Advertisement

ஸ்மிரிதியின் மனு – 3_1
மனுவின் கல்யாணத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியதைக் கேட்டு அவனின் மேலான ஆர்வம் ஸ்மிரிதியை ஆட்கொண்டது. தில்லியில் அவர்கள் இருவரின் வட்டமும் தனி தனி.  அவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் இதுபோல் சுப நிகழ்ச்சிகளில் அவர்கள் சந்தித்து கொண்டதேயில்லை. பொது நிகழ்ச்சிகளுக்கு நாதனுக்கு அழைப்பு விடுப்பவர்கள் கார்மேகத்தை தெரிந்திருந்தாலும் அவரைத் தனிமையில் சந்திக்கதான் விரும்புவார்கள். 
சினேகிதிகளின் பேச்சில் தலையிடாமல் நாதன் அருகில் நின்று கொண்டிருந்த மனுவை ஆராயந்தாள் ஸ்மிரிதி.  அத்தனை அருகில் அவனைப் பார்த்தபோது அவளுக்கு அவன் வீக்கலாகத் தெரியவில்லை. அவனுடைய உயரமும் அதற்கேற்ற உடலமைப்பும் அவனைச் சீருடைக்கு சொந்தக்காரன் போல் காட்டியது.  கடவுள் கஷ்டமேப் படமால் அவன் முக அமைப்பை அவன் தாய் சிவகாமியிடமிருந்து காபி செய்து அவனைச் சிவகாமியின் செல்வனாக்கியிருந்தார். அகலமான நெற்றியும், அடர்த்தியான தலைமுடியும், கழுகுப் பார்வையும், முறுக்கிய மீசையும் அவனைத் தில்லை நாதனின் மகனாகக் காட்டவில்லை தில்லிக்கு ராஜாவாகக் காட்டியது.   ஒருவேளை இந்த ராஜா அவனுக்கு ஏற்ற ராணியைத் தேடிக் கொண்டிருப்பதால்தான் அவன் திருமணம் தள்ளிப் போகிறதோ என்று எண்ணினாள் ஸ்மிரிதி.
தில்லை நாதனுடன் ஊர் ஊராக சுற்றி கொண்டிருந்த சிவகாமி மனு, மாறன் இருவரின் படிப்பிற்காக தில்லியில் நிரந்தரமாக தங்க முடிவு செய்து கடந்து பதினைந்து வருடமாகத் தலை நகரை அவர் சொந்த ஊராக்கியிருந்தார்.
சிவகாமியை முதன்முதலாக ஸ்மிரிதி சந்தித்த போது அவளுக்கு பத்து வயது.  அதுவரை தில்லியில் யார் வீட்டிற்கும் ஸ்மிரிதியை அழைத்து போகாத பிரேமா முதல்முறையாக அவருடைய சினேகிதியான சிவகாமியின் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றார். 
அடித்தளம், ஆள் பலம் எதுவுமில்லாமல் அரசியலில் நுழைய முயன்று கொண்டிருந்த அப்பா, அவரின் கொள்ளைகளால் கவரப்பட்டு அவரை மணந்து கொண்ட கொள்கைவாதி ஆசிரியையான அம்மா. அவர்கள் இருவருக்கும் மகளாகப் பிறந்த ஸ்மிரிதியிடம் அவ்வபோது அரசியல்வாதி அப்பாவின் இயல்பும், ஆசிரியை அம்மாவின் இயலாமையும் சேர்ந்து அவளை அராத்தாக்கியிருந்தது.
ஸ்மிரிதியின் இந்தத் தன்மைக் காரணமாக ஒத்த வயதான ஸ்மிரிதியும், மாறனும் ஒத்து போகாமல் ஒதுங்கிப் போனர். பத்து வயதான ஸ்மிரிதியும், பதினெழு வயதான மனுவும் ஒருவருகொருவர் புரிந்து கொள்ள முடியாதப் புதிராகிப் போயினர்.   
சிவகாமி, பிரேமா, புவனா மூவரும் ஒரே பள்ளியில் ஆசிரியர்களாக வேலைப் பார்த்த சினேகதிகள்.  அவர்களில் புவனா கல்யாணமாகி கணவனை இழந்த கைம்பெண்ணாக கை குழந்தையுடன் காப்பாற்ற யாருமில்லாததால் கட்டாயத்தினால் வேலைக்கு வந்தவர். 
