Advertisement

ஸ்மிரிதியின் மனு – 41_2
“நீங்க போட்ட பணத்துக்கு மேலே அவ சம்பாதிச்சு கொடுத்தாச்சு..உங்களோட கடனையெல்லாம் அடைச்சிருக்கா..கடந்த நாலு வருஷமா அவ வருமானத்துலேதான் இந்த வீடு நடக்குது..உங்க இரண்டாவது பொண்ணோட எல்லா செலவையும் இவதான் பார்த்துக்கறா..மெஹக் அவ கடமையை இந்தக் குடும்பத்துக்கு செய்திட்டா..இனி அவ சம்பாதிக்க போகறது எல்லாம் அவளோடது தான்..அவளுக்காக மட்டும் தான்.” என்று மனு சொன்னவுடன்,
“அதுக்கு ஒத்துக்க முடியாது..வெளி நாட்லே நிரந்தரமா இருக்கறது சாதாரண விஷயமில்லை..இவங்க இரண்டு பேருக்கும் அவங்க காலம் முடியறவரைக்கும் வருமானத்திற்கு வழி பண்ணனும் அதனாலே அவங்களுக்குண்ணு ஒவ்வொரு வருஷமும் ஒரு குறிபிட்ட தொகை மெஹக் அனுப்பணும்.” என்றான் அத்துல்.
“அப்ப அவங்க எதுக்கு உங்களோட வரணும்? இங்கையே மெஹக்கோட இருக்கட்டும்.” என்றான் மனு.
“அது சரி வராது..என் மனைவி அவ அப்பா, அம்மாவை அவளோடவே வைச்சுக்கணும்னு விருபப்படறா.” என்றான் அத்துல்.
“உங்க மனைவி விருப்பத்தை அவங்களே நிறைவேத்தணும் இல்லை நீங்கதான் நிறைவேத்தணும்..உங்க மனைவியோட அக்காவை நிறைவேற்ற சொல்லக்கூடாது.”
“என்கூடவே என்னோட அப்பா, அம்மாவை வைச்சுக்கறது என் விருப்பமட்டுமில்லை அவங்க விருப்பமும் அதுதான்..என்னை மெஹக் போலே எங்கம்மா சினிமாலே அறிமுகப்படுத்தி வைக்கலே..என்னைப் படிக்கதான் வைச்சாங்க பல கோடி போட்டு படத்துல்லே நடிக்க வைக்கலே..எனக்குன்னு அவங்க தனியா வருமானத்திற்கு வழி செய்யலே..அதனாலே அவங்களை நான் கடைசிவரைக்கும் வசதியா, சௌகரியமா வைச்சுக்க மெஹக்தான் பணம் கொடுக்கணும்.” என்று முதல் முறையாக அவள் திருவாயைத் திறந்தாள் மீனல்.
“அவ ஷோ பிஸ்னஸ்லே இருக்கா..அதுலே எவ்வளவு போட்டின்னு தெரியும்..அறிமுகமாகி அஞ்சு வருஷம் கழிச்சு இப்பதான் முன்னனி கதாநாயகி ஆகியிருக்கா..போக போக அவளுக்கே வருமானம் கம்மியாகும் போது என்ன செய்வீங்க?” என்று கேட்டான் மனு.
“கதாநாயகியா காலாவதியானா என்ன? அவ நடிப்பு தொழில்லே இருக்கறவரைக்கும் எங்களுக்கு பணம் வந்துகிட்டு இருக்கணும்.” என்றான் அத்துல். அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் மெஹக். அவளின் உழைப்பில் உல்லாசமாக வாழ நினைக்கறான் அதனால்தான் அவள் பெற்றோரை அவனுடன் வைத்து கொண்டு அவர்கள் மூலம் வற்றாத வருமானத்திற்கு வழி செய்து கொள்ள பார்க்கிறான் என்று புரிந்து கொண்டாள்.
உடனே,”அப்ப நீங்க முதல்லே உங்களோட சொத்து விவரத்தை எனக்கு அனுப்புங்க..அப்பதான் உங்க மாமனார், மாமியார் பெயர்லே வாங்க போகற சொத்து, திறக்க போற பாங்க் அகௌண்ட் எல்லாத்தையும் தெளிவா பிரிச்சு பார்க்க முடியும்..அவங்க காலத்திற்கு அப்பறம் அதுலே மெஹக்கிற்கும் பங்கு வரணுமில்லே.” என்றான் மனு.
