Advertisement

ஸ்மிரிதியின் மனு – 47
அவனுடைய சாவியை போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்த மனுவின் கண்களில் பட்டார் டைனிங் டேபிளில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்த சிவகாமி.
அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் ஷுவை கழட்டிவிட்டு, வாஷ் பேஸினில் கை கழுவும் போது விழித்துக் கொண்டவர்,
“என்ன டா இன்னைக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?” என்றார்.
“அரைமணி நேரம் லேட்..ஸ்மிரிதி எங்கே?”
“நானே உனக்கு சாப்பாடு போடறேன்னு சொல்லி அவளைத் தூங்க அனுப்பிட்டேன்.”
“நீங்கதான் முக்காவாசி நாள் முழிச்சிருந்து சாப்பாடு போடறீங்க..இன்னைக்கு அவளைச் செய்ய சொல்லியிருக்கலாம்.”
“கொஞ்ச நாள் தானே டா..அப்பறம் நான் தான் கிளம்பிடுவேனே.” என்றார் சிவகாமி.
காலையில் முடித்து வைத்த பேச்சை மறுபடியும் தொடர விரும்பாமல் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான் மனு.
சிறிது நேரம் கழித்து சிவகாமி அவராகவே பேச்சைத் தொடர்ந்தார்.
“இன்னைக்குப் பிரேமாகிட்ட பேசினேன்..ஸ்மிரிதியைத் தில்லிலே தனியா விடாதேன்னு கெஞ்சறா..அவளாலேதான் கோயமுத்தூர் போறேன்னு நினைச்சுகிட்டிருந்தா..நம்ம வீட்டு விஷயம் எதுவும் பிரேமாக்குத் தெரியலே..அவளுக்கு ஸ்மிரிதியைப் பற்றிகூட ஒண்ணுமே தெரியலே..அவளுக்குச் சமைக்கத் தெரியுதான்னு என்னைக் கேட்கறா..அம்மாவும், பொண்ணும் பல வருஷமா ஒரே வீட்டிலே, ஒரே ஊர்லேக்கூட இல்லை..அடிக்கடி சந்திக்கவும் இல்லை..அதான் பிரேமாவுக்கு எப்பவும் ஸ்மிரிதியைப் பற்றி ஒரு பதட்டம் இருக்கு..
அந்தப் பதட்டம் உங்ககூடவே இருக்க ஆரம்பிச்சா சரியாப் போயிடும்னு நினைக்கறேன்.. நீ அவளை நம்ம வீட்டிலே உன்கூடவே வைச்சுக்க போறேன்னு கேட்டவுடனே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு..என்கிட்ட இதைச் சொல்லணும்னு உனக்கு ஏன் தோணலே? என்று மனுவைக் கேட்டார் சிவகாமி.
“அம்மா, ஏதாவது முடிவெடுத்த அப்பறமாதான் சொல்ல முடியும்.. இன்னும் ஸ்மிரிதியா? அங்கிளான்னு? ஆன்ட்டி யோசிச்சுகிட்டே இருக்காங்க.. அவங்கதான் முடிவு எடுக்கணும்..அவங்க அவகாசம் கேட்டிருக்காங்க மா.”
“அவளை மூட்டை முடிச்சைக் கட்டிகிட்டு இங்கே வர சொல்லிட்டேன்..நீயும், ஸ்மிரிதியும் அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க…ஒரே ஒரு விஷயத்தினாலே அவ வாழ்க்கையேத் தப்பா போயிடுச்சு அதனாலே அவ தனி ஆள் ஆகிட்டா….ராம் கல்யாணத்து போது ஸ்மிரிதியைப் பற்றி ரொம்ப வருத்தப்பட்டா..அந்த வருத்தமெல்லாம் மறைஞ்சு போகணும்..அவ பொண்ணோட அவ வாழ் நாள் முழுக்க இருக்கணும்.” என்றார் சிவகாமி.
“ஸ்மிரிதிக்கும் அதே வருத்தம் தான் மா..ஆன்ட்டியோடவே இருந்திருக்கணும்னு இப்ப நினைக்கறா..என்ன நடந்திச்சோ அதை இப்ப நாம யாரும் மாற்ற முடியாது..இனி நடக்க போகறதையும் மாற்ற முடியாது..எல்லாத்தையும் எல்லாரையும் ஏத்துக்கறதைத் தவிர வேற வழியில்லை.” என்றான்  மனு.
