Advertisement

ஸ்மிரிதியின் மனு – 43_2
அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள்  என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய் கதவைத் திறந்தாள்.  அறை வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.  அவளை தில்லியில் சந்தித்தவர், அவருடன் ஒரு புதியவர்.
“ப்ளீஸ் கம்.” என்று சொல்லி மெஹக் கதவைத் திறக்க, இருவரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் அமர்ந்தவுடன்,“சொல்லுங்க.” என்றாள் மெஹக்.
அவசியம் ஏற்பட்டால் அவன் இருப்பைத் தெரிவிக்க நினைத்த மாறன் மௌனமாக அறையினுள் நடந்து கொண்டிருந்த உரையாடலை பால்கனியில் அமர்ந்தபடி கேட்டு கொண்டிருந்தான்.
புதிதாக வந்ததிருந்தவர் மெஹக்கூடன் அரைகுறை ஹிந்தியில் பேச ஆரம்பித்தார்.  அவர்கள் அக்ரிமெண்ட்படி மெஹக் நடித்து கொடுக்க வேண்டியது இரண்டு படங்கள் என்றும் அதை தவிர அவள் முன்பு ஒப்புகொண்டது போல் மூன்றாவது படத்தையும் நடித்து தர வேண்டும் என்றார்.
முதல் இரண்டு படத்திற்குதான் ஒப்பந்தம் செய்து கொண்டோம், மூன்றாவது படம் பற்றி பேச்சு வார்த்தைதான் நடந்து ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று மறுத்தாள் மெஹக்.  அதைக் கேட்ட அந்தப் புது தயாரிப்பாளர், தற்போது அவள் நடித்து கொண்டிருக்கும் ஒரு படம் போதுமென்றும் இரண்டாவது படத்திற்குக் கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுக்கும்படி சொன்னார்.  இரண்டாவது படத்திற்காக வாங்கிய அடவான்ஸை திருப்பி தர முடியாதென்றும் அந்தப் படத்தை முடித்து கொடுப்பாளென்றும் வாக்குறுதி அளித்தாள் மெஹக்.  
அவளின் வாக்குறுதி வேண்டாம் அவள் வாங்கிய அட்வான்ஸ்தான் வேண்டுமென்று உடும்புப்பிடியாக இருந்தார் அந்தப் புது தயாரிப்பாளர். அது முடியவே முடியாது என்று மறுபடியும் மறுத்தாள் மெஹக்.  அவர் உடனே அவள் நடித்து கொண்டிருக்கும் படத்தின் சம்பளத்திலிருந்து அதைக் கழித்து கொண்டு விடுவதாக சொன்னவுடன், அந்த மாதிரி அத்து மீறினால் அவளை அவர்கள் கோர்ட்டில் சந்திக்க நேரிடும் என்றாள் மெஹக்.
மெஹக் கோர்ட்டுக்குப் போவேன் என்று சொன்னவுடன் அந்தப் புதிய தயாரிப்பாளரும் அவர் தோரனையை மாற்றிக் கொண்டார்.  அவள் அவருக்காக மூன்று படங்கள் கண்டிப்பாக நடித்து கொடுப்பாளென்றும் அவளுடைய மூன்றாவது படத்திற்கு முதல் பேசிய தொகையேதான் கொடுக்கப் போவதாகும், அவள் மறுத்தால் அவளை சினிமா உலகம் மறக்கும்படி செய்ய போவதாக மிரட்டினார்.  திடீரென்று அவர் பேசிய வார்தைகளும், தொனியும் மெஹக்கை குழப்ப, அவரின் அரைகுறை ஹிந்தியை அவள் தான்  தவறாக புரிந்து கொண்டாளோ என்று அவள்  யோசித்து கொண்டிருக்கும் போது, பால்கனியிலிருந்து உள்ளே வந்த மாறன் மெஹக்கின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“அக்ரிமெண்ட்படி நடிச்சு தரேன்னு சொல்றா அதுலே உங்களுக்கு என்ன பிராப்ளம்?” என்று தமிழில் பேச்சை ஆரம்பித்தான்.
“முதல்ல பேசினது மூணு படம்..அக்ரிமெண்ட் செய்துகிட்டது இரண்டு படத்துக்கு..அந்த இரண்டு எப்படி போகுதுண்ணு பார்த்துகிட்டு மூணாவது படம் செய்யறதா பேச்சு..இப்ப மூணாவது படம் வேற ஆளுக்கு செய்து கொடுக்கறாங்க.  எங்களோட படம் முடியறத்துக்கு முன்னாடி  அடுத்தவங்க படத்துக்கு எப்படி ஒத்துக்கிட்டாங்க?” என்று கேட்டார்.
