Advertisement

ஸ்மிரிதியின் மனு – 4_2
“உங்கப்பாகிட்ட சொல்லு இதெல்லாம்.” என்றார் பிரேமா.
“அவருக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல…ஆனா உங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்..அம்மா, யாருமில்லாத அனாதைதான் இன்னிக்கு அவருக்குனு ஒரு இடம் பண்ணிகிட்டிருக்காரு..அவரோட எந்தச் செய்கையும் இனி விமர்சனம் செய்யாதீங்க.” என்று காலையிலிருந்து அன்பாக அவள் அம்மாவிற்கு புரிய வைக்க முயன்று தோற்று போன ஸ்மிரிதி வார்த்தை வன்முறையில் இறங்கினாள் .
அவர்கள் இருவரின் வாக்குவாதம் ஆபத்தான பாதையை நோக்கி பயணம் செய்வதை உணர்ந்த சிவகாமி,
“முதல்ல உன் ரூமுக்கு போயி உன் சாமானையெல்லாம் பாக் செய்துக்க..உங்கம்மாவும் அவளோடது பாக் செய்யட்டும்.” என்று ஸ்மிரிதிக்கு கட்டளையிட்டார்.
சிவகாமி சொன்னதைக் கேட்டு ஸ்மிரிதி அவள் அறைக்கு சென்றவுடன்,
“நான் அவகிட்ட என்ன பேசறது? என்ன கேட்கறதுனுத் தெரியாமக் குற்ற உணர்வுல என்னென்னவோ பேசிடறேன்.” என்று சிவகாமியிடம் மனம் திறந்தார் பிரேமா.
“அதே குற்ற உணர்வுலதான் நானும் திறந்த வாயமூடாம கண்டதையும் பேசிக்கிட்டு, கேட்டுகிட்டு அவளுக்குச் சரியா வம்பு அளந்துகிட்டிருக்கேன்.” என்றார் சிவகாமியும் மனவருதத்துடன்.
“பத்து வருஷம் ஓடிப் போயிடுச்சு டீ.” என்று பிரேமா சொல்ல,
“எனக்கும்தான்….நாதன் ரிடையர் ஆன பிறகும் நான் தில்லில இருக்கணுமுனு என் தலையெழுத்து….மாறன் இங்க காலேஜ் படிச்சதுனால இந்த ஊர் பிடிச்சிது..ஆனா என்ன பிரயோஜனம்.. அவனுக்கு இங்க சரியா வேலை கிடைக்கல அதனால தில்லிக்கே திரும்பி வந்திட்டான்..அங்கையும் சரியா அமையல..என்ன செய்யறதுனு தெரியாம ஏதேதோ செய்துகிட்டிருக்கான்….மனு அவனாவே கை ஊனிகிட்டான்….என் பசங்க இரண்டு பேரும் ஒத்துமையா, சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்குப் போதும்.”
“ஸ்மிரிதி சந்தோஷமா இருக்காளானு எனக்குத் தெரியல..நான் அவள விட்டிட்டு வந்தபோது அவளுக்குப் பதினைஞ்சு வயசு..அந்த வயசுல அவகிட்ட என்னோட முடிஞ்சுப் போன வாழ்க்கையப் பற்றி என்ன விளக்கம் கொடுக்க முடியும்? புரிஞ்சுக்கற வயசு வந்த பிறகு பேசிக்கலாமுனு தள்ளிப் போட்டேன்..இன்னிவரைக்கும் அதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கல..இப்ப பெரிய மனுஷியாட்டம் என்கிட்டையே சொல்றா நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்லைனு..”
“என்னால அப்படி நினைக்க முடியல..இப்ப அவளைப் பார்க்கறபோது ஒருவேளை அவளுக்காக நான் எல்லாத்தையும் பொருத்து போயிருக்கணுமோனுத் தோணுது.. அவளைவிட சின்ன பொண்ணோட கல்யாணத்துக்கு  உதவி செய்துகிட்டு இருக்கா..பெத்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்காம அரசியல் வாழ்க்கை அமைச்சு கொடுக்க போறாரு போல அவள பெத்தவரு..அவளுக்கு நல்லது நினைச்சு நான் பேசினதைப் புரிஞ்சுக்காம அவ எனக்கே என்ன பேசணுமுனு ஆலோசனைக் கொடுக்கறா.” என்று மனக்குமுறலைக் கொட்டினார் பிரேமா.
