Advertisement

ஸ்மிரிதியின் மனு – 39
அதன்பின் மனு, மாறன் இருவர் மட்டுமில்லாமல் வாரக் கடைசியில் வந்த மனிஷும் அவர்களுடன் சேர்ந்து சமைத்தான்.  ஸ்மிரிதி இல்லாத தினங்களிலும் மனுவின் வீட்டிற்கு வந்த போன மனிஷ், சிவகாமி, தில்லை நாதன் இருவரையும் அத்தை, மாமா என்று  உறவுமுறை கொண்டாடும் அளவிற்குத் தமிழனாக முன்னேறியிருந்தான்.  
எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் விரேந்தருடன் தான் வந்தான் மனிஷ்.  அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மனிஷிற்கு அனுமதி அளிக்கவில்லை கார்மேகம்.  அதனால் அவர்கள் வீட்டிலேயே அவர்களோடு டீ வி பார்த்தபடி, விளையாடிய படி இல்லை மாறனின் உதவியோடு அவன் வீட்டுப் பாடங்களைச் செய்தபடி பொழுதைப் போக்கினான் மனிஷ்.
ஒருமுறை மனுவும், மாறனும் ஒரு குழுவாக மனிஷை எதிர்த்து செஸ் விளையாட, அவர்கள் இருவருக்கும் தண்ணிக் காட்டி கொண்டிருந்தான் மனிஷ்.  அப்போது பாதி ஆட்டத்தில் ஸ்மிரிதியை இரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர மனு கிளம்ப தயாரான போது அதை விரும்பாத மனிஷ் உடனே விரேந்தரிடம் இரயில் நிலையத்திற்கு போகும்படி கட்டளையிட்டான். அவனின் கட்டளையை விரேந்தர் மறுத்துவிட, மனு கிளம்பி போனவுடன் கோபம் கொண்டு ஆட்டத்தை கலைத்துவிட்டு உடனே அவன் வீட்டிற்குச் செல்ல தயாரானான் மனிஷ்.  ஸ்மிரிதி வீடு வந்து சேரும்வரை அவனைச் சமாதானப்படுத்தி சமாளிப்பதற்கு பெரும்பாடுபட்டனர் சிவகாமி, நாதன், மாறன் மூவரும்.
ஸ்மிரிதி வீடு வரும்வரை வரவேற்பறை சோபாவிலிருந்து நகராமல் வீம்பாக உட்கார்ந்திருந்தவன் அவளின் வண்டி சத்தம் கேட்டவுடன் மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்து முதல் வேலையாக விரேந்தரின் நடத்தையைப் பற்றி அவன் எதிரிலேயே புகார் வாசித்தான் மனிஷ்.  அதைக் கேட்டு விரேந்தரைக் கோபித்து கொள்ளாமல் அவனைப் பாராட்டிய ஸ்மிரிதி நேராக மனிஷ் அருகினில் வந்து,
”அவன் எதுக்கு உன்னோட வரான்..எதுக்காக உன்கூடவே இருக்கான்னு உனக்குத் தெரியாதா? அவன் டிரைவரா டா? எதுக்கு அவனுக்கு வீணா பிரச்சனை செய்யற…உனக்குத் தேவையில்லாத விஷயத்திலே ஏன் தலையிடற?ஜிஜுக்குத் தெரியாதா என்னை அழைச்சுகிட்டு வர்ற? நீயா முடிவு எடுக்கற வயசும், சூழ் நிலையும் உனக்கு இன்னும் வரலே.” என்று ஸ்மிரிதி கத்தியவுடன்,
“நீங்கெல்லாம்தான் என்னை தனியா விட மாட்டேங்கறீங்க..என்னையும் தனியா விட்டு பாருங்க எப்படி சமாளிக்கறேன்னு அப்பதான் தெரியும்.” என்று மனிஷும் பதிலுக்குக் கத்தினான்.