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் சேர்ந்த சிவகாமி என்னும் ஆசிரியை, மாளாமல் மனு எழுதி, சலிக்காமல் சமூக சேவை செய்து வந்ததைப் பார்த்து அவர்மேல் தீராத காதல் கொண்ட அந்த மாவட்ட  ஆட்சி தலைவர் அவரை மணந்து மனைவியாக்கி கொண்டார். 
மாவட்ட ஆட்சி தலைவரின் மனைவியானப் பின்னும், மனு என்ற மகனுக்குத் தாயான பின்னும் ஆசிரியைப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் சிவகாமி. 
அவர்கள் மூவரில் வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தப் பிரேமா, திருமணத்திற்கு முன்பு பொழுதுபோக்கிற்காக வேலைக்கு வந்தவர். வித்தியாசமானப் பின்னனியைக் கொண்ட அந்த மூவரையும் விதி பிணைத்தது.
அக்கம் பக்க கிராம மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களின் தேவைக்கேற்ப அதை மனுவாக மாற்றி எழுதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சேர்ப்பதை சேவையாக தொடர்ந்து செய்து கொண்டிருந்த சிவகாமிக்கு பிரேமாவும் உதவி செய்ய ஆரம்பித்தார்.
 சிவகாமியுடன் பலமுறை ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்ற பிரேமாவிற்கும் அங்கே முற்போக்கான சமூக சிந்தனைகளுடன் சுற்றி கொண்டிருந்த இளைஞனான கார்மேகத்திற்கும் காதல் ஏற்பட்டது. அந்தஸ்தில்லாத அனாதையை, வளர்ந்து வரும் அரசியல்வாதியை, மருமகனாக ஏற்று கொள்ள பிரேமாவின் வசதியானக் குடும்பம் மறுத்துவிட, அவரின் குடும்பத்தை உதறிவிட்டு கார்மேகத்தை மணந்து கொண்டார் பிரேமா. 
கார்மேகத்துடன் கோயமுத்தூரில் வாழ்க்கையை ஆரம்பித்த பிரேமா அவரின் அரசியல் ஆசைக்கேற்ப முதலில் தமிழகத்தின் தலை நகருக்கும் அதன் பின் பாரத நாட்டின் தலை நகருக்கும் குடிபெயர்ந்தார்.  நாட்டின் தலை நகரத்திற்கு வந்தபின் கார்மேகம் நிஜமாகவே கார் மேகமாகிப் போனார். மழை பொழிந்து மக்களின் வாழ்க்கையை வளமாக்குவார் என்ற பிரேமாவின் எதிர்பார்ப்பு இருண்டு போனது.  
எந்த ஒரு கட்சியையும் சார்ந்து இல்லாமல் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் எல்லாருக்கும் தேவைப்படும் ஆளாக கார்மேகம் அவதாரம் எடுத்தார்.  சமூக மாற்றத்தைக் கொண்டு வர நினைத்தவர் அதே சமூக மாற்றங்களுக்குத் தடைக்கல்லானார். கொள்கைகளைத் துறந்த கார்மேகம் குப்பைத் தொட்டியானார். கண்ட கண்ட குப்பைகளை ஏற்கும் கார்பரேஷன் குப்பைத் தொட்டிப் போலில்லாமல் ஆட்சியாளர்களின் அறையை அலங்கரிக்கும் அழகான, அவசியமான அத்தியாவசியமானப் பொருளானார். கார்மேகத்தின் இந்த அவதாராத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்று கொள்ள முடியாமல் கணவன், மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.  அப்போது ஸ்மிரிதிக்கு பதினைந்து வயது.  
விவாகரத்துக்குப் பின் பிரேமாவுடன் பெங்களூர் போக மறுத்து அவள் தந்தை கார்மேகத்துடன் தில்லியில் இருக்க முடிவு எடுத்தாள் ஸ்மிரிதி. விவாகரத்து ஆன ஒரு வருடத்திற்குள் அரசியல் பின்புலம் இருந்த கீதிகா என்ற விதவையை மறுமணம் செய்து கொண்டு அவளுடைய ஐந்து வயது மகன் மனிஷூக்கு தந்தையானார் கார்மேகம். 
