கப்போர்டில் இருந்த மற்ற புடவைகளையும் வெளியே எடுத்து வைத்தாள் மெஹக். அதில் பார்டரில்லாத, ப்ளெயின், ஹாஃப் வெயிட், வெந்திய நிற டபுள் ஷேடில் அரக்கு நிற முந்தானையில் வேலைப்பாடுடன் இருந்த பட்டுப் புடவையை ஸ்மிரிதியிடம் காட்டி,”இது உன்னோடது.” என்றவள், பார்டரில்லாத, முழுவதும் அடர் அரக்கு நிறத்திலிருந்த இன்னொரு பட்டு புடவையை,”இது என்னோடது.” என்றாள். மீதியிருந்த பாய் கட்டம் புடவையப் பிரேமாவின் கையில் கொடுத்து,”உங்களுக்குப் பிடிச்ச லைட் ஷேட்..டிஸைன் சிவகாமி ஆன்ட்டி புடவை மாதிரிதான்.” என்று புடவைப் பட்டுவாடாவை முடித்தாள் மெஹக்.
அவள் மாமியாரின் பிளவுஸை ஹாங்கிலிருந்து வெளியே எடுத்து அதன் முழு வடிவமைபை மௌனமாகப் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. முன்புறம் அழகாக, புடவைக்கு மாட்சாக தைக்கப்பட்டிருக்க, பிளவுஸின் பின்புறம், மேல் பாதியை நெட் துணியில் தைத்து அதில் புடவைக் கலரில் பாட்ச் வர்க் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவள்,
“அம்மா, நீங்கதான் ஆன்ட்டிக்கு சொன்னீங்களா மெஹக்கிட்டதான் புடவை இருக்குண்ணு.” என்று கேட்டாள்.
“அது மட்டும்தான் சொன்னேன்.” என்றார் பிரேமா.
“மெஹக்..ரொம்ப நல்ல டிஸைன்..லெட்ஸ் டூ இட்.” என்றாள்.
“என்ன டீ சொல்ற..பின்னாடி பாதிக்கு மேலே வலைத் துணி.” என்றார் பிரேமா.
“அந்தப் பாதிலே யாரும் துணியே போட்டுகறதில்லை..அங்கதான் நெட் துணி வைச்சு டிஸைன் செய்திருக்கா..ஆன்ட்டிக்கு நல்லாதான் இருக்கும்.”
“எனக்கு ஸ்டைலிஸ்டெல்லாம் வேணாம்..ஒரு கொண்டையைப் போட்டு மல்லி பூவை சுத்திக்கணும்…பொட்டு வைச்சுக்கணும்..அவ்வளவுதான்.” என்று அவரின் ரிஸெப்ஷன் அலங்கார எண்ணத்தை வெளியிட்டார் சிவகாமி.
“நோ..நோ..இன்னைக்கு உங்க பையனுக்குக் கல்யாணம் ஆகியிருக்கு..அவனை நீங்க யாருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கீங்க? அதனாலே நீங்கதான் இன்னைக்கு ஸுப்பர் ஸ்டார்.” என்று அவரைக் கேலி செய்தாள் மெஹக்.
அவரது புடவையை எடுத்து பார்த்து கொண்டிருந்த சிவகாமிக்கு ஸ்மிரிதியின் கையிலிருந்த பிளவுஸ் கண்ணில் பட, அது அவர் புடவைக்கானது என்று புரிந்து கொண்டவர்,”யாரோட வேலை இது?” என்று காட்டமாகக் கேட்டார்.
“ஆன்ட்டி..நாம இரண்டு பேரும் இன்னைக்கு மெஹக் மாடல்லே பிளவுஸ் போட போறோம்..சினி ஸ்டார், ஸுப்பர் ஸ்டார்ன்னு இரண்டு ஸ்டார்ஸ் நடுவுலே நான் தான் டல்லா தெரிய போறேன்.” என்றாள் அன்றைய நிகழ்ச்சிகளின் கதாநாயகி.