“மனிஷ் ஜஸ்ட் ஷட் அப்..உனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியும்..நீ விரேந்தர்கிட்ட இப்படி பேசினேன்னு அப்பாகிட்ட சொல்லட்டுமா? ” என்று ஸ்மிரிதி மிரட்டலாக பேச,
“தீதி..வேணாம்..அப்பாகிட்ட சொல்லாத..ஸாரி..ஸாரி.” என்று கார்மேகத்தின் பெயரைக் கேட்டவுடன் ஸ்மிரிதியிடம் அடங்கிப் போய் மன்னிப்பு கேட்டான் மனிஷ்.
“என்கிட்ட ஸாரி கேட்காத..விரேந்தர்கிட்ட கேளு.” என்று வீட்டினர் முன்னிலையில் மனிஷை விரேந்தரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாள்.
மனிஷின் செய்கையை ஸ்மிரிதி கோபித்து கொண்டது, விரேந்தரின் செய்கையை ஸ்மிரிதி பாராட்டியது, மனிஷை விரேந்தரிடம் மன்னிப்பு கேட்க வைத்தது எல்லாம் விரேந்தர் டிரைவர் மட்டுமில்லை மனிஷின் பாதுகாவலன் என்று தெள்ள தெளிவாக காட்டியது. அந்த நிகழ்விற்குப் பின் விரேந்தர் இல்லாவிட்டால் மனிஷை அவர்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று கார்மேகத்திற்குத் தெரியப்படுத்தினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி எதிர்பார்த்தது போல் அவளுடைய  ஊர் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லாததால் பாக்ட் ரியைப் புது இடத்தில் தொடங்க முடிவு செய்து, முதலிலிருந்து மறுபடியும் அனைத்து வேலைகளையும் செய்ய நேரிட்டதால் தல்ஜித்தும், ஸ்மிரிதியும் மாறி மாறி உதய்ப்பூரிலேயே குடியிருந்தனர்.   
ஸ்மிரிதி தில்லி திரும்பிய போது கார்மேகத்தின் வேலைகளும் அவளை இழுத்து கொள்ள, சேர்ந்தார் போல் வீடு தங்கமுடியாமல் வெளியூர் பயணங்கள் மேற் கொண்டாள். அவ்வாறு அப்பாவும், மகளும் மேற்கொண்ட சில பயணங்களில் மனுவும் சேர்ந்து கொள்ள நேர்ந்தது.  அத்தகைய பயணங்கள் விரேந்தர் துணையுடன் நடைபெற்றதால் அந்த தினங்களில் மனிஷ் அவன் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது.  
 
இதற்கு நடுவில் ஸ்மிரிதியும், மனுவும் பிரேமாவைப் பற்றி தில்லை நாதனிடம் பகிர்ந்து கொள்ள அதைக் கேட்டு  மனச்சஞ்சலமாகிப் போனார் நாதன்.  மனு எதிர்பார்த்தது போல் அவரால் உடனே ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.  அவரின் தயக்கத்தைப் பற்றி மூத்த மகன், மருமகளிடம் வெளிப்படையாக பேசினார்.
“ஸ்மிரிதி….பிரேமாவை நம்ம வீட்லே, நம்மகூடதான் வைச்சுக்கணும்..அது சரிவரலேனா நீங்க இரண்டு பேரும் தனியா போயிடறது நல்லது.” என்று மனு சொன்னதையே அவரும் சொல்ல,
“நாங்க தனியா போகறது சரிப்பட்டு வராது அங்கிள்..எனக்கும் விருப்பமில்லை.” 
“வேற வழியில்லைன்னா அதைதான் செய்யணும்..அவளை ஜலந்தர் அனுப்பறதிலே எனக்கும் இஷ்டமில்லை..அதே சமயம் இந்த விஷயத்திலே சிவகாமியைவிட, மாறனைதான் முக்கியமாக் கேட்கணும்..
