Advertisement

ஸ்மிரிதியின் மனு – 37
“பிரண்ட்..சரியா சொன்னீங்க..இந்த விஷயத்திலே நீங்களும், நானும் ஒரே கட்சி..ஒவ்வொரு விஷயத்திலும் நாம ஒரே மாதிரி இருக்க முடியாது..விஷயத்தைப் பொறுத்து அதோட வீர்யத்தைப் பொறுத்து நான் என் திட்டத்தைச் செயல்படுத்துவேன்..நல்லது, கெட்டது, கஷ்டம், நஷ்டம், நண்பன், எதிரி, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, மாமியார், மாமனார் இந்த பாரபட்சமெல்லாம் எனக்கு தெரியாது..எனக்கு எப்பவும் பிரச்சனைதான் பிரதானம் அதனாலே அதுக்கு என்னோட வழிலே தீர்வு கொடுப்பேன்..என் வழி எப்பவும் ஒரே வழி.. ஸ்மிரிதியின் அறவழி.” என்று அளுமையுடன் உரையாற்றினாள் ஸ்மிரிதி.
“அறவழி எல்லாம் நாம மறந்து போய் யுகங்களாச்சு..அந்த வழிலே நீ போனினா நீயே போகற இடத்தை மறந்து போயிடுவ..இல்லை அந்த இடத்துக்கு போகறத்துக்கு எந்தப் பாதைலேயும் பயணம் செய்வ.” என்றார் நாதன்.
“இல்லை பா..ஸ்மிரிதி பாதை மாற மாட்டா..அவளாலே மாறமுடியாது..அவ நினைக்கற மாதிரி அவளுக்கு அரசியல் வாழ்க்கை அவளோட அற வழிலே அமையலைனா அவ வேற வழிலே அடைய மாட்டா….அவளுக்கு போய் சேர வேண்டிய இடம் மட்டுமில்லை போற வழியும் முக்கியம்..
நீங்க சொல்ற மாதிரி இப்பெல்லாம் பொது சேவைங்கற பெயர்லே நிறைய இடத்திலே தன்னலச் சேவைதான் நடக்குது.. அதை அவளோட அறவழிலே மாற்றணும்னு நினைக்கறா ஸ்மிரிதி….நீங்க சொல்ற அறவழியை இப்ப யாராலேயும் கடைப்பிடிக்க முடியாது பா..நீங்க சொல்ற அறவழியும் அவளோட அறவழியும் வேற வேற பா..
இந்தக் காலாத்திலே ஒரு இடத்துக்கு சீக்கிரமாவும், சுலபமாவும் போக மக்கள் உபயோகிக்கற புறவழி மாதிரிதான் அவளோட அறவழியும்…ஊருக்குள்ள இருக்கற தடைகளை, இடர்களை கடக்க எப்படி புறவழி அமைச்சுகிட்டோமோ அதேபோல அவளோட சேவை மக்களுக்கு போய் சேர்றத்துக்கு அவளாவே ஒரு அறவழியை அமைச்சுகிட்டிருக்கா..
 கலெக்டரா, சமூக சேவகியாகியா, வக்கீலா நாம எல்லாரும் மக்கள் சேவைலேதான் இருந்திருக்கோம், இருக்கோம்..இனி நம்ம வீட்டு அறவழி அரசிக்கு அவளோட மக்கள் சேவை முயற்சிலே துணையா இருப்போம்.” என்றான் ஸ்மிரிதியின் மனு.
ஸ்மிரிதியைப் பற்றியும் அவள் அறவழியைப் பற்றியும் விளக்கிய  மனுவை அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்கினர்.  ஆனால் அந்த ஆச்சரியம் அவன் மனைவியிடம் துளிக்கூட இல்லை. அவளுடையக் காலை டிஃபனை நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தாள் மனுவின் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியைப் பற்றி மனு பேசியதைக் கேட்டவுடன் அன்று காலையில் பிரேமாவிற்கு ஏற்பட்டிருந்த  சந்தேகம் சுவடே இல்லாமல் மறைந்து போனது.  அவர் வாழ்க்கையில் அவருக்கும், கார்மேகத்திற்கும் ஏற்பட்ட ஏமாற்றம் அவர் மகளிற்கும் அவளைப் புரிந்து கொண்ட அவளுடையக் கணவனுக்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்று உணர்ந்தார்.   மனுவும், ஸ்மிரிதியும் அவர்கள் வாழ்க்கையின் சுகதுக்கங்களைச் சமாளித்து கொள்வார்கள் என்று எண்ணி மன நிம்மதி அடைந்தார்.
