Advertisement

ஸ்மிரிதியின் மனு – 46
“ஸாரி..லேட்டாயிடுச்சு.” என்று சொன்ன மெஹக், முகத்தை சுற்றியிருந்த ஸ்டோலை விலக்கி அதை கழுத்தை சுற்றி போட்டு கொண்டாள்.  அதை சரி படுத்தி கொண்டிருந்த மெஹக்கின் கண்களில் பட்டான் மாறன்.  இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடி நேரடியாக பார்த்து கொண்டனர்.  அந்த ஒரு நொடியில் அவளெதிரே டி ஷர்ட், ஜீன்ஸ், காடு போன்று வளர்ந்திருந்த முடியுடன் நின்றிருந்தான் அந்தக் காட்டுமிராண்டி.  இந்தமுறை வளர்ச்சியில்லாமல் வறட்சியாக காணப்பட்ட அவன் முகவாயைப் பார்த்து மனதில் மலர்ச்சி அடைந்தாள் மெஹக். அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் புவனாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் மெஹக்.
“நல்லா இரு மா..உனக்கு இன்னும் லேட்டாகும்ணு நினைச்சு இவனை சாப்பிட கூப்பிட்டேன்..நீயும் இப்ப சாப்பிட வர்றியா இல்லை கொஞ்சம் நேரமாகட்டுமா?” என்று ஆங்கிலத்தில் அவளுடன் உரையாட ஆரம்பித்தார்.
“நானும் இப்பவே சாப்பிடறேன்..எனக்குப் பசிக்குது..ஹோட்டல் பூல் (pool) கிளியராக லேட்டாயிடுச்சு..அதானலே நானும் லேட்டாயிட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டவள் கூச்சமே படாமல் அவள் தினமும் வந்து போகும் வீடு போல் தானாகவே டைனிங் டேபிளில் ஒரு சேரை இழுத்து போட்டு கொண்டு  அமர்ந்தாள்.
எப்போதும் போல் ஸ்டீல் தட்டு உபயோகிக்காமல் வாழை இலையில் பலகாரம் பரிமாறப்பட்டது.  டைனிங் டேபிளில் ஒரு புறம் மாறனும், ராமும் அமர்ந்தார்கள் மறுபுறம் மெஹக்கும் மட்டும் தனியாக அமர்ந்திருக்க அதனால் சிறிது சங்கடத்தை உணர்ந்தவள்,
“நீயும் என்னோட சாப்பிடேன்.” என்றாள் ஜனனியிடம்.
“தோசை சூடா செய்யணும்..அத்தைக்கு கால் வலி..அவங்களுக்கு நிக்க முடியாது அதனாலே நான் சமையல் இன்சார்ஜ் அவங்க டைனிங் இன்சார்ஜ்..உங்க மூணு பேருக்கும் உட்கார்ந்துகிட்டே பரிமாறுவாங்க.” என்று மெஹக்கின் அழைப்பை மறுத்துவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
”வடை, தோசை எல்லாம் சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்..அதான் நீங்க சாப்பிட உட்கார்ந்த  பிறகு பண்ண சொன்னேன்.” என்று பேசியபடி இலையில் சூடான இட்லி, சாம்பார், வடகறி, சட்னி என்று பரிமாற ஆரம்பித்தார்.
“ஏன் கால் வலிக்குது?” என்று சாப்பிட்டு கொண்டே மெஹக் அக்கறையாக விசாரிக்க,
“கை, கால், தொண்டை வலி இல்லாத டீச்சரைப் பார்க்க முடியாது..ஸ்கூல் மாடிப்படி ஏறி ஏறி, ஒவ்வொரு  கிளாஸ்க்கும் டயத்துக்கு ஓடி ஓடி, ஒவ்வொரு கிளாஸ்லேயும் நின்னுகிட்டே கத்தி கத்தி பாடம் சொல்லிக் கொடுத்து, போர்ட்லே எழுதி போட்டு போட்டு என் காலமும் ஓடி போயிடுச்சு..கையும், கால்களும் ஓய்ஞ்சு போயிடுச்சு..இப்ப வலி நிவாரணி மாத்திரைலேயும், வாலினி தைலேத்திலேயும் ஓடிகிட்டிருக்கு.” என்றார் புவனா.
