Advertisement

ஸ்மிரிதியின் மனு – 46_2
மாறனுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த மெஹக், தானாகவே அமைந்த அவர்களின் இந்த சந்திப்பில் சந்தோஷமடைந்தவள் அவனைப் பற்றி உணர்ந்த பின் ஏற்படும் இந்த முதல் சந்திப்பைச் சரியாக கையாள வேண்டுமென்று சஞ்சலமுமடைந்தாள்.  சந்தோஷம், சஞ்சலம், பரிதவிப்பு என்று அவளுக்குள் ஏற்பட்டு கொண்டிருந்த அதுவரை அவள் உணர்ந்திராத உணர்வுகளை ஆராய்ச்சி செய்தபடி அவன் முதுகின் மீது சாய்ந்து உறக்கத்தை தழுவிக் கொண்டிருந்தவள் திடீரென்று பைக் நின்றவுடன் விழித்து கொண்டாள்.
“பைக்லே பின்னாடி உட்கார்ந்துகிட்டு கார்லே வர்ற மாதிரி தூங்கற.” என்ற மாறனின் கண்டன குரல் அவளை முழுவதுமாக எழுப்பியது.
“நல்ல காத்து வந்திச்சு அப்படியே கண் அசந்துட்டேன்.”
ஆள் ஆரவாரமில்லாத இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு பெரிய கேட்டின் பக்கத்தில் பைக்கை நிறுத்தியிருந்தான் மாறன்.  பைக்கிலிருந்து இறங்காமல் சுற்றுபுறத்தை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தவளிடம்,
“இறங்கு.” என்று மாறன் சொன்ன போது அவளை அவர்கள் புதிதாக கட்டி கொண்டிருந்த வீட்டிற்கு அவன் அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் மெஹக்.  பைக்கிலிருந்து இறங்கியவள் அந்தப் பெரிய கேட்டிற்கு கம்புகள், கயிற்றால் ஸப்போர்ட் கொடுக்கபட்டிருந்ததை யோசனையுடன் பார்த்து கொண்டிருக்க அவள் கைகளைப் பற்றி சுவரோரமாக அழைத்து சென்றவன் அங்கே குமித்து வைத்திருந்த மணலைக் காட்டி,
“மணல்லே ஏறி சுவர் மேல் ஏறு..அந்தப் புறம் ஏணி வைச்சிருக்கேன்..கீழே இறங்கிட்டு எனக்கு வெயிட் பண்ணு நான் உன் பின்னாடியே வரேன்.” என்றான்.
கேட்டை உபயோகிக்க முடியாததற்கு அது மாற்று ஏற்பாடு என்று புரிந்து கொண்டவள் அவளுடையை ஸ்லிங் பாக்லிருந்த ஃபோனை பாண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டு அந்த பேக்கையும், அவள் ஸ்டோலை அவனிடம் கொடுத்து விட்டு, அவளின் தலைமுடியை உச்சியில் ஒரு கொண்டையாக போட்டவள், அவள் அணிந்திருந்த செருப்பை கழட்டி ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஒரே நிமிடத்தில் மணல் மீது ஏறி, சுவற்றின் அந்தப் புறம் மறைந்து போனாள்.  நம்மளைவிட ஃபிட்டா இருக்கா என்ற நினைத்த மாறன் அவள் பையைக் குறுக்காக மாட்டி கொண்டு, ஸ்டோலை தலையில் முண்டாசாக சுற்றி கொண்டு சுவரேறி அந்தப் புறம் ஏணியில் கால் வைக்கும் முன்னர் அவனை அவள் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டாள் மெஹக்.
“எதுக்கு இப்ப ஃபோட்டோ எடுத்த?”
“நிஜ ஹீரோவை நிழலாப் பிடிச்சு வைச்சுகிட்டேன்.” என்றாள் சிரித்து கொண்டே.  அவளின் அந்த செய்கையை கிண்டலாக எடுத்து கொள்ளாமல் பாராட்டாக எடுத்து கொண்டவனுக்கு அவளைப் பற்றி ஸ்மிரிதி சொல்லாமல் இருந்திருந்தால் அவனுக்கு இந்த அளவிற்கு தெளிவு வந்திருக்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்தான்.  அவன் இன்று செய்ய போகும் துணிவான செயலுக்கும் அவள்தான் காரணம் என்று உணர்ந்தவன் மானசீகமாக ஸ்மிரிதிக்கு நன்றி உரைத்தான்.
