Advertisement

ஸ்மிரிதியின் மனு – 43_1
மாறன் விஷயத்தில் மனு தலையிடக்கூடாது என்று நாதன் கட்டளையிட்டிருந்தாலும் தம்பியை அரித்து, அழித்து கொண்டிருப்பதை அறிந்து அதன் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியில் தம்பிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான் அண்ணன். மெஹக்கின் வாழ்க்கை மூலம் அவன் உணர்ந்த உண்மையை அவர்களின் உறவு மூலம் மாறனுக்கு உணர்த்த முடிவெடுத்தான் மனு. மனுவின் அந்த திடமான முடிவால் மாறன் தில்லியைவிட்டு கோயமுத்தூருக்கு செல்லுமுன் அண்ணன், தம்பி உறவு ஒரு புது பரிமாணத்தில் புத்துணர்வை அளிக்கும் புது உறவாக உருமாறியது. அதை வீட்டிலிருந்த மற்றவர்கள் வெவ்வேறு தருணங்கலில் அவர்களாகவே உணர்ந்தனர்.
அடுத்து வந்த நாட்களில் கோயமுத்தூருக்கும், தில்லிக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருந்தான் மாறன்.  அவன் தில்லியில் இருக்கும் நாட்களில் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் இரவுதான் வீடு திரும்பினான். அவன் நாள் முழுவதும் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்க அவன் பெற்றோருக்குத் தைரியமிருக்கவில்லை அவன் தமையனுக்குத் தேவையிருக்கவில்லை. 
அதேபோல் கோயமுத்தூரில் இருந்த நாட்களில் நினைத்தபோதெல்லாம் அவனைக் கைபேசியில் அழைக்க தடை விதித்திருந்தான்.  அதனால் அவன் என்ன செய்கிறான்? எப்படி பொழுதைப் போக்குகிறான் என்று தெரியாமல் பரிதவித்தார் சிவகாமி. 
முதல்முறை தில்லியிலிருந்து கோவை திரும்பிய போது, அவனுடைய பைக்கையும், அவனே சமைத்து சாப்பிடுவதற்கு இண்ட்க்‌ஷன் ஸ்ட்வும் சில பாத்திரங்களையும் எடுத்து சென்றான்.  தினமும் அவனே சமைக்க போகிறான் என்று தெரிந்தவுடன் சங்கடமாக உணர்ந்தார் சிவகாமி.  ஆனால் மாறனிடம் அப்படி எந்த உணர்வும் ஏற்படவில்லை.  சிவகாமியைக் கம்பளீட்டாக கழட்டி விட்டு விட்டு திரேன், ஸ்மிரிதியின் உதவியுடன் அவன் சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்களை அவனே தயாரித்து கொண்டான். 
ஒரே ஒருமுறை அவனைப் பொறுபில்லாதவன் என்று திட்டிய சிவகாமியை அவனின் ஒவ்வொரு பொறுப்பான செயல்கள் மூலம் அதே வார்த்தையை ஏன் சொன்னோமென்று அவரைப் பலமுறை நினைக்க வைத்தான்.  சிவகாமி மேல் ஏற்பட்டிருந்த கோபத்தை அவரது இளைய மகனால் நிறைய நாள் பிடித்து வைக்க முடியாது என்ற நாதனின் நினைப்பை பொய்யாக்கி கொண்டிருந்தான் கொடுங்கோல் மாறன்.  
கோயமுத்தூரில் ஏற்படும் அவன் சொந்த செலவுகளையும், தில்லி வந்து போகும்  பயணச் செலவுகளையும் எப்படி சமாளிக்கிறான் என்று நாதனுக்குத் தெரியவில்லை. மனுவிடம் அதைப் பற்றி பேச்சு எடுத்தபோது மாறனிடமே பேசிக் கொள்ளும்படி சொல்லி  விலகிக் கொண்டான்.  மாறனிடம் பணத்தைப் பற்றி பேச தயங்கிய நாதன் அவன் சேமிப்பிலிருந்து செலவிடுகிறான் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.  