“எனக்குக்கூட சில சமயம் ஸாங் ஷுட்டிங் பிறகு கை, கால் அசைக்க முடியாதபடி வலிக்கும்..ஆனா அடுத்த நாள் வேற படம், வேற பாட்டு, வேற டான்ஸ்.. இந்த மாதிரி தினமும் ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டி தான்..அதனாலே நான் வலிக்கு மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சா வெறும் மாத்திரை மட்டும்தான் சாப்பிட்டுகிட்டு இருப்பேன்..ஸோ காலைலே எழுந்தவுடனே லிம்பரிங் எக்ஸர்ஸைஸ்..இராத்திரி தினமும் ஸுவிம்மிங்..தூங்கா போகறத்துக்கு முன்னாடி வலி காணாம போயிடும்.. 
நீங்க வலிக்கு பயந்து உங்க கை, கால்களுக்கு ரெஸ்ட் கொடுக்காதீங்க..அப்பறம் நமக்கு தேவைப்படும் போது அது செயல்படாது அதேபோலே வலிக்கு மாத்திரை போட ஆரம்பிச்சா அது வேற பிரச்சனையை ஆரம்பிக்கும்.” என்று டாக்டர் போல் ஆலோசனைக் கொடுத்தாள் மெஹக்.
“இப்பெல்லாம் கால் வலின்னு அம்மா வீட்டை விட்டு வெளியே போகறதே இல்லை..வாக்கிங் கூட வீட்டுக்குள்ளேதான்..கிட்சனுக்கும், வாசலுக்கும் டெய்லி நூறு தடவை நடக்கறேன் அது போதும்னு சொல்றாங்க..இதுலே எங்கேயிருந்து எக்ஸர்ஸைஸ் பண்ண போறாங்க.” என்று புவனாவின் மீதிருந்த வருதத்தை வெளியிட்டான் ராம்.
அப்போது கிட்சனிலிருந்து சூடான தோசை, வடையுடன் வந்த ஜனனி,”தினமும் ஸுகூலுக்கு நடந்தே போனவங்க இப்ப பக்கத்து வீட்டுக்குகூட போகறதில்லே.” மெஹக்கிற்கு அதை பரிமாறியபடி ராமைப் போல் புவனாவைப் பற்றி கவலைப்பட்டாள்.
“நான் சில ஃபிட்னஸ் வீடியோஸ் ஷேர் செய்யறேன்…அந்த உடற்பயிற்சிகள் உங்க வயசுக்கு ஏற்ற மாதிரிதான் இருக்கும்….எந்த பிராப்ளமும் வராது..ஆனாலும் உங்க டாக்டர்கிட்ட கன்ஸல்ட் செய்திட்டு ஆரம்பிங்க.” என்றாள் மெஹக்.
“எனக்கு எதுக்கு அதெல்லாம்..இவ்வளவு வருஷம் யாரோட துணையுமில்லாம இவனைத் தனியா வளர்த்து என் கடமையை செய்திட்டேன்.. இப்பவரை இந்த உடல் வலிகளோட என் வேலையை நானே செய்ய முடியுது.. அது போதும் எனக்கு.” என்றார் வாழ்க்கை வலிகளைத் தாங்கி தாங்கி தளர்ந்து போயிருந்த புவனா.