“இது பிளவுஸா? கொசுவலையாட்டாம் இருக்கு.. ..இப்பவே வீட்டுக்கு ஆள் அனுப்பி வேற பிளவுஸ் எடுத்திட்டு வர சொல்றேன்.” என்று கோபமாகப் பேசினார் சிவகாமி.
“யாரை அனுப்ப போறீங்க? உங்க இரண்டு பசங்களைத் தவிர வேற ஆள் யார் இருக்கா?” என்று கரெக்ட் கேள்வி கேட்டாள் ஸ்ம்ரிதி.
“கடைலேர்ந்து என்கிட்ட புடவையை மட்டும் காட்டினா இந்த ஜனனி..பிளவுஸ் பற்றி வாயேத் திறக்கலே..காலைலே நம்ம வீட்டுக்கு வந்திருந்த போது சொல்லியிருந்தாக்கூட ஒரு கருப்பு பிளவுஸைப் பைலே போட்டுகிட்டு வந்திருப்பேன்..அது எல்லா புடவையோடையும் மாட்ச் ஆகும்.”
“அவளுக்கு இப்பவும் இந்தப் பிளவுஸ் பற்றி எதுவுமே தெரியாது..எனக்குமே தெரியலே….இன்னைக்கு அவங்களோட பெட்டை (pet) இந்த மாதிரி பிளவுஸ்லேப் பார்த்தா மூணு பேரும் மயங்கிடுவாங்க.” என்று மாமியாரைப் அவள் பேச்சினால் மயக்கினாள் மருமகள்.
“நான் போர்வையை சுத்திக்கிட்டு வந்தாலும் நல்லாயிருக்குணுத்தான் அவங்க மூணு பேரும் சொல்லுவாங்க.” என்று குடும்ப நபர்களின் அபிப்பிராயத்தைக் குப்பையில் போட்டார் சிவகாமி.
“இவ்வளவு நாள் நீங்க போர்வையை தான் சுத்திக்கிட்டிருந்தீங்க அதனால தான் அவங்க அப்படி சொல்லியிருப்பாங்க..இன்னைக்கு இதைப் போட்டுக்கோங்க உங்களைச் சுத்தி வருவாங்க.” என்று சிவகாமியை சுற்றி வலைப் பின்ன ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“நிஜமாவா சொல்ற? என பசங்களுக்கும், அங்கிளுக்கும் இந்த மாதிரி பிடிக்கும்ணு சொல்றியா?” என்று அவர் ஆவலை சந்தேகம் போல் கேட்டு வலை பிளவுஸில் சிக்கிக் கொண்டார் சிவகாமி.
எந்த வயதிலும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் எதிர்பார்ப்பை, ஆசையை வெளியிட்டு அவரும் இயற்கைக்கு விதிவிலகல்ல என்று நிரூபித்தார் சிவகாமி.
“உங்களுக்கு இந்த மாதிரி உடுத்த பிடிக்காட்டாலும் அவங்களுக்கு உங்களை பார்த்தவுடனே பிடிச்சிட போகுது…என்னை நம்புங்க ஆன்ட்டி.” என்று மருமகள் அவள் வார்த்தை பிரயோகத்தால் மாமியார் தப்பி விடாதபடி வலையை இறுக்கினாள்.
“புடவை நல்ல கனமா இருக்கு..பிளவுஸ் தான் லேசா இருக்கு.” என்று கனமான ஆசையை லேசாக வெளியிட்டார் சிவகாமி.
