Advertisement

ஸ்மிரிதியின் மனு – 36_2
அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.  
“அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க,
“ஆமாம் மா.” என்றார் நாதன்.
அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே அவர் அமர்ந்தவுடன், “காபி குடிக்கிறீங்களா?” என்று அவள் கையில் அவளுக்காக எடுத்து வந்த காபியைக் காட்டி அவரைக் கேட்டாள் ஸ்மிரிதி.
“நீ கலந்ததா?” என்று எச்சரிக்கையுடன் கேட்டார் நாதன்.
“பயப்படாதீங்க..திரேன் கலந்தான்.” என்றாள் புன்சிரிப்புடன் ஸ்மிரிதி.
“ஒகே..என் மருமக அவ கையாலக் கொடுக்கறதை வேணாம்னு சொல்ல மாட்டேன்.” என்று நாதனும் சிரிப்புடன் அவள் கையிலிருந்தக் காபியை வாங்கி கொண்டார்.
“பேப்பரைப் பார்த்தியா?” என்று கேட்டார் நாதன்.
“இல்லை அங்கிள்..இப்பதான் இதைப் பிரிக்கறேன்..மற்றதை இன்னும் தொடக்கூட இல்லை.”
அவர்கள் எதிரே செண்டர் டேபிளில் மூன்று முன்னனி ஆங்கில தினசரிகள் இருந்தன.
அந்த மூன்று தினசரிகளையும் விரித்து, படித்து பார்த்தபின் அவர்கள் வீட்டுத் திருமணத்தைப் பற்றிய சிறு செய்திக்கூட வரவில்லை என்று திருப்தியடைந்தனர் மாமனார், மருமகள் இருவரும்.
“நேற்று உங்க ரிசெப்ஷன் நடந்ததா வெளிய தெரிய வரலே.” என்றார் நாதன்.
“அப்பாக்கு அந்த மாதிரி விளம்பரத்திலே விருப்பமில்லே.”
“நல்லதா போச்சு..எனக்கும் விளம்பரம் பிடிக்காது.” என்றார் நாதன்.
“நான் அப்படி இருக்க முடியாது..விமர்சனம், விளம்பரம் இரண்டுமில்லாத பொது வாழ்க்கை கிடையாது.”
“ஆமாம்..நீ அதை சமாளிக்க கத்துக்கணும்.” என்று சொல்லி பேப்பர் படிப்பதைத் தொடர்ந்தார் நாதன்.  
ஸ்மிரிதி அவளுக்காகக் காபி கலந்து கொள்ள கிட்சனிற்கு சென்றாள்.
மறுபடியும் கிட்சனுகுள் நுழைந்த ஸ்மிரிதியைப் பார்த்து,”என்ன?” என்று சினேகிதிகள் இருவரும் விசாரிக்க,
“நீங்க இரண்டு பேரும் நகருங்க..எனக்கு வேலை இருக்கு,” என்று சொல்லி அவளே இரண்டு கப்புகளில் காபி கலந்து கொண்டாள்.
“என்ன இது? இரண்டு கப் காபி?” என்று விசாரித்தார் பிரேமா.
“எனக்கும், மனுவுக்கும்..எனக்குக் கொடுத்ததை அங்கிளுக்கு கொடுத்திட்டேன்.” என்று சொல்லி அவள் அறைக்கு கவனமாக இரண்டு கப் காபியுடன் சென்ற ஸ்மிரிதியைப் பார்த்து கொண்டிருந்தனர் சினேகிதிகள் இருவரும்.
“இரண்டு கைலேயும் காபி இருக்கு..கதவை யார் திறக்கப் போறாங்க.” என்று கேட்டார் பிரேமா.
“பிரண்டுக்கு பிரண்டதான் உதவணும்..என்ன பிரண்ட் கதவைத் திறந்து விடறீங்களா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“முதல்லே உன் காபியைக் குடிச்சிட்டு நீ அவனுக்கு எடுத்துகிட்டு போ..இந்தக் கதவைத் திறந்து விடற வேலை, கதவைச் சாத்தற வேலை இதெல்லாம் உங்க வீட்டோட போகட்டும்..தானே செய்துக்ககூடிய வேலைக்கு தேவையில்லாம ஆள் வைச்சு வெட்டி அதிகாரத்தைக் காட்டறத்துக்கு இது அரசியல்வாதி வீடில்லை..தேவையானதுக்கு ஆள் வைச்சு வேலை வாங்கற முன்னால் ஐஏஸ் அதிகாரி வீடு.” என்று அதிகாரியின் மனைவியாக அவருடைய அரசியல்வாதி மருமகளுடன் மோதினார் சிவகாமி.