அவனுக்கும் இருபத்தி ஐந்து வயசாயிடுச்சு..நல்ல வேலைலே செட்டிலானா அவன் வாழ்க்கையையும் செட்டில் பண்ணிடுவேன்..இப்ப செய்யற வேலை இன்னும் சில மாசத்திலே நிரந்தரமாயிடும்..அதுக்குதான் காத்துகிட்டு இருக்கேன்…ஆனா கொஞ்ச நாளா அவன் என்ன செய்யறான்னு எனக்கு புரியலே…குழப்பமாயிருக்கு..
எது எப்படி இருந்தாலும் அவனும் என் பையன் அதனாலே இந்த மாதிரி விஷயத்திலே அவனையும் கலந்தாலோசிக்கணும்..எதிர்காலத்திலே பிரேமாவை சிவகாமியோட சினேகிதியா பார்க்காம முதல் சம்மந்தியா மட்டும் பார்த்தா பிரச்சனையாயிடும்..அந்த மாதிரி எண்ணம்  வந்திச்சுன்னா அண்ணன், தம்பி இரண்டு பேருக்கும் நடுவுலே மனக்கசப்பு வந்திடும்..அதனாலே அவன்கிட்டையும் பேசிட்டு இதுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்.” என்று அவருடைய இரு மகன்களின் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சச்சரவைப் பற்றியும் யோசனை செய்தார் நாதன்.
நாதனின் விளக்கத்தைக்  கேட்டபின் பிரேமா விஷயத்தை சிறிது காலம் ஆற போட முடிவு செய்தனர் மனுவும், ஸ்மிரிதியும்.
பிரேமாவைப் பற்றி சொல்லி கிட்டதட்ட இரண்டு மாதமான நிலையில்கூட அந்த விஷயத்தில் நாதனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.  முதலில் சிவகாமியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்று நினைத்தவர் பின் அவரின் எண்ண போக்கை மாற்றி கொண்டு இளைய மகனிடம் தனியாக பேசிய பின் சிவகாமியுடன் பேச  முடிவு செய்தார் ஆனால் அதற்கான சரியான சந்தர்ப்பம்தான் அமையவேயில்லை. 
சமீப காலமாக மாறன் அவனுடைய மாலைப் பொழுதுகளையும், விடுமுறைகளையும் வீட்டிலேயே கழிப்பது ஒருபுறம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் நாதனுக்கு அது சந்தேகத்தைக் கொடுத்தது. மனிஷ் வரும் நாட்களில் மட்டும் மாறனைப் பழைய உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது இல்லையென்றால் அவன் வீட்டிலிருப்பதே யாருக்கும் தெரியவரவில்லை.  அவனுடைய அறையிலேயே முடங்கிக் கிடந்தான்.  அவனுக்கு வேலை செய்யுமிடத்தில் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து கொண்ட நாதன் இந்தமுறை அவராகவே அவனின் எதிர்காலத்தைப் பற்றி அவனுடன் பேச முடிவு செய்தார்.  ஆனால் மாறனே ஒரு முடிவுக்கு வந்திருந்தான் என்று அவர் அறிந்திருக்கவில்லை.
மனுவின் கல்யாணத்திற்குப் பின் அவன் எதிர்காலத்தைப் பற்றி முதல்முறையாக தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் மாறன்.  இதுவரை இரண்டு, மூன்று கம்பெனிகளில் வேலைப் பார்த்ததில் அவனுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது போனது அது அவன் செய்யும் வேலை மேல் அவனுக்குப் பிடித்தமில்லை என்பதுதான்.  அதனால் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து விலகுவது, அதற்குபின் என்ன செய்வதென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அந்த திட்டத்தின் முதல் கட்டமாக வேலையை விட்டு விலக போவதை எப்படி வீட்டில் சொல்லுவதென்று எண்ணி கொண்டிருக்கும் போது அதைப் பற்றி சொல்லவேக்கூடாது என்று அவனை முடிவெடுக்க வைத்தார் சிவகாமி.
