Advertisement

ஸ்மிரிதியின் மனு – 38
அவர்கள் இருவரும் ஸ்மிரிதியின் வீடு வந்து சேர்ந்தபோது கேட்டிலிருந்து வீட்டு வாசல்படி வரை கண்ணில் பட்ட அனைவரும் மனுவுக்கு வணக்கம் தெரிவித்தனர்.  முதல்முறை அந்த வீட்டிற்கு வந்தபோது அந்த இரவு வேளையில் அதே வராண்டாவிலிருந்து அவன்  கோபத்துடன் பைக்கை உதைத்து புறப்பட்டது, பூட்டியிருந்த கேட்டினருகில் காத்திருந்தது என்று எல்லாம் நினைவுக்கு வர மனுவின் முகத்தில் புன்னகை வந்தது.  
கல்யாணத்திற்குப் பின் முதல்முறையாக வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளைக்கு முதல் மரியாதை அளித்தார் மாமனார்.  மனு, ஸ்மிரிதியின் வருகையை சாதாரணமாக ஏற்று கொண்டு கீதிகா வரவேற்க அதற்கு நேர்மாறாக, ஆனந்தமாக, ஆர்பாட்டத்துடன் அவர்களை வரவேற்றான் மனிஷ். அவளறையிலிருந்து பெட்டியை எடுத்து வர ஸ்மிரிதி சென்றவுடன், மனுவிடம்,
“ஜிஜூ..நான் உங்களோட இப்பவே உங்க வீட்டுக்கு வரட்டுமா?” என்று யாரும் எதிர்பார்க்காததைக் கேட்டான்.
“மனிஷ்..சும்மா இரு.” என்று கீதிகா அவனை அதட்ட, கார்மேகம் மௌனமாக இருந்தார்.
மனிஷ் மனது புண்படாமல் அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று மனு யோசித்து கொண்டிருக்கும் போது ஸ்மிரிதியும் அவள் பெட்டியுடன் அங்கு வந்து சேர்ந்தாள்.
“உன் அக்கா ஒருத்தியைக் கல்யாணம் செய்துகிட்டது மூணு பேருக்கு சமம்..எங்க வீட்லே இப்ப நாங்க மைனாரிட்டி..நீ வந்திடு உன் பலத்திலே..கேர்ல்ஸ், பாய்ஸ் சரிசமமாயிடுவோம்..அப்பறம் உன்னை வைச்சு அவளை ஸார்ட் அவுட் செய்ய ஸ்கூல் டேஸ்லே முடியாது அதனாலே லீவு நாள்லே இல்லை வீக் எண்ட்லே எங்க வீட்டுக்கு வா..இவளை வைச்சு விளையாடலாம்.” என்று விளையாட்டாகவே அன்றைக்கு முடியாது என்று மறுத்து வாரக் கடைசியில் அவனை அவர்கள் வீட்டிற்கு அழைத்தான்.
“ஓகே ஜிஜூ..வீக் எண்ட்ஸ்லே வரேன் ஆனா அப்ப தீதி ஊர்லே இருக்கணுமே.” என்று ப்ரோகிராமைப் பிளான் செய்யுமுன் கவலைப்பட்டான் மனிஷ்.
“அவ இல்லாட்டா இன்னும் நல்லது..நான், மாறன், நீ..நாம மூணு பேரும் மட்டும் என்ஜாய் செய்யலாம்.” என்று வாக்களித்தான் மனு.
“நாம மூணு பேர் மட்டுமா ஜிஜு? என்று நம்பமுடியாமல் ஆசையாக கேட்டான் மனிஷ்.
“ஆமாம் டா….ஒன்லி பாய்ஸ்..ஓகேதானே?.” என்று மனிஷின் சம்மதத்தைக் கேட்க,
உடனே அவன் இடத்தைவிட்டு எழுந்து வந்து மனுவின் கையைக் குலுக்கி,”டபுள் ஒகே.” என்றான் மனிஷ்.
