Advertisement

ஸ்மிரிதியின் மனு – 45_2
“ஆனா என்ன டி?”
“மனிஷ் வீட்டுக்கு வரான் டி..கல்யாணத்துக்குப் பிறகு ஸ்மிரிதி வீட்லே இருந்தாலும், இல்லாட்டாலும் அவன் சனி, ஞாயிறு வந்துகிட்டிருந்தான்..இப்பதான் மாறன் ஊருக்கு போன பிறகு,  நான் பாக்கிங் ஆரம்பிச்ச பிறகு அவன் வர்றது குறைஞ்சிருக்கு..நாங்க ஷிஃப்ட் ஆன பிறகு அவன் திரும்ப சனி, ஞாயிறு வரலாம்..ஸ்மிரிதியும், அவனும் ரொம்ப கிளோஸ்..அவகிட்ட பயமும் இருக்கு, பாசமும் இருக்கு.. நல்ல பையன்..கொஞ்சம் மாறனை போல பிடிவாதம் ஆனா மாறனை போல இல்லாம எடுத்து சொன்னா கேட்டுப்பான்..எங்களை அத்தை, மாமான்னு கூப்பிட கத்துகிட்டான்.” என்று மனிஷின் புகழ் பாடினார் சிவகாமி. 
“அவன் வந்த எனக்கு என்ன டீ..நான் அங்கே வந்த பிறகு அவனை அனுப்ப அவங்க பிரியப்படணும்.” என்று தெளிவாகப் பேசினார் பிரேமா.
“நீ சீக்கிரமா இங்கே வந்துடு..உன் பொண்ணுக்கு அப்படியே நம்ம ஊர் சமையலையும் கத்து கொடுத்திடு..என்கிட்டேயிருந்து கத்துகிட்டா ஆனாலும் அம்மாகிட்டேயிருந்து கத்துகறது போல வராது.” என்றார் சிவகாமி.
“அவளுக்கு சமைக்க தெரியுதா? அன்னைக்கு காலைலே ஒரு கப் காபிக்கு அத்தனை நக்ரா.”
“அன்னைக்கு ஒரு நாள் தான் அப்படி..அடுத்த வாரம் முழுக்க அவதான் சமையல் செய்தா.. பசங்க இரண்டு பேருக்கும் ஸிம்பிலா சமைக்க கத்து கொடுத்திருக்கா.”
“நிஜமாவா டீ சொல்ற?”
“நீ என்கிட்டே இப்பெல்லாம் பேசறதே இல்லை….அதான் உனக்கு வீட்லே நடக்கற விஷயம் எதுவும் தெரியலே.”
“கொஞ்சம் நாளா சோர்வா இருக்கு டீ .. எல்லா வேலையும் மெதுவாதான் செய்யறேன்.. சாயந்திரம் சீக்கிரமாவும் தூங்க போயிடறேன்..ஸ்மிரிதி பேசிகிட்டு இருக்கா டீ..நீ கோயமுத்தூர் போக போறேன்னு அவ சொன்னதிலிருந்து உன்கிட்ட பேச சரியான சந்தர்ப்பதை எதிர்பார்த்துகிட்டிருந்தேன்.”
“என்ன டீ சொல்ற? சரியான சந்தர்ப்பமா? தலை நகர்லேர்ந்து நான் கோவைக்கு போகறது நம்ம நாட்டு தலையெழுத்தை மாற்ற போகுதா?..சாதாரணமா பேச எதுக்கு டீ கால நேரம் பார்த்துகிட்டு இருக்க?’
“என் பொண்ணு எதையாவது ஏடாகூடமா பேசி வைச்சு அதனாலே நீ கோவை போறியோன்னு பயந்துகிட்டு தான் நான் உன்கிட்ட பேசலே..அவளுக்கு நான் நல்லவிதமா சொல்லிட்டுதான் வந்தேண்டி..ஆனா அவளைக் கட்டுப்படுத்த முடியாது, வேகமா பேசிட்டு அப்பறமா யோசிக்கறதுலே என்ன பிரயோஜனம்..
அன்னைக்கு கார்லே மனுவும், அவளும் அப்படி சண்டைப் போட்டாங்க..இப்ப உன் வீட்லே அவளாலே என்ன சண்டையோன்னு நினைச்சு நினைச்சு எனக்குத் தூக்கம் போயிடுச்சு..நீ கோயமுத்தூர் போகறத்துக்கு அவதான் காரணமான்னு அவளையே நிறைய தடவை விசாரிச்சிட்டேன்..இல்லைன்னு மறுக்கறா..அதே சமயம் என்ன காரணம்ன்னு சொல்ல மாட்டேங்கறா..