கடந்த இரண்டு மாதமாக வாரக் கடைசியில் அவர்கள் வீட்டிற்கு மனிஷ் வரும் போது ஞாயிற்று கிழமை செய்திதாள்களைப் புரட்டி அதில் மெஹக்கை பற்றி வெளி வந்திருந்த செய்தியைப் படித்து அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கியிருந்தான்.  
புது ஹிந்தி படங்களில் முன்னனி கதாநாயகர்களோட நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாள் மெஹக்.  அதனால் ஒவ்வொரு வாரமும் அவளின் புகைப்படம் வெவ்வேறு செய்திதாள்களில் வந்த வண்ணமிருந்தன.  ஒரு மாலைப் பொழுதில் சிவகாமியும், மாறனும் வீட்டில் தனித்திருந்த போது அன்று காலை செய்திதாளுடன் வந்திருந்த சினிமா செய்தி சிறப்பிதழில் மெஹக்கை பற்றி எழுதியிருப்பதைப் பெருமையுடன் படித்து கொண்டிருந்த சிவகாமி,
“பாரு டா..வாரா வாரம் ஒரு புது படம்….அடுத்த வருஷத்துக்குள்ள மெஹக்தான் கொடிகட்டி பறக்க போறா..மனிஷ் படிச்சு சொன்னவுடனையே அவளுக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பணும்னு நினைச்சேன் ஆனா கொஞ்சம் கூச்சமா இருந்திச்சு அதனாலே ஸ்மிரிதிகிட்ட அவ நம்பர் கேட்கலே..மறுபடியும்  அந்த மாதிரி ஏதாவது யோசனை வர்றத்துக்கு முன்னாடி ஒரு வாழ்த்தி செய்தி அனுப்பிவிடறேன்..அவளுக்கு நல்லது நடக்கட்டும்.” என்று மனதார வாழ்த்தினார்.
“அவ என்ன உங்களுக்கு அவ்வளவு முக்கியமானவளா? அவளோட நியூஸைப் பேப்பர்லே படிச்சு தெரிஞ்சுகிட்டீங்க..நீங்க அவளுக்கு முக்கியமா இருந்தா அவளே ஃபோன் செய்து சொல்லியிருப்பா..நீங்க அவளோட ஃபிரண்டோட மாமியார்..அவளோட மாமியாராட்டாம் ஆனந்தப்படறீங்க..ஆசீர்வாதம் செய்யறீங்க.” என்று கட்டுப்படுத்த முடியாமல் மெஹக்கின் மீது அவனுக்கிருந்த ஆத்திரத்தை வெளியிட்டான் மாறன்.
“என்ன டா முட்டாள்தனமா பேசற? அவளோட மாமியாரா இருந்தா நாங்க இரண்டு பேரும் ஃபோன்லேயா பேசிக்கிட்டு இருப்போம்?” என்று எதிர்கேள்வி கேட்ட சிவகாமி, மெஹக்கின் மீது மாறனிற்கு ஏன் இத்தனை ஆத்திரம்  என்று யோசிக்கவில்லை.  அவனின் சுடு சொற்களில் காயப்பட்டு போனவர் அந்த  வாழ்த்து செய்தியை அனுப்பவேயில்லை.  
அதற்கு அடுத்த வாரம் மறுபடியும் மெஹக்கைப் பற்றிய செய்தி வந்தது.  இந்தமுறை அவளைப் பற்றி வந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவள் மூன்று தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது செய்தியாக ஒரு நாளிதழில் வெளி வந்தவுடன் அதே நாளிதழில் மற்றொரு தமிழ் தயாரிப்பாளரும் அவர் படத்தில் நடிப்பதற்கு மெஹக் ஒப்பந்தமாகியிருக்கிறாள் என்ற செய்தியை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் அவரது படம்தான் அவளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த போகும் படமென்ற கூடுதல் தகவலையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.  அதற்கு மெஹக்கிடமிந்து எந்த விதமான மாற்று கருத்தோ, மறுப்பு செய்தியோ வரவில்லை.  
