Advertisement

ஸ்மிரிதியின் மனு – 34_1
அவள் செய்கையினால் விளைந்த கணவனின் அதிர்ச்சியையும், அம்மாவின் திகைப்பையும் கவனிக்க தவறவில்லை ஸ்மிரிதி. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் அந்த இரவு முடிவதற்குள் அவளே அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொண்டாள்.
கபீரின் குடும்பத்துடன் அமர்ந்தபடி வரவேற்பு நிகழ்ச்சியை அமைதியாக பார்த்து கொண்டிருந்த மெஹக்கின் மனம் ஓயாமல் ஓசை எழுப்பி கொண்டிருந்தது. ஸ்மிரிதியுடன், சிவகாமியுடன் வரவேற்பு ஹாலில் நுழைந்த பின் சிறிது நேரம் சுசித்ரா, மஞ்சு நாத்துடன் அமர்ந்திருந்தவள் அவர்கள் இருவருக்கும் தனிமையைக் கொடுக்க விரும்பி மனிஷுடன் அமர்ந்து கொண்டாள். மனிஷ், ஸ்மிரிதி இருவரைத் தவிர மற்ற குடும்ப நபர்களுடன் அதிகம் பழக்கமில்லாததால் அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தாள்.  அவளுடன் பேசிக் கொண்டிருந்த மனிஷை ஸ்மிரிதி அழைத்து சென்றவுடன் கீதிகா குடும்பத்துடன் இருக்க பிடிக்காமல் கபீரின் குடும்பத்தாருடன் சேர்ந்து  கொண்டாள். 
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து விருந்தினர்களின் பார் (bar) தேவைகள் மீராவின், மிலிந்தின் மேற் பார்வையில் நடைப்பெற்று கொண்டிருந்தன. விருந்தினரின் கோரிக்கைகளை வெளிப்படையாக மறுக்காமல் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் படி அவர்களின் தேவைகளை நாசுக்காக, நாகரிகமாகப் பூர்த்தி செய்தனர். அதனால் மீராவின் மருமகள்களின் கம்பெனியில் மெஹக்கின் தேவையும் அளவோடு தடையேயில்லாமல் பூர்த்தியானது.
கார்மேகத்தின் கடைசி விருந்தினர் விடைபெற்று கொண்டபின் அவர்களுக்குக் கிடைத்த தனிமையில் மனுவின் மனதிலிருந்த சஞ்சலத்தை உடனே போக்கினாள் ஸ்மிரிதி.
“அப்பாவோட ஆளுங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தைப் பார்த்து ஆழம் தெரியாம காலை விட்ட மாதிரி இருக்குயில்லே உனக்கு.. அவங்க ஆளுங்களுக்கு உன்னை அப்பா அறிமுகப்படுத்தி வைக்க போறாருன்னு சொன்னவுடனே எனக்கும் அப்படிதான் இருந்திச்சு..அவரு இருந்த ஆற்று தண்ணியோட ஆழம் அவருக்கே சரியா தெரியாத போது அது உள்ளே அவரே உன்னை அழைச்சுகிட்டு போக நினைச்சதுக்குக் காரணம் உன்னை வேற யாரும் அவரு பெயரைச் சொல்லி உள்ளே அழைச்சுகிட்டு வந்திடகூடாதுன்னுதான்..
எனக்கு அவரோட திட்டம் சரியா படலே..அதான் என் வழிலே அந்த ஆற்று தண்ணியை குளமா மாற்றி நமக்கு தெரிஞ்சு ஆழத்துலே  உன்னையும் உள்ளே அழைச்சுகிட்டு வந்து என் வாழ்க்கையோட முக்கியமான உறவான உன்னையும், மனிஷையும் நானே அறிமுகப்படுத்தி வைச்சேன்..
