Advertisement

ஸ்மிரிதியின் மனு – 48
சற்றுமுன் கேள்விபட்ட சிக்கலான விஷயத்தின் பாதிப்பு எதுவுமில்லாமல் ஸ்மிரிதிக்குப் பதிலும் சொல்லாமல் அவன் ஃபோனைப் படுக்கை மீது விட்டெறிந்து விட்டு பாத் ரூமிற்கு சென்றான் மனு.
“எப்ப சொன்ன? வீட்டுக்குள்ள வந்தவுடனே கதவு இல்லையான்னு கேட்ட.. ரூமுக்குள்ள வந்தவுடனே பாத் ரூமுக்கும் கதவு இல்லையான்னு அதிர்ச்சியான..அதுக்கு அப்பறம் நீ..” என்று யோசித்தவனின் பார்வை அவளிடமிருந்து அவள் டிரெஸ் இருந்த இடத்திற்குப் பயணம் செய்தது.  
அதைக் கண்டு கொண்ட மெஹக் ஒருவிதமான எதிர்ப்பார்ப்புடன் மாறனைப் பார்க்க அவனோ அவள் சொன்னது இப்போது புரிந்திருந்தாலும் அதை எப்படி அவளுக்குப் புரிய வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.  அவன் தடுமாற்றத்தைப் போக்க அவள் மனதைத் திறந்தாள் மெஹக்.
“ஸ்மிரிதியோட ரிசெப்ஷனுக்கு அப்பறம் என் மனசு படபடன்னு பயங்கரமா சத்தம் போட்டுது.. எனக்கேத் தெரியாம என் ஹார்ட் பீட்ஸ் டிரம் பீட்ஸ்ஸா மாறியிருந்திச்சு..ஆனா அதுக்கு அப்பறம் அந்த மாற்றத்தைப் பற்றி யோசிக்க முடியாம என் வாழ்க்கைலே நிறைய நடந்திடுச்சு..
போனமுறை உன்னை இங்கே ஹோட்டல் ரூம்லே பார்த்தவுடனே என் மனசு பூரா திரும்பவும் அதே மாதிரி சத்தம்..டிரம் பீட்ஸ்.. ஆனா என்னைப் பார்த்து உன்கிட்ட எந்த மாற்றமும் வரலே.. அன்னைக்கு நீ ஏதோ பேட் மூட்லே இருந்த..சாதாரணமாக்கூட உன்னாலே என்கூட பேச முடியலே..அப்பறம் அந்த ஆளுங்களோட தகராறு பண்ணின..என்னைப் பற்றி தப்பா பேசின..
என்னைப் பற்றி யார் தப்பா பேசினாலும், நினைச்சாலும் இதுவரை நான் கவலைப்பட்டதில்லை.. ஆனா நீ எப்படி என்னைத் தப்பா பேசலாம், நினைக்கலாம்னு எனக்கு உன்மேலே ஒரே கோவம், ஒருவிதமான ஏமாற்றம்..நீ நடந்துகிட்டதை ஸ்மிரிதிகிட்ட சொன்ன போது உனக்கு ஏதோ பிரச்சனை அதனாலேதான் அப்படி நடந்துகிட்டேன்னு சொன்னா..
உன் பிரச்சனை என்னென்னு கேட்க போய் என் மனசுலே நீ இருக்கேன்னு எனக்கும், அவளுக்கும் புரிஞ்சிடுச்சு..அதுக்கு என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியலே ..உன்னை மாதிரி எனக்கும் தயக்கம்..
என் எதிர்பார்ப்புக்கு நீ இல்லைன்னு ஸ்மிரிதி சொன்னா..உண்மைதான்..உன்னோட எதிர்பார்ப்பு என்னென்னு அவளுக்குத் தெரியலே.. அதை நான் உன்கிட்டதானே கேட்கமுடியும்..அதான் உன்னைத் தெரிஞ்சுக்க ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்னு உன்னோட ஃபோன் நம்பரை அவகிட்ட கேட்டேன்..அவ இன்னும் அதைக் கொடுக்கலே..” என்று பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்து,
“அப்ப ஸ்மிரிதிக்கு இது தெரியுமா?” என்று கேட்டான் மாறன்.