“அவ எல்லாத்தையும் பற்றி யோசனை செய்யறா பிரேமா..அவ சொன்ன மாதிரி உங்க மூணு பேரையும் புரிஞ்சவன்தான் அவளுக்கு வாழ்க்கைத் துணையா, உறுதுணையா இருக்க முடியும்.
“நான் முக்கியமில்ல சிவகாமி..அவளுக்கு அம்மா ஸ்தானத்தில நான் எதுவுமே செய்யல அதனால அவ கல்யாணத்தை என்னை வைச்சு முடிவு செய்யக்கூடாது..அவளை, அவ அப்பாவ தெரிஞ்சவங்க எல்லாம் கீதிகா குடும்பத்தை சேர்ந்தவங்கதான்.” என்றார் பிரேமா.
“அதனாலதான் அவ தில்லிப் பையனா தேடறா..எங்க குடும்பத்தைப் புரிஞ்சுக்க நான் என் பையனுக்குத் தமிழ் பொண்ணாத் தேடறேன்..யாருக்கு என்ன பிராப்தமோ?” என்றார் சிவகாமி.
“தமிழ் பொண்ணைப் பார்க்கதான் காலைல கல்யாண மண்டபத்திலிருந்து கிளம்பி போயிட்டியா?” என்று பிரேமாவே நேரடியாக கேட்க,
“அதெல்லாம் இல்ல டீ..வீடு பார்க்க போயிருந்தேன்..மருதமலை ரோட்ல வில்லா கட்டி விக்கறாங்க….ஒருவேளை மாறன் திரும்ப இங்க வர விருபப்பட்டா சொந்த வீடு இருந்தா அவனுக்கு சௌகரியமா இருக்கும்..எங்களுக்கும் தில்லில இருக்க முடியாதபோது வேற ஏதாவது இடம் வேணுமில்ல..அதான் இன்னிக்கு மனுவோட போயி அவங்க பேப்பரெல்லாம் செக் செய்தோம்.” என்றார் சிவகாமி.
“மனுக்குப் பொண்ணுதான் பார்க்க போனியோனு நான் நினைச்சேன்.” என்றார் பிரேமா.
“அவன் என்ன நினைக்கறானு எனக்குத் தெரியல..ஷிவானினு ஒரு பொண்ணு அவனோட சினேகிதமா இருக்கா..அவகிட்டேயிருந்து நிறைய போன் வருது….பத்து வருஷம் முன்னாடினா தட்டி கேட்டிருக்கலாம்..இப்ப நாங்கதான் அவன் சொல்றத தட்டாமக் கேட்டுக்கணும்..வக்கீல்கிட்ட வாதாட முடியுமா? வாயத்தான் முடிக்கணும்.”
“மனு அந்த மாதிரி இல்ல..உங்க இரண்டுபேருக்கும் சொல்லாம அவன் எதையும் செய்ய மாட்டான்..கல்யாண விஷயம் சொல்லிட்டுதான் செய்வான்.” என்றார் பிரேமா.
“அதைதான் நானும் சொல்றேன்..அவன் சொல்றத கேட்டுக்க வேண்டியதுதான்.சிவகாமியோட ஷிவானிதான் பொருந்துவா போல.” என்று அந்த மாமியார் அவர் எதிர்கால மருமகளின் பெயரோடு தன் பெயரைப் பொருத்திப் பார்த்தார்.
“மனுகூடவும் பொருந்தனும் டீ.” என்றார் பிரேமா.
“அதுக்கு அவந்தான் முயற்சி செய்யணும்..நான் என் வீட்டுக்கு வரவளோடப் என்னைப் பொருத்திக்க வேண்டியதுதான்..என்னடி இன்னும் ஸ்மிரிதிய காணல..இவ்வளவு நேரம் எடுத்துக்கறா?” என்று கேட்டார்.