இன்னைக்கு இங்கே நம்மளை, நம்ம ஆளுங்களை சந்திச்சிட்டு போன எல்லாருக்கும் யார் கட்டுப்பாட்டுலே யார் இருக்காங்கன்னு தெளிவா புரிஞ்சிருக்கும்..அதனாலே நம்ம ஆளுங்களுக்கு எது நடந்தாலும் முதல் தகவல் எனக்கு வந்திடும்..இதுக்கு மேலே அப்பாவோட வட்டம் வளராது..மிச்சம் இருக்கறதையும் கொஞ்சம் கொஞ்சமா வட்டத்துக்கு உள்ள கொண்டு வருவேன் இல்லை வெட்டி விட்டிடுவேன்..என்னோட பேப்பர் எல்லாம் உன் கைக்கு கிடைக்கும் போது நம்ம வட்டம் நம்ம கைக்குள்ள.” என்று விளக்கிய ஸ்மிரிதியிடம், 
“நான் உன்னை மாதிரி யோசிக்கலே..உன்னை ஏத்துக்கணும்னா உன் குடும்பத்தையும் ஏத்துக்கணும் நினைச்சுதான் அங்கிள் சொன்ன ஏற்பாட்டுக்கு சரின்னு சொன்னேன்.” என்றான் மனு.
“தெரியும் மனு..உன்னாலே இந்த மாதிரி யோசிக்க முடியாதுன்னுதான் நம்ம எல்லாருக்கும் சேர்த்து  நானே யோசிச்சேன்..இப்ப உனக்குப் புரிஞ்சிடுச்சா? உனக்கு என்னைப் புரிய வைச்சிட்டேனில்லே…சரி தானே.” என்று கேட்டு அவனைச் சிரிக்க வைத்தாள் ஸ்மிரிதி.
அதற்கு அடுத்ததாக தில்லை நாதனின் விருந்தினர்களைச் சந்திக்க சென்றனர் மணமக்கள் இருவரும்.  சிவகாமியும், தில்லை நாதனும் ஸ்மிரிதியையும், மனுவையும் அவர்களின் நட்பு வட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்த போது அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வி ஆனால் அந்த ஒரு கேள்விக்கு விடைக் கிடைக்காமல் டின்னர் முடிந்து அனைவரும் விடைப் பெற்று கொண்டனர். அவர்களின் நட்பு வட்டத்தின் அலைபாயுதலைப் புரிந்து கொண்ட சிவகாமி,
“எல்லாருக்கும் ஒரே ஒரு கேள்வி..ஸ்மிரிதி யாருன்னு? என்னையும், அவளையும் எங்கெங்கையோ சேர்ந்து பார்த்த மாதிரி பேச்சு கொடுத்து என்கிட்டேயிருந்தே மொத்த விவரத்தையும் கேட்டுகிட்டு அவளை முன்னடியே தெரிஞ்ச மாதிரி காட்டிக்க பார்த்தாங்க..
அவங்களுகெல்லாம் திடீர்னு நீங்க எப்படி அரசியல்வாதி வட்டத்துக்குள்ள வந்திருக்கீங்கன்னு அதிர்ச்சி..ரிடையர் ஆன பிறகு உங்களுக்கு இந்த மாதிரி ஜாக்பாட் அடிக்கும்னு யாரும் நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டாங்க..இனி உங்களைத் தெரியும்னு கண்ட கண்டவனும் ஃபோன் செய்ய போறான்..இங்க போஸ்டிங் வாங்கி கொடுங்க..இவனைப் பற்றி விசாரிச்சு சொல்லுங்கண்ணு ஒரே தொந்தரவு செய்ய போறாங்க.” என்று நாதனிடம் அலுத்து கொண்டார்.
“இன்னைக்கு இங்க வந்திருந்தவங்க யாரும் அந்த மாதிரி தப்பு செய்ய மாட்டாங்கன்னு நினைக்கறேன்.” என்று தெளிவாக பதில் கொடுத்தார் தில்லை நாதன்.