வீட்டின் வாசல் இருட்டாக இருந்தது.  வாசல் கதவிற்கு முன்னால் மணல் சலிக்கும் சல்லடையை சாத்தி வைத்திருந்தான்.  அதை அகற்றி விட்டு  வாசல் கதவையும் தூக்கி சுவற்றோடு சாத்தி வைத்து அவன் ஃபோனிலிருந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் வீட்டினுள் நுழைந்தனர்.  மறுபடியும் அதே போல் வாசல் கதவை அதன் இடத்தில் பொருத்திவிட்டு உள்ளே வந்த மாறனிடம்,
“கதவு இல்லாம எப்படி இருக்க? பயமாயில்லையா?”
“பத்து நாளா இப்படிதான் இருக்கேன்..டெண்ட் லே இருக்கற மாதிரி தான்..எலி தொல்லைக்கு தான் வெளிலே ஜாலி வைக்கறேன்..ஜன்னல் எல்லாத்தையும் மூடி வைக்கறேன்.” என்று பதில் சொல்லியபடி விசாலமான வரவேற்பறையின் வலது புறம் இருந்த அறைக்குள் நுழைந்தான் மாறன்.  அந்த அறையில் லைட்டையும், ஃபேனையும் ஆன் செய்தவன் அவன் தலையில் கட்டியிருந்த அவள் ஸ்டோலையும், குறுக்காக மாட்டியிருந்த பையையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு அந்த அறையின் கோடியிலிருந்த சிறிய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“அங்கே என்ன பண்ற?” என்று அவன் பின்னே வந்த மெஹக் கேட்க,
“இங்கே வராத..பாத் ரூம் இது.” என்று அவளுக்கு அதிர்ச்சி கொடுத்தான் மாறன்.
“மை காட்..இதுக்குகூட கதவு இல்லையா? எப்படி நீ யூஸ் செய்யற?’
“நாலு பக்கமும் சுவர் இருக்கு..நான் மட்டும் தனியா இருக்கேன்.” என்று உள்ளேயிருந்தே பதில் கொடுத்தான் மாறன். அவன் வெளியே வந்தவுடன்
“உனக்கு யூஸ் செய்யணுமா?” என்று பணிவாக கேட்டான்.
“இப்ப வேணாம்.” என்றாள் அந்த அறையைப் பார்வையிட்டு கொண்டிருந்த மெஹக்.  அறையின் நடுவே தரையில் ஒரு பெரிய பெட் ஸ்பிரெட் விரிக்கப்பட்டிருந்தது.  அதன் ஒருபுறம் முழுக்க புத்தங்களும், நோட்டு புத்தகங்களும் இறைந்து கிடந்தன.  அறையின் ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த ஸுட்கேஸ், ஸ்ட் ராலி மேல் அவனுடைய லாப் டாப் சார்ஜாகி  கொண்டிருந்தது.  
அந்த அறையிலிருந்த இரண்டு ஜன்னல்களும் மூடியிருந்ததைக் கவனித்த மெஹக் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்பையும், கறுப்பு பேண்டையும் ஒரே நொடியில் கழட்டி வெள்ளை நிற கெமிஸொல், மினி ஷார்ட்ஸில் மாறனுக்கு காட்சி கொடுத்தாள்.  ஒரு க்ஷணம் அவள் செய்கையில் ஸ்தம்பித்து போன மாறன் அடுத்த நொடி அவனை சுதாரித்து கொள்ள, அவனின் அந்த க்ஷண நேர அதிர்வை உள்வாங்கிய மெஹக் அதைக் கண்டு கொள்ளாமல் அவளுடைய டாப்பையும், பேண்டையும் எங்கே வைப்பது என்று கண்களால் இடம் தேடி கொண்டிருக்க, அதை வாங்கி அவன் சூட்கேஸ் மேல் தொங்க விட்டான் மாறன்.
“எனக்குத் தாகமா இருக்கு..குடிக்க ஏதாவது கொடு.” என்றாள் மெஹக்.
அவன் புத்தகங்களுக்கு நடுவே மறைந்து கிடந்த தண்ணீர் பாட்டிலைக் கண்டு பிடித்து அவளிடம் நீட்டினான்.  அதை முழுவதுமாக காலி செய்தவள்,”இன்னும் வேணும்.” என்றவுடன் அந்தப் பாட்டிலை எடுத்து கொண்டு கிட்சனிற்கு சென்றான்.  அவனைப் பின் தொடர்ந்து வந்த மெஹக்,”இன்னும் எவ்வளவு நாளாகும் வீட்டு வேலை முடிய?” என்று வாயை விட்டாள்.