“அப்பா கலெக்டர், அம்மா சமூக சேவகி, நீ வக்கீல்..அப்ப நான் யாரு?” என்று மாறன் கேட்க,
“நீதான் டா ரொம்ப முக்கியமான ஆளு..குடிமக்கள்..அவங்க இல்லாம எந்த ஆட்சியும் நிலைக்காது..எந்த சேவையும் நடக்காது.” என்றான் மனு வளவன்.
“நான் என் பசங்களுக்கு சோழன், பாண்டியன் பெயரை சூட்டி  ராஜா போல வளர்தேன்.. அவங்க அப்பாவைப் போல ஆட்சி செய்வாங்கன்னு நினைச்சா இப்ப ஒருத்தன் மக்களுக்காக நீதி கேட்கற வேலைலே இருக்கான்..இன்னொருத்தன் சாதாரண குடிமகனா மாறிட்டான்..என் மருமகள் மேலேதான் இனி நம்பிக்கை வைக்கணும்.” என்று அவர் மகன்கள் மீது ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிக்காட்டினார் சிவகாமி.
“உங்க நம்பிக்கை வீணாகாது..உங்க மருமக ஆளப் பிறந்தவ..அதுக்கு முதல்கட்டமாதான் மன்னன் மனு வளவனைக் கல்யாணம் செய்துகிட்டிருக்கா.” என்று அவன் சண்டி ராணியை சீண்டினான் சாரதி. 
அவனை ஏமாற்றாமல்,
“மனு..உனக்கு கொழுப்புதான்..நீ சாதாரண வக்கீல்..நான்தான் உன்னை ஆள போகற சக்தி.” என்றாள் சண்டி ராணி அவள் சாரதியிடம்.
“மிஸஸ் மனு..அந்த சக்திக்கு பின்னாடி இருக்க போற மாபெரும் சக்தி நான்தான்…நீ தேவை, தேவையில்லாம இழுத்துகிட்டு வந்த, வர போற எல்லா வம்பையும்  தீர்த்து வைக்கறத்துக்கு உங்கப்பா பவர் பிரோக்கருக்கேத் தைரியமில்லை..அதனாலதான் மறுப்பு சொல்லாம  அவரோட பொண்ணை இந்த சாதாரண வக்கீலுக்கு தாரைவார்த்து கொடுத்திட்டாரு..அண்டர்ஸ்டூட்.”
“எங்கப்பாவை இதுலே இழுக்காத..அவரு தைரியத்தை பற்றி எதுக்கு பேசற..அப்பறம் என்னோட தைரியத்தை உனக்குத் தெரியப்படுத்த நான் உங்கப்பாவை இதுலே அழைச்சுகிட்டு வருவேன்.” என்றாள் ஸ்மிரிதி.
இதென்னடா என்று அனைவரும் நாதனைப் பார்க்க அவரோ ஸ்மிரிதியைப் பரிதாபமாகப் பார்த்து கொண்டிருந்தார்.
“உன் தைரியத்தைப் பற்றி எங்கப்பாக்கு என்ன தெரியும்? என்று கேள்வி கேட்டான் மாறன்.
“அங்கிள்..உங்க இரண்டு பசங்களைவிட நாந்தான் தைரியசாலின்னு நீங்க சொன்னீங்களா? இல்லையா?” என்று ஸ்மிரிதி கேட்க.