மனுவுடனான மனிஷின் நெருக்கத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர் மற்ற மூவரும்.  அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்குமே மனம் வரவில்லை. அதன்பின் அங்கே தாமதிக்காமல் அவர்களிடம் விடைபெற்று கொண்டு மனுவின் வீட்டிற்குப் புறப்பட்டனர் இருவரும்.
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,
“ஆன் ட்டி, அங்கிளைக் கேட்காம நீயே மனிஷை வீட்டுக்கு இன்வைட் செய்திட்ட..அவங்களைக் கேட்க வேணாமா? என்று சந்தேகமாகக் கேட்டாள் ஸ்மிரிதி.
“அது நம்ம வீடு ஸ்மிரிதி..அவன் உன்னோட தம்பி.” என்றான் மனு.
“ஆன்ட்டி ஓகே சொன்னாக்கூட மனிஷை நம்ம வீட்டுக்கு கீதிகா அனுப்ப மாட்டாங்க.” 
“என்னோட விருப்பத்தைச் சொல்லிட்டேன்..இதுக்கு மேலே அவங்க விருப்பம்..அவங்களோட முடிவு.” என்றான் மனு.
“உன்னோட, மாறனோட ஒரே ஒரு நாள் டிரெஸ் வாங்க வந்தான்..அதுக்குள்ள அவ்வளவு கிளோஸ் ஆயிட்டீங்களா நீங்க மூணு பேரும்? என்று நம்பமுடியாமல் கேட்டாள் ஸ்மிரிதி.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
“அவன் பிரண்ட்ஸ் யாரையும் நான் கல்யாணத்துலே பார்க்கலே..ரிசெப்ஷன்லே மாறனோடதான் டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தான்..அவன் ஸ்கூல் பிரண்ட்ஸை இன்வைட் செய்யலேயா?”
“அவனோட பிரண்ட்ஸ் யாரும் வீட்டுக்கு வந்து நானும் பார்த்ததில்லை..அவங்களோட ஃபோன்லே சாட் செய்வான்..பேசுவான்..அவனோட கிளோஸ் பிரண்ட் யாருன்னு எனக்குத் தெரியாது…அவனை எங்கையும் வெளியே அனுப்பறது இல்லை..எல்லாம் கிளாஸ்ஸும் வீட்லையே நடக்குது..டைக்வோண்டோ ஸர் வீட்டுக்கு வராரு..ஸுவிம்மிங், டென்னிஸ், செஸ் கோச் மூணு பேரும் வீட்டுக்குதான் வர்றாங்க..அவன் வீட்டை விட்டு வெளியே போகறது ஸ்கூலுக்கு மட்டும்தான்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன் அப்படி அவனை வீட்லேயே வைச்சிருக்கீங்க?”
“கீதிகாவுக்கு அவனை எப்பவும் அவங்க கண் பார்வைலே வைச்சிருக்கணும்..அவங்க வீட்டுக்குக்கூட அவனைத் தனியா அனுப்ப மாட்டாங்க..அதான் நம்ம வீட்டுக்கும் அனுப்ப மாட்டாங்கன்னு சொன்னேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“உனக்கேத் தெரியும் அவன் வயசுலே நல்லது, கெட்டது இரண்டு அனுபவமும் தேவைன்னு..அது நாலு சுவத்துக்கு நடுவுலே கிடைக்காது..நாலு மனுஷங்க நடுவுலேதான் கிடைக்கும்.. இந்த மாதிரி அவனைக் கண்ணுக்கு முன்னாடி வைச்சுகிட்டே இருந்தா அவனோட வாழ்க்கையும் சித்தார்த் கௌதம புத்தரான கதை மாதிரி ஆகிடும்.” என்று சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அப்படிதான் மனிஷின் வாழ்க்கை மொத்தமாக மாற போகிறதென்று.
