Advertisement

ஸ்மிரிதியின் மனு – 41_1
அவர் சொன்னதைக் கேட்டவுடன் மெஹக்கின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
அதே நேரம் மனுவின் காரில் அவனருகில் அமந்திருந்தவர் அவரை மெஹக்கின் மனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவருடன் கைகுலுக்கிய மனு மேலே பேச விரும்பாமல் மௌனமாக, அந்தக் கார் மெஹக்கின் வீட்டின் நோக்கி பயனப்பட்டது.
என்ன பேசுவதென்று தெரியாமல் மெஹக் மௌனமாக வர,”முன்னாடி போகற கார்லே மனு தம்பி போறாரு..உன் வீட்லே எல்லாம் ரெடியா இருக்கா?” என்று விசாரித்தார்.
”நேத்து இராத்திரி நானே என்னாலே முடிஞ்ச அளவு எல்லாத்தையும் சேகரிச்சு வைச்சிருக்கேன்.. கொஞ்ச நாள் முன்னாடிதான் என் பேப்பர்ஸைப் பார்த்துக்க ஒரு லீகல் ஃபர்மை ஹயர் செய்ய சொன்னான் மனு..அவன் சொன்னபடி செய்திருக்கணும்.” என்றாள்.
“ஏன் மா செய்யலே?” என்று விசாரித்தார் கார்மேகம்.
“லாயரெல்லாம் வீண் செலவுன்னு அம்மாதான் வேணாம்னு சொன்னாங்க.” என்ற பதில் சொன்ன மெஹக்கிற்கு தற்போது அவள் அம்மாவே அவளின் பணத்தை லட்ச லட்சமாய் இமிக்ரெஷன் லாயர்களுக்கு கொட்டி கொடுப்பதை நினைத்து அழுகை வந்தது. அவள் கண்களில் சேர்ந்த கண்ணீர் துளிகளை நாசுக்காகத் துடைத்து கொண்டவளைப் பார்த்து,
“சுய பரிதாபம் ஆபத்தானது..சிந்திக்க விடாம சித்திரவதை செய்யும்..தைரியமா இருங்க.” என்று மெஹக்கிற்கு ஆறுதலாகப் பேசினார் கார்மேகம்.
அடுத்த அரைமணி நேரம் பயணம் அமைதியாக முடிந்த போது அவர்கள் மும்பையின் நெரிசலானப் பகுதியை வந்தடைந்திருந்தனர்.  அவர்கள் வண்டியை பார்க் செய்தவுடன் அவள் ஃபோனிலிருந்து அவர்கள் வந்துவிட்டதாக அறிவித்தாள் மெஹக்.  அவர்கள் இருக்கும் இடத்தை மெஹக் விளக்கியவுடன் அங்கையே காத்திருக்கும்படி அவளுக்குக் கட்டளை வந்தது. பத்து நிமிடம் கழித்து மெஹக்கின் ஃபோனில் ஒரு ஃபோட்டோ வர அதே சமயத்தில் அவர்கள் கார் கண்ணாடியைத் தட்டி ஒலி எழுப்பி கொண்டிருந்தான் அந்த ஃபோட்டோவில் இருந்தவன்.
“இவன் தான் அங்கிள்..ஃபோட்டோ அனுப்பியிருக்காங்க.” என்று அவள் ஃபோனைக் கார்மேகத்திடம் கொடுத்தாள் மெஹக்.  அதை வாங்கி உடனே முன் ஸீட்டில் அமர்ந்திருந்த விரேந்தரிடம் கொடுத்தார் கார்மேகம்.  அவன் நிதானமாக அந்த ஃபோட்டோவையும், வெளியே நின்று கொண்டிருந்தவனையும் பார்த்த பின் ஃபோனை மெஹக்கிடம் திருப்பி கொடுத்துவிட்டு கார் கதவைத் திறந்து வெளியே சென்றான்.  அதன்பின் விரேந்தர் அந்த ஆளுடன் பேச, விரேந்தரின் பேச்சு பிடிக்காமல் அந்த ஆள் தலையாட்டி மறுக்க, உடனே காரினுள் வந்து அமர்ந்து கொண்டான் விரேந்தர்.  அப்போது வெளியே நின்று கொண்டிருந்தவன் அவன் ஃபோனிலிருந்து யாரையோ அழைத்து பேச அதே நேரத்தில் மெஹக்கின் ஃபோன் சத்தம் செய்தது. அவள் அந்த அழைப்பை ஏற்கும் முன்,
“மெஹக்..மூணு பேர் வருவோம்னு சொல்லு..விரேந்தரும் நம்மகூட வருவான்.” என்றார் கார்மேகம்.