“எப்ப மா?” என்று நாதன் சத்தமாக யோசிக்க,
“நீங்க லோதி ரோட்லே இருக்கும்போது உங்க வீட்டுகுள்ள ஒருமுறை பாம்பு வந்திச்சே.. இவனுங்க இரண்டு பேரும் வெளிய வர பயந்துகிட்டு அவங்க ரூமுக்குள்ளையே இருந்தாங்களே..அப்ப நாந்தான  தைரியமா உங்களுக்கும், செக்யுரிட்டி அங்கிளுக்கும் பாம்பு எங்க இருக்குண்ணு காட்டி கொடுத்தேன்.” என்று கடந்து போன காட்சிகளைக் கண் எதிரே நடப்பது போல் விவரித்தாள் ஸ்மிரிதி.
ஆஹா..பத்து வயதில் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் கீழே ஊர்ந்து சென்ற பாம்பை, அது மறைந்திருந்த இடத்தை சோபாவின் மேல் நின்று கொண்டு  சுட்டிக் காட்டிய  செயலை  பதினைந்து வருடம் கழித்து வீர செயல் போல் மிகைப்படுத்தி பேசிய மருமகளைப் பார்த்து,”நீ பக்கா அரசியல்வாதி ராஜாத்தி..எல்லாத்தையும் உனக்கு ஏற்ற மாதிரி பொய் சேர்க்காம உண்மையையே வேற விதமா சொல்லி உலகத்துக்கு எடுத்துகாட்டா இருப்ப.” என்று வாழ்த்தினர்.
“அதுதான் ஸ்மிரிதியோட அறவழி அங்கிள்….சில நேரத்திலே உண்மைக்கூட பொய்யாத் தெரியும்..பொய்க்கூட உண்மையா மாறிடும்..அதனாலே உண்மையை எந்த நேரத்தில எப்படி சொல்லணுமோ அப்படிதான் சொல்லணும..இப்ப நீங்க உண்மையைச் சொல்லுங்க..அன்னைக்கு அங்க என்னைத் தவிர வேற யாரு தைரிமா இருந்தா?” என்று ஸ்மிரிதி உண்மையாகக் கேட்க.
“யாருமில்ல மா..நீ மட்டும் தான் மா..இவனுங்க இரண்டு பேரும் பாம்புக்கு பயந்துகிட்டு அன்னைக்கு நைட் சாப்பிடக்கூட இல்லை மா.” என்று ஒரு உண்மையோடு இன்னொரு உண்மையையும் சேர்த்து உண்மை விளம்பியானார் நாதன்.
“அப்பா..அதெல்லாம் இப்ப யாரு பா உங்ககிட்ட கேட்டா?” என்று எகிறனான் மாறன்.
“அங்கிள்….ஒரு ஆள் உண்மையைப் பேசினவுடனையே உங்க மனசுலே அன்னைக்கு நடந்த அத்தனை நிகழ்வுகளும் கலப்படமே இல்லாம உண்மையா வெளியே வருது பாருங்க..இது ஒரு தொற்று நோய்..  இந்த வீட்டிலே உங்களுக்கு முதல்லே கொடுத்திட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அம்மா, தைரிய லக்ஷ்மி..நானும் உன்னைப் போல உண்மையா இருக்கறதுனாலதான் எந்தக் கறை வேட்டியோடக் கறையும் என் மேலே படமா, அவங்களாலே எந்த வியாதியும் வராம ஒய்வு பெற்ற அதிகாரியா ஆரோக்கியத்தோட இருக்கேன்..
நீ நினைச்சாலும் சில பேருக்கு இந்த தொற்று வியாதியைக் கொடுக்க முடியாது மா..இயற்கையாவே இம்யுண்டு இல்லேன்னா செயற்கையா வெக்சினேஷன் செய்திருப்பாங்க..உன் நேரத்தை வீணாக்காத..வியாதி வர வேண்டியவங்களைத் அது தானவே வந்து தாக்கிடும்.” என்று அவரது அனுபவ அறிவை அவரது அறவழி மருமகளுடன் பகிர்ந்து கொண்டார் அந்த முன்னாள் அதிகாரி.