அரசியல்வாதி மருமகள் அந்த வீட்டிற்கு வந்த முதல் நாளேப் பலப்பரீட்சையில் ஈடுபட விரும்பாமல்,
“நீங்க சொல்றது சரி ஆன் ட்டி..எப்ப இந்த வீடு அரசியல்வாதி வீடா மாறுதோ அன்னைக்கு கண்டிப்பா சில மாற்றங்கள் ஏற்படும்.” என்று தன்னடக்கதுடன் பின் வாங்கினாள். அவள் காபியை டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்து கொண்டிருந்த ஸ்மிரிதியை நிம்மதியாகக் குடிக்க விடாமல் இரண்டு சினேகிதிகளும் மாறி மாறி அவளை அளவெடுத்து கொண்டிருந்தனர். மனுவின் காபியுடன் அவள் அங்கேயிருந்து கிளம்பியவுடன் அவர் மகளைப் பார்த்து கவலையடைந்த பிரேமா,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே..பதினைஞ்சு வயசு வரைக்கும் நாந்தான் அவளை வளர்த்தேன்..ஆனா இந்தப் பத்து வருஷமா அவ வாழ்க்கைலே என்ன நடந்திச்சுனு எனக்குத் தெரியலே..என்கூட வரமாட்டேன்னு சொன்ன பொண்ணை எப்படி கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு போக முடியும்..எனக்கும் அப்ப அவளைத் தனியா சமாளிக்க முடியுமான்னு சந்தேகமா இருந்திச்சு..நடந்ததெல்லாம் உனக்குதான் தெரியுமே..அவங்க அப்பா கண்டிப்பாரு நான் நினைச்சேன் ஆனா அவரு இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு இவளைக் கண்டுக்காம விட்டிட்டாரு.” என்று வருத்தப்பட்டார்.
“நானும், நீயும் சம்மந்திகளாகப் போறாம்னு நினைச்சுக்கூட பார்க்கலே.. அவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்தாங்க அதனாலே நாம சம்மந்தி ஆகியிருக்கோம்….அவ இப்ப மனுவோட மனைவி..என் மருமக..என் கடமை அவளுக்கு நல்லதை சொல்லறது.. அதனாலே நான் சொல்றேன்..நீ கவலைப்படாத.” என்றார் சிவகாமி.
“அவ மனுவைக் கல்யாணம் செய்துக்க போறேன்னு என்கிட்ட சொன்ன போது நான் அவளோட அரசியல் ஆசையை விட்டுடான்னு நினைச்சேன்..உங்க குடும்பத்துக்கும் அரசியலுக்கும் எப்படி ஒத்துவரும்..அவளுக்கு எப்படி உங்களோட ஒத்து போகப் போகுது?” என்று அவரின் மனக்கலக்கத்தை வெளியிட்டார் பிரேமா.
“இதெல்லாம் தெரிஞ்சுதுதான் இந்தக் கல்யாணம் நடந்திருக்கு….நான் அவங்க விஷயத்திலேத் தலையிட மாட்டேன். அவனுக்கும், ஸ்மிரிதிக்கும் நடுவுல அரசியல்வாதி, அதிகாரி இரண்டு பேரையும் வரவிடமாட்டான் மனு. “ என்று பிரேமாவின் கலங்கிய மனதைத் தெளிவாக்க முயன்றார் சிவகாமி.
“கடவுள் அவளுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்திருக்காரு..இனி அவ கைலதான் இருக்கு அதைக் காப்பாத்திக்கறது..அவ அம்மாவைப் போல அவ முட்டாளா இருக்க வேணாம்.” என்றார் பிரேமா.
“போதும் பிரேமா..இனி ஒரு வார்த்தை உன்னைப் பற்றியோ, ஸ்மிரிதியைப் பற்றியோ பேசக்கூடாது.” என்றார் சிவகாமி.