நீயும் இவ்வளவு நாள் அவளோட பொறுமையா இருந்திருப்ப இப்ப பொறுப்பு வரட்டும்னு தானே அவளைத் தனியா விட்டிட்டு போற? கதவைத் திறக்க உதவி கேட்டவளை எப்படி டீ உடனே திருத்த முடியும்? நீயே அவளுக்கு கொஞ்சம் பொறுமையா சொல்லி கொடுடீ..தனியா விடாத டீ.” என்று சினேகிதியிடம் கெஞ்சினார் பிரேமா.
பிரேமா பேசியதைக் கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார் சிவகாமி.  அவர்கள் வீட்டு விஷயத்தை அவள் அம்மாவிடம்கூட ஸ்மிரிதி பகிர்ந்து கொள்ளவில்லை என்ற செய்தி அவருக்கு அவர் மருமகள் மீது மரியாதையை ஏற்படுத்தியது.
“எதையாவது உளறாதே பிரேமா..அன்னைக்கு ஒரு நாள் கதவைத் திறந்து விட சொன்னதை வைச்சு அவளைத் தப்பா பேசுவியா?..அவ தில்லிலே இருந்தா எனக்கு கவலையே இல்லை சமைலேர்ந்து எல்லா வேலையும் அவளே செய்து முடிச்சிடுவா..
உன் பொண்ணு அவ புருஷன் வீட்லே எப்படி இருக்கான்னு நீயே அவ வாயாலே கேட்டு தெரிஞ்சுக்கோ..அவ சொல்ல விருப்பப்படலேன்னா நீயும் குடைஞ்சுகிட்டு இருக்காத..அப்பறம் அவ சண்டை போடறதில்லை அவ மாமியார்தான் அவ மாமனாரோடையும், மகன்களோடையும் சண்டை போடறாங்கன்னு உண்மையை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமாயிடும்.” என்றார் சிவகாமி.
“நாதனோடையும், பசங்களோடேயும் நீ சண்டை போடறியா?”
“ஏன் போடக்கூடாதா? ரிசெப்ஷன்லே மாறன் என்ன செய்தான்னு நீ பார்த்த இல்லை..அதுக்கு அப்பறம் அவனை ஒரே ஒரு வார்த்தை “என் பைனான்னு” கேட்டேன் டீ..அன்னைக்கு ஆரம்பிச்சுது அவன் அடாவடிதனம்..அப்பறம் அவன் இங்கே செய்துகிட்டிருந்த வேலையை எங்கிட்ட சொல்லாம விட்டுடான் டி..அவ்வளவு பெரிய விஷயத்தைப் பற்றி வாயேத் திறக்கலே டீ….அதுக்கு பெரியவன்தான் சின்ன விஷயத்தைக்கூட பொறுப்பா சொல்றான் சின்னவன் பொறுப்பில்லாதவன்னு சொன்னேன் டீ..அதுக்கு அவன்  மனுவுக்கு எல்லாம் அவனுக்குப் பிடிச்ச மாதிரி நடந்திச்சாம், நடத்தி வைச்சோமாம்..இவனுக்குதான்  பிடிக்காத படிப்பு, பிடிக்காத வேலையாம்.. அதெல்லாம் எங்களுக்காகதான் செய்தானாம்..இனி அவன் விருப்பப்படிதான் இருக்க போறானாம்..
அவன் அப்படி சொன்னதும் எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு டீ.. சரி எப்படி வேணும்னாலும் அவன் விருப்பப்படி இருந்துகட்டும்னு நான் கோவைக்கு கிளம்பிட்டேன்..அவன் சும்மா இங்கே சுத்திகிட்டு இருக்கறதுக்கு அங்கே வீட்டு வேலையை முடிச்சு கொடுக்கட்டும்னு நாதன் அனுப்பி வைச்சாரு..
இங்கே அவன் வீட்டிலே இருந்த வரைக்கும் என்கிட்ட எப்படி சண்டைப் பிடிக்கலாம்னு காத்துகிட்டிருந்தான்..நான் அவனுக்குப் பிடி கொடுக்கவே இல்லை..அப்பறம் அவனும் கோயமுத்தூர் போயிட்டான்..இப்பவரை என்கிட்ட பேசறதே இல்லை..தில்லி வந்தாலும் எல்லா பேச்சும் மனுவோடதான்..நாதன்கிட்டேயும் ஒண்ணு இரண்டு வார்த்தைதான்..அவங்க அம்மா அவரை கேள்வி கேட்டது அவருக்குப் பிடிக்கலே..பொறுப்பில்லாதவன்னு திட்டினது பிடிக்கலே.” 