முதலில் மனிஷ், மனுவுடன் விருந்தினர்களை சந்தித்த ஸ்மிரிதி அடுத்து அவளின் புது குடும்பத்துடன் மற்ற விருந்தினர்களை சந்திப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த மெஹக்கின் மனதில் அவளைத் தேவையில்லாத விருந்தாளியாக உணர்ந்தாள். ஏற்கனவே மஞ்சு நாத்தை கோவை விமான நிலையத்தில் தில்லை நாதன் சந்திருந்ததால், அன்று காலையில் கல்யாணத்தில் அவன் மனைவி சுசித் ராவை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்ததால் அவர்கள் இருவருடன் தில்லை நாதன் சகஜமாகப் பேசி பழக அதைப் பார்த்து மனதில் அடி வாங்கியிருந்தாள் மெஹக்.  சிவகாமியைத் தவிர்த்து அவர்கள் வீட்டினர் யாரும் இதுவரை அவளுடன் சகஜமாக பேச முயற்சிக்கவில்லை. மனுவும், மாறனும் அவளிடம் சம்பிரதாய ஹாய் சொன்னதுடன் விலகிவிட அவளைத் தில்லை நாதனிற்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும் என்று அவர்கள் யாருக்குமேத் தோன்றவில்லை. அந்த தற்செயலான செய்கை அவள் மனதில் அவர்கள் யாருக்குமே அவள் மேல் அன்போ, மதிப்போ இல்லை என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. 
தில்லை நாதனின் விருந்தினர்கள் சென்ற பின் மனுவைக் கீதிகாவின் குடும்பத்திற்கும், கபீரின் குடும்பத்திற்கும் அறிமுகப்படுத்தி விட்டு அந்த அறையிலிருந்து சிறிது நேரத்திற்கு காணாமல் போயினர் ஸ்மிரிதி, கபீர் இருவரும். அவர்கள் திரும்பி வந்த போது குடும்பமும், நட்பு வட்டமும் மட்டும் மிஞ்சியிருந்த அந்த ஹாலில் சில மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தினர் ஹோட்டல் சிப்பந்திகள்.  
அத்தனை மினி பார்களும், ஸ்னாக் கார்னர்களும் அகற்றபட்டு டின்னர் பஃபே டேபிள் அருகே ஒரே இடமாக வைத்தார்கள்.  உறவுகாரர்களில் பலரும், நட்பு வட்டத்தில் பெரும்பாலரும் இன்னும் அவர்கள் கவனத்தைப் பாரில் வைத்திருந்ததால் மினி பார் கவுண்டர்களை மூடாமல் அதன் எண்ணிக்கையை மட்டும் குறைத்திருந்தனர்.  சோபாக்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு அடுத்து நடக்கவிருந்த நிகழ்ச்சிக்காக அந்த  ஹாலை மேலும் விசாலமாக்கியிருந்தனர்.
கீதிகாவின் உறவினர்கள், மீரா, மிலிந்தின் குடும்பம், ஸ்மிரிதியின் நட்பு வட்டம் என்று அனைவர் கையிலும் சோமபானமிருக்க, தில்லை நாதனின் குடும்பத்தில் மாறனைத் தவிர அனைவரும் ஸோபராக (sober) வளைய வந்தனர், அதில் அவர்கள் வீட்டின் புது நபரும் அடக்கம். இந்தக் கூட்டத்தில் மற்றுமொரு விதிவிலக்காக அங்கே இருந்த ஸ்னாக்ஸையும், சாப்பாட்டையும் ஒரு குழுவாக அமர்ந்து காலி செய்து கொண்டிருந்தனர் சுசித் ரா, மஞ்சு நாத், ஜனனி, ராம் நால்வரும். அவளின் முக்கியமான வேலையில் கவனமாக இருந்த சுசித் ரா அவளுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பான மெஹக்கை முழுவதுமாக மறந்து போனாள். 