ஃபோன் அழைப்பை ஏற்ற மெஹக்,”மூன்று பேர்” என்று சொன்னவுடன் சிறிது நேரம் மௌனத்திற்குப் பிறகு,”சரி” என்று ஒப்புதல் கிடைத்தது.
அதன்பின் அவர்கள் மூவரும் காரிலிருந்து வெளியே வந்தவுடன் அருகிலிருந்து தெருவிற்குள் அழைத்து செல்லபட்டனர்.  ஜன சந்தடி அதிகமாகயிருக்கும் மும்பை நகரத்தில் ஆள் நடமாட்டமேயில்லாத அந்த குறுகிய தெரு மெஹக்கிற்கு அச்சத்தைக் கொடுத்தது. தெரு முழுவதும் சிசி டிவி கமெராக்கள் இருந்ததை கவனித்த கார்மேகம் அதைப் பற்றி கவலைப் படாமல் அந்த தெருவை நோட்டம் விட்டபடி மெஹக்கின் அருகே நடந்து வந்தார்.  அவர்களை ஓட்டி சிறிது இடைவெளி விட்டு அவர்ளுடனே நடந்து வந்தான் விரேந்தர்.  அந்த தெருவின் இருபுறமும் இருந்த நெருக்கமான கட்டிங்களைக் கடந்து தெருவின் முடிவில் இருந்த இரண்டு மாடி கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.  
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்தவுடன், மாடிப்படியில் யாரோ தட தடவென்று இறங்கி வரும் சத்தம் கேட்க அந்த ஆள் அவர்களை அணுகுமுன் அவன் குரல் அவர்களை அணுகியது.
“அண்ணா..நமஸ்கார்.” என்று சந்தோஷமாக கத்திக் கொண்டே  வந்தான் ஒரு நடுத்தர வயது ஆசாமி.
கார்மேகம் அருகே வந்தவுடன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கியவனைப் பார்த்து அவன் பின்னால் வந்த அனைவரும் அதிர்ச்சியாயினர்.
“அண்ணா..இங்கே எப்படி நா..நீங்களா நா?..நீங்கதானன்னு நம்ப முடியலே..நம்பவே முடியலே” என்று  ஆச்சிர்யத்தை அடக்கமுடியாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார் கார்மேகம்.  அவன் ஒருவன் தான் பேசிக் கொண்டிருக்கான் என்று தாமதமாக உணர்ந்து கொண்டவன் உடனே அருகிலிருந்த கதவைத் திறந்து,
“உள்ளே உட்கார்ந்து பேசலாம்.” என்று சொல்லி கார்மேகத்தை அறையினுள் அழைத்தான்.  கார்மேகமும், மெஹக்கும் உள்ளே சென்றவுடன் அறையின் வாசலில் அரணாக நின்று கொண்டான் விரேந்தர்.
அறையினுள் நுழைந்த கார்மேகமும், மெஹக்கும் ஒரு சோபாவில் அமர்ந்து கொள்ள, அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டவனைப் பார்த்து,
“சொல்லு முன்னா..எப்படி இருக்க?” என்று முதல்முறையாக அவன் பெயரைச் சொன்னார் கார்மேகம்.
“நல்லா இருக்கேன்.” என்றவன் மறந்தும் கூட மெஹக்கின் புறம் அவன் பார்வையைத் திருப்பவில்லை.
“எத்தனை நிமிஷத்துக்குன்னு நினைக்கற?” என்று கேட்டார் கார்மேகம்.
