Advertisement

ஸ்மிரிதியின் மனு – 29
பாலாஜி மந்திரின் வெளிப் பிரகாரத்தில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி, ஸ்மிரிதி, மனுவின் திருமண வைபவத்தைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி. எப்போதும் அணியும் வெள்ளை சல்வார் கமீஸில் அமைதியாக, எளிமையாக அமர்ந்திருந்தவர் வட இந்தியாவின் பெரிய தொண்டு நிறுவத்தனின் ஸ்தாபகர் என்று அறிமுகப்படுத்தி வைத்தால்தான் தெரிய வரும்.  பஞ்சாபி பாகில் (punjabi bagh) வசிக்கும்  பஞ்சாபி பாட்டி போல் தென்னிந்திய கல்யாண சடங்கை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தார் .  அவருக்குத் துணையாக அவரருகில் அவரின் வாக்கிங் ஸ்டிக்குடன் தல்ஜித்.  
கல்யாண சடங்குகளின் போது ஸ்மிரிதிக்குத் துணையாக அவளருகில் சுசித் ராவும், ஜனனியும் இருக்க,  மனுவிற்கு மாறனும், ராமும் உடனிருந்தனர். மஞ்சு நாத், கபீர், மனிஷ் மூவரும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்.  அந்த சிறிய முன் மண்டபத்தின் ஒரு பக்கம் தில்லை நாதன், சிவகாமியும் கோயமுத்தூரிலிருந்து வந்திருந்த முக்கிய உறவினர்களுடன் அமர்ந்திருக்க, அவர்களுடன் மனுவின் தரப்பில் வந்திருந்த அவனின் சினேகிதன் ஒருவனும் அமர்ந்திருந்தான்.  இன்னொரு பக்கத்தில் கார்மேகத்தின் குடும்பம். அவர்களை அடுத்து மிலிந்த், மீராவுடன் புவனாவும், பிரேமாவும் அமர்ந்திருந்தனர்.  
தல்ஜித், மனுவின் நண்பன் இருவரைத் தவிர ஆண்கள் அனைவரும் வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர்.  கபீரும், மனிஷும் ராமின் உதவியுடன் அவன் வாங்கி வந்திருந்த வேஷ்டி சட்டையில் அக்மார்க் தென்னிந்தியர்கள் போல் தென்பட்டனர்.  பீஜியைத் தவிர கல்யாணத்திற்கு வருகை தந்திருந்தப் பெண்கள் அனைவரும் பட்டுப் புடவையில் காட்சியளித்தனர். பனாரஸ் பட்டும், காஞ்சிபுர பட்டும் கண்களைப் பறித்தன.
கல்யாண சடங்குகள் முடிந்து மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் வணங்கிய பின், கோவையிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்ட அனைத்து கோவில்களின் திரு நீறு, குங்குமப் பிரசாதத்தைக் கல்யாணத்திற்கு வருகை தந்திருந்த பெரியோர்களிடம் அளித்து, புதுமண தம்பதிகளின் நெற்றியில் பூசி ஆசிர்வாதம் செய்ய வைத்தார் சிவகாமி. அந்த வரிசையில் ஸ்மிரிதியும், மனுவும் முதலில் வணங்கியது வெளி பிரகாரத்தில் அமர்ந்திருந்த பீஜியைதான்.  ஸ்மிரிதியை அவரோடு அணைத்துக் கொண்ட பீஜி,
”நீ உன் கல்யாணத்துக்கு வைச்சிருந்த பணத்தை தல்ஜித் கிட்ட கொடுத்தே அதே பணம் இப்ப உன்னோட கல்யாணப் பரிசா உன்கிட்ட திரும்பி வருது..கூடிய சீக்கிரம் அரசாங்க அனுமதி கிடைச்சிடுச்சும்..அதுக்கு பிறகு நீ விரும்பறதை செய்யலாம்.. உனக்கு எல்லா விதத்திலும் தல்ஜித் உதவியா இருப்பான்….ஆனா எனக்கு நீ ஒரே ஒரு வாக்குறுதி கொடுக்கணும்.” என்றார்.
அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் பீஜி அவளிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று அவர் விளக்கி சொல்லமலேயேப் புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“என்னோட ஊர்லே நீங்க செய்ய போகற நல்லது எல்லாருக்கும் தான் பீஜி..என் குழுவைச் சேர்ந்தவங்க, மற்றவங்கன்னு நான் யாரையும் பிரிச்சு பார்க்க மாட்டேன்..அந்த ஊர் முன்னேற்றத்துக்கு எல்லாருமே அவசியம் பீஜி.” என்றாள். 
ஸ்மிரிதியின் பதிலைக் கேட்டவுடன் ஸ்மிரிதியை இறுக்க அணைத்து கொண்டார் பீஜி.
அப்போது பீஜியின் அருகே நின்று கொண்டிருந்த தல்ஜித், அவளது ஊரில் சிறிய அளவிலானக் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க அரசாங்கத்திடம் கோரியிருந்த அனுமதிப் படிவத்தையும், ஆரம்பக்கட்ட வேலைகளுக்கான காகிதங்களையும் கொண்ட ஃபைலை ஸ்மிரிதியிடம் கொடுத்தான்.
அதை  அவள் கைகளில் வாங்கிக் கொள்ளாமல் அவளருகில் நின்று கொண்டிருந்த மனுவைக் கை காட்டினாள் ஸ்மிரிதி.
“இனி இவன்தான் எல்லா பேப்பர் வர்க்கும் பார்த்துக்க போறான்..இவன்கிட்ட பேசிக்க.” என்றாள் அசால்ட்டாக.
“என்னது இது?” என்று தல்ஜித்திடம் மனு கேட்க,
எங்கே ஆரம்பித்து அதை எப்படி விளக்குவது என்று தல்ஜித் தயங்க,
“எங்கப்பா என் கல்யாணத்துக்கு வைச்சிருந்த பணத்தை தல்ஜித்கிட்ட கொடுத்தேன்..அதே பணத்தை இப்ப என் ஊர்லே இன்வெஸ்ட் செய்து என் கல்யாண பரிசா பீஜி எனக்கு திரும்ப கொடுக்கறாங்க..எங்கப்பாகிட்ட என் சம்மந்தப்பட்டது எல்லாத்துக்கும் நீதான பேப்பர் கேட்ட..இதுவும் என் சம்மந்தப்பட்டது..அதான் உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்.” என்று அன்று காலையில் கோவிலில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த பிறகு முதல்முறையாக மனுவுடன் நேரடியாகப் பேசினாள் ஸ்மிரிதி.
அவள் பெயரில் இருப்பதற்கு மட்டும்தான் அவன் பொறுபேற்று கொள்ள முடியும், அவள் சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் தற்போதைக்கு அவன் பொறுப்பேற்க இயலாது என்று உணர்ந்த மனு,
“இப்போதைக்கு இவ பெயர்லே இருக்கறதுக்கு மட்டும் தான் நான் பொறுப்பு.. நீங்க இதை ஸ்மிரிதிக்காக செய்தாலும் உங்க பெயர்லேதான் செய்ய போறீங்க அதனாலே அது சம்மந்தப்பட்ட எல்லாம் உங்களோடேயே இருக்கட்டும்..உங்களோட ஒரு கிளையா அதை நிர்வாகம் செய்யுங்க..அவ தனியா ஏதாவது செய்யணும்னு நினைச்சிருந்தா இந்தப் பணத்தை உங்ககிட்ட கொடுத்திருக்கவே மாட்டா..அதனாலே எப்பவும் போல எல்லா உதவியையும் அவ வெளியே இருந்தே செய்யட்டும்..அவளும் அதைதான் விரும்புவா.” என்றான் மனு.