“அது சுலபமான விஷயமில்லை மனு..இன்னைக்கு அவகிட்ட பேசின பிறகு என் மனசுலே அவளையும், மாறனைப் பற்றியும் தான் யோசிச்சுகிட்டிருந்தேன்..
சில சமயம் நான் தான் பிரேமா வாழ்க்கையைக் கெடுத்திட்டேனோன்னு தோணுது..எனக்குத் துணையா அவ கலெக்டர் ஆபீஸுக்கு வராம இருந்திருந்தா கார்மேகமும் அவளும் சந்திச்சிருக்க மாட்டாங்க..
அவ பொழுது போக்குக்காக டீச்சர் வேலைக்கு வந்தா..நானும், புவனாவும் தான் தேவைக்கு வேலைக்குப் போனோம்..இன்னைக்குப் புவனாவும், நானும் வீட்லே நிம்மதியா இருக்கோம் அவ இன்னும் வேலை செய்துகிட்டு இருக்கா..
அவ ரொம்ப திறமைசாலி..படிப்பு, பாட்டு, சமையல் எல்லாம் நல்லா வரும்..அவங்க ஜாதிலே அவளுக்கு ஏற்ற இடமா தேடிக்கிட்டிருந்த நேரத்திலே அவ மனசு கார்மேகம் பக்கம் போயிடுச்சு..கார்மேகத்திற்கும் அவளுக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது ஆனா அவ மனசுக்கு அவரைப் பிடிச்சிடுச்சு..அப்படி செய்துகிட்ட கல்யாணம் ஒரு கட்டத்திலேப் பிடிக்காம, ஸ்மிரிதிக்காகன்னுகூட பார்க்காம அவ  பிரிஞ்சு போயிட்டா..அந்தக் குற்ற உணர்விலே உங்ககூட வந்து இருக்க யோசிக்கறா..
அவங்க குடும்ப விருப்பப்படி அவ வாழ்க்கையை அமைச்சுகிட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது..பெரிய குடும்பத்தோட, எல்லா வசதியோட, நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருப்பா.” என்று நடக்காத ஒன்றை ஆராய்ந்து முடிவு கொடுத்தார் சிவகாமி.
“அவங்க குடும்பம் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையைப் பிரேமா ஆன்ட்டி கல்யாணம் செய்துகிட்டிருந்தா நமக்கு ஸ்மிரிதி கிடைச்சிருக்க மாட்டா..கார்மேகம் அங்கிள் கெட்டவரில்லை..பிரேமா ஆன்ட்டியும் கெட்டவங்க இல்லை..அவங்க இரண்டு பேருக்குள்ள ஏதோ ஒண்ணு தப்பா போனதிலே ஒருத்தரை மட்டும் பழி சொல்ல முடியாது…இரண்டு பேரும் தப்பானவங்கண்ணு முடிவுக்கு வர முடியாது..
கார்மேகம் அங்கிள் ஸ்மிரிதிக்காகன்னு வைச்சிருந்த பணத்துலேதான் இப்ப உதய்ப்பூர்லே ஃபாக்ட் ரி ஆரம்பிச்சிருக்கு..அவருக்கு பணம் மட்டும் முக்கியமா இருந்திருந்தா பிரேமா ஆன்ட்டி அவரை விரும்பியிருக்க மாட்டாங்க அவங்க கல்யாணமும் நடந்திருக்காது..
அவங்க கல்யாணத்துக்கு அப்பறம் பிரேமா ஆன்ட்டியை அவங்க குடும்பம் மொத்தமா கைவிட்டுடாங்க..ஸ்மிரிதிக்காகக்கூட அவங்க மாறலே..அதான் ஆன்ட்டி ஸ்மிரிதியைத் தனியா விட வேணாம்னு உங்கிட்ட சொல்றாங்க.” என்று பிரேமாவின் பதட்டத்திற்கானக் காரணத்தை வெளியிட்டான் மனு
“அவ குடும்பம் அந்த மாதிரி தான் டா..அவங்க மாற மாட்டாங்க..அவ ஒரே பொண்ணு..அவளுக்கு ஒரு அண்ணன்..சின்ன குடும்பம்தான்..அவளோட முடிவுனாலே அவங்க கௌரவம் தான் பாழாச்சு வேற யார் வாழ்க்கையும் பாழாகலே ஆனாலும் அவங்களாலே அதை மறக்க முடியலே..அவளை மன்னிக்கவும் முடியலே..
அவளுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்லைன்னு சொன்னா டா.. மாறன் தான் மாசாமாசம் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போறானாம்..அவன் பெங்களூருக்குப் போறான்னு அவ சொல்லிதான் எனக்குத் தெரிய வந்திச்சு.” என்று மாறனைப் பற்றி கேள்விபட்டதை மனுவுடன் பகிர்ந்து கொண்டார் சிவகாமி.
“ஆன் ட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு எங்க கல்யாணத்துக்கு முன்னாடி தான் எனக்குத் தெரியும்..அதைப் பற்றி அப்பாகிட்ட மட்டும் டிஸ்கஸ் செய்தேன்..ஆன்ட்டியை இங்கேயே அழைச்சுகிட்டு வர மாறன்கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம்னாரு..எல்லாம் முடிஞ்ச பிறகு கடைசியா உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தாரு..ஆனா அதுக்குள்ள மாறனே இங்கேயிருந்து போயிட்டான்..
அவன்கிட்ட இதைப் பற்றி பேசினாரான்னு எனக்குத் தெரியலே…இப்ப ஆன்ட்டி ஒரு முடிவுக்கு வரட்டும்னு நான் வெயிட் செய்யறேன்..அவங்க முடிவெடுக்கறவரை, அவங்க அங்கே தனியா இருக்கறவரை அவங்க உடம்பைக் கவனமாப் பார்த்துக்கணும்..இதுக்கு முன்னாடி மஞ்சு நாத்தான் அவங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போனான்..இப்ப சுசித் ராவுக்கு குழந்தைப் பிறக்கறவரை அவன் எங்கேயும் நகரமுடியாது..அதனாலே மாறனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன்.” என்று மாறன் மேல் முழுவதுமாகத் திரும்பியது அவர்கள் உரையாடல்.
“இன்னைக்கு அவனுக்குப் பிடிச்சது சமைச்சிருக்கேன்.. அவன் இன்னைக்கு மத்தியானம் என்ன சாப்பிட்டான்னு தெரியலே? இராத்திரி புவனா வீட்டுக்குச் சாப்பிட போனானான்னு தெரியலே?..கேட் போட்டாச்சான்னு தெரியலே?ஓண்ணும் தெரியலே…ஒரு தகவலும் இல்லே..நானும் புவனாக்கு ஃபோன் பண்ணி கேட்கலே..அவன் என்னை ஒதுக்கறதை ஏத்துகிட்டு பொறுமையா இருக்கேன்..
என்னவோ அவனுக்கு மட்டும் நான் சொல்றதெல்லாம் தப்பா தெரியுது..எனக்கு மட்டும் அவன் செய்யறதெல்லாம் தப்பாப்படுது..எப்ப இதெல்லாம் சரியாகுமோ? அவனை அப்படியே ஏத்துகிட்டா அவன் செய்யறது எதுவும் தப்பா தெரியாது போலே.” என்று உணர்ச்சிகளைக் கட்டுப்பத்த முடியாமல் சிவகாமி பேசி முடித்த போது அவர் அழுது கொண்டிருந்தார்.
சிவகாமியின் கண்ணீரைப் பார்த்து மனுவிற்கு மாறன் மேல் லேசாக கோபம் உண்டானது. காலையில் கோபப்பட்டு கத்திய சிவகாமியை சுலபமாக சமாளித்தவனுக்கு இப்போது அவன் கண்முன்னே கண் கலங்கி கொண்டிருந்தவரைப் பார்த்து மனம் கலங்கிப் போனவன், அவரை அணைத்து,
”அம்மா, ஒரு நபரை அப்படியே ஏத்துகிட்டோம்னா அவங்க செய்யற எல்லா செயலையும் அப்படியே ஏத்துப்போம்…இதுவும் ஒருவகை ஊனம் தான்..உள்ளத்திலே ஏற்படுது..இது சில சமயம் மன அமைதியை உண்டாக்கும்,  சில சமயம் அநீதியை இழைக்கும்..இந்த ஊனத்தை சரியா கையாளணும் அப்ப தான் குடும்பமும், சமூகமும் சுமூகமா வாழ முடியும்..
