Advertisement

ஸ்மிரிதியின் மனு – 40
அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை.  அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார்.  திடீரென்று அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த அமைதியை மௌனயுத்தம் என்று நாதன் உணரவில்லை. அந்த யுதத்திற்கானக் காரணத்தை அறிந்த இருவரும் அதில் தலையிட விருப்பமில்லாமல் அவர்களும் அமைதியைக் கடைபிடித்து மௌன யுத்தத்திற்கு  ஆதரவு அளித்தனர். ஆனால் மனிஷின் விஜயத்தின் போது யுத்ததைக் கைவிட்டு அமைதிக் கொடியை ஏற்றி எப்போதும் போல் அவனுடன் சேர்ந்து கொண்டனர் சிவகாமி, மனு, மாறன் மூவரும்.  அந்த முயற்சிக்கு விதிவிலக்காக விளங்கினாள் ஸ்மிரிதி.
மனிஷின் வருகையின் போதுகூட ஸ்மிரிதியினால் மாறனுடன் சகஜமாக இருக்க முடியவில்லை.  அந்த மாலை நேரத்தில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றவன் இரவு எப்போது வீடு திரும்பினானென்று அவளுக்குத் தெரியவில்லை.  ஆனால் மறு நாளிலிருந்து அவனின் அடாவடியான நடவடிக்கைகளைப் பார்த்து அவன் மீது பொங்கிய கோபத்தைக் கட்டுப்படுத்த அரும்பாடு பட வேண்டியிருந்தது. 
அவனைச் சுற்றி அவனுக்காக அந்த வீடு இயங்க வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான் மாறன்.  காலையில் தாமதமாக எழுவது, எத்தனை முறை சாப்பிட அழைத்தாலும் வராமல் அவன் விருப்பத்திற்கு வருவது அதனால் சிவகாமிக்கு ஏற்படும் சங்கடங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவரது கடமை அது என்று மறைமுகமாக அறிவுறுத்துவது என்று அவன் செயல்கள் அத்துமீறி கொண்டிருந்ததைப் பார்த்து ஒரு சமயம் அவனை வன்முறையாக கையாளத் தோன்றியது ஸ்மிரிதிக்கு. சில சமயம் மாறன் ஏன் இப்படி மாறி போனான் என்ற கேள்வியும் அவளைக் குடைந்து கொண்டிருந்தது. அவளின் ஃபாக்ட் ரி ஆரம்பிக்கும் வேலைகள் ஒரு நிலைக்கு வந்தபின், மாறன், சிவகாமி இருவருக்கும் நடுவில் ஏற்பட்டிருக்கும் பிளவையும், மாறனின் பிரச்சனையையும் சரி செய்வதற்காக சில தினங்கள் வீட்டிலேயே இருக்க முடிவு செய்தாள் ஸ்மிரிதி.  
ஒரு மாலைப் பொழுதில், உதய்ப்பூரில், ஃபாக்ட்ரிக்காக ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கி சோர்ந்து போயிருந்த ஸ்மிரிதியைத் தொடர்ச்சியாக அவள் அலைபேசி தொந்திரவு செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் அதை புறக்கணிக்க முடியாமல் அத்துடன் அன்றைய வேலையை முடித்து கொண்டு அந்த அழைப்பை ஏற்றாள். அந்தப் புறம் பேசியதை அமைதியாக கேட்டு கொண்டவள் கடைசியாக அடுத்த நாள் மதியம் போல் மும்பையில் முடிவு செய்யப்படும் என்று பதில் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். 
அதற்குபின் முன்னிரவு வரை அவளும், அவள் ஃபோனும் பசைப் போல் ஒட்டிக் கொண்டனர். அவள் இருப்பிடம் வந்து சேர்ந்த பின் முதலில் அவள் அழைத்தது மெஹக்கை. அவளின் அழைப்பை ஏற்காமல் புறகணித்ததைப் பற்றி கவலைப்படாமல் இடைவெளி கொடுக்காமல் அழைத்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  ஒரு கட்டத்திற்கு மேல் அவள் அழைப்பை ஏற்ற மெஹக்கிடம் ஒரே வரியில் அவளுக்கு விஷயத்தை புரிய வைத்து அழைப்பைத் துண்டித்தாள் ஸ்மிரிதி.