மனு சொன்னதைக் கேட்ட பீஜி,”சில நேரத்திலே இவளுக்கு சிலதைப் புரிய வைக்கறது கஷ்டம்..சில நேரத்திலே இவளைப் புரிஞ்சுக்கறதும் கஷ்டம்.. அதைக் கடந்து வர உங்க இரண்டு பேருக்கும் குருவோட கிருபை பரிபூரணமா இருக்கட்டும்..வாஹே குரு.” என்று மனு, ஸ்மிரிதி இருவர் தலையிலும் கைவைத்து,
இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க.” என்று ஆசிர்வாதம் பீஜி.
ஸ்மிரிதியைப் பற்றி பீஜி சொன்னதிலிருந்த உண்மையை கணவன், மனைவி இருவருமே உணர்ந்தனர். 
அந்த விடியற்காலை வேளையில் வீடே கல்யாண பரபரப்பில் இருக்க, விடமால் ஒலித்துக் கொண்டிருந்த அவன் ஃபோனைப் புறக்கணித்துக் கொண்டிருந்தான் மனு.  அவன் புறக்கணிப்பை உணர்ந்திருந்த ஸ்மிரிதியும் சலிக்காமல் அழைத்துக் கொண்டிருந்தாள்.  ஒரு கட்டத்திற்குமேல் பொறுக்க முடியாமல்,
“என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டான்.
“நான் உன்கிட்ட என்ன சொன்னேன் அன்னைக்கு..எங்கம்மா உங்க வீட்டுக்கு வர மாட்டாங்கன்னு சொன்னேனில்லே.” என்று கேட்டாள்.
“உங்கம்மா இப்ப இங்க இல்லை.. கபீர் வீட்லே பீஜியோட இருக்காங்க.” என்றான் மனு.
“மனு..அம்மா இப்பதான் என்கிட்ட சொன்னாங்க..இன்னைக்கு எதுக்கு அந்த மாதிரி ஏற்பாடு செய்திருக்க?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
அவளுக்காகவென்று அவன் செய்வதை அவள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று அவனுக்குப் புரியவில்லை.  அதனால் அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஃபோனை அணைத்தான் மனு.
அதற்கு பின் அவர்கள் இருவரும் பேசி கொண்டது கோவிலில், பீஜியின் முன்னிலையில் தான். 
பீஜியிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் மண்டபத்தில் அமர்ந்திருந்த மற்ற பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் பெற்று கொண்டனர் புது கல்யாண ஜோடி. அதன்பின் ஒவ்வொரு குடும்பமாக கல்யாண ஜோடியுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  முதலில் பீஜியுடன், பின் கார்மேகத்தின் குடும்பத்துடன், அதன் பின் சிவகாமியின் குடும்பத்துடன் பிரேமா சேர்ந்து கொள்ள, புவனாவின் குடும்பம், கபீரின் குடும்பம்,  மனுவின் ஃபிரண்ட் என்று வந்திருந்த விருந்தினர்கள் அனைவருடன் ஃபோட்டோ எடுத்து முடிந்தவுடன் பீஜியை அழைத்து கொண்டு கபீரின் வீட்டுக்கு செல்ல தயாரான தல்ஜித் பிரேமாவின் அருகில் வ்ந்து,
“ஆன்ட்டி..கிளம்பலாமா?” என்று கேட்டான்.
அப்போது அவரருகே இருந்த மீரா,”இப்ப நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க..மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோடு அவங்க வீட்டுக்குப் போக போறாங்க..சாயந்திரம் ஹோட்டல் ரிசெப்ஷனுக்கு டிரெக்ட்டா வந்திடுவாங்க..அப்படிதான் மனு மாப்பிள்ளை என்கிட்ட சொன்னாரு.” என்றார்.
“ஆமாம் பா..என் சாமானை மட்டும் கொண்டு போய் மாறன் கிட்ட கொடுத்திடறயா?” என்று கேட்டார்.  