“தெரியும்..தெரிஞ்ச பிறகு  நாம இரண்டு பேரும் அவளுக்கு முக்கியம்னு என்கிட்ட சொன்னா..அதுக்கு நான் இதுலே எதுவும் தப்பா போயிடுச்சுன்னா யாரையும் தப்பு சொல்ல மாட்டேன்னு சொன்னேன்…அப்பறம் நாங்க இதைப் பற்றி பேசிக்கலே..உன் நம்பருக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்..
இந்தமுறை இங்கே வரும்போது எப்படியாவது உன்னை சந்திச்சு பேசணும்னு  நினைச்சுகிட்டிருந்தேன்.. இன்னைக்கு அது தானாவே நடந்திடுச்சு..எதிர்பார்க்கவேயில்லை..ரொம்ப ஹப்பியா இருக்கேன்.” என்று அவர்கள் சந்திப்பு ஏற்படுத்திய சந்தோஷத்தை வெளியிட்டாள் மெஹக்.
“நோ..இந்த சந்திப்பு தானா நடக்கலே..திட்டமிட்டும் நடக்கலே..நீ இன்னைக்கு ராம் வீட்டுக்கு வர போறேன்னு எனக்குத் தெரியவே தெரியாது..உன்னை அங்கே பார்த்த பிறகு எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பலே.” என்றான் மாறன்.
அப்போது அவனின் ஃபோன் சத்தம் செய்ய அதில் வந்திருந்த மெஸேஜைப் படித்தவன்,”ராம் உன்னை இறக்கிவிட்டாசான்னு கேட்கறான்.” என்றான் மெஹக்கிடம்.
“இறக்கிவிட்டாச்சுன்னு சொல்லிடு..எங்கேன்னு எழுத வேணாம்..நான் பாத் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்.” என்று சொல்லி வாஷ் ரூம் சென்றாள் மெஹக். அவள் சொன்னபடி ராமிற்கு ஒரு மெஸெஜை அனுப்பி வைத்தான் மாறன்.
அவள் சொன்ன செய்தியைக் கேட்ட சுவடேயில்லாமல் சாதாரணமாகப் பாத் ரூமிற்குள் சென்றவனை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  பத்து நிமிடங்கள் கழித்து அவனின் அன்றாட இரவு வேலைகளை முடித்து கொண்டு அவள் அருகில் வந்து படுத்தவனிடம் அவன் ஃபோனை நீட்டி,
”விசாரி..இப்ப.” என்று கட்டளையிட்டாள்.
ஃபோனை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டவன் அவள் புறம் திரும்பி,”சொல்லு.” என்றான்.
“என்னத்த சொல்ல? உன்னை விசாரிக்க சொல்றேன்.”
“அதைதான் செய்யறேன்.”
“என்ன செய்யற?
“விசாரிக்கறேன்.”
“யாரை?”
“உன்னைதான்.”
“என்னையா? எதுக்கு?”
“ஸ்மிரிதி..மாறன் என் தம்பி..” என்று நிதானாமாக ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தவன்..”என் தம்பியைப் பற்றி என்கிட்ட சொல்லாம எத்தனை நாளா இதை உன்கிட்டையே வைச்சிருந்த? வைச்சுகிறதா இருந்த?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து அவனின் கோவத்தை ஆவேசத்துடன் வெளியேற்றினான்.
மனு அனலாக அவள் மேல் அடிக்க,“நான் திட்டமிட்டு எதுவும் செய்யலே….இதை உள்வாங்கிக்க எனக்கும் கொஞ்ச டயம் தேவைப்பட்டிச்சு.” என்று அவளை சுட்டெரித்த வெப்பத்தைக் குளிச்சியாக கையாண்டாள் ஸ்மிரிதி.
“எவ்வளவு நாளா?”
“நம்ம கல்யாண ரிசெப்ஷன்லே ஆரம்பிச்சிருக்கு.”