அவளுக்குப் பதில் சொல்லாமல் வாட்டர் டிஸ்பன்ஸரிலிருந்து பாட்டிலை நிரப்பிய மாறன் அவளை முறைத்து பார்த்தான்.  ஃபோனின் டார்ச் லைட் வெளிச்சத்திலும் அவன் முறைப்பை கண்டு கொண்ட மெஹக் எதற்கு முறைக்கறான் என்று யோசித்து கொண்டிருக்க,
“வீட்டு வேலையைப் பற்றி பேச நான் உன்னை இங்கே அழைச்சுகிட்டு வரலே.” என்றான்.
“வேற என்ன பேசணும்?” என்று அவனை நேரடியாகக் கேட்டாள் மெஹக்.
“சொல்றேன்.” என்று தண்ணீர் பாட்டிலுடன் மறுபடியும் அவனறைக்கு வந்தார்கள்.
அங்கே படுக்கை விரிப்பில் அவளை அமர செய்து அவளருகே அமர்ந்த மாறன் அங்கேயிருந்த புத்தகங்களைக் காட்டி,”இன்னைக்கு கோட்டா இன்னும் படிச்சு முடிக்கலே..புவனா ஆன்ட்டி வீட்லேர்ந்து திரும்பி வந்த அப்பறம் கொஞ்ச நேரம் படிக்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்..உன்னை அங்கே பார்த்த பிறகு, நீ பேசினதைக் கேட்ட பிறகு எனக்கு உன்னை இங்கே அழைச்சுகிட்டு வரணும், என் மனசுலே இருக்கறதை இன்னைக்கே சொல்லிட்டணும்னு தோணிச்சு..
எங்கம்மா சொன்னாங்கன்னு இந்த ஊர்லேதான் காலேஜ் படிச்சேன்..இந்த ஊர் பிடிச்சாலும் இங்க வேலை கிடைக்காம தில்லிலே வேலைக்கு போனேன்….முதல்லேர்ந்து வேலைலே விருப்பம் இல்லை..ஏன்னு காரணத்தை கண்டு பிடிக்கலே..அதுலே சம்பாதிச்சதை என் விருப்பப்படி செலவு செய்தேன்…என்னோட எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துகிட்டேன்.. எனக்கு பிடிக்காத வேலையை எவ்வளவு நாள் செய்ய முடியும்? அதுலே என் எதிர்காலத்தை எப்படி அமைச்சுக்க முடியும்னு யோசிக்கவே இல்லை..கொஞ்ச நாள் முன்னாடிவரைக்கும் அதுக்கு அவசியமும் ஏற்படலே..
அந்த அவசியம் ஏற்பட்ட போது நான் அந்த மாதிரி சூழ் நிலைலே மாட்டிகிட்டதுக்குக்  காரணம் என் அப்பா, அம்மா தான்ன்னு அவங்க மேலே பழி போட்டேன்.. என்னோட வாழ்க்கைப் பாதையை என்னை கேட்காம அவங்களே தீர்மானிச்சாங்கன்னு அவங்களைக் குறை சொன்னேன்.. 
ஆனா இங்கே வந்த அப்பறம் தான் எதையும் யோசிக்க சோம்பேறிதனம் பட்ட அவங்க பையனுக்காக எல்லாமே அவங்களே யோசிச்சாங்கன்னு புரிஞ்சுது..அந்த முயற்சி அவங்க எடுக்காம இருந்திருந்தா நான் என்னவாயிருப்பேன்னு எனக்கேத் தெரியலே..அம்மாதான் என்னை டிரம்ஸ், கீ போர்ட், கிடார் கிளாஸெல்லாம் சேர்த்துவிட்டாங்க..மனுதான் என்னை ஸுவிம்மிங் கிளாஸ்லே சேர்த்தான்…பட் ஐ என்ஜாயிட் இச் ஒன் ஆஃப் தோஸ் ஆக்டிவிடீஸ்..
ஸோ இருபத்தி ஐந்து வயசு வரைக்கும் நானா விருப்பப்பட்டு எதையும் கத்துக்க முயற்சி செய்ததில்லே.தனியா எந்த முடிவும் எடுத்ததில்லே..அதை இப்ப சரி செய்துகிட்டிருக்கேன்..இனி என்னோட எல்லா முயற்சிக்கும், முடிவுக்கும் நான்தான் பொறுப்பு..
அந்த எண்ணத்தை தில்லிலே செயல்படுத்த முடியாது….ஃபார் டூ ரீஸன்ஸ்….என் குடும்பம் இந்தப் புது மாறனை புரிஞ்சுக்கணும்..மாறனும் இந்தப் புது மாறனைப் பழகிக்கணும்..அந்த இரண்டுத்துக்கு டயம் தேவைப்படும்.