அதுவரை முன்னா முகத்திலிருந்த ஆனந்தம் நொடி பொழுதில் அதிர்ச்சியாக மாறி,”அண்ணா” என்று பயத்துடன் அவன விளிக்க,
“இவங்க யாரு முன்னா?” என்று கார்மேகம் கேட்க, மெஹக்கிற்கு அவர் கொடுத்த மரியாதையில் மருண்டு போன முன்னா,
”தெரியலே நா.” என்று எச்சில் முழுங்கியபடி முனங்கினான்.
“உனக்கு தெரியலே ஆனா வேறொருத்தருக்கு தெரிஞ்சிருக்கு..நான் இப்ப இங்கே வந்ததுலே எல்லாருக்குமே தெரிஞ்சிடுச்சு.”
“அண்ணா..அண்ணா..நிஜமா தெரியாதுண்ணா..சத்தியமா தெரியாதுண்ணா.” என்று அவன் வாய்ப்பாடு வாசிக்க
“சத்தியம்..நிஜம்..உனக்கு ரொம்ப வருஷமா ஒரே இடத்திலே ஒரே வேலைலே இருந்ததாலே உன் மூளைக்கு வேலை இல்லாம போயிடுச்சு.. அதான் வேலையேயில்லாத இடத்துக்கு உன்னை வழியனுப்பி வைக்க நானே வரவேண்டியதாயிடுச்சு.” என்றார் கார்மேகம்.
வேலையில்லாத இடத்திற்கு வழியனுப்பு விழா என்று கார்மேகம் சொன்னவுடன் அதில் அரண்டு போன முன்னாவிற்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது.  சில்லறை விஷயம் என்று நினைத்தது பூதாகாரமாக உருவெடுத்து அவனையே  விழுங்கப் போகிறது என்றவுடன் அதிலிருந்து மீள ஒரே வழி மன்னிப்புதான் என்று உணர்ந்தவன்,
“அண்ணா..அண்ணா..மன்னிச்சிடுங்க நா..நீங்கன்னு தெரியாம தப்பு செய்திட்டேன்..மன்னிச்சிடுங்க நா.” என்று அண்ணனிடம்  அவனை முழுமையாக அர்ப்பணித்தான் முன்னா.
அவன் மன்னிப்பைக் காதில் வாங்காமல்,“உன் இடத்துக்கு வர மாட்டேன்னு சொன்னவங்களை வலுக்கட்டாயமா வரவழைச்சிட்ட….உன் பங்கைக் கொடுக்கலேன்னா முடிச்சிடுவேன்னு வேற சொல்லியிருக்க..” என்று முன்னாவிடம் பேசி கொண்டிருந்தவர் சட்டென்று மெஹக்கின் புறம் திரும்பி,”இவன்கிட்ட சொல்லு மா..இவனுக்குப் பங்கு எதுவும் கொடுக்க மாட்ட..இனி கொடுக்கவும் போகறதில்லைன்னு.” என்று கட்டளையிட்டார்.
கார்மேகத்தின் பேச்சில் மெஹக், முன்னா இருவரின் முகமும் இருண்டு போனது.  ஆனால் கடுகளவுக்கூட கலையிழக்காமல் சாந்தமான முகத்துடன் அமர்ந்திருந்தார் கார்மேகம்.
“அங்கிள்.” என்று தயங்கிய மெஹக்கைப் பார்த்து,”அதுகூட வேற ஏதாவது சேர்த்து சொல்லணும்னாலும் சொல்லு மா.” என்று ஊக்குவித்தார்.
மெஹக் வாயைத் திறக்குமுன்,”அண்ணா..இவங்க ரொம்ப நாளா கொடுத்துகிட்டு இருந்தாங்க நா..அதான் இந்த முறை என்ன பிரச்சனைன்னு கேட்கதான் கூப்பிட்டேன்…தப்புதான் நா.” என்றான் முன்னா.