மாறன் செய்த தப்பை அவனும் சரி செய்ய முடியாது, நாமளும் அதை சரி செய்ய முயற்சி செய்யக்கூடாது.. ஆனா அதே போலே தப்பை அவன் திரும்ப செய்யாம அவனைத் திருத்திக்க நாம வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்.. அவன் திருந்தறத்துக்கு நாம மட்டும் முயற்சி எடுத்தா போதாது அவனும் ஒத்துழைக்கணும்..அதுக்குதான் அவனை அங்கே அனுப்பியிருக்கு..இதைப் புரிஞ்சுக்காம நீங்க என்னென்னவோ பேசறீங்க..
என்ன மா ஆகுது உங்களுக்கு? காலைலே அவன் மேலே ஒரே கோபம்..இப்ப அவனை நினைச்சு ஒரே அழுகை..மாறனைப் பார்க்கணுமா உங்களுக்கு? அவன்கிட்ட பேசணுமா? இப்பவே வீடியோ கால் போடறேன்.” என்றான் மனு.
“இல்லை.. வேணாம் டா..நான் இப்ப அவன்கிட்ட பேசினா எனக்கு மட்டும் தான் மன அமைதி கிடைக்கும்..அவனுக்கு என் பேச்சு சித்தரவதையா இருக்கும்.. நான் காத்திருக்கேன்..
அவனோட பொறுமையா பேசி என்ன பிரச்சனைன்னு முதல்லே விசாரிச்சிருக்கணும்..தப்பு செய்திட்டேன்..உன் கல்யாண விஷயத்திலேயும் அப்படிதான் நடந்துகிட்டேன்….நான் இப்படிதான்னு புரிஞ்சுகிட்டு நீ என்கிட்ட பொறுமையா இருந்த..உங்கப்பாவும் என்கிட்ட பொறுமையா போறாரு..மாறன்கிட்டையும் நான் அதையே எதிர்ப்பார்த்திருக்கேன்..இப்பதான் அது தப்புன்னு புரியது..இந்தமுறை நான் தான் பொறுமையா போகணும்..போறேன்.” என்றார் சிவகாமி.
“அம்மா, கவலைப்படாதீங்க.. அவன் உங்களைப் புரிஞ்சுப்பான்.. அவனே வந்து பேசுவான்…..லேட்டாயிடுச்சு நீங்க போய் படுத்துக்கோங்க..இன்னைக்கு புவனா ஆன் ட்டி வீட்டுக்கு மாறன் வந்தானான்னு ராமுக்கு மெஸெஜ் செய்து கேட்டுக்கறேன்.” என்று சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் மனு.
ஃபோனில் ராமிற்கு அனுப்பிய செய்தியைப் படித்தபடி அவன் படுக்கையறைக்குள் நுழைந்தவனை,”ஃபோனை ஆஃப் செய் மனு..வந்ததே லேட்..வேலையை வீட்டுக்குமா கூட்டிக்கிட்டு வர்ற?” என்று கோபமாக கேட்டாள் போர்வைக்குள் இருந்த ஸ்மிரிதி.
“இவ்வளவு நேரம் முழிச்சிகிட்டு தானே இருக்க..ஏன் வந்து சாப்பாடு எடுத்து வைக்கலே? அம்மா சொன்னவுடனே உள்ளே வந்து போர்த்திகிட்டு படுத்திருக்க.” என்று மனுவும் கோபப்பட்டான்.
“அம்மாவுக்கும், பையனுக்கும் நடுவுலே ஆயிரம் இருக்கும்..அதுலே ஆயிரத்து ஒண்ணா நான் எதுக்குண்ணு தான்.” என்றாள் ஸ்மிரிதி.
