Advertisement

ஸ்மிரிதியின் மனு – 45_1
அடுத்த வந்த நாட்களில் மாறன், மெஹக் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க அவர்கள் இருவரையும் பற்றி மும்முரமாக யோசித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அன்று காலையில் உதய்பூரிலிலிருந்து திரும்பியவளிடம்,
“இன்னைக்கு வீட்டுக்கு கேட் வைக்க போறாங்க..பில்டர் போட்டதை எடுத்திட்டு பெரிசா வைக்கறாங்க.” என்று தகவல் கொடுத்தார் சிவகாமி.
அதை மௌனமாக கேட்டபடி அவன் காலை டிஃபனை சாப்பிட்டு கொண்டிருந்தான் மனு.
“மற்ற வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா ஆன்ட்டி?”
“யாருக்குத் தெரியும்? கட்டி முடிச்ச வீட்டோட வாசல் கேட்டை மாத்தணும், கதவை மாத்தணும்னு தம்பி சொல்றான்..அண்ணன் செய்யறான்..கதவை மாத்தறத்துக்கு முன்னாடி கேட்டை மாற்ற நாந்தான் சொன்னேன்..வாசல் கதவை இடிச்சு திரும்ப வைக்க நாலு நாளாவது ஆகும்..கேட் போட்டாச்சுன்னா தெருவிலேர்ந்து யாரும் பார்க்க முடியாது..கதவு இல்லாத வீட்லே தனியா இருக்கானேன்னு நான் தான் கவலைப்பட்டுகிட்டு இருப்பேன்…அவன் ஹாயா அங்கே உட்கார்ந்து பொழுது போகிகிட்டு இருப்பான்..
சரி, கதவு போடறவரைக்கும் புவனா வீட்லே போய் இருக்கட்டும்னு சொல்லலாம்னா அவன் விஷயத்திலே நான் தலையிட கூடாது அவன் தான் முடிவெடுக்கணும்னு மனு சொல்றான்..இவ்வளவு நாள்லே ஒருமுறைக்கூட அவ வீட்டுக்குப் போகவே இல்லே..அவளும் கூப்பிட்டு பார்த்து அலுத்து போயிட்டா..காலைலேதான் வீட்டு வேலை நடக்குது சாயந்திரம் என்ன செய்யறான்ன்னு என்னை கேட்கறா? ஞாயிற்று கிழமை வேலையாட்களுக்கு லீவு..ராம், ஜனனி இரண்டு பேருக்கும் லீவு இவன் அவங்களைப் போய் பார்த்தா என்ன குறைஞ்சிடும்? 
இவனை அங்கே காலேஜ் சேர்த்த போதும் இப்படிதான் பண்ணினான்..எப்பவாவது அவங்க வீட்டுக்கு போவான்..மற்ற நேரமெல்லாம் கேரளா, கர்னாடக்கா, கோவான்னு பிரண்ட்ஸோட ஊர் சுத்திகிட்டு இருப்பான்..அவனுக்கு அந்த ஊர் பிடிச்சதுக்கு காரணம் சுதந்திரமா ஊர் ஊரா சுத்தினதாலதான்..
இங்கே காலேஜ் படிச்சிருந்தா என் காலடிலே..அங்கிள் கண் பார்வைலேயே சுத்திகிட்டு இருந்திருக்கணும்..அதுலேர்ந்து தப்பிக்கதானே அங்கே போனான்..இப்ப என்னவோ எல்லாம் எங்களோட விருப்பத்திற்காக செய்தான்னு பேசறான்..நான் வாயைத் திறக்கறதுக்கு முன்னே வக்கீல் அண்னன், எதுவும் கேட்காதீங்க, பேசாதீங்க, ஊருக்கு போகாதீங்கன்னு தம்பிக்கு வக்காலத்து வாங்கறான்.” என்று குக்கர் போல் அவரை ப்ரெஷரை காலை வேளையில் சத்தமாய் வெளியேற்றி கொண்டிருந்தார்.
“அம்மா, வீட்லே ஃப்ளோரிங் திரும்ப போட்டிருக்கு….புதுசா போட்ட தரைலே பில்டர் போட்டு கொடுத்த வாசல் கதவு சரியா மூடாம கீழே தட்டுதுன்னு அதை கழட்டி வைச்சு நிறையா நாளாயிடுச்சு…தினமும் இராத்திரி அதை சும்மா அந்த இடத்துலே சாத்தி வைச்சிட்டு இருக்கான்..நீங்க முதல்லே கேட் போடணும்னு சொன்னதாலேதான் அவன் அதுக்கு ஆர்டர் கொடுத்திட்டு காத்துகிட்டிருந்தான்..இப்ப கேட் ரெடி..அடுத்து கதவுதான்..இப்படி அலைஞ்சுகிட்டு இருக்கும் போது எங்கேயிருந்து ஃப்ரீ டைம் கிடைக்கும்?.. 