அவருடைய பையைத் தயார் செய்தபடி,”வேற டிரெஸ் மாத்திகிட்டு வரணும்…இப்ப போட்டுகிட்டிருந்தது நேத்திலேர்ந்து போட்டுக்கறா..ஒரு நாள் ட் ரிப்னு பெங்களூர் வந்தா அதனால மாற்றுத் துணி கொண்டு வரல…அவ பிரண்டு கடைல ஒரு புடவையும், சல்வார் கமீஸ் செட்டும் வாங்கிகிட்டிருக்க.” என்றார் பிரேமா.
“நீ முதலே ஏன் பிளான் செய்யல..அவளோட திடீர்னு புறப்பட்டு வந்திருக்க?”
“முதல்ல பஸ்ல தனியா வரணுமுனு நினைச்சேன் ஆனா திடீர் திடீர்னு  உடம்பு எதோ மாதிரியாயிடுது..நேத்து காலைல ஸ்மிரிதி என்னைப் பார்க்க வந்த போதுக்கூட மயக்கமா இருந்திச்சு..அவளே என்னைய அவ பிரண்ட் சுசித் ராவோட அம்மாகிட்ட கூட்டிகிட்டு போயி காட்டினா..அவங்களோட ஆஸ்பத்திரிலதான் எல்லாம் டெஸ்டும் எடுத்தோம்..சாயந்திரமா ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தா..அதுகூடவே மாத்திரை..தினமும் சாப்பிடணும்..ஒவ்வொரு மாசமும் செக் அப் செய்துக்கணும்..அதுதான் எப்படினு தெரில..அவங்க ஆஸ்பத்திரி நான் இருக்கற இடத்திலேர்ந்து ரொம்ப தூரம்..மாசத்தில ஒரு தடவைதான் அதனால கண்டிப்பா போகணுமுனு ஸ்மிரிதி கட்டாயப்படுத்தறா.” என்றார் பிரேமா.
“ஒரு கால் டாக்ஸில போயிட்டு வா..ஸ்மிரிதி சொல்றது கரெக்ட்..உடம்ப பார்த்துக்க. ரிபோர்ட்ல என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டார் சிவகாமி.
அவர்கள் பேச்சை மேலே தொடருமுன் அறையினுள் ஸ்மிரிதி நுழைந்தாள்.  இண்டிகோ நிறத்தில் முழுக் கை, சைனீஸ் காலர் கமீஸூம், வெளீர் மஞ்சள் நிறத்தில் பட்டியால ஸ்டைலிலில் சல்வாரும் அணிந்திருந்தாள். அவளைப் பார்த்து,
“குளிருக்குப் போட்டுக்க என்ன வைச்சிருக்க?” என்று கேட்டார் சிவகாமி.
“ஜாகேட் (jacket), ஷால் (shawl) இரண்டும் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸம்மர், விண்டருனு துணிங்கள மாத்தறத்துக்குப் பதிலா நாம வேற  ஊர் மாறிடலாம் போல.” என்று ஆயாசத்துடன் சொன்னார் சிவகாமி.
“மனுஷங்க அவங்க வாழ்க்கை முறைய மாற்ற விரும்பல அதனால வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்பட்டு எல்லா ஊரும் இப்ப மாறிகிட்டு வருது..நீங்க விருபப்படற மாதிரி தில்லியும் மாறாலம்.”
“நீ சொல்றது சரிதான்..நம்மை மாற்றிக்கதான் கஷ்டமா இருக்கு.” என்று ஒப்புக்கொண்ட சிவகாமியைப் பாரத்து,”செக்-அவுட் செய்திட்டு ரிசெப்ஷன்ல வெயிட் செய்யலாம்.” என்றாள் ஸ்மிரிதி
அவர்கள் மூவரும் அறையைக் காலி செய்து மனுவின் வரவிற்காகக் காத்திருந்தனர்.  அவன் தலை தெரிந்தவுடனையே,
“மனு..இவளுக்கு ரொம்ப கொழுப்பாயிடுச்சு டா.” என்று ஒரு குழந்தையைப் போல் மறக்காமல் ஸ்மிரிதியைப் பற்றி அவனிடம் கம்ப்ளெண்ட் செய்தார்.
