Advertisement

ஸ்மிரிதியின் மனு – 42
அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர்.   திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன்.  அதே சமயம் அவருடைய இளைய மகன் பெரும்பாலும், பகல் வேளையிலும் வீட்டிலிருப்பதைப் பார்த்து கவலையானார்.
மாறன் வீட்டிலிருக்க ஆரம்பித்தவுடன் சிவகாமி வெளியே போக ஆரம்பித்தார்.  மாலை வேளைகளில் நாதனுடன் பார்க்கிற்கு சென்று வந்தவுடன் திரேனுடனோ அல்லது ஸ்மிரிதியுடனோ சேர்ந்து இரவு உணவைத் தயார் செய்தார்.  அவர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் உணவு உண்பது  அரிதானதால் வேலையிலிருந்து தாமதமாக திரும்பும் மனுவிற்கு செய்வது போல் வீட்டிலிருந்த மாறனிற்காகவும் தனியாக எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தார் சிவகாமி .  
ஒருமுறை ஸ்மிரிதியும், மனுவும் சேர்ந்து மும்பைக்கு சென்றிருந்த போது பிரேமாவைப் பற்றி மாறனுடன் பேச அதுதான் சரியான தருணம் என்று எண்ணி ஒரு மாலைப் பொழுதில் மாறனின் அறைக்குச் சென்றார் நாதன்.  காலையிலிருந்து அறையினுள் முடங்கிக் கிடந்தவன் அப்போது வெளியே செல்ல தயாராகி கொண்டிருந்ததைப் பார்த்து,
“எங்க டா கிளம்பிட்ட? இந்த நேரத்திற்கு?” என்று கேட்க,
“ஒரு பார்ட்டி.” என்று பதிலளித்தான்.
“இன்னைக்கு உன்னோட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நினைச்சேன் டா..கட்டாயம் போகணுமா?” என்று கேட்டார்.
“கட்டாயம் போகணும்.” என்றவன் அவர் சொல்ல வந்தது என்னவென்று கேட்கக்கூட விரும்பாமல் உடனே புறப்பட்டு சென்றான்.
அந்த முறை மும்பையிலிருந்து திரும்பிய மனு, ஸ்மிரிதியும் ஒரு கோரிக்கையுடன் நாதனிடம் வந்தனர்.  அவர்கள் கோரிக்கையைக் கேட்டபின் ஸ்மிரிதி மீது அவருகிருந்த அபிமானமும், மரியாதையும் மேலும் பெருகியது.
அத்துலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை நாதனிடம் ஒப்படைத்தாள் ஸ்மிரிதி.  அவனையும், அவனின் குடும்பத்தையும் பற்றிய விவரங்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள் மூலம் விசாரிக்க சொன்னாள்.  அப்போதுதான் நாதனுக்கு மனுவின் மும்பை பயணங்களுக்கானக் காரணமும், மெஹக்கின் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த பின்னடைவும் தெரிய வந்தது.  
“என்ன டா விசாரிக்கணும்?”
“ஜஸ்ட் அவங்களைப் பற்றி…அத்துல் கேட்டதெல்லாம் கொடுத்தாச்சு..எல்லாம் முடிய போகுது..இது என் மனநிம்மதிக்காக.”
“ஏன் டா திடீர்னு இந்த மாதிரி பர்ஸனல் இண்ட் ரெஸ்ட்?
“அவளோட அப்பா, அம்மாங்கறதுனாலே கார்மேகம் அங்கிள் கொடுக்கறேன்னு சொல்றத்துக்கு முன்னாடி அவளே கடன் வாங்கி கொடுக்கறேன்னு சொன்னா பா மெஹக்….அதான் அந்த எண்ட்லேயும் யாராவது விசாரிச்சு எல்லாம் சரியா இருக்குண்ணு தகவல் கொடுத்தா எனக்கு ரிலீஃபாயிருக்கும்.”