“நாளைக்குப் பத்து மணிக்கு நீ யாரையும் பார்க்க போக வேணாம்.” என்று ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மெஹக் பேயறைந்தது போலானாள்.  அவளறையின் பால்கனியில் அமர்ந்து  அரபிக் கடலில், ஆரன் ஜ் வண்ணத்தில் அஸ்தமித்து கொண்டிருந்த கதிரவனை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.  அப்போது அவளறைக் கதவை திறந்து கொண்டு வந்த அவள் அம்மா,
“நாளைக்கு காலைலே பத்து மணி போலே நீ அங்கே இருக்கணும்..இப்ப நாங்க எல்லாரும் வெளியே போறோம்.” என்று தகவல் சொல்லிவிட்டு வெளியேறினார்.  அதுவரை சிலை போல் அமர்ந்திருந்த மெஹக் ஒரு முடிவுக்கு வந்து ஸ்மிரிதிக்கு ஃபோன் செய்தாள்.
ஸ்மிரிதி அவள் அழைப்பை ஏற்றவுடன் மெஹக்கிற்கு வார்த்தையே வரவில்லை, அழுகைதான் வந்தது.  அவள் அழுது ஓய்ந்தபின்,”சொல்லு” என்றாள் ஸ்மிரிதி.
ஒரளவு அவள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்த மெஹக்,”எல்லாம் நாசமாயிடுச்சு.” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
கடந்த இரண்டு மாதங்களாக எல்லா பத்திரிக்கைகளிலும் அவளையும், அவளின் புது படங்களைப் பற்றியும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவளுடைய கனவு நனவாக போகும் இந்த தருணத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்ன மெஹக்கை மேலும் விசாரிக்காமல் மௌனமாக இருந்தாள் ஸ்மிரிதி.  சில நிமிடங்களுக்குப் பிறகு சிறு கேவலுடன்,
“மீனலுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.” என்றாள்.  அத்தகைய அதிர்ச்சியான செய்தியை எதிபார்த்திராத ஸ்மிரிதி,
“நிஜமாவா? எப்ப?” என்று கேட்க,
“எனக்குத் சரியாத் தெரியலே..கொஞ்ச நாளாயிடுச்சுன்னு நினைக்கறேன்..அம்மாக்கும், அப்பாக்கும் அந்த விஷயம் அதிர்ச்சியா இல்லை..சாதாரணமா இருக்காங்க..இப்ப அவங்க எல்லாரும் வெளியே போயிருக்காங்க.”
“அவ இங்க வந்திருக்காளா? நீ இப்ப வீட்லேதான் இருக்கியா?”
“ஆமாம்.. நேத்துலேர்ந்து நான் வீட்லேதான் இருக்கேன்..நாளைக்கும் வீட்லேதான்…அந்த முக்கியமான..”என்று மெஹக் பேசி முடிக்குமுன்,
“முக்கியமான வேலைன்னு நீயே முடிவு செய்திட்ட போலே.” என்று ஆத்திரமாக இடைமறித்தாள் ஸ்மிரிதி.
அதைக் கேட்டவுடன் “இல்லை ஸ்மிரிதி..நாளைக்கு நான் போகாட்டா எல்லாம் முடிஞ்சிடும்..” என்று அழுகையினுடே விளக்கினாள் மெஹக்.
அவள் அழுகையை கேட்க சகிக்காமல்,”மெஹக்..நிறுத்து.” என்று கத்தினாள் ஸ்மிரிதி.