அதே சமயத்தில் வீட்டு வேலைகளுக்காக அவன் அப்பா, அண்ணன் இருவரின் சேமிப்பையும் எந்தவித தயக்கமுமில்லாமல் காலி செய்து கொண்டிருந்தான் மாறன். வீட்டின் கட்டுமானப் பணிக்கான செலவு கணக்கை வாரமொருமுறை நாதனுக்கும், மனுவுக்கும் மெயில் செய்தான்.  அந்தக் கணக்கைப் பார்த்து டென்ஷனானார் சிவகாமி.  அவர்கள் எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமாகிக் கொண்டு போவதைக் கவனித்த சிவகாமி முதல்முறையாக கோயமுத்தூர் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் இரவு உணவின் போது வீட்டு வேலைக்காக மாறனுக்கு அனுப்ப வேண்டிய பணத்தைப் பற்றிய பேச்சு வர,
“நான் இவ்வளவு செலவாகும்னு நினைக்கலேடா மனு…அஸ்திவாரம் போட்டு கட்டி கொடுத்த வீட்டுக்கு இவ்வளவு செலவாகுது.” என்றார் சிவகாமி.
“அவங்க கட்டி கொடுத்திருக்க வீட்லே உங்களாலே குடியிருக்க முடியாது.. தரையெல்லாம் இப்பவே இறங்கிடுச்சு..ஒரு ரூம்லே இருந்துகிட்டு மொத்த ஃப்ளோரிங்கையும் திரும்ப செய்யறான் மாறன்..சுற்று சுவரோட உயரம் கம்மியா இருக்கு..அதை உயர்த்தி கட்டி பெரிய கேட் போடணும்..வாசல்லே கூடுதலா ஒரு ஸம்ப் கட்டணும்..இதைதவிர மர வேலையெல்லாம் செய்யணும்… நீங்க உங்க ஊருக்குப் போகணும்னு ஆசைப்பட்டீங்க அதனாலேதானே அங்கே வீடு வாங்கினோம்..இப்ப நம்ம வசதிக்கு ஏற்ற மாதிரி எல்லா வேலையும் செய்து முடிச்ச பிறகுதான் அந்த வீட்டுக்கு குடி போக முடியும்.  வாடகைக்கு விடறதா இருந்தா இந்த அளவு வசதி தேவைப்படாது.” என்றான்.
“ஆனாலும் ரொம்ப செலவு ஆகுது டா..ஒரு கல்யாணம் போலே.” என்றார் சிவகாமி.
“கல்யாணமெல்லாம் இதைவிட ஜாஸ்தியா செலவாகும்.” என்றான் மனு.
“அங்கே இவ்வளவு வேலை நடக்குதா டா?..நான் ஒருமுறை போய் வீட்டைப் பார்த்திட்டு வரேன்.” என்று மகனை பார்க்க விருப்பம் என்று சொல்லாமல் மனையை பார்க்க விருப்பமென்றார் சிவகாமி.
“நீங்க எங்கேயும் போக வேணாம்..பேசாம இருங்க..அங்கே போனீங்கன்னா அவனை நீங்க கண்காணிக்க வந்ததா நினைச்சுக்குவான்..அவன் நினைப்பை நான் தப்பு சொல்ல மாட்டேன்..அவனுக்குப் பொறுப்பில்லைன்னு நீங்களே திட்டிட்டு இப்ப அவனுக்கு ஒரு வேலை கொடுத்தபிறகு அவன் பின்னாடியே போனா அப்படிதான் தோணும்..அவன் பார்த்துப்பான்..அவன் மேற்பார்வைலேதான் எல்லாம் இதுவரை நடக்குது..அப்படியே இருக்கட்டும்..வேலை முடிஞ்சதும் எல்லாரும் ஒருமுறை போய் பார்க்கலாம்.” என்றான் மனு.