“ரொம்ப நாளா கொடுத்துகிட்டிருந்தாங்க..அது அண்ணனுக்குத் தெரியாம இருந்திருக்கும்ணு நினைக்கறேயா?”
“இல்லை நா..உங்களுக்குத் தெரியாம ஏதாவது நடக்குமா?” 
“நீ செய்யற வேலைக்கு அவங்க கொடுக்கறதை வாங்கிகிட்டு இருந்தே..உன் பொழைப்பைக் கெடுக்க நான் விரும்பலே.. ஆனா இப்ப நீ முடிச்சிடுவேன்னு சொல்லியிருக்க அதான் உனக்கும் சேர்த்து எல்லாத்தையும் சுமுகமா முடிச்சு கொடுக்க நான் வந்தேன்..இப்ப எதுவும் சுமுகமா முடியாது போலே.” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக பேசினார்.
“அண்ணா..அண்ணா..அப்படி யோசிக்காதீங்க நா..நானே எல்லாத்தையும் நேர்லே பார்க்க முடியறதில்லே..பெரிசா..” என்று முன்னா தொடருமுன்,
“வளர்ந்திட்ட..அதான் “முன்னா” எவ்வளவு பெரிசா வளர்ந்திட்டான்னு பார்க்க நேர்லே வந்தேன்.” என்று “முன்னா” என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்து அவனை ஆழமாகப் பார்த்தபடி அமைதியாக பேசினார் கார்மேகம்.
“அண்ணா..அண்ணா..நான் முன்னாதான் நா….உங்க முன்னாதான் நா..அதே முன்னாதான் நா…உங்க முன்னாடி நான் எப்பவும் முன்னாதான் நா…மன்னிச்சிடுங்க நா..தப்புதான் நா..”” என்று “நா”மாவளி வாசித்தான் முன்னா.
சில நிமிட மௌனத்திற்குப் பின்,” தேவையில்லாத இடைஞ்சல் கொடுத்தவனுக்கு, தெரியாம செய்திட்டேன்னு சொல்ற உனக்கு நான் மன்னிப்பு கொடுத்தா..என் தேவையைத் தெரிஞ்சு எனக்கு உதவி செய்தவனுக்கு நான் என்ன கொடுக்கறது?” என்று கார்மேகம் முன்னாவிடமே கேட்க, அதற்கு அவன் பதில் சொன்னாலும், சொல்லாமல் போனாலும் அவனின் தலையெழுத்து மாற்றி அமைக்கப்பட்டு விட்டது என்று உணர்ந்து மௌனமாக இருந்தான் முன்னா.
“உன்னையே கொடுத்திடறேன் அவன்கிட்ட.” என்று முன்னாவின் முடிவை சாதாரணமாக அறிவித்தார் கார்மேகம். 
“அண்ணா..அண்ணா..நீங்க இப்ப எல்லாத்திலேர்ந்தும் ஒதுங்கிட்டீங்கன்னு நினைச்சேன் நா..மன்னிச்சிடுங்க நா.” என்று கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டு உண்மையாகவே மன்னிப்பு கேட்டான் முன்னா.
இந்த முறை அவன் மன்னிப்பை காதில் வாங்கியவர்,”அதே முட்டாள் முன்னாதான்.” என்று விமர்சித்து,”எத்தனை பேர்..எவ்வளவு..எப்படின்னு..எல்லா விவரமும் எனக்கு வந்திடணும்.” என்றபடி எழுந்து கொண்டார்.
“அனுப்பறேன்னா..உடனே அனுப்பறேன்னா..உடகாருங்கன்னா..ஏதாவது குடிச்சிட்டு போகலாம்.” என்று கார்மேகம் அவன்  மன்னிப்பை ஏற்று கொண்டதில் ஆசுவாசமடைந்த முன்னா அவன் சாய் பானி உபசரணையை ஆரம்பித்தான்.
“நான் கிளம்பறேன்..மெஹக் வா மா.” என்று அலட்சியமாக கதவை திறக்க, மெஹக் முன்னால் செல்ல அவளைப் பின் தொடர்ந்தார் கார்மேகம்.  கதவிற்கு வெளியே இருந்த விரேந்தரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.  அவன் உபசரணையை ஏற்று கொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறிய கார்மேகத்தின் பின்னால் முன்னா வர அவன் பின்னால் அவன் படையே வந்தது.  