சிவகாமியின் மன நிலையை சரியாக கணித்திருந்த அவன் மனைவியின் புத்திசாலிதனத்தை மெச்சியவன்,”ஆயிரம் இல்லை..ஒண்ணே ஒண்ணு தான்.” என்று ஒப்புக் கொண்டான் மனு.
“என்னது அது? காலைலே கோபமா இருந்தாங்க..மத்தியானத்துக்கு மேலே மௌனமா இருந்தாங்க..சாயந்திரம் ஒதுக்கமா இருந்தாங்க..அவங்க மனசை மாற்ற அங்கிளும், நானும் மாற்றி மாற்றி முயற்சி செய்தோம் ஒண்ணும் பிரயோஜனமில்லே..இன்னைக்கு அங்கிள் தனியாதான் வாக்கிங் போனாங்க..
இராத்திரி உனக்காக அவங்க வெயிட் பண்றேன்னு சொன்ன போது வேணாம்னு மறுத்து பேச மனசு வரலே..ஏன் இன்னைக்கு இப்படி இருக்காங்க மனு? என்று கவலையாக கேட்டாள் ஸ்மிரிதி.
“எல்லாம் அவனாலேதான்..அம்மா தான் ஏதோ ஒரு கோபத்திலே திட்டிட்டாங்க..தேவையில்லாம பேசிட்டாங்க..இன்னுமா அதையே நினைச்சுகிட்டு இருப்பான்? நானும் எவ்வளவு நாள் அவங்களை சமாளிக்கறது..இப்ப என்கிட்ட அழுதிட்டாங்க..வீடியோ கால் போட்டு கொடுக்கறேன் பேசுங்கன்னு சொன்னேன்..வேணாம்னு சொல்லிட்டாங்க.”
மனுவின் விளக்கத்தைக் கேட்டு ஆச்சரியமான ஸ்மிரிதி,”மாறன் தான் பிரச்சனைனா எதுக்கு அங்கிள்கிட்ட முகத்தைத் தூக்கிகிட்டாங்க..சாயந்திரம் முழுக்க என்ன விஷயம்னு கேட்டு, கேட்டு அங்கிள் களைப்பாயிட்டாரு..உன்கிட்ட மட்டும் சொல்லியிருக்காங்க.. ஏன்?”
“நீ ஜாலியா படுத்துகிட்டே எதிர்கட்சியாட்டம் கேள்வி கேட்டுகிட்டு இருக்க..உனக்குப் பதில் சொல்ல முடியாது…நானும் டிரெஸ் மாத்திகிட்டு படுக்கணும்..இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு.” என்று சொல்லி படுக்கை மீது அவன் ஃபோனை வைத்துவிட்டு பாத் ரூமிற்குச் சென்றான் மனு.
“அங்கேயிருந்தே பதில் சொல்லு.” என்று கட்டளையிட்டாள் மனைவி.
“நான் ப்ரெஷ் செய்யணும்.” என்றான் இயலாமையுடன் கணவன்.
“பதில் சொல்லிட்டு ப்ரெஷ் செய்.”
ஸ்மிரிதியின் பிடிவாதம் தெரிந்தவன்,
“உனக்கும் அவங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு அதான் உனக்கு அங்களைப் பற்றி புரியலே.” என்று உள்ளேயிருந்தே பதில் கொடுத்தான்.
“என்னது?”
“நீ இப்போதைக்கு வெறும் மனைவி மட்டும்தான்..அவங்க மனைவி கம் மதர்..ஒரு அம்மாவா அவங்க பசங்களைப் புருஷன்கிட்ட விட்டு கொடுக்க முடியாது..ஒரு மனைவியா அவங்க புருஷனைப் பசங்ககிட்ட விட்டு கொடுக்க மாட்டாங்க…ஸோ மனுகிட்டதான் மாறனைப் பற்றியும்..மாறன் கிட்டதான் மனுவைப் பற்றியும் சொல்ல முடியும்..அடுத்த பத்து நிமிஷம் உன் புருஷனை நீ தொந்தரவு செய்யாத.” என்று சொல்லி பாத் ரூம் கதவைச் சாத்தியவன், அடுத்த பத்து நொடிகளில் “மனு” என்ற ஸ்மிரிதியின் அலறலில் பதறி அடித்து கொண்டு வெளியே வந்தான்.