“சரி..காலைலே வாக்கிங்லே அலுவாலியவைப் பார்ப்பேன்..அவன்கிட்ட சொல்றேன்..அவனுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் இருக்கு.” என்று அத்துலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை ஏற்று கொண்டார் நாதன்.  
 
அடுத்த முறை மனு மும்பை சென்றபோது அவன் வீட்டில் ஏற்பட போகும் நிகழ்வுகள் அவன் மன நிம்மதியைப் பறிக்க போகிறதென்று அவன் அறிந்திருக்கவில்லை.  மனுவுடன் சென்று மெஹக்கை நேரடியாக சந்தித்த பின் மெஹக்கிற்கு அவளின் வருமானத்தை பெருக்க எப்படி உதவுவது என்ற யோசனையாக இருந்தது ஸ்மிரிதிக்கு.  அந்த வாரம் முழுவதும் அவள் தில்லியில் இருக்க போவதால் ஒரு முறை மீராவை சந்தித்து மெஹக்கின் சூழ் நிலையை விளக்கி அவளது பணத்தைப் பன்மடங்காக்க அவரது ஆலோசனையைக் கேட்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தாள்.  
ஒரு நாள் மாலை ஜன்பத்திலிருந்து வீடு திரும்பிய ஸ்மிரிதிக்கு வீட்டின் சூழ் நிலை வித்தியாசமாகத் தெரிந்தது.  வெகு அமைதியாக இருந்த வீட்டினுள் நுழைந்த ஸ்மிரிதியை வரவேற்றான் திரேன்.
“பாபி..சாய் பனாவும் (டீ போடட்டா)” என்று கேட்டான்.
“தோ சாய்..ஆன்ட்டிகேலியே பீ (இரண்டு டீ.. ஆன் ட்டிக்கும் சேர்த்து.)” என்றாள் ஸ்மிரிதி.
“ஆன் ட்டி வாக்கிங்லேர்ந்து வரலே.
“இன்னும் வரலேயா? லேட்டா போனாங்களா?” என்று ஸ்மிரிதி.
“ஆமாம் பாபி..மாறன் பையா கொஞ்ச நேரம் முன்னாடி வந்தாங்க..அவங்களோட பேசிகிட்டிருந்தாங்க..அப்பறம் ஆன்ட்டி வெளிய கிளம்பி போயிட்டாங்க.”
“சரி..அப்ப ஒரே ஒரு டீ போடு.” என்றாள் ஸ்மிரிதி.
மாறனின் சமீப கால கால அட்டவணைப் பற்றி யாருக்கும் ஐடியா இல்லாததால் அதற்குள் மாறன் ஆபிஸிலிருந்து வந்துவிட்டானா என்று யோசித்தபடி அவள் அறைக்கு சென்றாள். அவள் உடை மாற்றி கொண்டு வரவேற்பறைக்கு வந்த போது அங்கே சிவகாமியும், நாதனும் அமர்ந்திருந்தனர்.
“நீங்க வந்தது தெரியலை..பெல் அடிச்ச போது பாத் ரூம்ல இருந்திருப்பேன்..திரேன் எனக்கு டீ போடறான்..உங்களுக்கும் சேர்த்து போட சொல்லவா?” என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டாள் ஸ்மிரிதி.
“வேண்டாம் மா.”  என்று நாதன் பதில் சொல்ல, ஸ்மிரிதி பேசியது சிவகாமிக்கு கேட்டதா என்று ஸ்மிரிதிக்கு சந்தேகம் வந்தது.  அவருடைய முகத்தில் அதுவரை ஸ்மிரிதி கண்டிராத முகபாவனை.  என்னவாயிற்று அவருக்கு என்று கவலையானாள் ஸ்மிரிதி. அவள் டீ குடித்து முடிக்கும் வரை காத்திருந்த சிவகாமி,
”திரேனை அனுப்பிடு..மத்தியானம் சப்ஜி சூடு பண்ணிட்டு  நீயே ரோட்டி செய்திடு….எல்லாம் ரெடியான பிறகு கூப்பிடு.” என்று சொல்லி அவர் அறைக்கு சென்று விட்டார்.