அதற்குள் அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்த மனு, மாறனை அழைத்து, பிரேமாவின் சாமானை அவர்கள் வண்டியில் வைக்க கட்டளையிட்டு விட்டு  அவன் சினேகிதனுடன் பேச சென்றான்.  
அப்போது பிரகாரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“ஸ்மிரிதி இங்க வா.” என்று அழைத்தார் சிவகாமி.
மௌனமாக அவருகில் வந்து நின்றாள் ஸ்மிரிதி. மரூன் நிறத்தில் உடல் முழுவதும் தங்க சரிகையிலானப் பொடி பொடி புட்டாக்களோடு இரண்டு புறமும் அடர் பச்சை நிறத்தில் சரிகைப் பாடர் போட்ட ஆடம்பரமில்லாத காஞ்சிபுரம் பட்டுச் சேலை உடுத்தியிருந்தாள்.  காதுகளில் தங்கத்திலான தோடும் ஜிம்மிக்கியும், கைகளில் இரண்டிலும் இரண்டு ஜோடி தங்க வளையகள். கழுத்தில் சற்றுமுன் கல்யாணம் நடந்ததற்கு அறிகுறியாக தாலிச் சரடு அதனுடன் கனமான தங்கச் சங்கிலி. அரசியல்வாதி வீட்டு கல்யாணப் பெண் போல் இல்லாமல் அடுத்த வீட்டு கல்யாணப் பெண் போல் தெரிந்தாள் ஸ்மிரிதி.
“இப்பவே நம்ம வீட்டுக்குப் போகணும்னு கீதிகாகிட்ட சொல்லு.. உன் சாமனெல்லாம் மாறன்கிட்ட எடுத்துகிட்டு வந்திடுவான்..நானும், பிரேமாவும் உங்களுக்கு முன்னாடி வீட்டுக்குப் போய் எல்லாம் தயார் செய்து வைக்கறோம்.” என்றார் சிவகாமி.
“கீதிகாகிட்ட எதுவும் சொல்ல வேண்டியதில்லை..அவங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க விருப்பமில்லை..அப்பாகிட்ட மட்டும் சொல்லணும்..மனிஷ்கிட்ட சொல்லிக்கணும்.”என்றாள் ஸ்மிரிதி.
“சரி..உங்கப்பாகிட்ட சொல்லிட்டு வா..கிளம்பிடலாம்..மனு எங்க? இரண்டு பேரும் சேர்ந்துதான் வரணும்.” என்று கண்களால் மகனைத் தேடினார்.
“அவன் பிரண்ட்கிட்ட பேசிக்கிட்டிருக்கான்.” என்று சற்று முன் அவளுக்கு கணவனானவனைப் பற்றி எப்பவும் போல் ஒருமையில் பேசினாள் ஸ்மிரிதி.
“இனி அவன், இவன்னு அவனைச் சொல்லாத..என்னையும் அத்தைனு கூப்பிடு.” என்று ஆர்டர் போட்டார் சிவகாமி.
“மனுவை அப்படிதான் கூப்பிடுவேன்..உங்களையும் ஆன்ட்டின்னுதான் கூப்பிடுவேன்.” என்று சிவகாமிக்குப் பதில் கொடுத்தாள் ஸ்மிரிதி.
“ஐயோ..இந்தச் சண்டி ராணியை எப்படி என் பையன் சமாளிக்கப் போறான்.” என்று மனதுள் கவலைப் பட்டார் சிவகாமி.
மனுவைத் தேர்ந்தெடுத்தது ஸ்மிரிதி என்ற அந்தச் சண்டி ராணிதான், அந்தச் சண்டி ராணியைச் சவாரி செய்ய போகும் சாரதி மனு வளவன் என்ற மன்னன் தான் என்று அவர் மகனுக்குப் பெயர் வைத்த அந்த தாயும் அறிந்திருக்கவில்லை அவனை மணந்து கொண்ட அந்தச் சண்டி ராணியும் அறிந்திருக்கவில்லை அவளைச் சாதனைப் பாதைக்கு அழைத்து செல்ல போகும் சாரதி அவந்தானென்று.