சமீபத்தில் தனி மரமாக்கபட்ட மெஹக்,“இந்த மாதிரி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சா உங்களுக்கு உடல் வலி போகும் ஆனா உங்க மன வலி போகாது..அதுக்கு வேற மருந்து இருக்கு.”என்று சொன்னவள் அதோடு நிறுத்தாமல் இரண்டு ஸ்பூன்களின் உதவியுடன் ஒருமுறைக்கூட வழுக்காமல் லாவகமாக தோசை, இட்லி, வடையை சாப்பிட்டு முடித்திருந்தவள் அவள் வலது கையை இடது புறத்தில், நெஞ்சின் மீது வைத்து,”இந்த வலி வெளியே சொல்ல முடியாது ஆனா சொல்லாமயே நம்ம முகத்துலே தெரிஞ்சிடும்..என் முகத்தைப் பல பேர், பல தடவை, பல திரைலே பார்ப்பாங்க அதனாலே நான் ரொம்ப கவனமா இருக்கணும்..அதான் அந்த வலிக்கு மருந்தைக் குடிச்சு அந்த இடத்தை வெற்றிடமாக்கிடுவேன்..ஸோ உள்ளே எதுவுமில்லைன்னா பாரமா இருக்காது.” என்று வெளிப்படையாக பேசினாள்.
அதைக் கேட்டு கொண்டிருந்த மூவரில் இருவர் அவளைப் பரிதாபத்துடன், பரிவுடன் பார்க்க மாறன் மட்டும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் தீவிரமாகப் பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது ஜனனி இன்னொரு தோசையுடன் வர அதை மறுத்துவிட்டு எழுந்து கொண்டாள் மெஹக். பின் மாறனும், ராமும் சாப்பிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தும,”ஸாரி” சொல்லிவிட்டு மறுபடியும் அமர்ந்து கொண்டாள்.
“இவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு முடிக்க நேரமாகும்..பரவால்லே நீ போய் சோபாவிலே உட்கார்ந்துக்கோ.” என்றார் புவனா.
“நான் ஜனனிக்கு உதவி செய்யறேன்.” என்று சொல்லி அவள் ஸ்லிங் பாக், ஸ்டோல் இரண்டையும் அவள் அமர்ந்திருந்த சேரில் வைத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றாள் மெஹக்.
அங்கே ஒரு அடுப்பில் தோசையும், மற்றொரு அடுப்பில் வடையும் செய்து கொண்டிருந்தாள் ஜனனி. மெஹக் உள்ளே வந்தவுடன்,
“நீ எதுக்கு எதுக்கு இங்கே வர?” என்று கேட்டாள்.
“உனக்கு உதவி செய்யதான்..நீ நகரு..நான் தோசை செய்யறேன்.”
“உனக்கு தோசை செய்ய வருமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஜனனி.
“வராது..டிரை பண்றேன்.”
“வேணாம் மெஹக்..மாறன் அண்ணன் ரொம்ப பசிலே இருக்காங்க..வேகமா செய்யணும்.” என்றாள் ஜனனி.
“நீ இரண்டு தோசை செய்..நான் பார்க்கறேன் அதுக்கு அப்பறம் நானே செய்யறேன்.” என்று ஜனனி அருகே நின்று அவள் தோசை வார்ப்பதைக் கவனமாக பார்த்தாள்.  இரண்டு தோசை செய்து முடித்தவுடன் அதை எடுத்து கொண்டு ஜனனி வெளியேறிய பின் அடுத்த தோசையை வார்க்க ஆரம்பித்தாள் மெஹக். முதலில் மாவை வட்டமாக பரப்ப கஷ்டப்பட்டவள் பின் முயற்சி செய்து வட்ட வடிவில் அவள் முதல் தோசையை வார்த்தாள். அப்போது ஜனனிக்குப் பதிலாக உள்ளே வந்த புவனா,
“ஜனனியும் சாப்பிடட்டும்..அவளுக்கும் லேட்டாயிடுச்சு..நீ நகரு.” என்றார்.
“நீங்க டீச்சர் வேலை பண்ணுங்க..இப்ப நாந்தான் உங்க ஸ்ட்டுடண்ட்.. பாடத்தை ஆரம்பிக்கலாமா?” என்ற மெஹக் கிட்சன் ஓரத்தில் இருந்த ஸ்ட்டூலை அவருக்காக கொண்டு வந்து அடுப்பின் அருகில் போட்டாள்.