அடுத்து வந்த நிமிடங்களில் அவளை நிதானப்படுத்தி கொண்ட மெஹக்கிடம்,
“மீனல் ஹஸ்பண்ட் யாரு? தெரிஞ்சவனா?” என்று திடீரென்று  ஸ்மிரிதி பேச்சை மாற்ற,
“நான் இப்பதான் அவனை முதல் தடவை சந்திக்கறேன்..அவ படிக்க போன இடத்திலே அவனோட குடும்பம் இந்தியன் ரெஸ்டாரண்ட் நடத்தறாங்க..இவன் அங்கேயே பிறந்து, வளர்ந்தவன்.”
“நீ போகலேயா அவங்களோட?” என்று ஸ்மிரிதி கேட்க,
“என்னை கூப்பிடலே..எனக்கு விருப்பமுமில்லே…மீனல், அத்துல் இரண்டு பேரும் பேசறதெல்லாம் பிடிக்கலே.”
“என்ன பேசறாங்க?”
“அவ பெயர்லே இருக்கற சொத்தைப் பிரிச்சு கொடுக்க சொல்றா மீனல்..அம்மா, அப்பா பெயர்லே இருக்கற எல்லாத்தையும் வித்து பணமா கேட்கறான் அத்துல்.” என்றாள் மெஹக்.
“மீனலோட சொத்தா..பைத்தியமா அவ..நீ சம்பாத்திச்சு எல்லாருக்கும் சோறு போட்டுகிட்டு இருக்க..இதுலே சொத்து எங்கேயிருந்து வருது?”
“அம்மா சம்பாதிச்ச போது எங்க இரண்டு பேர் பெயர்லேயும் சொத்து வாங்கினாங்க..அதைதான் இப்ப கேட்கறா.”
“அது மேலே இருந்த கடனை அடைச்சியே அப்ப பங்கு கொடுத்தாளா? முதல்லே அதை ஸெட்டில் பண்ண சொல்லு.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..அவ ஹஸ்பண்ட் கண்டபடி பேசறான்..எல்லாத்தையும் பிரிச்சு கொடுத்தாதான் இங்கேயிருந்து கிளம்புவானாம்..அவன் சொல்றபடி நான் கேட்கலேன்னா பிரஸ்ஸுக்கு போயிடுவேன்னு மிரட்டறான்..அப்பா, அம்மா இரண்டு பேரும் வாயேத் திறக்க மாட்டேங்கறாங்க.” என்றாள் கண்ணீருடன் மெஹக்.
“அவங்க ஏன் வாயைத் திறக்கலே..உன் ஆதரவுலேதானே இருக்காங்க..மறந்து போயிடுச்சா?”
“இனி இருக்க போகறதில்லை..அம்மாவும், அப்பாவும் மீனலோட போக முடிவு செய்திட்டாங்க.” என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள் மெஹக்.
“எப்படி? அங்களோட அங்கையே இருக்க முடியுமா?”
“காசு கொடுத்து அவங்களுக்குக் ஸிட்டிஸன்ஷிப் வாங்க போறான் அத்துல்..அவங்க பெயர்லே அங்க சொத்து வாங்கி கொடுத்தாதான் அவங்களுக்கு நிரந்தர குடியுரிமைக் கிடைக்கும்..அம்மா, அப்பா பெயர்லே இருக்கறது எல்லாத்தையும் வித்து பணமா கொடுத்தாக்கூட பத்தாது..அம்மாவோட பேச்சைக் கேட்ட முடியாம என்கிட்ட இருந்த காஷெல்லாம் ஏற்கனவே அத்துலுக்கு கொடுத்திட்டேன்..என்கிட்ட இப்ப ஒண்ணுமேயில்லை ஸ்மிரிதி..நாளைக்கு என்ன செய்ய போறேன்னு தெரியலே.” என்றாள் பல புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பிரபல நடிகை.
“அட்வான்ஸ் வாங்கியிருப்பியே அதெல்லாம் என்ன செய்த?”
