Advertisement

ஸ்மிரிதியின் மனு – 32
“நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள்.
“ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே  அவள் கிளட்ச் பேக்கிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்த மெஹக் மேலும் பேச்சைத் தொடருமுன்,
“மெஹக்..நோ..சுசித்ரா முன்னாடி வேணாம்.” என்று ஸ்மிரிதி அதட்ட,  உடனே மெஹக் பால்கனிக்கு செல்ல, அந்த அறையில் இருந்த நால்வரையும் பிணைக்க இருந்த அந்தரங்க நொடிகள் அறுந்து போனது.
அதுவரை சகஜமாக இருந்த ஜனனி,“என்ன அவங்க சிகரெட் பிடிக்கறாங்க?” என்று வெளிப்படையாக அவள் அதிர்ச்சியை வெளியிட்டாள்.
“நாங்க மூணு பேரும் சேர்ந்து நிறைய பழகியிருக்கோம்..” என்று சுசித்ராவும் வெளிப்படையாக பதிலளித்தாள்.
அதற்கு “ஒ” என்று சுரத்தேயில்லாமல் பதில் சொன்ன ஜனனியின் பார்வை பால்கனியில் இருந்தது.
“உனக்கு கோயமுத்தூர் தானா?” என்று பேச்சை ஆரம்பித்தாள் சுசித்ரா.
“ஆமாம்..சொந்த ஊர்..ஸ்கூல், காலேஜ், கல்யாணம் எல்லாம் அங்கையேதான்.” என்று அவள் வாழ்க்கையை மூன்றே வார்த்தைகளில் விவரித்து முடித்தாள் ஜனனி.
“எங்க மூணு பேருக்கும் சொந்த ஊரே கிடையாது.” என்று சொல்லி சிரித்தாள் சுசித்ரா.
“நீங்க பெங்களூர்..மெஹக் மும்பை..ஸ்மிரிதி தில்லி.” 
“அதெல்லாம் எங்க பெரண்ட்ஸோட ஊர்..ஸ்கூல் டேஸ்னா தெராதூன்..ஹாலிடேஸ்னா பியாஸ்..இப்பதான் கொஞ்ச வருஷமா நாங்க எல்லாரும் எங்க பெரண்ட்ஸ் ஊர்லே இருக்கோம்..அதுலே ஸ்மிரிதி பாதி வெளிலதான் சுத்திக்கிட்டு இருப்பா, மெஹக் அவ வீட்லே இருந்தாதான் அதிசயம்..நானும் இப்ப கொஞ்ச வருஷமாதான் என் ஹஸ்பண்டோட இருக்கேன்..அதுக்கு முன்னாடி வீடு தங்கமாட்டேன்.” என்று அவர்கள் மூவரின் அசாதாரண வாழ்க்கையை சாதாரண வார்த்தைகளில் விவரித்தாள்.
“உங்களுக்குக் கூடப்பிறந்தவங்க இருக்காங்களா?”
“எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா..இரண்டு பேரும் பெங்களூர்லதான் இருக்காங்க..மெஹக்கிற்கு ஒரு தங்கை..அவ வெளி நாடுலே படிக்கறா..ஸ்மிரிதிக்கு மனிஷ்.” என்றாள் சுசித்ரா.
அதற்குள் பால்கனியிலிருந்து நேராக பாத் ரூமிற்கு சென்று திரும்பி வந்து ஸ்மிரிதியின் முகத்தருகே “ஃபூ” என்று ஊதினாள் மெஹக்.
“இத்தனை பக்கமா வந்து எதுக்கு ஊதற?”
“இப்பவரைக்கும் நான் கிளீன்..உன்னோடதுக்காக வெயிட்டீங்.”
“அதெல்லாம் கெஸ்ட்ஸ் போன பிறகுதான்.”
“நான் போதும்னு சொல்றவரைக்கும் எனக்கு வேணும்.”
“‘நோ..எல்லாருக்கும் எவ்வளவுன்னு மனு தான் தீர்மானிப்பான்.”
அவர்களின் சொந்த விருப்பத்தை வேறொருவர் தீர்மானிப்பதா என்று சினேகிதிகள் இருவரும் அதிர்ச்சியாகி “ஸ்மிரிதி” என்று கத்தி கண்டனம் தெரிவித்தனர்.
