Advertisement

ஸ்மிரிதியின் மனு – 44_2
“மெஹக் அவளோட அஞ்சாவது வயசுலேர்ந்து சக்கரை கலந்த ஃபென்னி குடிச்சு பழகியிருக்கா..அவளைத் தூங்க வைக்க அவளோட அம்மா அந்த அறியாத வயசுலே அவளுக்கு ஏற்படுத்தின பழக்கம்..பத்து வயசுலே அவளே அதை கோக்கோட கலந்துகிட்டா..அவ ஸ்கூல் சேர்ந்ததுலேர்ந்து அவ காலேஜ் போக விரும்பினாலும் போக முடியாதுன்னு தெரியும்..அதனாலே படிப்புக்கு முக்கியத்துவமே கொடுக்கலே..
ஸ்கூலுக்குப் அப்பறம் வெறும் சினிமாதான்..முதல் சில வருஷங்கள் அவ அம்மாதான் சொந்த காசு போட்டு அவளை வைச்சு படம் எடுத்தாங்க..இப்ப அஞ்சு வருஷமாதான் பிரபலமா இருக்கா.. அடுத்த அஞ்சு வருஷத்திலே அவளைக் கிழவியாக்கி அக்கா, அம்மா ரோலுக்கு பிரமோட் செய்திடுவாங்க…
அவளோட முப்பது வயசைப் பற்றி பத்து வயசுலேர்ந்து பயந்துகிட்டு இருக்கா…திடீர்ன்னு ரூமை விட்டு வெளியே வர மாட்டா..ஏன்னு கேட்டா என் மூஞ்சியை எனக்கே பார்க்க பிடிக்கலே மற்றவங்க எப்படி பார்ப்பாங்கன்னு கவலையா கேட்பா..
சில நாட்கள் எல்லாரோடையும் பேசிகிட்டு, சிரிச்சுகிட்டு ஃபோடோ மேலே ஃபோட்டோவா எடுத்துகிட்டே இருப்பா..ஏன்னு கேட்டா இன்னைக்கு நான் ரொம்ப அழகா தெரியறேன் அதான் சந்தோஷமா இருக்கேன் அதை ஃபோட்டோ எடுத்து வைச்சுக்கறேன்னு சொல்லுவா..அந்த நிமிஷத்தோட நிஜத்தை முழுமையா அனுபவிக்க தெரியாம அதை நிழலாப் பிடிச்சு வைச்சு அனுபவிப்பா..
அவ அழகா இருக்கறதுனாலே சந்தோஷமா இல்லை சந்தோஷமா இருக்கறதுனாலேதான் அழகா தெரியறான்னு அவளுக்குப் புரியவே இல்லே டா..வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்தவளுக்கு வேற மாதிரி எப்படி தோணும்..அதான் உன் முரட்டு தோற்றம் பிடிக்கலே, உன் செய்கையும் புரியலே.” என்று மெஹக்கிடம் ஆரம்பித்து அவனுடைய  தோற்றத்தில், செய்கையில் முடித்தாள் ஸ்மிரிதி.
“இப்ப உன் பிரண்டா மட்டும் எப்படி இவ்வளவு வருஷமா இருக்கா? உன் தோற்றத்தை எப்படி சகிச்சுக்கறா? என்று காரணம் தெரிய வேண்டி மாறன் கேட்க, அவள் தோற்றத்தை விமர்சனம் செய்யவில்லை அவன் தோற்றத்தை மெஹக் ஏற்று கொள்ள வழி கேட்கிறான் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“என்னுள்ள என்ன இருக்குண்ணு அவளுக்குத் தெரியும்..நாங்க எல்லாரும் உள்ளே எப்படி இருக்கோம்னு அவளுக்குத் தெரியும் டா.”
“உங்க எல்லார் உள்ளேயும் பார்க்க தெரிஞ்சுகிட்டவ என்னோட உள்ளத்தையும் பார்க்க தெரிஞ்சுப்பா..அவ உள்ளேயும் பார்க்க கத்துப்பா.” என்றான் மாறன்.
அன்பின் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸ்மிரிதி அத்தனை சீக்கிரம் மாறனை விடுவதாக இல்லை.
“என்னையே அவளுக்கு முதல்லேப் பிடிக்காது டா..உன்னை எப்படி டா அவளுக்குப் பிடிக்கும்? அதுவும் கல்யாணம் செய்துக்கற அளவுக்கு.. அவளைப் புண்படுத்தாம உன்னாலே இருக்க முடியுமா?..