“ஆன்ட்டி..கனமான புடவைக்கு லேசான பிளவுஸ்..லேசான புடவைக்கு கனமான பிளவுஸ்..அதனாலதான் நெட் துணிலே தைச்சிருக்காங்க..இரண்டும் கனமா இருந்தா எப்படி உடுத்திப்பீங்க? உங்களுக்குப் பிடிக்கலேன்னா விடுங்க..மாறனை அனுப்பி வீட்லேர்ந்து ஒரு போர்வையைக் கொண்டுகிட்டு வர சொல்றேன்..அதையே போர்த்திக்கோங்க..உங்க பெட் ரூம்லெர்ந்து உங்களுக்குப் பிடிச்ச புடவை, பிளவுஸைக் கொண்டுகிட்டு வரத்தான் டயமாகும்..போர்வையை சுருட்டிகிட்டு வர டயமாகுது.” என்று ஒரே போடாகப் போட்டு சிவகாமியைச் சிந்திக்க விடாமல் அவரை முழுசாக வலையில் வளைத்து போட்டாள் ஸ்மிரிதி.
அதற்குபின் மெஹக்கின் ஸ்டைலிஸ்ட் உதவியுடன் சிவகாமியின் விருப்பப்படியே சிகையில் ஆரம்பித்து சகல அலங்காரமும் செய்யப்பட்டது. அனைத்தும் முடிந்த பின் அவரது தோற்றதைப் பார்த்து ஆச்சரியமும், ஆனந்தமுமடைந்த சிவகாமி,
“எனக்கு இதெல்லாம் நல்லா இருக்காதுன்னு நினைச்சுகிட்டு இவ்வளவு நாள் நான் முயற்சி செய்து கூட பார்க்கலே.. இந்தப் பொண்ணுங்களுக்கு எது நல்லாயிருக்கும்ணு எப்படிதான் தெரியுதோ?” என்றார்.
“உனக்கு பிடிச்சிருக்கில்லே..எனக்கு சந்தோஷம்.” என்று சினேகிதியின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட பிரேமாவும் அவர் சினேகிதியைப் போல் அதே டிஸைன் புடவையில் அமரிக்கையாக காட்சியளித்தார்.
“பிடிச்சிருக்கு டீ..ஆனாலும் கொஞ்சம் கூச்சமா இருக்கு.” என்று சிவகாமி தயக்கத்துடன் சொல்ல,
“இதைவிட மார்டர்னா டிரெஸ் போட்டுக்கிற கேர்ல் பிரண்ட்ஸ் உங்களுக்கு.. அவங்களோட சேர்ந்து மீட்டிங், ஷாப்பிங் போகும் போது எங்கே போகுது இந்தக் கூச்சம்? உங்க கூச்சத்தையெல்லாம் கொண்டு போய் குப்பைத் தொட்டிலேப் போடுங்க.” என்று அடாவடியாகப் பேசி அவள் மாமியாரை அடக்கினாள் மருமகள்.
அவர்களின் அலங்காரம் முடிந்த பின் இந்த தலைமுறை சினேகிதிகளும் போன தலைமுறை சினேகிதிகள் போல் அவர்கள் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தனர்.
கனமான தங்க நகைகள், பின்னலிட்ட கூந்தலில் மல்லிகைப் பூ, வெண்மை, வெந்திய கலரில் அரக்கும் கலந்திருந்தப் புடவை. இவற்றில் மென்மையான அப்ஸரஸ் போல் அழகாகத் தோற்றமளிக்காமல் வார்த்தைகளில் விவரிக்க முடியாத கம்பீர அழகுடன் ஒளிர்ந்தாள் ஸ்மிரிதி.
அவள் தோற்றத்தில் திருப்தியடையாத மெஹக்,
“உனக்கு எல்லாம் பொருத்தமா இருக்கு..ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை.” என்றாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொண்ட ஸ்மிரிதி,”வெளிலே போட்டுகிறது எதுவாயிருந்தாலும் உள்ளே இருக்கற ஸ்மிரிதியை மறைக்க முடியாது.” என்று புன்சிரிப்புடன் பதில்லளித்தாள்.
“எனக்குள்ள மெஹக்குன்னு யாருமே இல்லே அதனால்தான் நான் எது போட்டுகிட்டாலும் அதுலே பொருந்தி போயிடறேன்.” என்று பதில் சொன்ன மெஹக்கின் கண்கள் கலங்கியிருந்தன.