“நீ எதுக்கு அதிர்ச்சியாகற?” என்று சுசித் ராவிடம் கேட்டவள்,”அவனும், கபீரும் ஏற்கனவே முடிவு செய்திட்டாங்க.” என்று மெஹக்கிடம் கூலாக சொன்னாள்.
அதைக் கேட்டு கோபமடைந்து,“இன்னைக்கு கபீர் என்கிட்ட வாங்கிக்க போறான்.” என்றாள் மெஹக்.
மெஹக்கின் கோபத்தில் ஸ்மிரிதி மீது சுசித்ராவிற்கு ஏற்பட்ட அதிருப்தி மறைந்து மெஹக் மீது கோபமாக உருமாறியது.
“நீ பண்ணின வேலைக்கு எங்க யார்கிட்டையும் நீ வாங்கிக்காம இருந்தா போதும்.” என்று வெடுக்கென்று மெஹக்கிற்குப் பதில் சொன்னாள் சுசித்ரா.
அவர்கள் மூவரும் அவளுக்கு சம்மந்தில்லாத ஆனால் முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்ட ஜனனி,”நான் அத்தைகிட்ட போறேன்..அவங்களோடவே கீழே வந்திட்றேன்.” என்று சொல்லி அவர்கள் பதிலை எதிர்ப்பார்க்காமல் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
“ஒரு நிமிஷம்.” என்று சினேகிதிகளிடம் அனுமதி கேட்டு ஜனனியைத் தொடர்ந்து அறைக்கு வெளியே வந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“என்ன ஸ்மிரிதி?” என்று ஜனனி கேட்க,
“உன்னைச் சங்கடபடுத்தணும்னு அவங்க அப்படி பேசலே..நாங்க பிரண்ட்ஸ் மூணு பேரும் எப்பவும் எல்லாத்தையும் வெளிப்படையாதான் பேசுவோம்..உன்னை வெளி ஆளா  நினைக்கலே..அதான் பேசிட்டோம்.” என்று அவள் நட்பின் தன்மையை விளக்க, அதைக் கேட்டு,
“இனிமே என்னையும் சேர்த்து  பிரண்ட்ஸ் நாலு பேர்னு சொல்லு.” என்று ஸ்மிரிதிக்கே அதிர்ச்சி கொடுத்தாள் ஜனனி.
“அப்ப எதுக்கு இப்ப அத்தைகிட்ட போற?”
“அவங்க இரண்டு பேருக்கும் உன்னோட ஏதோ ஸீரியஸா பேசி வேண்டியது இருக்கு..அதான் போறேன்.” என்று உண்மை காரணத்தை சொன்ன அந்த க்ஷணத்தில் ஸ்மிரிதியின் சினேகிதியானாள் ஜனனி.
“தாங்க்ஸ் படி (buddy)..கீழே ரிஸெப்ஷன்லே மீட் பண்ணலாம்.” என்று ஜனனியிடம் விடைப்பெற்று கொண்ட ஸ்மிரிதி அறையில் நுழைந்தவுடன்,
“அவளுக்கு நாம பேசினது பிடிக்கலையா?” என்று மெஹக் கேட்க,
“நீங்க இரண்டு பேரும் என்கிட்ட ஏதோ பேசணும்னு நினைக்கறீங்கன்னு புரிஞ்சுகிட்டு நம்ம புது பிரண்ட் கிளம்பி போயிட்டா.” என்றாள் ஸ்மிரிதி.
“மெஹக் சிகரெட் பிடிக்கறதைப் பார்த்து, நம்ம பேச்சைக் கேட்டு கொஞ்சம் பயந்திட்டா.” என்றாள் சுசித் ரா.
“எனக்குப் பிடிச்சதைப் பிடிப்பேன், குடிப்பேன்.” என்று அடாவடியாகப் பேசிய மெஹக்,” மனு எதுக்கு நம்மளோட விஷயத்திலே தலையிடறான்?” என்று ஸ்மிரிதியிடம் கேட்டாள்.
“காலைலே அவன் இருந்த மூட்லே எல்லாத்தையும் கான்ஸல் செய்திருப்பான்..விடு..அப்பறம் பார்த்துக்கலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“இவளாலே இன்னைக்கு முடியாது..உனக்கு அதோட தேவையே இல்லாம போயிடுச்சு..இப்பெல்லாம் நீங்க இரண்டு பேரும் என்னைப் பற்றி நினைக்கறதில்லே…கவலைப்படறதில்லே..நானதான் வலிய வந்து உங்கிட்ட உறவு வைச்சுக்கறேன்.. 