கோவில் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்த மனுவைப் பார்த்து,“ஆன்ட்டி, அவன் யாரோட பேசிக்கிட்டிருக்கான்?” என்று கேட்டாள்.
“அவனோட கிளோஸ் பிரண்ட் ஆயுஷ்..அவனை மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிட்டான் போல…ஆயுஷ் பொண்டாட்டி ஏன் வரலைன்னு தெரியலே.” என்றார் சிவகாமி.
“அவருக்கு கல்யாணமாயிடுச்சா?”
“அவன் பிரண்ட்ஸ் முக்காவாசி பேருக்கு குழந்தைக்கூட இருக்கு..ஆயுஷ்க்கு ஒரு பையன் இருக்கான்.”
“அவரோட வைஃப், பையன் பெயர் என்ன?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அது எதுக்கு உனக்கு?”
“சொல்லுங்க ஆன் ட்டி..மனு பிரண்ட்ஸ் பற்றி நான் தெரிஞ்சுக்கணும்.” என்றாள்.
“அவனோட வைஃப் பெயர் ரூபா..பையன் பெயர் ப்ரனவ்.”
கோவிலுக்கு வெளியே அவன் சினேகிதனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த மனுவின் அருகில் சென்று,”உன்னை ஆன்ட்டி கூப்பிடறாங்க..நாம இரண்டு பேரும் வீட்டுக்குக் கிளம்பணும்னு சொல்றாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
அவனருகில் ஸ்மிரிதி வந்தவுடன் அவள் தோள் மேல் கைப்போட்டு அவளை அணைத்த மனு, அந்த சினேகிதனை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.
“ஸ்மிரிதி..ஹி இஸ் ஆயுஷ் ராய்.” என்றான்.
“மை வைய்ஃப் ஸ்மிரிதி மனு.” என்று அவளையும் அவன் சினேகிதனுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.
முதல்முறையாக அவள் பெயரை மனுவின் பெயரோடு இணைத்து அவளை அவனுடைய மனைவி என்று அவன் அறிமுகப்படுத்தியது பெருமையா? உரிமையா? என்று குழப்பத்தை ஏற்படுத்தியது ஸ்மிரிதிக்கு.
“காங்கரஜுலேஷன்ஸ் பாபி….நேரமாயிடுச்சு கிளம்பறேன்.” என்று சொல்லி விடைபெற்று கொண்ட ஆயுஷைப் பார்த்து,
“பையா, ரூபா பாபியையும், ப்ரனவையும்  ஏன் அழைச்சுகிட்டு வரலை.” என்று ஆயுஷை அவளின் ஆளுமையால் ஆட்கொண்டாள் ஸ்மிரிதி.
“ப்ரனவுக்கு உடம்பு சரியில்லை அதனாலதான் அவங்க இரண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு வரலே.”என்று ஸ்மிரிதிக்கு பதில் சொன்னவன், “மனு, ஷீ இஸ் இன்க்ரெடிபிள்.” என்றான் ஆயுஷ்.
“அதுதான் ஸ்மிரிதி.” என்றான் மனு. 
ஆயுஷ் கிளம்பிச் சென்றவுடன்,“இவனை மட்டும் எதுக்கு கல்யாணத்துக்கு கூப்பிட்ட?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“ஒரு பிரண்டையாவது கூப்பிடணும்..அப்பதான் அவன் மத்தவங்கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்துவான்.”
“உனக்கு எத்தனை கிளோஸ் பிரண்ட்ஸ்? என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“உன் கும்பல் போல முதலேர்ந்து என்கூட இருக்கறவங்க யாரும் கிடையாது..ஆயுஷ் ஒருத்தனைத் தவிர..மற்றவங்க எல்லாம் கலீக்ஸ் தான்..சாயந்திரம் ரிசெப்ஷன் பிரைவெட்ங்கறதுனால அவங்க யாரையும் கூப்பிடலே..அவங்க எல்லாருக்கும் நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாள் கரனோட ரெஸ்டாரன்ட்டிலேப் பார்ட்டி கொடுக்கலாம்..இன்னைக்கு சாயந்திரம் அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க மட்டும் வருவாங்க.” 