நல்லவேளை மற்ற அறைகெல்லாம் இன்னும் கதவு போடலே..இது வீட்டுக்கு மெயின் கதவு அதான் புதுசா மாற்ற வேண்டியதாயிடுச்சு இல்லைன்னா அதே கதவை கீழே ஷேவ் செய்து விட்டிடலாம்னு கார்பெண்டர் சொன்னாரு..நீங்களும், அப்பாவும் அந்த வீட்லே தனியா இருக்க போறீங்க உங்க பாதுகாப்புக்குதான் புது மெயின் டோர், புது கேட், உயரமான சுற்று சுவர்..எல்லாம் உங்களுக்காகதான் நடக்குது..பொறுமையா இருங்க..பேச்சைக் குறைங்க..பிராப்ளமெல்லாம் உங்க பேச்சாலேதான்.” என்று வீட்டு கட்டுமான வேலைகளில் ஆரம்பித்த வக்கீல் கடைசியாக வீட்டு சொந்தக்காரிதான் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்தான்.
 
“ஏன் டா..உங்களையெல்லாம் ஒரு வார்த்தைப் பேச, ஒரு கேள்வி கேட்க எனக்கு இந்த வீட்லே உரிமை இல்லையா..நீ ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துக்கணும்னு சொன்ன போது முதல்லே வேணாம்னுதான் சொன்னேன்..அதுக்கு அப்பறம் ஏதாவது பிரச்சனை செய்தேனா?” என்று மனுவை கேட்டவர் அவனருகே அமர்ந்திருந்த ஸ்மிரிதியிடம்,
“உனக்கு கல்யாணமாகி இத்தனை நாளாச்சு உன்னை ஒரு வார்த்தைப் பேசியிருப்பேனா, உன்கிட்ட வீணா சண்டை போட்டிருக்கேனா இல்லை கோபப்பட்டிருக்கேனா? இந்த வீட்லே நான் தான் பொல்லதவன்னு உன் புருஷன் சொல்றான்.” என்று மனுவை மகனென்று சொல்லாமல் ஸ்மிரிதியின் புருஷன் என்று சொல்லி அவனை கடுப்பேற்றினார்.
“அம்மா, இது டூ மச்..எதுக்கு இப்ப ஸ்மிரிதியை இழுக்கறீங்க?..இவ்வளவு நாள் பொறுமையா இருந்திட்டீங்க..இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொல்றேன் மா..வீடு வேலை சீக்கிரத்திலே முடிஞ்சிடும்..நாம எல்லாரும் ஒருமுறை கோயமுத்தூர் போயிட்டு வரலாம்..கொஞ்சம் மாறனை விட்டுப் பிடிக்கணும் மா.” என்று அவன் பொறுமையைப் பிடித்து வைத்து அவருக்குப் புரிய வைத்து கொண்டிருந்தான் மனு.
“சின்னவனை விட்டுப் பிடிக்கணும்னு கலெக்டரும் சொல்றாரு..எத்தனை நாளைக்கு விட்டு கிட்டு இருக்க முடியும்..அவன் தறிகெட்டு போகறவரையுமா? அப்படி போன பிறகு அவனைப் பிடிக்க முடியுமா? திருத்த முடியுமா?நான் அவனை அப்படி என்ன டா பேசிட்டேன்? நான் கோபமே படக்கூடாதா? எப்பவும் கொஞ்சுகிட்டேதான் இருக்கணுமா?..
அடுத்த தடவை இங்கே வரட்டும் நடு வீட்லே நிற்க வைச்சு அவன் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்டறேன்..அவன்  மட்டுமில்லை..அவன் பசங்க, உன் பசங்க எல்லாம் என் பேச்சைதான் கேட்கணும்..கேட்க வைப்பேன்.” என்று சிவகாமி சபதம் எடுக்க, அதை அமைதியாக அலட்டிக் கொள்ளாமல் அவர் வக்கீல் மகன் கேட்டு கொண்டிருக்க, அடுத்த தலைமுறைவரை தொடர போகிற  அன்பான அராஜகத்தைக் கேள்வி கேட்க புது ஆட்சி தலைவர்தான் வரணும் போலே என்று ஸ்மிரிதி மனதில் நினைக்க, அப்போது காலை வாக்கிங் முடிந்து வீட்டினுள் நுழைந்த முன்னால் ஆட்சித் தலைவர்,
“என்னத்த கேட்க வைப்ப?” என்று கேட்டார்.