இன்னைக்கு தில்லி வரவேணாம்னு கூட நினைச்சேன்.. புடவைங்களை மட்டும் நான் அனுப்பி விட்டிருக்கணும்..எங்கம்மா சொல்றது கரெக்ட்..நான் எவ்வளவு பெரிய ஸ்டார்னு உங்ககிட்ட காட்டிக்கறதில்லை அதானலதான் உங்களுக்கு நான் சீப்பா போயிட்டேன்..நான் வர்றதை விளம்பரபடுத்தியிருந்தா என் வல்யூ தெரிஞ்சிருக்கும்.” என்று அவளின் மனதைக் குடைந்து கொண்டிருந்ததைக் கோபமாக அவள் சினேகிதிகள் மேல் தூக்கி எறிந்தாள் மெஹக்.
அதைக் கேட்டவுடன்,”இன்ஃப்..இந்த அறைலேர்ந்து நாம வெளிலே போகறத்துக்கு முன்னாடி உன் பிராப்ளம் என்னென்னு எனக்கு முழுசாத் தெரியணும்.” என்று ஸ்மிரிதியும் பதிலுக்குக் கத்தினாள்.
மெஹக் பதில் சொல்லுமுன் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த சுசித்ரா,” நீ மாறவே இல்லை மெஹக்..உன்னோட பிராப்ளம்தான் உனக்கு என்னைக்கும், எப்பவும் பெரிசு…ஸ்மிரிதியோட கல்யாணதன்னைக்குக் கூட.. ஸ்கூலை விட்டு அனுப்பிடுவாங்கன்னு தெரிஞ்சும் அவளைப் பற்றி சுய நலமா யோசிக்காம உனக்காக உதவி செய்த ஸ்மிரிதியைப் பற்றி எப்படி நீ இப்படி பேசற?.. அவளும், நானும் இனி உன்னைப் பற்றி கவலைப்பட போகறதில்லை..நினைக்க போகறதில்லை..உங்கம்மா சொல்றதைப் போல நீ பெரிய ஸ்டாராவே இரு.” என்று அவள் பங்கிற்கு மெஹக்கைத் தாக்கினாள்.
அதற்கு மெஹக்கிடமிருந்து சண்டையையும், சத்தத்தையும் எதிர்பார்த்து இருவரும் காத்திருக்க, சத்தமில்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அதிர்ச்சியாயினர்.
“மெஹக்..ஸ்டாப் இட்.” என்ற கத்திய ஸ்மிரிதி பாத் ரூமிலிருந்து வெட் வைப்ஸை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்.
அதைக் கையில் வாங்காமல் மௌனமாக அழுது கொண்டிருந்தாள் மெஹக்.
“என்ன ஆச்சு..ஏதாவது பெரிய பிராப்ளமா?” என்று அவள் கோபத்தை உதறிவிட்டு மெஹக்கருகே அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு சுசித்ரா கேட்க,
“யாருக்குமே நான் தேவையில்லை.” என்று திக்கி திக்கி சொன்னவள் மறுபடியும் அழுகையைத் தொடர,
“என்ன உளற?” என்றாள் சுசித் ரா.
“எனக்குதான் என் குடும்பம் தேவை அவங்களுக்கு நான் தேவை இல்லை…இனிமே உனக்கும், ஸ்மிரிதிக்கும்கூட நான் தேவையில்லை.”
“நீ தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தில்லியே வந்திருக்ககூடாதுன்னு சொன்ன..இப்ப மாத்தி பேசாத..தண்ணி போட்டிருக்கியா?” என்று சுசித்ரா குழப்பத்துடன் மெஹக்கை கேட்க,
“அவ தெளிவாதான் இருக்கா.” என்று சுசித்ராவிடம் சொல்லிவிட்டு,”என்ன விஷயம்?” என்று குரலை உயர்த்தாமல், அழுத்தமாக மெஹக்கிடம் கேட்டாள் ஸ்மிரிதி.