சிவகாமி சொன்னதைக் கண்டு கொள்ளாமல், “ உங்க பேக் எடுத்துகிட்டு வந்திட்டேன்..ஆன் ட்டி நீங்களும் எல்லாம் எடுத்துகிட்டீங்களா..கிளம்பலாமா?” என்று பிரேமாவைப் பார்த்து கேட்டான் மனு.
“நாங்க ரெடி.” என்றார் பிரேமா.
அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்த போது இரண்டு வண்டிகளும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தன.
“உன்னோடது வேணாம்..என் கார்ல போயிடலாம்.” என்று ஸ்மிரிதியிடம் சொன்னான் மனு.
“நீ உன்னோடத இங்கையே விட்டிடு..என்னோடதுல போகலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி.” என்று மறுப்பேதும் சொல்லாமல் அவன் போனை எடுத்து யாரிடமோ வண்டி இருக்கும் ஹோட்டல் பெயரைச் சொல்லி அங்கே வந்து எடுத்து செல்லும்படி கட்டளையிட்டான். ஹோட்டல் சிப்பந்தியிடம் வண்டி சாவியை ஒப்படைத்துவிட்டு அனைவரும் ஸ்மிரிதியின் வண்டியில் புறப்பட்டனர்.
மனுவிடமிருந்து மறுப்பை எதிர்பார்த்த ஸ்மிரிதி, மறுப்பேதும் சொல்லாமல் அவளுடன், அவளை டிரைவராக ஏற்று கொண்டு மிகச் சாதாரணமாக முன் இருக்கையில் அவள் அருகே அமர்ந்து கொண்டவனைப் பார்த்து ஆச்சர்யமானாள்.
“அம்மா, நேர புவனா ஆன் ட்டி வீட்டுக்குதான?” என்றுபின் சீட்டில் அமர்ந்திருந்த பிரேமாவிடம் கேட்டாள்.
“ஆமாம்..இன்னிக்கு நைட் ராம் அவங்க மாமியார் வீட்லேர்ந்து டிரெக்டா ஏர்போர்ட் போயிடுவான்..அவனும் டெல்லி ஃபிளைட்தான்.” என்று பிரேமா அருகில் அமர்ந்திருந்த சிவகாமி பதில்லளித்தார்.
“அவனுக்கு ஹனிமூன் போகறத்துக்கு வேற இடம் கிடைக்கலையா?டெல்லிக்கா வரான்?” என்று மனுவை புறக்கணித்து அவள் பிரண்டுகளுடன் வம்பு பேசினாள் ஸ்மிரிதி.
அதற்கு சிவகாமிடமிருந்து பதில் வரும் முன் அவரை முந்திக் கொண்டு,”அவன் உன்னோட ஊருக்குதான் போறான்.” என்று அவளின் வம்புக்கு அவள் விரும்பாத பதில் கொடுத்து அவளை வம்புக்கு இழுத்தான் வக்கீல் மனு.
“நைஸ்.” என்று ஒரு வார்த்தையில் மனு வளர்க்க ஆசைப்பட்ட வம்பை வெட்ட பார்த்தாள் ஸ்மிரிதி.  ஆனால் மனு வக்கீல் மூடில் இருந்ததால் கொழுப்பு எத்தனை விதமான தாக்குதல்களைச் சந்திக்க தயாராக இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டான்.
“கரெக்ட்..உன்னைப் போல சிகெரட், தண்ணி இந்த மாதிரி  பழக்கமெல்லாம் அவனுக்குக் கிடையாது அதனால இது த்ரில் டிரிப் இல்ல வெறும் நைஸ் ட்ரிப்தான்.” என்று பதட்டமில்லாமல் ஸ்மிரிதியை நிதனமாகத் தாக்கினான் மனு வளவன். அவனின் எதிர்பாராத தாக்குதலில் அவள் நிதானத்தை இழக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி கார்மேகம்.

Advertisement