“மாறனா அப்படி நடந்துகிட்டான்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் பிரேமா.
“அவன் தான்..என் இரண்டாவது பையன் தான்.” என்றார் சிவகாமி.
மாறனைப் பற்றி அவன் தாய் சொன்னதை நம்பமுடியாமல்,
“மனு கேட்டுகிட்டதாலே என்னை மாசா மாசம் மாறன் தான் செக்-அப்புக்கு அழைச்சுகிட்டு போறான்..நேத்து என்னை சுசித்ரா வீட்டுக்கு அழைச்சுகிட்டு போனதும் அவன் தான்..அவன் கோவைலே இருக்கறவரை..நான் தில்லி போகறவரை என்னை ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போக வேண்டிய பொறுப்பை அவந்தான் ஏத்துகிட்டிருக்கான்.”
“என்ன டி சொல்ற? மாசா மாசம் உன்னை ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போகறது மாறனா? இவ்வளவு பொறுப்பாவா இருக்கான்?”
“ஆமாம்..சுசித் ராவுக்கு பெட் ரெஸ்ட்ன்னு சொன்னதிலேர்ந்து மஞ்சு நாத்தாலே இங்கே வர முடியலே..அதனாலே நான் ஒரு செக் அப் மிஸ் பண்ணிட்டேன்..அப்பதான் ஒரு நாள் திடீர்ன்னு என்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போக மாறன் வந்து நிக்கறான்..
அவனுக்குப் பொறுப்பில்லைனு யார் சொன்னா? மனு கல்யாணத்திலே அவன் தான் பொறுப்பா உன் உறவுக்காரங்களை கவனிச்சுகிட்டான்….அதை மறந்து போயிட்டியா?..மனுவோட அவன் தன்னை ஒப்பிட்டு பார்த்திருந்தாலும் நீ அதை அங்கயே அவங்க இரண்டு பேரோட அம்மாவா முடிச்சு வைச்சிருக்கணும்…
என்கிட்ட மாறன் பழகறதுலே எந்த வித்தியாசமும் தெரியலே..மனு போலதான் இருக்கான்..அவன் மனசுலே எந்த பேதமுமில்லை….அவன் செய்த தவறுகளை மட்டும் பிடிச்சு நீ தொங்கிகிட்டு இருக்க..நான் ஸ்மிரிதியோட செய்த அதே தப்பை நீ மாறனோட செய்யற.” என்றார் பிரேமா.
மாறனிற்காக பிரேமா பரிந்து பேசியதை கேட்ட சிவகாமி,”என்ன டீ வேற யார் கண்ணுக்கும் அவன் பண்ணினது தப்பாவே தெரியலேயா?நான் அம்மாங்கறதுனாலே என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படி தெரியுதா?’ என்று அங்கலாயத்தார்.
“நீ அம்மாவா மட்டும் பார்க்கலே..டீச்சரம்மாவாவும் பார்க்கற… அந்த மாதிரி பார்ததுக்கு அவன்தான் அவன் அம்மாவை மன்னிக்கணும்.” என்று கேள்விகுறியாகிப் போன தாய், மகன் உறவிற்கு அவர் பார்வையில் பதில் கொடுத்தார் பிரேமா.
“என்னது அவன் என்னை மன்னிக்கணுமா?” என்று சிவகாமி அதிர்ச்சியுடன் கேட்க,
“பரவால்லே என் அம்மாதானேன்னு அவனே உன்கிட்ட  வந்து பேசுவான்..அது மன்னிப்பு தானே.” என்று சிவகாமியை முற்றிலுமாகப் புரட்டி போட்டது பிரேமாவின் விளக்கம.
பிரேமாவுடன் பேசிய பின் மாறனைப் பற்றிய சிந்தனைகள் சிவகாமியை சிலந்தி போல் ஆக்கிரமித்து கொண்டன.
 
 அன்று மாலை மாறனிற்காக அவன் வீட்டு வாசலில் காத்து கொண்டிருந்தான் ராம்.  பைக்கில் வந்திறங்கிய மாறனின் தோற்றத்தைப் பார்த்து,
“என்ன டா ஹேர் கட் செய்ய டயமில்லையா..இல்லை வேண்டுதலா இப்படி வளர்த்து வைச்சிருக்க.” என்று கேட்டான்.
“வீட்லேர்ந்து மூணு கிலோமீட்டர் சலூனுக்கு..அவன் கடை திறக்கறத்துக்குள்ள வேலை செய்ய ஆளுங்க வந்திடறாங்க..சாயந்திரம் அவன் சீக்கிரமா கடையை மூடிட்டு போயிடறான்..எனக்கும் கச கசன்னு இருக்கு..இங்கே பக்கத்திலே ஏதாவது சலூன் திறந்திருக்கு மா டா?” என்று விசாரித்தான்.