கபீருடன் ஹாலிற்கு திரும்பிய ஸ்மிரிதி கண்களால் மனுவைத் தேட அவன் அகப்படாததால் பிரேமாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.  அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று பிரேமா தயங்கி கொண்டிருந்த போது அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.
“அம்மா, அப்பா பக்கத்திலே இல்லாம அப்பாவோட ஆளங்களை நான் சந்திச்சது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு இல்லே?” என்று நேரடியாக அவரைக் கேட்டாள்.
“அவரோட விஷயத்திலே உனக்கு சம்மந்தமில்லைன்னு நினைச்சுகிட்டிருந்தேன் ஸ்மிரிதி..ஆனா இன்னைக்கு என்னோட அந்த நினைப்பு தப்புன்னு புரிஞ்சுசிடுச்சு.” என்றார் வருதத்துடன் பிரேமா.
“நானும் இரண்டு வாரம் முன்னாடி வரைக்கும் எதுலேயும் சம்மந்தப்படுத்திக்கலே..ஆனா எப்ப அப்பா மனுவை அவர் வட்டத்திலே அறிமுகப்படுத்தி வைக்க போறாருன்னு சொன்னாரோ அன்னைக்கே என்னை அந்த வட்டத்துக்கு அவனுக்கு முன்னாடி அறிமுகப்படுத்திக்கணும்னு முடிவு செய்தேன்..அவனோட வாழ்க்கையை என்னோட இணைச்சுகிட்டிருக்கான் மா..நீங்க சொல்ற மாதிரி அப்பாவோட கொடுக்கல், வாங்கல்ல யாருக்கு வேணும்னாலும் பாதிப்பு வரலாம்..அவராலே வராது ஆனா அவரோட சம்மந்தப்பட்டவங்களாலே வரலாம்..அதான் அந்த வட்டத்தைச் சரி செய்து சின்னது படுத்திகிட்டு வரேன்..
நம்ம வீட்டு கழிவறையை நான் சுத்தம் செய்தாதான் வருங்காலத்திலே பொது கழிப்பறையை என்னாலே சுத்தம் செய்ய முடியும்..நம்ம வீட்டு நாற்றத்தைப் போக்க பொறுபெடுத்துகிட்டதான் ஊர் நாற்றத்தைப் போக்க பொறுப்பு ஏத்துக்க முடியும்..
என்னோட வீட்லேர்ந்து சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்..அப்படியே ஊரையும் சுத்தம் செய்ய முடியும்னு நினைக்கறேன்..இன்னைக்கு வந்தவங்களுக்கும் அப்பா மாதிரி தான்..கட்டண கழிப்பிடம் நடத்தறாங்க..சுத்தம் செய்றாங்க ஆனா காசு வாங்கிகிட்டு அசுத்ததை அகற்ற வழிக் காட்டறாங்க..அது தப்பா, சரியான்னு எனக்கு தெரியலே ஆனா அந்த மாதிரி ஒரு அமைப்பும் தேவைன்னு தோணுது..
என்னோட வீட்லே இருக்கற அசுதத்தோட இயல்பு என்னென்னு நானே உள்ளே இறங்கி என் கையாலே சுத்தம் செய்தாதான் தெரியும்.. நானே உள்ளே இறங்கியிருக்கறதுனாலே இனி ஆட்டத்திலே அப்பா இல்லை பிளேயர் மாறியாச்சுன்னு எல்லாரும் புரிஞ்சுகிட்டாங்க.” என்று ஆபத்தான விளையாட்டைப் பற்றி அனாயாசமாக விளக்கினாள் ஸ்மிரிதி.
அவளின் விளக்கத்தைக் கேட்டு,”ஸ்மிரிதி..நான் எப்படி உனக்கு அம்மாவானேன்?” என்றார் அவளின் மனோபலத்தினால் தாக்கப்பட்டவர்.
“என்னை தாங்கிக்க உங்களை மாதிரி ஆளுதான் தேவைப்பட்டது.. அதனாலதான் நீங்க என் அம்மா..சந்தேகமே வேணாம்” என்றாள் ஸ்மிரிதி.