மனிஷின் வளர்ப்பைப் பற்றி மனுவின் விமர்சனம் ஸ்மிரிதிக்கு மாறனை நினைவுப்படுத்தியது.
“நேத்து நைட் மாறன் வாஸ் எ ரெவலெஷன். (maran was a revelation)” என்றாள்.
“அவனோட அந்தப் பரிமாணம் உனக்குமட்டுமில்லை எங்களுக்கும்தான்…நீ அவன்கிட்ட அதைப் பற்றி எதுவும் பேசாத..அப்பா, அம்மா பார்த்துப்பாங்க.” என்று எச்சரிக்கை செய்தான் மனு.
அவன் பதிலைக் கேட்ட ஸ்மிரிதிக்கு “அப்பா, அம்மா பார்த்துப்பாங்கன்னு” சொன்னது தப்பாகப்படவில்லை ஆனால் அவள் அதைப் பற்றி மாறனிடம் பேசக்கூடாது என்று சொன்னது தப்பாகப்பட்டது.  அதனால்,
“ஏன் பேசக்கூடாது?” என்று ஸ்மிரிதி கேட்க,
எல்லா விஷயத்திலேயும் ஸ்மிரிதி தலையிடுவாள் என்று மாறன் அவளைப் பற்றி விமர்சனம் செய்ததை அவளிடம் சொல்ல விரும்பாமல்,”அவனைப் பற்றி நீ பேசினா உன்னைப் பற்றி அவன் பேசுவான்..உன்னைக் கபீரோட ஹோட்டல் பார்லே அவனும் பார்த்திருக்கான்.” என்றான்.
அதற்கு ஸ்மிரிதியிடமிருந்து பதிலில்லை. ”நேத்து நைட் உன் தர்மாஸைப் பார்த்து எதுக்கு  ஸர்ப்ரைஸ் ஆன? யாருக்கு எது, எவ்வளவுன்னு உனக்கே தெரியலேயா?” என்று பேச்சை மாற்றினான்.
அவன் மாறன் பற்றி பேச விரும்பவில்லை என்று உணர்ந்த ஸ்மிரிதியும்,
“நான் வெறும் மிக்ஸ் செய்துதான் கொடுத்தேன்..அதை தர்மாஸ்லே கபீர் ஊத்த போறான்னு எனக்கு ஐடியாவே இல்லை..எனக்கும் ஒரு தர்மாஸ் இருக்குண்ணு தெரிஞ்சவுடனே கொஞ்சம் கன்ஃயுஸ் ஆயிட்டேன்.” என்றாள்.
அவளுக்குப் பழக்கமில்லாத போது கபீரின் பாரில் அவள் என்ன செய்கிறாள் என்ற குழப்பத்தைப் போக்க,
“அப்ப நீ கபீரோட பாருக்கு எதுக்கு போற? அங்க என்ன செய்துகிட்டிருக்க?” என்று கேட்டான் மனு.
அவன் நேரடியாக கேட்ட பின் அவளும் நேரடியாக பதில் சொன்னாள்.
“கெட்ட பழக்கத்திலேர்ந்து வெளியே வர்றத்துக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழி..ஒரே சமயத்திலே ஒரே போலே சில பேர்  அந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சிருக்கலாம் ஆனா அதை ஒரே போலே, ஒரே வழிலே எல்லாராலேயும் விட்டொழிக்க முடியாது..ஒரு தடவை அதுலேர்ந்து முழுசா வெளியே வந்திட்டாலும் ஒவ்வொரு முறையும் அது உள்ளே இழுத்துக்க பார்க்கும்..அந்த சபலத்தை சுலபத்திலே ஜெயிக்க முடியாது..