“செலவாயிடுச்சு..ஏதாவது செலவு இழுத்து விடறான் அத்துல்..அம்மாவும், அப்பாவும் அவன் சொல்றததைதான் கேட்கறாங்க..நான் ஏதாவது கேள்வி கேட்டா எனக்கு மீனல் மேலே பொறாமைன்னு சொல்றாங்க.” என்று சொன்ன போது மெஹக்கின் குரலில் தழுதழுத்தது.
“லிஸன் மெஹக்..நாளைக்கு நீ எங்கேயும் போக வேணாம்.” என்றாள் மறுபடியும் ஸ்மிரிதி.
“ஊருக்கேத் தெரியும் நான் இப்ப எத்தனை படத்திலே புக் ஆகியிருக்கேன்னு..அவனோட பங்கை இப்போதைக்கு கொடுக்க முடியாதுண்ணு அவனுக்குத் தெரியப்படுத்தணும்னு அம்மா சொல்றாங்க.” என்றாள் மெஹக்.
“எத்தனை நாளா நடக்குது இது?”
“முதலேர்ந்து..எல்லாருமே யாருக்காவது பங்கு கொடுத்து பாதுகாப்பு தேடிக்கறாங்க..அப்பா, அம்மாவும் இவனுக்கு கொடுத்துகிட்டு வந்திருக்காங்க.”
“நாளைக்கு அவனைப் பார்க்க வர முடியாதுன்னு நீ மெஸெஜ் அனுப்பு.. நான் மற்றதைப் பார்த்துக்கறேன்.” என்றாள் திடமாக ஸ்மிரிதி.
“பயமாயிருக்கு ஸ்மிரிதி.”
“சொல்றதைச் செய்.” என்று சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டித்தாள்.  அத்துடன் மெஹக்கின் பிரச்சனைக்கு ஒரு முடிவெடுத்தாகி விட்டது என்று ஸ்மிரிதி எண்ணியிருக்க, அடுத்த பதினைந்தாவது நிமிடம் மெஹக்கிடமிருந்து அழைப்பு வந்தது.  
ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்த மெஹக்கின் வாயிலிருந்து “ஸ்மிரிதி..ஸ்மிரிதி..” என்ற ஒரு வார்த்தைக்கு மேல் அவளால் பேசவே முடியவில்லை. அவள் பயத்தில் அரற்றுகிறாளென்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி மெஹக்கின் அழைப்பை துண்டித்து அவளை வீடியோவில் அழைத்தாள்.  
“இப்ப சொல்லு.” என்று சொன்ன ஸ்மிரிதியின் முகத்தைப் பார்த்து சிறிது தைரியம் வந்த மெஹக்,”நீ சொன்னபடி மெஸெஜ் அனுப்பினேன்..அவன் என்கிட்ட பேசாம அம்மாக்கு ஃபோன் செய்து அவங்க வெளி நாடு போக முடியாதுன்னு மிரட்டியிருக்கான்..அப்பறம்..அப்பறம்..” என்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்த மெஹக்கை,
“சொல்லு..என்ன சொன்னான்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லு” என்று ஊக்குவித்தாள் ஸ்மிரிதி.
“நாளைக்கு காலைலே நான் வரலேன்னா என் கரியரை முடிச்சிடுவான்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கான்.”
“அவன்தான் சொன்னானா இல்லை உன் அம்மா சொல்றாங்களா?”
“அம்மா இல்லை ஸ்மிரிதி..அவந்தான்..எல்லாரும் சேர்ந்து நாளைக்கு என்னை அங்கே போக வைச்சிடுவாங்க..நான் போய்தான் ஆகணும்.”
“சரி..ஒரு வேலை செய்..நாளைக்குப் பத்து மணிக்கு முடியாது..பன்னிரெண்டு மணிக்கு வருவேன்னு மெஸெஜ் போடு..அதுக்கு அவன் உனக்கு பதில் போடலேன்னா நீ நாளைக்குப் போகவே வேணாம்..நான் பார்த்துக்கறேன்.” என்று மறுபடியும் மெஹக்கிற்கு உறுதி அளித்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..அவன் ஒத்துக்க மாட்டான்.”