“மை காட்..ஸ்மிரிதி..இன்னைவரை நீயா என்கிட்ட இதை சொல்ல முயற்சிக்கலே..அண்ட் இது தெரியாம நான் மெஹக்கோட வக்கீலா பொறுப்பு எடுத்துகிட்டு இருக்கேன்..ஹவ் கென் யு பி லைக் திஸ்?..
நவ் ஐ அண்டர்ஸ்டாண்ட்..இட்ஸ் ஆல் இன் தி ஃபெமலி…அதனாலேதான் மெஹக்கிற்கு உதவி செய்ய மாறனோட அண்ணன் நான் மும்பைக்குப் போனேன்..ரைட்? என்று அண்ணன் என்ற வார்த்தையை ஆக்ரோஷத்துடன் சொன்ன மனுவின் குற்றச்சாட்டில் கோவமடைந்த ஸ்மிரிதி,
“நோ..யு ஆர் ராங்..உன் தம்பிக்கிட்ட கேட்க வேண்டியது எல்லாம் என்கிட்ட எதுக்கு கேட்கற? நீயும், அவனும்தானே கூட்டாளிங்க..உன்னை உன் கூட்டாளி முட்டாளாக்கியிருக்கான்..உன் மனைவி இல்லை.” என்று பதில் சொல்லிவிட்டு சுவற்றைப் பார்த்து படுத்து கொண்டாள்.
மாறன், மெஹக் இருவரால் அவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ள விரும்பாத வக்கீல், ஸ்மிரிதியை அவன் புறம் திருப்பி,”என்ன விசாரிக்க சொல்ற? இதையெல்லாம் எப்படி விசாரிக்க முடியும்? அவங்க இரண்டு பேரும் அடல்ட்ஸ்..” என்றவனை இடைமறித்து,
“அப்ப அவங்களை அப்படி நடத்து..அதட்ட, ஆத்திரப்பட முடியாது, கூடாது..முதல்லே அவன் எங்கேண்ணு விசாரி..நம்ம வீட்டுக்குத்தான் அவளைக் கூட்டிக்கிட்டு போயிருக்கணும்..அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரணும்னு நான் நினைச்சேன் ஆனா இப்ப அதுவா அமைஞ்சிடுச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு  மனுவிற்குத் தலை வலித்தது அதை ஒப்புக் கொள்ள அவனின் மனம் மறுத்தது.
பாத் ரூமிலிருந்து திரும்பிய மெஹக் படுக்கை விரிப்பின் மீது அமர்ந்திருந்த மாறன் அருகில் வந்து படுத்து கொண்டு, அவன் புறம் திரும்பி, 
“இந்த ரூமுள்ள வந்தவுடனேயே வித்தியாசமான உணர்வுகள்..எண்ணங்கள்.” என்று அவளை, அவள் மனதை அவனுக்குப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
“ஸ்மிரிதி..நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறேயா? அவன் இதுவரை எந்தப் பொண்ணையும் அந்த மாதிரி எண்ணத்தோட நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்ததேயில்லே.” என்றான் மனு.
“எந்த மாதிரி எண்ணத்தோட?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“இந்த மாதிரி எண்ணங்களோட, உணர்வுகளோட நான் இதுவரை யார் வீட்டுக்கும் போனதேயில்லே.” என்றாள் மெஹக்.
“எந்த மாதிரி உணர்வுகள், எண்ணங்கள்?” என்று கேட்டான் மாறன்.
“வருங்கால வாழ்க்கைத் துணையா அவன் யாரையும் நினைக்கலே, யார்கிட்டேயும் பழகலே.” என்றான் மனு.
“வருங்கால வாழ்க்கைத் துணையா நான் யாரையும் நினைச்சதில்லே, அந்த மாதிரி யாரோடையும் பழகினதுயில்லே.” என்றாள் மெஹக்.
“நானும் யாரையும் அப்படி நினைச்சது இல்லை..அதனாலேதான் உன்னை நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தேன்..நான் கூப்பிட்டா நீ வருவேயா மாட்டேயானெல்லாம் யோசிக்கலே..உன்னை இங்கே கூட்டிக்கிட்டு வரணும்னு முடிவு செய்தவுடனே அதை செயல்படுத்திட்டேன்..அதுதான் என் இயல்புன்னு கொஞ்ச நாள் முன்னாடிதான் கண்டு பிடிச்சேன்.” என்றான் மாறன்.