அந்தப் பழக்கத்துனாலே நான் முழுசா தொலைஞ்சு போகறத்துக்கு முன்னாடி என்னையே நானே தேடி கண்டுபிடிச்சுகிட்டேன்..என் குணத்தை வைச்சு நானே எனக்குன்னு ஒரு வழி அமைச்சுகிட்டேன்..என்னோட கெட்ட பழக்கத்தை என்கிட்டேயிருந்து நான் தள்ளிவைக்க ஒரே வழி அதை என் பக்கத்திலேயே , என் பார்வைலையே வைச்சுகிட்டு அது மேலே சபலப்படாம, ஆசைப்படாம இருக்கறதுதான்னு புரிஞ்சுகிட்டேன்..
ஏன் அந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சேன், ஏன் அந்தப் பழக்கத்தை விட்டேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. ஆனா எப்படி ஆரம்பிச்சேன், எப்படி அதுகிட்டேயிருந்து என்னை விடுவிச்சுக்கறேன்னு என்னை சுற்றி இருக்கறவங்களுக்குத் தெரியும்.. என்னை அடிமைப்படுத்த நினைக்கற அதோட ஆளுமைலேர்ந்து நான் விடுபட என்னைச் சுற்றி இருக்கறவங்களும் உதவி செய்யறாங்க மனு..அவங்களோட உதவியில்லாம என்னாலே அதை ஜெயிக்க முடியாது..
அதனாலே எனக்குத் தெரிஞ்சவங்க என்னை காக்டெயில் பார்ட்டிக்கு கூப்பிட்டா நான் கண்டிப்பா போவேன்..அவங்க குடிக்கறதைப் பக்கத்திலேயிருந்து பார்த்துகிட்டு இருப்பேன்..ரொம்ப தெரிஞ்சவங்கன்னா என் கையாலே கலந்து கொடுப்பேன்….கபீர் ஹோட்டல்லே பார்டென்டிங் (bartending), மெஹக்கிற்கு ஸ்பெஷல் காக்டெயில்.. இரண்டும் அவங்களுக்காக நான் செய்யற ஸ்பெஷல் செய்கை இல்லை எனக்காக என் பிரண்ட்ஸ் செய்யற ஸ்பெஷல் உதவி.” என்றாள் ஸ்மிரிதி.
அவளே சுயமாக, ஆழமாக யோசித்து அவளின் சோதனைகளை கடந்து வர ஒரு வலுவான வழியை, திடமான தீர்வைக் கண்டுபிடித்து அதை விடாமுயற்சியுடன் ஒவ்வொருமுறையும் கடைபிடித்து அதில் வெற்றியும் கண்டு வரும் அவன் மனைவியின் விளக்கத்தைக் கேட்ட வக்கீல் வாயிருந்தும், வார்த்தைகள் அறிந்தும் ஊமையாகிப் போனான். இனி ஸ்மிரிதி சந்திக்க போகும் சவால்களுக்கும், சோதனைகளுக்கும் அவனின் துணை அவளிற்கு இருக்கும் என்று அவனது இடது கையால் அவள் வலது கையை அழுந்த பற்றி அதை உணர்த்தினான் மனு.
அவளை மனுவிற்குப் புரிய வைக்க எடுத்த முயற்சிக்கு அவனிடமிருந்து அமைதியான, அழுத்தமான ஆறுதல் பதிலாக கிடைக்க, அவர்களின் அந்த உரையாடலுக்குக் காரணமான மாறனின் விஷயத்தில் மனு விரும்பியது போல் ஊமையாக இருக்க உறுதி பூண்டாள் ஸ்மிரிதி. ஆனால் அவள் ஊமையாக இருக்க எடுத்த உறுதி உடைந்து உடைப்பெடுக்க போகிறது என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
அடுத்து வந்த வாரம் முழுவதும் அந்த வீட்டு உறுப்பினர்களுக்கு ஸ்மிரிதியின் சமையலை சுவைக்க வாய்ப்பு கிடைத்தது.