“நீங்க தான் சின்னவனைக் கெடுக்கறீங்க….நீங்களும் அவனை தட்டிக் கேட்கறதில்லே..என்னையும் பேச விடறதில்லை.” என்று மறுபடியும் ஆரம்பிக்க, பொறுமை போனது வக்கீலுக்கு. அவன் கையிலிருந்த ஃபோனில் மாறனை அழைத்தவன் அவனெதிரே இருந்த சிவகாமியிடம்,
“ஸ்பீக்கர்லே இருக்கான்..நீங்க பேசுங்க..அவன் என்ன செய்யணும்னு சொல்லுங்க….செய்திடுவான்.” என்றான்.
ஒரு நிமிஷம் திகைத்த சிவகாமி அடுத்த நிமிடம்,”இன்னைக்கு இராத்திரி புவனா வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்காங்க..இவனைப் போக சொல்லு.” என்றார். 
உடனே ஸீப்பக்கரை எடுத்துவிட்டு அந்தப் புறம் மாறன் சொன்னதைக் கேட்ட மனு,”சரி” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான். பின் சிவகாமியிடம்,
“இன்னைக்கு அவன் ஏற்கனவே டயர்டா இருக்கான்..கேட் வேலை முடிஞ்சதும் கிளம்பி போவான்..லேட்டாகலாம்…நீங்களே புவனா ஆன்ட்டிகிட்ட சொல்லிடுங்க.” என்று காலை பூஜைக்கு மங்களம் பாடிவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான் மனு. 
நேற்று முழுவதும் பிரேமாவை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரி, சுசித்ராவின் வீடு என்று அலைந்துவிட்டு இன்று காலையில் கோவைத் திரும்பியவன் களைப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை என்று எண்ணிய ஸ்மிரிதி, இன்றும் அவன் புவனா ஆன்ட்டி வீட்டுக்கு போகவில்லையென்றால் தில்லியில் பூகம்பம் தான்.” என்று கணித்தாள். ஆனால் புவனா ஆன் ட்டி வீட்டிற்குப் போய் திரும்பியவனிடம் வக்கீல் எரிமலையாகப் பொங்கி தணியப் போவதை அவள் அறியவில்லை.
அடுத்த ஒரு மணி நேரம் சிவகாமிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துவிட்டு அவள் படுக்கையறையில் ஓய்வெடுக்க வந்த ஸ்மிரிதிக்கு உறக்கம் வராமல் அவள் மனதில் மெஹக், மாறன் இருவரும் உலா வந்து கொண்டிருந்தார்கள்.  
அன்று மாறனுடன் பேசிய பின் மெஹக்கிற்கு அவன் அலைபேசி எண்ணைக் கொடுக்க ஸ்மிரிதிக்குத் தயக்கமாக இருந்தது.  அவர்கள் நேரில் சந்தித்து பேசினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவள் மெஹக்கிடம் சிறிது அவகாசம் கேட்டிருந்தாள்.  அந்த முறை கோவையில் படப்பிடிப்பை முடித்து கொண்டு மும்பை பயணமான மெஹக் இன்று மறுபடியும் இரண்டாம் கட்ட படப்பிடிற்காக கோவை செல்ல போவதை ஸ்மிரிதியுடன் பகிர்ந்து கொண்டாள்.  இந்த முறை மாறனை அவள் தொடர்பு கொள்ள விரும்புகிறாள் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதிக்கு அவர்கள் இருவரின் சந்திப்பை சுமூகமாக எப்படி செயல்படுத்துவது என்று யோசனையில் ஆழ்ந்தாள்.  ஆனால் ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை அவளின் அந்த யோசனையை அந்த நேரத்தில் அவள் மாமியார் வரவேற்பறையில் அமர்ந்தபடி செயல்படுத்தி கொண்டிருந்தாரென்று.
“வருவான் டீ..இன்னைக்கு நைட் கண்டிப்பா வருவான்..கேட் வைக்கறாங்க அதான் லேட்டாகும்னு சொல்றான்.” என்று புவனாவிற்கு வாக்குறுதி கொடுத்து கொண்டிருந்தார் சிவகாமி.
“சரி டீ..எப்ப இங்கே மொத்தமா ஷிஃப்ட் ஆகறீங்க?