ஒரே ஊரிலிருந்தாலும் தில்லியை விட்டு பிரேமா சென்ற பின் ஸ்மிரிதியுடனான உறவு சிக்கலாகிப் போனது சிவகாமிக்கு.  கார்மேகமும், நாதனும் அரசியல்வாதி, அரசாங்க அதிகாரி என்று பல நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்ட போது சிவாகமிக்குதான் சங்கடமாகிப் போனது. சினேகிதியினுடைய முன்னாள் கணவரிடம் அவர் முகம் கொடுத்து பேச விரும்பவில்லை.  கார்மேகத்தின் இரண்டாவது திருமணத்திற்குப் பின் ஸ்மிரிதியுடனான சிவகாமியின் உறவு காலப் போக்கில் உதிர்ந்து போனது.
அதே ஆசிரியை வேலையை தொடர்ந்து கொண்டு அவரின் ஒரே மகனை வளர்த்து ஆளாக்கி இன்று திருமணமும் செய்து முடித்திருந்தார் புவனா. அவருடைய மகன் திருமணத்திற்கு வந்திருந்த அவருடைய நெருங்கிய சினேகிதிகள் இருவரையும் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தவர்,
“நீங்க இரண்டு பேரும் இரண்டு நாள் என்கூட இருந்திட்டு போங்க.” என்று திடீர் கோரிக்கை வைத்தார்.
“நான் எப்ப கோயமுத்தூர் வந்தாலும் உன்கூடத்தான் இருக்கேன்..இந்த தடவைதான் உன் வீடு கல்யாண வீடுனு ஹோட்டல்ல தங்கியிருக்கேன்.  நான் இருக்க முடியாது.. தில்லிப் போயி ராம் வர்றத்துக்கு ஏற்பாடு செய்யணும். ராமும் உன் மருமகளும் தில்லில எங்களோட ஒரு நைட் இருந்திட்டுதான் இங்க திரும்புவாங்க.” என்று புவனாவின் கோரிக்கையை உடனே நிராகரித்தார் சிவகாமி.
“நீயாவது என்கூட இரண்டு நாள் இருந்திட்டு போ..ராம் ஹனிமூனிலேர்ந்து திரும்பி வர வரைக்கும் நான் தனியாதான் இருப்பேன்..சொந்தகாரங்க எல்லாம் இன்னிக்கு சாயந்திரமேக் கிளம்பி போறாங்க..ராமும் மண்டபத்திலிருந்து அவன் மாமியார் வீட்டுக்குப் போயிட்டு அங்கிருந்தே ஹனிமூனுக்குப் போயிடுவான் அதனால என்கூட நீ இரண்டு நாள் தங்கிட்டு போனா சந்தோஷமா இருக்கும்.” என்று பிரேமாவிடம் சொன்னார் புவனா.
ஸ்மிரிதியை யோசனையுடன் பார்த்த பிரேமா ஒரு முடிவுக்கு வந்தார்.  புவனாவைப் பார்த்து,
“நான் உன்கூட ஒரு நாள் இருக்கேன்…நாளைக்கு நைட் நான் கிளம்பிடுவேன்.” என்றார்.
“ரொம்பத் தாங்க்ஸ்.” என்று அவரை அணைத்து கொண்ட புவனா,
“வாங்க..ராம மீட் செய்யலாம்.” என்று அவர்கள் ஐவரையும் மேடைக்கு அழைத்து சென்றார்.
காலிலிருந்த செருப்பைக் கழட்டிவிட்டு, மேடையேறினர் ஐவரும்.  
பெரியவர்களைப் பின் தொடர்ந்தனர் மனுவும், ஸ்மிரிதியும்.  ஹோமத்தில் அமர்ந்திருந்த மணமக்களை ஆசிர்வாதம் செய்தபின் அவர்கள் இருவருக்கும் பரிசுப் பொருளைக் கொடுத்தனர் நாதன், சிவகாமி தம்பதியர்.
“இந்தப் பரிசு உன்னோட இரண்டு பிரண்ட்ஸூம் சேர்ந்து கொடுக்கறது.” என்று பிரேமாவையும் சேர்த்து கொண்டார் சிவகாமி. மணமக்கள் அக்னியை வலம் வரும்வரை காத்திருந்து ஃபோடோ எடுக்கத் தயாராயினர் சினேகிதகள் மூவரும்.