“எல்லாத்துக்கும் முதல் முறைன்னு ஒண்ணு இருக்கு மனு.” என்றாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு முதல் முறையா இருக்கலாம்..அவளுக்கு? கம் ஆன்.. அவளோட  இயல்பை இழந்தவளுக்கு எந்த உணர்வு உண்மை? எது பொய்ன்னு புரியாது..அவ அப்படி இருக்கறத்துக்குக் காரணம் அவளோட தொழில்.” என்றான் மனு.
“செயற்கை சூழ் நிலைலே இயற்கையை இயல்பா கொண்டு வர முயற்சி செய்து செய்து என்னோட இயல்பை நான் இழந்திட்டேன்….ஆனா இன்னைக்கு முதல்முறையா அதை இழக்கலேன்னு தோணுது..இங்கே, இப்ப, உன் பக்கத்திலே இயற்கையா, இயல்பா இருக்கேன்.” என்றாள் மெஹக்.
“என் குடும்பம் என் தேவைகளைப் பார்த்துகிட்டதாலே, என் முடிவுகளை அவங்க எடுத்ததாலே என்னோட சூழ் நிலைகளைப் பற்றி நான் இதுவரை யோசிச்சதேயில்லை…இப்ப  நானே முடிவெடுக்க வேண்டிய சூழ் நிலைகள்ளே என் இயல்பை மாற்றிக்க விரும்பலே..அது போக்குலே போறேன்..தப்பாயிடுச்சுன்னா திருத்திப்பேன்..சரியா இருந்திச்சுன்னு கண்டுக்க மாட்டேன்.” என்றான் மாறன்.
“எப்படி அவனுக்கு முதல் முறைன்னு சொல்ற..வீட்டுக்குத் தெரியாம அவனுக்கு வேற பழக்கம் இருந்த போது இந்த மாதிரி உறவும் இருந்திருக்கலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“யெஸ் அவனோட அந்தப் பழக்கத்தை வீட்டுக்குத் தெரியப்படுத்தலே….ஆனா அன்னைக்கு நம்ம எல்லார் முன்னாடி தான் குடிச்சான்..மறைக்கலே..மறைவுலே போய் குடிக்கலே..அதனாலே அவனுக்கு யாராவது ஸ்பெஷலா இருந்திருந்தா கண்டிப்பா வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்திருப்பான் இல்லை நம்ம கல்யாணத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்..இல்லைன்னா அம்மாகிட்டேயாவது சொல்லியிருப்பான்..அவன் மூடனோ, கோழையோ இல்லை ஸ்மிரிதி.” என்றான் மனு.
“இன்னைக்கு சாயந்திரம் பூரா நீ என்கிட்ட ஒரு வார்த்தைப் பேசலே..நாம இரண்டு பேரும் பேசிக்காமயே நம்ம சந்திப்பு முடிய போகுதுண்ணு நான் நினைச்சுகிட்டு இருந்தப்பதான் நீ என்னை புறப்படுன்னு சொன்னே..உன்னோட அந்த துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கு..என்னாலே இந்த மாதிரி துணிவை நடிப்புலேதான் காட்ட முடியும்..நிஜத்திலே முடியாது.” என்று புன்னகையுடன் சொன்னாள் மெஹக்.
“என் வீட்டுக்கு என்னோட பூஸ் பழக்கம் தெரியாதுண்ணு தெரிஞ்சும் அவங்க முன்னாடியே தைரியமா குடிச்சது..அன்னைக்கு உன்னை ஒரு பாட்டுக்கு ஆட வைப்பேன்னு சொன்ன அந்த ப்ரொடியூஸரை வெளியே போடான்னு தைரியமா சொன்னது…உன்னை இன்னைக்கு இங்கே அழைச்சுகிட்டு வந்தது..