“இப்ப முடி வெட்டிக்க போறியா?”
“ஏன் டா..மூகூர்த்தம் பார்க்கணுமா?’
“உன்னை வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டேன்..சலூனுக்கு அழைச்சுகிட்டு போக இல்லை..விளக்கு வைச்ச அப்பறம் முடி வெட்ட மாட்டாங்கடா..எங்கம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.”
“ஜனனிக்குத் தெரியுமடா நீ முடிவெட்டகூட உங்க டீச்சர் அம்மாகிட்ட பர்மிஷன் கேட்கற விஷயம்?’ என்று சொன்ன மாறனை முதுகில் அடித்தான் ராம்.  
 
அதே நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தனர் புவனாவும், ஜனனியும்.
“என்ன டா வீட்டு பையனாட்டம் சாப்பிட கூப்பிட்டா மாப்பிள்ளையாட்டாம்  பிகு செய்துகற.” என்று எடுத்தவுடனையே அவனைக் கோபித்து கொண்டார் புவனா.
“உங்க பையன் இப்படிதான் மாப்பிள்ளை முறுக்கை காட்டறானா? என்று புவனாவிடம் கேட்ட மாறன் உடனே ஜனனியிடம்,”உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு உனக்கு டிரபிள் கொடுக்கறானா? அடுத்தமுறை சொல்லட்டும் நானே அவனைத் தூக்கி கொண்டு போய் உங்க வீட்டு வாசல்லே டெலிவரி செய்திடறேன்.” என்றான்.
“அம்மா..சும்மா இருக்க மாட்டீங்களா? டேய்..பிரச்சனை இல்லாத இடத்திலே எதுக்குடா  பிரச்சனையை ஆரம்பிக்கற..அவ சொல்லும் போதெல்லாம் அவ வீட்டுக்கு போறோம்..ஒருமுறைகூட  நான் நோன்னு சொன்னதே இல்லை.” என்று ரகுகுலத் திலகனாக பேசினான் ராம்.
“என்ன ஆன் ட்டி..அடுத்த முறை உங்களைப் பார்க்க ஜனனி வீட்டுக்குதான் வரணுமா? அவ வீடு இங்கே பக்கத்திலேதானே? என்று மாறன் பத்த வைக்கும் வேலையை செய்ய,
“டேய்..நீ ஏன் என் வீட்டுக்கு வரலேன்னு கேட்டதுக்கு என் வீட்டையே மாத்திடுவியா? உங்கம்மா கரெக்ட்டாதான் சொல்றா உன்னை எப்பவும் அவ கண் பார்வைலே வைச்சு மானிட்டர் செய்யணும்னு.” என்றார்.
“சரிங்க டீச்சர்..வேற என்ன சொன்னங்க என் டீச்சரம்மா? வாசல்லையே நிக்க வைச்சிருக்கீங்க..சாப்பாடுக்கு முன்னாடி தலை நகர்லேர்ந்து கேள்வி தாள் வர போகுதா? பாஸானாதான் பசியாறுமா?.. என்று கேட்க,
“டேய் போதும் டா…அவ உன் அம்மா டா.. பாசத்திலே புலம்பிகிட்டு இருக்கா.போ..போய் கை அலம்பிகிட்டு வா சாப்பிடலாம்..அந்தப் பொண்ணுக்காக நீ காத்திருக்க வேணாம்.” என்றார் புவனா.
“எந்தப் பொண்ணு?” என்று மாறன் கேட்ட அந்த நொடி அவர்கள் வீட்டு வாசலில் டாக்ஸி வந்து நிற்க அதிலிருந்து கறுப்பு காட்டன் பாண்ட், ஆக்கர் ஸீலிவ்லெஸ் டாப், இடது தோளில் கறுப்பு ஸ்லிங் பாக், பாதங்களில் கறுப்பு ஸ்டாணல். கறுப்பு, வெள்ளை ஸ்டோலினால் கண்களை தவிர்த்து முகம்  முழுவதும் மறைத்திருந்த அந்தப் பெண்ணை இறங்க, அவளை நோக்கி ஓடிய ஜனனி,
“மெஹக், வெல்கம், வெல்கம்.” என்று சந்தோஷமாக அழைத்தாள். அவள் பின்னாலேயே சென்ற ராமும், “வாங்க மெஹக்.” என்ற மெஹக்கை வரவேற்றான்.

Advertisement