“தாங்க்ஸ்.” என்ற அதில் அமர்ந்து கொண்ட புவனா டீச்சரின் மேற்பார்வையில் தோசை வார்க்கவும், வடை செய்யவும் கற்று கொண்டாள் மெஹக். அவள் செய்த தோசை, வடையைப் பெருமையாக கொண்டு வந்து டேபிளில் வைத்துபோது வேர்வை வழிந்து கொண்டிருந்த அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவளைப் பேரழகியாக காட்டியது மாறனிற்கு.  அந்த க்ஷணம் மெஹக்கைப் பற்றி ஸ்மிரிதி சொன்னது அவன் மனதில் வந்து போனது. 
“எப்படி மெஹக் அதுக்குள்ள கத்துகிட்ட?

“இன்னைக்கு முயற்சி செய்து பார்க்கலாம்னு தோணிச்சு..இவ்வளவு நல்லா வரும்னு நானே நினைக்கலே..என் ப்ரோஃஷன்லே ஜெயிக்கறது, தோற்கறது இரண்டும் என் கைலே கிடையாது..டீம் ஃபர்ட்..அதுலே என்னோட பார்ட்டை எப்பவும் சரியா செய்ய முயற்சி செய்வேன்..எல்லாருக்கும் திருப்தியா வர்ற வரைக்கும்..ஸோ முயற்சிதான் எனக்கு முதல் படி.” என்றாள் மெஹக்
மெஹக் எடுத்து கொண்ட முயற்சியை மனம் திறந்து பாராட்டினர்  ஜனனி, ராம் இருவரும்.  ஆனால் மாறனிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.  அதில் மனம் சோர்ந்து போன மெஹக் அதை வெளிக் காட்டவில்லை. 
அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கல்யாண ஆல்பத்தை கொண்டுவந்து மெஹக்கிடம் கொடுத்தாள் ஜனனி. வரவேற்பறை சோபாவில் கால்களை மடிக்கி உட்கார்ந்தபடி மடியிலிருந்த ஃபோட்டோ ஆல்பத்தைப் பார்வையிட்டு கொண்டிருந்த மெஹக்கின் அருகில் அமர்ந்துபடி ஆல்பத்தில் இருந்தவர்களைப் பற்றி விரிவாக விவரித்து கொண்டிருந்தாள் ஜனனி. அப்போது அவர்கள் பார்வையில் வந்தது ஸ்மிரிதி, மனு, பிரேமா, நாதன், சிவகாமியுடன் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம். அதைக் காண்பித்து,
‘இந்த ஃபோட்டோ எடுக்கும் போது எனக்கு ஸ்மிரிதி யாருன்னு தெரியாது..அன்னைக்கு சாயந்திரம் ஏர்போர்ட்லேதான் அவ பிரேமா ஆன்ட்டி பொண்ணுனு தெரிஞ்சுது.” என்றாள் ஜனனி.
அப்போது,”நானும் அவளை ரொம்ப வருஷம் கழிச்சு ராம் கல்யாணத்திலே தான் பார்த்தேன்..ராமுக்கும் அவ அறிமுகமில்லை..இப்ப அவ கல்யாணத்துலேதான் கொஞ்சம் நல்லா பழகினோம்.” என்றார் புவனா.
“நானும், ஸ்மிரிதியும் ஸிக்ஸ்த் கிரேட்லேர்ந்து ஒண்ணா படிச்சுகிட்டு இருந்தோம் ஆனா பிரண்ட்ஸ் கிடையாது.. அப்ப எங்களோடயெல்லாம் அவ சேர மாட்டா..படிப்புலே, ஸ்போர்ட்ஸ்லே, ஆர்ட்லே எல்லாத்துலேயும் டாப்பர்..ஆல் ரவுண்டர்…மல்டி லிங்குவல்..அவ நினைச்சதை சாத்திச்சு இருக்கலாம் ஆனா அங்கிளும், ஆன்ட்டியும் ஸெப்பரேட் ஆக போறாங்கன்னு தெரிஞ்ச பிறகு அவ மாறி போயிட்டா..அப்பதான் நாங்க பிரண்ட்ஸானோம்.” என்றாள் மெஹக்.