கல்யாணமாகி வந்ததிலிருந்து சிவகாமியை இந்த மாதிரி பார்த்திராத ஸ்மிரிதிக்கு அவரது அன்றைய ஒதுக்கம் நெருடலை ஏற்படுத்தியது. ஏதோ சரியில்லை என்று தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவிற்கான வேலையில் ஈடுபட்டாள் ஸ்மிரிதி.
அரைமணி நேரம் கழித்து சிவகாமியை அழைக்க சென்ற ஸ்மிரிதிக்கு அவர் முகத்தைப் பார்த்தவுடன் அவர் அழுது கொண்டிருந்தாரோ என்று தோன்றியது. அன்றிரவு அவர்களோடு சேர்ந்து உணவருந்த வந்த மாறனின் மன நிலையும் சரியில்லை என்று அவளுக்குத் தோன்றியது.
அவர்கள் நால்வரும் அமர்ந்து மௌனமாக உணவருந்த அதே நேரம் மனுவிடமிருந்து ஃபோன் கால் வந்தது ஸ்மிரிதிக்கு.  
“ஸ்மிரிதி..மிட் நைட்க்கு மேலே ஃபிளைட்..நாளைக்கு விடிகாலைலே தில்லி வந்திடுவேன்..நீ வெயிட் பண்ணாத..தூங்கிடு.” என்று தகவல் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
“ஆன்ட்டி..மனுவுக்கு நடு இராத்திரிக்குதான் ஃபிளைட்..விடியற் காலைலேதான் வருவானாம்.” என்று சாதாரணமாகத் தகவலைப் பகிர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“சின்ன விஷயத்தைக்கூட பொறுப்பா தெரியப்படுத்தறான்..சில பசங்களுக்கு எல்லா விஷயத்திலேயும் பொறுப்பு தானவே வந்திடுது.” என்று சிவகாமி சொல்லி முடிக்குமுன் சாப்பிட்டு கொண்டிருந்த மாறன் அவன் தட்டை வீசி எறிந்திருந்தான்.  டேபிளிலிருந்து பறந்து சென்ற தட்டு வரவேற்பறையின் கோடியில் விழுமுன்  அந்த அறை முழுவதும் சப்ஜியையும், தாலையும் வாரி இறைத்தது.
“மாறன்.” என்று நாதன் அதட்ட, அதை பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரையும் பார்த்து,”நீங்க சொன்னதைப் படிச்சேன்..நீங்க விரும்பின வேலைக்குப் போனேன் ஆனாலும் உங்களுக்கு என்கிட்ட எப்பவும், எல்லாத்துலேயும் குறை..மனு அவன் விரும்பினதைப் படிச்சான், பிராக்டீஸ் செய்யறான், விருபப்படி கல்யாணம் செய்துகிட்டான் ஆனாலும் அவந்தான் இந்த வீட்லே பொறுப்பானவன்..நான் பொறுப்பில்லாதவன் தானே அதான் உங்களுக்கு தகவல் கொடுக்காம வேலையை விட்டேன்..இனி எனக்குப் பிடிச்சதைதான் செய்ய போறேன் அது உங்களுக்குப் பிடிக்கலேன்னா நான் இந்த வீட்டுக்கே வரலே.” என்றான் மாறன்.
அவனின் கோபமான செயலிலும், கடுமையான பேச்சிலும் அதிர்ந்து போன பெண்கள் இருவரில் முதலில் சுதாரித்து கொண்ட சிவகாமி,
“நம்ம பசங்க இரண்டு பேரும் என்னைக்கு அவங்க இஷ்டத்துக்கு இருக்காங்கன்னு தெரிஞ்சுதோ அன்னைக்கே  நாம கோயமுத்தூர் போயிருக்கணும்..நீங்கதான் என் பேச்சை கேட்கலே….ஒருத்தன் அவன் இஷ்டத்துக்கு வாழ்க்கையை அமைச்சுகிட்டான் இன்னொருத்தன் அவன் இஷ்டத்துக்கு வாழ்க்கையை பாழ் செய்துக்கறான்..