“சரி..நான் போகலே..ராமை போய் பார்க்க சொல்லு.” என்று இளையமகன் மேல் கொண்ட ஏக்கத்தை மறைத்த சிவகாமியை மேலும் கடிந்து கொண்டான் மனு.
“அம்மா, உங்களுக்கு எத்தனை முறை ஒரே விஷயத்தை சொல்றது..அவனைத் தொல்லை பண்ணாதீங்க..ராம் மேலே இருக்கற நம்பிக்கையை அவன் மேலே வைங்க.” என்றான்.
அவர்கள் பேச்சில் நாதன் தலையிடவில்லை.  மாறன் தில்லி வந்தபோது அவருடன் அதிக பேச்சு வார்த்தை வைத்து கொள்ளாமல் ஒரிரு வார்த்தைகளோடு நிறுத்தி கொண்டான்.  நாதனைப் போல் அமைதியாக இருந்த ஸ்மிரிதியின் மனதை வேறு எண்ணங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்தன.  சிவகாமி கோவைக்கு குடிபெயர்வது தெரிந்தவுடன் அதற்கு அவர் மகளை  குற்றவாளி ஆக்கினார் பிரேமா.  எதனால் சிவகாமி தில்லியைவிட்டு போகிறார் என்ற உண்மைக் காரணத்தைப் பழைய பிரண்டிடம் புது பிரண்ட் பகிர்ந்து கொள்ளவில்லை அதே சமயம் அவர்கள் இருவருக்கும் பொதுவான பிரண்டும் வாயைத் திறக்கவில்லை. அதேபோல் அவரின் மூத்த மகனும், இளைய மகனும் இப்போது புது கூட்டணி அமைத்திருக்கிறார்களென்ற  புது தகவலை அவள் மாமியருக்குத் தரவில்லை அந்த மருமகள்.
மாறனை விட்டுக் கொடுக்காமல் சிவகாமியுடன் சண்டைப் போட்டு கொண்டிருந்த மனுவை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  திக்குத் தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த தம்பிக்குத் தமையனே துடுப்பாக மாறி அவனைக் கரை சேர்க்கிறான் என்று உணர்ந்திருந்தாள்.  அவள் உணர்ந்த அந்த தருணத்திற்கும், பிரேமாவையும் நோக்கி பயணப்பட்டது அவள் மனது. 
கடந்த சில மாதங்களாக சுசித்ரா பெட் ரெஸ்ட்டில் இருந்ததால் மஞ்சு நாத்தால் எப்போதும் போல் பிரேமாவை அவரது மாதாந்திர செக்-அப்பிற்கு அழைத்து செல்ல முடியவில்லை. அதை சாக்காக வைத்து பிரேமாவும் அவருடைய ஒரு செக்-அப்பை மிஸ் செய்தார்.  அதைப் பற்றி கேள்வி கேட்ட ஸ்மிரிதியிடம் மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிடுவதால், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருப்பதால் ஆஸ்பத்திரிக்கு மாதா மாதம் செல்ல அவசியமில்லை என்று உரைத்தார்.  அவரின் உடல் நலத்தில் ஏற்படும் முன்னேற்றமும், பின்னடைவும் மாதாந்திர செக்-அப்பில் தான் தெரிய வருமென்பதால் அதைப் புறக்கணிப்பதில் கோபமடைந்தாள் ஸ்மிரிதி.  அவரை எப்படி ஆஸ்பத்திரிக்குப் போக வைப்பது என்று யோசித்து கொண்டிருந்த ஸ்மிரிதி அந்தக் கவலையை மனுவுடன் பகிர்ந்து கொண்டாள்.  அடுத்த நாள் காலை ஸ்மிரிதியை எழுப்பியது பிரேமாதான். அத்தனை கோவத்திலிருர்ந்த பிரேமாவை ஏன்? என்று கேட்ட ஸ்மிரிதிக்கு அவர் ஃபோனிலிருந்து பதில் சொன்னது மாறன்.