 “எனக்கு உன் கல்யாணத்துக்கு தனியா வர சங்கடமா இருந்திச்சு அதனாலே அம்மாவை என்னோட  வர சொல்லி வற்புறுத்தினேன் ஆனா அவங்க வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க…நீயும், சுசித்ராவும் தானே எனக்குன்னு இருக்கீங்க உங்க இரண்டு பேருக்காககூட என்னாலே எங்கம்மாவை சம்மதிக்க வைக்க முடியலே..அவங்களுக்கு நான் முக்கியமில்லை அதனாலே நீங்களும் முக்கியமில்லை..
ஆறு மாசத்துக்கு ஒருமுறை மீனலைப் பார்க்க வெளி நாடு போயிட்டு வராங்க.. நான் போக விரும்பாத அவார்ட் நைட்டுக்குப் என்னை வற்புறுத்தி அழைச்சுகிட்டு போறாங்க இல்லை அவங்களே தனியா போக தயாரா இருக்காங்க…பதினெழு வயசுலேர்ந்து நடிச்சுகிட்டு வரேன்…எல்லா கடனையும் அடைச்சிருக்கேன்..பணம், பணம்னு அவங்க கேட்ட போதெல்லாம் கொடுக்கறேன்…
அவங்க சொல்றதைதான் நான் செய்யறேன்…நானா எதுவுமே செய்யறதில்லை எந்த முடிவும் தனியா எடுக்கறதில்லை..சுசி கல்யாணத்துக்கு கூப்பிட்ட போது வரமுடியாதுன்னு சொன்னாங்க.. இன்னைக்கு உன் கல்யாணத்துக்கும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க..எங்கப்பாவும் இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் நான் அவரை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாரு..
இன்னைக்கு நான் ஸ்டார் மெஹக்கா இருக்க விரும்பலே..சாதாரண மெஹக்கா உன் குடும்பத்திலே ஒருத்தியா இருக்கணும்னு நினைச்சேன்.. அந்த சுதந்திரம் என் குடும்பத்தோட வந்தாதான் கிடைக்கும்னு…” என்று பேசிக் கொண்டே போன மெஹக்கை கைகாட்டி நிறுத்தினாள் சுசித்ரா.
“மெஹக், உன் குடும்பம் மட்டும் விருப்பப்படலே நீயும் தான் சினிமாவுலே நடிக்க விரும்பினே.. பெரிய மூவி ஸ்டரா வரணும்னு நினைச்ச..உன்னோட கனவு அது..இப்ப நிஜமாயிருக்கு…அது ஏன் உனக்குப் பிடிக்காம போகணும்?..உன் வாழ்க்கைலே நீ எடுத்த முடிவுக்கு உன் குடும்பத்தைக் குறை சொல்லாத, காரணமாக்காதே..
நம்ம எல்லாருக்குமே ஒரே  மாதிரி குடும்பம்தான்..அதுக்காக அழுதுகிட்டு இருக்கறதுனாலே ஒண்ணும் ஆக போகறதில்லை..நான் எப்பவோ எடுத்த முடிவுனாலே என் குடும்பத்துக்கு என் மேலே ஏற்பட்ட ஏமாற்றங்கள் இப்பவும் சில நேரத்திலே மஞ்சு நாத்தையும், என் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்குது..அதையே நினைச்சு நான் இன்னும் எத்தனை நாள் பயந்துகிட்டு, அழுதுகிட்டு இருக்க முடியும்?… 
பிரேமா ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை..ஸ்மிரிதியைத் தவிர அவங்களுக்கு வேற யாருமேயில்லை..அதையெல்லாம் நினைச்சு அவ அழுதுகிட்டு இருக்காளா? அவளே எல்லாத்தையும் சமாளிக்கலே..காலைலேர்ந்து ஆன்ட்டியும், கீதிகாவும் ஒரே இடத்திலே இருக்காங்க..ஆன்ட்டிக்கு அது கஷ்டமா இருக்காது? அதுக்காக அவங்க அழுதுகிட்டு இருக்காங்களா இல்லை முகத்தைத் தூக்கி வைச்சுகிட்டு அலையறாங்களா? உன்  அப்பா, அம்மா உன்கூட வரலைங்கற உன்னோட சின்ன ஏமாற்றத்தை பெரிசாக்கி எல்லார் சந்தோஷத்தையும் சின்னதாக்கிடாதே.” என்று பொங்கி எழுந்தாள் சுசித் ரா.