அதே குறுகிய தெரு இப்போது சின்ன ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்தது. அவர்கள் உள்ளே நுழைந்த போது ஆளாரவாரமில்லாமல் இருந்த அதே தெருவில் இப்போது பத்தடிக்கு ஒருவரென்று தெருவின் இருபுறத்திலும் ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களை நோக்கி முன்னா செலுத்திய பீதி பார்வையில் அவர்கள் அவனுடைய ஆட்கள் இல்லை என்று அவனே அறிவித்தான். 
கார்மேகம்  காரருகே வந்தவுடன் எங்கேயிருந்தோ ஒருவன் வந்து விரேந்தரின் கையில் ஒரு ஃபோனைக் கொடுக்க அதை வாங்கிய விரேந்தர் நேரே முன்னாவிடம் அந்த ஃபோனை ஒப்படைத்து,”இதை வைச்சுக்க..உனக்கு கால் வரும்..அவங்க சொல்றதுக்கு சரின்னு சொல்லிடு.” என்றான்.
“தாங்க்ஸ் நா..இது போதும் நா.” என்றான் கால் மணி நேரத்தில் கார்மேகத்தின் முன்னால் நிஜமாகவே அரைக் கால் சட்டை பையனாகி போன முன்னா. அவன் சொன்னதை சட்டை செய்யாமல்,
“நீ ஏறிக்கோ மா.” என்று கார் கதவைத் திறந்து மெஹக்கிடம் சொன்ன கார்மேகம் அவளுக்கு அடுத்து அவரும் ஏறி  உள்ளே அமர்ந்து கொண்டார்.
 விரேந்தர் மட்டும் முன்னாவிடம் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு காரில் ஏறி கொண்டான்.  அவர்கள் அங்கேயிருந்து புறப்பட்டு மெஹக்கின் வீடு நோக்கி பயணம் செய்தனர்.  
அவள் கரியரை முடித்துவிடுவேன் என்று மிரட்டியவனே மிரண்டு போய் கார்மேகத்தின் காலடியில் விழுந்து, கார்வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்த நிகழ்வு கனவா, நிஜமா என்ற குழப்பத்திலிருந்தாள் அந்தக் கனவு கன்னி.  அவளின் குழப்பத்தைக் கண்டு கொண்ட கார்மேகம்,”இனி உன் வீடுதான்..தைரியமா இருக்கணும்.” என்று மறுபடியும் வலியுறுத்தினார்.
மும்பையின் வர்ஸோவா கடற்கரையை ஓட்டி இருந்தது மெஹக்கின் வீடு.  மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் கீழ் தளத்தில் கார்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. விரேந்தர் கீழ் தளத்திலேயே இருந்துவிட, கார்மேகமும், மெஹக்கும் முதல் தளத்திற்கு சென்றனர்.  
லிஃப்டின் கதவு திறந்தவுடன் பெரிய வரவேற்பறையும் அதன் மறுகோடியில் கடலைப் பார்த்தபடி அறையின் அகலத்திற்குப் பெரிய பால்கனி இருந்தது.  வரவேற்பறையில் மெஹக்கின் மொத்த குடும்பம் அமர்ந்திருக்க அவர்களுடன் மெஹக்கின் மனேஜரும் இருந்தார்.  வீட்டினுள் நுழைந்த மெஹக் அவள் அப்பாவிடம்,
“பாப்பா, அங்கிள் வந்திருக்காங்க.” என்று கார்மேகத்தின் வரவைத் தெரியப்படுத்தினாள்.  மெஹக்கின் அப்பா எழுந்து வந்து கார்மேகத்தின் கையைக் குலுக்கி அவரை சோபாவில் அமரும்படி உபசரித்தார்.  மெஹக்கின் மற்ற குடும்ப நபர்கள் கார்மேகத்தைக் கண்டு கொள்ளவில்லை அவரும் அவர்களைப் புறக்கணித்தார். அப்போது மெஹக்கின் மனேஜரிடம்,
“நீங்க ஆபீஸ் போயிடுங்க..வக்கீலை இங்கே அனுப்புங்க.” என்றார் கார்மேகம். 