மெஹக்கிடம் ஹிந்தியில் அவள் எப்படி இவர்கள் படம் நடித்து முடிக்கும் முன் இன்னொரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாள் என்று கேட்டான் மாறன்.
“பணத்திற்காக..அட்வான்ஸ் வாங்கியாச்சு.” என்று சிறிதுகூட கூச்சமில்லாமல் சொன்னாள் மெஹக்.
“இவங்களோட அக்ரிமெண்டை மீறி அந்தப் படத்திலே நடிக்க போறியா?
“இல்லை..அக்ரிமெண்ட்லே அப்படி எதுவுமே இல்லை..இரண்டு படத்துக்குதான் ஒத்துகிட்டேன்..மனுகிட்ட கேளு அவந்தான் இப்ப என்னோட வக்கீல்.. தில்லிலே நீ என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்தியே அந்த நைட் மனுதான் இவங்களோட அக்ரிமெண்டைக் கரெக்ட் பண்ணி கொடுத்தான்.” என்றாள் மெஹக்.
உடனே மனுவிற்கு ஃபோன் செய்தான் மாறன்.
“சொல்லுடா.” என்றவனிடம்
“மெஹக்கோட வக்கீல் ஸார்கிட்ட பேசணும்.” என்றான் தம்பி.
“யாரு டா சொன்னா உன்கிட்ட?”
“இப்ப அது தேவையில்லை..மெஹக்கோட தமிழ் படத்தோட அக்ரிமெண்டை நீதானே சரி பார்த்த? என்று மாறன் கேட்டவுடன்,
“ஆமாம்..ஏன் கேட்கற?”
“நான் இங்கே மெஹக்கோட ஹோட்டல் ருமிலே அவங்களை மீட் செய்ய வந்திருக்கேன்..அவ வேற ஆளுக்கு படம் செய்து தர ஒத்துகிட்டிருக்கா..இவங்க செய்யகூடாதுன்னு மிரட்டறாங்க..இவ பணத்துக்காக செய்வேண்ணு சொல்லுறா.” என்றான்.
“அவ அக்ரிமெண்டை மீறலே..இரண்டு படத்துக்குதான் அக்ரிமெண்ட்..அவங்களுக்கு மட்டும்தான் நடிக்கணும்னு கட்டாயமில்லை..அவங்களோட மூணாவது படம் பற்றி பக்காவா எதுவும் முடிவு செய்யலே..அதனாலே இவ யாருக்கு வேணும்னாலும் நடிச்சு தரலாம்.” என்றான் மனு.
“அவங்களோட முதல் படமே எப்ப முடியும்னு தெரியலேயே.” என்றான் மாறன்.
“அது அவ பிராப்ளம் கிடையாது.” என்றான் மனு.
“சரி” என்று சொன்ன மாறன்  ஃபோனை வைக்குமுன் “உன்னை அங்கே ஸ்மிரிதி அனுப்பினாளா?” என்று மனு கேட்க,
“ஆமாம்.” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.
அவனெதிரே அமர்ந்திருந்த இருவரிடமும்,”அவ வக்கீல்கிட்ட பேசியாச்சு..அவரும் அதேதான் சொல்றாரு..அவளோட புது படம் அவளோட மூணாவது படம்னு மக்களுக்குத் தெரியுணும்னா உங்களோட இரண்டு படத்தையும் சொன்னபடி செய்து முடிங்க..இல்லைனா அது மூணாவதா இருக்காது அதுதான் அவளோட முதல் படமாயிடும்.” என்றான்.
“என்ன மிரட்டறீங்களா?” என்று அந்தப் புதியவர் கேட்க,
“இல்லை..நடக்க போகறதை சொன்னேன்..அவ அவங்கிட்ட அட்வான்ஸ் பணம் வாங்கிட்டா.” என்றான் மாறன்.
“நீங்க யாரு தம்பி இதுல தலையிட?” என்று அவர் கோபமாக கேட்க,
அதுவரை மௌனமாக இருந்த மெஹக் இடையில் புகுந்து,”நான் உங்க படத்தை முடிச்சு தரேன்..என்னோட புது படம் உங்க இரண்டு படத்தோட இண்டர்ஃபியர் ஆகாது.” என்றாள்.