அவள் நான்கு தமிழ் படத்தில் நடிக்க போகிறாள் என்று தெரிந்தவுடன் இந்தமுறை கண்டிப்பாக அவளை வாழ்த்த வேண்டுமென்று நினைத்து, வரவேற்பறையில் மனுவுடன் சேர்ந்து அவர் பேப்பர்களுடன் போராடிக் கொண்டிருந்த ஸ்மிரிதியிடம் மெஹக்கின் ஃபோன் நம்பருக்காக வந்தார் சிவகாமி.
“ஸ்மிரிதி, மெஹக்கோட ஃபோன் நம்பர் ஷேர் பண்ணு..அவ புதுசா ஒரு தமிழ் படத்திலே புக் ஆகியிருக்காளாம்..அவளுக்கு விஷ் செய்யணும்.” என்றார்.
“இப்பவே அவகிட்ட பேசிடலாம் ஆன்ட்டி..என் கல்யாணத்துக்கு அப்பறம் நானும் அவகிட்ட பேசவேயில்லை..ரொம்ப பிஸியாகிட்டா போலே..படத்துக்கு மேலே படமா ஸைன் பண்ணிகிட்டு இருக்கா..அடுத்த மூணு வருஷம் அவளைப் பார்க்கவே முடியாதுன்னு நினைக்கறேன்.” என்று சொன்ன ஸ்மிரிதி உடனே அவள் ஃபோனிலிருந்து மெஹக்கை அழைத்தாள் ஆனால் மெஹக் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
அங்கே நடந்து கொண்டிருந்ததை மௌனமாகப் பார்த்து கொண்டிருந்த மாறன்,”படத்துக்கு மேலே படமில்லை..பணத்துக்கு மேலே பணம் அதான் இத்தனை நாள் கழிச்சு நீ ஃபோன் செய்திருக்க ஆனாலும் உன்கிட்ட பேசறத்துக்கு அவகிட்ட மூணு நிமிஷம்கூட இல்லை.” என்று மெஹக்கின் மீது நஞ்சை உமிழ்ந்தான். 
மெஹக்கின் மீது மாறனின் காரணமில்லாத சீற்றம் அந்த அறையிலிருந்த மூவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்தது.  எப்போதும் போல் அவள் பேச விரும்பவில்லை என்று மெஹக்கின் செய்கையை சாதாரணமாக எடுத்து கொண்ட ஸ்மிரிதி அதே நேரத்தில் மாறனின் அர்த்தமில்லாத ஆத்திரத்தைப் பார்த்து யோசனையாள்.  மாறனின் விஷத்தைக் கக்கிய பேச்சு விசித்திரமாக தோன்றியதால் தம்பியின் மீது ஆராய்ச்சி பார்வை வீசினான் அண்ணன்.  இந்தமுறை மாறனின் பேச்சில் தெளிவாகிப் போனார் சிவகாமி. மெஹக்கின் மீதிருக்கும் அவனின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறான் என்று புரிந்து கொண்டார்.  
மாறனின் ஆத்திரம், நச்சு பேச்சு, வெறுப்பிற்கான சரியான காரணம் என்னவென்று அந்த நான்கு பேருக்குமேத் தெரியவில்லை.  ஆனாலும் மகனின் அலட்சியமான பேச்சைப் பொறுக்க முடியாமல்,
“அந்தப் பொண்ணு கஷ்டப்பட்டு சம்பாதிக்குது..உனக்கு ஏன் டா அதுலே பொறாமை?” என்று சிவகாமி கேட்க,
“ஆமாம்..அவ மட்டும்தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறா..நான் சும்மா உட்கார்ந்துகிட்டே சம்பாதிக்கறேன்னில்ல?’ என்று அதே தொனியில் பதில் கொடுத்தான் மாறன்.