“நோ..மெஹக் தீதிக்கு எதுக்கு பங்கு கொடுக்கணும்..அவ கொடுக்க போகற பணம் அவங்க செலவுக்கு சரியாயிடும்..எங்கம்மா, அப்பா பணத்துலே வாங்கற சொத்தெல்லாம் எனக்கும் மட்டும்தான்னு அம்மா, அப்பா இரண்டு பேரும் சொல்லிட்டாங்க..நீங்க சொன்ன மாதிரி அது அவங்க சுய சாம்பாத்தியம் யாருக்கு கொடுக்கணும்ங்கறது அவங்களோட முடிவு.” என்று மெஹக்கைத் தீதி என்று சொல்லி தூக்கி எறிந்தாள் அவள் தங்கை மீனல்.
“ஃபைன்..அது உங்க பேரண்ட்ஸோட விருப்பம்..ஆனா மெஹக் வாழ் நாள் முழுக்க நடிச்சிகிட்டு இருக்க போறான்னு யார் சொன்னங்க? இப்பக்கூட அவ தொழிலேர்ந்து எப்படி சீக்கிரமா விலகறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கா.”என்ற மனுவின் எதிர்பாராத ஏவுகணை அறையிலிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“இந்த வயசுலே நடிப்பு தொழிலேர்ந்து விலகப் போறியா? பைத்தியமா உனக்கு?” என்று மெஹக்கிடம் கோபப்பட்டார் அவள் அம்மா. மெஹக்கிடம் அதற்கு எதிரொலி இல்லை.
“உங்க சின்ன பொண்ணுக்கு கல்யாணம் செய்து ஸெட்டிலாகற வயசாயிடுச்சு ஆனா உங்க பெரிய பொண்ணுக்கு இன்னும் ஸெட்டிலாகற வயசு வரலேயா?” என்று ஏளனாமாக கேட்ட மனு அவனுடைய தொனியை மாற்றிக் கொண்டு ஸீரியஸாக,” மெஹக் கொஞ்ச நாள்லே கல்யாணம் செய்துகிட்டு சினிமாலேர்ந்து விலக போறா..அதனாலதான் கேட்கறேன் அவ எப்படி உங்களுக்கு எப்பவும் சம்பாதிச்சு கொடுத்துகிட்டே இருக்க முடியும்னு?” என்று வக்கீல் அவன் வில்லங்க வேலையை ஆரம்பித்தான்.
அதைக் கேட்டு மெஹக்கின் குடும்ப நபர்கள் அவள் மீது பாய்ந்தனர்.
“மெஹக்..நீ என்னை ஏமாத்திட்ட..யாரது? எப்படி எனக்கு சொல்லாம நீ கல்யாணம் செய்துப்பே?” என்று அவள் அம்மா ஆக்ரோஷமாக கத்தினார்.
“அங்கே என்ன பேச்சு? என்கிட்ட பேசுங்க.” என்று மெஹக் பதில் சொல்லுமுன் அவள் அம்மாவை அதட்டினான் மனு. உடனே மெஹக்கின் அப்பா வேறு அணுகுமுறைக்கு மாறினார்.
“மெஹக் பேட்டா..யாரை மா கல்யாணம் செய்துக்க போற?” என்று அன்பாக விசாரித்தார்.
அவர் கேள்விக்கு,”உங்களுக்கு கல்யாணப் பத்திரிக்கைக் கிடைக்கும் போது தெரிஞ்சுடும்.” என்று வெடுக்கென்று பதில் சொன்ன மனு,”இப்ப நீங்க ஒரு முடிவுக்கு வாங்க..உங்களுக்கு நான் சொல்றதை ஒத்துக்க முடியாதுன்னா மெஹக்கோட வருங்கால கணவர்தான் அவரோட மனைவியோட சம்பாத்தியத்தை உங்களுக்குக் கப்பமாக் கொடுக்க தயாரான்னு முடிவெடுக்கணும்.” என்று வெடிகுண்டு போட்டான் வக்கீல்.
“அவனை எதுக்கு கேட்கணும்..அவனுக்கு என்ன உரிமை இருக்கு..என் பொண்ணு இவ..நான் தான் இவளை இந்த நிலைமைக்கு கொண்டு வர பாடுபட்டிருக்கேன்..நடுவுலே யாரோ வந்து எப்படி உரிமைக் கொண்டாட முடியும்?” என்று பொங்கினார் மெஹக்கின் அம்மா.
அவர் பேசிய முடித்தவுடன் சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, அத்துலை கைகாட்டி அந்த அமைதியை,”இவன் யாரு மெஹக்கோடப் பணத்தைக் கேட்க? இவனுக்கு என்ன உரிமை இருக்கு? இவன் உங்க இரண்டாவது பொண்ணோட புருஷன்..