மணமகளுக்கு அருகில் அவளின் மாமியாரும் அவரின் இரு தோழிகளும் நின்று கொண்டனர். ராமிற்கு அடுத்து மனுவும், மனுவிற்கு அருகில் ஸ்மிரிதியும் அவளுக்கு அடுத்து கடைசியாக நாதன் நின்று கொண்டார். நாதனுக்கும், மனுவிற்கும் இடையே இருந்த ஸ்மிரிதிக்கு மனுவின் அருகாமை சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் மனுவோ சங்கடம் எதுவுமில்லாமல் அவன் நண்பன் ராமுடன் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தான்.  பிரேமாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவளை மறுபுறும் அனுப்பிய சிவகாமிக்கு மனதிற்குள் சிலை வைத்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.   
நாதன், ஸ்மிரிதியை, மனு மூவரையும் அருகே நிற்கும்படி ஃபோடோகிராஃபர் சைகை செய்ய, இரண்டு செகண்ட் ஃபோடோ எடுக்க இருபது நிமிட ஏற்பாடு தேவைப்பட அவளருகில் நின்று கொண்டிருந்த மனுவிடமிருந்து வெளிப்பட்ட வெப்பத்தில் கவலையான ஸ்மிரிதி ஃபோடோகிராபரைக் கருணையுடன் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்து கொள்ளாமல்,
“மேடம்..கொஞ்சம் சிரிங்க.” என்று அவனுக்கு அவனே முடிவைத் தேடிக் கொண்டான்.
அதை கேட்டவுடன் அவளருகில் நின்று கொண்டிருந்த மனு உடனே மேடையை விட்டு கீழே இறங்கி நேரே ஃபோடோகிராபரிடம் சென்று அவன் கமெராவை வாங்கி அதை எப்படி உபயோகிக்க வேண்டும் விளக்கி அதை செட் செய்து கொடுத்து மறுபடியும் ஸ்மிரிதியின் அருகில் வந்து நின்று கொண்டான் புன்னகையுடன்.  
ஃபோடோகிராபர் முகத்தைப் பார்த்த ஸ்மிரிதிக்கு சிரிப்பு தாளவில்லை. அவள் அருகில் நின்று கொண்டிருந்த மனுவிடம் “உன் வேலையக் காட்டிட்ட.” என்று முணுமுணுத்தாள்.
“நீ இங்க நாள் பூரா இருக்க பிளான் போட்டியா?” அவளைத் திரும்பக் கேட்டான் மனு.
“ஐய..முட்டாளுக்குப் பிளானெல்லாம் போட தெரியாது..போட்ட பிளான உடைக்கதான் தெரியும்.” என்றாள்.
“நீ உடைக்கறதப் நீயே பொறுக்க கத்துகிட்டியா?” என்று கேட்டான் மனு.
அவன் சொன்னதைக் கேட்டவுடன் சட்டென்று கோபம் வந்தது ஸ்மிரிதிக்கு. 
“எனக்கு இப்ப பதினைஞ்சு வயசு இல்ல..” என்றாள்.
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.” என்று மறுபடியும் கேட்டான் மனு.
“நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல.”
“அப்ப இன்னும் உடைச்சுகிட்டுதான் இருக்க..பொறுக்கறத்துக்கு உன்கூடதான் அந்தக் கூட்டமே இருக்குமே.”
“மனு” என்று சற்று குரலை உயர்த்தினாள் ஸ்மிரிதி.
“இப்ப உங்க யாருக்குமே பதினைஞ்சு வயசு இல்ல..உன்கூட இப்ப ஆன் ட்டியும் இல்லை..பெரியவங்க உதவி தேவையில்லை..அதனால என்ன நடக்குதுணு வெளிலத் தெரிய வாய்ப்பில்ல.” என்று கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் அவள் வாழ்க்கையை விமர்சித்தான்.
மனுவின் பேச்சில் ஸ்மிரிதியின் முகம் வாடிப் போனது.
நல்லவேளை ஃபோடோ எடுத்தபின் அனைவரும் மேடையிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்ததால் ஸ்மிரிதியின் முக வாட்டத்தை யாரும் கவனிக்கவில்லை.
“நீங்க சாப்பிட போங்க..நான் அதுக்குள்ள எல்லாரையும் கவனிச்சுட்டு வரேன்.” என்று சொல்லி மற்ற விருந்தினரைக் உபசரிக்க சென்றார் புவனா.
அவர்கள் அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்றனர்.  அங்கு ஒரு பக்கம் டிபன், இன்னொரு பக்கம் சாப்பாடு என்று இரண்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
“பிரேமா, காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்டார் சிவகாமி.
“நாங்க இரண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடல..ஒரு மணி தூங்கினோம் அப்பறம் குளிச்சு ரெடியாகி நேரா இங்க வந்திட்டோம்.” என்று பதில்லளித்தார்.