அப்போது,”என்ன டி சாப்பிடலாமா? என்று பிரேமாவை விசாரித்தார் சிவகாமி.
“நீ எப்ப சொல்றியோ அப்ப சாப்பிடலாம்.”
“இன்னும் பாட்டு, டான்ஸ் பாக்கி இருக்கு..டின்னர் சாப்பிட்டுகிட்டே டான்ஸ் பார்க்கலாம்..மனுவைக் காணுமேன்னு தேடிக்கிட்டிருக்கேன்.” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது,
அண்ணன், தம்பி இருவரும் ஹாலில் நுழைந்தனர். மாறனின் தோளில் அகுஸ்டிக் கிடார், கையில் லேப் டாப். மனுவின் கையில் டிஜிடல் கீ போர்ட், பாங்கோ டி ரம்ஸ் (bongo drums).  அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டல் சிப்பந்திகளின் உதவியுடன் அவர்கள் கொண்டு வந்திருந்த உபகர்ணங்களையும் அதற்கு தேவையான சவுண்ட் ஸிஸ்டமையும் செட் செய்தனர் கபீர், தல்ஜித், மனு, மாறன் நால்வரும். அதில் மனுவைத் தவிர மற்ற மூவரும் அவர்கள் கிஸாஸிலிருந்து சிப் செய்து கொண்டே வேலை செய்தனர்.
கடந்த சில நாட்களாக கபீருடன் நட்பு ஏற்பட்டிருந்த மாறனிற்கு அன்று தல்ஜித்துடனுடம் சினேகிதம் ஏற்பட அவர்கள் மூவரும் ஒரு குழுவாக அவ்வபொழுது எழுந்த மீரா, மிலிந்தின் கண்டன பார்வையை கண்டு கொள்ளாமல் அவர்களின் தேவையைத்  பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.  
மாறனின் இந்தப் பழக்கத்தைப் பற்றி அறியாமல் இருந்த சிவகாமிக்கு அன்று அவரது இளைய மகனின் நடத்தையை நேரடியாகப் பார்த்த பின் மனம் கசந்து போனார்.  அதுவும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களின் ஆண், பெண் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் கையில் கிளாஸுடன் இருந்ததில் அவனும் அந்தக் கூட்டத்தில் ஒவனாக ஒன்றிப் போனான். எப்போதாவது அவன் வீட்டிற்கு தெரிய வேண்டிய விஷயம் அன்றே அவர்களுக்குத் தெரிய வந்ததில் நிம்மதியடைந்த மாறனிற்கு அவனின் அந்தப் பழக்கம் தவறாகவே தெரியவில்லை.  ஒரு குடும்பமாக அமர்ந்து இரவு உணவை உண்ண ஆசைப்பட்ட சிவகாமிக்கு அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் நிலையில் அவரது இளைய மகன் இல்லாத்தை உணர்ந்து அதற்கு மேல் தாமதம் செய்யாமல் கணவன், மூத்த மகன், மருமகள், அவருடைய ஆத்ம சினேகிதிகள் இருவருடன் அவரது இரவு உணவை முடித்து கொள்ள முடிவு செய்தார்.    
விருந்தினர்களில் சிலர் உணவு இருக்குமிடம் சென்றவுடன் இனியும் நடன நிகழ்ச்சிகளைத் தாமதிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து ஹாலில் இருந்த வெளிச்சத்தைக் மேலும் குறைத்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த கபீர், அங்கே வந்திருந்த அனைவருக்கும் அவன் குடும்பத்தின் சார்பாக நன்றி உரைத்தபின் அடுத்து அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நடன நிகழ்ச்சி ஆரம்பமாகப் போவதாக அறிவித்து விட்டு விருந்தினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதில் குழந்தைகள் விரும்பிய பாடல்களை  லாப் டாப்பில் ப்ளே லிஸ்ட்டில் கியூவில் போட்டுவிட்டு நடன நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தான்.