“அங்கிள்..இப்படி வந்து நில்லுங்க.” என்று டிஃபன் சாப்பிட்டு முடித்த நாதனை டேபிளுக்கு அருகே நிற்க வைத்து நைட் ஸுட்டிலிருந்த ஸ்மிரிதி அவரை நமஸ்கரித்தாள்.
“என்ன மா இது?” என்று அவர் பதட்டத்துடன் வினவ.
“இன்னிலேர்ந்து நீங்கதான் என் அறவழி ஆலோசகர்.” என்று அதிரகாரிக்கு புது பதவி கொடுத்தாள் அதிகாரமில்லாத அந்த அரசியல்வாதி.
“பிரேமா..உன் பொண்ணாடி இவ? உனக்கு என்ன பேசணும்னே தெரியாது..இவ ஒரே உண்மையையே வித விதமா பேசி ஆளை ஆட்கொள்றா..பொய்யா எதுவும் சொல்லாம ஒரே உண்மையை ஆளுக்கு  ஏற்ற மாதிரி உண்மையா சொல்லற இவளைப் போல ஆளுதான் நம்ம  நாட்டுக்குத் தேவை.” என்றார் ஸ்மிரிதியின் புது பிரண்ட்.
“தாங்க்ஸ் பிரண்ட்.” என்று டேபிளைச் சுற்றி சென்று அவள் மாமியாரை அணைத்து அவள் அன்பைக் காட்டினாள் ஸ்மிரிதி.
“நீ நினைக்கறது எல்லாம் நல்லவிதமா, உன் விருப்பம் போல நடக்கட்டும்.” என்று அவர் மருமகளை வாழ்த்தினார் அந்த மாமியார்.
கல்யாணமான மறு நாளே மனுவின் சண்டி ராணி, அந்த வீட்டின் மகாராணியாகி அந்த வீட்டு செல்வங்கள் இருவரையும் ஓரங்கட்டினாள்.
அன்று மதிய உணவை முடித்தவுடன் பிரேமாவுடன் தனிமையில் இருந்த போது,”அம்மா, என்ன யோசிச்சு வைச்சிருக்கீங்க?” என்று ஸ்மிரிதி கேட்க,
“எதைப் பற்றி ஸ்மிரிதி?” என்று புரியாமல் பிரேமாவும் கேட்க,
“ஜலந்தர் வர்றதைப் பற்றிதான்..கல்யாணத்துக்கு வரும்போது முடிவு செய்திருப்பீங்கன்னு நினைச்சேன்.”  என்று அவள் ஏமாற்றத்தை வெளியிட்டாள்.
“இன்னும் ஒண்ணும் யோசிக்கலே..உன் கல்யாணத்தைப் பற்றிதான் யோசிச்சுகிட்டிருந்தேன்.”
“அதுலே யோசிக்க என்ன இருந்திச்சு?”
“நிறைய ஸ்மிரிதி..உன் கல்யாணத்துக்குண்ணு அம்மா எதுவுமே செய்யலேயே ஸ்மிரிதி.” என்று வருத்தப்பட்டார் பிரேமா.
“ரொம்ப வருத்தமா இருந்தா ஒண்ணு செய்யுங்க..மூட்டை முடிச்சைக் கட்டிகிட்டு இங்கையே வந்திடுங்க..அதுபோதும் எனக்கு.”
“அது இப்போதைக்கு முடியாது ஸ்மிரிதி..பத்து வருஷத்துக்கு மேலே வேலைப் பார்த்த இடம்..முதல்லே நான் ரிஸைன் பண்றேன்னு தகவல் கொடுக்கணும்..அப்பறம் எனக்கு ரீபெலெஸ்மெண்ட் கண்டுபிடிக்க டயம் கொடுக்கணும்..புது ஆளுக்கு எல்லாம் பழக்கி விட்ட பிறகுதான் நான் வேலையை விடணும்.”
“என்ன மா இப்ப இப்படி சொல்றீங்க? அன்னைக்கு யோசிக்கறேன்னுதான் சொன்னீங்க..இவ்வளவு பெரிய யோசனைன்னு சொல்லவேயில்லை.”