இந்தப் புது மாறனுக்கு அவன் பார்வை மாறி போனதாலே அவனைச் சுற்றி இருக்கறவங்க எல்லாம் புதுசா தெரியறாங்க….மனு, ஸ்மிரிதி, பிரேமா ஆன் ட்டி, இன்னைக்கு புவனா ஆன்ட்டி அண்ட் நீ.. 
நான் இங்கே படிச்சுகிட்டு இருந்தப்ப எங்கம்மாவோட ஸ்பை புவனா ஆன்ட்டின்னு அவங்க வீட்டுக்கு ஜாஸ்தி போக மாட்டேன்..இன்னைக்கு எனக்குப் பேச விருப்பமில்லைன்னு தெரிஞ்சு பிறகு புவனா ஆன்ட்டி என்னைப் பற்றியோ, வீட்டு வேலையை பற்றியோ பேச்சே எடுக்கலே..என் முடிவை மதிச்சாங்க..அதனாலே எனக்கு அவங்க புதுசா தெரிஞ்சாங்க..
நீயும் புதுசா தெரிஞ்ச..நான் உருவகப்படுத்தி வைச்சு மெஹக் நீயில்லை.. உன்னைப் பற்றி நீ சொன்னதுதான் உன்னை இங்கே அழைச்சுகிட்டு வர உந்துதலா இருந்திச்சு..உன்னைவிட உன் தங்கை அழகுன்னு உங்கம்மாவே சொன்ன பிறகும் அதைப் பொருட்படுத்தாம உன் முயற்சியை நீ தொடர்ந்து செய்ததுனாலதான் அவங்க நினைச்சு பார்க்காத வெற்றி உனக்கு கிடைச்சிருக்கு..நான் என் வாழ்க்கைலே இதுவரை அப்படி எதையும் முயன்று பார்க்கலே..
என்னைவிட மனுவுக்குதான் ஸப்போர்ட்டிவ்வா இருந்தாங்கன்னு அப்பா, அம்மாவோட சண்டைப் போட்டேன்..உண்மைலே அவங்க எனக்கு தான் ஸப்போர்ட்டிவ்வா இருந்திருக்காங்க….எனக்கு அவங்க கொடுத்த அந்த எக்ஸ்ட் ரா ஸப்போர்ட்டை இயல்பா எடுத்துகிட்டிருக்கான் மனு..அதனாலதான் எனக்கு இப்ப தேவைப்படற உதவியை அவனாலே இயல்பா செய்யமுடியுது..
அன்னைக்கு ரிசெப்ஷன்லே எனக்கு என்னவோ ஆயிடுச்சு..உன்கிட்ட நடந்துகிட்ட மாதிரி நான் எந்தப் பொண்ணுகிட்டேயும் நடந்துகிட்டதே இல்லை..அன்னைலேர்ந்து எனக்கு நிறைய விடை தெரியாத கேள்விகள்..அதுகெல்லாம் விடை தேட தான் இங்கே வந்திருக்கேன்..என் எதிர்காலத்தைப் பற்றி யோசிச்சு சில திட்டங்கள் வைச்சிருக்கேன்..அதை நிறைவேற்றதான் இதெல்லாம்.” என்று அவனை சுற்றியிருந்த புத்தகங்களைக் காட்டினான்…
என்னோட அந்த எதிர்காலத்திலே உன்னையும் பார்க்கறேன்..ஸ்மிரிதி கல்யாணத்துக்கு அப்பறம் உன்னைப் பற்றி நிறைய யோசிக்க ஆரம்பிச்சேன்..நான் உனக்குப் பொருத்தமில்லைங்கற உண்மையை ஒத்துக்க முடியாம உன்னைக் கெட்டவளா உருவகப்படுத்தினேன்..
உன்னைப் பற்றிய நியூஸை மனிஷோ, அம்மாவோ படிச்சு சொல்லும் போது நீ இன்னும் உயரத்துக்கு போய்கிட்டிருக்க நான் ஒரே இடத்திலே அதுவும் எனக்குப் பிடிக்காத இடத்திலே இருந்துகிட்டிருக்கேன்னு எனக்கு என்னைப் பற்றி கோபம், பரிதாபம் எல்லாம் ஏற்பட்டிச்சு..யார்கிட்டையும் அதைப் பற்றி சொல்ல முடியாம என் மேலே அன்பு காட்டற எல்லாரையும் கஷ்டப்படுத்திகிட்டு இருந்தேன்….