“அவன் முட்டாள்ன்னு நிரூபிச்சிட்டான் மெஹக் அதனாலே கண்டிப்பா ஒத்துப்பான்.”
ஸ்மிரிதியின் கணிப்பைப் பொய்யாக்காமல் மறு நாள் பன்னிரெண்டு மணிக்கு மெஹக்கின் சந்திப்பு உறுதியானது.
இரண்டாம் முறை மெஹக்கிடம் பேசி முடித்தவுடன் அந்த இரவு வேளையில் இரண்டு பேருடன் ஃபோனில் பேசினாள் ஸ்மிரிதி.  அதில் முதல் நபர் அவள் சொன்ன அனைத்திற்கும் சரி சொன்னதோடு நிற்காமல் ஒருபடி மேலே போய் “இனி என் பொறுப்புதான்…நாளைக்கே எல்லாத்தையும் முடிச்சிடுறேன்.” என்று வாக்குறுதி அளித்தார்.  
ஸ்மிரிதி பேசிய இரண்டாவது ஆளிற்கு அவளுடைய பேச்சில் ஆர்வமிருக்கவில்லை.  முதலில் சிடுசிடுத்தவன் அவளின் விளக்கத்திற்குப் பின் மறு நாள் மும்பை செல்ல ஒப்புக் கொண்டான்.  அதற்குமுன் மெஹக்கின் சமீபத்திய ஒப்பந்தகள் அனைத்தும் அடுத்த அரைமணி நேரத்தில் அவனுக்கு அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டான்.
வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த மெஹக்கை அழைத்து அவள் சம்மந்தப்பட்ட அனைத்தையும் மெயில் செய்ய கட்டளையிட்டு நிம்மதியாகத் தூங்கி போனாள் ஸ்மிரிதி.
பின்னிரவு வரை மெஹக்குடன் ஃபோனில் பேசி அவனுக்குத் தேவையானத் தகவல்களையும் அவளின் குடும்பக் கதையையும் கேட்டு கொண்டான் மனு.
அடுத்த நாள் காலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினுள் நுழைந்த மனு முதலில் தேடியது காஃபி கடையைதான்.  அப்போது,
“நமஸ்தே லாயர் ஸாப்.” என்ற குரலில் திரும்பி பார்க்க, அவனருகில் விரேந்தர் நின்று கொண்டிருந்தான்.
அவனை விசாரிக்குமுன்,”உங்களுக்காக ஸாப் காத்துகிட்டிருக்காங்க.” என்று சொல்லி மனுவை பிரிமியர் வெயிட்டிங் ஏரியாவிற்கு அழைத்து சென்றான்.
அந்தக் காலை வேளையில் வெள்ளை வேட்டி, சட்டையில் புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருந்தார் கார்மேகம்.  மனுவைப் பார்த்தவுடன்,
“தம்பி..உங்களுக்காகதான் காத்துகிட்டு இருந்தேன்..பிரெக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் வாங்க.” என்று காலை உணவு வைத்திருந்த டேபிளிற்கு அழைத்து சென்றார்.  விரேந்தரும் அவர்களுடன் சேர்ந்து காலை உணவை முடித்து கொண்டான்.  கையில் காஃபி கப்புடன் ஒரு சேரில் மனு அமர அவனருகில் கார்மேகம் அமரந்து கொண்டார்.
அவர் எங்கே போகிறார் என்ற நேரடியாக கேட்க சங்கோஜப்பட்டு,”இன்னைக்கு நைட்டே நான் மும்பைலேர்ந்து திரும்பிடணும்..ஆனா இன்னும் ரிடர்ன் டிகெட் போடலே.” என்று அவன் பயணத்தைப் பற்றி சாதாரணமாகப் பகிர்ந்து கொண்டான் மனு.