தினமும் யார் உதவியும் இல்லாமல் காலை  டிஃபன், லன்ச் இரண்டும் தயார் செய்தாள் ஸ்மிரிதி. அதே சமயம் இரவு உணவு தயாரிப்பின் போது நாதன், மாறன், மனு மூவரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினாள்.  காலை, மதியம் இருவேளை அவள் மட்டும் தனியாக எல்லாவற்றையும் செய்து முடித்ததைப் பார்த்து வியந்து போன சிவகாமியிடம்,
“ஸ்கூல் லீவுக்கு நாங்க எல்லாரும் பியாஸ் போவோம் ஆன்ட்டி.. அங்கே லங்கர்லே (langar) சமைக்க, பாத்திரம் கழுவ, பெருக்கி, துடைக்க, பிரசாதம் ஸர்வ் செய்யண்ணு எல்லா வேலையையும் நாங்க அஞ்சு பேரும் பழகிகிட்டோம்..லங்கர்லே பிரசாத் சாப்பிட நாள் பூரா ஆளுங்க வந்துகிட்டு இருப்பாங்க ஏதாவது வேலை இருந்துகிட்டேயிருக்கும்.” என்று அவள் பதின்பருவ வாழ்க்கைப் பாடப் புத்தக்கத்தின் சில பக்கங்களை அவள் மாமியருடன் பகிர்ந்துகொண்டாள் ஸ்மிரிதி.
அந்த வாரத்தில் வீட்டின் தோற்றத்திலும் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்தனர் மாமியார், மருமகள் இருவரும்.  காலம் காலமாக ஒரே இடத்தில் இருந்து வந்த சில பொருட்களைத் தில்லை நாதனின் உதவியுடன் இடம் மாற்றி வைத்து வீட்டின் அமைப்பில் புதுமையை ஏற்படுத்தினர்.  ஸ்பனாவின் கல்யாணத்தில் கொடுத்த, அதுவரை பிரிக்காமல் வைத்திருந்த கிஃப்ட் பாக்கைப் பிரித்து வரவேற்பறையை ஒரே நிறத்தில், டிஸைனில் இருந்த கர்டன், குஷன், திவான், சோபா உறையினால் அலங்கரித்தனர். ஸ்மிரிதியின் சுய உதவி குழுவின் தயாரிப்பைப் பார்த்து பிரமித்து போன சிவகாமி,
“ஸ்மிரிதி, இது நல்ல கிஃப்ட் ஐட்டம்..வெறும் குஷன் கவர், திவான் செட்டுன்னு தனி தனியா கிடைக்குமா?” என்று விசாரித்தார்.
“இப்ப எதுவுமே இல்லை ஆன் ட்டி..எல்லாம் தீ விபத்துலே நாசமாயிடுச்சு..அடுத்த வாரம் உதய்பூர் போவேன்..யாராவது வீட்லே வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தா உங்களுக்குன்னு ஒரு செட் ஆர்டர் செய்யறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஐயோ..அப்ப நாசமான துணிக்கு யார் நஷ்ட ஈடு கொடுப்பாங்க? இன்ஷுயர் செய்திருந்தீங்களா?”
“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி..போனது போனதுதான்..பாங்க்லே எங்ககிட்ட இருந்த பணத்தை எல்லாருக்கும் பிரிச்சு கொடுக்க சொல்லிட்டேன்..இனிதான் சின்னதா ஃபாக்ட் ரி ஆரம்பிக்கணும்..என் கல்யாணத்துக்கு பீஜி வந்திருந்தபோது அதுக்கான பேப்பர்ஸ்யெல்லாம் எடுத்துகிட்டு வந்தாங்க..அடுத்த வாரம் தல்ஜித் ஜலந்தர்லேர்ந்து நேரா அங்கே வந்திடுவான்..நானும், அவனும் அந்த ஊர்லே இருக்கறவங்களோட பேசி மேலே செய்ய வேண்டியதை செய்யணும்.” என்று சந்தோஷமில்லாமல் வெறும் செய்தி வாசித்தாள் ஸ்மிரிதி.