“சரி இனி எதுவும் பேசலே..என் கையாலே மனுக்காக ஒரு ஸுவிட் செய்யட்டுமா டி.” என்று கேட்டார் பிரேமா.
“தாராளமா செய்..அவன் உன் மாப்பிள்ளை டீ.”
படுக்கையறைக் கதவைத் திறந்து காபியைக் குடித்து கொண்டு வந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“என்னோட  காபி எங்க?” என்று மனு கேட்க,
அவள் குடித்து கொண்டிருந்த கப்பைக் காட்டி,”உன்னோடதுதான்.” என்று அவனிடம் கொடுத்தாள்.
“எதுக்கு நீ குடிச்ச?” என்று கேட்க,
“சும்மாதான்..என் காபியை அந்த இரண்டு டீச்சரும் நிம்மதியா குடிக்க விடலே..பரீட்சைப் பேப்பரைத் திருத்தற மாதிரி..ஒரு இடம் விடமா என்னைப் பார்த்துகிட்டிருந்தாங்க.”
“ஏன்”
“மார்க் போட்டு பாஸ் ஆர் ஃபெயில்னு தீர்மானிக்கதான்.” என்றாள் சாதாரணமாக .
“என்ன ரிஸல்ட்?”
“நான் அவங்களை நேருக்கு நேரா பார்த்ததைப் பார்த்து டீச்சர் இரண்டு பேரும் முட்டை வாங்கினாங்க.”
“நீ கொஞ்சமாவது வெட்கப்படுவேன்னு எதிர்ப்பார்த்திருப்பாங்க.”
“நீ ஏமாற்றாத அவங்களை.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ என்னை காலைலே ஏமாற்றதே.” என்றான் மனு.  
அவனின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு,“மனு இனி நம்ம டிரைவ்லே நோ நீ, நான்..எல்லாமே “வீ (we) தான்.” என்றாள் ஸ்மிரிதி.
“யெஸ்..ஐ அக்ரி (agree).”என்று வன்பொருள், மென்பொருள் இரண்டும் சேர்ந்து அவர்களின் அகப்பொருள் ஆராய்ச்சியில் அலுக்காமல் ஈடுபட்டு ஒரு கட்டத்திற்குப் பின் உணவுப்பொருள் தேவைக்காக அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.
காலை டிபனுடன் சாப்பிட  அவருடைய மருமகனுக்காக மைசூர் பாக் செய்திருந்தார் பிரேமா. வீடு முழுவதும் நெய், கடலை மாவின் மணம் பரவியிருக்க,
“அம்மா, என்ன மைசூர் பாக் வாசனை வருது?” என்று கரெக்ட்டாக மோப்பம் பிடித்தான் மனு.
“உனக்காக பிரேமா செய்திருக்கா.” என்றார் சிவகாமி.
டேபிளிலிருந்த ஸுவிட்டிலிருந்து ஒரு துண்டத்தை வாயில் போட்டு கொண்ட மனு,
“அத்தை, ரொம்ப நல்லா செய்திருக்கீங்க..வாய்லே போட்டவுடனே அப்படியே கரையுது..அம்மாக்கு ஸுவிட் செய்ய வராது..திரேனுக்கு சமைக்கவே வராது.” என்றான்.
“மாமியாருக்கு மாப்பிள்ளை ஸப்போர்ட்..நடக்கட்டும்.” என்றார் சிவகாமி.
“மைசூர் பாக் வைச்சு மைண்ட் வாஷ் ஆயிடுச்சு.” என்றாள் ஸ்மிரிதி புன்னகையுடன்.
“ஸ்மிரிதி.” என்று பிரேமா குரலை எழுப்பியவுடன்,”ஜோக் மா.” என்றாள்.
அப்போது வாசல் கதவைத் திறந்து கொண்டு தூக்க கலக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் மாறன்.
“வா டா.. கீழ் போஷர்ன்லே படுத்துக்கிட்டியே நல்லா தூங்கினியா?” என்று விசாரித்தார் தில்லை நாதன்.
“சுமாரா தூங்கினேன் பா.”
“போய் ஃப்ரெஷாகிட்டு டிபன் சாப்பிட வா.” என்றார்.