எதையும் நேரடியா சொல்றது, தைரியமா செய்யறது தான் நான்…உன்னாலே நிஜத்தில்லே ஏன் துணிச்சலா இருக்க முடியாது? என்ன பயம்?” என்று மெஹக்கை நேரடியாக கேட்டான் மாறன்.
“அப்ப உன் தைரியசாலி தம்பிகிட்ட இப்ப மெஹக்கோட அவன் என்ன செய்துகிட்டு இருக்கான்னு நீயே நேரடியா, தைரியமா கேளு.” என்றாள் ஸ்மிரிதி.
“பதினெட்டு வயசுலேர்ந்து சுயமா சம்பாதிச்சு அவ குடும்பத்தை தாங்கி பிடிச்சுகிட்டிருந்தா மெஹக்.. இவன் சுயமா சம்பாத்திச்ச போதும் இருபத்தி அஞ்சு வயசுவரை இவனை நாங்க தான் தாங்கிப் பிடிச்சுகிட்டு இருக்கோம்..
குடும்பத்தோட கடன்களை, கடமைகளைச் சுமந்தவளுக்கும், குடும்பத்தோட கடைகுட்டியா சுகமா சுற்றி வர்றவனுக்கும் என்ன பொருத்தம்? எங்கே பொருந்தும்னு நான் எப்படி கேட்கறது? என்று அயர்ச்சியுடன் கேட்டான் மனு.
“கடைகுட்டிதான் இப்ப கலெக்டராக போறான் மனு.” என்றாள் ஸ்மிரிதி.
“என் குடும்பத்தோட கடனை, கடமையை சுமந்து, அவங்க சந்தோஷத்திற்காக என் சுதந்திரத்தை விட்டு கொடுத்த என்னை அவங்க சுய நலத்திற்காக தனியா விட்டிட்டு போன போதுக்கூட அவங்களைக் கேள்வி கேட்க எனக்குத் துணிச்சல் வரலே…அதுக்கு காரணம் பயமில்லே..பாசம்..இப்ப நீ சொன்னதைக் கேட்ட பிறகு சில சமயம் உன்னை மாதிரி துணிச்சலா இருக்கணும்னு தோணுது.” என்றாள் மெஹக்.
“என்னை இப்பவும் தாங்கிப் பிடிச்சுகிட்டு இருக்கற என் குடும்பத்துக்கு நான் இதுவரை எதுவும் செய்ததில்லே..செய்யணும்னு யோசிக்ககூட இல்லை..
இங்கே வந்த பிறகு மனுவோடேயும், அப்பாவோடேயும் சாதாரணமா பேசிக்கிட்டு தான் இருக்கேன்..ஆனா அம்மாவோட மட்டும் ஒரு வார்த்தைப் பேசாம அவங்களைப் புறக்கணிக்கறேன்..கஷ்டப்படுத்தறேன்.” என்றான் மாறன்.
“அவனோட அந்தக் குறிக்கோளை அடைஞ்சிடுவாங்கற நம்பிக்கைலேதான் அவனைப் பற்றி கவலைப்பட்டுகிட்டு இருக்கற அம்மாவை எல்லாம் சரியாயிடும்னு சொல்லி ஒரளவு சமாதானம் செய்து வைச்சிருக்கேன்.. மாறனைப் பற்றி இந்த மாதிரி விஷயம்னு கேள்விபட்டாங்கன்னா அவங்க எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு சொல்லவே முடியாது.” என்றான் மனு.
“நீ எதுக்கு அதைப் பற்றி கவலைப்படற..மெஹக் பற்றி ஆன் ட்டிகிட்ட மாறன் தான் சொல்லணும்..அவன்பாடு ஆன்ட்டிபாடு.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கம்மாவை நீ புறக்கணிச்சேன்னா நம்ம விஷயத்தை அவங்கிட்ட யார் சொல்லுவாங்க? அவங்களுக்குப் பிடிக்காட்டா என்ன செய்யறது? என்று கேட்டாள் மெஹக்.