“நல்லவேளை பீஜியாலே அவங்களுக்கு ஒரு வழி கிடைச்சிடுச்சு.” என்று சந்தோஷமடைந்தார் சிவகாமி.
“அவங்களும் அப்படி நினைக்கணும் ஆன்ட்டி..எல்லாருக்கும் எல்லாம் ஒரே மாதிரி தெரியாது.”
“ஏன் இப்படி பேசற?ஃபாக்டரி ஆரம்பிச்சா அவங்களுக்குதானே நல்லது நடக்க போகுது.”
“அந்த ஊர்லே இரண்டு வருஷம் போலே பழகியிருக்கேன், சில பேரோட வீட்லே  தங்கியிருக்கேன்..அவங்களுக்குள்ள ஒத்துமை, ஒத்துழைப்பு இல்லாததுனாலதான் பிரச்சனைகள் ஏற்படுது.இப்ப இந்த மாதிரி விஷயத்துக்கும் அதே போலே தான் இருப்பாங்கன்னு நினைக்கறேன்.”
“அப்ப அவங்க ஃபாக்ட் ரி வேணாம்னு சொன்னா என்ன செய்வ?”
“அவங்க பக்கத்து ஊர்லே ஃபாக்டரி திறப்பேன்..வேணாம்னு சொல்றவங்களை வற்புறுத்தக்கூடாது..அந்த சூழ் நிலைலே எவ்வளவு நல்லபடியா செய்தாலும் அதிருப்திதான் அதிகமாகும்.”
“இவ்வளவு வருஷம் உன்கூடவே இருந்தவங்களை எப்படி டக்குன்னு உன்னாலே விட முடியும்?”
“நான் விட மாட்டேன்..அதனாலதான் அவங்க பக்கத்து ஊர்லே ஃபாக்டரி திறப்பேன்னு சொல்றேன்..அதே சமயம் அவங்க என்னை வேணாம்னு சொன்ன அப்பறம் அங்கே டயம் வேஸ்ட் செய்யக்கூடாது..யாரையும் திருப்திபடுத்தறது, சந்தோஷப்படுத்தறது என் குறிகோள் இல்லை..பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கறதுதான் என் குறிகோள்..அதை ஒழுங்கா செய்தா திருப்தியும், சந்தோஷமும் தானா ஏற்படும்….யாருக்குப் பிரச்சனைன்னு பார்க்காம என்ன பிரச்சனைன்னு பார்க்க கத்துக்கணும்.” என்று  தெள்ளத் தெளிவாக பேசி மாமியாரை ஆட்கொண்டாள் அவர் மருமகள்.
அந்த வாரத்தின் முடிவில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி ஸ்மிரிதியின் சமையலைப் புகழந்தபோது மாறன் மட்டும் ஒரு குறையை சுட்டிக் காட்டினான்.
“நீ.நல்லா சமைக்கற ஆனா ரோட்டி, பராண்ட்டா, கோஃப்தா, பன்னீர் சப்ஜி, தால்ன்னு எல்லாம் நார்த் இண்டியன் டிஷஸ்தான்….முதல்முறையா இந்த வீட்லே சாம்பார், கார குழம்பைக்  காணவில்லை….திரேனுக்கூட அதெல்லாம் செய்ய தெரியும்..உனக்குத் தெரியாதா?” என்று மாறன் கேட்க,
“நான் சமைக்க கத்துகிட்டது பியாஸ்லே. எங்க  எல்லாருக்கும் லங்கர்ல (langar) டியூட்டி போட்டிடுவாங்க பீஜி..சில நாள் காய் நறுக்கணும், சில நாள் ரோட்டிக்கு மாவு பிசையணும், சில நாள் ரோட்டி செய்யணும்..சில நாள் பாத்திரம் கழுவணும்..காலைலே ஆரம்பிச்சா நாள் பூரா சமையல் நடந்துகிட்டே இருக்கும்..அதனாலே ஏதாவது வேலை இருந்துகிட்டே இருக்கும்..அங்கே ஆண், பெண் பேதமெல்லாம் கிடையாது..எல்லாரும் எல்லா சேவையும் செய்யணும்..