“வரேன் பா..ரொம்ப பசிக்குது..நேத்து நைட் டின்னர் சாப்பிடலே..என்ன வீட்லே ஒரே நெய் வாசனை தூக்குது?” என்று கேட்டான் மாறன்.
“மைசூர் பாக் பண்ணியிருக்கு..நீ ஏன் டா நேத்து நைட் சாப்பிடலே? எங்ககூடவே சாப்பிட்டிருக்கலாமே?” என்று அவர் கேட்க, அதற்கு மாறன் பதில் சொல்லுமுன்,
“அவனுக்கு வயித்துலே இடமிருந்திருக்காது.” என்று முதல்முறையாக மாறன் வீட்டிற்குள் நுழைந்தபின் வாயைத் திறந்தார் சிவகாமி.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று அங்கே அமர்ந்திருந்த அனைவருக்கும் புரிந்ததால் யாரும் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தனர்.
அவனறைக்கு சென்று திரும்பிய மாறன், சும்மா இல்லாமல் அவன் வாயில் மைசூர் பாக்கை போட்டு கொண்டவுடன்,”அத்தை, உங்க பிரண்டுக்கு ஏன் இதெல்லாம் செய்யத் தெரியலே?..எல்லாம் திரேன் தலைலேக் கட்டிட்டு எங்க வயிற்றைக் கெடுக்கறாங்க.” என்றான்.
அண்ணனைப் போலவே தம்பியும் பேச அதில் வெகுண்ட சிவகாமி,
“நான் இப்பவே ரிடையர்மெண்ட் எடுத்துக்கறேன் டா..உங்கப்பாவைப் போல நானும் பக்கத்திலே இருக்கற பார்க்கலே காலைலே வாக்கிங், சாயந்திரம் பிரண்ட்ஸோட சாட்டிங்ன்னு வெளியவே இருக்க போறேன்.. அப்ப தெரியும் டா உங்களுக்கு என் அருமை.” என்றார் கடுப்பாக.
அந்த சூழ் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு மாமியாரும் அவரின் மகன்களையும் வைத்து அவள் அரசியல் பயிற்சியை ஆரம்பித்தாள் மருமகள்.
“பிரண்ட் நீங்க வெளியேறினா இந்தப் பிரச்சனை முடிஞ்சிடுமா?..இந்தப் பிரச்சனை திரும்ப திரும்ப முளைக்கக்கூடிய வெரைட்டி..ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடறோமோ அத்தனை முறை இது புதுசு புதுசா முளைக்கும்..அதனாலே இதை வேரோட வெட்டினாதான் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்..என்கிட்ட அதுக்கு ஒரு வழி இருக்கு…திரேனுக்கு இரண்டு நாள் லீவு கொடுத்து இவங்க இரண்டு பேரையும் பட்டினிப் போடுங்க..அப்ப தெரியும் உங்க அருமையும், திரேனோட சமையல் சுவையும்.” என்று அவளின் பிரண்டின் ஸப்போர்ட்டிற்கு வந்தாள் ஸ்மிரிதி.
“அந்த இரண்டு நாள், ஆறு வேளை நீ எங்க சாப்பிட போற?” என்று விசாரித்தான் மனு.
“உங்க இரண்டு பேருக்கு மட்டும்தான் அவன் லீவுலே இருப்பான்..நீயும், மாறனும் திரேனுக்கு எதிரா இருக்கறதுனாலே நீங்க இரண்டு பேரும்  தள்ளி வைக்கப்படறீங்க..நாங்க மூணு பேரும் திரேனோட ஆதரவாளர்கள்..அவன் சமையலைதான் சாப்பிடுவோம்.” என்று விளக்கம் அளித்தாள் ஸ்மிரிதி.
“ஒரு வேலை செய்..வொட்டெடுப்பு நடத்து..யார் யாருக்கு ஆதரவுன்னு தெரிஞ்சிடும்..திரேன் சமையலை இவ்வளவு நாளா நாங்கதான் சாப்பிடறோம் அதனாலே நாங்க நாலு பேர் மட்டும்தான் வொட் செய்வோம்.“ என்றான் மனு.