“இப்பவும் அதேதான் சொல்றேன்..யோசிக்கறேன்..இன்னும் கொஞ்சம் டயம் கொடு.”
அப்போது அறைக்குள் நுழைந்த மனுவைப் பார்த்து,”ஏர்போர்ட் போகறத்துக்கு எனக்கு ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணிடு மனு..எதுக்கு உனக்கும், ஸ்மிரிதிக்கும் வீண் அலைச்சல்.” என்றார் பிரேமா.
“இல்லை அத்தை..நானே உங்களைக் கொண்டு விடறேன்..அதுக்கு அப்பறம் ஸ்மிரிதியோட ஒரு பெட்டியை எடுத்துகிட்டு வர அங்கேயிருந்தே அவ வீட்டுக்குப் போக முடிவு செய்திருகோம்.” என்று பிரேமாவிற்கு பதில் சொன்னவன் அவரருகே இருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“மஞ்சு நாத் எனக்கு ஃபோன் செய்தான்..அவன் ஏர்போர்ட்டுக்கு கிளம்பியாச்சு..உன் ஃபோன் எங்கே. அவன் நிறைய தடவை கால் செய்திருக்கான்.” 
“நம்ம ரூம்லே சார்ஜிலே இருக்கு.” 
அப்போது அவர்கள் இருவரும் எதிர்பார்க்காத கேள்வியைக் கேட்டார் பிரேமா.
“ஸ்மிரிதி, எனக்கு வால்வுலே பிளாக் இருக்கா?” என்று அவர் உடல் நிலையைப் பற்றி அவர் விசாரிக்க, ஸ்மிரிதிக்கு ஒரு நிமிஷம் திக் என்றானது.  அவருக்கு என்ன பதில் சொல்வதென்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போது அவர் கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னன் மனு.
“ஆமாம் அத்தை..அதுக்குதான் மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க.” என்று அவனுக்கும் அவர் உடல் நிலையைப் பற்றி தெரியும் என்று தெரியப்படுத்தினான்.
“ஸ்மிரிதிகிட்ட அதைப் பற்றி கேட்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்..நீ மஞ்சு நாத் பெயரை எடுத்தவுடனே நியாபகம் வந்திச்சு..அதான் உடனே கேட்டேன்.” என்றார் பிரேமா.
“யாரு மா சொன்னா உங்களுக்கு?” என்று கேட்ட ஸ்மிரிதிக்கு அவருக்கு எப்படி அவர் உடல் நிலையைப் பற்றி தெரிய வந்தது என்று புதிராக இருந்தது.
“எங்கே ஸ்கூல்லே இருக்கற டாக்டர்தான் சொன்னாரு..ஒரு ஸ்டுடண்டுக்கு உடம்பு சரியில்லைன்னு நாந்தான் இன்ஃபர்மரி அழைச்சுகிட்டு போனேன்..அவளை அங்கே அப்ஸர்வேஷன்லே வைச்சிருந்தாங்க.. அப்ப நானே அவர்கிட்ட என் மாத்திரையைக் காமிச்சு எதுக்குண்ணு கேட்டேன்..அவருதான் அது பிளாக் சரியாக கொடுக்கற மாத்திரைன்னு சொன்னாரு..