அவனின் அந்த ஏளனமான பதிலில் இரண்டு மாதமாக அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் கரைப்புரள,
“நீ சும்மா இருக்கியா இல்லை சுறுசுறுப்பா இருக்கியா..சும்மா பேசறேயா இல்லை எதையாவது குடிச்சிட்டு பேசறேயான்னு உனக்கு மட்டும்தான் டா தெரியும்..புத்தி கெட்டு போயிடுச்சு டா உனக்கு..என் பையனாடா நீ? படுபாவி.” என்று அவர் இளைய மகனை மருமகள், மூத்த மகனின் எதிரிலேயே திட்டிவிட்டு கலங்கிய கண்களுடன் அவர் படுக்கையறைக்குச் சென்றார். 
அவர் பேச்சில் முதலில் ஸ்தம்பித்து போன மாறன், ஸ்மிரிதியின் எதிரில் அவர் திட்டயதை உணர்ந்த பின் அங்கே இருக்க பிடிக்காமல் கோபமாக வீட்டை விட்டு வெளியேறினான். 
அன்று இரவு உணவின் போது மாறன் இல்லாததைக் கவனித்த நாதன் அவன் எங்கே என்று விசாரிக்க, மனுவும், சிவகாமியும் அமைதியாக இருக்க, “நீங்க சாயந்திரம் வாக்கிங் போகும் போது வெளியே போனான் அங்கிள்..இன்னும் திரும்பி வரலே.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவன் ஜாஸ்தி வெளியே சாப்பிடறதில்லே, தங்கறதில்லே அதான் கேட்டேன்.” என்றார் நாதன்.
“இராத்திரி வீடு திரும்பிடுவான்னு நினைக்கறேன் அங்கிள்.” என்று பதிலளித்தாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு மனுவும், ஸ்மிரிதியும் அவர்கள் படுக்கையறைக்குத் திரும்பிய போது அவர்களின் அறையின் ஒரு மூலையில் ஸ்மிரிதியின் பேப்பர்களும், ஃபைல்களும் குவிந்து கிடந்தன.  அதைப் பார்த்தவுடன் மனுவின் மனதில் ஏன் கேட்டோம் என்ற எண்ணம் மீண்டும் வந்தது.  
கணவனின் மன நிலையை அவனுக்கு முன்பே கண்டறிந்த மனைவி அவனின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தாள். 
“மனு, என்னோட வேலையை கவனிக்க இன்னொரு ஆள் உதவி தேவைப்படும் உனக்கு..சீக்கிரமா ஒரு முடிவு எடு.” என்றாள்.
“தினமும் கொஞ்சம், கொஞ்சமா நானே எல்லாத்தையும் சரி செய்யறேன்..இன்னைக்குப் போலே நீயும் சில நாள் எனக்கு உதவி செய்..சீக்கிரமா முடிஞ்சிடலாம்..அப்பறம் நானே ஒரு இடத்திலே வேலை பார்க்கறேன் நான் எப்படி இன்னொரு ஆளை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைச்சுக்க முடியும்?” என்று  கேட்டான் மனு.
“நீ எதுவும் கொடுக்க வேணாம்..எனக்காகதானே வேலைக்கு ஆள் வைக்க போற..என்னோட வருமானத்திலேர்ந்து கொடு.” என்றாள்.
“அவசரப்படாதே..எல்லாத்தையும் முதல்லே நான் புரிஞ்சுக்கறேன் அதுக்கு அப்பறம்தான் இன்னொரு ஆளை உள்ளே கொண்டு வர முடியும்.”
“ஆயுஷ் சரியான ஆள் மனு..அவனை உள்ளே கொண்டு வர பாரு.” என்று ஒருமுறை சந்தித்த ஆயுஷை  அவள் வட்டத்திற்குள் கொண்டு வர முடிவெடுத்தாள் ஸ்மிரிதி.
“அவனுக்கும் இஷ்டமிருக்கணும்.”