மனேஜர் விடைபெற்று கொண்டு சென்ற சிறிது நேரத்தில் லிஃப்ட் கதவு திறக்க அதிலிருந்து வெளியே வந்தான் மனு.
மெஹக்கைப் பார்த்து “ஹாய்” என்று சொன்னவன் வேறு யாரிடமும் பேசாமல் அவன் மாமனார் அருகே சோபாவில் அமர்ந்து கொண்டான்.  முதலில் பேச்சை ஆரம்பித்தது மீனலின் கணவன் அத்துல்.
“எதுக்கு இந்த லாயர் என்னோட டீடெயில்ஸ் கேட்கறாரு?” என்று மெஹக்கைப் பார்த்து கேட்டான். அதற்கு மெஹக் பதில் சொல்லுமுன்,
“மெஹக்கிட்ட பேச்சு வேணாம்..என்கிட்டதான் பேசணும்..அவ என்னோட கிளையண்ட்..நீங்க அவளோட அம்மா, அப்பாவை உங்ககூட அழைச்சுகிட்டு போக முடிவு எடுத்து இங்கே எல்லாத்தையும் வைண்ட் அப் செய்ய சொல்றீங்க..இது நிரந்தர முடிவா இல்லை தற்காலிகமானாதான்னு தெரிஞ்சாதான் எல்லாத்தையும் லீகலா செய்ய முடியும்….
ஏற்கனவே மெஹக்கிட்டேயிருந்து நீங்க பணம் வாங்கியிருக்கீங்க..அது எல்லாத்தையும் கணக்குலே கொண்டு வர்றணும்..அதான் உங்களைப் பற்றி தெரிஞ்சுக்க கேள்வி கேட்டேன்..நீங்க சொல்ல விருப்பப்படலே..இனி உங்களோட பேச எனக்கும் விருப்பமில்லே..உங்க கணக்குக்கு அனுப்பின எல்லா பணத்துக்கும் உங்ககிட்ட விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரும்.” என்றான் மனு.
அவனின் விளக்கதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அத்துல்,”நான் அவ குடும்பத்தை சேர்ந்தவன்..எனக்குக் கொடுத்த பணத்துக்கு நான் எதுக்கு விளக்கம் கொடுக்கணும்?” என்று கேட்டான்.
“அவ குடும்பம்..அவளோட அப்பா, அம்மா மட்டும்தான்.. அவங்களும் உங்களோட இருக்க முடிவு செய்திட்டதுனாலே இப்ப அவ குடும்பம்னா அவ மட்டும்தான்..உங்க மனைவி அவங்க பெயர்லே இருக்கறதுக்கு மட்டும்தான் உரிமை கொண்டாட முடியும்.. அதே போல உங்க மாமனார், மாமியார் அவங்க பெயர்லே இருக்கறதை அவங்க விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்யலாம்..அது அவங்க சுய சம்பாத்தியம்…மெஹக் பெயர்லே இருக்கறதை யாரும் உரிமை கொண்டாட முடியாது..ஏன்னா அது அவளோட சுய சம்பாத்தியம்..அதுலே யாருக்கும் பங்கும் கிடையாது.” என்றான்.
உடனே மெஹக்கின் அம்மா,”நான் தானே உன்னை அறிமுகப்படுத்தினேன்..உன்னோட முதல் இரண்டு படத்திலே நானும் பணம் போட்டேன்..அந்த நன்றி இல்லையா உனக்கு..இப்படி லாயரை நடுவுலே வைச்சு நம்ம குடும்ப விஷயத்தைப் பேசற?” என்று ஆத்திரமடைந்தார்.
அதைக் கேட்டு கொண்டு மெஹக் மௌனமாக இருந்தாள்.

Advertisement