உங்களுக்கு வெளி நாட்லே ஸெட்டிலாகற எண்ணம் வந்தபோது நீங்க உங்க மூத்த மகளோட கலந்து ஆலோசனை செய்திருக்கணும்..அவளோட ஆலோசனை வேணாம் ஆனா அவளோட பணம் மட்டும் வேணும்..
உங்களுக்கும் இவனுக்கும்தான் ஒப்பந்தம்..உங்களை வெளி நாடு அழைச்சுகிட்டு போய் உங்க ஆயுசு முடியறவரைக்கும் பார்த்துக்கற பொறுப்பு இவனோடது…அங்கையே உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அதுக்கு மெஹக் பொறுப்பாக முடியாது…அவகிட்டேயிருந்து நீங்க எதையும் எதிர்பார்க்கவும் முடியாது…
அப்பறம் இந்த அறைலே நடக்கறது இந்த அறையோட இருக்கணும் இதை வைச்சு அவளோட வருங்காலத்தை பாழாக்க நினைச்சீங்க உங்களோட நிகழ்காலம் நிழலில்லாம போயிடும்..அதுக்கு நான் பொறுப்பு.”  அழுத்தமாக உடைத்தான் மனு.
மனுவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போன மெஹக்கின் அம்மாவும், தங்கையும் மாறி மாறி அவளை சாடினர், சபித்தனர். அதைக் காது கொடுத்து கேட்க முடியாமல் சங்கடப்பட்டனர் மனுவும், கார்மேகமும்.  ஆனால் எந்தவித சங்கடமுமில்லாமல் அவர்கள் இருவரையும் சலனமில்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் மெஹக்.   அவரது மனைவி, இளைய மகள் இருவரையும் அடக்கிய மெஹக்கின் அப்பா, 
“வக்கீல் ஸாப்..தப்புதான்..அவளைக் கேட்டிருக்கணும்..ஆனா பாருங்க எனக்கு மகனில்லை..இரண்டு மகள்கள்தான்..இப்ப என் மகனோட இடத்திலேருந்து என் சின்ன மாப்பிள்ளை பேசறாரு.” என்று கொதித்துக் கொண்டிருந்த அவர் சின்ன மாப்பிள்ளையைக் குளிர்வித்தார்.  
“நானும் அதையேதான் சொன்னேன்..நீங்கதான் புரிஞ்சுக்கலே..இன்னும் கொஞ்ச நாள்லே உங்க மூத்த மாப்பிள்ளையும் வந்திடுவாரு..இரண்டு மகன்களும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.” என்று மெஹக்கின் அப்பாவிற்குப் பதிலடி கொடுத்தான் மனு.
அப்போது மெஹக்கின் அம்மா புத்திசாலியானார். நேரடியாக மனுவிடம்,”இப்ப அவளுக்கு இருபத்தி ஐந்து நடக்குது..முப்பது வயசு வரைக்கும் அவ நடிச்சா எவ்வளவு சம்பாதிப்பாளோ அதுலே ஒரு வருஷத்துக்கு இவ்வளவுன்னு ஆறு வருஷத்துக்கு எனக்கு இவ்வளவு வேணும்.” என்று அவர் எதிர்பார்பை வெளியிட்டார்.  
அந்த தொகையைக் கேட்டு அதிர்ச்சியான மனு அவன் மறுப்பைத் தெரிவிக்குமுன்,”என்கிட்ட காஷ் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும் மா..ஒரு வாரம் பொறுத்துக்கோங்க..ஏற்பாடு செய்யறேன்.” என்று மெஹக் வாக்கு கொடுத்தாள்.
“என்ன மெஹக் இப்பவே கடனோட ஆரம்பிச்சா..அஞ்சு வருஷத்திலே ஏற்பட போற ஏற்ற தாழ்வை எப்படி சமாளிப்ப?” என்று மனு கேட்க,
மனுவின் கேள்விக்கு மெஹக்கிடம் பதில்லில்லை.
அதுவரை மௌன பார்வையாளராக அமர்திருந்த கார்மேகம்,”மனு தம்பி..இவங்களோட பாங்க் டீடெயில்ஸ் வாங்கிக்கோங்க.” என்றார்.
அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட மெஹக்,”வேணாம்..அங்கிள்..நான் பார்த்துக்கறேன்..காலைலே எனக்காக நீங்க செய்த உதவியை நான் மறுக்கலே ஆனா இப்ப உங்க உதவியை நான் மறுக்கணும்..இந்த நிமிஷம் இவங்க என்னோட குடும்பம்.. நான் தான் இவங்களுக்குப் பொறுப்பு.” என்றாள்.