“அவங்களுக்கு எதுக்குத் தனி பார்ட்டி..ரிசெப்ஷன் உன் தம்பியோட ஹோட்டல்லே தான நடக்குது..கெஸ்ட்ஸ் எல்லாரும் கிளம்பிப் போன பிறகு எங்களோட பார்ட்டியும் அங்கதானே..உன் பிரண்ட்ஸையும் நீ இன்வைட் செய்திருக்கலாம்.. என் தேவர் எல்லாரையும் சமாளிச்சிருப்பான்..அப்பறம் என் பிரண்ட்ஸைக் கும்பல்னு சொல்லாத.”
“நீங்க அஞ்சு பேரும் சேர்ந்தீங்கன்னா பத்து பேருக்கு சமம்..அப்ப அதுக்கு பெயரு கும்பல் தானே? என்று மனுவும் விடமால் ஸ்மிரிதியுடன் வாக்குவாதத்தை வளர்க்க,
“மனு” என்று கோவில் வாசலில் நின்று கொண்டு ஸ்மிரிதி கத்த, அவர்கள் அருகே இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
சண்டி ராணியும், சாரதியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டனர்.  ராணி முரண்டு பிடிக்க, சாரதி அதைக் கண்டு கொள்ளாமல் அவன் போக்கில்  அதை கையாண்டான்.
“எதுக்கு கத்தற?”
“நீ அவங்களை அப்படி சொல்லாத..உன் தம்பிகிட்ட சொல்லட்டுமா நீ அவனை பற்றி என்ன நினைக்கறேன்னு”
“அவனுக்கு ஏற்கனவே தெரியும்..அவங்கெல்லாம் இன்னைக்கு நைட் என்ன எதிர்பார்க்கறாங்கன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டான்..ஒரு ஆள் அதுலே டவுன்..கரெக்ட்டா?
மனுவிடம் ஏற்கனவே அவர்கள் பிளான் சொல்லப்பட்டிருக்கிறது என்றவுடன் கடுப்பான ஸ்மிரிதி, “மெஹக் சாயந்திரம் வந்திடுவா.” என்றாள்.
“நான் அவளைச் சொல்லலே.” என்று பதில் சொல்லியவன், அவன் குறிப்பிட்டது சுசித் ரா என்று குறிப்பாக உணர்த்தினான் மனு.  அவன் சரியாக சொல்லியிருக்கிறான் அவள்தான் அதைச் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்று உணர்ந்த ஸ்மிரிதி, வீம்பாக,
“நீ எப்பவும் கரெக்ட்டுன்னு நான் சொல்லணும்னு நினைக்கறேயா?”
“எப்பவும் வேணாம்..நான் கரெக்டா இருக்கும் போது நான் கரெக்ட்டுன்னு சொல்லலாம்”
“சரி..நீ இப்ப கரெக்ட்..போதுமா?”
“குட்…அப்ப சாயந்திரம் பார்ட்டிலே உங்க கும்பல்லே எல்லாரும் என் பேச்சைக் கேட்டுதான் நடக்கணும்.” என்றான் மனு.
“ஹாங்….அதெல்லாம் முடியாது..நீ பேசறது இப்ப கரெக்ட் கிடையாது.”
“அப்ப சாயந்திரம் நத்திங் டூயிங்..எல்லாரோடையும் சேர்ந்து ரிசெப்ஷனுக்குப் போவோம்..எல்லாரோடையும் சேர்ந்து வீட்டுக்குத் திரும்பி வருவோம்.” என்றான் மனு
“ஏய்.” என்று மறுபடியும் கத்தினாள் ஸ்மிரிதி.