அன்னைக்கு உன்னை இங்கே ஹோட்டல்லே பார்த்திட்டு வந்த பிறகு ஸ்மிரிதி எனக்கு ஃபோன் செய்தா..அவ உன்னைப் பற்றி என்கிட்ட சொன்னா..” என்று மாறன் தொடருமுன்,
இவன் எதிர்காலத்தில் என்னை ஒரு அங்கமாக பார்க்கிறானா என்று அவள் கேட்டதை ஆராய்ந்து கொண்டிருந்த மெஹக்கை அவனின் ஸ்மிரிதி பற்றிய பேச்சு அதிர்ச்சிகுள்ளாக்கியது.“அன்னைக்கு உன்கிட்ட பேசினாளா?” என்று நம்பமுடியாமல் கேட்டாள் மெஹக்.
“யெஸ்” என்று சொன்ன மாறனை இடைமறித்து,
“அன்னைக்கேவா.”
“ஆமாம்..ஸேம் நைட்..அவ நிறைய தடவை ஃபோன் செய்தா நான் எடுக்கலே..என் வேலையெல்லாம் முடிச்சிட்டு நானே அவளுக்கு ஃபோன் பேசினேன்.” என்றான் மாறன்.
“என்னைப் பற்றி என்ன சொன்னா?” என்று படபடக்கும் இதயத்துடன் கேட்டாள் மெஹக். அவளுக்கு மாறன் மீது ஏற்பட்டிருக்கும் ஈடுபாட்டை எப்படி  ஸ்மிரிதி அவனிடம் பகிர்ந்து கொள்ளாலம் என்று அவள் சினேகிதி மேல் கோபம் ஏற்பட்டது.
ஆனால் மாறனின் பதில் முற்றிலும் வேறாக, அன்பின் ஆணிவேராக அவள் அகத்தை துளைத்தது.
“எனக்குள்ள உன்னைப் பற்றி ஒரே ஒரு எண்ணம் தான் எப்பவும் ஓடிகிட்டு இருக்கு.. உன்னோட எல்லா பயத்தையும் என் கைப்பிடிச்சுகிட்டு நீ கடந்து வரணும்..அதை உன்னோட முப்பதாவது பிறந்த நாள்லேர்ந்து ஆரம்பிக்கணும்னு ஆசைப்படறேன்.” என்றான் மனதளவில் அவளை அவன் இணையாக இணைத்து கொண்டிருந்தவன்.
அவன் அன்பை மாறன் அவளுக்கு உணர்த்திய விதத்தில் உறைந்து போயிருந்தாள் மெஹக்.  மாறன் போன்ற ஒரு வாழ்க்கைத் துணையை அவள் நினைத்து பார்த்ததில்லை.  அவளுடைய வாழ்க்கையில் அப்படியொரு அதிர்ஷடம் அவளுக்கும் கிட்டும் என்று அவள் கனவிலும் எண்ணியதில்லை.  அதிர்ச்சியாக, அமைதியாக அமர்ந்திருந்தவளிடம்,
“ஸ்மிரிதி சொன்னது போலே உனக்கும், எனக்கும் எதுலேயும் பொருத்தமில்லை..பழைய மாறனா இருந்திருந்தா இந்த மாதிரி உன்கிட்ட என் மனசிலே இருக்கறதை வெளிப்படுத்த முயற்சி எடுத்திருக்க மாட்டேன்..இப்ப இருக்கற மாறனுக்கு எல்லாத்தையும் முயன்று பார்க்கணும்னு ஒரு வேகம்..அதான் உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றான்.
அப்போதும் மெஹக் மௌனமாக அமர்ந்திருந்தது அவன் மனதை என்னவோ செய்ய, அவளுக்கு அவன் பேசியது பிடிக்கவில்லை என்று நினைத்தவன், உடனே எழுந்து கொண்டு,”டிரெஸ் போட்டுக்க..கிளம்பலாம்.” என்றான்.
அவன் எழுந்தவுடன்,”ஸிட்” என்று அவன் கையைப் பிடித்து அவளருகே அவனை உட்கார வைத்து அவன் கையைப் பற்றியபடி,
“நீ என்கிட்ட ஏதோ சொல்லணும்னு என்னை இங்கே அழைச்சுகிட்டு வந்த..அது முடிஞ்சிடுச்சு..நானும் உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு தான் உன்கூட  வந்தேன்..அதை நான் இந்த ரூமுக்கு வந்தவுடனையே சொல்லிட்டேன் ஆனா உனக்குதான் அது இன்னும் புரியலே.” என்றாள் மெஹக்.
அவர்கள் வீடு வந்தபின் அவள் பேசிய அனைத்தையும் ஒருவரி விடாமல் மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்குப் அவள் எப்போது? என்ன சொன்னாள்? என்று பிடிபடவில்லை. 

Advertisement