“இப்பதான் காலைலே இங்க வந்து சேர்ந்தேன்..அரைமணி நேரத்திலே ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போயிடுவேன்..எல்லாம் டெஸ்ட்டும் செய்து முடிச்சவுடனே அஙகேயே லன்சை முடிச்சுகிட்டு திரும்ப கொண்டு வந்து விட்டிட்டு நான் கிளம்பினா இராத்திரி போலே வீட்டுக்குப் போயிடுவேன்..நானே ஸ்கூல் டாக்டர்கிட்ட பேசி அத்தைக்கு இன்னைக்கு பர்மிஷனெல்லாம் வாங்கிட்டேன்.. அதான் கடுப்பாயிட்டாங்க.” என்றான். 
மாறனின் துரித நடவடிக்கைகளைக் கேட்டு பிரமிப்படைந்திருந்த மகளை ஃபோனில் திட்டியபடி கிளம்பி கொண்டிருந்தார் பிரேமா.  அவருக்காக மாறன் கஷ்டப்படுவது அவருக்கு கஷ்டத்தைக் கொடுத்தது.
“நீங்களே ஒழுங்கா போயிருந்தீங்கன்னா இவனை ஏன் உங்க மாப்பிள்ளை அனுப்ப போறாரு..நீங்க உங்க மாப்பிள்ளைகிட்ட பேசிக்கோங்க..இல்லை அங்கே எதிர்லே நிக்கறானே அவன்கிட்ட வாயைக் கொடுங்க.” என்றாள் மாறனின் திடீர் பெங்களூர் பயணத்திற்குக் காரணம் மனு என்று உணர்ந்த ஸ்மிரிதி.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட மாறன், ஃபோனை பிரேமாவிடமிருந்து வாங்கி,”அத்தையோட ஆஸ்பத்திரி விஸிட் என்னோட பொறுப்பு..நான் கோவைலே இருக்கறவரை, அத்தை தில்லி போகறவரை இந்த ஆஃபர் வலிட்.” என்றான்.
மாறன் சொன்னதைக் கேட்டு ஸ்மிரிதியின் கண்கள் கலங்கின.  அவனுடைய வளர்ப்பில் சிவகாமி தவறு செய்யவில்லை அவனும் எங்கேயும் தவறவில்லை என்று தோன்றியது.  தன்னிரக்கத்தில் புதைந்து கொண்டிருக்கும் தம்பியைத் தூக்கி நிறுத்தி அவனை தாங்கிப் பிடிக்கும் தூணாக, நம்பிக்கை துணையாக  அவனை மீட்டு கொண்டிருப்பது அவன் அண்ணன் தான் என்று அந்த தருணத்தில் உணர்ந்தாள் அவன் அண்ணி.
சிந்தனைவயப்பட்டிருந்த ஸ்மிரிதியைக் கலைத்தார் சிவகாமி.
“நாளைக்கு நாமதான் சமைக்கணும்..திரேனை ஜெயின் வீட்லெ சமைக்க கூப்பிட்டிருக்காங்க.  அவங்களுக்கு ஒத்து வந்தா அவனை வைச்சுப்பாங்க..அடுத்த நாள் இன்னொரு இடம் போறான் அவங்க சாயந்திரம் கூப்பிட்டிருக்காங்க..அன்னைக்கு நாமதான் டின்னர் செய்யணும்..நான் கிளம்பறவரை எதுவும் செட்டாகலேன்னா நேபாலுக்கே திரும்பி போயிடுவேங்கறான்.” என்றார்.
சிவகாமியும், நாதனும் நிரந்தரமாகத் தில்லியைவிட்டு போவதில் இருவர் பெரும் பாதிப்பு அடைந்திருந்தனர்.  திரேனும், மனிஷும் அவர்களின் திடீர் முடிவில் மனம் உடைந்து போயிருந்தனர்.  திரேனிற்கு வேறு வேலைக்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்திருந்தார் நாதன்.  அதேபோல் வாரக் கடைசியில் வந்து கொண்டிருந்த மனீஷ், வீட்டை ஷிஃப்ட் செய்யும் வேலைகளாலும், மாறன் கோயமுத்தூர் சென்றதாலும் தானாகவே அவன் வரவை குறைத்துக் கொண்டான்.    