அப்போது அவளை இடைமறித்த புவனா,”போனமுறை உனக்கு டயமில்லைன்னு சொல்லி நீ வீட்டுக்கு வரவே இல்லை..இந்தமுறை இன்னைக்கு மத்தியானம் நீ இங்கே வர போறேன்னு சொன்னதாலதான் உனக்கு காலைலேயே ஃபோன் செய்தா..ஆனாலும் நீ வர மாட்டேன்னு பயந்துகிட்டு இருந்தா..அதான் நீ ஹோட்டல் வந்த பிறகு உனக்குத் திரும்ப ஃபோன் பேசினா.” என்று பிரேமா, கார்மேகத்தின் பேச்சை தவிர்த்து அவளைப் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்தார் புவனா. அந்தச் செயல் மெஹக்கின் ஆழ்மனதை அறிய மாறனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்பதை அந்த ஆசிரியை அறியவில்லை.
“போனமுறை பிஸிதான்..இந்தமுறையும் பிஸிதான்..ஆனா எல்லாம் நைட் ஷெட்யூல்..நாளைக்கு சாய்ந்திரம் மேலேதான் வேலை ஆரம்பிக்கும்..அதான் இன்னைகே வந்துட்டேன்..ஒருமுறை இவங்களோட சேர்ந்து சாப்பிடறேன்னு தில்லிலே பிராமிஸ் பண்ணினேன் அது இப்பதான் நிறைவேறிச்சு.” என்றாள் மெஹக்.
“இரண்டு தமிழ் பட ஷூட்டிங்கும் இங்கேதானா மெஹக்?” என்று ஜனனி கேட்க,
“இப்போதைக்கு ஒரு படம்…அடுத்த படம் வெளி நாடுலே ஷூட்டிங்.”
“ஹிந்திலே புது படம் பண்றியா? 
“நிறைய இல்லை..நான் பண்ணனும்னு நினைச்ச இரண்டு மூணு மிஸ்ஸாயிடுச்சு..அந்த மாதிரி நேரத்திலேதான் இரண்டு மெஹக் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணும்.” என்று சொல்லி சிரித்தாள் மெஹக்.
“உன் தங்கை உன்னைப் போல இருந்தா உனக்கு பிடிச்ச படத்திலே நீ நடிக்கலாம் உனக்கு ஒத்துவராத படத்திலே அவ நடிக்கலாம்..ஆக மொத்தம் அக்கா, தங்கை இரண்டு பேர் மட்டும் மாற்றி மாற்றி நடிச்சுகிட்டு இருப்பீங்க.” என்றாள் ஜனனி.
அதற்கு பதில் சொல்லாமல் ஆல்பத்தைப் புரட்டியபடி அதன் கடைசிப் பக்கத்திற்கு வந்தவள் அங்கே ஒட்டியிருந்த நான்கு ஃபோட்டோக்களைப் பார்த்து புன்னகை சிந்தினாள் மெஹக்.  அந்தப் பக்கத்தில் ஜனனி, ராம் இருவரின் கல்யாணத்தன்று எடுத்த ஃபோட்டோவும் அதன் பக்கத்திலேயே அவர்கள் இருவரின் பத்து வயது ஃபோட்டாவும் இருந்தது.  
அந்தப் பக்கத்தை பார்த்தபடி,”நான் பத்து வயசா இருக்கும்போது என்னைவிட அழகா இருந்த என் தங்கைக்குதான் நடிக்க வாய்ப்பு கிடைச்சுது..அவ ஒரு சில படங்கள்ள குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கா.. அவதான் என்னைவிட அழகுன்னு எல்லாரும் சொல்லுவாங்க..நான் சாதாரண ஸ்டார்கூட ஆக மாட்டேன் அவதான் ஸுப்பர் ஸ்டாராவான்னு எங்கம்மாவும் சொல்லுவாங்க.