அவ உன்னைக் கல்யாணம் செய்துகிட்ட பிறகு யாராவது அவகிட்ட  ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட சொன்னா நீ என்னடா செய்வ?…
அவ எந்தக் காலத்திலேயும் உன்னைப் போல ஒரு கணவனை நினைச்சு பார்த்திருக்க மாட்டா..அதுக்கு காரணம் அவ தொழில்..அவ தொழிலைப் புரிஞ்சுகிட்ட ஆளோடதான் அவ வாழ்க்கையை பிணைச்சுக்க முடியும்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவ எதிர்பார்க்கற ஆள் நானில்லை..என்னாலே அவளைப் புரிஞ்சுக்கவே முடியாதுன்னு சொல்றியா?” என்று நேரடியாக கேட்டான் மாறன்.
“எனக்கு தெரியலே டா..உன்னைப் பற்றி என்னாலே ஒரு முடிவுக்கு வர முடியலே..அப்பறம் இந்த விஷயத்திலே ஆன்ட்டியை எப்படி சமாதானம் செய்யமுடியும்னு நினைக்கற..நீ எப்பவாவது ஒரு தடவை செய்யற தவறைக்கூட ஆன்ட்டியாலே ஒத்துக்க முடியலே..அந்த மாதிரி தவறை நினைச்ச போதெல்லாம் செய்யற மெஹக்கை எப்படி டா ஏத்துப்பாங்க? என்னாலே யாரையும் விட்டுக் கொடுக்க முடியாது.” என்று அவளின் மனக் கவலையை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
“உன்னை எப்படி ஏத்துகிட்டாங்களோ..அதேபோலதான் அவளையும் ஏத்துக்கணும்.” என்று தீர்ப்பு சொன்னான் மாறன்.
“அம்மாவும், ஆன் ட்டியும் முதலேர்ந்து பிரண்ட்ஸ்..என்னைப் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும் டா..மெஹக் அப்படியில்லை..அவ ஒரு பிரபலம்..அவளை சுற்றி ஊர் வம்பு, சச்சரவு எல்லாம் அவ இருக்கறவரை இருக்கும்..வெளியே சொல்ல முடியாத சொந்த பிரச்சனைகள் வேற இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.  
“யார்கிட்டதான் அழுக்கு இல்லை ஸ்மிரிதி…எல்லாத்தையும் யாராலேயும் சுத்தம் செய்ய முடியாது..அதுக்கு பயந்துகிட்டு முயற்சி செய்யாம அழுக்கோடவே இருக்கவும் கூடாது.” என்றான் மாறன்.
“சபாஷ்” என்று மனதிற்குள் மாறனைப் பாராட்டிய ஸ்மிரிதி, சில நிமிடங்கள் கழித்து, 
“எங்க எல்லாருக்கும் சில பழக்கம் வழக்கம் ஒரே மாதிரியா இருந்திச்சு..ஆனா என்னோட வாழ்க்கைலே நடந்த சில நிகழ்வுகள் அதனாலே ஏற்பட்ட சூழ் நிலைகளாலே நான் அது எல்லாத்தையும் விட்டுட்டேன்..என் சூழ் நிலைகள் ஏற்படுத்திய சந்தர்பத்தை நான் பயன்படுத்திகிட்டேன்..மெஹக் வாழ்க்கைலே அந்த மாதிரி சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தி கொடுப்பேன்னு நம்பறேன்.” என்றாள் நம்பிக்கையுடன் ஸ்மிரிதி.
“என்னாலே அவளுக்கு ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையைதான் கொடுக்க முடியும்..அவளுக்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்க முடியுமான்னு தெரியலே.” என்று சந்தேகமாகப் பதிலளித்தான் மாறன்.
“யாருக்கு எப்ப சந்தர்ப்பம் அமையும், எப்படி அமையும் இதெல்லாம் நம்ம கைலே இல்லை..இப்ப அவளுக்கு கிடைச்சிருக்கற சந்தர்ப்பத்துலே மெஹக் பணம் சம்பாதிக்கணும்..அந்த குறிகோள்லேர்ந்து அவ மாற மாட்டா……உன்னோட குறிக்கோள் என்னென்னு எனக்குத் தெரியலே..ஆனா அதை அடையறதுக்கான சந்தர்ப்பத்தை தவறவிட கூடாதுன்னுதான் நீ அங்கே போய் தனியா உட்கார்ந்திருக்க..அதனாலே நீயும் உன் குறிக்கோள்ள கவனமாயிரு..அது நிறைவேறினா மற்ற விஷயங்களுக்கு சந்தர்ப்பம் அமையும்.” என்று அவனை ஊக்குவித்தாள்  ஸ்மிரிதி.