ஆனால் அவள் பேச்சு மெஹக்கை சென்று அடையவில்லை. சுய பச்சாதாபத்தில் சுழன்று கொண்டிருந்த மெஹக்,
“நீ ஃபேஷன் டிஸைனிங் முடிச்சிட்டு சொந்தமா புட்டிக் வைச்சிருக்க…ஆரம்பத்திலேர்ந்து என்ன செய்யணும்னு ஸ்மிரிதியும் தெளிவா இருந்தா..என் படிப்புதான் பள்ளிக்கூடத்தோட நின்னுடிச்சு..மீனல் மாதிரியும் எனக்கு வேற எதுவும் புத்திலே ஏறலே..கனவெல்லாம் இல்லை கட்டாயத்தினாலதான் சினிமாவுக்கே போனேன்.“ என்று மேலே தொடருமுன்,
“மெஹக்..கனவோ? கட்டாயமோ? முதலே முடியாதுன்னு சொல்லாம அந்தப் பாதைலே பயணத்தை ஆரம்பிச்சிட்ட…இப்ப படிப்பு வரலைன்னு தான் படத்திலே நடிக்க போனேன்னு பொய் சொல்லாத.. ப்ரதீக் பின்னாடி சுத்தி உன் படிப்பை நீயே தான் பாழ் செய்துகிட்ட.” என்று மெஹக்கின் பள்ளிப் பருவத்தின் இரகசிய பக்கங்களைத் திறந்தாள் சுசித்ரா.
“நான் அவன் பின்னாடி போகலே, சுத்தலே..அவன் தான் என் பின்னாடி வந்தான், சுத்தினான்…மொத்த ஸ்கூலும் என் பின்னாடி வந்திச்சு, சுத்திச்சு..இப்பவும் நான் எவன் பின்னாடியும் சுத்தலை, போகலை.. என் பின்னாடி தான் எல்லாரும் சுத்தறாங்க, வர்றாங்க.” என்று கத்திய மெஹக்கின் குரலில் கர்வமும் எட்டி பார்க்க, அதை கரெக்ட்டாக கண்டுபிடித்த சுசித்ரா,
“நீ அன்னைக்கும் எவனையும் உன் பின்னாடி வராதேன்னு சொல்லலை..இன்னைக்கும் எவனையும் சொல்ல போகறதில்லை.…
நாம இரண்டு பேருமே அப்ப தப்பா இருந்தோம் மெஹக்..அக்ஸிடெண்ட் நடந்த அப்பறம் நான் தான் அறிவாளின்னு நினைச்சு என் வாயைத் திறக்காம எனக்கும் ஸ்மிரிதிக்கும் சம்மந்தமில்லைன்னு காட்டிக்கிட்டேன்…ஆனா நான் தான் அடிமுட்டாளுன்னு நான் செத்த பிழைச்ச அப்பறம் பீஜியோட அன்பும்,  நான் விட்டு கொடுத்த ஸ்மிரிதியோட நட்பும் தான் எனக்குப் புரிய வைச்சுது..
உனக்கு அப்படியில்லே மெஹக்..நீயும் ப்ரதீக்கிற்காக உன் வாயை மூடிக்கிட்டு ஸ்மிரிதியை விட்டு கொடுத்திருந்தாலும் அவ உன்னை விட்டுக் கொடுக்கலே..ப்ரதீக்கும், அவளும் பேசிக்கவே கூடாதுங்கற கண்டிஷன்லதான் ஸஸ்பென்ஷன் முடிஞ்சு அவ திரும்ப ஸ்கூலுக்கு வந்தா..
அந்த மாதிரி ஒரு சூழ் நிலைலே உனக்காக, உன்னைப் பற்றி கண்டதையும் பசங்க நடுவிலே பரப்பிக்கிட்டிருந்த அதே ப்ரதீக்கிட்ட பயத்திலே அவன் பீ (pee) பண்ணினதைப் பகிரங்கப் படுத்திடுவேன்னு ஸ்மிரிதி பயமுறுத்தினதுனாலதான் அவன் உன் விஷயத்திலேர்ந்து பின் வாங்கினான்…கார் உள்ளே ப்ரதீக் செய்ததை வெளியே சொல்லாம எனகென்ன வந்ததுன்னு ஸ்மிரிதியும் அவ வாயை மூடிக்கிட்டு இருந்திருந்தா உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்?…
அந்தப் ப்ரதீக் இப்பவும் அதே பொறுக்கிதனத்தோடதான் சுத்திக்கிட்டு இருக்கான்..உங்க பழையக் கதையைப் புதுசு பண்ணி உன்னைக் கேவலப்படுத்தி உன் பெயரை நாறடிச்சா அவன் பெயரையும் அவன் பண்ணின அசிங்கம் போல ஸ்மிரிதி நாறடிச்சிடுவான்னு பயந்துகிட்டு தான் அவன் உன் வழிக்கு வர்றதில்லை..ஆனா அவனுக்குத் தெரியாது உன்னை யாரோட இணைச்சுப் பேசினாலும் நீ இளிச்சுகிட்டுதான் இருப்பேன்னு.” என்று மெஹக்கின் மீது அவள் மனதிலிருந்த மாசுகள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்து அவர்கள் இருவரையும் சுத்தம் செய்ய முயன்றாள் சுசித் ரா.