“நம்மைப் பற்றி நாந்தான் அவங்கிட்ட சொல்லணும், சொல்லுவேன்…முதல்லே அவங்களுக்கு அதிர்ச்சியாதான் இருக்கும் அந்தக் கட்டத்தைக் கடந்த பிறகு அவங்களை சமாளிக்க வேண்டியது, அவங்களுக்குப் பிடிக்க வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு.” என்றான் மாறன்.
“மாறனுக்காக அம்மா ஒத்துகிட்டாலும் இந்த விஷயத்தைக் கேள்விபட்டா அப்பா என்ன சொல்லுவாரோ?..மெஹக்கை உன் சினேகிதியா தெரியும்..நான் மும்பைக்கு அவ விஷயமாதான் போனேன்னு சொல்லியிருக்கேன்.. அவர்கிட்ட யார் இதைப் பற்றி சொல்ல போறாங்க?” என்று மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான் மனு.
“மாறன் தான் மெஹக்கைக் கல்யாணம் செய்துக்க போறான்..அவந்தான் எல்லார்கிட்டையும் சொல்லணும்…..அவந்தான் அவளை அவனோட வருங்கால மனைவின்னு அறிமுகப்படுத்தி வைக்கணும்..அவரு எப்படி ரியாக்ட் செய்வாருன்னு என்னாலேயும் யூகிக்கமுடியலே.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கம்மாகிட்ட நீ சொல்லுவேன்னா உங்கப்பாகிட்ட யார் சொல்லுவாங்க?  அவரை இதுவரை நான் சந்திச்சதில்லே..அவர்கிட்ட பேசினதில்லே.” என்றாள் மெஹக்.
“அம்மாக்கு முதல்லே சொல்ல விருப்பப்படறேன்..அதுக்கு அப்பறம் அப்பாகிட்ட சொல்லுவேன்.. அடுத்தமுறை நான் வீட்டுகுப் போகும் போது நீயும் என்கூட வா..உன்னை என் வருங்கால மனைவியா அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கறேன்..என்னோட குறிக்கோளையும் அவரோட பகிர்ந்துக்கறேன்..நம்மை பற்றி எப்படி எடுத்தப்பாருன்னு எனக்கு ஐடியாயில்லை ஆனா என்னோட குறிக்கோளுக்கு ஆதரவு கொடுப்பாரு…அஞ்சு அடெம்ப்ட் செய்து அவர் மானத்தை நான் வாங்காம இருக்கணும்.” என்றான் மாறன்.
“அஞ்சு அடெம்ப்டா? எதுக்கு?”
“அவரை மாதிரி ஆகறத்துக்கு..அக்‌ஷுவலி ஆறு வாய்ப்பு இருக்கு..ஆனா முதல் வாய்ப்பு ஊத்திக்கும்ணு நினைக்கறேன்..அது டிரை ரன்..பரீட்சை தில்லிலேதான் எழுத போறேன்..அதுக்குள்ள இந்த வீட்டு வேலை முடியணும், முடிக்கணும்..நான் எதிர்பார்த்ததைவிட லேட்டாகுது.” என்றான் மாறன்.
அவன் குறிக்கோளைப் பற்றி மௌனமாகக் கேட்டு கொண்டிருந்த மெஹக் திடீரென்று அவன் கையைப் பிடித்து இழுக்க, அவளருகே சரிந்த மாறன்,”என்ன பண்ற?” என்று வியப்பாக கேட்க,
“எனக்குப் பயங்கரமா தூக்கம் வருது..என் பக்கத்திலே படு..தூங்கலாம்.” என்றாள் அசால்ட்டாக மனைவி போல் உரிமையுடன் பேசினாள்.
‘வாட்? விளையாடாத.” என்று அதிர்ச்சியானான் மாறன்.
‘ஸீரியஸாதான் சொல்றேன்..இந்த மாதிரி வாய்ப்பு நமக்கு அடுத்து எப்ப கிடைக்குமோ..எனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கு.. இந்த ரூம் ரொம்ப பிடிச்சிருக்கு..இதுதான் நம்ம பெட் ரூம்..நான் சூஸ் பண்ணிட்டேன்.” என்றாள் குதுகலத்துடன் மெஹக்.

Advertisement