நீங்க ஊர் ஊரா சுத்திகிட்டு இருந்த போது தனியாவே இரண்டு பசங்களையும் நல்ல விதமா வளர்த்திருக்கேன்னு நினைச்சுகிட்டிருந்தேன் அப்படியெல்லாம் இல்லை அவங்க விருப்பப்படி தான் வளர்ந்தாங்கன்னு இப்பதான் புரிஞ்சுகிட்டேன்..இதுக்கு மேலே என்னாலே முடியாது.. எல்லாத்தையும் பிரிச்சு கொடுத்திடுங்க….ஒருத்தன் மனசுல பேதம் வந்திடுச்சு இனி ஒற்றுமையா இருக்க மாட்டாங்க….நாம இரண்டு பேரும் கோயமுத்தூருக்கே போயிடலாம்.” என்று சொல்லி அழுது கொண்டே அவர் அறைக்கு சென்றார் சிவகாமி.  அவரைத் தொடர்ந்து சென்ற நாதன் ஸ்மிரிதியைப் பார்த்து,”திரேனைக் கூப்பிடு.. கிளீன் செய்திடுவான்..நீயும் போய் படுத்துக்க மா.” என்றார்.
“திரேன் வேணாம்..நானே கிளீன் செய்திடறேன் அங்கிள்.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதியின் குரல் ஒடுங்கிப்போயிருந்தது. சிவகாமியின் பேச்சுதான் அதற்கு காரணம் என்று புரிந்து கொண்ட நாதன்,
“எங்ககிட்ட சொல்லாம மாறன் வேலையை விட்டிருக்கான்..கொஞ்ச நாள் முன்னாடி அவன் கிளம்பி போன பார்ட்டி அவனோட பிரிவு உபசார விழான்னு எனக்கு இன்னைக்குதான் தெரிய வந்திச்சு..அதுலே அவனைக் கொஞ்சம் கோவமா பேசிட்டேன்..அதான் அவனும் கோபத்திலே ஏதோ செய்திட்டான்..மனு உன்னைக் கல்யாணம் செய்துக்க விருபப்படறான்னு சொன்ன போது சிவகாமிக்கு கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்திச்சு ஆனா இப்ப அப்படி எதுவுமில்லேன்னு உனக்கேத் தெரியும்..எதையும் மறைக்க முடியாம அப்படியே பேசிட்டா..நீ மனுகிட்ட இதைப் பற்றி எதுவும் சொல்ல வேணாம்.” என்றார் நாதன்.
“சரி அங்கிள்.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதிக்கு முதல் முறையாக சிவகாமியுடனான  அவளின் உறவைப் பற்றி அச்சம் ஏற்பட்டது அதன் தொடர்ச்சியாக பிரேமாவின் எதிர்காலத்தைப் பற்றி பயமும் ஏற்பட்டது.
வரவேற்பறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்த ஸ்மிரிதியின் மனம் முழுவதும் மனுவைப் பற்றி மாறன் சொன்ன வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருந்தது.  அந்த இடத்தை முழுவதுமாக சுத்தம் செய்து அவள் படுக்க சென்ற போது நடு இரவாகியிருந்தது. அதற்குபின் ஸ்மிரிதிக்கு உறக்கம் வரவில்லை.  விடியற் காலைவரை புரண்டு படுத்து கொண்டிருந்தவள் சிறிது அசந்தபோது மனு வீடு வந்து சேர்ந்தான்.
படுக்கையில் அவளருகே வந்து படுத்தவன்,”இன்னும் தூங்கலையா?” என்று கேட்க,
“இல்லை.”
