Advertisement

ஸ்மிரிதியின் மனு – 3_2
பக்கத்து அறைக்குச் சென்று பிரேமாவிடம் சிவகாமியின் வரவைப் பற்றி தகவல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்து மறுபடியும் தூங்கிப் போனாள் ஸ்மிரிதி.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளை அறையின் அழைப்புமணி எழுப்ப, தூக்க கலக்கத்துடன் போயி கதவைத் திறந்தவளைப் பார்த்து,”சாப்பிட வா..பிரேமாவும், நானும் ஆர்டர் செய்தாச்சு.” என்றார் சிவகாமி.
பாத் ரூமிற்கு சென்று முகத்தை கழுவிக் கொண்டு பிரேமாவின் அறைக்கு சென்றாள் ஸ்மிரிதி.
அறைக்குள் நுழைந்தவுடனையே ஏதோ சரியில்லை என்று ஸ்மிரிதிக்குத் தோன்றியது.  பிரேமாவின் முகத்தைப் பார்த்ததும் அது என்னவென்று புரிந்துபோனது. சினேகிதிகள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் என்று யுகித்தாள்.  மூவரும் மௌனமாக சாப்பிட்டனர். சிவகாமி அவர் உணவை முடித்தபின்,
ஸ்மிரிதியைப் பார்த்து,
”மனுவும், அங்கிளும் இன்னிக்கு நைட் டெல்லி போறாங்க..நீ எந்த ஃபிளைட்? என்று கேட்டார்.
“இராத்திரி ஃபிளைட்தான்.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கம்மா உன்னோட வர மாட்டா..அவ இங்க இருக்க போறானு நான் என் டிகெட்ட நாளைக்கு மாத்திகிட்டேன்..இப்ப அவ எப்படி கிளம்ப முடியும்? அவளுக்கு டிக்கெட் நாளைக்கு என் ஃபிளைட்லப் போடு..அவ பெங்களூர்ல இறங்கட்டும்..நான் தில்லி வந்திடறேன்.” என்று ஸ்மிரிதிக்கு உத்தரவிட்டார் சிவகாமி.
அவருக்குப் பதில் சொல்லாமல் இருந்த ஸ்மிரிதியைப் பார்த்து, “உங்கம்மா சொன்னாதான் கேட்பியா? நான் சொன்னாக் கேட்க மாட்டியா?” என்று கோபித்து கொண்டார் சிவகாமி.
“நான் யார் சொல்றதையும் கேட்க மாட்டேனு உங்களுக்கேத் தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியை யாரும், எதுவும் செய்ய வைக்க முடியாது என்பது சிவகாமி அறிந்ததுதான் அதனால் அந்த பேச்சை மேலேத் தொடராமல்,
“இன்னிக்கு காலைலக் கட்டிகிட்டு இருந்தியே அந்த மாதிரி புடவை ஒண்ணு வேணும்.” என்றார்.
“அம்பதாயிரம் ஆகும்..பணத்த எடுத்து வைங்க..புடவை வீடு வந்து சேரும்.” என்று சொன்னதோடு இல்லாமல்,”உங்க லேடீஸ் மீட்ல கட்டிக்கவா..நடத்துங்க..இப்பெல்லாம் ஆன் டிங்கதான் அட்டகாசமா டிரெஸ் செய்துக்கறாங்க.” என்று ஸ்மிரிதி சொல்லி முடிக்கவில்லை அவளைத் தலையணையால் அடித்து கொண்டிருந்தார் சிவகாமி.
“ஏன் டீ..என்னைப் பார்த்து என்ன பேச்சு பேசற? தில்லிக்காரியா நீதான் இருக்க..நான் தமிழாட்டம் தான் இன்னிவரைக்கும் இருக்கேன்..அடுத்த வாரம் ராம் அவன் வைஃபோட நம்ம வீட்டுக்கு வரான்..புது பொண்ணுக்குக் கிஃப்ட் கொடுக்கத்தான் கேட்டேன்..நீ கட்டியிருந்த புடவை நல்லாயிருந்துச்சு அதனால உன்னைக் கேட்டா நீ என்ன பேச்சு பேசற.” என்று அங்கலாய்த்தார் சிவகாமி.