அரக்கு நிறத்தில் முந்தானையில் வேலைப்பாடு நிறைந்த பிளேயின் பட்டுப் புடவை, கனமான தங்க நகை என்று அசத்தலான அழகுடன் இருந்த அவள் தோழியை அணைத்துக் கொண்ட ஸ்மிரிதி,
“அதனால தான் நீ மெஹக்..சினி ஸ்டார்..நான் சாதாரண ஸ்மிரிதி…உன்னை இன்னைக்கு எது குடைஞ்சுகிட்டு இருக்கோ அதை தூக்கிட்டு அலையாத, வெளியே தூக்கிப் போடு.” என்று அட்வைஸ் செய்தவள்,
“ஆன் ட்டி, நாம மூணு பேரும் ஒரே போல டிரெஸ் பண்ணிகிட்டிருக்கோம் அதனால முன்னாடி, பின்னாடி தெரியற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கலாம்.” என்று சொல்லி சிவகாமியுடன் அவளும், மெஹக்கும் ஃபோட்டோவாக எடுத்து தள்ளினர். பிரேமாவுடனும் சேர்ந்து நால்வராக ஃபோட்டோ எடுத்து கொண்ட பின்,
“அம்மா, புவனா ஆன்ட்டியை இங்க அழைச்சுகிட்டு வரோம்..நீங்க மூணு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க..நாங்க ஜனனியோட சுசித்ரா ரூமிற்கு போறோம்..எல்லாம் ரெடியானவுடனே கபீர் ஃபோன் செய்வான் அப்ப நாம கிளம்பி போவோம்.” என்று சொல்லி புவனாவை மெஹக்கின் அறையில் விட்டு விட்டு ஜனனியுடன் சுசித்ராவின் அறைக்குச் சென்றனர்.
“ஜானு, ராம் எங்கே?” என்று ஸ்மிரிதி விசாரிக்க,
“அவங்களை அப்பவே கபீர் வந்து அழைச்சுகிட்டு போயிட்டாரு.” என்றாள்.
இவர்களுக்குக் கதவைத் திறந்த சுசித்ரா லெமன் யெல்லோ கலரில் ஸ்மிரிதி, மெஹக் போல் பார்டரில்லாதப் பட்டு புடவையும் அதற்கு மாட்சிங்காக பேட்ச் வர்க் பிளவுஸ்ஸும் அணிந்திருந்தாள். கதவைத் திறந்தவள் கையில் A1 சிப்ஸ் பாக்கெட்.
“வாவ்.” என்று ஒரே போல் அலங்காரத்தில் இருந்த சினேகிதிகள் இருவரையும் பார்த்து வாயைப் பிளந்தவளிடம்,
“என்னோடது எப்படி இருக்கு? என்று கேட்ட ஜனனி, கான்ட்ரஸ்ட் பார்டர் பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள். முகத்தில் லேசான மேக் அப், லைட் வெயிட் நகைகள், தலையைப் பின்னி அதில் அவர்களுக்காக சிவகாமி ஸ்பெஷலாக வரவழைத்திருந்த மல்லிப் பூவைச் சூடி அளவான செயற்கைப் பூச்சில் இயற்கை அளித்ததை இயல்பாக ஏற்று கொண்டு இனிமையாக தோற்றமளித்தாள்.
அவளுக்குச் சுசித்ரா பதில் சொல்லுமுன் அவள் அருகே நின்று கொண்டிருந்த மெஹக், அவளை அணைத்து,”ரொம்ப லட்சணமா இருக்கே..உன்னை மாதிரி இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு.” என்றாள்.
“ஐய..நீங்க போய் என்னை லட்சணம்னு சொன்ன அந்த லட்சணத்தை நான் எங்கே போய் சொல்ல?” என்று அலுத்துக் கொண்டாள் ஜனனி.