“நீ நடிச்சு கொடுக்காட்டாலும் என் பொழைப்பு நடக்கும்.. உன் பொழைப்பு எப்படி நடக்க போகுதுன்னு நான் பார்க்கறேன்..என்னை யாருன்னு நினைச்ச.” என்று ரௌடியாக மாறினார் அந்தப் புதிய தயாரிப்பாளர். ஆனால் சிறிதுகூட கலவரப்படாமல்,
“உங்க படத்திலே நான் நடிக்க மாட்டேன்னு மறுக்கலேயே.” என்று அமைதியாக பதிலளித்தாள் மெஹக்.
“உன் இடத்திலே இன்னொரு பொண்ணைப் போட்டு..ஒரு பைசா கொடுக்காம ஒரே ஒரு பாட்டுக்கு உன்னையே ஆட வைக்கறேனா இல்லைய பாரு.” என்று அவர் சவால் விட,  அதுவரை பொறுமையாக இருந்த மாறன், அவரிடம்,
“வெளியே போடா.” என்றான்.
“நீ வெளியே போடா..நீ எதுக்கு டா நடுவுலே பேசற? நீ யாரு டா இந்த விஷயத்திலே தலையிட? என்று அவர் கேள்வி கேட்க ஆரம்பிக்க, அதற்கு மெஹக் பதில் சொல்லுவாள் என்று எதிர்பார்த்த மாறனை ஏமாற்றி மௌனமாக இருந்தாள் மெஹக். அறையினில் நுழைந்ததிலிருந்து மௌனமாக இருந்த பழைய  பார்ட்னர் முதல் முறையாக அவர் அபிப்பிராயத்தை வெளியிட்டார்.
“என்ன ஸர்…அந்தப் பொண்ணுதான் இரண்டு படத்தையும் நடிச்சு கொடுக்கறேனு சொல்லுதே..அது போதும் நமக்கு..முதல் படம் பாதி முடிஞ்சிடுச்சு..அடுத்த படத்தை இப்பவே ஆரம்பிச்சிடலாம்..இவங்க மூணாவது யாருக்கு நடிச்சு கொடுத்தா நமக்கு என்ன?” என்றார்.
“என் பணம்டா..நான் சொன்னதுனாலதானே இவளை புக் செய்தீங்க….இப்ப நானே சொல்றேன்..வேற ஆள் பாருங்க..இவளை என்ன செய்யணுமுன்னு எனக்குத் தெரியும்.” என்று சொல்லி அவர் அறையை விட்டு வெளியேற நினைத்தபோது, அவருடையப் பார்ட்னரைப் பாரத்து ஒரு நிமிஷம் என்று சொல்லி அதற்குள் அவளுடைய ஃபோனில் ஸ்மிரிதியை அழைத்திருந்தாள் மெஹக்.
“ஸ்மிரிதி..அவங்க என்னை இரண்டு படத்திலேர்ந்தும் எடுக்கறாங்க..கொடுத்த பணத்தை திரும்பி கேட்கறாங்க.” என்று தகவல் கொடுத்தாள்.
அவன் அங்கே இருப்பதை சட்டை செய்யாமல் அவனை யாரென்று கேட்ட அந்த நபருக்கு எந்த விதமான பதிலும் அளிக்காமல் அவர் எதிரிலேயே ஸ்மிரிதிக்கு மெஹக் போன் செய்ததை அவமானமாக உணர்ந்தான் மாறன். 
“ஏன்?” என்று அதிர்ச்சியானாள் ஸ்மிரிதி.  அவள் அதை எதிர்பார்க்கவில்லை.
“மூணாவது படம் அவங்களுக்குதான் நடிக்கணும்னு சொல்றாங்க..ஆனா அக்ரிமெண்ட் அப்படி இல்லை..மனுகிட்ட பேசி மாறன் கன்ஃபர்ம் செய்துகிட்டான்.” என்றாள் மெஹக்.
“யார் வந்திருக்காங்க உன்னைப் பார்க்க?”
“தில்லிலே மீட் செய்தவரு..அவரோட புது பார்ட்னரும்.” என்றாள் மெஹக்.
“போனை ஸ்பீக்கர்ல போடு..நான் பேசறேன்.” என்று சொன்னாள் ஸ்மிரிதி.
“சொல்லுங்க.” என்று ஸ்மிரிதியின் குரல் கேட்டவுடன் அந்த பழைய பார்ட்னர்,
“நாங்க அக்ரிமெண்டை முடிச்சுக்கலாம்னு நினைக்கறோம்..நம்ம இரண்டு படமும் முடியாம புதுசா படம் செய்ய ஒத்துகிட்டிருக்காங்க..அது எங்களுக்கு ஒத்துவராது.” என்றார்.