“என்னோட சின்ன ஸஜஷனை உன்னாலே ஏன் ஏத்துக்க முடியலே..நான் சொல்றதை ஏன் உன்னாலே பொறுமையா கேட்டுக்க முடியலே.. ஏன் உன்னாலே  சிலதைப் பொறுத்துக்க முடியலே, பொருட்படுத்தாம இருக்க முடியலே.. எதுக்கு இப்படி கோபப்படற..பொது வாழ்க்கைக்கு வந்தேன்னா ஒரே விஷயத்தை ஆயிரம் பேர் ஆயிரம் வாட்டி ஆயிரம் விதமா சொல்லுவாங்க.. அதுக்காக உன் தனி வாழ்க்கையை  வெளிச்சத்திலே வாழ முடியுமா?” என்று மனு கேள்வி கேட்க,
“நான் என் வாழ்க்கைய என் விருப்பப்படி தான் வாழ்வேன்.”
“அதையே நீ எத்தனை பேர்கிட்ட சொல்லிகிட்டு இருக்க முடியும்?”
“நான் யாருனு எனக்குத் தெரிஞ்சாப் போதும்..என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் என்னையும் என் வாழ்க்கையையும் விளக்க வேணாம்.” 
“ஸேம் ஹியர் ஸ்மிரிதி..என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நானும் என்னை விளக்கத் தேவையில்லை.” என்று கல்யாணத்திற்கு முன் அவள் கேட்ட கேள்விக்கு கல்யாணம் முடிந்த பின் பதில் அளித்தான் மனு.
அன்று காலையில் அவனிடன் அவள் கேட்ட கேள்விக்கு அவன் அப்போது பதில் கொடுக்கிறான் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“அம்மாக்கு விருப்பமில்லைன்னு நான் உன்கிட்ட சொன்னேன்..அதுக்கு அப்பறமும் நீ எப்படி அம்மாவை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போற?”
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வர அவங்களுக்கு விருப்பமில்லை..இப்ப நான் அவங்க மாப்பிள்ளை..அவங்க ஒரே பொண்ணோட கணவன்..அதனாலே அந்த வீடு இப்ப உன்னோட வீடும்..நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு இப்ப அவங்க சொன்னா அதுக்கு வேற அர்த்தமாயிடும்..ஆன்ட்டி அதைப் புரிஞ்சுகிட்டதாலே நேத்து நைட் பீஜியோடு கபீர் வீட்லே இருந்திட்டு இன்னைக்கு நைட் நம்ம வீட்டுலே இருக்க ஒத்துகிட்டாங்க..
இனி உன் விஷயம், என் விஷயம்னு எதுவும் தனி தனி கிடையாது ஸ்மிரிதி..உனக்கு உங்கப்பா கொடுக்க போறேன்னு சொன்ன எல்லாத்துக்கும் நான் பேப்பர் கேட்டதுக்கு காரணம் உன்னோட கனவு, லட்சியம், குறிகோள் எல்லாம் இப்ப என்னோடதும்..ஸோ இனி எல்லா விஷயமும் நம்மளோட விஷயம்தான்..
கொஞ்ச நேரம் முன்னாடி சில விஷயத்திலே, சில சமயத்திலே உன்னைப் புரிஞ்சுக்கறது கஷ்டம்னு பீஜி சொன்னாங்க….அந்த மாதிரி நேரத்திலே நீ உன்னை எனக்குப் புரிய வைக்கணும் இல்லை என்னை புரிஞ்சுக்க  நீ முயற்சி செய்யணும்..அதை தான் அவங்க உன்கிட்ட எதிர்பார்க்கறாங்க..நானும் எதிர்பார்க்கறேன்.” என்றான் மனு.
ஸ்மிரிதியைப் பொது வாழ்க்கைப் புரட்டிப் போடுமுன் அவர்கள் மணவாழ்க்கையின் மூலம் அவன் மனைவியைப் புரட்டிப் போட்டு புடம் போட ஆரம்பித்தான் ஸ்மிரிதியின் மனு.

Advertisement