இருக்கறவகிட்ட ஃபோனைக் கொடு.” என்று எந்தவிதமான தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல், மாறன் சுதாரித்துக் கொள்ள வாய்ப்பு கொடுக்காமல், அவனை யோசிக்க விடமால், கைதேர்ந்த அரசியல்வாதி போல் வருங்கால அதிகாரியை அதிகாரம் செய்ய, அவள் கட்டளைக்குக் கண நேரத்தில் அடிபணிந்து, மெஹக் நடத்திய பாடம், செய்த எச்சரிக்கை இரண்டையும் காற்றில் பறக்கவிட்டு,”ஸ்மிரிதி..உன்கிட்ட பேசணும்னு சொல்றா.” என்று மெஹக் கையில் ஃபோனைத் திணித்தான் மாறன்.
“உன்னை.” என்று முணுமுணுத்து, எதையும் மறைக்க விரும்பாதவனை மறைக்க துண்டிய அவள் மடத்தனத்தை நினைத்து அவள் தலையில் அடித்து கொண்ட மெஹக் வேறு வழியில்லாமல்,”சொல்லு..ஸ்மிரிதி.” என்று அடக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“நீதான் சொல்லணும்.”
அவள் எதைச் சொல்லணும் என்கிறாள் என்பதை புரிந்து கொண்ட மெஹக்,
“நான் சொல்லிட்டேன்.”
“அவன்?”
“அவனும் சொல்லிட்டான்.”
“யார் முதல்லே சொன்னா?”
“நான் தான்..ஃபாஸ்ட் அண்ட் ஃபர்ஸ்ட்..அவன் ஸ்லோ..புரிஞ்சுக்கவே இல்லை.” என்று மாறன் அங்கே இல்லாதது போல் அவனைப் பற்றி விமர்சித்து கொண்டிருந்தாள் மெஹக்.
“அப்பறம்?”
“அதைப் பற்றி தான் இப்ப பேசிகிட்டு இருந்தோம்.”
“எனக்கு எப்ப சொல்லலாம்னு இருந்த?”
“அதைப் பற்றி நாங்க இன்னும் பேசலே.”
“சரி..அவன்கிட்ட கேளு அவங்க அண்ணன், அவன் கூட்டாளிக்கு எப்ப சொல்லறதா இருந்தான்னு?” என்று முகத்தில் அடிப்பது போல் கேட்டாள் ஸ்மிரிதி.  அதற்குள் மனுவே அவளை இடைமறித்து,
“மாறன், வாட் த ஹெல்..?” என்று ஆத்திரப்படக்கூடாது என்று நினைத்தவன் ஆத்திரப்பட,
“சொல்றேன்..வீடியோ கால்லே..டூ மினிட்ஸ்.” என்று சொல்லி ஃபோன் அழைப்பைத் துண்டித்து, எழுந்து அமர்ந்து கொண்ட மாறன்,அவனருகே படுத்திருந்த மெஹக்கிடம்,”வீடியோ கால் செய்ய போறேன்…சீக்கிரமா டாப் மட்டும் போட்டுகிட்டு வா.” என்றான்.  உடனே எழுந்து சென்று அவள் டாப்பை அணிந்து கொண்டு அவனருகே அவளும் அமர்ந்து கொள்ள, மனுவிற்கு வீடியோ அழைப்பு விடுத்தான்.
மாறனின் வீடியோ அழைப்பை ஏற்று கொண்ட மனுவின் கண்களில் முதலில் பட்டது அவன் தம்பியும் அந்த நேரத்தில், அவர்கள் வீட்டில் அவனருகே அமைதியாக அமர்ந்திருந்த மெஹக்கும்தான். அவர்களின் அந்த நெருக்கமே அவன் மனதிலிருந்த சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்குச் சமாதி கட்டியது.
எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல் அவன் மனதிலிருப்பதை நேரடியாக மனுவிடம் வெளிட்டான் மாறன்.“மெஹக் சொல்றா கார்மேகம் அங்கிள் தான் அவளுக்குப் பொறுப்புண்ணு..அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கணும்னு நினைக்கறேன்..உடனே இல்லே..அடுத்த சில வருஷத்துக்குள்ள.” என்றான்.