“இதை நீங்க அக்ரிமெண்ட் ஸைன் செய்யறத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கணும்..மூணு இல்லைனா ஒண்ணுமேயில்லைனு.” என்று ஸ்மிரிதி மேலேத் தொடருமுன்
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..அவ தமிழ்லே மட்டுமில்லை வேற எந்த மொழிலையும் நடிக்க போகறதில்லை….என்னைப் பற்றி உங்களுக்குதான் சரியாத் தெரியலே..தமிழ் நாட்லே மட்டுமில்லை இந்தியா முழுக்க நான் யாருன்னு தெரியும்.” என்றார் அந்தப் புது பார்ட்னர்.
அதுவரை அந்த விஷயத்தைப் பொறுமையாக கையாள வேண்டுமென்று நினைத்து கொண்டிருந்த ஸ்மிரிதி அந்தப் புது தயாரிப்பாளரின் மிரட்டலைக் கேட்டவுடன் போர் முரசு கொட்டினாள்.
“இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோ..அவ மூணு படம் உனக்கு அடுத்தடுத்து நடிச்சு கொடுக்கறத்துக்கு நீதான் அவளை சினிமாவுலே அறிமுகம் செய்து வைக்கறேயா..அவ தெரிஞ்ச முகம்னுதானே அவளைப் புக் செய்த..
அவ சினிமாவுலே நடிப்பா, எல்லா மொழிலையும் கண்டிப்பா நடிப்பா..ஆனா உன் படத்திலே மட்டும் நடிக்க மாட்டா..அவ நடிக்கறதை நீ எப்படி நிறுத்தறேன்னு நான் பார்க்கறேன்..
நீ யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை..ஆனா நீ யார்கூட பேசிகிட்டு இருக்கேண்ணு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் உனக்கு இருக்கு..நான் ஸ்மிரிதி..ஸ்மிரிதி கார்மேகம்..
நீ அங்கையே அந்தப் பெயரைப் பற்றி விசாரிச்சுக்க..தில்லிக்கு வந்து விசாரிச்சேன்னு வை..விலாசம் இல்லாம போயிடுவ…வலை போட்டு தேடினாலும் கிடைக்க மாட்ட..விளங்கிச்சா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி ஸம்வர்தினி.
“கார்மேகம்” என்ற பெயரைக் கேட்டவுடன் அந்தப் புது பார்டனரைக் காரிருள் சூழ்ந்து கொள்ள அதுவரை அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தவர் ஒரே நொடியில் அமைதியாக அடங்கிப் போனார்.
அவரின் நிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பழைய பார்ட்னர் சமாளிப்பாக,”மா..நாம இரண்டு பேரும் ஏற்கனவே தில்லிலே இவங்களை புக் பண்ண வரும்போது மீட் பண்ணியிருக்கும்..அன்னைக்கு இவர் எங்க கூட வரலே..அதான் நீங்க யாருன்னு இவருக்குத் தெரியலே….அவரு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டீங்க மா..அவருதான் மூணு படமும் எடுக்கறாரு அதனாலே ஒரே ஆளைப் போடணும்ன்னு விருப்பப்பட்டாரு..அவ்வளவுதான்.” என்றார்.
“நான் சொல்றதை நீங்க கரெக்டா அவருக்கு புரிய வைங்க..மெஹக் இனி உங்களோட எந்தப் படத்திலேயும் நடிக்க மாட்டா..அவளோட செய்துகிட்ட கான் டர்க்டை நீங்க மீறினதாலே அவளுக்கு நீங்க நஷ்டஈடு கொடுத்து அவளுக்கு செய்த அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதறீங்க..அந்தக் கடிதம் எல்லா தினசரிலேயும் பப்ளிஷாகணும்..இது இரண்டும்  நாளைக்கே  நடக்கணும்..இல்லைனா நீங்களேக் கார்மேகத்தைத் தேடி வருவீங்க..நீங்க நடந்துகிட்டதை அவரு எப்படி எடுத்துக்கிட்டாருன்னு நேர்லே தெரிஞ்சுக்கோங்க.” என்று சொன்னாள்.
அவர்கள் இருவரும் ஸ்மிரிதியின் பேச்சில் அரண்டு போயினர். அந்தப் புறத்திலிருந்த ஸ்மிரிதி,
“நீங்க இப்ப கிளம்புங்க….ஸெட்டில்மெண்ட் வேலை ஆரம்பிக்கட்டும்.” என்றாள் கறாராக.