“விரேந்தர் பார்த்துப்பான்..எத்தனை லேட்டானாலும் இன்னைக்கு நைட் திரும்பிடுவோம்..இனிதான் உங்க வேலை இன்னைக்குதான் ஆரம்பிக்குது..நீங்க மறுபடியும் போக வேண்டி வரும்.” என்று அவரும் மும்பைக்குதான் வருகிறார், அவனோடுதான் திரும்ப போகிறார் என்று ஷாக் கொடுத்தார் கார்மேகம்.
“அடுத்த ட் ரிப்பை நான் பார்த்துக்கறேன்..என்னோட காலெண்டரைப் பார்த்து ஃபிக்ஸ் பண்ணிடுவேன்..இந்த மாதிரி அர்ஜெண்ட்டா நினைச்ச போதெல்லாம் புறப்பட முடியாது..எனக்கும் கமிட்மெண்ட்ஸ் இருக்கு..ஸ்மிரிதி புரிஞ்சுக்க மாட்டேங்கறா.”
“இல்லை தம்பி..சரியா புரிஞ்சுகிட்டிருக்கா..இதை நிதானமா செய்ய முடியாது..உடனே செய்ய வேண்டிய காரியம்..நேத்து மதியம் போலே தெரிய வந்திருந்தா நேத்து நைட்டே முடிச்சிருக்கலாம்.” என்றார் கார்மேகம்.
மெஹக்கிற்கு தொழில் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை என்று எண்ணியிருந்த மனுவிற்கு கார்மேகத்தின் விளக்கமும், அவரின் மும்பை பயணமும் வேறு பெரிய பிரச்சனையில் அவள் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்று உணர்த்தியது.  அவளுடைய வருமானத்தையும், ஒப்பந்தங்களையும் இரவு முழுவதும் அலசி பார்த்தவனுக்கு அதில் எதுவும் அசாதாரணமாகத் தெரியவில்லை. அவன் கண்ணுக்குப் புலப்படாதப் பிரச்சனை என்னாவாகயிருக்கும் என்று சிந்தனைவயப்பட்டவன் மெஹக்கின் புது ஒப்பந்தங்களை மீண்டும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.  அப்போது,
“உங்களுக்குத் தனியா வண்டி வந்திடும் அதுலே நீங்க நேரா மெஹக் வீட்டுக்குப் போயிடுங்க..நான் ஏர்போர்ட்லேர்ந்து ஒரு இடத்துக்கு போயிட்டு அங்கேயிருந்து வீட்டுக்கு வந்திடுறேன்..எல்லா வேலையும் முடிஞ்ச பிறகு நாம மூணு பேரும் சேர்ந்து ஏர்போர்ட் வந்திடலாம்.” என்றார் கார்மேகம்.
“சரி.” என்று சொல்வதை தவிர வேறு கேள்விகள் கேட்க தோன்றவில்லை மனுவிற்கு.
அவர்கள் மூவரும் முதல் வகுப்பில் பயணம் செய்து மும்பையில் தரையிறங்கி ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்த போது காலை வெய்யில் முகத்தில் அறைந்தது.  அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் இரண்டு கார்கள் அடுத்தடுத்து வர, முதல் காரில் மனு ஏறிக் கொள்ள, அவனுக்கு பின்னாலிருந்த காரில் விரேந்தரும், கார்மேகமும் ஏறி கொண்டனர்.  விரேந்தர் காரோட்டி அருகில் அமர்ந்து கொண்டான்.  கார்மேகம் பின் ஸீட்டில் அமர்ந்தவுடன் உள்ளே அமர்ந்திருந்த மெஹக் அதிர்ச்சியுடன்,
‘அங்கிள்..நீங்களே வந்திட்டீங்க.” என்றாள்.
“மகளுக்கு ஒரு கஷ்டம்னா அப்பாதானே வரணும்.” என்றார் கார்மேகம்.

Advertisement