“நாங்க லைட்டா டிபன் சாப்பிட்டோம்..இப்ப என்ன சாப்பிடறதுனு தெரியல.”
“அம்மா..டிபனே சாப்பிடுங்க..கிளம்பணும்.” என்றான் மனு.
“டேய்..நான் இங்க என் பிரண்ட்ஸோட இருந்திடரேன்..நீயும், அப்பாவும் போயிட்டு வாங்க.” என்றார் சிவகாமி.
“நம்ம எல்லாரும் தான் போகணும்.” என்றார் நாதன்.
“கொஞ்சம் லேட்டா போகலாம்.” என்றார் சிவகாமி.
“அவங்கிட்ட சொன்ன டயத்துக்கு நாம கண்டிப்பா அங்க இருக்கணும்…வா.” என்று கட்டளையிட்டார் தில்லை நாதர்.  மறுபேதும் சொல்லாமல் கட்டளைக்கு அடிபணிந்தார் சிவகாமி.
டிபன் சாப்பிட்டு முடிந்தவுடன் புவனாவிடம் சொல்லி கொண்டு புறப்பட்டனர் சிவகாமி குடும்பத்தினர். 
அப்போது மனுவைப் பார்த்து,”ஸ்மிரிதியோட போன் நம்பர் வாங்கிக்க.” என்றார் சிவகாமி.
“உங்ககிட்ட இல்லையா?” என்று மனு கேட்க,
“என் போன்ல இருக்கு..அதை ஹோட்டல்ல வைச்சிட்டேன்..மண்டபத்தில எங்கையாவது தொலைஞ்சு போயிடுச்சுன்னா.” என்றார் சிவகாமி.
“உங்ககிட்ட இருக்கில்ல..டயமாகுதுக கிளம்பலாம்.” என்று ஸ்மிரிதியிடம் நேரடியாகப் போன் நம்பரைக் கேட்க விருப்பமில்லாமல் வெளியேறினான் மனு. 
அவர்கள் சென்ற பின் கல்யாணத்திற்கு வந்தவர்களுடன் புவனாவும் பிஸியாகிவிட, அம்மாவும், பெண்ணும் மட்டும் தனியாக அமர்ந்திருந்தனர்.
“அம்மா, மாத்திரையச் சாப்பிடுங்க..லேட்டாயிடுச்சு.” என்று நினைவுப் படுத்தினாள் ஸ்மிரிதி.
டைனிங் ஹாலிலிருந்து கையோடு கொண்டு வந்திருந்த பாட்டிலிருந்து நீரைக் குடித்து மாத்திரையை விழுங்கினார் பிரேமா.
இருவரும் மௌனமாக கல்யாணச் சடங்குகளைப் பார்த்து கொண்டிருந்தனர்.
திடீரென்று,“கல்யாணப் பொண்ணுக்கு உன் வயசு இருக்கும்.” என்றார் பிரேமா.
“அதனால என்ன மா.” என்றாள் ஸ்மிரிதி.
“உனக்கு என்ன ஆசிர்வாதம் செய்யணுமுனுத் தெரியாம..”நல்லா இரு மா” அப்படினு சொல்லிட்டா புவனா..இந்த வயசுல எல்லாரும் அடுத்தது உன் கல்யாணதான்னு சொல்லுவாங்க..மனுக்கு அப்படிதான் ஆசிர்வாதம் செய்தா..உனக்கு அந்த மாதிரி எப்படி செய்யமுடியும்…உன் அம்மா நானே என் கல்யாணத்த ரத்து செய்து உட்கார்ந்துகிட்டிருக்கேன்..உனக்கு கல்யாணம் நல்லதுனு நானும் சொல்ல முடியாது வேற யாரும் சொல்லத் தயங்குவாங்க.” என்றார் பிரேமா.
“எதுக்கு மா காலைலேர்ந்து இப்படி பேசிகிட்டிருக்கீங்க..நான் கல்யாணத்துக்கு காத்துகிடக்கல.” என்று கோபமாகப் பேசினாள் ஸ்மிரிதி.
“மனுக்கு பொண்ணு பார்க்கதான் இப்ப போயிருக்காங்க..சிவகாமி ஒரு வார்த்தை சொல்லிக்காமப் போயிட்டா.” என்று அங்கலாய்த்தார் பிரேமா.