அவர்கள் மெஹக் அறையிலிருந்து வெளியேறியவுடன்,“நானும் கிளம்பறேன்.” என்று சொல்லி புறப்பட்ட மாறனைப் பார்த்து,”உன்னை யார் நடுவுலே வந்து பேச சொன்னா..நான் அவங்கிட்ட நல்லவிதமாதானே பேசிகிட்டுதான இருந்தேன்..உன்னாலேதான் பிராப்ளம் ஆயிடுச்சு.” கோபப்பட்டாள் மெஹக்.
“அவன்கிட்ட வாங்கின பணத்தை கொடுத்திடு..எல்லா பிராப்ளமும் ஸால்வ்ட்.” என்றான் மாறன்.
“அப்ப இன்னும் பிராப்ளமாகும்..இவனே எல்லார்கிட்டையும் போய் என்னைப் பற்றி பொய் சொல்லி என்கிட்ட அடவான்ஸ் கொடுத்த மற்ற எல்லாரையும் திரும்ப கேட்க வைப்பான்..நான் எல்லாருக்கும் அவங்கிட்டேயிருந்து வாங்கின  பணத்தை திருப்பி கொடுத்திட்டு இருந்தா வீட்லே சும்மா உட்கார வேண்டியதுதான்..அவனும் அதை தான் செய்ய போறேன்னு மிரட்டினான்..நல்லவேளை ஸ்மிரிதி சரி செய்திட்டா.” என்றாள் மெஹக்.
“அவன் உனக்கு கொடுத்த பணத்தை நீ திருப்பி கொடுத்திருந்தேன்னா ஸ்மிரிதிக்கு வேலை இருந்திருக்காது.” என்று சொன்னதையே திரும்ப சொன்னான் மாறன்.
“நான் யாருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கற நிலைமைலே இல்லை” என்று சொல்லாமல் “யாருக்கும் பணத்தைக் கொடுக்க போகறதில்லை.” என்றாள் மெஹக்,
“ஏன் இப்படி பணம், பணம்னு அலையற..எவ்வளவு சம்பாதிச்சிருப்ப? இன்னும் உனக்குத் திருப்தி ஏற்படலையா? என்று கேட்ட மாறன் அதோடு நிறுத்தாமல்,”அதனாலேதான் அன்னைக்கு நைட் என்னோட டான்ஸ் ஆடாம கபீரோடேயும், தல்ஜித்தோடேயும் ஆட்டம் போட்டியா?” என்று கேட்டான்.
அவனின் தரக்குறைவான பேச்சைக் கேட்டு,“கெட் லாஸ்ட்.” என்று கத்தினாள் மெஹக்.
அதற்குமேல் அங்கே இருக்க பிடிக்காமல் அவள் அறைக் கதவை அடித்து சாத்தியபடி அங்கிருந்து வெளியேறினான் மாறன்.
அறையினுள் இருந்த மெஹக், அடக்க முடியாமல் அழுதபடி ஸ்மிரிதிக்கு ஃபோன் செய்தாள்.  அப்போதுதான் அவள் படுக்கையறைக்கு வந்த ஸ்மிரிதி மறுபடியும் மெஹக்கிடமிருந்து ஃபோன் கால் என்றவுடன் அந்த அழைப்பை ஏற்றவளின் காதுகளில் அழுகை சத்தம்தான் கேட்டது. அதில் பதைபதைத்து போனவள்,
“என்ன மெஹக்? மாறன் போன பிறகு திரும்ப அவங்க வந்திருக்காங்களா?” என்று கேட்க,
“ஸ்மிரிதி, அந்த பொறுக்கியை எதுக்கு அனுப்பின?” என்று கேட்டாள் அழுகையினுடே.
“பொறுக்கியா?’ சரியாக கேட்டோமா என்று சந்தேகம் வர,”என்ன சொன்னாள்?” என்று கேட்காமல்,”அழுகையை நிறுத்து..யாரை சொல்ற?” என்று கேட்டாள்
“மாறனை தான்.” என்றாள் மெஹக் தெளிவாக.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Without a kindred spirit there to hear
The storyteller’s voice must disappear,
Nothing can be truer,
As only readers have the power,
To make an author live forever.
 
The first two lines are Jalal ad-Din Muhammad Rumi’s of the 13th century.
The last three lines are rumi’s resonance in mine, his kindred spirit in 21st century.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>  
Readers,  many thanks for the advice, suggestions, wishes, prayers and everything that was shared..
“உள்ளம் திறந்த வாசகர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல.”

Advertisement