Advertisement

ஸ்மிரிதியின் மனு – 34_2
அன்று முழுவதும் அவள் யாருக்குமே முக்கியமில்லை என்று தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த மெஹக்கிற்கு அவன் நினைவில் அவள் இல்லை என்ற வார்த்தைகள் அவள் கோபத்தை கிளறி விட,“விடு டா என் கையை.” என்று மரியாதை இல்லாமல் மாறனைப் பேசினாள்.
அவனின் சாதாரண அழைப்பிற்கு அவனை இந்த அளவிற்கு அவள் அவமதிப்பாக பேச முடியும் என்று நினைத்தே பார்த்திராத மாறனுக்கு அவனுடைய அந்த நிதானமில்லா நிலையிலும் அவளின் கையைப் பிடித்தது தவறு என்று உணர்ந்து, அவன் பற்றியிருந்த கையை விடுத்து,”ஸாரி..வா.. டான்ஸ் பண்ணலாம்.” என்று மறுபடியும் அழைப்பு விடுத்தான்.
“என் பின்னாடி சுத்தாத..நீ எனக்கு ஒத்துவர மாட்ட..இவ்வளவு நேரம் ஆடிக்கிட்டு இருந்த பாரு..அந்த மாதிரி பொண்ணுங்கதான் உனக்கு சரி.” என்று அவள் யாருக்கும் ஒத்துவர மாட்டாள் என்று அவள் மனதின் ஆழத்தில் பதிந்திருந்த எண்ணத்தை தைரியமாக வெளியிடுவதாக நினைத்து தவறாக வெளியிட்டாள் மெஹக்.
அவள் சொன்னதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்த மாறன், பாட்டிற்கு நடனமாட அழைத்தவனைப் பெண்கள் பின்னே சுற்றும் பொறுக்கி என்று காரணமேயில்லாமல் அவள் கேவலமாகப் பேசி வேண்டிய காரணமென்ன என்று அறிய முற்படாமல் அவளைப் பதிலிற்குக் கேவலப்படுத்தினான்.
“நான் உன் பின்னாடி சுத்தறேனா?..நீ இங்கே இருக்கறது கூட என் கண்ணுக்குத் தெரியலே..இன்ஃபாக்ட் யார் கண்ணுக்கும் தெரியலே அதான் இங்கே தனியா உட்கார்ந்துகிட்டு, கிளாஸோட பொழுது போக்கிகிட்டு இருக்கே..உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, போனா போகுதுன்னு டான்ஸ் ஆட கூப்பிட்டா என்னையே கேவலப்படுத்தறியா..நீ சொன்ன மாதிரி அந்தக் கூட்டத்திலே உன்னைவிட அதிக அழகு, அந்தஸ்து இருக்கற அடக்கமான சின்ன வயசு குடும்ப பொண்ணுங்க இருக்காங்க..எனக்கு ஏத்தவங்க..உன்னைவிட நல்லா டான்ஸும் ஆடறாங்க.” நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
மாறனின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் எதிர்பார்த்ததைப் போல் மெஹக்கை காயப்படுத்தின.  அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் அவளின் கிளட்ச் பேக்குடன் அந்த அறையிலிருந்து வெளியேறியனாள் மெஹக். மெஹக்கின் வார்த்தைகளில் காயப்பட்டிருந்த மாறனின் மனமும்,  அவள் அறையிலிருந்து வெளியேறியவுடன் நடனத்திலிருந்த அவன் கவனமும் சிதறியதால் ஆட்டத்தை நிறுத்திவிட்டு அமைதியாக சிறிது தூரத்திலிருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான். அதுவரை எந்தப் பெண்ணிடமும் கேவலமான சண்டையோ இல்லை கருத்து வேறுபாடோ அறிந்திராத மாறனுக்கு மெஹக்கை மோசமாக  பேசியது அவன் மனதைத் துன்புறுத்தியது.  அவள் அறையிலிருந்து வெளியேறியவுடன் சிறிது கலவரம் அடைந்தவன் அன்றிரவிற்குள் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான். ஆனால் அதை முழுவதுமாக மறக்ககூடிய நிகழ்வு ஏற்பட போகிறது என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.  
வரவேற்பிலிருந்து வெளியேறிய மெஹக் வராண்டா கதவைத் திறந்து வெட்ட வெளி மாடியில், சுவற்றில் சாயந்து கொண்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவள் அப்போதே அவளுடைய அறைக்குத் திரும்ப விழைந்த அவள் மனதைக் கட்டுப்படுத்தி ஸ்மிரிதிக்காக அவள் ஆடப் போகும் நடனத்தை மனதில் ஓட்டி ஒத்திகைப் பார்க்க ஆரம்பித்தாள் .  அப்போது அந்த இடத்திற்கு ஃபோன் பேசிக் கொண்டே கார்மேகமும் வந்து சேர, தனியாக புகைபிடித்து கொண்டிருந்த மெஹக் அவர் கண்ணில் பட, உடனே ஃபோனை அணைத்துவிட்டு,
“என்ன மா? இங்கே தனியா என்ன பண்றீங்க?” என்று மெஹக்கை விசாரிக்க,
அவள் கையிலிருந்த சிகரெட்டைக் காட்டினாள் மெஹக்.
“நீங்க சாப்பிட்டாச்சா?” என்று அந்த இரவில் முதல் முறையாக அன்பாக ஒருவர் அவளை விசாரிக்க மெஹக்கிற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை.
”என்ன மா பசிக்கலேயா?” என்று கேட்டார்.
“கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவேன்..வாங்க..உள்ளே போகலாம்.” என்றவள் சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு அமைதியாக அவருடன் ஹாலிற்குள் நுழைந்தாள்.  