எந்த விதமான பிளாக்குண்ணு தெரிஞ்சுக்க என்னோட டெஸ்ட் ரிபோர்ட்ஸ் கேட்டாரு..என் பொண்ணோட அம்மாதான் டிரிட்மெண்ட் செய்யறாங்க அதனாலே அவங்க  ஆஸ்பத்திரிலேயே இருக்கதுண்ணு சொன்னேன்..இந்தமுறை செக்-அப் போகும் போது சுசித்ரா அம்மாகிட்ட சொல்லி அதை கொண்டு வந்து எங்க டாக்டர்கிட்ட காட்டணும்.” என்று சாதாரணமாக அவர் உடல் நிலையைப் பற்றி பேசினார் பிரேமா.  ஆனால் அதைக் கேட்டு கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு லேசாக பயம் வந்தது.  அவன் மனைவியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை வைத்து அவள் மன நிலையை யூகித்த கணவன்,
“ஆஸ்பத்திரிலே உங்களுக்கு சிகிச்சை கொடுக்கற டாக்டரையே உங்க ஸ்கூல்லே இருக்கற டாக்டரோட பேச  சொல்றேன்..உங்களுக்கு  என்ன மாத்திரை கொடுக்கறாங்க, ஏன் கொடுக்கறாங்க எல்லாம் அவர்கிட்ட விளக்கமா சொல்லிடுவாங்க…
நீங்க முதல்லே பெங்களூர்லேர்ந்து கிளம்பற வழியைப் பாருங்க..தல்ஜித், ஜலந்தர் எல்லாம் வேணாம்..இங்கே நம்ம வீட்லே எங்களோடயே இருக்கணும்.” என்று மாப்பிள்ளையாக அவன் திட்டத்தை அவன் மாமியாருக்கு ஆணையாக வெளியிட்டான்.
அதைக் கேட்டு கலவரமடைந்த பிரேமா,”அது சரிப்படாது மனு.” என்று மறுத்தார்.
“ஏன்? உங்க பிரண்ட்கூட ஒரே வீட்லே இருக்க சங்கடமா இருக்குமா? அப்ப நானும், ஸ்மிரிதியும் கீழ் போர்ஷன்லே தனியா போயிட்டோம்னா நீங்க எங்களோடவே வந்திடுவீங்களா?” என்று முதல் திட்டத்தைவிட அபாயகரமான திட்டத்தை அவன் தீட்ட, 
“என்ன பேசற நீ….தனியா போகறதெல்லாம் வேணாம்..உங்க எல்லாரோட இருக்க எனக்கு எதுவும் பிரச்சனையில்லை..ஆனா இந்த ஊரே எனக்கு ஒருவிதமான டென்ஷனை கொடுக்குது.” என்று வெளிப்படையாகப் பேசினார் பிரேமா.
“அது ஊர் இல்லை அத்தை..ஒரே ஒரு ஆள்..நீங்க அவர்கிட்ட நேத்திக்கு எப்படி நடந்துகிட்டீங்களோ அதே மாதிரி நடந்துகோங்க..உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்.” என்று வாக்குறுதி அளித்தான் மாப்பிள்ளை.
“யோசிக்கறேன் மனு.” என்று ஸ்மிரிதியிடம் சொன்ன அதே பதிலையே மனுவிடமும் சொன்னார்.  ஆனால் அவர் அறிந்திருக்கவில்லை அவர் விஷயத்தில் மனு ஒரு முடிவுக்கு வந்திருந்தானென்று. அவனின் வேண்டுகோளை, திட்டத்தை நிராகரித்தவர் அது தில்லை நாதனின் வேண்டுகோளாக இருந்தால் நிராகரிக்க தயங்குவார் என்று தெரிந்திருந்தததால் அவன் அப்பாவுடன் பிரேமாவின் உடல் நிலையையும் அவரின் எதிர்காலத்தைப் பற்றியும் பேச முடிவு செய்தான்.
ஏர்போர்ட்டை சென்றடைந்தவுடன் ஸ்மிரிதி, சுசித் ரா, பிரேமா மூவரும் ஒரு குழுவாக பேசிக் கொண்டிக்க அவர்களிடமிருந்து விலகி, தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர் மஞ்சு நாத்தும், மனுவும்.  சிறிது நேரம் கழித்து அவர்கள் உள்ளே செல்ல தயாரான போது பிரேமாவைக் கட்டிபிடித்த ஸ்மிரிதி,”சீக்கிரம் ஒரு முடிவு எடுங்க.” என்று வேண்டுகோள் விடுத்தாள்.
“சரி” என்று தலையசைத்தார் பிரேமா.  அப்போது அவரருகே சோர்வாக நின்றிருந்த சுசித்ராவைப் பார்த்து,”அம்மாவை பார்த்துக்க.” என்று ஸ்மிரிதி கோரிக்கை வைத்தாள்.