“மாறன் இங்கேயிருந்து போனதிலிருந்து என்கிட்ட பேசறதேயில்லை….நானே ஒருமுறை நேர்லே போய் அவனையும், வீட்லே நடக்கற வேலையையும் பார்க்கலாம்னு ஊருக்கு போகறதைப் பற்றி பேச்செடுத்தா ஊரடங்கு சட்டம் போடறாரு கலெக்டர்..வக்கீல் போலீஸாகறான்..இன்னைக்கு மாறன் வருவானில்லே அவன்கிட்டயே கேளு..என்ன வேலை நடக்குது? எத்தனை நாளாகும்? எப்ப எல்லாம் முடியும்?..தில்லிலேர்ந்து எப்ப நாங்க கிளம்பணும்னு?..அவன் பதில் சொல்லலேன்னா நீயே ஒருமுறை வீட்டுக்குப் போய் பார்த்திட்டு வந்து எனக்கு ஃபோன் பேசு.” என்றார் சிவகாமி
“அங்கே போயிட்டு வர அரை நாளாகிடும்..ஏன் டீ அவ்வளவு தூரத்திலே வாங்கினே?”
“நாதனுக்கு அமைதியான இடத்திலே வீடு இருக்கணும், தினமும் வாக்கிங் போகணும்..அப்பறம் பணமும் வேணுமே..தில்லி வீடுதான் ஸிட்டிலே இருக்கே.” 
“நீ இங்கே வந்திட்டீன்னா மனுவுக்கு கஷ்டமாயிடுமே.”
“அவனைப் பற்றி இப்ப எனக்கு கவலையில்லை டீ..ஸ்மிரிதி பார்த்துப்பா.. சின்னவனைதான் கொஞ்சம் கண்காணிக்கணும்..என் கண் பார்வைலே வைக்கணும்.” என்றார் சிவகாமி.
அதைக் காதில் வாங்கி கொண்டாலும்,“பிரேமா எப்படி இருக்கா? உன்னோட பேசறாளா?” என்று மாறன் மேலிருந்த சிவகாமியின் கவலையைத் திசைத் திருப்பினார் புவனா.
“எங்கே பேசறது..வீட்லே இருக்கற உனக்கும், எனக்குமே இன்னைக்குதான் டைம் கிடைச்சிருக்கு..அவ வேலைக்கு போறவ.” என்று சொல்லி கடிகாரத்தைப் பார்த்தவர்,” இப்ப அவளுக்கு ஷார்ட் பிரேக்..நீ ஃபோனை வை…அவளோட பேசறேன்.” என்று உடனே பிரேமாவுக்கு அழைப்பு விடுத்தார் சிவகாமி.  அதே சமயம் சிவகாமியின் ஃபோனை கட் செய்த புவனாவும் ஜனனியின் ஃபோனிற்கு அழைப்பு விடுத்தார்.
நேற்று விடுமுறை எடுத்திருந்ததால் அவருடைய இடத்தில் உட்கார்ந்துபடி பெண்டிங் வேலைகளைக் கவனமாக செய்து கொண்டிருந்த பிரேமாவை அவர் ஃபோன் அழைத்தது.
அழைப்பை ஏற்றவுடன்,”சொல்லு டீ.” என்றார் சோர்வாக.
“என்ன டீ குரல் டல்லா இருக்கு..பிரேக் தானே இப்போ?” என்று சிவகாமி விசாரிக்க,
“ஆமாம்..ஆனா நேத்து லீவு எடுத்திருந்தேன்..அந்த வேலையை செய்து முடிக்கறேன்.”
“எதுக்கு லீவு எடுத்த?”
“ஆஸ்பத்திரிக்கு போய் செக் அப் செய்துகிட்டேன்..இந்த மாசம் இரண்டு தடவை கூப்பிட்டாங்க..நேற்று செக்-அப்பை முடிச்சிட்டு அப்படியே சுசித்ராவைப் பார்த்திட்டு வந்தேன்..அந்தப் பொண்ணு பெட் ரெஸ்ட்லே இருக்கு..இரத்த கொதிப்பு, லோ பிளாஸண்டான்னு ஒவ்வொரு பிராப்ளமா வருது..எனக்கு பயமாயிருக்கு ஆன் ட்டின்னு அழுதா டீ..
கவலைப்படாதே..கடவுள் இருக்காரு..குழந்தையும், நீயும் நல்லபடியா இருப்பீங்க..எதைப் பற்றியும் யோசிக்காம உற்சாகமா இருக்கணும் அப்பதான் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்னு நானும்  தைரியம் சொல்லிட்டு வந்தேன்.”
“கல்யாணத்துக்கு வரும்போது நல்லாதானே டீ இருந்தா.”