“இப்பதான் என் முயற்சியை ஆரம்பிச்சு இருக்கேன்…மெஹக் என் வாழ்க்கைத் துணையாகும் போது அவளை எல்லாரும் என் மனைவியா, மரியாதை பார்க்கற நிலைலேதான் அவ இருப்பா..இன்னைக்கு போலே என்னை யாருன்னு கேட்கறவங்களுக்குப் பதில் சொல்ல முடியாத சங்கடமான நிலைலே அவளை வைக்க மாட்டேன்..எல்லாருக்கும் நான் யாருன்னு தெரியற பதவிலே.. சாதாரண மக்கள் எப்பவும் அணுகும்படியா..மற்றவங்க அணுக அனுமதி கேட்கும்படியான உயரத்திலே இருப்பேன்.” என்று ஆளுமையடன் பேசினான் மாறன் 
அவனுடைய பேச்சில் அதிகாரித்துவதைக் கண்டு கொண்ட அறிவாளி அறவழி அரசியல்வாதி “என்ன டா..கலெக்டர் பொண்டாட்டியாக போறாளா என் சினேகிதி?” என்று கரெக்ட்டாக கேட்டாள்.
“எப்படி கண்டு பிடிச்சேன்னு கேட்க மாட்டேன்.” என்று அவளின் கண்டு பிடிப்பை அங்கீகரித்தான் மாறன்.
“ஆன் ட்டி சந்தோஷப்படுவாங்க டா..நீ உன் பெயருக்கு ஏற்ற மாதிரி ஆட்சி செய்ய போறேன்னு.” என்றாள் ஸ்மிரிதி.
“அம்மாக்கு இப்ப தெரிய வேணாம்..அப்பாகிட்ட மட்டும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுவேன்.” என்றான் மாறன்.
“ஏன் டா?”
“கையிலே ஆர்டர் வந்த பிறகுதான் அம்மாகிட்ட சொல்லணும்.”
“பாவம் டா ஆன் ட்டி..உன் நல்லதுக்குதான் டா சொன்னாங்க.”
“யோசிக்காம அந்நியாயமா  பேசறாங்க.” 
“நீதான் டா யோசிக்காம பேசற, செய்யற..உன்னோட எண்ணங்களுக்கும், செய்கைக்கும் கேப் இல்லை டா..உன் தட்டு பறக்க போகுதுன்னு எனக்கு கொஞ்சமாச்சும் ஐடியா இருந்திருந்தா அதை உடனே கேட்ச் பிடிச்சு உனக்கே திருப்பி விட்டிருப்பேன்.” என்றாள் சிரித்து கொண்டே ஸ்மிரிதி.
“அதுதான் என்னோட தனித்துவம்.. மாற்ற முடியாதது..அதனாலதான் என்னை கேள்வி கேட்க முடியாத, நான் கேள்வி கேட்க கூடிய, நினைக்கறதை நிறைவேற்ற கூடிய அதிகாரத்தோட இருக்கணும்ங்கற முடிவுக்கு வந்தேன்…. 
அறவழி அரசியல்வாதி..அறவழி அதிகாரி..நீ, நான் …நம்ம நாடு முன்னேற இந்த மாதிரி கூட்டணி தான் தேவை.” என்றான் செங்கோல் மாறன். 
மாறன் சொன்னதைக் கேட்டு சந்தோஷமடைந்த ஸ்மிரிதி,“இவ்வளவு பெரிய விஷயத்தைக் கலெக்டர் கேட்டார்னா கண்டிப்பா அவர் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு.” என்றாள்.
“மனு இதுவரை உன்கிட்ட சொன்னானா?” என்று மாறன் கேட்க,
இதுவரை தம்பியின் திட்டங்களைப் பற்றி அண்ணன் வாயேத் திறக்கவில்லை என்று உணர்ந்தவள்,“டேய் ..நீங்க இரண்டு பேரும் பெரும் கூட்டணி தான் டா..…உங்க கூட்டணியை நான் முறியடிக்கறேன்.” என்று மிரட்டினாள் ஸ்மிரிதி.
“ஐயோ..வேணாம்….உன்னோட அரசியல் விளையாட்டை என் வாழ்க்கைலே விளையாடாதே..ப்ளீஸ்.” என்று கெஞ்சினான் மாறன்.
“அப்ப உங்க இரண்டு பேர் கூட்டணிலே நடக்கறது எல்லாம் எனக்குத் தெரிய வரணும்.” என்று கோரிக்கை வைத்தாள் ஸ்மிரிதி.
“உங்க கோரிக்கைப் பாரபட்சமில்லாமல் பரிசீலிக்கப்படும்.” என்றான் குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதை அவன் வாழ்க்கைக் குறிக்கோளாக ஏற்று கொண்டிருந்த அந்தக் குடிமகன்.

Advertisement