“என்னை மிஸ் பண்ணியிருக்கே” என்று மனு சொன்னதற்கு வெறும் தலையசைவில் “ஆமாம்” என்று சொன்னவளிடம்,”மீ டூ.” என்று அவன் சொன்னவுடன் இருவரும் ஒருவரையொருவர் எத்தனை மிஸ் செய்தார்கள் என்று விடிந்த பிறகும் ப்ரூவ் செய்து கொண்டிருந்தார்கள். அதன்பின் மனு ஆழந்த உறக்கத்திற்கு செல்ல, ஸ்மிரிதி விழித்தே இருந்தாள்.
அவளுடைய பயணங்களிலிருந்தும், வேலைகளிலிருந்தும் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு மாறனின் பிரச்சனையையும், அம்மா, மகன் இருவருக்கிடையே எற்பட்டிருந்த  பிளவையும் சரி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த ஸ்மிரிதி அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு ஓய்வு நேரத்திலும் வீட்டிலிருக்க விரும்பாமல் ஜன்பத் கடைக்கு செல்ல ஆரம்பித்தாள்.  
அந்த மாதிரி ஒரு நிகழ்வு அந்த வீட்டில்தான் ஏற்பட்டதா என்று சந்தேகிக்கும்படி அடுத்த வந்த நாட்கள் எப்போதும் போல் கழிந்த போது மனுவிடம் மாறன் விஷயத்தை இனி மறைக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் ஸ்மிரிதி. அவள் முடிவு செய்த அதே நேரத்தில் நாதனும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். அந்த முடிவு மனு மும்பையிலிருந்து வந்த நான்காவது நாள் அவரது இருமகன்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இரவு உணவு முடிந்து திரேன் அவன் அறைக்கு சென்ற பின் அவரது இரு மகன்களையும் அழைத்த நாதன்,
“மனு, மாறன் உன்கிட்ட சொன்னான்னு தெரியலே அவன் வேலையை ரிஸைன் செய்திட்டான்….அவன் எங்களோட விருப்பத்திற்காக, கட்டாயத்திற்காகப் படிச்சதாகவும், வேலைக்குப் போனதாகவும் சொல்றான்..அதனாலே இனி அவன் விருப்பம் போலவே நடக்கட்டும் ..அதுக்காக நான் சில முடிவுகள் எடுத்திருக்கேன்..
நானும், சிவகாமியும் கோயமுத்தூருக்கே போயிடலாம்னு இருக்கோம்..முதல்லே உங்க இரண்டு பேருக்காக இந்த வீட்டோட கீழ் போர்ஷனை வாங்கலாமுன்னு யோசனை செய்துகிட்டிருந்தேன் ஆனா இப்ப என்னாலே அந்த அளவு  பணம் போட்டு இந்த வீட்டை வாங்க முடியாது… அதனாலே இந்த மாடி போர்ஷனை உங்க இரண்டு பேர் பெயர்லையும் எழுதி வைச்சிடறேன்…கோயமுத்தூர் வீடு ஏற்கனவே எங்க இரண்டு பெயர்லதான் இருக்கு.” என்று சொன்னவர் மாறனைப் பார்த்து,
மனுவோட கல்யாணத்துக்கு முன்னாடி நாம் எல்லாருமே கோயமுத்தூர் போயிடலாமும்னு உங்கம்மா சொன்னா..அப்ப அவனோட வாழ்க்கைதான் முக்கியம்னு நினைச்சா.. இப்ப எங்களுக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம் அதனாலே நாங்க தனியா இருக்க முடிவு செய்திட்டோம்..
உனக்கும், அவனுக்கும் நடுவுலே நாங்க வித்தியாசம் பார்த்ததேயில்லே..அவன் விரும்பின வாழ்க்கை அவனுக்கு அமைஞ்சதுக்கு காரணம் அவனும் அதை அமைச்சுக்க முயற்சி செய்தான்..நீ விரும்பற வாழ்க்கையை அமைச்சுக்க நீயும் முயற்சி செய்..நானும், அம்மாவும் அதுக்கு தடையா இருக்க மாட்டோம்…” என்ற நாதனை இடைமறித்து,
“நீங்களும், அம்மாவும் விருப்பப்பட்டீங்கனுதான் நான் கோயமுத்தூர்லே படிச்சேன்..நான் விருப்பப்பட்டதை இங்கையே படிச்சிருக்கலாம்.” என்றான் மாறன்.