“உங்களுக்கு இல்லைனு முதல்லையே சொல்லிட்டு புடவைப் பற்றி விசாரிச்சிருக்கணும்..முன்னாள் ஐஏஸ் அதிகாரி பொண்டாட்டிக்குனு நான் நினைச்சுகிட்டேன்..வீட்ல உங்களுக்குப் போட்டியா வேற ஆளு கிடையாது..மூணு பேருக்கும் பெட் நீங்கதான்..அதனால நீங்க ஆசைப்பட்டு கேட்டா இல்லைனு யாரு சொல்லுவாங்க?” என்று சாப்பிட்டு முடித்து கட்டிலில் படுத்து கொண்டு சும்மா இருக்க விரும்பாத ஸ்மிரிதியின் வாய் சிவகாமியின் வாயைக் கிளறியது.
“எனக்கு வீட்ல போட்டி இருக்கா இல்லையாங்கற பேச்சு எதுக்கு? கேட்டதுக்கு பதில் சொல்லு..புடவைக் கிடைக்குமா? கிடைக்காதா?”
“புடவை மட்டும் வேணுமா இல்லை அதோட நான் போட்டுகிட்டிருந்தது எல்லாம் வேணுமா?” என்று ஸேல்ஸை ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“அதெல்லாமும் கிடைக்குமா?” என்று கேட்க,
“அதுக்கு மேலையும் கிடைக்கும்..அதே போலக் கலர்ல ராமுக்கு மேட்சிங்கா குர்த்தா தைச்சிடலாம்..இப்ப அதுதான் ஃபேஷன்..என்ன சொல்றீங்க?”
“புடவை, குர்த்தா மட்டும் போதும்..மற்றதெல்லாம் வேணாம்..முக்கியமா பிளவுஸ்..அதை துணியா கொடுக்க சொல்லிடு.” என்றார் கட் அண்ட் ரைட்டாக.
“டன்..எப்ப வேணும்?” 
 “அவங்க நம்ம வீட்டுக்கு வரும்போது நீயே இதெல்லாம் எடுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடு.” என்றார் சிவகாமி.
“அது முடியாது..அடுத்த வாரம் உதய்பூர் போகணும்..அப்பறம் கீதிகா வீட்டு கல்யாணம் அடெண்ட் செய்யணும்..உங்க அட் ரெஸ்ஸுக்கு கூரியர் செய்திடுவா என் பிரண்ட்.” என்று சிவகாமியின் அழைப்பை மறுத்தாள் ஸ்மிரிதி.
“ஒரே கல்யாண ப்ரோகரமா அடெண்ட் செய்யற? என்ன விஷயம்? உங்கம்மா எதையும் விசாரிக்க மாட்டா..நான் விசாரிக்கறேன்..அடுத்து உனக்குதான் கல்யாணமா? மாப்பிள்ளை யாரு?” என்று பிரேமாவைப் போல் அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்ததை நேரடியாகக் கேட்டார் சிவகாமி.
அன்று காலையில்தான் கல்யாணத்திற்கு காத்து இருக்கவில்லை என்று பிரேமாவிடம் சொன்னவள்,
“தேடிக்கிட்டிருக்கேன் ஆன் ட்டி..எவனும் சரியா அமைய மாட்டேங்கறான்..என் கதை தெரிஞ்சவனதான் கல்யாணம் செய்துக்கணும்..தில்லில இருக்கற எல்லாருக்கும்தான் எங்கப்பாவைப் பற்றி தெரியுமே..அதனால அங்க தேடினாதான் எனக்கு பிரச்சனை இருக்காது.” என்று தெளிவாகப் பதில்லளித்தாள் ஸ்மிரிதி.
“அதுக்குதான் கீதிகா வீட்டுக் கல்யாணமா?” என்று கேட்டார் சிவகாமி.
“அவங்க அண்ணன் பொண்ணுக்குக் கல்யாணம்.” என்ற பதிலின் மூலம் அவள் கல்யாணத்தைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி, நீ அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு போகாத.’ என்று அதுவரை மௌனம் காத்த பிரேமா அவர் அபிப்பிராயத்தை வெளியிட்டார்.
“ஏன்?”
“எனக்கு அது சரியாப் படல.”
“மாப்பிள்ளை பெரிய இடத்து பையன்..இந்தக் கல்யாணம் நடந்திச்சுனா அவங்க ஊர்ல கீதிகா அண்ணன் பெரிய தலைவராவரு.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாவாட்டம் பேசற..எவன் பெரிய தலையானா இல்ல தலைவரானா உனகென்ன? உங்கப்பாவும்தான் என்னென்னமோ செய்து முன்னுக்கு வரணுமுனு பார்த்தாரு..எதுவும் நடக்கல…கீதிகாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரு..ஆனா இப்பவும் அப்படியேதான் இருக்காரு.” என்றார் பிரேமா.

Advertisement