அதற்குள் அறையினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்ட சுசித்ரா,”எல்லாம் என்னோட செலக்ஷன்..யாருக்கு எது பொருத்தமா இருக்கும்னு நான் தான் ஜனனிக்கு கயிட் செய்தேன்.” என்றாள்.
“நிஜமா வா ஜானு..இவளா செலெக்ட் செய்தா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“ஆமாம்..எனக்கு கடைக்குப் போனவுடனே எல்லாமே நல்லா இருந்த மாதிரி தோணிச்சு..அந்த மன நிலைலே நான் தப்பாதான் வாங்குவேன்னு பயம் வந்திடுச்சு..அதான் சுசித்ராவுக்கு வீடியோ கால் செய்தேன்..அவங்க அந்த உதவிக்குப் பதில் உதவி கேட்டாங்க..சரின்னு சொன்னேன்..அப்பறம் அவங்களே எல்லாருக்கும் செலெக்ட் செய்து கொடுத்திட்டாங்க.” என்றாள் ஜனனி.
“சுசி..உன்னோட சின்ன புத்தியை இந்த சின்ன பொண்ணுகிட்ட காட்டியிருக்க. “ என்று வெகுண்டாள் மெஹக்.
மெஹக் எதற்கு கோபித்துக் கொண்டாள் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,“பதிலுக்கு என்ன உதவி கேட்டா ஜானு?” என்று கேட்க,
“சிப்ஸுக்கா?” என்று மெஹக்கும், ஸ்மிரிதியும் ஆச்சரியத்துடன் கேட்க,
“ஒவ்வொரு மாசமும் மஞ்சு நாத்தோட ஆளுங்ககிட்ட சொல்லி வரவழைப்பேன்..ரொம்ப சாப்பிடறேன்னு இந்த மாசம் அவன் வரவழைக்க மாட்டேனிட்டான் அதான் இவகிட்ட சொல்லி, தில்லிக்கு உன் கல்யாணத்துக்கு வரும் போது கொண்டு வர சொன்னேன்..எப்ப அவன் ரூமை விட்டு போவான்னு காத்துகிட்டு இருந்தேன்..நேத்துலேர்ந்து பக்கத்திலே பாக்கெட்டை வைச்சுகிட்டு சாப்பிட முடியாம நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்.” என்றாள் சுசித் ரா.
“பிரிச்சு வைச்ச பாக்கெட் அவன் கண்ணுலே படும் போது அவனுக்குத் தெரியத்தான் போகுது.” என்றாள் மெஹக்.
“அவன் குப்பைத் தொட்டியைத் திறந்து பார்த்தா தான் தெரியும்.” என்று ஒரு பாக்கெட் முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் என்று சுசித்ரா சொன்னதைக் கேட்டு,
“எத்தனை பாக்கெட் வாங்கிட்டு வந்த?” என்று ஜனனியை விசாரித்தாள் ஸ்மிரிதி.
“இரண்டு தான்.”
“முதல்லே அந்த இன்னொரு பாக்கெட்டை இவகிட்டேயிருந்து வாங்கி ஊருக்குத் திரும்ப எடுத்துகிட்டு போ.” என்று கட்டளையிட்டாள்.
“ஏன்?”
“அதையே விடாம சாப்பிட்டு முழு பாக்கெட்டைக் காலி செய்திருக்கா..இவ அம்மாவுக்கு தெரிய வந்திச்சு மஞ்சு நாத் தான் பாவம்…மத்தியானம் சாப்பிட்டியா? இல்லையா? சிப்ஸ் பாக்கெட்டை மொத்தமா முடிச்சிருக்க.” என்றாள் ஸ்மிரிதி.
அவர்கள் வந்ததிலேர்ந்து சாப்பாட்டை பற்றி பேசும் சுசித்ராவை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர் சினேகிதிகள் இருவரும்.
“மாசமா இருக்கறவங்களுக்கு அப்படி தான் பசிக்கும்..நீங்க இரண்டு பேரும் கண்ணு வைக்காதீங்க.” என்று பெரிய மனுஷி போல் பேசி சுசித்ராவிற்கு ஆதரவு அளித்து அவள் மனதில் இடம் பிடித்தாள் ஜனனி.