அதைக் கேட்டவுடன் முதல்முறையாக வாயைத் திறந்த சிவகாமி,”டேய்..உனக்கு அந்த ஊர் பிடிச்சிருக்கண்ணுதானே அங்கையே வேலைக்கு டிரை செய்த.” என்றார்.
“ஊரு பிடிச்சதுனாலதான் ஒழுங்கா படிச்சு முடிச்சேன்..நீங்க நினைக்கற மாதிரி நான் பிடிச்சு படிக்கலே..அதனாலதான் அந்தப் படிப்புகேத்த வேலையும் பிடிக்கலே.” என்றான் மாறன்.
“போதும் டா…உனக்கு என்ன பிடிக்குதோ அதை செய்துக்க..எனக்கு எதுவும் தெரிய வேணாம்.” என்றார் சிவகாமி.
“இனி எனக்குப் பிடிச்சதுதான் செய்ய போறேன்..என் விருப்பம்தான் எல்லாத்திலேயும்.” என்று பத்து வயது பிடிவாதக்கார சிறுவன் போல் பேசினான் மாறன்.
அவனின் பதிலில் மனம் உடைந்து போன சிவகாமி மௌனமாக, மாறனைப் பார்த்து,
“மனு என்ன படிக்க விருபப்பட்டான்னுகூட எனக்குத் தெரியாது..அவனை நான் கேட்டதும் இல்லை….நான் ஊர் ஊரா சுத்திகிட்டிருந்த போது தில்லிலே இருக்கணும், உங்கம்மாவையும், உன்னையும், வீட்டையும் பொறுப்பா பார்த்துக்கணும்னு வெளியூர் போகாம இங்கையே காலேஜ் சேர்ந்தான்..ஆனா உன்னோட நாங்க அப்படி இருக்கலே..உனக்கு பிடிச்ச படிப்புன்னு நினைச்சுதான் அவ்வளவு தூரத்திலே ஹாஸ்டல்லே சேர்த்து படிக்க வைச்சோம்..
 நீ நினைக்கற மாதிரி மனுவோட எல்லா விருப்பத்தை உங்கம்மா உடனே நிறைவேத்தலே ..உங்கம்மாக்கு ஸ்மிரிதியை சின்ன வயசுலேர்ந்து தெரியும்..ஆனா அவளை இந்த வீட்டு மருமகளா நினைச்சுகூட பார்த்ததில்லை..அது நம்ம எல்லாருக்கும் தெரியும்..ஸ்மிரிதிக்கும் தெரியும்….ஆனாலும் உங்கம்மா ஆசிர்வாதமில்லாம கல்யாணம் செய்துக்ககூடாதுனு பிடிவாதமா இருந்தான் மனு…  
இந்த வீட்டு செலவை அவந்தான் பார்த்துக்கறான்..கோயமுத்தூர் வீட்லேயும் அவந்தான் பணம் போட்டிருக்கான்..நீ எதுக்கும் பணம் கொடுக்க வேணாம் ஆனா ஒரு உதவி மட்டும் செய்..கோயமுத்தூர் வீட்லே கொஞ்ச வேலை பாக்கி இருக்கு..நீ போய் அங்கே நடக்கற வேலைகளை மேற்பார்வை செய்….அந்த வீட்லே எவ்வளவு சீக்கிரம் வேலை முடியுதோ அவ்வளவு சீக்கிரம் நானும், உங்கம்மாவும் இங்கேயிருந்து ஷிப்ட் ஆயிடுவோம்..அதுக்கு அப்பறம் நீ இங்கே திரும்பி வந்தாலும் சரி இல்லை எங்களோட கோயமுத்தூர் இருந்தாலும் சரி..உன் இஷ்டம்….நீங்க இரண்டு பேரும் எப்ப வேணும்னாலு கோயமுத்தூர் வரலாம்..மற்றது உன் விருப்பம்.” என்றார்.