“பிராப்ளமில்லை ஆன் ட்டி..முதல்லே அவன் தகவல் சொல்லிட்டா அதுக்கு ஏற்ற மாதிரி நான் சமையல் செய்து வைக்கறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அன்று மாலை நாதனும், சிவகாமியும் வாக்கிங் சென்றிருந்தனர்.  இரவு உணவிற்கான தயாரிப்பில் இருந்த ஸ்மிரிதியை அவள் ஃபோன் அழைத்தது.
“ஹாய்.” என்று மெஹக்கின் குரல் கேட்டு உற்சாகமடைந்தாள் ஸ்மிரிதி.
“என்ன அதிசயம்? வாசனை ஸ்ட் ராங்க அடிக்குது என் பக்கம்.” என்று மெஹக்கை கேலி செய்தாள் ஸ்மிரிதி.
“நான் எப்பவும் அதே வாசனையோடதான் இருக்கேன்..நாம இரண்டு பேரும் தள்ளி இருந்ததாலே வாசனை உன்னை வந்து சேரலே.” என்று சொல்லி சிரித்தாள் மெஹக்.
“என்ன டயலாகெல்லாம் பலமா இருக்கு..நல்ல ஃபார்ம்லே இருக்க போலே.”
“யெஸ்..எல்லாம் ரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு..எங்க ஊர்லே இப்ப என்னை எல்லாரும் புது மாதிரியா பார்க்கறாங்க..புது மரியாதையோட நடத்தறாங்க..எல்லாம் அங்கிளோடா ஆசிர்வாதம் தான்.”
“சந்தோஷம்..வேற என்ன விஷயம்?”
“ராமும், ஜனனியும் கோயமுத்தூர்லே தான இருக்காங்க?” என்று கேட்டாள் மெஹக்.
“ஆமாம்..எதுக்கு கேட்கற?”
“தமிழ் படம் ஷுட்டிங்காக கோயமுத்தூர் வந்திருக்கேன்..நாளைக்கு இங்க ஷெட்யூல் ஆரம்பமாகுது.” என்றாள் மெஹக்.
“ஓ..அவங்களை மீட் செய்யணுமா?” என்று ஸ்மிரிதி கேட்க.
“ஒன்லி ராம்….படத்தோட புது தயாரிப்பாளர் கொஞ்ச நேரத்திலே வரேன்னு சொல்லியிருக்காரு..அவரை மீட் செய்யும்போது தமிழ் தெரிஞ்ச யாராவது என்கூட இருந்தா நல்லா இருக்கும்..அண்ட் நான் தனியா இருக்கேன்..நாளைக்குதான் என் ஸ்டைலிஸ்ட் வர்றா.” என்றாள் மெஹக்.
“உன்கூட  இருந்த ஆன்ட்டி என்ன ஆனாங்க?” என்ற் ஸ்மிரிதி கேட்க,
“காஸ்ட் கட்டிங்க.” என்றாள் மெஹக்.
“தப்பு செய்திட்ட..ஸ்டைலிஸ்டைக் கட் பண்ணியிருக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்டைலிஸ்டை வைச்சுகிட்டாதான் இன்னும் அழகா தெரிவேன், இன்னும் நிறைய படம் பண்ணுவேன், அப்பதான் ஆன்ட்டியைத் திரும்ப வேலைக்கு வைச்சுக்க முடியும்.” என்றாள் மெஹக்.
“மீட்டிங்கை கான்ஸல் செய்திடு..அவரை மும்பைக்கு வர சொல்லு.” என்றாள் ஸ்மிரிதி.