“என்ன? என்ன?” என்று அவன் பதட்டமாகக் கேட்க, அவன் ஃபோனைக் காட்டினாள் ஸ்மிரிதி.
அதை அவன் திறந்தவுடன் ராமிடமிருந்து அவன் கேள்விக்கு பதில் வந்திருந்ததைப் பார்த்தான். சற்றுமுன் மாறனிடமிருந்து அவனுக்கு வந்திருந்த மெஸெஜ்ஜை மனுவிற்கு அனுப்பியிருந்தான் ராம்.
“இதுக்கு எதுக்கு அலறின? புவனா ஆன்ட்டி வீட்டுக்கு சாப்பிடப் போயிருக்கான்..மெஹக்கை டிராப் செய்திருக்கான்..இப்பதான் அதை ராமுக்கு மெஸெஜ் பண்ணியிருக்கான்.. அதே மெஸெஜை மாறன் எனக்கும் அனுப்பியிருக்காலமில்லே….
காலைலே நான் கோர்ட்லே இருந்தேன்..சாயந்திரம் ஆயுஷ்கூட இருந்தேன்..எனக்குதான் ஃபோன் செய்து எதையும் விசாரிக்க டயமில்லை….கேட் போட்டாச்சு..இராத்திரி சாப்பிட்டாச்சுன்னு ஒரு வரி சொல்ல இவனுக்குமா டயமில்லை?..இராஸ்கல்..நாளைக்கு அவனுக்கு இருக்கு.” என்றான் மனு.
“இப்ப விசாரி..உடனே விசாரி..உனக்கும் டயமிருக்கு..அவனுக்கும் டயமிருக்கு…” என்று படபடத்தாள் ஸ்மிரிதி.
பாதி வேலையில் பாத் ரூமிலிருந்து வெளியே வந்தவன் அவள் படபடப்பை பார்த்து,”எதை விசாரிக்க சொல்ற?” என்று யோசனையுடன் கேட்டான்.
“மாறன் இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காண்ணு விசாரி.”
“அது எதுக்கு நமக்கு?”
“எனக்குத் தெரியணும்..மாறனும், மெஹக்கும் எனக்குத் தெரியாம எப்படி சந்திக்கலாம்?” என்று ஸ்மிரிதி வார்த்தையை விட வக்கீல் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“ஏன் நீ சொன்னாதான் அவன் போய் அவளைப் பார்க்கணுமா? உன் அனுமதியோடதான் அவளை டிராப் செய்யணுமா? நீதான் அவங்க இரண்டு பேர் மீட்டிங்கை அப்ரூவ் பண்ணனுமா? என்று கேள்விகளை அடுக்கினான் மனு.
“யெஸ்.”
“வாட்?…வொய்?”
“அவங்க இரண்டு பேரும் என்கிட்டதான் அவங்க மனசுலே  இருக்கறதை சொன்னாங்க..இன்னும் அவங்களுக்கே அது தெரியாது..அதான் அவங்க இரண்டு பேர் மனசும் ஒரே போலே இருக்கறதை அவங்க தெரிஞ்சுக்க அவங்களை எங்கே, எப்படி மீட் செய்ய வைக்கறத்துண்ணு நான் யோசிச்சுகிட்டு இருந்தேன்..
என் மனசுலே நீதான் இருக்கேங்கறதை உன்கிட்ட சொல்றத்துக்குக்கூட நான் இவ்வளவு யோசிக்கலே..ஸிம்பிலா சொல்லிட்டேன்..இந்த மாறன், மெஹக் இரண்டு பேர் விஷயமும் எப்பவும் சிக்கலாவே போகுது..இப்ப இந்த இரண்டு சிக்கலும் சேர்ந்தா பெரிய சிக்கல் ஆகும்..ஃபோன் போடு மாறனுக்கு..அவன் எங்கே இருக்காண்ணு விசாரி.” என்றாள் சிக்கல்களின் சிந்தனையில் சிக்கித் தவித்து கொண்டிருந்த ஸ்மிரிதி. 

Advertisement