நாங்க அஞ்சு பேரும் அங்கதான் சமைக்க கத்துகிட்டோம்..எவ்வளவு ஆலு கொடுத்தாலும் சுசித் ரா பொறுமையா தோலி உரிச்சுகிட்டிருப்பா..ஒரு நாளைக்கு எத்தனை முறை வேணும்னாலும் லங்கரைச் சுத்தம் செய்வான் கபீர்…எத்தனை பாத்திரம் போட்டாலும் டக்டக்குனு  கழுவிடுவான் தல்ஜித்…நானும், மெஹக்கும் போட்டி போட்டுகிட்டு கையாலேயே  ரோட்டி செய்வோம்..
லங்கர்லே எல்லாமே பெரிய ஸ்கேல்..இந்த மாதிரி சின்ன அளவுலே சமைக்க கத்துகிட்டது  பீஜி வீட்லேதான்..சில நாள் எங்களோட சமையல்தான் அவங்க வீட்லே..மிஸ்ஸி ரோட்டி (missi roti) எக்ஸ்பர்ட் மெஹக்…எனக்கும், சுசித்ராவுக்கும் இன்னைவரைக்கும் அது சரி செய்ய வராது..கபீரும், தல்ஜித்தும் சூப்பரா மா கி தால் (maa ki dhal) செய்வாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“ஆமாம்..அந்த மிஸ்ஸிக்கு சாதா ரோட்டியா செய்ய வரும் மிஸ்ஸி ரோட்டிதான் சரியா வரும்.” என்று மனதில் எண்ணிய மாறன்,”நீங்கெல்லாம் லீவுக்கு பாரிஸ் போவீங்கன்னு நினைச்சேன்..பியாஸுக்கு போனீங்களா?” என்று கிண்டலாக கேட்டான்.
“நான் வெளி நாடு போனதில்லை..அப்பா போவாரு..கீதிகாவையும், மனிஷையும் அழைச்சுகிட்டு போயிருக்காரு…
நான் எங்களோட கிரூப்லே சேரவரைக்கும் என் பிரண்ட்ஸ் எல்லாரும் லீவுக்கு வெளி நாடு போயிகிட்டிருந்தாங்க..கபீர் வீட்லே ஹோட்டல் பிஸ்னஸ்லே இருக்கறதுனாலே அவன் அடிக்கடி போவான்..சுசித் ராவும் அவ குடும்பத்தோட ஒவ்வொரு வருஷமும் வெளி நாடு போவா..மெஹக்கோட அம்மாவுக்கு வெளி நாட்டு மோகம் ஜாஸ்தி அதனாலே அவ போகாத ஊரே கிடையாது..தல்ஜித்தோட குடும்பத்திலே நிறைய பேர் வெளி நாடுலே இருக்காங்க அவனும் அடிக்கடி போவான்..உள்ளூர்லே நாங்க எல்லாரும் டர்ன் போட்டுகிட்டு மும்பை, பெங்களூர், கபீரோட ரிஸார்ட்டுன்னு சுத்துவோம் அதெல்லாம் முடிச்சிட்டுதான் எல்லாரும் பியாஸுக்கு போவோம்.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி சொன்னதை உள்வாங்கி கொண்ட மாறன்,“அப்ப நீ ஒன்லி ரோட்டிவாலியா?..இட்லி, தோசைவாலி இல்லையா?” என்று மறுபடியும் ஆரம்பிக்க,
“இதுவரை முயற்சி செய்து பார்க்கலே..அம்மாவோடவே இட்லியும், தோசையும் என் மெனுலேர்ந்து போயிடுச்சு..எனக்கு சாப்பிடணும்னு தோணிச்சுன்னா கபீர்கிட்ட சொல்லுவேன் அவன் என்னை ரெஸ்டாரண்ட் அழைச்சுகிட்டு போவான் இல்லை எங்க வீட்டுக்கு பார்சல் அனுப்பிடுவான்..கொஞ்ச நாள் முன்னாடி என்னை ஜன்பத் சரவண பவன் கூட்டிக்கிட்டு போனான் மனு ..அன்னைக்கு செமையா சாப்பிட்டேன்..கபீர் என்கிட்ட பணம் வாங்க மாட்டான் ஆனா இவன் என்கிட்டேயிருந்து நான் சாப்பிட்டதுக்குப் பணம் எடுத்துகிட்டான்.” என்று மனு மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் ஸ்மிரிதி. 