“அவரு முன்னாடியே மும்பைக்கு இரண்டு முறை வந்தாரு..மீனல் பிராப்ளம்னாலே என்னாலேதான் மீட் செய்ய முடியலே….அப்பதான் கோயமுத்தூலே மீட் செய்யலாம்னு சொன்னாங்க..நானும் சரின்னு சொல்லிட்டேன்..ஜஸ்ட் மீட்டிங்க்தான்..என்கூட ஒரு ஆள் இருந்தா சௌகரியமா இருக்கும்.” என்றாள் மறுபடியும் மெஹக்.
சிறிது நேரம் யோசித்த ஸ்மிரிதி,”ராம் அதுக்கு சரி வர மாட்டான்..வேற ஒரு ஆள் அனுப்பறேன்.” என்றாள். 
அந்த வேறொரு ஆள் யாரென்று கேட்க வேண்டிய அவசியத்தை மெஹக்கும், சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஸ்மிரிதியும் உணரவில்லை. 
அவள் அறையின் அழைப்பு மணி ஒலித்தவுடன் கதவைத் திறந்த மெஹக் அதிர்ச்சியடைந்தாள்.  சாயம் போன ஜீன்ஸ், கசங்கிய டீ ஷர்ட், கலைந்த தலை, மழுக்கப்படாத தாடையுடன் அவளெதிரே இருந்த மாறனின் தோற்றத்தில் துணுக்குற்றவள் இவன் எங்கே இங்கே என்று யோசித்தபடி அவனை அறையினுள் அழைக்காமல் வாசலிலேயே நிறுத்தி அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருந்தவளைப் பார்த்து எரிச்சலடைந்தவன்,
“வேணாம்னா சொல்லு இப்படியே போயிடறேன்..எனக்கும் நிறைய வேலை இருக்கு.” என்றான்.
“உள்ள வா.” என்று சொன்ன மெஹக் வெள்ளை நிறத்தில் ரஃபில் ஸ்லீவ் டாப்பும், வைன் ரெட் நிறத்தில் முட்டிவரை ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளைப் பின்பற்றிய மாறனுக்கு அவளுடைய பின்புறத்தின் திவ்ய தரிசனம் கிடைத்தது. அவன் அவளைப் பார்ப்பது தெரிந்தும் அதை சட்டை செய்யாமல் ஒய்யாரமாக நடந்து போய் சோபாவில் அமர்ந்த மெஹக் மாறனை உட்காரு என்று சொல்லவில்லை.
“எத்தனை மணிக்கு மீட்டிங்?” என்று அவளெதிரே நின்றபடி மாறன் கேட்க,
“வந்திடுவாரு.” என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னாள் மெஹக்.
அதற்கு மேல் அவளெதிரே நிற்க பிடிக்காமல் பால்கனி கதவைத் திறந்தவன் அங்கிருந்தே சேர் ஒன்றில் அமர்ந்து கொண்டான். சேர் எதிரே இருந்த வட்ட மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான். அதன்பின் நிதானமாக சேரில் சாய்ந்து, வட்ட  மேஜையில் கால் நீட்டியபடி ஆனந்தமாக புகைபிடிக்க ஆரம்பித்தான்.
சற்றுமுன் அவனை அடிமை போல் நடத்தியவள் அவன் ஆனந்ததைப் பார்த்து புகைந்து, டக் டக் என்ற ஒலியுடன் நடந்து வந்து, அவனருகே அமர்ந்து, 
“கிவ் மீ எ டிராக்.” என்றாள்.
அவள் வந்தது, அமர்ந்தது, ஒரு தம் கொடு என்று  கேட்டது எதுவும் அவன் காதில் விழாதது போல் அமர்ந்திருந்தான் மாறன். அவன் கையிலிருந்ததைப் அவள் பறிக்க பார்த்தவுடன்,”பாக்கெட் உன்னோடதுதான் புதுசா பத்த வைச்சுக்க.” என்றான்.
“ஏன்..உன்னோடது தர மாட்டியா?’
“உன்னாலே என் டயம் வேஸ்ட் ஆகுது.. தம் வேஸ்டாக வேணாம்.” என்றான் மாறன்.

Advertisement