நாதன் பேசுவதை அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்த மனு,”என்ன டா ஆச்சு உனக்கு? ஏன் இப்படியெல்லாம் பேசற?” என்று மாறனைக் கேட்க, அவன் பதில் சொல்வதற்குமுன்,
“மனு, அவனுக்கும் இந்த வீட்லே பங்கு இருக்கு அதனாலே அவன் இந்த வீட்லேதான் இருப்பான்…..அவன் சம்பாதிக்கற வரைக்கும் அவனுக்கு ஆகற செலவை நான் ஏத்துக்கறேன்..மற்றபடி நீ அவன் விஷயத்திலே தலையிடகூடாது.” என்றார்  நாதன் கண்டிப்புடன்.
“அப்பா..அவனை நாம எதுக்குமே கட்டாயப்படுத்தினதில்லை..அவன் நடவடிக்கை எதையும் கேள்வி கேட்டதில்லை.” என்றான் மனு.
“அவன் நடவடிக்கைக்கு எப்போதும் அவந்தான் பொறுப்பு.. நாம பொறுப்பேத்துக்க முடியாது..அதனாலதான் எல்லாம் தெரிஞ்சும் நான் அவனை ஒரு கேள்வியும் கேட்டதில்லை..எனக்கு மரியாதை கொடுத்து நீயும் அவனைத் தட்டி கேட்டதில்லை….உன்னாலே அவன்கூட அப்படி இருக்க முடியாதுன்னா அவன் வேற எங்கையாவது இருந்துகட்டும்..இந்த வீட்லே வேணாம்.” என்றார் நாதன்.
“அப்பா, தப்பு செய்யறீங்க..அவனோட தப்பை சுட்டிக் காட்டி திருத்தணும்..இப்ப போய் ஒதுங்கி போக சொல்றீங்க.” என்றான் சீர்திருத்தவாதி.
“இல்லை டா..இனி அது ஒத்துவராது.” என்றார் யதார்த்தவாதி தந்தை.
அதற்குமேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்று நாதன் அங்கிருந்து செல்ல அவரைப் பின் தொடர்ந்தார் சிவகாமி.  அங்கே நடந்தவற்றைப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதி குழப்பத்திலிருந்தாள்.  மாறன் அவன் பெற்றவர்களின் கட்டாயத்திற்காக படிப்பிலிருந்து வேலை வரை தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவளுக்கு அவன் மேல் கோபம் ஏற்படாமல் பரிதாபம் ஏற்பட்டது.  அந்த நேரத்தில் ஸ்மிரிதிக்கு மாறன்  சுசித் ராவாக, பெற்றோர்களின் ஆசையை சுமந்த இன்னொரு சுமைதாங்கியாக தெரிந்தான்.  
“டேய்..என்ன டா ஆச்சு உனக்கு திடீர்னு?” என்று மாறனை மறுபடியும் மனு கேட்க,
“மனு, அவன் எப்ப உன்கிட்ட சொல்லணுமோ அப்ப சொல்லுவான்..இப்ப ஹி இஸ் நாட் ரெடி.” என்று மாறனிற்காகப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
அதற்குமேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் மனுவும் சென்றுவிட, வரவேற்பறையில் தனிமையில் விடபட்ட பட்டனர் மாறனும், ஸ்மிரிதியும்.
“இதுவரை உன்னைப் பற்றிய முடிவை அங்கிள், ஆன் ட்டி எடுத்திருக்காங்க..நீயும் அவங்களை மனசுலே வைச்சுகிட்டு அவங்களுக்காக உன் முடிவை எடுத்திருக்க..இனி உன்னோட எல்லா முடிவுக்கும் நீ மட்டும் தான் பொறுப்பு…உன்னோட அனுபவத்திலேர்ந்து பாடம் கத்துக்க ஆரம்பிக்க போற..ஆல் தி பெஸ்ட்.” என்று சொல்லி ஸ்மிரிதியும் அவள் அறைக்கு சென்றாள்.  வரவேற்பறையின் தனிமையில் விடபட்ட மாறனின் மனதில் ஸ்மிரிதியின் வார்த்தைகள் எதிரொலித்து கொண்டிருந்தன.