“தாங்க்ஸ் ஜானு.” என்று ஸ்மிரிதியைப் போல் அழைத்து ஜனனியின் மனதில் இடம் பிடித்தாள் சுசித்ரா.
“இப்ப இவ்வளவு வாய் பேசு..வீட்டிலே அப்படியே பொட்டி பாம்பா அடங்கிப் போய்..”ஸ்மிரிதி, நீயே உன் அத்தைகிட்ட சொல்லிடுன்னு ஓடி வந்திட்ட.” என்று ஜனனியைக் கேலி செய்தாள் ஸ்மிரிதி.
“பிரமாதமா தைச்சு கொடுத்திருக்காங்க..இன்னைக்கு மெஹக்கோட டிஸைனருக்கு இரண்டு மாட்ல்ஸ் ஃப்ரீயா கிடைச்சிருக்காங்க..அந்த மாதிரி காம்பினெஷன் அவங்களுக்கு இதுவரை கிடைச்சிருக்காது..அக்கா, தங்கை..அம்மா, பொண்..அந்த மாதிரிதான் பார்த்திருப்பாங்க..ஆனா இன்னைக்கு ஒரே போல பிளவுஸ் போட்டுகிட்டு இருக்கற மாமியார், மருமகளைப் பார்க்க போறாங்க.” என்று வில்லங்கத்தை வெளியிட்ட ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை அன்று ரிஸெப்ஷனில் மாடல்களாக வலம் வர போவது அவளது மாமியாரும் அவரது இரண்டு மருமகள்களுமென்று.
“ஆன்ட்டிக்கு உங்க இரண்டு பேர் போல பிளவுஸா?” என்று அதிர்ச்சியடைந்தாள் ஜனனி.
“ஆமாம்.”
“ஐயோ..அதைப் பார்த்து என் அத்தை என்னைய கொலை செய்ய போறாங்க.” என்றாள் ஜனனி.
“உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க..அதை ஆன்ட்டி விரும்பிதான் போட்டுகிட்டிருக்காங்க.”
“எப்படி உன் அத்தையை சம்மதிக்க வைச்ச?”
“அதைப் போட்டுகிட்டா அழகா இருப்பாங்கன்னு சொன்னேன்.. அழகாதான் இருக்காங்க..அவங்களைப் பார்த்து இரண்டு பசங்களும், அங்கிளும் இன்னைக்குக் கிளீன் போல்ட் (bowled)” என்றாள் ஸ்மிரிதி.
“ஐயோ..அத்தையைப் பார்த்து இல்லை இன்னைக்கு உன்னைப் பார்த்துதான் மனு போல்ட்டாகனும் (bowled).” என்றாள் ஜனனி.
“தப்பா சொல்ற..அவந்தான் என்னை போல்டாக்கனும் (bowled) .” என்று ஸ்மிரிதி சொல்ல, அவள் சொன்னது புரிந்து அவள் சினேகிதிகள் இருவரும் அடக்கமுடியாமல் சத்தமாக சிரிக்க, ஜனனி புரியாமல் விழிக்க, ஜனனி அருகில் வந்த ஸ்மிரிதி அவள் காதில்,”இராத்திரி ஆட போகறது டிஃபரெண்ட் பால் கேம் (different ball game) ஜானு பேபி.” என்று கிசுகிசுக்க, அவள் விளக்கத்தைக் கேட்டு,“ச்சீய்” என்று ஜானு வெட்கப்பட,
மெஹக்கும், சுசித்ராவும்,”ஸ்மிரிதி, விட்டிடு.. அவ சின்ன பொண்ணு இதுக்கு மேலே வேணாம்.” என்று சொல்லி திருமதி ஜனனியை ஸ்மிரிதியின் போல்ட் (bold) பேச்சிலிருந்து காப்பாற்றினர்.