உடனே,”அடுத்த சில மாசம் நாமதான் அவளை ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்.” என்று சொல்லி சுசித்ரா கையிலிருந்த பேக்கை பிடுங்கி கொண்டு ஸ்மிரிதிக்குப் பை சொல்லிவிட்டு புறப்பட்டார் பிரேமா. 
பிரேமாவை ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு கார்மேகத்தின் வீட்டிற்கு சென்றனர் ஸ்மிரிதியும், மனுவும். காரில் அமைதியாக அமர்ந்திருந்த ஸ்மிரிதியிடம்,”ஆஸ்பத்திரிலேர்ந்து  ஸ்கூல்லே இருக்கற டாக்டரோட பேச ஏற்பாடு செய்யறேன்னு மஞ்சு நாத் சொல்லியிருக்கான்.” என்றான் மனு.
“திடீர்னு அம்மா அப்படி கேட்பாங்கன்னு நான் நினைக்கலே மனு.”
“நானும்தான்..அவங்க உடம்பைப் பற்றி நீ அவங்கிட்ட முதல்லே சொல்லியிருக்கணும்..ஸ்கூல் டாக்டர்கிட்ட சொல்லி வைக்கறதும் நல்லதுதான்..அவரு அங்கையே இருக்கறதுனாலே அத்தை ஹெல்த் மேலே அவரும் கவனம் செலுத்துவாரு..மஞ்சு நாத்கிட்ட அவன் நம்பரையும் அவரோட ஷேர் செய்ய சொல்லியிருக்கேன்.” என்றான் மனு.
“எதுக்கு அம்மாவை நம்ம வீட்டுக்குக் கூப்பிடற?  நான் அவங்களுக்காக ஏற்கனவே தல்ஜித்கிட்ட பேசி வைச்சிருக்கேன்னு உன்கிட்டையும் சொன்னேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அந்த ஏற்பாடு இப்ப சரிவராது..அவங்களை நம்ம கூடதான் வைச்சுக்கணும்..நம்ம வீட்லே இருப்பாங்க இல்லை நம்ம இரண்டு பேரும் எங்க இருப்போமோ அந்த வீட்லே நம்மகூடதான் இருப்பாங்க.”
“அதுக்கு அம்மா ஒத்துக்க மாட்டாங்க மனு..அப்பா இங்க இருக்கறதுனாலே அவங்க தில்லிக்கு வர மாட்டாங்க.”
“உங்க அப்பா இங்கையேதான் இருக்க போறாரு..நானும், நீயும் இங்கையேதான் இருக்க போறோம்..எத்தனை நாளைக்கு அவங்களாலே இந்த ஊருக்கு வராம இருக்க முடியும்..உங்கப்பாவோட அவங்களுக்கு இருந்த உறவு முடிஞ்சு போயிடுச்சு..புதுசா உறவு ஏற்படும் போது அவங்களோட
பழைய உறவை நினைச்சுகிட்டு நம்ம வாழ்க்கைலேர்ந்து அவங்க ஒதுங்கி போக நான் விடமாட்டேன்..என் குழந்தைக்கு உங்கப்பா தாத்தான்னா உங்கம்மாதான் பாட்டி..
அத்தையை எப்படியாவது தில்லி அழைச்சிட்டு வந்திடணும்..எல்லாத்தையும் சொல்லி அவங்களை எப்படி அழைச்சுகிட்டு வர்றதுன்னு எங்கப்பாகிட்ட கேட்க போறேன்.” என்று தில்லை நாதனிடம் பிரேமாவைப் பற்றி பேச போகிறான் என்று ஸ்மிரிதிக்குத் தெரியப்படுத்தினான் மனு. மனுவின் திட்டத்தை மறுத்து பேச மனம் வரவில்லை ஸ்மிரிதிக்கு. ஆனால் அடுத்து வரும் மாதங்களில் கலெக்டரின் இளைய மகன் ஏற்படுத்த போகும் இன்னல்களால் பிரேமாவைத் தில்லி அழைத்து வர இயலாதென்று இருவரும் அறிந்திருக்கவில்லை

Advertisement