ஆனா அவங்க எதிர்பார்த்த மாதிரி நடக்கலே..குழந்தையா இருக்கும் போது அழகுக்கு வேற டெஃபனிஷன்..பெரிசான பிறகு அழகுக்கு வேற டெஃபனிஷன்..அந்த மாதிரி எல்லா நேரமும் அழகா இருக்கறத்துக்கு கடின உழைப்பு தேவை..சொந்த விருப்பு, வெறுப்பு பார்க்க முடியாது, சுதந்திரமா இருக்க முடியாது..அதெல்லாம் மீனலுக்குச் சரி வரலே..இந்த விஷயத்துனாலே அவளுக்கும், அம்மாக்கும் ஒத்துவரலே..நான் விடா முயற்சி செய்து என் மனசு, உடம்பு இரண்டையும் எல்லாத்துக்கும் ஒத்துழைக்க வைச்சேன்..எப்பவும் அழகா இருக்க கத்துகிட்டேன்..
மீனல் வெளி நாடு போய் படிக்க முடிவு செய்த பிறகு  என்னை வைச்சு எங்கம்மா எடுத்த படமெல்லாம் நல்லா போச்சு அப்படியே நானும் என் சொந்த முயற்சிலே எனக்குன்னு இடம் பண்ணிகிட்டேன்.” என்று அவள் சினிமா பிரவேசத்தை பகிர்ந்து கொண்டவள் சிறிது இடைவெளிக்கு பின்,”என்கிட்டேயும் என்னோட பத்து வயசு ஃபோட்டோ இருக்கு.” என்று அவள் ஃபோனைத் திறந்து கலெரியில் அவளும், அவள் தங்கை மீனலும் சேர்ந்து எடுத்து கொண்டு ஃபோட்டோவை ஜனனியிடம் காட்டினாள்.  அதை ஜனனி புவனாவிடம் காட்ட அவரிடமிருந்து அது ராமிடம் செல்ல அவனருகே அமர்ந்திருந்த மாறனும் அந்த ஃபோட்டோவை பார்த்தான்.  
பத்து வயது மெஹக்கும், அவள் தங்கையும் நீச்சல் உடையில், நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தனர்.  மெஹக்கின் தங்கை தீவிரமாக கமெராவின் கண்களை பார்த்து கொண்டிருந்தாள்.  தண்ணீரை வாரியிறைத்தபடி அவள் முகத்தருகே விழுந்து கொண்டிருந்த நீர்த் துளிகளுடன் அவள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தாள் மெஹக்.  அந்தப் புகைப்படத்தில் மெஹக்கைத் தவிர வேறு எதுவுமே மாறனின் கண்களில் படவில்லை.
“இது எங்கே எடுத்தது மெஹக்? இவ்வளவு ஹப்பியா இருக்க..ஹாலிடே வா?”
“எங்க வீட்டு மாடிலே.” என்றாள் மெஹக்.
“வீட்டு மாடிலே ஸுவிம்மிங் பூலா?” என்று ஆச்சரியப்பட்டாள் ஜனனி.
“சின்ன பூல் தான்..ஆழம் கிடையாது..வீட்லே இருந்தா தினமும் இராத்திரி ஸுவிம்மிங் பண்ணிட்டு தான் தூங்க போவேன்.”
“வீட்லே பூல் நான் இதுவரை பார்த்ததில்லை.” என்றாள் ஜனனி.
“ஸ்மிரிதி வீட்லே ஒலிம்பிக் ஸைஸ் பூல்..ஸ்பிரிங் போர்ட்..ஸ்மிரிதியும், மனீஷும் சேர்ந்து டைவ் பிராக்டீஸ் செய்வாங்க….நான் அந்த அளவு கிடையாது..ஆனா ஸுவிம்மிங் என் தினசரி உடற்பயிற்சிலே இருக்கு.”
மெஹக்கின் ஃபோனை அவளிடம் திருப்பிய ஜனனி,“உன் தங்கை என்ன படிக்கறா?” என்று கேட்டாள்
“ஹோட்டல் மனெஜ்மெண்ட்.”
“ஓ..இந்தியா திரும்பி வந்த பிறகு கபீருக்கு உதவியா இருப்பாளா?’ என்று ஜனனி கேட்க,
“அவ திரும்பி வர போகறதில்லை.”