கார்மேகத்துடன் மெஹக் ஹாலிற்கு திரும்பிய போது அவள் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே மெஹக்காகத் தென்பட்டாள் மாறனிற்கு. ஆனால் ஒருவித நடுக்கத்துடன் சோபாவில் அமர்ந்து அவளின் கிள்ட்ச் பேகிலிருந்து எதையோ எடுத்து அவள் வாயினுள் போட்டு கொள்ள அவளின் அந்த செய்கை அவள் வெளியே சென்றது தம் அடிக்க என்று மாறனிற்குக் காட்டிக் கொடுத்தது. 
அவளுக்கு நேரெதிரே இருந்த சோபாவில் அமைதியாக கைகட்டி அமர்ந்தபடி முதல்முறையாக மெஹக்கின் தோற்றத்தின் மீது கவனம் செலுத்தினான் மாறன்.  அவனின் அம்மா, ஸ்மிரிதியைப் போல் அவளும் உடை அணிந்திருப்பதைக் கண்டு கொண்டவன் அவளுடைய யோசனையைதான் ஸ்மிரிதி செயல்படுத்தியிருக்கிறாள் என்ற முடிவிற்கு வந்தான்.  
எந்த விதமான முயற்சியும் செய்யாமல் அந்த உடையே மெஹக்குடன் இயல்பாக பொருந்திப் போயிருப்பதைப் பார்த்தபின் தான் அவனுடைய அம்மாவும், ஸ்மிரிதியும் அந்த உடையில் பொருந்திக் கொள்ள எவ்வளவு முயற்சி செய்திருக்கிறார்கள் என்று புரிந்தது.   அவளைத் தலை முதல் காலை வரை நிதானமாக ஆராய்ச்சி செய்தவனுக்கு முன்பு ஒரு நாள் ஹோட்டலில் சந்தித்த மெஹக்கிற்கும் அன்றைய மெஹக்கிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை ஆனால் அன்று அவள் மேல் ஏற்படாத ஆர்வம் இன்று எந்த க்ஷணத்தில் ஏற்பட்டது என்ற விபரீதமான கேள்வி அந்த ஆராய்ச்சியின் விளைவாக அவனுள் முளைத்திருந்தது.
அறையினுள் நுழைந்த மெஹக்கின் கவனமும் மாறன் மீதுதானிருந்தது. அவளை முழுவதுமாக ஆராய்ந்து கொண்டிருந்த மாறனின் ஆர்வத்தைக் கண்டு கொண்ட மெஹக்கின் மனது ஆனந்தமடைந்தாலும் அவனை உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்ததால் அவனின் பார்வையை நேராக எதிர்க்கொண்டு அவள் பார்வையாலேயே அவனின் ஆர்வத்தைக் கேலி செய்தாள்.  
மெஹக்கின் பார்வையின் அர்தத்தைப் புரிந்து கொண்டவன், கையும் களவுமாகப் பிடிப்பட்டதில், ஆண்பிள்ளையாக அவன் மனதில் எழுந்த ஆர்வம் ஆணின் ஆணவமாக மாற அதன் விளைவாக ஓசையில்லாமல் வெறும் உதட்டசைவில் அவளைக் கெட்ட வார்த்தையில் திட்டினான்.  அவளின் பள்ளி பருவத்திலிருந்து திரைப்படத்தில் நடிக்க வரும்வரை எல்லா விதமான ஆண்களையும் எதிர்கொண்டு பழக்கப்பட்டிருந்த மெஹக், மாறனின் செயலில் சிறிதும் கலவரமடையாமல், ஓசையில்லாமல் அவனைப் போலவே வெறும் உதட்டசைவில் அவனைவிட பயங்கரமான கெட்ட வார்த்தையில் பதிலடி கொடுத்தாள். 
அதைப் புரிந்து கொண்டு செய்வதறியாமல் தலை கவிழ்ந்து உடனே அங்கே எழுந்த ஆரவாரத்தில் மறுபடியும் தலை நிமிர்ந்தவனின் கண்ணெதிரே கபீர், தல்ஜித்துடன் நடனமாட கொண்டிருந்தாள் மெஹக். அடுத்து வந்த நிமிடங்களில் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள அவர்கள் மூவர் மட்டும் கடைசியாக ஆடி முடித்தபோது கைதட்டல் ஒலியில் அந்த அறையே அதிர்ந்தது. 
அவர்களின் நடனம் முடிந்தவுடன் மெஹக்கை கட்டியணைத்து பாராட்டிய மீரா அவளை அவருடன் உணவருந்த அழைத்து சென்றார்.  மீராவுடன் பேசியபடி சாப்பிட்டு கொண்டிருந்தவளை மறுபடியும் மாறன் பார்வையால் அளப்பதை உணர்ந்தாலும் அவனையும், அவன் பார்வையையும் புறக்கணித்தாள் மெஹக். மாறனைக் கெட்ட வார்த்தையால் திட்டிய பின்  அவளின் மன நிலை மாறிப் போயிருந்தது.  அன்று முழுவதும் அவளை அழுத்திக் கொண்டிருந்த எண்ணங்கள் திடீரென்று அந்த ஒரு கெட்ட வார்த்தையில் அடியோடு வெளியேறியதில் அளவில்லாத சந்தோஷத்தை உணர்ந்தவள் இனி மனசோர்வு ஏற்படும் போதெல்லாம் மாறனைக் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது அவள் முகத்தில் சிறு புன்னகை குடியேறியிருந்தது. 
அந்தப் புன்னகைக்கு காரணமானவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்புதான் அவள் வாழ்க்கைப் பாரத்தை  தாங்கி கொள்ள போகும் புவி ஈர்ப்பு சக்தி என்று அவள் அப்போது உணரவில்லை.

Advertisement