“அப்ப நல்ல இருந்தா..இப்ப திடீர்னு இந்த மாதிரி ஆயிடுச்சு..இப்படி திடீர், திடீர்னு தான் உடம்புக்கு வந்திடுது” என்றார் பிரேமா.
“உனக்கு என்ன ஹெல்த் பிராப்ளம்? ராம் கல்யாணத்து போது இருந்த பிராப்ளம் இன்னும் சரியாகலேயா?’
“எனக்கு ஹார்ட் பிராப்ளம்னு சொல்றாங்க டீ..அடைப்பு இருக்கு.. மாத்திரைலே சரி செய்ய முயற்சி செய்யறாங்க..டென்ஷன் கூடாது..ரிலாக்ஸ்டா இருக்கணும்னு டாக்டர் சொல்றாரு..எனக்கு எப்பவும் டென்ஷன் தான்..அதுவும் மனு என்னை தில்லி வர சொன்னதிலேர்ந்து எனக்கு அதே யோசனையா இருக்கு..இப்ப எனக்கு ஜலந்தரே பரவால்லேன்னு தோணுது.”
“தில்லி, ஜலந்தரா என்ன டீ சொல்ற?” என்று புரியாமல் கேட்டார் சிவகாமி.
“ராம் கல்யாணத்துக்கு அப்பறம் ஒருமுறை என்னை பார்க்க ஸ்மிரிதி பெங்களூர் வந்தா..அப்பதான் இனி நான் இங்கே தனியா இருக்க வேணாம்னு எனக்காக ஜலந்தர்லே தல்ஜித்கிட்ட வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்குண்ணு சொன்னா..
நான் அங்கே பக்கத்திலே வந்துட்டா அவளும் என்னை அடிக்கடி வந்து பார்க்க முடியும்னா..அப்பறம் அன்னைக்கு அவளேதான் மனு மேலே இருக்கற விருப்பத்தையும் சொன்னா….அவளுக்கு மனுவோட கல்யாணம் ஆனாலும், ஆகாட்டாலும் நான் ஜலந்தர் வந்தே ஆகணும்னு பிடிவாதமா இருந்தா..நானும் யோசிக்கறேன்னு சொன்னேன்..
இப்ப அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு என் மாப்பிள்ளையும் பிடிவாதமா இருக்காரு…ஜலந்தரெல்லாம் வேணாம் தில்லிலே அவங்ககூடதான் இருக்கணும்னு சொல்றாரு..மாப்பிள்ளை கூப்பிடும் போது வர முடியாதுன்னு சொல்ல முடியாதே டி..
தில்லிலே உன் வீட்லே உன்னோட, என் பொண்ணோட இருக்கறதுலே எனக்குப் பிரச்சனை இல்லை டீ ஆனா அந்த ஆளையும் நான் பார்க்க வேண்டிய சூழ் நிலை வருமில்லே அதான் தயக்கமா இருக்கு.” என்றார் பிரேமா.
பிரேமாவைத் தனியே விடாமல் அவர்களுடனேயே இருக்க அழைத்த மனுவை நினைத்து  சந்தோஷமாகவும், பெருமையாகவும் உணர்ந்தார் சிவகாமி.  ஸ்மிரிதியுடன் நிரந்தரமாக பிரேமா இருக்கதான் கடவுள் அவரை நிரந்தரமாக கோவை அனுப்புகிறாரென்று கடவுளைக் கோவை குடிபெயர்தலுக்குக் காரணமாக்கிய சிவகாமி, கிடுகிடுவென்று அனைத்தையும் யோசித்து,
 “இங்கே பாரு..வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதே..முதல்லே அங்கேயிருந்து கிளம்பற வழியைப் பாரு..உன் பொண்ணுக்கூடவே கடைசிவரை இருக்க கடவுள் உனக்கு ஒரு வழி செய்து கொடுத்திருக்காரு அதனாலே வேற எதைப் பற்றியும் யோசிக்காத.. கார்மேகம் அவரு வீட்லே இருக்க போறாரு நீ உன் மாப்பிள்ளை, பொண்ணோட இருக்க போற..ஒரு பிரச்சனையும் வராது..
கல்யாணத்துக்கு பிறகு அவரு நம்ம வீட்டுக்கு ஒருமுறைகூட வரலே..ஸ்மிரிதியும் அங்கே போகற மாதிரி தெரியலே..அவளும், மனுவும் மாற்றி மாற்றி வெளியூர் தான் போயிகிட்டிருக்காங்க….அதனாலே நம்ம வீட்டுக்கு யாரும் வரதில்லே..ஆனா” என்று சிறிது தயங்கினார் சிவகாமி.

Advertisement