“உங்கம்மா சினிமாவுலே நடிக்க சொல்லிடுவாங்கன்னு பயந்துகிட்டு வரலேயா?”
“இல்லை….அவ சமீபத்திலே அங்கே ஸெட்டிலான இந்தியரைக் கல்யாணம் செய்துகிட்டு எங்கம்மா, அப்பா இரண்டு பேரையும் அவகூட நிரந்திரமா அழைச்சுகிட்டு போயிட்டா..இந்தியா வந்தா இனி டூரிஸ்டாதான் வருவா.” என்று மெஹக்.
“இங்கே உன்கூட யாரு மா இருக்கா?” என்று புவனா கேட்க,
“தனியாதான் இருக்கேன்.” என்று திடமானக் குரலில் மெஹக் பதிலளித்தாலும் அவள் உள்ளே உடைந்து போயிருக்கிறாள் என்று அவளுள் அமிழ்ந்து அவள் அடி மனதின் ஆழத்தை பார்த்து கொண்டிருந்தவனுக்குப் புரிந்து போனது. 
அதைக் கேட்ட நால்வரும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் அமைதியாக இருந்தனர்.  சில நிமிடங்கள் கழித்து, மெஹக் வந்ததிலிருந்து மௌனமாக இருந்த மாறன் வாயைத் திறந்து,”கிளம்பலாம்..மெஹக்.” என்றான்.
அதைக் கேட்டவுடன் ஒரு நொடிகூட யோசிக்காமல் அவள் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து கொண்ட மெஹக்,”தாங்க்ஸ் ஃபார் தி டின்னர்..வரேன் ஆன் ட்டி, பை ஜனனி..பை ராம்.” என்று விடைப்பெற, 
“ஒரு நிமிஷம்.” என்று சொல்லி பூஜையறைக்குள் சென்று திரும்பி வந்த புவனா மெஹக்கின் நெற்றியில் விபூதியை இட்டுவிட்டு,”நீ தனியா இல்லை..நாங்கெல்லாம் இருக்கோம்..நம்ம எல்லாருக்கும் கடவுள் இருக்காரு.” என்று சொல்லி அவள் அணைத்து கொண்டு விடைக்கொடுத்தார்.
“மாறன்..ஜாக்கிரதையா அழைச்சுகிட்டு போ..இராத்திரி வேளைலே வேகமா போகதே..போய் சேர்ந்த பிறகு எங்களுக்கு ஃபோன் செய்திடு.” என்று அதுவரை அவனைப் பற்றி, அவன் வீட்டு வேலைகளைப் பற்றி பேச்சைத் தவிர்த்தவர் அவனுக்கு அடுக்கடுக்கான கட்டளையிட அதற்கு தலையாட்டியபடி மெஹக்குடன் புறப்பட்டான் மாறன்.
அவர்கள் இருவரையும் வழியனுப்பி விட்டு கேட்டை பூட்டி கொண்டிருந்த ராம்,”மெஹக் டாக்ஸிலே போவாங்கன்னு நினைச்சுகிட்டிருந்தேன்..திடீர்ன்னு  மாறனோட கிளம்பி போயிட்டாங்க.” என்றான்.
“எனக்கும் ஆச்சரியம் தான்..மெஹக் வந்துலேர்ந்து மாறன் அண்ணா வாயைத் திறக்கவே இல்லே..ஆனா முன்னாடியே சொல்லி வைச்சது போலே அவங்க கிளம்புன்னு ஒரு வார்த்தை சொன்னவுடனே இவ  கிளம்பிட்டா.” என்றாள் ஜனனி.
“டேய் ராம்….மெஹக்கோட ஹோட்டல் போய் சேர எத்தனை நேரமாகும் டா?” என்று கேட்ட புவனாவும் அதே கேள்வியை அப்போது மாறனிடம் கேட்டு கொண்டிருந்த மெஹக்கும் அறிந்திருக்கவில்லை மாறன் அவளை அழைத்து கொண்டு போவது அவன் வீட்டிற்கென்று. 
 
  
 

Advertisement