உடனே,
“ஆமாம் பில்லுலே இவ பங்கை கேட்டேன்..நான் யாருக்கும் ஃப்ரீயா சாப்பாடு போடறதில்லை..வக்கீலுக்கு வரவு, செலவு கணக்கு முக்கியம் மிஸஸ் மனு.” என்றான் மனு.
“நீ வசூல் மன்னன்னு  தெரியும் மிஸ்டர் மனு வளவன்..காஷ் அண்ட் கைண்ட்.” என்று சொல்லி கணவனைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினாள் மனைவி. அவர்கள் இருவருக்குமேயான இனிப்பான நினைவுகளின் நடுவில் புகுந்த சிவகாமி,
“நீ சொல்ற மாதிரி எல்லாரும் எல்லா வேலையும் செய்யணும்.. உனக்கு நம்ம ஊர் சமையலை நான் கத்து தரேன்..அதுக்கு முன்னாடி இவனுங்க இரண்டு பேருக்கும் கொஞ்சமாவது சமைக்க கத்து கொடுக்கணும்.” என்று அவர் செய்த தவறை திருத்த திட்டமிட்டார் சிவகாமி.
அதைக் கேட்டு,“அம்மா.” என்று மகன்கள் இருவரும் அலற,
அதற்கு சிவகாமி பதில் சொல்லுமுன்,”இவனுங்களுக்கு நீயே சமைக்க கத்து கொடு மா..இந்த விஷயத்திலே சிவகாமியை நம்ப முடியாது.. அவளோட தாய்ப்பாசத்தைக் தட்டி எழுப்பி அவளையே பாயசம் செய்ய வைப்பாங்கனுங்க..மூணு பேரும் ரொம்ப பா(மோ)சமானவங்க.” என்று மகன்களையும், மனைவியையும் கைவிட்டு விட்டு மருமகளுடன் கைகோர்த்து கொண்டார் மாமனார்.
தில்லை நாதனின் கூற்றில் கோபமடைந்த சிவகாமி,“வேணாம் டா..நம்ம வீட்லே, என்கிட்ட நீங்க  சமைக்க கத்துக்க வேணாம்.. உங்களையும் பீஜிகிட்டயோ இல்லை நம்ம வீட்டு பக்கத்துலே இருக்கற குருத்வாராக்கோ அனுப்பிடறேன்.” என்றார்  சிவகாமி.
“ஒரு வாரமா எனக்கு ஹெல்ப்பரா இருக்காங்க அதனாலே நானே இவங்க இரண்டு பேருக்கும் சமைக்க கத்து கொடுக்கறேன்..குருத்வாராவெல்லாம் வேணாம்..குக்கர், தவ்வா (tawa) போதும்..  அவங்க சமைக்க கத்துகிட்ட அப்பறம் ஒரு ஸண்டே மனுடே இன்னொரு ஸண்டே மாறன் டே.” என்று அட்டவணைப் போட்டாள் ஸ்மிரிதி.
“நம்ம இரண்டு பேருக்கும் ஸண்டே ஹாலி டே. ஒகே.” என்று மருமகளோடு கூட்டு சேர்ந்து கொண்டார் மாமியார்.

Advertisement