 
“எத்தனை தடவை சொல்றது? ப்ரதீக்கோட நான் எங்கையும் வெளியே போனதில்லை..போகற ஐடியாவும் இருக்கலேன்னு..அதை ஏத்துக்க முடியாமதான் என்னைப் பற்றி அவன் அப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டான்..அப்ப நான் சொன்னதை யாருமே நம்ப தயாரா இல்லை….அதான் ஸ்மிரிதிகிட்ட உதவி கேட்டேன்.” என்று அவள் செய்கையை நியாயப்படுத்தினாள் மெஹக்.
“அவன் ஒரு பொறுக்கி, கோழை, பொய் பேசறவன்னு அவன் முகத்துக்கு நேர சொல்லியிருக்கணும்..அதை செய்ய உனக்கு தைரியமிருக்கலே..அவன் கேவலமானவன், அவன் பிரண்ட்ஸும் கேவலமானவங்கன்னு உனக்கு ஏன் புரியலே?..
மெஹக், அந்த வயசுலேதான் உனக்கு  யார் எப்படின்னு தெரியலே…பரவால்லே…இப்பவுமா உன்னாலே கண்டுபிடிக்க முடியலே..உன் வாழ்க்கைலே எதை, எப்ப, எப்படி செய்யணும்னு இனியாவது நீயே முடிவு செய்.” என்று அவளுக்கு தெரிந்த விதத்தில் மெஹக்கிற்கு சுசித்ரா அறிவுரை அளிக்க அந்த அறிவுரையை அரைகுறையாக ஏற்று அன்றிரவு சரியாக செய்வதாக நினைத்து சரியான ஆளிடம்  தவறாகப் பேசி அவன் கண்களுக்கு மெஹக் தப்பானவளாகத் தெரிய போகிறாளென்று சுசித்ராவும் அறிந்திருக்கவில்லை.
சுசித்ரா பேசியதைக் கேட்ட பின்னும் அன்று சினேகிதிகளைச் சோதிக்கும் மன நிலையில் மெஹக் இருந்ததால் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் அவள் ஆரம்பிக்க அதைக் கேட்டு சுசித் ராவும், ஸ்மிரிதியும் அவர்கள் கோபத்தைக் கைவிட்டு விட்டு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
“அம்மா சொல்றது கரெக்ட்தான்..ஸ்டார் வல்யூவைத் தவிர என்கிட்ட ஒண்ணுமில்லை.. அதையும் சரியா யூஸ் பண்ண தெரியாம எதுக்குமே பிரயோஜனமில்லாம இருக்கேன்..
அம்மா, அப்பா இரண்டு பேரும் அப்படியேதான் இருக்க போறாங்க.. அவங்களை அப்படியே ஏத்துக்கணும்னு பீஜி சொல்றாங்க..என்னாலே அது முடியுமான்னு தெரியலே.” என்று அவள் மனக்குழுப்பத்தை வெளியிட்டாள்.
மெஹக்கின் மன நிலையைப் பார்த்து கவலையடைந்த ஸ்மிரிதி அதற்குமேல் அவளிடம் பேசி  எதையும் புரிய வைக்க முடியாதென்று உணர்ந்து அன்று காலையில் மனு அவளிடம் சொன்னதை சிறிது மாற்றத்துடன் மெஹக்கிடம் சொன்னாள் ஸ்மிரிதி.