“முன்னாவுக்கு சமாதி கட்ட விரேந்தரே போதும்..நான் வந்தது இவங்களுக்காகதான்..ஸ்மிரிதி மா ஏற்கனவே இது எல்லாத்தையும் யோசனை செய்திட்டாங்க..நான் ஏற்பாடும் செய்திட்டேன்..இது கடனில்லை மா….நீங்க இதுவரை எப்படி பேசாம அமைதியா இருந்தீங்களோ அதே போலே இருங்க.” என்று மெஹக்கிடம் மென்மையாக கோரிக்கை வைத்தார் கார்மேகம்.
“நீங்க கேட்கறது உங்களுக்கு வந்து சேரும்..யார் அக்கௌண்டிற்கு எவ்வளவுன்னு தெளிவா வக்கீல்கிட்ட சொல்லிடுங்க.” என்று மெஹக்கின் குடும்பத்திடம் வாக்குறுதி அளித்தார் கார்மேகம்.
“நாங்க கொஞ்சம் டிஸ்கஸ் செய்யணும்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..நானே உங்களுக்கு எல்லாம் தெளிவா எழுதி கொடுக்கறேன்.” என்று சொல்லி அவன் மனைவியையும், அவள் பெற்றோர்களையும் அழைத்து கொண்டு அடுத்த அறைக்கு சென்றான் அத்துல்.
உடனே ஸ்மிரிதிக்கு ஃபோன் செய்த கார்மேகம்,”நீ சொன்னபடி முடிச்சிட்டேன் மா..மெஹக்கிட்ட பேசு.” என்று அவர் ஃபோனை மெஹக்கிடம் கொடுத்தார்.
 “ஸ்மிரிதி..தாங்கஸ்..தாங்க்ஸ்.” என்று சொல்லிக் கொண்டே இருந்த மெஹக்கை இடைமறித்து,
“தாங்க்ஸ் வேணாம்..அதுக்கு பதிலா ஒரு வேலை செய்..இந்த நிமிஷத்தோட எல்லார் உறவையும் வெட்டி விட்டிடு…இனிமே சம்பாதிக்க போகறதை யாரும் கேட்க முடியாதுன்னு தெளிவா எழுதி வாங்கு..வாய் வார்த்தையை நம்பாதே.” என்றாள் ஸ்மிரிதி.
“அம்மா கேட்டதுக்கு ஒத்துகிட்டேன் ஸ்மிரிதி..இனி பிராப்ளமிருக்காது.” என்று வெகுளியாக பேசினாள் மெஹக்
“ஆசைக்கு அளவே கிடையாது மெஹக்..நானே மனுகிட்ட சொல்றேன் அவன்கிட்ட ஃபோனைக் கொடு.”
“இதோ கொடுக்கறேன்.”
“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.. நாளைக்கு உங்கம்மாவும், அப்பாவும் அவங்களோட மாப்பிள்ளையோட பாசத்தை தாங்க முடியாம திரும்பி வந்தா இல்லை மீனலை அவ புருஷன் துரத்தி விட்டா நீ அவங்களை மறுபடியும் உன் வாழ்க்கைலே சேர்த்துக்க கூடாது..உனக்கு அந்த வைராக்கியம் இருக்கணும்..இருக்குதா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“இருக்கு ஸ்மிரிதி.” என்று திடமாகப் பதிலளித்தாள் மெஹக்.
“குட்..இப்ப ஃபோனை மனுகிட்ட கொடுத்திட்டு வசதியா ஒரு இடத்திலே உட்கார்ந்துகிட்டு வீட்லே நடக்க போறதை வேடிக்கை பாரு.” என்றாள் ஸ்மிரிதி.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மெஹக்கின் வாழ்க்கை மொத்தமாக மாறிப் போனது.  ரக்ஷிக்க வேண்டிய குடும்ப நபர்கள் கேட்ட பணத்தை நன்கொடையாக கொடுத்து, மெஹக்கின் பொறுப்பை ஏற்று, கார்மேகமே ரக்ஷிக்கும் குடையாக மாறிய அரிய காட்சிக்கு சாட்சியானான் வக்கீல் மனு வளவன். 
அன்று இரவு தில்லி திரும்பி கொண்டிருந்த அவ்விருவர் மனதிலும் அன்றைய நிகழ்ச்சிகள் வெவ்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தன.  அனாதையாக பிறந்து, வளர்ந்த கார்மேகம் அவருக்கு அமைந்திருந்த குடும்பத்தை ஆசிர்வாதமாக உணர்ந்தார்.  நம்பிக்கையை உருவாக்கும் நட்புக்களும், உறுதுணையாக உறுமாறும் உறவுகளும் வாழ்க்கையின் வரங்கள் என்று உணர்ந்தான் ஸ்மிரிதியின் மனு. 

Advertisement