அதற்கு சற்று முன்பு வரை ஸ்மிரிதியுடன் தம்பிக்காக வாதாடிக் கொண்டிருந்த வக்கீல், அமைதியாக,”நீ நினைக்கறது போலே இது உன் முடிவு மட்டுமில்லை..அவளோட கமிட்மெண்ட்ஸ் எல்லாம் அவ ஆனர் செய்யணும்….இந்த மாதிரி ஒரு விஷயம்னு வெளியே தெரிஞ்சா அவளுக்கு வீண் பிரச்சனையாகிடும்..அவளுக்கும் அடுத்த சில வருஷம் ரொம்ப முக்கியம்..அதுக்கு அப்பறம் தான் இதைப் பற்றி நாம பேச முடியும்..கார்மேகம் அங்கிள் ஒத்துகிட்டாலும், அம்மா, அப்பா ஒத்துக்கணுமே..இல்லை அவங்களோட சம்மதம் தேவையில்லைன்னு நினைக்கறேயா? என்று மெஹக்குடனான அவன் எதிர்காலம் கேள்விக்குறிகளாலானது என்று விளக்கினான்.
“அவங்க சம்மதமில்லாம எதையும் செய்ய மாட்டேன்..நானே அம்மா, அப்பாகிட்ட சொல்றேன்..அடுத்தமுறை தில்லி வரும்போது மெஹக்கையும் அழைச்சுகிட்டு வந்து அறிமுகப்படுத்தி வைக்கறேன்.” என்றான் மாறன்.
அதை சொன்ன மாறனும், கேட்டுக் கொண்டிருந்த மனுவும் அறிந்திருக்கவில்லை அப்படியொரு நிகழ்வு ஏற்பட போவதில்லையென்று.
“நீ டக், டக்குணு முடிவெடுக்கலாம் ஆனா அம்மாக்கு அப்படி முடியாது..அவங்க சம்மதம் உடனே கிடைக்காது..இப்ப அவங்க இருக்கற மன நிலைலே அவங்களை கொஞ்சம், கொஞ்சமாதான் சம்மதிக்க வைக்க முடியும்.” என்றான் மனு.
“உன் பொண்டாட்டிகிட்ட அந்த வேலையை ஒப்படைக்கலாம்னு நினைக்கறேன்..மாமியாரை அவங்க மூத்த மருமகள் சம்மதிக்க வைக்கட்டும்.” என்று அவனை மெஹக்கிடம்  மாட்டிவிட்ட ஸ்மிரிதியிடம் வம்பு செய்தான் மாறன். அதைக் கேட்டு,
“ஏன் எனக்கு வேற வேலையில்லையா….நீ மெஹக்கை அறிமுகபடுத்தி வைக்கும் போது நான் பக்கத்திலையே இருக்க போகறதில்லே…நீயாச்சு. ஆன் ட்டியாச்சு..முட்டிக்கோங்க….கட்டிக்கோங்க..நன் ஆஃப் மை பிஸ்னஸ்.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை மெஹக்கை அவன் வருங்கால மனைவியென்று சிவகாமிக்கும், தில்லை நாதனிற்கும் மாறன் அறிமுகப்படுத்தி வைக்கும் போது உண்மையாகவே அவளும், மனுவும் அவனருகில் இருக்க போவதில்லையென்று. 
“நீ அந்த மாதிரி உன் கடமையைப் புறக்கணிக்க முடியாது ஸ்மிரிதி.”
“கடமையா? எனக்கா?” என்று எரிச்சல்பட்டாள் ஸ்மிரிதி.
“உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உன் புருஷன் சொல்லிட்டாரு மா..நம்ம வீட்லே எல்லா விஷயத்திலேயும் நீ தலையிடலாம்னு..என்னோட விஷயமா இருந்தாலும்..ஏன்னா அது நம்ம குடும்ப விஷயமில்லே.” என்று வக்கீலை அவன் மனைவியிடம் போட்டுக் கொடுத்தான் மாறன்.
“நீ அந்த மாதிரி முட்டாள்தனமா சொன்னேயா?” என்று இப்போது ஸ்மிரிதி மனுவிடம் கோபப்பட,
“மாறன், அந்த மாதிரியாடா சொன்னேன்..ஸ்மிரிதி எல்லாத்துலேயும் தலையிடுவான்னு நீ குறை சொன்ன..நான் எல்லாம் நம்ம குடும்ப விஷயம்னு உன்னைக் கரெக்ட் பண்ணினேன்.” என்று தெளிவுப்படுத்தினான் மனு.
“நானும் அதையேதான் டா இப்ப சொன்னேன்.” என்று வலியுறுத்தினான் மாறன்.

Advertisement