“உன் அம்மா, அப்பாக்கு உன்னைப் புரிய வைக்க முயற்சி செய்..இல்லை அவங்களை அப்படியே புரிஞ்சுக்க நீ முயற்சி செய்..ஏதாவது ஒரு முயற்சி வெற்றி அடையும்..இரண்டு முயற்சியும் வீணாயிடுச்சுன்னா உன் வாழ்க்கையை வீணாக்காத.. அவங்ககிட்டேயிருந்து விலகி வந்திடு.” என்று உறவை முறித்துக் கொள்ள ஆலோசனைக் கொடுத்தாள்.
“அவங்களை என்னாலே  எப்படி விட முடியும்? அவங்களை சார்ந்து தான் நான் இருக்கேன்.” என்றாள் மெஹக்.
“முட்டாள்..அவங்க உன்னை சார்ந்து இருக்காங்க..அது புரியாம உங்கம்மாவை, அப்பாவை மும்பைலேர்ந்து இந்த ஹோட்டல் ரூம் வரை உன்கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்க..முதல்லே அவங்களை இப்பவே உன் மனசுலேர்ந்து வெளியே அனுப்பு….இதுக்கு மேலே என்னாலே முடியாது..இன்னைக்கு இது போதும்..
என் கல்யாண ரிஸெப்ஷனுக்கு நானே லேட்டா போனேன் வக்கீலோட வாயை மூடறதுக்குள்ள விடிஞ்சு போயிடும்..அந்த மாதிரி அ  ந்நியாயத்தை உன் பிரண்டுக்கு செய்வியா?.. மாட்டேயில்லே? போ.. உன் முகத்தை சரிப்படுத்திகிட்டு வா..லெட்ஸ் கோ.” என்று சூழ் நிலையை லேசாக்கினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி திட்டியவுடன் அவளைச் சீர்படுத்திக் கொள்ள மெஹக் பாத் ரூமிற்குள் செல்ல,”என்ன ஸ்மிரிதி இவ இப்படி இருக்கா?” என்று சுசித்ரா கேட்க,
“விளம்பரமும், வியாபாரமும் தான் வாழ்க்கைன்னு நினைக்கறவ வேற எப்படி இருப்பா? அவ குடும்பம் அவளை நிராகரிக்கற போதுதான் அவளுக்கு அறிவு வர போகுது..அதுக்குள்ள அவ சொத்தை அவங்க அழிக்காம இருக்கணும்.”
“என்னைப் போலேவே கஷ்டப்பட போறா..நான் அனுபவிச்சதை அவ அனுபவிக்க வேணாம்னுதான் அவளுக்குப் புரியற மாதிரி பேசினேன்.” என்றாள் சுசித் ரா.
“இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது,,  அனுபவிச்சாதான் புரிஞ்சுக்க முடியும்….அவ இன்னைக்கு சரியில்லை…அவ மேலே ஒரு கண்ணு வைச்சுக்க.” என்று சுசித்ராவிற்கு மெஹக்கைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்தாள் ஸ்மிரிதி.
அவர்கள் மூவரும் சுசித் ராவின் அறையை பூட்டிக் கொண்டு மெஹக்கின் அறையை நோக்கி சென்ற போது அவளைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை மெஹக்கிடம் கேட்டாள் ஸ்மிரிதி.
“சிவகாமி ஆன்ட்டி அந்தப் பிளவுஸைப் போட்டுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப? ஸ்பேர் பிளவுஸ் தைச்சு கொண்டு வந்திருக்கியா?” 
“இல்லை..அது ஒண்ணு தான்.” என்று அசால்ட்டாக பதில் சொன்னாள் மெஹக்.
“எப்படி நீ அந்த மாதிரி ரிஸ்க் எடுத்த?” என்று நம்பமுடியாமல் ஸ்மிரிதி கேட்க,
“ஏன்னா அவங்க என்னோட மாமியார் இல்லை..உன்னோட மாமியார்.” என்று சிரித்துக் கொண்டே மெஹக் பதில் சொல்ல,
“அடிப்பாவி.” என்று சொல்லி அதே சிரிப்புடன் மெஹக்கின் முதுகில் ஸ்மிரிதி குத்த, சிறிது நேரத்திற்கு முன் மனம் விட்டு பேசிக் கொண்ட சினேகிதிகள் இருவரும் அப்போது மனம் விட்டு சிரிக்கவும் செய்தார்கள்.
சந்தோஷமாக சிரித்து கொண்டிருந்த சினேகிதிகள் அறிந்திருக்கவில்லை அவர்கள் இருவருக்கும் ஒருவரேதான் மாமியாரென்று.

Advertisement