“அவன் மறுக்க முடியாத ஆஃபர் கொடு.” என்றாள் ஸ்மிரிதி.
அதன்பின் வந்த நாட்களில் கணவனும், மனைவியும் சேர்ந்து அவர்களால் முடிந்த வரையில் ஸ்மிரிதியின் பேப்பர்களை ஒழுங்குபடுத்த அதில் பாதிக்கு மேல் அசையா சொத்துக்களாக இருந்ததை பார்த்து அசந்து போனான் மனு.  கோயமுத்தூரில் ஸ்மிரிதியின் பெயரில் இருந்தவைகளைப் பார்த்து,
“நம்ம ஊர்வரைக்கும் உங்க அப்பாவோட செல்வாக்கு இருக்கு..தெரிஞ்சிருந்தா உங்கப்பாவையே நம்ம வில்லாவை பேசி முடிக்க சொல்லியிருப்பேன்…பில்டர்ஸ் கொள்ளையடிக்கறாங்க..தட்டி கேட்க யாருமேயில்லை.” என்றான் மனு.
“இப்ப என்கிட்ட சொல்லிட்ட.. கவலையைவிடு..  நீ இழந்ததை நான் திருப்பறேன்..இப்ப எங்கப்பாவைவிட என் செல்வாக்கு ஜாஸ்தி.”
“அது எதுக்கு உனக்குண்ணு எனக்குப் புரியலே”
“ஏற்கனவே விளக்கம் கொடுத்திட்டேன் மனு..அந்த செல்வாக்கை வைச்சு சம்பாதிக்க போகறதில்லை..அதை வைச்சு குறைகளைச் சரி செய்ய  போறேன்..சங்கடங்களைச் சமாளிக்க போறேன்..இப்ப நீ கேட்ட உதவி மாதிரி மத்தவங்களுக்கும் செய்வேன்.”
“உனக்கு சம்பாத்தியம் இல்லைன்னா நம்ம குடும்பத்தை எப்படி நடத்த முடியும் பேபி.” என்று போலியாக கவலைப்பட்டான் மனு.
“அதுக்கு தான் உன்னையே என்னோட வக்கீலா வைச்சிருக்கேன்..உனக்கு பிடிச்ச சம்பளத்தை எடுத்துக்கோ..உன் பொண்டாட்டியையும், குடும்பத்தையும் குறையில்லாம பார்த்துக்க.” என்று அசால்ட்டாகப் பதில் சொன்னாள்.
“ஜாக்கிரதை..உன் சொத்தை திருடிக்கிட்டு போயிட போறேன்.” என்று கிண்டலாக மனு சொல்ல,
“நீ எங்கே போனாலும் எனக்குத் தெரிஞ்சிடும்..உன்னை எதுக்கு எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைச்சேன்னு நினைக்கற..உன்னை யாராவது தூக்கினாலும், இல்லை நீயே தலைமறைவானாலும் ஸ்மிரிதிக்குத் தகவல் வந்திடும்..நானே உன்னை கடத்திகிட்டு போனாதான் யாரும் கண்டுக்க மாட்டாங்க.” என்று சொல்லி சிரித்தாள் ஸ்மிரிதி.
“அடிப்பாவி..உனக்கு தாலி கட்டின புருஷனும் உன்னோட டார்கெட் லிஸ்டிலே இருக்கானா?” என்று விளையாட்டாக கேட்டான் மனு.
“நீ மட்டுமில்லை என்னை சேர்ந்தவங்க எல்லாரும் இருக்காங்க..அவங்க யாரா இருந்தாலும், எங்கே இருந்தாலும் அவங்களைப் பற்றிய முக்கியமான தகவல் எனக்கு வந்திடும்.” என்று ஸீரியஸாக பதில் சொன்ன ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை அந்த மாதிரி அவளுக்கு வர போகும் முதல் முக்கிய தகவல் மெஹக் பற்றியதாக இருக்க போகிறதென்று.

Advertisement