உடனே,”பசங்க சொல்றது சரி..திரேன் சமையல் மோசம்தான்..சிவகாமி எதுவும் கண்டுகறதேயில்லை.” என்று எதிர்பாராதவிதமாக மருமகளின் கட்சியிலிருந்து மகன்களுடன் சேர்ந்து கொண்டார் நாதன்.
நாதனும் அவர் மீது புகார் படித்தவுடன் கோபம் கொண்ட சிவகாமி வாயைத் திறக்குமுன், முதல் நாளே கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அந்த மூன்று பேர்களின் பெட்டை (pet) பட்டென்று  அவளுடன் சேர்த்து கொண்ட ஸ்மிரிதி,
“நோ பிரண்ட்..நான் இதை ஹாண்டில் செய்யறேன்..இந்த வீட்லே ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கறதுனாலே ஆண் ஆதிக்கமாயிடுச்சு..இனி வொட்டெடுப்பு செல்லாது..பாராபட்சமானப் பார்வை இருக்கறதுனால இதுக்கு வேற விதமா நான் தீர்வுக் கொடுக்கறேன்…
.திரேனுக்கும், ஆன்ட்டிக்கும் ஒரு வாரம் லீவு கொடுத்து உங்க மூணு பேருக்கும் நீங்க அனுபவிச்ச கஷ்டத்திலேர்ந்து நான் விடுதலைக் கொடுக்கறேன்…நாளைலேர்ந்து இந்த வீட்லே என் சமையல்தான்..எனக்கு டெய்லி ஒரு ஹெல்பர்..முதல் உரிமை மனுவுக்கு..அடுத்தது மாறனுக்கு..கடைசியா அங்கிளுக்கு..நாளைலேர்ந்து நம்ம கூட்டு முயற்சியை ஆரம்பிப்போம்.” என்று தீர்வுக் கொடுத்தாள்.
அதைக் கேட்டு,“அம்மா.” என்று அலறினான் மாறன்.
“ஏன் டா கத்தற..என் மருமக கரெக்டான வழி காட்டியிருக்கா..ஒருத்தனும் ஒரு உதவியும் செய்யறது இல்லை ஆனா வாய் மட்டும் இருக்கு..நான் இவ்வளவு வருஷமா கத்துகுட்டி ஹிந்திலே திரேனுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து, விளக்கி வேலை வாங்கிகிட்டிருக்கேன்..உங்களுக்குச் சமையல் சுவையா இல்லையோ..வாங்க டா கிச்சனுக்கு அப்ப தெரியும் நான் அவனோட பட்ற கஷ்டம்.” என்று குதுகலித்தார் சிவகாமி.
“நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று ஸ்மிரிதியின் தீர்வை எதிர்த்தான் வக்கீல் மனு.
“ஏன்?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“உன் சமையலை யார் சாப்பிடறது?” என்று கேட்டான் கணவன் மனு.
“இதையெல்லாம் யோசிச்ச அப்பறம் வாயைத் திறந்திருக்கணும்..பிரச்சனைன்னு  களத்திலே இறங்கியாச்சு இனி யாரும் பின்வாங்க முடியாது…அடுத்த வாரம் முழுக்க என் சமையல்தான்..அப்பறம் இதே நேரம்..இதே இடம்..இதை திரும்ப அலசுவோம்.” என்று வாக்குறுதி கொடுத்தாள் ஸ்மிரிதி.
“அம்மா, என்ன நடக்குது நம்ம வீட்லே? நாங்க சும்மாதான் சொன்னோம்..உங்களை எத்தனை தடவை இந்த மாதிரி பேசியிருக்கோம்..இன்னைக்கு என்ன புதுசா நீங்க ஸ்மிரிதியோட சேர்ந்துகிட்டீங்க?” என்று வெகுண்டான் மாறன்.
“இனி நம்ம வீட்லே அவளோட அரசியல் சோதனைகளை  அவ டிரைப் பண்ணி பார்த்திட்டு சரியா வந்திச்சுன்னா வெளியே அதே முயற்சியை செய்வா..இனி நம்ம வீடு ஒரு அரசியல் ஆராய்ச்சிக்கூடம்.” என்று அவரை அறியாமலேயே அவர் அரசியல்வாதி மருமகளின் சோதனைகளுக்கு ஆதரவு அளித்தார் அந்த மாமியார், முன்னாள் அதிகாரியின் மனைவி.

Advertisement