அடுத்த அரைமணி நேரம், கீதிகாவின் குடும்ப நபர்கள், கபீரின் அண்ணன்கள், அண்ணிகள் அவர்கள் குழந்தைகளென்று என்று அந்த ஹாலே அவர்கள் ஆட்டத்தில் எழுந்த கூச்சலில் அதிர்ந்தது.  அதில் நடு நாயகமாக ஆடிக் கொண்டிருந்த இருவர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர். மனிஷும், மாறனும் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியானார் சிவகாமி.  கீதிகாவின் மகனுடன் அவரது இளைய மகன் சங்கோஜமேயில்லாமல் ஆடியதைப் பார்த்து பிரேமா, புவனா, நாதன், ஸ்மிரிதியுடன் அமர்ந்திருந்த சிவகாமிக்குதான் சங்கடமாகப் போனது.  
அதே நேரம் கபீரின் கையிலிருந்த மைக்கைப் பறித்து வந்திருந்த விருந்தினர்களையும் அவனோடு சேர்ந்து நடனமாட அழைப்பு விடுத்தான் மாறன். அவன் அழைப்பை ஏற்று வந்த கீதிகாவின் குடும்பத்து இளம் பெண்கள் அவனுடன் சேர்ந்து ஆட அதற்குபின் வலுக்கட்டாயமாக ராம், ஜனனி, சுசித் ரா மூவருடன் சிறிது நேரம் நடனம் ஆடினான். மஞ்சு நாத்தைக் கண்களால் தேடிக் கொண்டிருந்த சுசித் ராவிற்கு அவன் சிறிது தூரத்தில் மனுவுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனுக்காக காத்திருக்காமல் சில நிமிடங்கள் நடனமாடிவிட்டு அதன் பின் களைப்பாக உணர்ந்ததால் மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.  
அந்த ஹாலின் இருந்த இளம் பெண்கள், ஆண்கள் உற்சாகத்துடன் நடனமாடிக் கொண்டிருக்க, நடனத்தையும், நடிப்பையும் தொழிலாக செய்து வந்தவளோ கையில் ஒரு கிளாஸுடன் தனியாக ஒரு சோபாவில்  சாயந்து அமர்ந்தபடி மாறன், மனிஷ் இருவரின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் கண் கொட்டாமல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள்.  அவர்களுடன் நடனமாடாமல் தனியாக மெஹக் அமர்ந்திருப்பதைப் பார்த்த மனிஷ் அவளருகே ஓடி வந்து,”மெஹக் தீதி..ஏன் டான்ஸ் பண்ண வரலே..வாங்க” என்று அவள் கையைப் பிடித்து எழுப்ப முயன்றான்.
“நான் வரலே மனிஷ்..நீ போய் ஆடு.” என்று மறுத்தாள் மெஹக்.  அவளை மேலும் வற்புறுத்தாமல் மறுபடியும் நடனத்தில் கலந்து கொள்ள சென்றான் மனிஷ்.  அங்கே மற்ற பெண்களுடன் மாறி மாறி ஜோடி போட்டு ஆடிக் கொண்டிருந்த மாறனின் காதில் அவன் ஏதோ சொல்ல உடனே சோபாவில் தனியாக அமர்ந்திருந்த மெஹக்கை நோக்கி வேகமாக வந்த மாறன் அவளருகில் அமர்ந்து,
”உன்னை எப்படி மறந்தேன்னு தெரியலே..கமான்..உன்கூட டான்ஸ் ஆடாம ஈவினிங் இன்கம்ப்ளீட்டா இருக்கும்..எழுந்துகோ.” என்று தவறான வார்த்தைகளில் அவளுக்கு அழைப்பு விடுத்து அவள் கையைப் பிடித்து எழுப்ப முயன்றான்.

Advertisement