படுக்கையறைனினுள் நுழைந்த ஸ்மிரிதி,”ஆன் ட்டியும், அங்கிளும் இங்கையே இருக்கட்டும்..எதுக்கு கோயமுத்தூர் போறாங்க?” என்று கேட்டாள்.
“அம்மாவுக்கு தில்லிலே இருக்கறது பிடிக்கலே..நம்ம விஷயம் தெரிஞ்ச பிறகு எல்லாருமே கோயமுத்தூர் போயிடலாம்னு சொல்லிகிட்டிருந்தாங்க..நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் அந்த பேச்சு எடுக்கலே..இப்ப மாறனாலே திரும்பவும் அதே பேச்சு..இந்த முறை கண்டிப்பா கிளம்பிடுவாங்கன்னு நினைக்கறேன்.” என்றான் மனு.
“நாம எங்கம்மாவைத் தில்லிக்கு கூப்பிடறோம்..இப்ப ஆன்ட்டி கோயமுத்தூர் போறேன்னு சொல்றாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“நம்ம வீட்லே என்னென்னமோ நடக்குது…ஆனா எனக்குத் தெரியவேயில்லை.” என்றான் மனு.
“நீ மும்பைலேர்ந்து திரும்பி வந்த நைட்தான் எல்லாம் நடந்திச்சு.. நான் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு அங்கிள் என்கிட்ட கேட்டுகிட்டாரு.”
“அவரு சொன்னா நீ கேட்டுபியா..அன்னைக்கே எனக்கு சொல்லியிருக்கணும்.” என்று கோபப்பட்டான் மனு.
“மனு, அன்னைக்கு நைட் மாறன் அவன் சாப்பாடு தட்டைத் தூக்கி எறிஞ்சிட்டான்..அவனுக்கு அவ்வளவு கோவம் வருமும்னு நான் நினைக்கவேயில்லே.” என்றாள் ஸ்மிரிதி.
“அவன் தட்டை தூக்கி எறிஞ்ச பிறகு நீ என்ன செய்த?”
“அங்கிள் வேணாம்ன்னு சொன்னாரு ஆனாலும் நாந்தான் அந்த இடத்தை கிளீன் செய்தேன்.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் பதிலை ஆச்சர்யத்துடன் கேட்டு கொண்டிருந்த மனு,”அவனை நீ அப்பவே நாலு கேள்வி கேட்டிருக்கணும்.” என்றான் மனு.
“அவனுக்கும், எனக்கும் பத்து வயசா இருந்திருந்தா அன்னைக்கே அவனை நாலு சாத்து சாத்தியிருப்பேன்..
ஆன் ட்டியும், அங்கிளும் ஆசைப்பட்டாங்கன்னு இவனும் அவங்க ஆசைக்காக எல்லாம் செய்திட்டு இப்ப அவங்களையே அவனோட தோல்விகளுக்குக் காரணமாக்கறான்..அவனுக்கு பிடிக்கலைன்னு சொல்லறததுக்கு இப்பவாவது தைரியம் வந்திச்சே..இனிதான் அவன் வாழ்க்கைப் பாடம் ஆரம்பிக்க போகுதுன்னு எனக்குத் தெரிஞ்சதை இப்ப அவன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
மாறனால் குடும்ப நபர்கள் நடுவில் ஏற்பட்டிருந்த மனஸ்தாபத்தில் மெஹக்கின் மீது அவனுக்கு இருந்த அபிப்பிராயத்தை மறந்து போனாள் ஸ்மிரிதி. மாறன், மெஹக் இருவருக்கும் நடுவே அது பிரச்சனையான போது மாறனை அடிக்க விரும்பிய ஸ்மிரிதி அவனை வார்த்தைகளாலையே விலாசி தள்ளினாள்.

Advertisement