“விடுங்க மா..நாம கிளம்பலாமா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“நாம இங்க வந்திருக்க கூடாது..பத்து வருஷமா எங்கையும் போகறதில்ல….இப்பதான் தனியா வாழறதுனா என்னெனு தெரிஞ்சுகிட்டேன் அதனாலதான் புவனா பையன் கல்யாணத்துக்கு வந்தேன். அந்தப் பையனத் தனியா வளர்த்து ஆளாக்கி இன்னிக்கு கல்யாணமும் செய்து வைச்சுட்டா.” 
“நாந்தான் இரண்டுகெட்டானா வாழந்துகிட்டிருக்கேன்..உன் கல்யாணத்துக்கு அப்பறம் உங்கப்பாவ விட்டிருக்கணும்..அன்னிக்கு அதுக்கு மேல ஒரு நிமிஷம் அவரோட இருக்க பிடிக்காம என்னைப் பற்றி மட்டும் யோசிச்சு  முடிவெடுத்தேன்..இப்ப உன்னையும் சேர்த்து யோசிச்சிருக்கணுமுனு தோணுது.” என்றார் பிரேமா.
“இன்னிக்கு காலைலதான் உங்ககிட்ட சொன்னேன் நீங்களோ, அப்பாவோ எதுக்கும் காரணமில்லைனு.” என்று மறுபடியும் சொன்னாள் ஸ்மிரிதி.
“நீ செய்தது கரெக்ட் ஸ்மிரிதி..உங்கப்பாவோட இருக்கறதுதான் நல்லது…நாம இரண்டு பேரும் தனியா காலம் தள்ளியிருக்க முடியுமுனு எனக்குத் தோணல..புவனாக்குப் பையனாப் போனதாலக் கஷ்டம் தெரியல..இன்னிக்குக் காலைல அந்த ஹோட்டல் ஆளுக்குக்கூட நம்ம மேலக் கரிசனம் வரல..நீ என்கூட வந்திருந்து நான் விவாகரத்து ஆனவனு என்னென்ன பேச்சு வந்திருக்குமோ..இப்ப நீ உங்கப்பாக்கூட இருக்கறத யாரும் கேள்வி கேட்க முடியாது..உனக்குக் கல்யாணம் ஃபிக்ஸான எனக்கு சொல்லு..அம்மாவ நீயும் ஒதுக்கிட மாட்டியே?” என்று மனசு உடைந்து போனார் பிரேமா.
அழுது கொண்டிருந்த தாயைத் தோளில் தாங்கி கொண்ட மகள் அவள் தாய்க்குத் தாயானாள்.  “அம்மா, ப்ளீஸ்..அழாதீங்க..இது கல்யாண மண்டபம்..நாம கிளம்பலாம்.” என்று முடிவெடுத்தாள் ஸ்மிரிதி.
“எனக்கு யாரோடையும் இருக்க வேணாம்..இன்னிக்கு இராத்திரியே பெங்களூருக்குப் போயிடலாம்..நீ இப்பவே போயி புவனாகிட்ட சொல்லிடு.” என்று சின்ன குழந்தைப் போல் அடம்பிடித்தார் பிரேமா.  
“சரி..நான் சொல்லிடறேன்..நீங்க கண்ணைத் துடைச்சுக்கங்க..இப்பவே நாம ஹோட்டல் போயிடலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
மணமக்களுடன் இருந்த புவனாவிடம் அன்று மாலை பிரேமாவை அவர் வீட்டில் கொண்டு விடுவதாக சொல்லிவிட்டு அதைப் பற்றி பிரேமாவிடம் எதுவும் சொல்லாமல் அவர்கள் இருவரும் ஹோட்டல் வந்து சேர்ந்த போது மதியம் ஆனது.
பகல் உணவைப் புறக்கணித்து விட்டு அவரவர் அறையில் தனியே ரெஸ்ட் எடுத்து கொண்டனர் தாய், மகள் இருவரும்.
ஒரு மணி நேரம் கழித்து ஸ்மிரிதியின் போன் அவளை எழுப்பியது.  அழைத்தது “மனு.”
அவள் போனை எடுத்தவுடன்,”எந்த ஹோட்டல்?” என்று கேட்டான்.
அவள் ஹோட்டல் பெயரைச் சொன்னவுடன்,”அம்மாவ அழைச்சுகிட்டு வரேன்.” என்று சொல்லி போனை டிஸ்கனெக்ட் செய்தான் மனு.

Advertisement